Saturday, July 12, 2014

சன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்

சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்த செனட்டர் மக் கெய்ன்
ISIS இனுடைய நதிமூலம் என்னவென்று ஆராய்வதற்கு, நாங்கள் சிரியா உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, ISIS பற்றிய பலரது கணிப்பீடு மிகவும் மாறுபட்டிருந்தது. அப்போது இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் கூட அந்த இயக்கத்தை ஆதரித்தார்கள். அவர்கள் எல்லோரும் அமெரிக்க/மேற்கத்திய ஆதரவு தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் "ISIS ஆதரவு தமிழர்களில்" பலர், புலிகளையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அப்படியான சிலருடன் வாதாடி இருக்கிறேன். ISIS ஒரு மதவாத அமைப்பு என்று கூறினேன். அப்போது யாரும் நான் சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆதாரம் கொண்டு வந்து காட்டுமாறு அடம் பிடித்தார்கள். ஆதாரத்தை காட்டினாலும் நம்ப மறுத்தார்கள். "ISIS ஒரு மதவாத இயக்கம் அல்ல, சிரியாவில் ஆசாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம்" என்று வாதாடினார்கள். அதற்குக் காரணம், அன்று மேற்கத்திய ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரம். அவர்களது அரசியல் கொள்கைகள் ஏற்கனவே நாம் அறிந்தவை தான். அமெரிக்கா எதை ஆதரிக்க சொன்னாலும் ஆதரிப்பார்கள், எதை எதிர்க்க சொன்னாலும் எதிர்ப்பார்கள்.

அன்றைக்கு ISIS பலரின் கண்களுக்கு விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், புலிகளுக்கு கூட அந்தளவுக்கு மேலைத்தேய ஆதரவு இருக்கவில்லை. அமெரிக்கா வெறும் அரசியல் பிரச்சாரத்துடன் நின்று விடாது, ஆயுதங்கள், நிதி கொடுத்து ஆதரித்து வந்தது. முன்பொரு தடவை, தமிழ்நாட்டில் இருந்து வைகோ வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து விட்டு திரும்பியது போன்று, செனட்டர் மக்கெய்ன் அமெரிக்காவில் இருந்து துருக்கி ஊடாக சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பி இருந்தார்.

ISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல் நுஸ்ரா என்று பத்துக்கும் குறையாத ஆயுதபாணி இயக்கங்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையில் ஒரு கொள்கை ஒற்றுமை இருந்தது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எல்லோருக்கும் பொதுவான கோட்பாடாக இருந்தது. 

FSA, வெளிநாட்டு உதவி பெறுவதற்காக தன்னை ஒரு மதச் சார்பற்ற மிதவாத இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு மதவாத இயக்கம் தான். ஆசாத் அரசு, தீவிரமான மதச் சார்பற்ற அரசாக இருந்தது. ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று சுதந்திரமான கலாச்சாரத்தை பின்பற்றியது. கிளர்ச்சியாளர்களின் மதவாத நிலைப்பாட்டிற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

சிரியாவில் ஆசாத் அரசை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மட்டும் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தன. சிரியாவில் வாழும் பெரும்பான்மை சமூகமான, சன்னி முஸ்லிம்கள் மட்டுமே, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆசாத் அரசும், இராணுவமும் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தின. (கிறிஸ்தவ சமூகமும் அரசை ஆதரிக்கின்றது.) உண்மையில், சிரிய ஆளும் வர்க்கத்தினர், ஷியா முஸ்லிம்களில் இன்னொரு உப பிரிவான அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது. இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, அலாவி சமூகத்தை சேர்ந்த ஆசாத் ஆட்சியில் தான், அவர்கள் மேன் நிலைக்கு வந்தனர். அதற்கு முன்னர், உயர்த்தப் பட்ட சமூகமாக இருந்த சன்னி முஸ்லிம்கள், தாம் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்தனர். அவர்கள் இப்போது சிரியாவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை அவர்களைத் தான் முதலில் பாதித்தது. 

சிரியாவில் அண்மைய உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர், சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வகாபிச முஸ்லிம் சகோதரத்துவ கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஹோல்ம்ஸ் நகரத்தில், சன்னி முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றது. அதனால் ஹோம்ஸ் அன்றும், இன்றும் இஸ்லாமியவாதிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது. எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் தூண்டி விட்ட எழுச்சியை, அரச படையினர் அடக்கிய போது சுமார் இருபதாயிரம் மக்கள் பலியானார்கள். கொல்லப் பட்டவர்கள் : சன்னி முஸ்லிம்கள். கொன்றவர்கள் : ஷியா முஸ்லிம் படையினர். தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரிலும் அந்த நிலைமை மாறவில்லை. 

சிரியாவில், சன்னி முஸ்லிம்களை பொருத்தவரையில், ISIS போன்ற இயக்கங்கள், அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக, அதாவது "இன விடுதலைக்காக" போராடுகின்றன. (அதனால் தான் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், சன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைத்தனர்.) FSA க்கும், ISIS க்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. 

ISIS இல் நிறைய வெளிநாட்டு ஜிகாதிகள் உள்ளனர். அந்த ஜிகாதி போராளிகள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். சிரியா சன்னி முஸ்லிம்களும், "ஷியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்ய வந்த சகோதரர்களை" வரவேற்றார்கள். புலிகள் அமைப்பில் தமிழ்நாட்டு தமிழர்கள் போராளிகளாக சேர்ந்திருந்தால், ஈழத் தமிழர்கள் வேண்டாம் என்று மறுக்கப் போகிறார்களா? அதே மாதிரியான நிலைமை தான் சிரியாவிலும் உள்ளது. 

FSA உறுப்பினர்கள் பெரும்பாலும், முன்னாள் சிரிய இராணுவ வீரர்கள். முன்பு சிரிய இராணுவத்தில் கடமையில் இருந்த சன்னி முஸ்லிம் அதிகாரிகள், போர்வீரர்கள். யுத்தம் தொடங்கியவுடன் இராணுவத்தை விட்டோடி விட்டார்கள். தங்களது சொந்த இன மக்களை (அதாவது, சன்னி முஸ்லிம் சமூகம்) கொல்ல விரும்பவில்லை என்பது ஒரு காரணம்.  அதை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னொரு காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் தமிழர்களும் இருந்தனர். ஆனால், ஈழப்போர் ஆரம்பித்தவுடன், ஒன்றில் அவர்கள் ஒதுக்கப் பட்டனர், அல்லது தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

சன்னி-ஷியா பிரச்சினையை, வெறுமனே மதப் பிரச்சினையாக பார்ப்பது தவறு. அவை இரண்டு வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அதுவும் ஒரு இனப் பிரச்சினை தான். சன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவை. ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிக்காத போக்கும் காணப் படுகின்றது. சன்னி - ஷியா சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு, சிங்கள - தமிழ் வெறுப்புணர்வுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல. 

இனம் என்னும் பொழுது, நாங்கள் எப்போதும் மொழியை புரிந்து கொள்கிறோம். அது தவறு. ஈராக், சிரியாவில் வாழும், சன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒரே மொழி பேசலாம், ஒரே மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஆயிரக் கணக்கான வருடங்களாக இரண்டு வேறு இனங்களாக பிரிந்து வாழ்கின்றன. அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முன்னர் ஈராக்கில் வாழ்ந்த வேற்றின மக்கள், ஷியா சமூகமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. (அதன் அர்த்தம் இனக் கலப்பு நடக்கவில்லை என்பதல்ல. ஆனால், கலாச்சார வேறுபாட்டுக்கு அது காரணமாக இருக்கலாம்.)  அதற்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். பஸ்ரா நகருக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும், "சதுப்பு நில அரேபியர்கள்" இஸ்லாத்திற்கு முந்திய புராதன கலாச்சாரத்தை, இன்றைக்கும் பின்பற்றுகின்றனர்.

சிரியா அல்லது ஈராக்கில், யார் சன்னி, யார் ஷியா என்று பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, "அலி" என்று பெயர் வைத்துக் கொள்ளும் எல்லோரும் ஷியாக்கள் என்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். இரண்டு சமூகங்களும், தனித் தனியாக வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து வாழ்கின்றன. நகரங்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பாக்தாத் நகரில் தனியே ஷியா முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதி ஒன்றுள்ளது. அது ஒரு சேரிப் புறம் போன்றது. பாக்தாத் நகரில் பின் தங்கிய பகுதி. மும்பையில் தாராவி பகுதியுடன் அதனை ஒப்பிடலாம்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. கலப்பு மணம் செய்து கொள்பவர்கள், முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப் படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப் பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள், வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு முழுவதும் ஒரு சமூகம், மற்ற சமூகத்தை அடக்கி ஆண்டு வந்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில், சன்னி முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். ஷியா முஸ்லிம்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னர், நிலைமை தலை கீழாக மாறியது. புதிய ஈராக் அரசில், ஷியா முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றனர். பிரதமர் மாலிக் கூட ஒரு ஷியா தான். இம்முறை சன்னி முஸ்லிம்கள் அடக்கப் பட்டனர். இரண்டாந் தரப் பிரஜைகள் ஆக்கப் பட்டனர்.

சிரியாவில் நிலைமை நேரெதிராக உள்ளது. அங்கே ஆசாத் அரசை ஆதரிப்பது ஷியா முஸ்லிம்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரச படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.

ISIS அமைப்பினர், ஒரு பக்கத்தில் சன்னி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களது அரசியல் நிலைப்பாடு, பெருமளவு இனவாதம், மதவாதம் கொண்டதாக உள்ளது. சன்னி முஸ்லிம்கள் எல்லோரும் ISIS இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் அல்லது சிரியாவில் வாழும் மதச் சார்பற்ற சன்னி முஸ்லிம் மக்கள், இது போன்ற மதவாத இயக்கங்களை ஆதரிக்கப் போவதில்லை. ஈராக்கில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் விசுவாசிகள், அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சி அனுதாபிகள்,  சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்திருந்த போதிலும், ISIS இனை நிபந்தனை இன்றி ஆதரிக்கப் போவதில்லை. 

வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய மத உணர்வாளர்கள் பலர் ISIS இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவாளர்கள் எல்லோரும் சன்னி முஸ்லிம்கள். கிலிபாத் என்ற  "இஸ்லாமியத் தாயகக் கோட்பாடு" அந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். அது ஒரு இழந்த சொர்க்கம் பற்றிய கனவு. "ஒரு காலத்தில், ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரை, முஸ்லிம்கள் ஆண்டார்கள். இன்று ஐரோப்பியருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்" என்று கூறி, இதை ஒரு வகை மத விடுதலைப் போராட்டமாக கருதுகிறார்கள்.

ISIS உரிமை கோரும் அகண்ட இஸ்லாமியத் தாயகம் 

இஸ்லாமியத் தாயகம் உருவாக்கும் நோக்கத்தோடு உலகில் பல ஆயுதமேந்திய இயக்கங்கள் தோன்றின. ஆனால், ISIS அவற்றை எல்லாம் ஓரங் கட்டி விட்டு, பெரிதாக வளர்ந்து வந்து விட்டது. சிலநேரம் சகோதர யுத்தங்களை நடத்தியும், ISIS அதிகாரத்தை கைப்பற்றியது. ஒரே கொள்கைக்காக போராடிய பிற இயக்க போராளிகளை கொன்றுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் ஆதரவாளர்களுக்கு, ISIS போர்களில் குவித்த வெற்றிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அது ISIS ஐ யாராலும் வெல்ல முடியாது என்ற உணர்வை அவர்கள் மனதில் உண்டாக்கி உள்ளது.


ISIS தொடர்பான முன்னைய பதிவுகள்:

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: 

2 comments:

nerkuppai thumbi said...

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது.//

இஸ்லாமிய மார்க்கத்தில் ஜாதி வேறுபாடு இல்லை ?

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.//
தவறு: 1. முஸ்லிம்கள் பள்ளிவாசலை முஸ்லிம்களே இடித்தது 2. பாபர் மசூதி இடிப்பு முஸ்லிம்கள் மீது வெறுப்பால் இடித்தது அல்ல; இந்துக்கள் அந்த இடம் தங்கள் புனித இடம் என்று கேட்டபோது முஸ்லிம்கள் தராதது. 3. அந்த இடத்தில் முன்பு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளன.அதாவது, தங்கள் இடத்தை மீண்டும் கைப்பற்றுவது.

சரி போகட்டும். ஷியா சுன்னி முஸ்லிகள் தகறாரோ , அரேபிய/பார்சிய/பழங்குடி தகாறாரோ, நடக்கும் தகராறின் சண்டை யார் வென்றாலும் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி சண்டையின் போடது ஔவையார் சொன்னது போல் இழப்பு முஸ்லிம்களுக்கு தான்.
சரி, கூடி வாழ்வதே கூடாதா? காபிர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதா?

Mohamed Ameen said...

Some Western writers over-simplify complex issues and make blanket statements about groups.

The aim is to advance Western policy through deliberately distorted analysis.

The overriding narrative makes people believe that the West is the store house of all wisdom and sophistication and other people, especially Muslims, are barbarians.
One such group is ISIL

The vested Islamophobic journalists are involved in half-truth propaganda

The half-truth propaganda methodology is aimed at ignorant audiences who might find bits of truth that appeal to their worldview and believe in the wrong ideas of the overall situation.

These bits and pieces of truth are utilized as sugarcoating in order to feed falsehood as reality.

It is important to keep in mind that the success of this propaganda machine is primarily based on the aims of big powers in maintaining their power and hegemony in world politics .