சிங்கள பாசிஸ்டுகளும், "உலகில் முதலில் தோன்றிய மூத்தகுடி சிங்கள இனம் தான்..." என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதை அரசியல் கொள்கையாக கொண்டுள்ளனர்.
இலங்கையில் பிரபலமான சிங்கள பாசிஸ கட்சியான "ஜாதிக ஹெல உறுமய" கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அண்மையில் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை இங்கே தருகிறேன். சிங்கள இனவாதிகள் பேசுவதற்கும், தமிழ் இனவாதிகள் பேசுவதற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? தமது இனத்தின், மொழியின் பழம் பெருமை பேசுவதில், இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
சம்பிக்க ரணவக்கவின் உரையில் இருந்து:
- "எமது மொழி மிகவும் பழமையானது. மூவாயிரம் வருடங்களுக்கும் அதிகமாக, இந்தியாவில் சமஸ்கிருதம் வருவதற்கு முன்பிருந்தே, எமது மொழி அழியாமல் இருந்து வருகின்றது."
- "இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று எந்த தேசமும், தனக்கென்று பொதுவான மறை நூலைக் கொண்டிருக்கவில்லை. எமக்கும், இஸ்ரேலிய யூதர்களுக்கும் மட்டுமே அது உண்டு. உலகிலேயே தொன்மையான, எமது இனத்திற்கென்று பொதுவான நூல் அது.
- "எமது நாடு உலகிலேயே பழமையான நாடு. எமது ஸ்ரீபாத (சிவனொளிபாத) மலை, இமய மலையை விடப் பழமையானது."
"தமது இனம் எந்தத் தவறும் இழைப்பதில்லை. புழு, பூச்சிக்கு கூட தீங்கிழைப்பதில்லை. எதிரி இனத்தவர்கள் மட்டுமே கொடுமைக்காரர்கள்..." இவை உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளின் வழமையான பிரச்சாரம். அதற்காக, தர்க்கங்களையும் தயாரித்து வைத்திருப்பார்கள்.
சம்பிக்க ரணவக்க ஆற்றிய உரையில் இருந்து:
- "டெல்லியில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப் பட்டார். அதற்கு பதிலடியாக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், எமது ஜனாதிபதி பிரேமதாசவை தமிழ் தீவிரவாதிகள் கொன்றார்கள். நாங்கள் கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் மேல் கை வைத்தோமா?"
- "குஜராத்தில் கோத்ரா ரயில் வண்டி எரிப்பில் இந்துக்கள் கொல்லப் பட்டார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், புலிகள் கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வைத்து, பல நூறு சிங்கள மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பழிவாங்குவதற்காக தமிழர்களை கொன்றோமா?"
- "போர் நடந்த காலங்களில், சுரேஷ் பிரேமச் சந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வசித்தார்கள். வடக்கில் ஒரு சிங்களவர் இல்லை. எல்லோரும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப் பட்டதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வடக்கில் இருந்து சிங்களவர்கள் விரட்டப் பட்டதை பற்றி யாரும் பேசுவதில்லை."
சம்பிக்க ரணவக்க முன்வைக்கும் தர்க்கங்கள் தான், சிங்கள பாசிசத்தின் அடிப்படைகள். பாஸிசம் எப்போதும் ஒரு பக்கச் சார்பான கதைகளையும், அரைவாசி உண்மைகளையும், திரிபுபடுத்தப் பட்ட வரலாற்றையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் 83 கலவரம் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டது போன்று, டெல்லி கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப் பட்டது போன்று, கொழும்பு கலவரத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட கும்பலின் கொலைவெறி, பலியான மக்களின் அவலம், கலவரம் நடத்தப் பட்ட பொறிமுறை, எல்லாமே ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன.
83 கலவரம் பழிவாங்கும் நடவடிக்கை என்றால், அதற்கு முன்னர் நடந்த கலவரங்களுக்கு காரணம் என்ன? சிங்கள ஸ்ரீ எழுத்தை அழித்தார்கள், என்பன போன்ற உப்புச் சப்பற்ற காரணத்திற்காக எல்லாம், தமிழர்கள் கொல்லப் படவில்லையா?
பிரேமதாச கொல்லப் பட்ட போதும், கொழும்பில் குண்டுவெடித்த போதும், தமிழர்களுக்கு எதிரான கலவரம் எதுவும் நடக்காத காரணம், "சிங்கள மக்களின் சகிப்புத் தன்மை" அல்ல. கொழும்பில் கலவரம் நடந்தால், அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கெட்ட பெயர் உண்டாகும் என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம். அப்போது போர் நடந்து கொண்டிருந்ததால், வடக்கு கிழக்கில் போரிடும் சிங்களப் படையினர், "பழிவாங்கும் வேலையை" கவனித்துக் கொள்வார்கள் என்ற "நம்பிக்கை", இன்னொரு காரணம்.
முஸ்லிம்கள் மாதிரி, வடக்கில் வசித்து வந்த சிங்கள மக்களும் விரட்டப் பட்டார்கள் என்பது ஒரு திரிபு படுத்தல். பாதுகாப்பு அச்சம் காரணமாக, எண்ணிக்கையில் குறைவாக இருந்த சிங்களவர்கள் தாமாகவே வெளியேறிச் சென்றனர். வவுனியா, கிழக்கு மாகாண எல்லையோரக் கிராமங்களிலும், அது தான் நிலைமை. போரினால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராம மக்கள் மட்டுமே வெளியேறினார்கள். அது கூட, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ்க் கிராம மக்களுடன் ஒப்பிடும் பொழுது, எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனாலும், பாசிஸ்டுகள் எப்போதும், தம்மின மக்களின் பிரச்சினை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். மற்ற இன மக்களின் அவலம் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
சம்பிக்க ரணவக்கவின் உரையானது, இஸ்ரேலிய அரசின் பிரச்சாரங்களை நினைவு படுத்துகின்றது. "பாலஸ்தீன தீவிரவாதிகள் எமது மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பதிலடியாக டெல் அவிவ் நகரில் வாழும் அரபு மக்களுக்கு தீங்கு இழைத்தோமா?" என்றெல்லாம் கேட்பார்கள். சிங்களவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக, சம்பிக்க ரணவக்க தனது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். சிங்களப் பாஸிசம், சியோனிசப் பாசிசத்திடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளது என்பது உண்மை தான்.
சம்பிக்க ரணவக்கவின் முழுமையான உரை:
No comments:
Post a Comment