Monday, May 12, 2014

கிழக்கு உக்ரைனில் உயிர்த்தெழும் சோவியத் பூதம்!

  • டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், "கிழக்கு உக்ரைன் ரஷ்யர்களும், இலங்கைத் (ஈழத்) தமிழர்களும் அவர்களுக்கு ஒன்று தான்" என்பதை பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்துள்ளேன். ஒடெஸ்ஸாவில் ரஷ்ய இனத்தவர் இனப்படுகொலை செய்யப் பட்டதாக, ரஷ்ய சிறுபான்மை இனத்தவரின் அனுதாபத்தை திரட்டிய ரஷ்ய பிரிவினைவாதிகள், அதனை பொது வாக்கெடுப்பு ஒன்றில் அறுவடை செய்துள்ளதாக, ஜெர்மனியின் வலதுசாரி- பழமைவாத பத்திரிகை ஒன்று (Die Welt) அழுது வடித்துள்ளது. "ரஷ்ய பிரிவினைவாதிகள்" வரும் இடத்தில் தமிழ் தேசியவாதிகளையும், ரஷ்யர்கள் என்று வரும் இடத்தில் ஈழத் தமிழர்கள் என்றும் போட்டு வாசித்துப் பாருங்கள். எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகின்றது.

கிழக்கு உக்ரைனில் நடந்து முடிந்துள்ள டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசுக்கான பொது வாக்கெடுப்பு, முழு ஐரோப்பிய கண்டத்திற்கும் அச்சுறுத்தல் என்று, கட்டுரை ஒன்றை (Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa) பிரசுரித்துள்ளது. அந்த சம்பவங்களை "சோவியத் யூனியனின் மீள் வருகையாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் எழுச்சியாகவும்," அந்த நாளேடு கருதுகின்றது. தற்போது ஜாடியை விட்டு வெளியே வந்துள்ள இந்தப் பூதம், விரைவில் முழு ஐரோப்பாவையும் பிடித்தாட்டும் என்று அது எச்சரித்துள்ளது.

அந்தக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்:

கிழக்கு உக்ரைனில் நடந்துள்ள சம்பவங்களை, வரலாற்றின் பரிசோதனைக் கூடமாக கருத வேண்டும். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் நடந்ததைப் போன்ற, அல்லது முப்பதுகளில் ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகள் இவை. ஒரு சிறிய தீவிரமான வன்மைவாதிகளின் குழு அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமிக்கும். பத்து நாட்களுக்கு முன்னர், ஒடெஸ்ஸா நகர தீயில் 38 பேர் பலியானது போன்ற துயரச் சம்பவங்கள், நிலைமையை தீவிரமைடைய உதவுகின்றது. ஊடகங்கள் இது போன்ற காட்சிகளை மனதில் பதிய வைக்கும்.

"ரஷ்ய மக்களின் இனப்படுகொலை" நடந்த ஒடெஸ்ஸாவில், எப்படி தீப்பிடித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. பலியானவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக, தீவிர பிரிவினைவாதிகள், டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளின் சுதந்திரத்திற்காக நடந்த பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர்.

கிழக்கு உக்ரைனில் நடக்கும் சம்பவங்களினால், ஐரோப்பா முழுவதும் வாழும் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். ஜெர்மன் சமஷ்டி அரசாங்கமும், உக்ரைன் விடயத்தில் குற்றம் இழைத்துள்ளதாக கீசி (ஜெர்மன் இடதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்) கூறுகின்றார். உண்மை தான், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பல தவறுகளை இழைத்துள்ளன. ஆனால், ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரைன் நாடக மேடையில் அரங்கேறும் வெறுக்கத்தக்க நாடகத்தை புறக்கணிப்பது வெகுளித்தனமானது.

ஐரோப்பாவை இரண்டாக பிளக்கக் கூடிய இயக்கம் ஒன்றை, ரஷ்ய அரசு வளர்த்துக் கொண்டிருக்கிறது. "இரண்டாம் உலகப் போரை வெற்றி கொண்டோம், ஆனால் பனிப் போரில் தோற்றோம்" என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து எழும் இயக்கமானது, எதிர்ப்பவர்களை எல்லாம் பாசிஸ்டுகளாக கருதிக் கொண்டே, பெருந் தேசியவாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. "நோவோ ருசியா" (புதிய ரஷ்யா) பொது வாக்கெடுப்பின் பின்னர் ஐரோப்பா விழித்தெழுகின்றது. அங்கே ஜனநாயக அல்லது லிபரல் மனப்பான்மை கொண்டவர்களுக்கு இடமில்லை.

கிழக்கு ஐரோப்பாவின் மற்றைய பகுதிகளிலும் ஆபத்து காத்திருக்கின்றது. புட்டின் எழுப்பியுள்ள ஆவிகளை மீண்டும் சீசாவுக்குள் அடைப்பது கடினமானது. உக்ரைனில் இதே பாணியிலான பிரிவினைவாத இயக்கம், தொழிற்துறை மையமான டினியேபுரோபெட்ரோவ்ஸ்க் (Dnepropetrovsk) பிராந்தியத்தையும் கையகப் படுத்தும். அதன் அர்த்தம் கலகங்கள், சமர்கள், மரணங்கள். கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக பால்கன் நாடுகளிலும், இந்த உதாரணம் பின்பற்றப் படும்.

ரஷ்ய பிரிவினைவாதிகள் தமது டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

(Die Welt, 12-05-2014) 

Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa
*******

அன்பான தமிழ் பேசும் வலதுசாரிகளே!

ரஷ்யா பற்றிய மேலைத்தேய பிரச்சாரம் எதையும் நம்பாதீர்கள். மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள், இரட்டை வேடம் போடுகின்றன. ரஷ்யாவை வில்லனாக காட்டி, உங்களை ஏமாற்றிக் கொண்டே, ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றன. எல்லாவற்றிற்கும் காரணம், பொருளாதாரம். உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, அவர்களது பிரச்சாரத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவுகின்றது. "புதிய பனிப்போர்" என்பது கூட ஒரு கற்பனை தான்.

உக்ரைன் பிரச்சினை தீவிரமடைந்த பின்னர் தான், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஷிரேடர், புத்தினை நேரில் சந்தித்துப் பேசினார். ஷெல் தொழிலதிபர், தூர கிழக்கு ரஷ்யப் பகுதிகளில் எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம் போட்டார். இப்படிப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். உண்மையில், மேற்கு ஐரோப்பா முழுவதும், எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அவை என்றைக்கும் ரஷ்யாவை பகைத்துக் கொள்ளப் போவதில்லை.

ஜெர்மனி நுகரும் எரிவாயுவில் 30% ரஷ்யாவில் இருந்து வருகின்றது. அதனை விநியோகிக்கும் ஏகபோக உரிமை பெற்ற ரஷ்ய Gazprom, ஜெர்மனியில் பெட்ரோல் நிலையங்கள் உட்பட பல தொழிற்துறைகளில் கணிசமான அளவு முதலீட்டை செய்துள்ளது. நெதர்லாந்து நிறுவனமான Gasunie, ரஷ்ய Gazprom உடன் இணைந்து, "Northern stream" குழாய் பாதை அமைத்து வருகின்றனர். ரஷ்யாவில் இருந்து நேரடியாக கடல் வழி வரும் குழாய்கள், ஜெர்மனிக்கான மேலதிக எரிவாயுவை வழங்க உள்ளன.

"புதிய பனிப்போர்" அல்லது உக்ரைன் பிரச்சினைக்கு பின்னர், அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்கும் திட்டத்தை சிலர் பரிந்துரைத்தனர். அது நடைமுறைச் சாத்தியமில்லாத, அதிக செலவு பிடிக்கும் திட்டம் ஆகும். அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதென்றால், அது LNG எனப்படும் திரவமாக்கப் பட்ட எரிவாயுவாக, கப்பல்களில் ஏற்றித் தான் கொண்டு வரலாம்.

LNG ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களை அமெரிக்காவிலும், இறக்குமதி செய்யும் துறைமுகங்களை ஐரோப்பாவிலும் புதிதாக கட்ட வேண்டும். அதெல்லாம் நடந்து முடிய குறைந்தது 2 வருடங்கள் ஆகும். LNG ஆக மாற்றும் செலவு, துறைமுகம் அமைக்கும் செலவு, போக்குவரத்து செலவு இவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால், அமெரிக்க எரிவாயுவின் விலை பல மடங்கு உயர்ந்து விடும். செலவைக் குறைப்பதற்கு பதிலாக, கூட்டிக் கொள்வது மடத்தனமானது.

மேற்கு ஐரோப்பாவில், உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் அரசியல்வாதிகள், திரைமறைவில் ரஷ்யாவுடன் தொடர்ந்தும் நட்புப் பேண விரும்புகின்றனர். ஆச்சரியப் படத் தக்கவாறு, ரஷ்யா கிரீமியாவை இணைத்த நியாயத்தை புரிந்து கொள்ளுமளவிற்கு மனப் பக்குவம் பெற்றிருக்கின்றனர்.

"கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஷ்யா நேட்டோ விஸ்தரிப்பு குறித்து அஞ்சுவது தெளிவாகும். கிரீமியாவில் நேட்டோ இராணுவத் தளம் அமைத்து விடும் என்ற அச்சத்தில், ரஷ்யா அதனை தன்னோடு சேர்த்துக் கொண்டது." இவ்வாறு நெதர்லாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Ben Bot தெரிவித்தார்.

********

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக வந்த ஒரு தமிழ் பேசும் வலதுசாரியின் எதிர்வினை :

 //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! ரஷ்யாவும் ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும், கிழக்கு உக்ரேனில் இப்போது ஓங்கியிருப்பது, ரஷ்ய தேசியவாதமே என்பதையும் உணர வேண்டும்.//

அந்தக் கூற்றை, நாங்கள் ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! தமிழ்நாடும் (அல்லது இந்தியாவும்) ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும் வட-கிழக்கு இலங்கையில் இப்போது ஓங்கியிருப்பது, தமிழ் தேசியவாதமே என்பதையும் உணரவேண்டும்.//

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, தமிழ் தேசியவாதிகளின் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால், அதே தமிழ் தேசியவாதிகள் உக்ரைன் விடயத்தில் மட்டும் தடம்புரள்வதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள தேசியவாதிகள் மத்தியில், அந்தளவுக்கு பகை முரண்பாடுகள் நிலவுகின்றன. தேசியவாதிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது. ஒரு தேசியவாதிக்கு இன்னொரு தேசியவாதியை பிடிப்பதில்லை.

நாசிஸத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்காத, உக்ரைனிய பேரினவாதத்திற்கு எதிரான, ரஷ்ய தேசியவாதிகளின் போராட்டத்தை, ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? உக்ரைனில் ரஷ்ய சிறுபான்மையினரின் மொழிப் பிரச்சினையை இவர்கள் ஏன் அங்கீகரிப்பதில்லை? இவர்களை தமிழ் தேசியவாதிகள் என்று அழைப்பதை விட, "அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவான வலதுசாரிகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.

ரஷ்யாவும், உக்ரைனும் முதலாளித்துவ நாடுகள் என்பதையும், இரண்டிலும் தேசியவாதிகள் பலமாக இருப்பதையும், எந்த தமிழ் பேசும் இடதுசாரியும் உணராமல் இருப்பதாக நான் கேள்விப் படவில்லை. கடந்த இருபது வருடங்களாக அதை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் பேசும் வலதுசாரிகள் அப்படி அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா என்ன சொன்னாலும் அது வேத வாக்கு. அமெரிக்கா ஒரு நாட்டை ஆதரித்தால் இவர்களும் ஆதரிப்பார்கள், அதே நாட்டை அமெரிக்கா எதிர்த்தால் இவர்களும் எதிர்ப்பார்கள்.

தொண்ணூறுகளில், ரஷ்யாவில் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம் நிலவிய போது, ரஷ்யாவை ஆதரித்தார்கள். ஆனால், அதே ரஷ்ய முதலாளித்துவம், அசுர வளர்ச்சி அடைந்து, அமெரிக்காவை எதிர்க்கும் அளவிற்கு வல்லரசு ஆனதும், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யாவை எதிர்க்கிறார்கள். எந்த வலதுசாரியும் சுயமாக சிந்திக்கத் தெரிந்து வைத்திருப்பதாக, நான் அறியவில்லை.

உலகில், முதலாளித்துவ நாடுகள் எல்லாம் நட்பாக இருப்பதில்லை. அவற்றிற்குள் முரண்பாடுகள் இருக்கும். அது சில நேரம் போராக வெடிக்கும். முதலாளித்துவம் எப்போதும், தனது நலன்களுக்கு பாதுகாப்பான தேசியவாதத்தை ஆதரிக்கும். முரண்பாடுகள் வளர்ந்து போர் வெடிக்கும் காலத்தில், மக்கள் ஆதரவை பெறுவதற்கு தேசியவாதம் உதவும்.

முதலாம் உலகப் போர் வெடித்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் இருந்ததெல்லாம் முதலாளித்துவ நாடுகள் தான். அது மட்டுமல்ல. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், தேசியவாதிகளின் ஆதிக்கம் நிலவிய‌து. லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலை வாசித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு எல்லாம் புரியும்.

********

டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு



உக்ரைனின் கிழக்கு மாநிலமான டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் மாநிலங்கள், "டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள், வாக்களிக்கும் நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் வாக்களித்தமையை, மேற்கத்திய தொலைக்காட்சி ஊடகங்கள் கூட காட்டின.

மாரியுபோல் நகரம், உக்ரைனிய இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. வாக்கெடுப்புக்கு முதல் நாள் கூட கடுமையான யுத்தம் நடந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். அத்தகைய மோசமான சூழ்நிலையிலும், மாரியுபோல் மக்கள் பெருமளவில் திரண்டு சென்று வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள். இதுவே, ஜனநாயகத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். மேலைத்தேய "ஜனநாயக" நாடுகள், டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பை ஜனநாயக விரோதமாகக் கருதுவது வேடிக்கையானது.

பொது வாக்கெடுப்பு தொடர்பாக, நெதர்லாந்தில் வெளிவரும் தினசரிப் பத்திரிகையில் இருந்து ஒரு தகவல்:
"டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு விரைவில் பிரகடனப் படுத்தப் படவுள்ளது. இனிமேல், உக்ரைனிய ஹிர்வியானா நாணயத்திற்கு பதிலாக ரஷ்ய ரூபிள் பயன்படுத்தப் படும். தனியரசு உருவான பின்னர், உக்ரைனிய இராணுவம் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக கருதப் படும். உக்ரைனிய இராணுவத்தை வெளியேற்றுவது, டொனியேட்ஸ்க் விடுதலைப் படையின் கடமையாக மாறும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் மட்டுமே, ரஷ்ய இராணுவ உதவி கோரப்படும்.
இந்த பொது வாக்கெடுப்பானது பிரிவினைவாதிகளைப் பொறுத்தவரையில், வெறுமனே மேற்குக்கு எதிரானதும், ரஷ்யாவுக்கு ஆதரவுமான கொள்கைப் போராட்டம் அல்ல. அவர்களுடைய வர்க்கப் போராட்டத்தில் அதுவும் ஒரு ஆயுதம். தொழிற்துறை நகரங்களின் கோடீஸ்வர தொழிலதிபர்கள் "நடுநிலைமை" வகிக்கின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனியார்மயமாக்கப் பட்ட நிறுவனங்களை, மீண்டும் நாட்டுடைமை ஆக்கும் திட்டம் வகுக்கப் படுகின்றது. இடைத்தர, கீழ்த்தர முதலாளிகளும் கூட, பொது வாக்கெடுப்புக்கு எதிராக இருந்தமை தற்செயல் அல்ல."
(Oost-Oekraïne vereffent de rekeningen, NRC Handelsblad, 12-05-2014)

இந்த நேரத்தில், "தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு" கோரிய தமிழ் தேசியவாதிகள் கள்ளமௌனம் சாதிக்கின்றனர். சீமான், வைகோ, போன்ற தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமார் கூட, எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் தமிழீழத்திற்காக பேசிக் கொண்டிருந்த இணைய ஆர்வலர்களும், அது பற்றி வாயே திறக்கவில்லை. இவர்கள், உண்மையிலேயே தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரிக்கிறார்களா? அல்லது, சும்மா பொழுதுபோக்கிற்காக, தமிழீழ ஆதரவு அரசியல் செய்கிறார்களா?


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:





No comments: