(இரண்டாம் பாகம்)
உலக வரலாற்றில் முதல் தடவையாக, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்பட்ட போதிலும், ஒரு பின்தங்கிய விவசாய நாடான ரஷ்யாவை சோஷலிச நாடாக்க முடியுமா என்பதில் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. “முதலில் எமது நாட்டில் சோஷலிசம்" நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வாதிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தை தக்க வைத்த பின்னர், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, சோஷலிசத்தை கொண்டு வர வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டினார். ஸ்டாலின் தனி ஒரு ஆளாக செயற்படவில்லை. ஸ்டாலினுடன், மத்திய குழுவை சேர்ந்த இன்னும் இரண்டு தலைவர்கள் கூட்டுச் சேர்ந்து குழுவாக இயங்கினார்கள். ஸ்டாலின் குழு, ட்ராஸ்கி குழு, புகாரின் குழு என்பன, தத்தமது கொள்கைகளை விளக்கி, தட்டச்சு செய்த பிரதிகளை கட்சி உறுப்பினர்களுக்கு விநியோகித்தார்கள். இந்தக் குழுக்களுக்கு இடையிலான விவாதங்கள், மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக நடந்தன.
ஸ்டாலின் எழுதிய “லெனினிசத்தின் அடிப்படைகள்" ஒரு வரலாற்று முக்கியமான ஆவணம் ஆகும். 1920 ம் ஆண்டு எழுதப் பட்டாலும், பிற்காலத்தில் சில திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்தது. ஸ்டாலினும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத கடும்போக்காளராக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப, ஸ்டாலின் சில கலாச்சார விட்டுக் கொடுப்புகளை செய்தார். குறிப்பாக, 1935 ம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்டாலினின் சோஷலிசக் கட்டுமானம் காரணமாக பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்தது. மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தொழிற்துறை புரட்சி காரணமாக ஐம்பது ஆண்டுகளில் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலினின் சோவியத் யூனியன் பத்து வருடங்களுக்குள் எட்டியிருந்தது.
பொருளாதார வளர்ச்சி காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஒரு காலத்தில் மேட்டுக்குடியினர் மட்டுமே அனுபவித்த உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது. மேட்டுக்குடியினர் ஆடம்பர வாழ்க்கை வசதிகளை அனுபவித்த காலத்தில், அந்தப் பொருட்களின் விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு இருந்தன. ஆனால், ஸ்டாலின் காலத்தில், எல்லோரும் வாங்கக் கூடியதாக, ஆடம்பர பாவனைப் பொருட்களின் விலைகள் குறைந்திருந்தன. உணவுப் பொருட்களும், பாவனைப் பொருட்களும் தாராளமாக கிடைத்து வந்ததால், அவற்றை விற்பனை செய்வதற்கு புதிதாக பல்பொருள் அங்காடிகள் திறக்கப் பட்டன. நாம் இன்றைக்கு மேலைத்தேய நாகரீகமாக கருதும் “சூப்பர் மார்க்கட்" , சோவியத் யூனியனில் 1930 ம் ஆண்டே வந்து விட்டது. நாடு முழுவதும், பெரிய, சிறிய நகரங்களில் எல்லாம் சூப்பர் மார்க்கட்டுகள் உருவாகின.
சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததால், வசதி வாய்ப்புகள் அதிகரித்தன. அதனால் கொண்டாட்டங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகரித்தன. ஆரம்ப கால புரட்சியாளர்கள் பிற்போக்கு கலாச்சாரமாக ஒதுக்கித் தள்ளியதைக் கூட, அரசியலற்ற சாதாரண மக்கள் அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை ஸ்டாலின் வழங்கினார். உதாரணத்திற்கு, 1917 புரட்சிக்குப் பின்னர், திருமணத்தில் மோதிரம் மாற்றிக் கொள்வது தடை செய்யப் பட்டது. புரட்சியாளர்கள் அதனை பிற்போக்கு கிறிஸ்தவ கலாச்சார சின்னமாக கருதினார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில் அது அனுமதிக்கப் பட்டது. அதனால் தங்க மோதிரங்கள் செய்து கொடுக்கும் நகைக் கடைகளும் தோன்றின. அதே போன்று, நடனம் ஆடுவது மேட்டுக்குடி கலாச்சாரம் என்று கருதிய புரட்சியாளர்கள், எல்லா வகை நடனங்களையும் தடை செய்திருந்தார்கள். ஸ்டாலின், நடனத்தை அனைத்து மக்களினதும் பொழுதுபோக்கு உரிமையாக மாற்றினார். அதனால், நாடு முழுவதும் நடனப் பள்ளிகள் தோன்றின.
சோவியத் மக்களின் கலாச்சார மறுமலர்ச்சியின் ஒரு கட்டமாக, பிரமாண்டமான அணிவகுப்புகளும், ஸ்டாலினை மையப் படுத்திய தலைமை வழிபாடும் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டன. அவற்றில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தார்கள். நமது நாடுகளில், கோயில்/தேவாலய திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களின் மனநிலையோடு அதனை ஒப்பிடலாம். ஆனால், “ஸ்டாலினை மையப் படுத்திய தலைமை வழிபாடு” குறித்து அதிக கவனமெடுத்து உயர்த்திப் பிடித்த மேலைத்தேய புத்திஜீவிகள், அதற்குப் பின்னால் இருந்த பொது மக்களின் பண்பாட்டுக் கூறுகளை கண்டுகொள்வதில்லை. அதாவது, அத்தகைய அரசியல் நிகழ்வுகள், பொது மக்களிற்கு உற்சாகத்தை கொடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதி மட்டுமே. ஆனால், மேற்குலகில் வாழ்ந்தவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. “ஸ்டாலினிச சர்வாதிகாரம்" மட்டுமே அவர்களின் கண்களை உறுத்தியது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிற்துறை வளர்ச்சியை, ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பத்து வருடங்களில் ஈடுகட்டின. ஒரு கட்டத்தில், சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை முந்திக் கொண்டு சென்றது. சோவியத் ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது. அந்த பொருளாதார அதிசயம் எப்படி சாத்தியமானது? எவ்வாறு ஒரு பின்தங்கிய விவசாய நாடு, ஒரு குறுகிய காலத்தில் முன்னேறிய தொழிற்துறை வல்லரசாக மாறியது? ஸ்டாலின் தீர்க்கதரிசனத்துடன் முன்மொழிந்த “ஒரே நாட்டில் சோஷலிசம் சாத்தியம்” என்ற நிலைப்பாடு மிக முக்கியமானது.
இன்றைக்கு, ஒரு உப கண்டம் என்று அழைக்கப் படும் இந்தியாவில் கூட, மேற்கத்திய மூலதனம் இல்லாமல் பொருளாதாரத்தை நடத்துவதை, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலினின் சோவியத் யூனியன், மேற்கத்திய நாடுகளிடம் ஒரு சல்லிக் காசு கூட கடன் வாங்காமல், தனது சொந்தப் பலத்தில் பொருளாதாரத்தை கட்டியது. மேற்கத்திய நாடுகளில் பெரிதும் வெறுக்கப் பட்ட, கிராமங்கள் தோறும் அமைக்கப் பட்ட கூட்டுத்துவ பண்ணைகள் (Collective farms), பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.
ஸ்டாலின், ரஷ்ய பொருளாதாரத்தின் மிகப் பெரிய தொழில் துறையான விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்தார். விவசாயம், பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொன்னால் அது மிகையாகாது. கூட்டுறவுப் பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாயிகள் உற்பத்தியை பெருக்கினார்கள். கிராமங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்த படியால், நகரங்களில் தொழிற்சாலைகள் ஒழுங்காக இயங்கத் தொடங்கின. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டதால், நகரங்களில் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அது நகர்ப்புற தொழிலாளர்களை வேலைக்கு செல்ல ஊக்குவித்தது.
மேற்குலகில் வெறுக்கப்பட்ட, “ஸ்டாலினிச சர்வாதிகாரம்” நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்த நிலைமை வேறு. பொருட்களின் விலையை சந்தை தீர்மானித்த காலத்தில், கிராமப்புற விவசாய உற்பத்தியாளர்கள் இலாபமடைந்தனர். ஆனால், நகர்ப் புறங்களில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். சோவியத் அரசு யாருடைய பக்கம் நின்றிருக்க வேண்டும்? விவசாய உற்பத்தியாளர்களுக்கு இலாபம் கிடைப்பது முக்கியமா? அல்லது நகர்ப்புற தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பது முக்கியமா?
ஏறச் சொன்னால் குதிரைக்கு கோபம் வரும், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் வரும். நிச்சயமாக, இது இலகுவாக தீர்க்கக் கூடிய பிரச்சினை அல்ல. எத்தகைய அரசாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இந்தப் பிரச்சினையை சமாளித்திருக்க முடியாது. நாட்டுப்புறங்களில் கூட்டுறவுப் பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாய உற்பத்தியை பெருக்கலாம். ஆனால், பெருமளவு நிலங்களும், கால்நடைகளும் “கூலாக்”(Kulak) என்றழைக்கப் பட்ட பணக்கார விவசாயிகளிடம் இருந்தன. (கூலாக் என்ற சொல், ஊரில் இருந்த பணம் படைத்தவர்கள் எல்லோரையும் சுட்டிக் காட்ட பயன்பட்டது. நிலவுடமையாளர்கள் மட்டுமல்லாது, சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களும், கிராமத்து மக்களால் கூலாக் என இனம் காணப் பட்டனர்.)
இதுவரை காலமும், தமது சொத்துக்களை வைத்திருந்து ஆதாயமடைந்த கூலாக்குகள், கூட்டுறவுப் பண்ணை முறையை எதிர்த்தார்கள். ஒத்துழைக்க மறுத்தார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால், தம்மிடம் இருந்த சொத்துக்களை அழித்தார்கள், கால்நடைகளை வெட்டிக் கொன்றார்கள். தமக்குக் கிடைக்காதது, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற குறுகிய மனோபாவத்துடன் நடந்து கொண்டனர். ஏற்றத் தாழ்வான சமுதாய அமைப்பில் அது எதிர்பார்க்கக் கூடிய ஒன்று தான். இந்திய, இலங்கைக் கிராமங்களில் வசதியாக வாழும் பண்ணையார்கள், பணக்கார விவசாயிகள் கூட, தமது சொத்துக்களை ஊரில் உள்ள எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஊரில் ஏற்றத் தாழ்வு நீங்கி விட்டால், ஏழைக் குடியானவர்கள் மேல் நாட்டாண்மை செலுத்த முடியுமா? உயர் சாதிப் பெருமை பேச முடியுமா?
கூலாக்குகளை ஒரு வர்க்கமாக அறிவித்த ஸ்டாலின், கூலாக் வர்க்கத்தை இல்லாமல் செய்வதற்கான வர்க்கப் போராட்டம் அவசியம் என்பதை தெளிவு படுத்தினார். கிராமங்கள் தோறும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டன. கூடிய சீக்கிரத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவுப் பண்ணைகள் நிறுவப் பட வேண்டும். அதற்கு ஒத்துழைக்க மறுக்கும் கூலாக்குகள் வெளியேற்றப் பட வேண்டும்.
சோவியத் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. மார்க்சிய தத்துவம் பற்றி, அதற்கு முன்னர் கேள்விப் படாதவர்கள் கூட கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். சிலர் பதவிக்காக, பகட்டுக்காக கட்சியில் சேர்ந்தார்கள். இருந்த போதிலும், புதிதாக சேரும் உறுப்பினர்களின் வர்க்கப் பின்னணி கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் கூலித் தொழிலாளியின் பிள்ளையாக இருந்தால், அல்லது மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், பல இடங்களில் அதுவே போதுமான தகைமையாக கருதப் பட்டது. வறுமையான குடும்பங்களில் இருந்து வந்த புத்திசாலி இளைஞர்கள் பலர், பிற்காலத்தில் கல்வியறிவு பெற்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக வந்தார்கள்.
நமது நாடுகளில் கூட, வறுமைப் பட்ட இளைஞர்கள் மனதில், அந்த வர்க்கத்திற்கே உரிய கிளர்ச்சிகர மனப்பான்மை இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதற்கு வடிகால் தேடிக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஈழப் போராட்டம் நடந்த காலத்தில், ஊரில் இருந்த பணக்கார விவசாயிகள் (தமிழ் கூலாக்?) பலர், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள். புலம்பெயர்ந்த பணக்கார விவசாயக் குடும்பங்கள், தமது வீடுகளில் உறவினர்களை இருத்தி விட்டு சென்றார்கள். சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப்படி ஒரு ஏற்பாடு செய்யா விட்டால், ஊரில் இருக்கும் ஏழைத் தமிழர்கள், அந்த சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வார்கள் என்ற அச்சம் அவர்கள் மனதில் குடி கொண்டிருந்தது. பலர் அந்த நோக்கத்திற்காகவே, புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு புலிகளுக்கு தாராளமான நிதியுதவி செய்து வந்தனர்.
ஈழப்போர் நடந்த காலத்தில், பல ஏழைக் குடும்பங்கள், ஊரில் வெறுமையாக கிடந்த வீடுகளை உடைத்துத் திறந்து குடியேறின. புலிகளின் ஆட்சிக் காலத்தில், “போராளிக் குடும்பம்”, “மாவீரர் குடும்பம்” என்று பல ஏழைக் குடும்பங்கள் வசிப்பதற்கு, “புலம்பெயர்ந்த கூலாக்குகளின்” வீடுகள் வழங்கப் பட்டன. ஈழப் போர் நடந்த காலத்தில், நிறைய பணக்காரக் குடும்பங்கள் புலம்பெயர்ந்து சென்றது போல, ரஷ்யாவிலும் யுத்தம் காரணமாக பல ரஷ்யக் கூலாக் குடும்பங்கள் புலம்பெயர்ந்திருந்தன. அப்படியானவர்களின் சொத்துக்களை கூட்டுறவுப் பண்ணைகள் இலகுவாக அபகரித்துக் கொண்டன.
ரஷ்யா முழுவதும் இருந்த கூலாக்குகளை வெளியேற்றிய கதைகளைக் கூறும் ஏராளமான நூல்கள் மேற்கத்திய நாடுகளில் விற்பனையாகின்றன. மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது போல, ஸ்டாலின் அனுப்பிய போலிஸ் படை, திடீரென ஒரு நாள் இரவு கதவைத் தட்டி, எல்லாக் கூலாக் குடும்பங்களையும் வெளியேற்றவில்லை. சில இடங்களில் அப்படி நடந்திருந்தாலும், பெரும்பான்மையான கிராமங்களில் வறுமைப் பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களே முன் நின்று கூலாக்குகளை வெளியேற்றினார்கள். அதைச் செய்வதற்கான அதிகாரத்தை, கட்சி அவர்களுக்கு வழங்கி இருந்தது.
ஏழைகளின் உதவியுடன் பணக்காரர்களை வெளியேற்றுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. அந்தப் பிரதேச கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர், ஊரில் இருந்த மிகவும் வறுமையான இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுத்து விடுவார். அந்த இளைஞர்கள், நேராக கூலாக் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்றனர். கூலாக் குடும்பங்களை வெளியேற்றி விட்டு, வீட்டையும், சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வெளியேற்றப் பட்ட கூலாக் குடும்பங்களை, பொலிஸ் கூட்டிச் சென்று தடுப்பு முகாம்களில் போட்டது. கூலாக்குக்களை வெளியேற்றிய இளைஞர்கள் பலர், கூட்டுறவுப் பண்ணைகளின் தலைவர்களானார்கள். கூலாக்குகளின் வீடுகளை, கூட்டுறவுப் பண்ணையின் அலுவலகமாக மாற்றினார்கள்.
எல்லா இடங்களிலும், கூலாக்குகள் குடும்பத்துடன் வெளியேற்றப் படவில்லை. பல இடங்களில் தானியங்களை பதுக்கிய கூலாக்குகள் மட்டும் காட்டிக் கொடுக்கப் பட்டனர். யூரல் மலைப் பகுதி கிராமம் ஒன்றில், பவ்லிக் என்ற பருவ வயது சிறுவன், தனது தந்தையை காட்டிக் கொடுத்தான். கூலாக்குகள் தப்பிச் செல்வதற்கு போலிப் பத்திரங்கள் கொடுத்து உதவியதாக, அவர் குற்றஞ் சாட்டப் பட்டு கைது செய்யப் பட்டார். பவ்லிக் பின்னர், அவனது உறவினர்களால் கொலை செய்யப் பட்டான். அதற்குப் பின்னர், பவ்லிக் சோவியத் சிறுவர்களின் நாயகனாக சித்தரிக்கப் பட்டான். அந்தக் காலங்களில், பாடசாலைகளில் பயின்ற சிறுவர்கள், தங்கள் ஊரில் இருக்கும் கூலாக்குகளை காட்டிக் கொடுப்பதை பெருமையாகக் கருதினார்கள். ஊரில் யார் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை, சிறுவர்கள் இலகுவாக கண்டுபிடித்தார்கள்.
ஊரில் இருந்த பணக்காரக் குடும்பங்களை வெளியேற்றிய ஏழை இளைஞர்கள் எல்லோரும் நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில இடங்களில், சிறு சச்சரவு கூட கொலையில் முடிந்தது. சில இடங்களில், கூலாக் குடும்பங்கள் வைத்திருந்த எல்லாப் பொருட்களையும் பறித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், கூலாக் எதிர்ப் புரட்சியாளர்களை வெளியேற்றுவதும், ஒவ்வொரு ஊரிலும் கூட்டுத்துவ பண்ணை அமைப்பதும் மட்டுமே முக்கியமானதாகப் பட்டது.
கூட்டுறவுப் பண்ணை மாதிரியை கொண்ட கூட்டுத்துவப் பண்ணைகள், சில இடங்களில் விவசாய அறிவற்ற முகாமையாளர்களினால் நடத்தப் பட்டதால், உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. உண்மையில், வெளியேற்றப் பட்ட கூலாக்குகள் விவசாய நிபுணர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. காலங்காலமாக விவசாயக் கூலிகளாக வேலை செய்து பழக்கப் பட்ட மக்கள், தாமே விவசாயிகளாக பொறுப்பேற்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல. இந்தக் குறைபாடுகள் காரணமாக, பல பண்ணைகள் நட்டத்தில் இயங்கின. ஆனால், விரைவிலேயே பண்ணை உறுப்பினர்கள் தமது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டார்கள். புதிய விவசாய நிபுணர்கள் உருவானார்கள்.
ஸ்டாலின் கொண்டு வந்த கூட்டுத்துவப் பண்ணை அமைப்பு, ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவில் நன்கு பரிச்சயமான, கூட்டுறவுப் பண்ணைகளில் இருந்து மாறுபட்டது. ஊரில் உள்ள பெரும்பாலான நிலங்களும், கால்நடைகளும் கூட்டுத்துவ பண்ணையின் பொதுச் சொத்தாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், பண்ணையில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு குடும்பமும், வீட்டோடு சேர்ந்த தோட்டம் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார்கள். அதிலே அவர்கள் தமக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டனர். அதை விட, ஆடு,மாடு, கோழி எல்லாம் வளர்த்து உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். ஸ்டாலின் கூட, தனி நபர்களின் சொத்துரிமையை ஆதரித்து பேசியுள்ளார்: “ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று சிறு சொத்து வைத்திருக்க விரும்புவது இயற்கையானது. அது குற்றம் அல்ல.”
ரஷ்ய மொழியில் Kolkhoz என்று அழைக்கப் பட்ட கூட்டுத்துவப் பண்ணைகளின் வளர்ச்சிக்கு, சோவியத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. MTS (Machine-Tractor Station) என்ற அரச நிறுவனம், விவசாய இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கி உதவியது. சோவியத் ஒன்றியத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் MTS கிளைகள் திறக்கப் பட்டன. ஒவ்வொரு MTS கிளைக்கும், பத்துக்கும் குறையாத கூட்டுத்துவ பண்ணைகள் வாடிக்கையாளர்களாக இருந்தன. விவசாய உபகரணங்களும், டிராக்டர்களும் பண்ணைகளின் பாவனைக்கு கடனாக வழங்கப் பட்டன.
அவற்றிற்கான மாதாந்த தவணைத் தொகையை, பண்ணைகள் பண்டமாற்று மூலம் செலுத்தி வந்தன. அதாவது, அவை உற்பத்தி செய்த தானியம், பால், இறைச்சி போன்றன பணத்திற்கு பதிலாக வழங்கப் பட்டன. கூட்டுத்துவ பண்ணை எதிலும், பணப் புழக்கம் இருக்கவில்லை. உறுப்பினர்கள் பணத்தையே கண்ணால் காணவில்லை. அவர்கள் வேலை செய்த நாட்கள், பணத்திற்கு பதிலாக கணக்கு வைக்கப் பட்டன. ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்தால், நான்கு மணித்தியாலங்களை சேமித்துக் கொள்வார். வருடக் கடைசியில் மொத்தமாக சேமிக்கப் பட்ட தொகை, பணமாக மாற்றப் படா விட்டாலும், அதன் பெறுமதிக்கு நிகரான பாவனைப் பொருட்களை பெற்றுக் கொள்வார்கள்.
கூட்டுத்துவ பண்ணை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், அதில் வேலை செய்பவர்கள் தான். அதே நேரம், அவர்களே பண்ணையின் உரிமையாளர்களாகவும் உள்ளனர். அதனால், பண்ணையில் அவர்களால் உற்பத்தி செய்யப் பட்ட விளை பொருட்களில், மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கு கிடைக்கும். (பங்கு வணிகத்தில் செலுத்தப் படும் டிவிடெண்ட் போன்றது.) விளைச்சலில் ஒரு பகுதி, உதாரணத்திற்கு விதை நெல் போன்றன, பண்ணையிலேயே மறு உற்பத்திக்காக சேமித்து வைக்கப் படும். மூன்றாவது பங்கை, அரசு வாங்கிக் கொள்ளும்.
(தொடரும்)
(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.)
____________________________________________________________________________________________
ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
1 comment:
ஸ்டாலினைப் பற்றிய மேற்கத்திய நாடுகளின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கும் சிறப்பான தொடரை எழுதிக் கொண்டிருக்கும் தோழர் கலையரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களை மார்க்சிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் மேற்கத்திய அறிவுஜீவிகள் பலர் மார்க்சியத்தை புணரமைக்கிறோம், மறு உருவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் சோவியத் ரஸ்யாவில் நடந்தவை யாவும் மார்க்சியத்தின் பிறழ்வுகள் என்று கூறுவதோடு ஸ்டாலினைக் கொடுமையான சர்வாதிகாரி என்று (முதலாளித்துவவாதிகளே வியக்கும் வண்ணம்) எழுதுகிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர்கள்.
Perry Anderson, Eric Hobswamm, Frankfurt School Thinkers like Adorno, Herbert Marcuse, Horkeutheimer, Noam Chomsky, E.P.Thompson, Monthly Review Writers, Aijaz Ahmed, New Left Review, Fredrich Jameson, Ernest Mandel, Slavaj Zizek etc etc.......
இவர்களில் பெரும்பாலானோர் ட்ராட்ஸ்கியை ஆதரிக்கத் தயங்கவும் இல்லை. இவர்களைப் பற்றியும் எழுதுங்கள்.
மேலும் பலர் ஸ்டாலின் சோவியத் ரஸ்யாவின் பெருமைகளையும், ஸ்டாலினை எப்படி மதிப்பிட வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக எழுதியுள்ளனர்.
1. Grove Furr: Khrushev Lied and other books
2. George Thomson: Marx to Mao and Other books
3. Douglas Tottle: Fraud, Famine, fascism: Ukrananian Genocide Myth from Harward to Hitler
4. Anna Louis Strong: The Stalin Era
5. Michael.E.Sayers, Albert.E.Kahn: The Great Cospiracy against Soviet Russia
6. Joseph.E.Davies: Mission to Moscow
7. Bruce.H.Fraklin: The Essential Stalin
8. William Blum: Freeing the World to Death, Killing Hope and other books
9. Ludo Martens: Another View of Stalin
10. Harpal Brar: Trotskyiam or Leninism and Other Books
11. Stalin Society in Great Britain
12. Bob Avakian, Chairm,an, Revolutionary Communist Party, USA
13. Mao Tsetung
Post a Comment