Saturday, June 13, 2009

தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி


"Boys", இது ஒரு சினிமாப் படத்தின் கதையல்ல. ஈழ விடுதலை காண புறப்பட்ட ஆயுதமேந்திய அமைப்புகள், அவற்றின் ஆதரவுத் தளமான சாதாரண இளைஞர்களின் கதை இது. அப்போதெல்லாம் போராளிகளாக மாறிய இளைஞர்களை, மக்கள் "பெடியங்கள்" (boys) என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போது இது ஏதோ எமது மண்ணிற்கே உரித்தான சொல் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். இராணுவ வீரர்களையும் boys என்று அழைக்கும் கலாச்சாரம் உலகம் முழுவதும் இருப்பதை காலம் தாமதித்து தான் புரிந்து கொண்டேன். எது எப்படியிருப்பினும், போராளிகள் தமது பிள்ளைகள் என்ற உணர்வோடு "பெடியங்கள்" என்று அழைப்பது எப்படியோ எமது பேச்சு வழக்கிலும் புகுந்து கொண்டது.

1983 கொழும்பில் இடம்பெற்ற தமிழர் விரோத கலவரமானது, வட இலங்கையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய காலத்தில் இந்த கதை நகர்கிறது. அதுவரை நடந்த கலவரங்களில் பெரியது என்பதால் யாழ் குடாநாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில், பாதுகாப்புப் படையினர் சந்தேகப்பட்ட இளைஞர்களை எல்லாம் கைது செய்து தென்னிலங்கைச் சிறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே யாழ் நகரிற்கு அருகில் 13 இராணுவவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. பெருந் தொகையில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் அதுவே முதல் முறை. கலவரத்தின் பின் விளைவாக இலங்கை அரசியலில் மூக்கை நுழைக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, போராளிக் குழுக்களுக்கு இராணுவ பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கிக் கொண்டிருந்தது. பல்வேறு போராளிக் குழுக்களும், இந்திய நிதியுதவியை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருந்தனர்.

ஆரம்ப காலங்களில், பலர் இயக்கங்களின் கொள்கை வேறுபாடுகளை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அனைத்தையும் ஈழ விடுதலைக்கு அர்ப்பணித்த சகோதர இயக்கங்களாக கருதினார்கள். பாடசாலையில் எம்மோடு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் ஏதாவதொரு இயக்கத்தினால் கவரப் பட்டு போய் சேர்ந்து கொண்டிருந்தார்கள். ஒழுங்காக வகுப்பிற்கு வருபவர்கள் திடீரென காணாமல் போவார்கள்.

அவ்வாறு "காணாமல் போனவர்கள்" எல்லோரும் இந்தியாவிற்கு பயிற்சிக்கு போய் விட்டார்கள் என்பது பொதுவான அபிப்பிராயம். அன்று நாடு முழுவதும் தமிழரின் உணர்வுபூர்வமான விடுதலை வேட்கை இருந்த போதிலும், விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாணவர்கள் சிறு தொகையினர் தான். பெரும்பான்மையான பதின்ம வயது இளைஞர்கள் தமது படிப்பை பல தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தனர்.

யாழ்ப்பாணவாசிகள் மத்தியில் மத்தியதர வர்க்க மனோபாவம் சற்று அதிகமாகவே மேலோங்கி காணப்படும். பெற்றோர்கள் பொது இடங்களில் தமிழீழப் போராட்டத்தில் இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு பற்றி புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் தனது வீட்டில் இருக்கும் பதின்ம வயது மகன் இயக்கத்திற்கு போய் விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
"தனது மகன் தறுதலையாக திரிந்தாலும் பரவாயில்லை. விடுதலைக்குப் போகக் கூடாது" என்பதில் பெற்றோர்கள் குறியாக இருந்தார்கள். எல்லோரும் போராடப் போய் விட்டால் மற்ற தொழில்களை யார் பார்ப்பது, என்று ஒரு "தேசாபிமானக் காரணம்" ஒன்றை சொல்வதற்கு தயாராகவே வைத்திருப்பார்கள். இருந்தாலும் போராடப் போகாமல் வீட்டிலே தங்கி விட்ட எமக்கு சொல்வதற்கு வேறொரு காரணம் இருந்தது. "எல்லாப் பையன்களும் இயக்கத்திற்குப் போய் விட்டால், ஊரில் இருக்கும் திருமணமாகாத பெண்களை யார் சைட் அடிப்பது?"

ஆகவே பெரியோர்களே! தேச நலன் கருதி ஊரில் எஞ்சிய விடலைப் பையன்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்தோம். "தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி “ என்று எமக்கு நாமே பெயர் சூட்டிக் கொண்டோம். நாம் எதை சாதித்தோம் என்று சாதாரணமாகக் கேட்டு விடக் கூடாது. எமது நண்பர்கள் யாராவது இயக்கத்தில் சேர்ந்து, இந்தியா பயிற்சிக்கு செல்ல திட்டமிட்டால் அதற்கு எமது உதவியை நாடுவார்கள். நாமும் வானரப் படையாக செயல்பட்டு, நண்பரின் உடைகள், உடமைகளை பெற்றோருக்கு சந்தேகம் ஏற்படாதபடி கொண்டு சென்று கொடுப்போம். (எந்தப் பையனாவது பயணப் பொதியை தயாராக வைத்திருந்தால் வீட்டில் சந்தேகப் பட மாட்டார்களா?) சில நேரம் சம்பந்தப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்து கூட்டிச் செல்லும் வரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்போம். நண்பர் எந்த இயக்கத்தில் சேருகிறேன் என்ற தகவலை மட்டும் வழங்கினால் போதுமானது. ஏனென்றால் "காணாமல் போகும்" நண்பரின் பெற்றோர் எம்மைத் தான் முதலில் தொடர்பு கொள்வார்கள்.

இப்படித்தான் ஒரு முறை எமது நண்பர் ஒருவர், எம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே காணாமல் போய் விட்டார். நண்பரின் தந்தை ஒரு பேராசிரியர். தனக்குத் தெரிந்த இயக்கங்களின் தலைவர்களை எல்லாம் தொடர்பு கொண்டு விசாரித்துப் பார்த்து விட்டார். எங்குமே தனது அருமைப் புதல்வன் போன சுவடு தெரியாததால், எம்மிடம் வந்து முறையிட்டார். பேராசிரியர் என்பதால், தனது மகன் ஒரு வேளை சி.ஐ.ஏ. அல்லது கே.ஜி.பி.யில் சேர்ந்து விட்டானோ? என்று சர்வதேச மட்டத்தில் சிந்தித்தார். என்ன இருந்தாலும் அன்று அவர் RAW மட்டத்திலும் விசாரித்திருக்கலாம். அன்று இருந்த ஈழ விடுதலை அமைப்புகளின் விபரங்கள் யாவும் RAW வசம் இருந்த விஷயம் அனைவரும் அறிந்ததல்லவா?

இந்தியாவிற்கு இராணுவப் பயிற்சிக்கு சென்றவர்கள் குறைந்தது ஆறு மாதம் கழித்தாவது திரும்பி வருவார்கள். ஊர் திரும்புபவர்கள் முதலில் தமது தாய், தந்தையரை பார்த்து விட்டு, எம்மோடும் பழைய நட்பை புதுப்பிப்பார்கள். இருப்பினும் எமது நட்பில் முன்னொருபோதும் இல்லாத வித்தியாசம் காணப்படும். இயக்க நண்பருக்கு புதிய தோழர்கள் தோன்றியிருப்பார்கள். எம்மை சந்திக்க வரும் போதும், அந்த புதிய தோழர்களை கூட்டிக் கொண்டு தான் வருவார்கள். அவர்களின் நடத்தையில் ஒரு வகை ஹீரோத் தனத்தை தரிசிப்போம். நாமும் அவர்களிடம் இருந்து சில "இயக்க ஸ்டைல்களை" கற்றுக் கொண்டோம்.

சிவில் நிர்வாகம் அரசாங்கத்தின் கையை விட்டகன்று, ஆயுத பாணி இயக்கங்களின் பொறுப்பில் வந்து கொண்டிருந்த காலம் அது. கட்டான உடல்வாகு கொண்ட வாலிபர்கள் என்றால், இயக்கப் பெடியங்களாக இருக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். எங்கு சென்றாலும் இயக்கப் பெடியங்களுக்கு முதல் மரியாதை வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. சில நேரம் சாதாரண (தறுதலை) இளைஞர்களும் அந்த முதல் மரியாதைக்கு உரித்தானார்கள். எமது நண்பர் ஒருவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த போது அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டியிருந்தது. சிறிய காயம் என்பதால் அரசாங்க வைத்தியசாலையில் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளில் நாம் சென்று இறங்கிய போது கிடைத்த மரியாதையே தனி. தாதிகள் வரிசையில் நின்ற அத்தனை பேரையும் விட்டு விட்டு நண்பரை விசேஷமாக கவனித்தார்கள்.

தொள தொளப்பான பெரிய சைஸ் சேர்ட் அணிந்து கொள்வதும், அன்று பெரும்பாலான விடலைப் பையன்களால் பின்பற்றப் பட்ட "இயக்க ஸ்டைல்". (இடுப்பில் சொருகியிருக்கும் கைத்துப்பாக்கியை மறைக்க வேண்டுமாம்.) சிலர் வீட்டில் இருக்கும் அப்பாவின் சேர்ட்டை தூக்கிப் போட்டுக் கொண்டு வருவார்கள். இயக்க ஸ்டைல் சேர்ட்கள் யாழ் குடா நாட்டில் புதிய பாஷனாகியது. துணி வியாபாரிகளும் இது தான் தருணம் என்று பெரிய சைஸ் சேர்ட் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்தார்கள். "தமது இயக்க உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக பெரிய சைஸ் சேர்ட் அணியச் சொல்ல, அது தற்போது அனைவரும் அணியும் பாஷனாகி விட்டது", என்று ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத இயக்கப் பொறுப்பாளர் அங்கலாய்த்தார்.

விடலைகளின் கூட்டம் கூடுமிடம், அனேகமாக ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் (நீர் வரண்ட ஆற்றின் மேல் கட்டப்பட்ட) மதகாக இருக்கும். மதகின் மேல் குந்தியிருந்து கொண்டு ஊரில் நடக்கும் வம்பு, வழக்கை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்போம். அங்கே வந்து கலந்து கொள்ளும் இயக்கத் தோழர்கள் சிலர், அரசியல் ஆய்வுகளையும் புகுத்துவார்கள். சில சமயம் அந்த வழியால் எமது நண்பரொருவரின் தந்தையார் வந்தால், நண்பர் மதகிற்கு கீழ் ஒளிந்து கொள்வார். இயக்கத் தோழர் இத்தகைய போலி மரியாதைகளை கண்டித்து ஒரு அரசியல் வகுப்பெடுப்பார். மேலைத்தேய நாடுகளில் காணப்படும் தனிநபர் உரிமைகளை அப்படியான தருணங்களில் தான் கற்றுக் கொள்வோம்.

இராணுவ, பொலிஸ் முகாம்கள் ஐந்து அல்லது பத்து கி.மீ. தூர இடைவெளியில் அமைந்திருந்தாலும், வீதிகளில் இராணுவ வாகனங்கள் அடிக்கடி ரோந்து சுற்றுவது வழக்கம். வீதியோரமாக இளைஞர்கள் சிறு குழுவாக திரண்டு இருந்தால் படையினருக்கு சந்தேகம் ஏற்படும். ஒரு முறை குழுவாக வீதியில் கூடியிருந்த எம்மை, தூரத்தில் வந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று பார்த்து விட்டது. நாம் அந்த இடத்தில் "கண்ணி வெடி வைக்க சதி செய்வதாக" நினைத்தார்கள் போலும். எம்மை நோக்கி ஜீப் வண்டி ஓடி வருவதற்குள், குறுக்கு வீதிக்குள் இருக்கும் உறவினர் வீட்டிற்குள் நுழைந்து, சமர்த்துப் பிள்ளைகளாக அவரவர் வேலையை பார்த்துக் கொள்வதாக நடித்தோம்.

இந்திய இராணும் இருந்த காலத்தில் வீடு வீடாக சோதனையிட வருவார்கள். அப்போதெல்லாம் "ஸ்டுடென்ட்" என்று சொன்னால் விட்டு விடுவார்கள். ஒரு முறை சோதனை இட வந்த இந்திய சிப்பாய், எமது நண்பர் ஒருவரின் சட்டைப்பையில் சிகரட் பெட்டியை கண்டு விட்டான். ஸ்டுடென்ட் ஆக இருப்பவன் சிகரட் பிடிப்பானா? என்று அந்த சிப்பாய்க்கு ஒரே குழப்பம். சந்தேக நபராக இழுத்துச் சென்று விட்டார்கள்.

பஞ்சமா பாதகங்களில் சிகரட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவையும் அடங்கும் என்பது யாழ் வைதீக சமூகம் விதித்த கட்டுப்பாடுகள். அத்தகைய சமூகத்தில் உதித்த விடுதலை இயக்கங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ சபைகளில் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள், ஒரேயிரவில் கெட்ட பழக்கங்களை ஒழித்து, நன்மக்களாக பைபிளும் கையுமாக காட்சி தருவார்கள். அதுபோல இயக்கங்களில் சேர்ந்த நண்பர்களும் புதிய மனிதர்களாக மாறியிருப்பார்கள். பிஸ்டலும் கையுமாக வரும் இயக்க நண்பர்கள், விடுதலைக்கு அர்ப்பணித்த வாழ்க்கை பற்றி சில பிரமைகளையும் உருவாக்கி விட்டுச் செல்வார்கள்.

பெரும்பாலும் வலதுசாரி அரசியல் சார்ந்த இயக்கங்களில் தனிநபர் ஒழுக்க விதிகள் கறாராக பின்பற்றப்படும். அதற்கு மாறாக இடதுசாரி அரசியல் சார்ந்த இயக்கங்களில் நெகிழ்ச்சியான தன்மை காணப்படும். "ஈழப் புரட்சி அமைப்பு" என்றொரு இயக்கம் இருந்தது. அதன் உறுப்பினர்கள் தினசரி இயக்க செலவிலேயே சிகரட் புகைக்கும் பாக்கியம் பெற்றவர்கள். அதனால் அவர்களே தமது இயக்கத்திற்கு "ஈழப் புகைத்தல் அமைப்பு" என்று மாற்றுப் பெயர் ஒன்றையும் சூட்டியிருந்தனர்.

ஊரில் இருக்கும் பணக்கார மத்தியதர வர்க்க குடும்பங்கள் எல்லாம், தமது வீடுகளை விட்டு விட்டு பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் குடியேறி விட்டிருந்தனர். வீட்டுச் சொந்தக்காரர்கள், "ஆளரவமற்ற தமது வீட்டில் பேய் குடி புகுந்து விடும்" என்று நினைப்பார்கள் போலும். தமது வீட்டை பராமரிக்கும் படி உறவினரிடம் பொறுப்புக் கொடுத்து விட்டுத் தான் செல்வார்கள். ஊரில் எந்தெந்த வீடுகள் காலியாக இருக்கின்றன என்ற விபரமெல்லாம் எமது விடலைப் பசங்க கைவசம் இருக்கும். எமது துப்புக் கிடைத்தவுடன், ஏதாவதொரு இயக்கத்தின் உறுப்பினர்கள் அந்த வீட்டை உடைத்து, தமது முகாமாக அல்லது அலுவலகமாக மாற்றி விடுவார்கள். பிறகென்ன, வீட்டை பராமரிக்க பினாமியாக நியமிக்கப்பட்டவர், மதில் மேல் நீளும் இயந்திரத் துப்பாக்கியை பார்த்து மிரண்டு ஓடி விடுவார்.

பல இயக்கங்கள் இராணுவ மேலாதிக்கத்தை மக்களிடம் வெளிப்படுத்தும் முனைப்புக் கொண்டிருந்தன. எங்காவது மக்கள் குடியிருப்பின் மத்தியில் இயக்க முகாம் இருந்தால், அதைச் சுற்றி கெடுபிடிகள் காணப்படும். அதே நேரம், ஆளரவம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாத சில இயக்க முகாம்களும் இருந்தன. ஒருமுறை ஒரு கிராமத்தில் நடந்த திருமண விழாவிற்கு, பெண் வீட்டுக்காரர்கள் தறுதலையாக சுற்றும் விடலைப் பையன்களையும் அழைத்திருந்தனர்.

பெண் வீட்டுக்காரருக்கு ஏதோ தாங்கள் மெய்ப்பாதுகாவலர்களை வைத்துக் கொள்ளும் நினைப்பு. தொலை தூர ஊரில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து சேர இரவாகி விட்டது. சீர்வரிசைகளுடன் வீதியில் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள். நமது தறுதலைப் பையன்கள் வீதியோர மாமரத்தில் ஏறி மறைந்திருந்தார்கள். "சத்தம் போடாமல் போகத் தெரியாதா?" என்று ஒரு அதட்டு அதட்டினார்கள். அவ்வளவு தான். "அருகில் எங்கோ இயக்க பெடியன்களின் முகாம் இருக்கிறது" என்ற நினைப்பில், அந்தக் குழு அமைதியாக நடையைக் கட்டியது.

விட்டேற்றியாக ஊர் சுற்றும் தமிழீழ விடலைகள், குறைந்த பட்சம் ஏதாவதொரு நல்ல காரியமாவது சமூகத்திற்கு செய்யவில்லையா? இயக்க அரசியலின் செல்வாக்கு காரணமாக, பல புதிய கருத்துகள் எமக்கு அறிமுகமாகின. புரட்சிகரக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதால், எமக்கு முந்திய தலைமுறையை விட முற்போக்கானவர்களாக இருந்தோம். வெட்டியாக ஊர் சுற்றினாலும் அவ்வப்போது சமூகத்திற்கு நலன் பயக்கும் செயல்களையும் செய்யத் தவறவில்லை.

ஈழப்போர் தீவிரமடைந்து வரும் நேரம், இலங்கை அரசு யாழ் குடாநாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்தது. எமது வீடுகளில் உணவுப் பொருட்கள் முடிந்து கொண்டிருந்தன. கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எமது ஊரில் அரசாங்க கட்டுப்பாட்டில் இயங்கிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் வாரக்கணக்காக பூட்டிக் கிடந்தது. ஒரு நாள் ஊரில் இருந்த இளைஞர் பட்டாளம், மக்களை அழைத்துச் சென்று கூட்டுறவுச் சங்கத்தை உடைத்தது. கடையில் இருந்த உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தது.

ஈழத்தில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்த, குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வான சமூகத்தை சீர்திருத்த வலதுசாரி ஆயுதபாணி இயக்கங்கள் முன்வரவில்லை. "தமிழீழ தேசியம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான சர்வரோக நிவாரணி" என்று கூறி வந்தார்கள். ஒரு வலதுசாரி விடுதலை இயக்கம் தனது உத்தியோகபூர்வ பத்திரிகையில் பின்வருமாறு எழுதியது: "இலங்கையில் சிங்கள வர்க்கத்தின் மேலாதிக்க வெறி, தமிழ் வர்க்கத்தை ஒடுக்குகின்றது. இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வர்க்கப்போராட்டம் என அழைக்கப்படும்." நல்ல வேளை, வர்க்கப்போராட்டத்திற்கு தமிழ் தேசியவாதிகள் கொடுத்த விசித்திர விளக்கத்தை கேட்பதற்கு கார்ல் மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை.

சாதிய சமூகமான யாழ் குடாநாட்டில், இயக்கங்களின் வருகைக்குப் பின்னர் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான். இருப்பினும் எந்தவொரு இயக்கமும் சமூகப் புரட்சியை தலைமை தாங்கி நடத்த முன்வரவில்லை. சாதிச் சண்டைகள் தமிழ் தேசியப் போராட்டத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்று சில இடதுசாரி இயக்கங்களும் நம்பின. இருப்பினும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தலித் மக்கள் சம உரிமையை தாமாகவே பெற்றுக் கொண்டார்கள். இதற்காக அவ்வப்போது சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தையும் நம்மூர் ஊர் சுற்றும் பையன்கள் நடத்திக் காட்டினார்கள்.

ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் கிணற்றில் தலித் மக்கள் சென்று தண்ணீர் அள்ள ஊக்குவித்தது, போன்ற சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர், இப்படியான சம்பவங்கள் நடந்தால் வன்முறையை ஏவிவிடும் ஆதிக்க சாதியினர் பேசாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். கணிசமான அளவு தலித் இளைஞர்களும் இயக்கங்களில் சேர்ந்திருந்ததால் அவர்கள் எதிர்வினையாற்ற அச்சமுற்றிருக்கலாம். அல்லது போராளிகளை திரட்டுவதற்கு, அடித்தட்டு வர்க்கமான தலித் சமூகம் தேவை என்ற காரியவாதம் காரணமாக இருக்கலாம்.

பொதுவாக சரித்திரம் சாமானியர்களைப் பற்றி எழுதப்படுவதில்லை. ஆனால் சாதாரண மக்கள் சரித்திரத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். "உதவாக்கரைகளாக ஊர்சுற்றும் தறுதலைகள்" என பட்டம் சூட்டப்பட்ட சாதாரண பையன்களும் ஈழ விடுதலைப் போரில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். இது எங்களின் "Boys" கதை.

*********************************************************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்

****************************************************************************

7 comments:

Anonymous said...

நீங்கள் நாவலொன்று எழுதவேண்டும். நிறைய தகவல்களை தெரிந்த நபராக இருக்கிறீர்கள்

Kalaiyarasan said...

நன்றி, அதற்கான நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.

Anonymous said...

/*
என்ன இருந்தாலும் அன்று அவர் RAW மட்டத்திலும் விசாரித்திருக்கலாம். அன்று இருந்த ஈழ விடுதலை அமைப்புகளின் விபரங்கள் யாவும் RAW வசம் இருந்த விஷயம் அனைவரும் அறிந்ததல்லவா?
*/

/*
"காணாமல் போகும்" நண்பரின் பெற்றோர் எம்மைத் தான் முதலில் தொடர்பு கொள்வார்கள்.
*/
நீங்கள் RAW -வின் உறுப்பினரா?

ஈழ போராட்டத்தை, உங்களின் வார்த்தை ஜாலத்தால் மட்டம் தட்டுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!


இப்போது அங்குள்ள மக்கள் படும் துன்பம் பற்றியும் அதற்க்கு தீர்வு பற்றியும் எழுதுவீர்களா?

Kalaiyarasan said...

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
ஈழப் போராட்டத்தை நான் மட்டம் தட்டவில்லை. இது சாதாரண தமிழ் மக்களின் கதை. அவர்களின் பார்வையில் இருந்து எழுதியிருக்கிறேன். இப்போது அங்குள்ள மக்கள் துன்பப் படுவதை நான் காணாமல் விடவில்லை. அவர்களுக்கு நான் எந்தத் தீர்வையும் திணிக்கப் போவதில்லை. இன்று படும் துன்பங்களில் இருந்து அவர்கள் மீளுவார்கள்.

Pot"tea" kadai said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

வினவு said...

யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்தின் நீட்சியாய் வலதுசாரியாக எழுந்த ஈழ விடுதலை இயக்கங்களின் தன்மையை கோட்பாட்டு ரீதீயாக புரிந்திருந்தாலும் அதை உணரவைக்கும் படைப்பாகவும், இலக்கியமாகவும் இது மிளிர்கிறது. இதைப் போன்று பல படைப்புக்களை எதிர்பார்க்கிறோம். கூடவே ஒரு வேண்டுகோள், இன்று ஈழப்போராட்டத்தின் பின்னடைவு குறித்து உணர்வுப்பூர்வமாய் சோர்வுற்றிருக்கும் நம் மக்களுக்கு நீங்கள் எழுதும் விசயங்களை ஒரு தேசிய இன விடுதலை இயக்கம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, என்ற நோக்கிலும் எழுதலாம். இரண்டு கோணங்களும் அவசியம்.

தோழமையுடன்
வினவு

Kalaiyarasan said...

அன்புடன் வினவுக்கு,

எனது ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. நான் எழுதிய இரண்டு கட்டுரைகளான தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி, ஈழத்தின் தபால் தலைப்பு விடுதலை அமைப்புகள் இரண்டுமே எனது வாழ்வு அனுபவத்தின் ஊடாக கண்டு கிரகித்துக் கொண்ட சம்பவங்களை தொகுத்து எழுதி இருக்கிறேன். இதிலே கூறப்பட்டுள்ள அத்தனை தகவல்களும் உண்மையில் நடந்தவை. சாதாரண மக்களின் பார்வைக் கோணத்தில் இருந்து எழுதியிருக்கிறேன்.
யாழ் நடுத்தர வர்க்க குணாம்சம் எப்படி தமிழ்த் தேசியமாக பரிணமித்தது என்பது நிச்சயம் எழுதப்பட வேண்டும். ஏனெனில் அது தான் மொத்த தமிழினத்தின் தலைவிதியை அரை நூற்றாண்டுக்கு மேலாக தீர்மானித்து வந்துள்ளது