Tuesday, April 22, 2008

அகதி வைரஸ் 2.0 (Made in Holland)

ஒல்லாந்து தேசியவாதிகள் உருவாகிய "நாடு காத்த சிறுவன்" கதை, நமது பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளதால், பலரும் அறிந்திருப்பர். கடல்மட்டத்திற்கு கீழே இருக்கும் ஒல்லாந்து நாட்டில் அடிக்கடி கடல் நீர் உள்ளே வந்து பேரழிவை ஏற்படுத்துவதால், அதை தடுக்கும் பொருட்டு, மிகப்பெரிய அணை கட்டினர். அப்படி கட்டிய அணையில் ஒரு முறை வெடிப்பு ஏற்பட்டு நீர் கசிவதை கண்ட சிறுவன் ஒருவன், கடல் நீர் ஊருக்குள் செல்வதை தடுக்க தனது விரல்களால் வெடிப்பை மூடிகொண்டிருந்தவாறே இறந்தான். தன்னுயிர் கொடுத்து பிறர் உயிர் காத்த அந்த இளைஞனை ஊர் மக்கள் மெச்சினர். இந்தக்கதை பின்னர் நாடு முழுவதும் பரவியது.ஐரோப்பிய காலனியவாதிகளால் பின்னர் இந்தக்கதை எமது நாடுகளிலும் பரவியது. அந்தக்கதை சொல்லும் சேதி என்ன? உண்மையில் தேசியவாத அரசியல் கருத்தியல் அந்தக்கதை மூலம், எமது பாடப்புத்தகங்கள் ஊடாக எமது மனதில் விதைக்கப்பட்டது. கல்வியில் அரசியல் கலந்திருப்பதன் உதாரணம் இது.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நெதர்லாந்து(அந்த நாட்டின் உத்தியோகபூர்வ பெயர், தாழ் நிலம் என்ற அர்த்தம் கொண்டது. பிற நாட்டு மக்களால் "ஹோலாந்து" என்றும், தமிழில் "ஒல்லாந்து" என்றும் அழைக்கப்படுகின்றது.) நாட்டில் நடக்கவில்லை. 18 ம் நூற்றாண்டில் உருவாகிய சில தேசியவாத புத்திஜீவிகள் இயற்றிய கற்பனை கதை அது. பிரேஞ்சுபுரட்சியை பின்பற்றி, ஒல்லாந்திலும் தேசிய குடியரசு சிறிது காலம் நிலைத்திருந்தது. அப்போது மக்களுக்கு போதிக்கப்பட்ட தேசியவாத கற்பிதங்களில் ஒன்று தான் அந்த கதை. இராணுவ பலம் வாய்ந்த மன்னர் பரம்பரை மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காலத்தில் இருந்து, இன்று வரை தேசியவாதம் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக வளரவில்லை. ஆனால் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி, லிபரல் சீர்திருத்தங்களை காலத்தின் கட்டாயம் கருதி ஏற்றுக்கொண்டமை வேறு விடயம்.

ஒல்லாந்து அரசியல் களத்தில், VVD என்ற கட்சி, பணக்காரர்கள், அல்லது அதிக வருமானம் ஈட்டும் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவு பெற்ற, அவர்களின் நன்மைக்காகவே பாடுபடும் கட்சியாகும். அவர்களால் தனியாக பெரும்பான்மை வாக்குகளை பெற முடியா விட்டாலும், பிற பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்து கூட்டாட்சி அமைப்பதன் மூலம், தனது செல்வாக்கை செலுத்தி வந்தது. அண்மைக்காலமாக அந்தக்கட்சியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல தீவிர வலதுசாரி கருத்துக் கொண்டோரும், இனவாதிகளும் அங்கிருந்து தான் அரசியல் அரங்கில் பிரவேசிக்கின்றனர். "இஸ்லாமிய எதிர்ப்பு புனிதப் போராளி" வில்டர்ஸ், மற்றும் "வெளிநாட்டவரை விரட்டிய வீர நங்கை" ரீட்டா வெர்டொன்க் ஆகியோர் அந்தக்கட்சியில் இருந்து, பின்னர் அவர்களின் தீவிரவாத கருத்துகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த மந்திரிசபையில் ரீட்டா வெர்டொன்க், வெளிநாட்டு குடியேறிகளுக்கான அமைச்சு பொறுப்பில் இருந்த போது பல்வேறு கொடுங்கோல் சட்டங்களை பிறப்பித்து, அரசியல் தஞ்சம் கோரும் அகதிகளினதும், வேலை தேடி அல்லது துணையுடன் சேர வரும் வெளிநாட்டு(குறிப்பாக வறிய நாடுகள்) பிரசைகளின் தொகையை கணிசமான அளவு குறைத்தார். பத்து வருடங்களுக்கு மேல், எந்த முடிவும் இல்லாமல், அகதி முகாம்களுக்குள் அடைபட்டு கிடந்த, பல்நாட்டு அகதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது, என்று ஒரேயடியாக மறுத்தார். அதனால் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சொந்த நாட்டிற்கும் திரும்ப முடியாமல், தஞ்சம் புகுந்த நாட்டிலும் எந்த வித உரிமைகளுமற்று, நடைப்பிணங்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களை ஒரு வழி பண்ணிய ரீட்டா, பின்னர் ஏற்கனவே வதிவிட அனுமதி பெற்று இந்த நாட்டில் வேலை செய்து கொண்டு, தனக்கான துணையை தாயகத்தில் இருந்து தேடிக்கொள்ளும் வெளிநாட்டு குடியேறிகள் மீது பாய்ந்தார். "தனது தாயகத்து கணவனை/மனைவியை கொண்டுள்ளோர் எல்லோரும், தமது இனத்தை பெருக்கும் நோக்கில் செயற்படுகின்றனர்." என்று குற்றம் சாட்டினார். அதனால் புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள் சேருவதை தடுக்கும் பொருட்டு, விண்ணப்பதாரி நிரந்தர வேலையும், உயர்ந்த மாத வருமானத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றும், வரப்போகும் கணவன்/மனைவி தாயகத்திலேயே நெதர்லாந்து நாட்டின் சரித்திரம், கலாச்சாரம், டச்சு மொழியை கற்றுதேற வேண்டும் என்றும் சட்டங்கள் கொண்டு வந்தார். வெளிநாட்டவர் வருகையை குறைப்பது, எதிர்காலத்தில் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் உருவாவதை தடுக்கும் என்றும், வெளிநாட்டவர்கள் தமது "பிற்போக்கு" கலாச்சாரத்தை கைவிட்டு விட்டு, "மேன்மையான" நெதர்லாந்து கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது, அப்படி பின்பற்றாத பட்சத்தில் அவர்களை உரிமைகளற்ற இரண்டாம்தர பிரஜைகளாக ஒதுக்கி வைப்பது, என்பன தான் ரீட்டாவின் நோக்கங்கள். இவை யாவும் ஏற்கனவே, தீவிர வலதுசாரி கட்சிகளால் முன்மொழியப்பட்டவை.

லிபரல் (VVD) கட்சியில் இருந்து விரட்டப்பட்ட ரீட்டா, அண்மையில் புதிய கட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார். "நெதர்லாந்தின் பெருமை" (Trots op Nederland) என்ற பெயரே, புதிய கட்சி தேசியவாத பாதையில் போகவிருப்பதை காட்டுகின்றது. தனது கட்சிக்கு உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பழைய லிபரல் கட்சியில் இருந்தே பிரித்தெடுக்க நினைக்கிறார். மேலும் மக்களை கவர "அரசியல் 2.0" என்ற இன்டர்நெட் விவாத அரங்கம் தொடங்கினார். ஆனால் எதிர்ப்பாளர்களின் தாக்குதல் காரணமாக அந்த இணையத்தளம் பின்னர் மூடப்பட்டது. பகிரங்கமாகவே அகதிகள் மீதும், வெளிநாட்டு குடியேறிகள் மீதும் வெறுப்பு காட்டும் அவரை சுற்றி ஒளிவட்டம் பிடிக்கும் ஊடகங்கள், தினந்தோறும் ரீட்டா பற்றியும் அவரது கட்சி பற்றியும் பெரும் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் விதைத்து, அவர் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அடுத்த பிரதமராவார், என்றும் ஜோதிடம் சொல்கின்றன. இப்படியான தீவிர வலதுசாரி கருத்துகளை மக்கள் கருத்துகளாக மற்றும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் நாட்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்?

உண்மையில் ஒல்லாந்தின் சனத்தொகையில் (பூர்வீக/வெள்ளை இனம்) இளம் சமுதாயத்தை விட, வயோதிபர்கள் அதிகமாகி வருகின்றனர். கடந்த ஐம்பது வருடகால மாற்றங்களான, முன்னேறிய மருத்துவ வசதி, செல்வந்த வாழ்வு போன்றன இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இளமையான உழைப்பாளிகள் இனி வருங்காலத்திலும் தேவைப்படுகின்றனர். அதனை ஈடு செய்ய வெளிநாட்டில் இருந்து வரும் உழைப்புசக்தியிலேயே தங்கியிருக்க வேண்டும். ஆகவே நூறு வீத வெளிநாட்டவர் வருகையை தடை செய்வதென்பது நடக்க சாத்தியம் இல்லை. இருப்பினும் மறுபக்கத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நீண்ட காலமாகவே பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால், கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிலை. ஆனால் பல தசாப்தங்களாக நலன்புரி அரச அமைப்பின் கீழ் வசதியான வாழ்வு வாழும் மக்கள் சடுதியான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். தாம் அனுபவித்த சலுகைகள் ஒன்றன் பின் ஒன்றாக பரிபோகின்றதென்றால், வீதியில் இறங்கியும் போராட தயங்க மாட்டார்கள். இந்த நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்பது எப்படி?

அதற்கு குறைந்த ஊதியம் வழங்கி, குறைந்த காப்புறுதிகளுடன் சுரண்டப்படும் தொழிலாளர் சமூகத்தை உருவாக்கும் தேவை அவர்களுக்கு உள்ளது. வெளிநாட்டு தொழிலாளரை விட்டால் அதற்கு ஏற்றவர்கள் வேறு யார்? அதற்கு தான் வில்டர்ஸ், ரீட்டா வெர்டொன்க் போன்ற தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் இப்போதிருந்தே மொத்த ஒல்லாந்து சமூகத்தையும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று இரண்டாக பிரிக்க பார்க்கின்றனர். நூறு வருடத்திற்கு முன்னர் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியோர் வெள்ளை நிற தோலையும், கிறிஸ்தவ மதத்தையும் கொண்டிருந்ததால், அவர்கள் இலகுவாகவே பெரும்பான்மை இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது நெதர்லந்துகாரர்(டச்சுகாரர்) என்று சொன்னால் அவர்கள் கிறிஸ்தவர்களான வெள்ளையர்கள். மொரோக்கோ, துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்தோர் இஸ்லாமியர் என்பதால் பழுப்பு நிறத்தினர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். முஸ்லிம்கள் மற்றும் கருப்பு நிற தோலை உடையவர்கள், எல்லோருமே தற்போது சிறுபான்மை இனங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த அடையாளம், பல சலுகைகளை குறைக்க பயன்படுகின்றது. உரிமைகள் குறைக்கப்பட்டு இரண்டாம்தரப் பிரஜைகளாக மாறும் இந்த சிறுபான்மை இனங்களை, குறைந்த ஊதியம் கொடுத்து சுரண்டுவதற்கும் வழி பிறக்கும். தேவைப்பட்டால் அவர்களிடம் இருந்து வாக்குரிமையும் எதிர்காலத்தில் பறிக்கப்படலாம். "வன்முறைகளில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள்" பற்றியும், "ஏழ்மையை போக்க இங்கு வந்து பொருளீட்டி செல்வத்தை தமது நாடுக்கு அனுப்பும், அல்லது அரசாங்க சலுகைகளை அனுபவித்து கொண்டு சோம்பேறிகளாக காலம் கடத்த நினைக்கும் அகதிகள்" பற்றியும் கதைகளை அளந்து விட்டால், பெரும்பான்மை மக்கள் இரக்கம் காட்ட மாட்டார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் அகதிகளின் வருகையை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கபட்டன. அப்போது தொடங்கிய "வெளிநாட்டவர் மீது வெறுப்பு" என்ற வைரஸ் தற்போது பல்வேறு மட்டத்திற்கு பரவி வருகின்றது. தீவிர வலதுசாரிகள் இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் உருவாகப்போகும் புதிய நெதர்லாந்து, நியாயமான அரசாட்சியை கொண்டிருக்கப் போவதில்லை. இருப்பினும் வெளிநாட்டவருக்கு அல்லது அகதிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள், தற்போது பிற ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்படுவதை பார்க்கும் போது, நெதர்லாந்து முன்னுதாரணமாக திகழ்வதை கண்கூடாக பார்க்கலாம்.


நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்
__________________________________________________

No comments: