Friday, March 14, 2008

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்

துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று. இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேய கலாச்சாரமும், கிழகத்தய கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களை காணலாம். அரசாங்கம் என்னதான் துருக்கியை ஒரே மொழி பேசும், ஓரின மக்கள் வாழும் நாடாக காட்ட விரும்பினாலும், சிறுபான்மை மொழி பேசும் இனங்கள் அடக்கப்பட்ட நீண்ட வரலாறு அதற்குண்டு. அதன் எதிர்வினையாக, இரண்டாவது சிறுபான்மை இனமான குர்து மொழி பேசும் மக்களின் தாயகத்திற்கான ஆயுதப் போராட்டம் இன்று சர்வதேச பிரச்சினையாக மாறி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக ஏவி விடப்பட்ட துருக்கி இராணுவம் பல மனித உரிமை மீறல்களை புரிந்து, பலரை காணாமல் போக வைத்து இருந்த காலகட்டத்தில், "காணாமல் போவதற்குசர்வதேச கமிட்டி" என்ற மனித உரிமைகள் நிறுவனம் ஒழுங்கு படுத்திய மகாநாட்டில் கலந்து கொண்ட போது, நான் பார்த்த விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கபட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கமல் அட்டடுர்க் (Mustafa Kemal Atatürk) என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி, சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழியை பலவந்தமாக திணித்தது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறினார்கள்.

அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப் பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகைய கலாச்சார பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்த பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்ய பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாக தடை செய்யப் பட்டிருந்தது.

துருக்கி-குர்து கலப்பின பெற்றோருக்கு பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (PKK) என்ற ஆயுதபோராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறை கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தை குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புருதலுக்குள்ளாக்கி, சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்கு போட, கள நிலவரம் எதிர்பாராத அளவு மோசமடைந்தது.





துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள், மீண்டும் தமது தாயகப் பூமிக்கு திரும்ப முடியாமல் வாழ்கின்றனர். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. துருக்கி இராணுவம் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஈராக்கினுள் நுழைந்து திரும்பி வரும். இது தான் இன்றுள்ள நிலைமை.


2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்தான்புல் நகர மத்தியில் இருந்த "கலதசரை"(Galatasaray)விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குழுமிய, காணமல் போன இளைஞர்களின் அன்னையருடன், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேச பிரதிநிதிகளும் இணைந்து கொண்ட ஊர்வலம், தானுண்டு தன் வீடுண்டு என்று வாழும் நகர மக்களையும் மட்டுமல்ல, பெருமளவு பொலிசரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஒரு உணவு விடுதியின் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு , அனைத்து பத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தாலும், வந்ததென்னவோ ஒரு சில இடதுசாரி சார்பு பத்திரிகையாளர்கள் தான். இந்தப் போக்கு பின்னர் குர்திஸ்தான் நகரமான டியார்பகிரில் (Diyarbakir) நடந்த மகாநாட்டிலும் காணப்பட்டது. பாதுகாப்பு படைகளால் பிடித்து செல்லப் பட்டு காணாமல் போனவர்கள், ஒன்றில் சிறுபான்மை குர்த்தியராக இருப்பார்கள், அல்லது இடதுசாரி கட்சி உறுப்பினராக இருப்பார்கள். இந்த காரணத்தால் துருக்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.


துருக்கியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் டியார்பகிர் நகரத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளுடன் வந்திறங்கிய போது வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. குர்திய தேசியவாத கட்சி ஆளும் நகரசபை, மகாநாட்டிற்கு என மண்டபத்தை ஒதுக்கி தந்தது. அயல் கிராமங்களில் இருந்தும் சாதாரண குர்து மக்கள் மகாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர். நான்கு நாட்கள் நடந்த மகாநாட்டில் தமது கண்ணீர் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வீட்டிற்கு வந்து தமது பிள்ளைகளை கூட்டி சென்ற இராணுவத்தினர், சில நாட்களின் பின்னரும் விடுதலை செயாதலால், தேடிப்போகும் பெற்றோருக்கு தமக்கு தெரியாது என கை விரித்த சம்பவங்கள். அப்படி "காணாமல் போனவர்கள்" சில மாதங்களின் பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளிலோ, அல்லது புதை குழிகளிலோ உயிரற்ற சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள், போன்றவற்றை, மனதை உருக்கும் விதத்தில் கூறிய போது, மகாநாட்டு மண்டபத்தில் பலர் அழுததை காணக் கூடியதாகவிருந்தது. காணமல் போனோர் சங்கத்தை உருவாக்கியவர் ஒரு துருக்கி தாய். அவர் பேச எழுந்த போது, பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விண்ணதிர முழக்கமிட்டனர். இதனை அங்கிருந்த சிவில் உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் எரிச்சலுடன் கவனித்தனர். அந்த பெண்மணியின் மகன் 'ஹசன்', ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகக் கூடிய மத்திய தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பட்டம், பதவியை உதறி தள்ளி விட்டு, டியர்பகிர் நகரத்திற்கு வெளியே இருந்த, குர்திய சேரி மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்வது கூட, துருக்கி அரசாங்கத்தின் பார்வையில் குற்றமாக தெரிந்தது. திடீரென ஒரு நாள் காணமல் போன அந்த வாலிபனின் உடல் பின்னர் ஒரு மயானத்தில் கண்டெடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தால் ஹசனின் குடும்பம் துவண்டு விடவில்லை. வயதான தாயும், ஒரேயொரு சகோதரியும் காணாமல் போவதற்கு எதிரான சங்கத்தை ஆரம்பித்து நீதிக்காக போராடுகின்றனர். இன்று அந்த சங்கத்தின் கிளைகள் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், கொலம்பியா தென் அமெரிக்கா நாடுகளிளுமாக, சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.

மாநாட்டிற்கு வந்திருந்த சிவில் போலிஸ் தலையிட்டு குழப்பிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒரு வயதான குர்திய பெண்ணும், ஒரு துருக்கி இளம் பெண்ணும் "வாழ்க குர்திஸ்தான்" என்று கோஷம் எழுப்பிய காரணத்திற்காக, போலிஸ் அலுவலகம் கூட்டிசென்று விசாரிக்கப் பட்டனர். துருக்கியில் இப்போதும் குர்து மக்களின் தாயகத்தை குறிக்கும் "குர்திஸ்தான்" என்ற சொல்லை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் போலிஸ் உளவாளி ஒருவர், மண்டபத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மகாநாட்டில் நடப்பனவற்றை வீடியோ வில் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாடு கூட்டங்கள் ஓய்ந்த நேரம், இருபது வயதே மதிக்கத்தக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, புரட்சி பாடல்களை பாடி ஆடினர். இறுதி நாளன்று பலஸ்தீன இசைக் குழுவொன்றின் இன்னிசை கச்சேரி களை கட்டியது . தொடர்ந்து கலந்து கொண்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு குர்திய சால்வை வழங்கி கௌரவித்து, "சர்வதேச கீதம்" பாடி மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் டியர்பகிர் நகரில் இருந்து சில நூறு கி.மி. தூரத்தில் இருக்கும் "ஹசன்கேய்ப்" (Hasenkeyf) என்ற பண்டைய நாகரீகத்தின் சிதிலங்களை பார்வையிட சென்றோம். வழி நெடுக பச்சை புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் என்று அழகிய இயற்கை காட்சி. இடையிடையே இது ஒரு யுத்த பூமி என்பதை நினைப்பூட்டும் துருக்கி இராணுவ வாகன தொடரணிகள். குர்து மக்களின் கலாச்சார சொத்து என வர்ணிக்கப்படும் பண்டைய நாகரீகம், மலையுச்சியில் சிறு சிறு குகைகள் போன்று தோற்றம் தரும்
, இடிந்த வீடுகளை கொண்டுள்ளது. சிறுவர்களின் கற்பனை கதைகளில் வாசித்ததை நேரே பார்ப்பது போலிருந்தது. ஆயிரம் வருடங்களை கடந்தும் அழியாது நிலத்து நிற்கும் அந்த பண்டைய நாகரீக சின்னங்களை இனிமேல் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி. ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அணைக்கட்டை கட்டி, அனைத்தையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க துருக்கி அரசு திட்டம் போட்டுள்ளது.

குர்திய மக்களுக்கு மலைகள் மட்டுமே சொந்தம் என்று ஒரு மேலைத்தேச எழுத்தாளர் நூல் வெளியிட்டார். அவர்களில் பெரும்பான்மையானோர் ஏதுமற்ற ஏழைகள். அதனாலேயே போரினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகும் போது, ஆயுதமேந்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். பி.கே.கே. கொண்டு வந்த குர்து தேசியவாதம், பல பிரதேச வேறுபாடுகளை கொண்ட குர்து மக்களை ஓரணியில் சேர்த்து. ஐரோப்பிய நகரங்களில் பெற்றோருடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள், இளம் பெண்கள் கூட, தமது சொகுசான வாழ்க்கையை உதறித்தள்ளி விட்டு, விடுதலை வேட்கையுடன் ஆயுதம் தரித்த போராளிகளாக, பனி படர்ந்த மலைகளில் துருக்கி இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிவுகள், துயரங்கள், எல்லாமே இப்போதும் தொடர்கதையாக இருப்பினும் யுத்தம் ஒரு இனத்தின் இருப்பை நிச்சயப் படுத்தியிருக்கிறது.


கலையகம்

No comments: