Thursday, December 15, 2016

வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(இரண்டாம் பாகம்)

வர்க்கம் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்கள் நேரடியாகப் பதிலளிக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், "உலகில் வர்க்கங்கள் இல்லாத ஒரே இனம் தமிழினம் மட்டும் தான்!" இன்னும் சில மேதாவிகள் இருக்கிறார்கள். "அதுவா? ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்று இரண்டு உண்டு." என்று புரட்டிப் போடுவார்கள்.

எனது பெற்றோர் ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து சுயமாக படித்து முன்னேறியவர்கள். கொழும்பில் அரசாங்க உத்தியோகமும் கிடைத்த படியால், பாட்டாளி வர்க்கத்தில் இருந்து கீழ் மத்திய தர வர்க்கத்தில் சேர்ந்து கொண்டவர்கள். அவர்களது உறவினர்கள் பலர் இன்னமும் ஏழைகளாக பாட்டாளி வர்க்கத்தினராக இருந்தனர். நாங்கள் உறவுக் காரர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் சமமாக மதித்து வாழ்ந்தாலும், சமூகத்தில் வர்க்க வேற்றுமை இருக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நான் நன்றாக படிக்கா விட்டால் வன்னியில் மாடு மேய்ப்பதற்கு கொண்டு சென்று விட்டு விடுவதாக, எனது தந்தை அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதென்ன பிரமாதம்? எல்லாப் பெற்றோரும் சொல்வது தானே என்று சிலர் "நியாயம்" கூறலாம். ஆனால், "மாடு மேய்ப்பது என்பது படிக்காதவர்கள் செய்யும் இளக்காரமான தொழில்" என்ற எண்ணம் ஏன் உருவானது? இது வர்க்கம் சார்ந்த கண்ணோட்டம் இல்லாமல் வேறென்ன?

இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் எழுபதுகள் ஒரு முக்கியமான அரசியல் காலகட்டம். ஜேவிபி கிளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தோற்றம் போன்றவை இலங்கையை உலுக்கிய காலம் அது. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த அரசாங்கத்தில் சில இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகித்தன. அந்த அரசாங்கம், இந்தியாவில் இருந்த மாதிரி தேசிய முதலாளிகளின் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தது. அன்று இலங்கையில் வாழ்ந்த ஒவ்வொரு பிரஜையின் வாழ்க்கையிலும் அது தாக்கம் செலுத்தியது.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் எந்த வகைப் பொருளாதாரத்தை பின்பற்றுவது என்பதில் குழப்பம் நிலவியது. ஏனெனில் அது வரையும் மிகப்பெரிய பிரிட்டிஷ் நிறுவனங்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரத்தில் உள்நாட்டு முதலாளிய வர்க்கமும் வளர்ந்திருந்தது. ஐம்பதுகளில் பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கும் திட்டம், சிறிமாவோ காலத்தில் பூரணப் படுத்தப் பட்டது.

அன்றைய காலத்தில் பலருக்கு தேசியவாதத்திற்கும், சோஷலிசத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை. இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொண்டார்கள். சிறிமாவோ சோஷலிசத்தின் பெயரில் தேசியவாதப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தினார். பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். உலகம் முழுவதும் நவ தாராளவாத பொருளாதாரத்தை பின்பற்றிய காலத்தில், வன்னியில் புலிகள் வைத்திருந்த "தமிழீழத்தில்" இருந்த தேசியவாதப் பொருளாதாரமும் அத்தகையது தான். (இன்று சிலர் அதை "வள்ளுவம்" புதிய பெயரில் அழைக்கிறார்கள்.) அது வேறு விடயம்.

அந்தக் காலகட்டத்தில், நாங்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டிய பகுதியில் புதிதாக கட்டப் பட்ட அண்டர்சன் தொடர் மாடிக் கட்டிடத்தில் குடியேறி இருந்தோம். எனது அப்பாவும், அம்மாவும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என்பதால் அங்கே வீடு கிடைத்திருந்தது. அவை அடிப்படை வசதிகளை கொண்டிருந்தாலும் மிகவும் சாதாரணமான வீடுகள். இருப்பினும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற அதிக சம்பளம் வாங்கும் உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு வசித்தனர்.

அன்று, மத்திய தர வர்க்கத்தினருக்கு இடையில், குறைந்த பட்சம் வீட்டு விடயத்தில் சமத்துவம் நிலவியது. அதே நேரம், அங்கு வாழ்ந்த எல்லோரும் வசதியானவர்களும் அல்ல. அதே மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்த எனது நண்பர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடியதையும் நேரில் கண்டிருக்கிறேன். அன்றைய காலத்தில் ஓரளவு சகோதரத்துவம் நிலவியது. ஒரே மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்த படியால் வர்க்க வேற்றுமை கடந்து பழகும் வாய்ப்புக் கிட்டியது. ஆனால், இன்று அந்த நிலைமை அடியோடு மாறி விட்டது.

இன்று வெள்ளவத்தையில் ஆடம்பரமான மாடிக் கட்டிடங்கள் வந்து விட்டன. மேற்குலக நாடுகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் அந்த வீடுகளில் உள்ளன. வர்த்தகர்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு குடியேறி வாழ்கிறார்கள். ஆங்கிலத்தில் "Gated community" என்று அழைக்கப் படும், சுற்றி வர மதில்கள் கட்டி, பாதுகாப்பு வேலிகள் போட்டு, சமூகத்தில் இருந்து தனித்து வாழும் பணக்காரர்களின் குடியிருப்புகள் அவை.

மத்திய தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்த அதே நாரஹேன்பிட்டியவில் தான் கொழும்பில் மிகப் பெரிய சேரியும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு, பள்ளிக்கூடம் செல்பவர்கள் அந்த சேரியைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதாவது, நாங்கள் குடியிருந்த அண்டர்சன் மாடிக் கட்டிடங்களுக்கு அருகில் ஏழைகள் குடியிருக்கும் சேரியும் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு எந்த வசதிகளும் இருக்கவில்லை.


அன்றிருந்த சிறிமாவோ அரசாங்கம், ஏழைகளை முன்னேற்றுவதற்கு எதையும் செய்யவில்லை. ஆனால், சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது. ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஊட்டச் சத்து குறைந்திருந்த படியால், "திரிபோஷா" என்ற மாவை அறிமுகம் செய்தது. பல தானியங்களை அரைத்து தயாரிக்கப் பட்ட, சத்தான உணவான திரிபோஷா இலவசமாகக் கொடுக்கப் பட்டது.

பெரும்பாலான ஏழைகள் சத்துணவான திரிபோஷா சாப்பிடவில்லை! அதாவது, எந்த நேரமும் சோறும் கறியும் சாப்பிடும் வாய்களுக்கு அது ருசிக்கவில்லை. அதனால், சேரிகளில் வாழும் ஏழைப் பிள்ளைகள், தமக்குக் கிடைக்கும் திரிபோஷா மாவை கொண்டு சென்று விற்பார்கள். அவர்கள் அந்தக் காசில் சத்துக் குறைந்த அரிசி வாங்கிச் சாப்பிடுவார்கள். எமது மாடிக் குடியிருப்புகளில் திரிபோஷா மாவை கொண்டு வந்து விற்கும் பிள்ளைகளிடம் அம்மா அதை வாங்குவார். ஒவ்வொரு நாளும் நாங்கள் அதைக் களி மாதிரிக் குழைத்து சாப்பிடுவோம். அதைச் சாப்பிடும் பொழுது என்னுள் ஒரு குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன்.

சிறிமாவோ காலத்தில் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது கடுமையாக கட்டுப் படுத்தப் பட்டது. தென்னிந்திய தமிழ் சினிமாப் படம் கூட, வருடத்தில் ஒன்றிரண்டு தான் வெளியானது. அதே நேரத்தில், ஈழத்து சினிமா வளர்ச்சி அடைந்தது. உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட சினிமாக்களை பார்த்து விட்டு விமர்சனம் செய்வது எமது பொழுதுபோக்காக இருந்தது. சில உள்ளூர் நடிகர்கள், பாடகர்கள் கூட எம்மத்தியில் பிரபலமாக இருந்தார்கள்.

"இலங்கை எம்.ஜி.ஆர்." என்று அழைக்கப் பட்ட வி.பி. கணேசன் நடித்த நான் உங்கள் தோழன் திரைப்படம் நூறு நாட்கள் ஓடியது. செங்கை ஆழியானின் பிரபல நாவலை படமாக்கிய வாடைக்காற்றும் நூறு நாட்கள் ஓடியது. ஈழத்து திரைப்பட வரலாற்றில் அது ஒரு பெரிய சாதனை.  அவற்றில் வந்த பாடல்கள் பலரின் வாய்களில் முணுமுணுக்கப் படுமளவிற்கு பிரபலமாக இருந்தன.

நான் உங்கள் தோழன், மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், வாடைக்காற்று வட மாகாணக் கரையோர மீனவர்களையும் முதன்மைப் படுத்தி எடுக்கப் பட்டிருந்தன. திரையுலக முதலாளிகளும் உழைக்கும் வர்க்கத்தை காட்சிப் படுத்தி தான் காசு சம்பாதிக்க வேண்டிய நிலைமை இருந்தது.

எத்தகைய பாவனைப் பொருளானாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தால், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப் பட்டது. இதனால் உள்நாட்டு சிங்கள முதலாளிகள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து தமிழ் விவசாயிகளும் பெருமளவு இலாபம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால், மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களும், மத்திய தர வர்க்க உழைப்பாளிகளும் நிறையக் கஷ்டப் பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. லக்சல, சலுசல போன்ற பெயர்களில், அரசாங்கம் நிறுவிய விநியோக மையங்களில் தான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். கிராமங்களில் கூட்டுறவு சங்கக் கடைகள் பிரதானமான விற்பனை மையங்களாக விளங்கின. இதனால், ஒரு பக்கம் பாவனையாளர்கள் கஷ்டப் பட்டாலும், மறுபக்கம் கூட்டுறவு இயக்கம் வளர்ந்தது.

உடைகளைப் பொறுத்த வரையில் உள்ளூர் உற்பத்தியான பருத்தியில் நெய்யப் பட்ட ஆடைகளைத் தான் அணிய வேண்டும். இன்றும் கூட இலங்கையில் எல்லாப் பெண்களும் வீடுகளில் அணியும் காற்றோட்டமான நீண்ட அங்கியும் அப்போது தான் பிரபலமானது. "பற்றிக்" என்ற பெயரிலான, இலங்கைக்கே உரிய தனித்துவமான ஆடைகள் தான் அந்தக் காலத்தில் நாகரிகம் (பேஷன்).

அந்தக் காலத்தில் ஆடம்பரமான உடைகள் அணிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பணக்காரர்கள் கூட அடக்கமாக நடந்து கொண்டார்கள். ஏற்றத்தாழ்வான சமுதாயத்தில், குறைந்த பட்சம் ஆடையிலாவது சமத்துவம் நிலவுகிறது என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அந்தக் காலத்தில் ஏறக்குறைய எல்லோரும் பருத்தி உடை அணிந்தனர். அதை மட்டும் தான் வாங்கக் கூடியதாக இருந்தது.

எனது பன்னிரண்டாவது பிறந்த நாள் அன்று, வழமை போல அப்பா ஒரு பருத்திச் சட்டை வாங்கித் தந்திருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வீட்டிற்கு வந்த ஒருவர், அதைக் கண்டு முகம் சுழித்தார். "பிறந்தநாளுக்கு பருத்திச் சட்டை அணிவார்களா? பட்டுச் சட்டை வாங்கவில்லையா?" என்று இளக்காரமாகக் கேட்டார். அப்போது அது வர்க்க வேறுபாட்டைக் குறிக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அதே நேரம், பருத்தி அணிவதை நான் ஒரு குறையாகக் கருதவும் இல்லை.

சுமாரான, கண்ணைக் கவரும் டிசைன் இல்லாத, இலகுவில் கசங்கக் கூடிய பருத்தி ஆடை, சமூகத்தில் ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினரின் உடையாக கருதப் பட்டது. தரமில்லா விட்டாலும் அது தான் மலிவானது. ஆனால், சிறிமாவோ காலத்தில் அந்நிய நாட்டு இறக்குமதி தடுக்கப் பட்டதால், எல்லோரும் உள்நாட்டு பருத்தி ஆடை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிச்சயமாக பணக்காரர்கள் அதை வரவேற்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் போல விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிய விரும்பினார்கள். 

பட்டு ஆடைகளின் விற்பனை முற்றாக ஒழிக்கப் பட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த எனது பெற்றோர் அந்தளவு ஆடம்பரமாக வாழ நினைக்கவில்லை. ஆனால், அவர்களது நண்பர்களும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. அதன் விளைவு தான், பன்னிரண்டாவது பிறந்தநாள் அன்று எனக்குக் கிடைத்த வர்க்க வேறுபாடு பற்றிய அறிவுரை.

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். எழுபதுகளின் இறுதியில் இலங்கையில் ஆட்சி மாறியது. பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனே நவ தாராளவாத பொருளாதாரத்தை கொண்டு வந்தார். இறக்குமதிக்கு விதிக்கப் பட்டிருந்த தடைகளை அகற்றி, தனியார்மயத்தை புகுத்தினார். அரச ஏகபோகம் நிலவிய போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வழித் தடங்களில், தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப் பட்டன.

எனது அப்பாவும் தனது சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு மினிவேன் வாங்கினார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வழித்தடத்தில் அது சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. சம்பளத்திற்கு அமர்த்தப் பட்ட சாரதி ஒருவர் அதை ஓடிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும். மினிவேன் ஓடப் பழகி விட்ட நான், ஒரு தடவை யாழ் நகரில் இருந்த கராஜிற்கு திருத்துவதற்கு கொண்டு சென்றேன். அப்போது வழியில் வந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னைக் கண்டு விட்டார்.

நான் மினிவேன் ஓடியதைக் கண்ட அவர், அதற்காக என்னைத் திட்டத் தொடங்கினார். "நீயெல்லாம் சாரதி வேலை பார்க்கக் கூடாது" என்று கடிந்து கொண்டார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. அதாவது, மினிவேன் சாரதி வேலை அடிமட்ட பாட்டாளி வர்க்க தொழிலாளிகளுக்கானது. மத்தியதர வர்க்கத்தினர் அந்த வேலை செய்வது தடுக்கப் பட்டுள்ளது. அதாவது, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதிக்கொரு தொழில் இருந்த மாதிரி, முதலாளித்துவ காலகட்டத்தில் வர்க்கத்திற்கு உரிய தொழில்கள் இருக்கின்றன.

பிற்காலத்தில், அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், நானாகவே உழைக்கும் வர்க்கத்தினர் செய்த வேலைகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. நாட்டுப்புற ஏழை மக்களை அரசியல் மயப் படுத்துவதற்காக, அவர்களது வீடுகளில் தங்கியிருந்து, அவர்கள் உண்ணும் உணவை உண்டு, அவர்களுடன் சில நாட்கள் வேலைக்கு சென்றதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதனால், வர்க்க அரசியலை நடைமுறையில் அறிந்து கொள்ள முடிந்தது.

(தொடரும்)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, December 14, 2016

வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!

"ஈழத் தமிழருக்கும் பொதுவுடமைக்கும் சம்பந்தம் இல்லை... அவர்களுக்கு தமிழ்த் தேசியத்தை தவிர வேறெந்த மண்ணும் தெரியாது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் நடந்த சம்பவங்களை எழுதி இருப்பதால், இதை எனது சுயசரிதையின் ஒரு பகுதியாகவும் கருதலாம்.

எனது பதினாறு வயது வரையில், அதாவது அறியாப் பருவத்தில், நானும் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத் தான் இருந்தேன். எனது தந்தை மிகவும் தீவிரமான தமிழ்த் தேசியவாதி. அவருக்கு கம்யூனிசம் பிடிக்காது. கம்யூனிஸ்டுகள், குறிப்பாக ஸ்டாலின் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தான் அவர் எனக்கு போதித்து வந்தார்.

எமது ஊரில் ஈரோஸ் எனும் ஈழப்புரட்சி அமைப்பிற்கு வேலை செய்தவர்கள் மூலமாகத் தான் மார்க்சியம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். அந்த இயக்கத்தினர் மீது பலதரப் பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் தான் என்னைப் போன்ற பலருக்கு மார்க்சியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.

"கார்ல் மார்க்ஸ், கம்யூனிசத்தை மறந்து போன இரண்டு தலைமுறைகள் வந்து விட்டன..." என்று ஒரு நண்பர் கூறினார். உண்மை தான். எண்பதுகளில் இருந்த என்னுடைய தலைமுறைக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. அது எங்களது தவறா அல்லது கல்வி அமைப்பின் தவறா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் கம்யூனிசத்திற்கு இடமில்லை. பாடநூல்களில் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப் பட்டிருந்தது. பாடசாலை ஆசிரியர்கள், குறிப்பாக சமூகக்கல்வி ஆசிரியர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கொள்கையை போதிக்கத் தயங்கவில்லை.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, சமூகவியல் பாடத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கம்யூனிசம் பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போது, வகுப்பறையில் யாராவது ஒரு மாணவர், தப்பித் தவறி கம்யூனிசம் பற்றி மேலும் விளக்குமாறு கேள்வி கேட்டால், ஆசிரியர்கள் எதிர்மறையான பதில்களை கூறி வந்தனர். அரசாங்கம் அவர்களை அப்படித் தான் பயிற்றுவித்தது. (விதிவிலக்காக மலையகத்தில் ஆசிரியர்கள் தான் பொதுவுடைமை கருத்துக்களை விதைத்தார்கள்.)

அந்த எதிர்மறையான பதில்கள் எல்லா மாணவர்களையும் திருப்திப் படுத்தவில்லை. எமது ஆசிரியர் சொன்ன விளக்கத்தில் இருந்தே கேள்வி கேட்டோம். "பொதுவுடைமைக் கொள்கை சமத்துவத்தை, பகிர்ந்துண்பதை வலியுறுத்துகிறது என்றால், அது எப்படி தவறாகும்?" இந்தக் கேள்விக்கு ஆசிரியரிடம் பதில் இருக்கவில்லை. அவரே குழம்பிப் போனார்.

வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கேட்டேன். "ஸ்டாலின் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை...அதற்குப் பலியான இலட்சக்கணக்கான மக்கள்..." என்றெல்லாம் விளக்கம் கூறத் தொடங்கினார். அவரது உலகப் பார்வை, மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துடன் பெரிதும் ஒத்திருந்தது. எனது தந்தையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எனது தந்தை ஒரு பின்தங்கிய கிராமத்தில், ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தவர். ஆனால், கடின உழைப்பின் மூலம் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பதன் மூலம் முன்னேறிய பிரிவில் ஒருவராக இருந்தார்.

எனது தந்தையின் காலத்தில், அவர்களது முன்னேற்றத்திற்கு உதவிய முதலாளித்துவ சமூக அமைப்பு சிறந்தது என்று அவர் தீர்மானித்ததில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்தில், தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள, எனது தந்தையின் பிறந்த ஊரான சரசாலை, இன்றைக்கும் அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய கிராமமாக இருக்கிறது. என்றும் மாறாத ஏழ்மை மட்டுமல்ல, ஆரம்பப் பாடசாலையைக் கூட தாண்டாத பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட கிராமம். ஐம்பது, அல்லது எழுபது வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இலங்கை அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய பொருளாதார நாடு. இது "நடைமுறைக்கு உதவாத மார்க்சியக் கண்ணோட்டம்" அல்ல. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணக் கிராமங்களில் அதை நேரடியாகத் தரிசிக்க முடியும். பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருந்த உயர் சாதி நிலவுடமையாளர்கள், முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்தனர். 

முதலாளித்துவம் கொண்டு வரும் வசதி வாய்ப்புகள், தம்மால் ஒடுக்கப் பட்ட சமூகப் பிரிவினர் முன்னேற வழிவகுத்து விடும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த எனது அப்பாவும், முதலாளித்துவத்தை முற்போக்கானதாக கருதியதில் வியப்பில்லை. அவர்களது அன்றைய சமூக மாற்றத்திற்கு அமைவாக தமிழ்த் தேசிய இயக்கமும் தோன்றியிருந்தது.

பலர் நினைப்பதற்கு மாறாக, தமிழ்த் தேசிய இயக்கம் ஈழத்திற்கு வெளியே கொழும்பு நகரில் தான் வளர்ந்து வந்தது. யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் அதற்கான வாய்ப்புகளை வழங்கி இருக்கவில்லை. முதலாவது தமிழ்க் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், நிலவுடைமையாளர்கள், உயர் சாதியினரின் கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. 

உண்மையில், அன்று இடதுசாரிக் கட்சிகள் மட்டும் தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தின! தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த தமிழரசுக் கட்சிக்கு சவாலாக இடதுசாரிக் கட்சிகள் இருந்தன. அந்த சவாலை எதிர்கொண்டு, இடதுசாரி ஆதரவுத் தளத்தை உடைப்பதற்கு தமிழ்த் தேசியத்தை விட்டால் வேறு வழி இருக்கவில்லை.

"தமிழருக்குள் ஒற்றுமை இல்லை.... தமிழராக ஒன்று படுவோம்..." போன்ற கோஷங்கள் தமிழரசுக் கட்சிக் காலத்தில் எழுப்பப் பட்டன. பிற்காலத்தில் தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும், குறிப்பிட்ட காலம் இந்தியத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சி உருவானது. அதன் மூலம் அவர்களாக "தமிழரின் ஒற்றுமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இந்தக் காலகட்டத்தில் தான், அதாவது எழுபதுகளில், கொழும்பில் பணியாற்றிய எனது தந்தையும் தமிழ்த் தேசிய அரசியலை தீவிரமாகப் பின்பற்றி வந்தார்.

கொழும்பு நகரில் எந்த நேரமும் கலவரம் நடக்கலாம், தமிழர்கள் கொல்லப் படலாம் என்ற அச்சம் நிலவியது. அப்போது "தமிழரின் தாயகமான" யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வாழலாம் என்று எனது பெற்றோர் முடிவெடுத்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயரும் கால இடைவெளியில், என்னை யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்து விட்டனர். அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தேன். சுமார் ஒரு வருட காலம் விடுதியில் தங்கியிருந்த படியால், தமிழ்த் தேசிய அரசியலையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.


அன்றிலிருந்து இன்று வரையில், யாழ் இந்துக் கல்லூரி ஒரு "தமிழ்த் தேசியப் பாடசாலை" என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நான் படித்த காலத்தில், அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பொதுக் கூட்டங்கள் நடக்கும். மாணவர்கள் அதைச் சென்று பார்வையிடுவதற்கு, பள்ளிக்கூட நிர்வாகம் ஊக்குவித்தது. "தமிழினத் தளபதி" அமிர்தலிங்கம், "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆகியோர் அங்கு உரையாற்றினார்கள். நாங்களும் அதைக் கேட்டு கைதட்டி இரசித்தோம்.

கூட்டணியினரின் உணர்ச்சிகரமான உரைகளால் ஆகர்சிக்கப் பட்ட நானும், தமிழ்த் தேசியவாதக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவற்றை எனது டயறியில் பார்த்த அப்பா, இதையெல்லாம் வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என்றார். அந்தளவுக்கு எனது கவிதைகளும் "உணர்ச்சிகரமான தமிழ் இன உணர்வு மிக்க" கவிதைகளாக இருந்தன. அப்போது எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தான் இருக்கும். அரசியலை பகுத்தறியும் பக்குவமற்ற அந்த வயதில், உணர்ச்சிகரமான தமிழ்த் தேசியம் சிறந்த கொள்கை என்று நம்பியதில் வியப்பில்லை.

பதினாறு வயதான பின்னர், எல்லா வகையான நூல்களையும் வாசித்து அறியும் அளவிற்கு பக்குவம் வந்திருந்தது. ஆள் வளர்ந்த படியால் அறிவும் வளர்ந்திருந்தது. அப்போதே ஆடம்பரமான கொண்டாட்டங்களும், கோயில் திருவிழாக்களும் அந்நியத் தன்மையை உணர்த்தின. சூரன் போர் போன்ற திருவிழாக்களுக்கு குடும்பம் முழுவதும் போனாலும், நான் மட்டும் வீட்டில் தனித்திருந்தேன். காலப்போக்கில் வெள்ளிக்கிழமை கோயில்களுக்கு போவதையும் குறைத்துக் கொண்டேன். எமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு சாமியைக் கும்பிடுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை நானாகவே அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

நூலகங்களில் பெரியாரின் பகுத்தறிவு நூல்கள் இருந்தன. பெரியார் தனது கடவுள் மறுப்புக் கொள்கையை மிகவும் எளிமையாக எழுதி இருந்தார். அதனால் வாசித்து அறிந்து கொள்ளவும் இலகுவாக இருந்தது. பெரியாரின் தர்க்க ரீதியான வாதங்கள் சரியெனப் பட்டன. அதைப் பற்றி வீட்டில் விவாதித்த பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஆனால், எனக்கு அவை சரியாகப் பட்டன. ஒவ்வொரு நாளும் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடும் நேரம் நான் மட்டும் ஒதுங்கி இருந்தேன். கோயிலுக்கு போவதையும் தவிர்த்து வந்தேன்.

எனது பெற்றோர் மதப்பற்று அதிகமில்லாத இந்துக்களாக (அல்லது சைவர்களாக) வாழ்ந்தவர்கள். விரதம் பிடிப்பது போன்ற பல மத சம்பிரதாயங்களை, அவர்களே தவறென நையாண்டி செய்தனர். அவர்கள் பின்பற்ற விரும்பிய இந்து மதம் விஞ்ஞான பூர்வமான மார்க்கமாக இருந்தது. ஆகவே, என்னுடைய கோயிலுக்கு போகாத, சாமி கும்பிடாத பழக்கத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது. சிலநேரம் நான் கோயில் திருவிழாவுக்கு சென்றால், "அது பக்தியால் அல்ல..." என்று அம்மாவே கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது.

1983 ம் ஆண்டிற்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியதொரு அரசியல் சூறாவளி வீசியது. அனேகமாக எல்லா இளைஞர்கள் மத்தியிலும் ஈழப் போராட்டம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட வேண்டும். 

அரசியல் என்றவுடன், "ஈழத் தமிழர்கள் எல்லோரும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" என்ற தவறான எண்ணம் நிலவுகின்றது. ஈழத் தமிழ் தேசியவாதிகள் வேண்டுமென்றே அப்படி ஒரு கருத்துருவாக்கத்தை கொண்டு வந்திருக்கலாம். அது அவர்களது விருப்பம். ஆனால், தமிழ் நாட்டினரும், சிங்கள முற்போக்காளர்களும் கூட அப்படி நினைத்துக் கொள்வது வேடிக்கையானது. நிச்சயமாக அது தவறு தான்.

யாழ் நகரில் உள்ள பூபாலசிங்கம் புத்தக சாலையில் மார்க்சிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. 1982 ம் ஆண்டில் கூட, அவற்றின் விற்பனை குறைவாக இருந்தது. ஆனால், ஈழப்போரின் ஆரம்பமாக கருதப் படும் 1983 ம் ஆண்டிற்குப் பின்னர் கடையில் ஒரு நூல் கூட மிச்சமில்லாமல் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. நம்ப முடியுமா?


மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவல் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகங்களில் அது எப்போதும் இரவல் கொடுக்கப் பட்டு வந்தது. அத்தோடு ராகுல சங்கிருத்தியான் எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலும் அதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்டன. நானே மாதக் கணக்காக காத்திருந்து தான் அந்த நூல்களை வாங்கி வாசித்தேன். அந்தளவுக்கு யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் மார்க்சியம் குறித்த தேடல் பல மடங்கு அதிகரித்திருந்தது.

(தொடரும்)

Monday, December 12, 2016

"கருப்புப்பண ஒழிப்பு" போர்வையில் இந்திய வங்கிகளின் ஆக்கிரமிப்பு


இந்தியாவில் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பானது, கறுப்புப் பண ஒழிப்பை விட வேறு நோக்கங்களை கொண்டிருந்தது. உண்மையில் அது ஓர் அதிர்ச்சி வைத்தியமாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி நாணயப் பரிமாற்றமாக நடைபெறுகின்றது. அதை முழுவதும் "பிளாஸ்டிக் பணம்" என்று சொல்லப் படும், டெபிட் கார்ட் பரிவர்த்தனையாக மாற்றும் திட்டம் அரசிடம் இருக்கலாம். இதன் மூலம் பணத்தை யாரும் கண்ணால் காண முடியாது. ஆனால் அது பரிவர்த்தனையில் இருக்கும்.

மேலைத்தேய நாடுகளில் நாணய நோட்டுக்களின் பாவனை மிகவும் குறைவு. ஒருவர் நாள் கணக்கில், சிலநேரம் மாதக் கணக்கில் கூட காசை கண்ணால் காணாமல் வாழ முடியும். பையில் பணம் இல்லாமல் வெளியே நடமாட முடியும். அதாவது, வங்கி அட்டை மட்டுமே போதுமானது. மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களில் பலர், ஐம்பது யூரோவுக்கு மேற்பட்ட நோட்டுக்களை கண்ணால் காணவில்லை என்பது புதினமல்ல.

இந்தியாவிலும் அது போன்றதொரு நிலைமையை கொண்டு வருவதற்காக, அரசு ஒரு அதிர்ச்சி வைத்தியம் நடத்தி உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையான மக்கள் வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். இனிமேல் அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் வங்கிகள் ஊடாகவே நடைபெறும். அதற்காக ஊக்குவிக்கப் படும். சிறிய பெட்டிக் கடைகள், சந்தை வியாபாரிகள் கூட டெபிட் கார்ட் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

வேடிக்கை என்னவென்றால், இதன் மூலம் கறுப்புப் பணம் அதிகரிக்குமே தவிரக் குறையாது. சிறிய பணக்காரர்கள், சிறிய முதலாளிகள் மட்டும் பாதிக்கப் படுவார்கள். அவர்களது முதலீடுகள் குறையும். வர்த்தகம் நலிவடையும். அதே நேரத்தில், மறுபக்கத்தில் பெரிய பணக்காரர்களும், பெரிய முதலாளிகளும் வளர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தேங்கும் கறுப்புப் பணத்தை, இலகுவாக வரி இல்லா சொர்க்கத் தீவுகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

ஆதார் அட்டைக்கும் "கறுப்புப் பண ஒழிப்பு" க்கும் சம்பந்தம் இருக்கிறதா? இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதன் மூலம், சிறிய நிறுவனங்களுக்கு அல்லது சிறிய முதலாளிகளின் அழிவுக் காலம் ஆரம்பமாகியுள்ளது!

இந்திய அரசு 500, 1000 ரூபா நோட்டுக்களை செல்லாதாக்கிய அறிவித்தலுக்கு முன்னரே ஆதார் அட்டை திட்டம் வந்து விட்டது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலகட்டத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆதார் அட்டை திட்டம் ஏற்கனவே மேற்குலக நாடுகளில் நடைமுறையில் உள்ளது தான். அங்கு புதிதாக வேலைக்கு சேரும் ஒருவர், முக்கியமாக மூன்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 1.அடையாள அட்டை 2.ஆள் அடையாள இலக்கம் 3.வங்கிக் கணக்கிலக்கம்

இவை இல்லாமல் ஒருவர் வேலை செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, எந்த நிறுவனமும் யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது. ஆதார் அட்டை என்ற ஆள் அடையாள இலக்கம் அரச வரித் திணைக்களத்தில் பதிவில் இருக்கும். அதன் மூலம் யார் எங்கே வேலை செய்தார்? எவ்வளவு பணம் சம்பளமாகப் பெற்றுக் கொண்டார்? இது போன்ற விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு நிறுவனமும் வேலைக்கு அமர்த்தும் தொழிலாளியின் ஆள் அடையாள இலக்கத்தை வாங்கி பதிவு செய்வதன் மூலம் சம்பளத் தொகை பற்றிய விபரங்களையும் அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த வழமைக்கு மாறாக, ஒரு நிறுவனம் தனது வேலையாளுக்கு "கையில் பணம் கொடுத்தது" தெரிய வந்தால், அது பெரும் மோசடிக் குற்றமாகக் கருதப் படும். அந்தக் குற்றத்திற்காக, அரசுக்கு பெருமளவு தண்டப் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

சிலநேரம், தனி நபர்கள் தமது வீட்டு திருத்த வேலைகளுக்காக வேலையாட்களை நாட்கூலிக்கு அமர்த்துவார்கள். அவர்கள் எந்தக் கணக்கு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் பண நோட்டுக்களாக கையில் கொடுப்பார்கள். இது மேற்கத்திய நாடுகளிலும் நடக்கிறது. இது சிலநேரம், "சட்டத்தின் படி தவறாக இருந்தாலும்" கண்காணிப்பதில் உள்ள சிரமம் காரணமாக அரசு கண்டுகொள்வதில்லை.

ஆனால், சிறிய நிறுவனங்களின் பாடு திண்டாட்டமாகி விடும். ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட நிறுவனங்கள் என்பதால், ஊழியர்களின் சம்பளத்தையும் வங்கி மூலமாகத் தான் செலுத்த வேண்டும். ஒரு தொழிலாளி சில மணிநேரங்கள் வேலை செய்திருந்தாலும், கணக்கு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், பின்னர் நடக்கும் பரிசோதனையில் குறிப்பிட்ட நிறுவனம் நிதி மோசடி செய்ததாக கருதப் படும்.

தமது ஊழியர்களின் சம்பளம் ஒழுங்காக கணக்கு பார்த்து வங்கியில் போடுவது, பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால், சிறிய நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தில் தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கப் பார்ப்பது வழமை. குறைந்த பட்சம், கையில் பணம் கொடுப்பதால் அரசுக்கு கட்டும் வரியை ஆவது மிச்சம் பிடிக்கலாம்.

வேலையாட்கள் கட்ட வேண்டிய வருமான வரி தவிர, அவர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக கம்பனி கட்ட வேண்டிய வரி தனியானது. இதைத் தவிர காப்புறுதிகளும் கட்டப் படுவதில்லை. கையில் சம்பளம் கொடுப்பதால், அரசுக்கு வரி இழப்பும், காப்புறுதி நிறுவனங்களுக்கு வருமான இழப்பும் ஏற்படுகின்றது. எல்லோருடைய சம்பளப் பணமும் வங்கி மூலமே செலுத்தப் பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் அந்த நிலையில் மாற்றம் வரும்.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதன் மூலம், சிறிய நிறுவனங்களுக்கு அல்லது சிறிய முதலாளிகளின் அழிவுக் காலம் ஆரம்பமாகியுள்ளது என்று சொல்லலாம்! அன்றாட கூலித் தொழிலாளர்கள் தம்மிடமுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அல்லலுற்றதை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். கையில் காசிருந்தும் எதையும் வாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தனர்.

பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சிறிய நிறுவனங்கள் தான். அவர்கள் எப்போதும் சம்பளம் கொடுப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பார்கள். காசு செல்லாத பிரச்சினையால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களது நம்பகத் தன்மையும் அடி பட்டுப் போனது.

எதிர்காலத்தில், மிகச் சிறிய பொருளாதாரத் துறைகளிலும் பெரிய நிறுவனங்கள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சிறிய நிறுவனங்களை தரகர்களாக அல்லது தமக்கு கீழ்ப்பட்ட கிளை நிறுவனமாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு காலமும் சுதந்திரமாக இயங்கிய சிறிய முதலாளிகள் இனிமேல் தரகர்களாக மாறுவார்கள்.

இந்தத் திட்டத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தலாம்.

1. சிறிய நிறுவனங்களை புதைகுழிக்குள் அனுப்பலாம். இதனால், "தாராள சுதந்திர சந்தையில்" போட்டி குறைக்கப் படும்.

2. அடித்தட்டு கூலித் தொழிலாளர்களும் தாமாகவே பெரிய நிறுவனங்களுக்குள் உள்வாங்கப் படுவார்கள். அவர்களுக்கான சம்பளப் பணம் வங்கிகளில் செலுத்தப் படும். இதனால் வங்கிகளுக்கு பெருந்தொகைப் பணம் இருப்பில் வந்து சேரும்.

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கியதால் பாதிப்படையாத ஒரு பிரிவும் இருந்தது. பெரிய நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்பவர்களும் தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். நாளாந்தம் வங்கிப் பரிவர்த்தனை செய்வதில் உள்ள அனுகூலங்களை அனுபவிப்பவர்கள்.

ஒரு சிலர், "நாம் டெபிட் கார்ட் பாவிக்கிறோம்" என்று மிதப்பாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிந்தார்கள். அப்படி அவர்களை சொல்ல வைத்தது எதுவென்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இதற்குப் பின்னால் உள்ள சிக்கலான பொருளாதார சூட்சுமங்களையும் அறிந்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் நூறு ரூபாயை இன்னொருவருக்கு பரிவர்த்தனை செய்யும் பொழுது அதன் மதிப்பு குறையாமல் நூறு ரூபாயாகவே இருக்கும். ஆனால், "கேஷ் லெஸ் பொருளாதாரம்" எனப்படும், வங்கி அட்டைகளின் மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் எமக்கு சிறியளவில் பண இழப்பு ஏற்படும்.

பணப் பரிவர்த்தனை முழுவதும் வங்கிகள் ஊடாக நடக்குமானால் அதற்கான சேவைக் கட்டணமும் அறவிடப் படும். ஏனென்றால் வங்கி ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல. பணத்தை வைத்து தொழில் நடத்தும் ஒரு வர்த்தக ஸ்தாபனம். இதனால் நாம் எல்லோரும், எமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்டளவு பகுதி வங்கிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்தியாவில் தற்போது நடைபெறும் மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் குறைந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டன. ஒரு கூலித் தொழிலாளியாக இருந்தாலும், அனைத்து உழைப்பாளிகளும் தமது சம்பளத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்கின்றனர்.

எமது சம்பளம் அப்படியே ஒரு சதம் மாற்றம் இல்லாமல் எமது கைக்கு வருகிறது என்று சொல்ல முடியாது. வங்கியின் இடைத் தரகர் வேலைக்கு நாம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்சம் வங்கி அட்டையை பயன்படுத்துவதற்காக வாடகை கட்ட வேண்டும்.

ATM மூலமாக வங்கியில் இருந்து பணம் எடுத்தால், அதற்கும் சேவைக் கட்டணம் கட்ட வேண்டும். அதாவது எமது பணத்தை நாம் எடுப்பதற்கு காசு கொடுக்க வேண்டும்! அதை நாம் தவிர்க்க முடியாது. இதை விட வங்கி ஊடாக இன்னொரு கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யவும் காசு கொடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு இது சாதாரணமான விடயமாகத் தெரியலாம். ஆனால், வருடந்தோறும் வங்கிகள் எம்மிடம் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றன என்பதை ஆராய்வதில்லை.

நான் ஐரோப்பாவுக்கு வந்த புதிதில், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ஒவ்வொரு தடவையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டணம் அறவிடப் பட்டது. சொந்த வங்கியை தவிர்த்து, வேறொரு வங்கியில் பணம் எடுத்தால் அதற்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், டெபிட் கார்ட் அல்லது வங்கி அட்டை மூலமாக பணம் செலுத்தினாலும் கமிஷன் கொடுக்க வேண்டி இருந்தது.

அனேகமாக, பத்து வருடங்களுக்கு முன்னர் தான் அந்த நிலைமை மாறியது. அதுவும் அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக மாற்றிக் கொண்டார்கள். மேலும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது. இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் வங்கிகள் எந்தக் கவலையும் இல்லாமல் வாடிக்கையாளரின் பணத்தை சுரண்டலாம். அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை. மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் கூட வங்கிகள் வருடாந்த சேவைக் கட்டணம் அறவிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதாவது, வங்கியை பயன்படுத்துவதற்கு அல்லது வங்கி அட்டையை பாவிப்பதற்கான கட்டணம். அதே நேரம், வங்கிகள் முன்பு நேரடியாக அறவிட்ட பரிவர்த்தனைக் கட்டணத்தை, தற்போது மறைமுகமாக எடுக்கிறார்கள்.

நாம் ஒரு கடையில் டெபிட் கார்ட் பாவித்து பொருட்களை வாங்கினால், அந்தப் பரிவர்த்தனைக்கு ஒரு கட்டணம் உண்டு. நாங்கள் அதைக் கட்டுவதில்லை என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் பொருட்கள் வாங்கிய கடை வங்கிக்கு கட்டிக் கொண்டிருக்கும். அவர்கள் அந்தத் தொகையை பொருட்களின் விலைகளுடன் சேர்த்து விடுவார்கள். ஆகவே, இறுதியில் நாம் தான் அந்தக் கட்டணத்தை கட்டுகிறோம்.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நாணய நோட்டுக்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனை பல மடங்கு அதிகம். எண்பது சதவீத பொருளாதாரம் வங்கிகளை தவிர்த்து விட்டு நடப்பதாக கருதப் படுகின்றது. இது வங்கித் துறைக்கும், நிதி மூலதன முதலாளிகளுக்கும் "மிகப் பெரிய இழப்பு"!

"டிஜிட்டல் இந்தியாவில்", அனைத்து மக்களையும் வங்கிகளில் தங்கியிருக்க வைத்தால், பில்லியன் கணக்கான ரூபாய்கள் வங்கி முதலாளிகளின் கையிருப்பில் குவியும். அவர்கள் அந்தப் பணத்தை பேரழிவு யுத்தங்களிலும் முதலிட்டு மேலதிக இலாபம் சம்பாதிக்கலாம்.

Tuesday, December 06, 2016

எழுக தமிழுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரிகள், தமிழ் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்பு!


செப்டம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் பேரணியில் சிங்கள இடதுசாரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் த‌மிழ் மேடையில் தோன்றி மக்கள் முன் உரையாற்றியது ம‌ட்டும‌ல்லாது, கொழும்பு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து, எழுக‌ த‌மிழ் பேர‌ணியை தாம் ஆதரித்த‌மைக்கான‌ கார‌ண‌த்தை விளங்க‌ப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

இல‌ங்கையில் தின‌க்குர‌ல் ப‌த்திரிகையில் இந்தத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், இந்த‌த் த‌க‌வ‌லுக்கு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காத‌ கார‌ண‌ம் என்ன‌? த‌மிழ்த் தேசிய‌ ஊட‌க‌ங்க‌ள், இணைய‌த் த‌ள‌ங்க‌ள், பேஸ்புக் போராளிக‌ள் இதை இருட்ட‌டிப்பு செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

எழுக‌ த‌மிழ் பேர‌ணியை முன்நின்று ந‌ட‌த்திய‌ த‌மிழ் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணி உறுப்பின‌ர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அடிக்க‌டி கேட்கும் கேள்வி இது: "(சிங்க‌ள‌) இட‌துசாரிக‌ள் எம‌க்காக‌ என்ன‌ செய்தார்க‌ள்?" சிங்க‌ள‌ இட‌துசாரிக‌ளுட‌ன் கூட்டுச் சேர்ந்து அர‌சிய‌ல் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள், யாரை ஏமாற்றுவ‌த‌ற்காக‌ இப்ப‌டிப் பொய் சொல்கிறார்க‌ள்? இட‌துசாரிக‌ளை திட்டினால் தான், முத‌லாளிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு நிதி கொடுப்பார்க‌ளா?

நவம்பர் 13 அன்று, யாழ் பொது நூலகத்தில் "தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது எப்படி?" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஐக்கிய சோஷலிசக் கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய பிரதான உரையாற்றினார். அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி பொதுச் செயலாளர் சி.க.செந்தில்வேல் உரையாற்றினார். இந்த இரண்டு கட்சிகளும் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமைக்கு ஆதவாக பேசி வருகின்றன.


ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற "சிங்கள" இடதுசாரிகள் வெளியிடும் செந்தாரகை பத்திரிகையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் கட்டுரைகள் வெளியாவதுண்டு. இடதுசாரிகளுக்குள் சிங்கள, தமிழ் பேதம் கிடையாது. அந்தக் கட்சியை ஸ்தாபித்த்வர்களில் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் என்பது மட்டுமல்ல, நிறைய தமிழர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர், இது போன்ற விடயங்களை தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்து வருவதேன்? "சிங்கள" இடதுசாரிகளும் தம்மை ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை, தமிழ் மக்களுக்கு சொல்ல மறுப்பதேன்? முதலாளிகளிடம் இருந்து பணம் கிடைக்காது என்ற சுயநலப் புத்தி தான் காரணமா?

ஈழத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி கம்யூனிஸ்டுகள் பேசி வந்த போதெல்லாம், தமிழ்த் தேசியவாதிகள் அதை நிராகரித்து நையாண்டி செய்தனர். "ஆண்ட பரம்பரைத் தமிழர்கள், இழந்த தேசத்தை கோருகிறார்கள்... சுயநிர்ணயத்தை அல்ல..." என்று அதற்கு விளக்கம் கூறினார்கள்.

தற்போது, அதாவது 2009 க்குப் பின்னர், அதே தமிழ்த் தேசியவாதிகள் சுயநிர்ணய உரிமை பற்றி பேசும் முரண்நகையை அவதானிக்கலாம். குருவை மிஞ்சிய சிஷ்யன் மாதிரி, தமக்கு சுயநிர்ணய உரிமை பற்றி போதித்த கம்யூனிஸ்டுகளுக்கே அது பற்றிப் பாடம் நடத்தும் வேடிக்கையையும் அவதானிக்கலாம்.

அவர்களிடம் யாரும் சுயநிர்ணய உரிமைக்கு விளக்கம் கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. தனிநாடு என்பதற்கு ஒத்த கருத்துச் சொல் என்று தான், அவர்களில் பலர் நினைத்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்கள். மலையகத் தமிழரின் சுயநிர்ணயத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இன்னும் சில தமிழ்த் தேசிய "அறிவுஜீவிகள்" இருக்கிறார்கள். "லெனின் அப்படிச் சொன்னார்..." என்று தொடங்கி விரிவுரை ஆற்றுவார்கள். லெனின் சுயநிர்ணயம் பற்றி எழுதிய குறிப்புகளில், "தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை காரணமாக, சோஷலிச நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவது" பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

கம்யூனிசத்தை எதிர்ப்பதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவர்கள் லெனினை மேற்கோள் காட்டும் முரண்நகையை காணலாம். இன்று எத்தனை தமிழ்த் தேசியவாதிகள் மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள்? தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சோஷலிசத்திற்கான போராட்டத்தையும் ஒரே குறிக்கோள் கொண்ட நட்பு சக்திகளாக பார்க்கிறார்கள்?

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியுடன், கம்யூனிஸ்டுகள் ஐக்கிய முன்னணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் முன்வைக்கப் பட்ட பல நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஏகாதிபத்திய எதிர்ப்பு" என்ற வார்த்தையை கண்டவுடனேயே பின்வாங்கி விட்டார்கள்.

இவர்கள் ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டு, மறுபக்கம் கம்யூனிஸ்டுகள் எம்முடன் வந்து சேரவில்லை என்று இன்றைக்கும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலாவது குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. தம்மை கம்யூனிச எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்வதில் பிரியப் படுவோர் அநேகம். அடிமைகளாக வாழ்வதில் சுகம் காண்பவர்கள் விடுதலை பற்றிப் பேச அருகதை அற்றவர்கள்.

Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: