Saturday, January 31, 2015

மைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுங்களேன்!


இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, பல அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலர் இதனை "பொருட்களின் விலைகுறைப்பு" (விற்பனை விலை) என்று தான் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இவ்வளவு காலமும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும், அரசு அறவிட்டு வந்த வரிகள் தான் குறைக்கப் பட்டுள்ளன!

இதனால், இந்த வருடம் அரசுக்கு வர வேண்டிய, 92.4 பில்லியன் வருமானம் இழக்கப் படும். அதன் காரணமாக, பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையை ஈடுகட்டுவதற்காக, வேறொரு இடத்தில் இருந்து வருமானத்தை எடுக்க வேண்டி இருக்கும். அது எந்த இடம் என்பதையும் மைத்திரி அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

பணக்காரர்களின் சூதாட்டவிடுதிகளான, காசினோக்கள் பெருந்தொகை ஒன்றை, அதாவது ஒரு பில்லியன் ரூபாய்கள் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் ஒரு தடவை தானாம். இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, விளையாட்டு சேனல்கள் கூட ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும். இதனால், மகிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு சொந்தமான சேனல் ஒன்றும் பாதிக்கப் படும். 

அதே மாதிரி, சாட்டலைட் தொலைக்காட்சிகளும் ஒரு தடவை ஒரு பில்லியன் ரூபாய் கட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில், இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் தான் சாட்டலைட் தொலைக்காட்சி சேனல்களை அதிகம் பார்வையிடுகின்றனர். மேலும், மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும்.

இது ஒரு வகையில் "ராபின் ஹூட் வரி" என்று முதலாளித்துவ ஊடகங்களே தெரிவிக்கின்றன. அதாவது, மைத்திரி அரசு பணக்காரர்களிடம் வரி அறவிட்டு, ஏழைகளுக்கு உதவுகிறது. உள்ளூர் கமக்காரர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து வாங்கும் பாலுக்கான விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளும் ஊக்குவிக்கப் படுவர் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், இந்த "ராபின் ஹூட் வரி" இன்னும் எத்தனை வருடங்களுக்கு நடைமுறைப் படுத்தப் படும்? காஸினோக்கள், சாட்டலைட், மொபைல் நிறுவனங்கள் மீதான ஒரு பில்லியன் வரி, ஒரு தடவை மாத்திரமே அறவிடப்படும் என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஆகையினால், அடுத்த வருடத்தில் இருந்து, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக, பொருட்களின் விலைகள் மீண்டும் ஏற்றப் படலாம்.

பிரேசில் நாட்டில் வரிகளற்ற சமுதாயம் ஒன்றிற்காக, அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும், குறைந்தளவு வருமானம் ஈட்டுவோர் தான், அதிகளவு வரி கட்டி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசு இனிமேல் உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து வரியே அறவிடக் கூடாது என்று கோரிக்கை வைக்க வேண்டும்.

பாவனைப் பொருட்கள் மீதான வரிகள், அநேகமாக இடைக்காலத்தில் வந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆக இருக்க வேண்டும். பொதுவாக, வர்த்தகர்கள் தான் அதனை பாவனையாளர்களிடம் அறவிட்டு, அரசாங்கத்திற்கு கட்டி வருகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக, வரிப் பணம் ஒழுங்காக அரசுக்கு போய்ச் சேர்வதில்லை.

இடையில் உள்ள வர்த்தகர்கள் விழுங்கி ஏப்பம் விடும் வரியை இரத்து செய்வதால், அரசுக்கு என்ன குறை வந்து விடப் போகின்றது? இதனால், பொது மக்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். பாவனைப் பொருட்களின் விலை நிரந்தரமாக குறையும்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வோட்டுப் போட்ட தமிழ் வாக்காளர்கள், மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியவாத தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் "இது நமது அரசாங்கம்" என்று கூறியுள்ளார். "நமது அரசாங்கம்" என்றால், நமது மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா?

**********

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த அதே காலத்தில் தான் கிரீசிலும் பொதுத் தேர்தல் நடந்தது. கிரேக்க நாட்டில் பதவியேற்றுள்ள, சீரிசா எனும் இடதுசாரிக் கட்சி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பின்வரும் திட்டங்களை செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் மைத்திரி அரசும், மக்களின் நன்மை கருதி அதே மாதிரியான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று, அவரை ஆதரித்து ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக. 

Friday, January 30, 2015

கிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்! அதிர்ச்சியில் ஐரோப்பா!!


2015 ஜனவரி 25, கிரேக்க பொதுத் தேர்தலில் வென்ற சீரிசா (Syriza) பற்றி சில குறிப்புகள்:

Syriza என்ற பெயர் எப்படி வந்தது? SYnaspismós RIZospastikís Aristerás: தீவிர இடதுசாரிகளின் கூட்டணி என்ற பெயர் சுருங்கி சீரிசா ஆனது.

மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஒரு "தீவிர" இடதுசாரிக் கட்சி என்று அழைக்கின்றன. ஏனென்றால், மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளை தான், இவ்வளவு காலமும் "இடதுசாரி" கட்சிகள் என்று கூறி வந்தனர். நம்மைப் பொறுத்தவரையில் அவை வழமையான முதலாளித்துவ கட்சிகள். அதனால், மேற்குலக ஊடகங்கள் படம் காட்டுவதற்கு மாறாக, சீரிசா ஒரு மிதவாத இடதுசாரிக் கட்சி என்று அழைப்பதே பொருத்தம்.

அதனை நாங்கள், புரட்சிகர கட்சி அல்லது திரிபுவாத கட்சி போன்ற வரையறைக்குள் அடக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனை ஒரு ஜனநாயகக் கட்சி என்று கூறலாம். பெரும்பான்மை கிரேக்க மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கி இருந்தன. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்பது போல, ஜனநாயகம் பேசும் மேற்கத்திய நாடுகளை (குறிப்பாக: ஜெர்மனி போன்றநாடுகள்) அவர்களின் வழியில் சென்று கோரிக்கைகளை வைப்பது தான் நோக்கம்.

Syriza பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதற்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டுமே? புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? Syriza தனது கடமையை செய்ய தவறினால், அல்லது தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தால், அதில் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) பதவியேற்றவுடன் முதல் வேலையாக, கிரேக்க புரட்சிக்காக போராடி மறைந்த கம்யூனிசப் போராளிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் சாத்தினார். அலெக்சிஸ் சிப்ராஸ், முன்பு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், கிரீஸ் நாஸி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கெரில்லாப் போர் ஒன்றை நடத்தியது. கம்யூனிச கெரில்லாப் படைகள், பல இடங்களில் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இருந்தன.

போரின் முடிவில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான, முன்னாள் நாஸி ஆதரவு கிரேக்க ஒட்டுக் குழுக்களுக்கு உதவினார்கள். 1946–49 காலப் பகுதியில், மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்டுகள் தோற்கடிக்கப் பட்டனர். அன்று நடந்த போரில், வீர மரணத்தை தழுவிக் கொண்ட, பல்லாயிரக் கணக்கான போராளிகளின் நினைவு ஸ்தூபி, ஏதென்ஸ் நகரில் வைக்கப் பட்டுள்ளது.

ஒரு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் கட்சியை, பொதுத் தேர்தலில் வெல்ல வைத்த, கிரேக்க வாக்காளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்:


GREECE: THE END OF AUSTERITY? from Theopi Skarlatos on Vimeo.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !
கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்

Monday, January 26, 2015

பாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்


பிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
பிரெஞ்சு மொழியில் "banlieue" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.

தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.

குறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக "முஸ்லிம்கள்" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த "முஸ்லிம்களும்", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல.   தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு. 

பாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: "அடையார்"! அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.

பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.

பாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற "பயங்கரவாதி" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

Clichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.

கைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.

Clichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் "முஸ்லிம்கள்" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் "முஸ்லிம்கள்" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் "முஸ்லிம்கள்" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. 

பத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். "பணக்காரர்களின் சொத்துக்களான" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான "முஸ்லிம்களின்" கார்களும் எரிக்கப் பட்டன.

பாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி: 
//"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்!" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)

வீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.

பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. "அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை." என்று கூறுகின்றனர். மேலும், இதனை "யூதர்களின் சதி" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.

இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள்? பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.

கிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.

எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.

வட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.

நான் "பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். "நான் எழுதுவதெல்லாம் பொய்" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459 ) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.

பெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு: 

2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

Sunday, January 25, 2015

அந்த தீய சக்தியின் பெயர் "இலுமினாட்டி" இல்லை! அவர்கள் தான் முதலாளிகள்!


"இலுமினாட்டி" என்று யாரும் இல்லை. தெரிஞ்சுக்கோங்க மக்களே! முதலாளித்துவம் எனும் மக்கள் விரோத அமைப்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான், இலுமினாட்டி எனும் கட்டுக்கதைகளை பரப்பி விடுகிறார்கள். "இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகள்" என்று அவர்கள் கூறுவன எல்லாம், முதலாளிகளின் வழமையான அராஜகங்கள் தான்.

இந்த சிக்கலான முதலாளித்துவ சமுதாயத்தில், உச்சியில் இருக்கும் ஆளும் வர்க்கம் எவ்வாறு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை பயன்படுத்தி சொத்துக்களை குவித்து வருகின்றது என்ற உண்மை பலர் கண்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, இலுமினாட்டி கதைகளை பரப்புவோரிடம், முதலாளித்துவம் பற்றிய எந்த ஆய்வும் கிடையாது.

ஏனென்றால், முதலாளித்துவம் ஒரு நல்ல விடயம் என்று அவர்கள் நம்புகிறார்கள். (முதலாளித்துவ அமைப்பில் தனது வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.) அதனால், தாம் சிறந்தது எனக் கருதும் ஓர் அமைப்பு தீமைகளுக்கு காரணியாக இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. அதற்காக உருவாக்கப் பட்ட கற்பனைப் பாத்திரம் தான் "இலுமினாட்டி".

உலகில் நடக்கும் தீமைகளுக்கு எல்லாம், சில தனி நபர்களே காரணம் என்று நம்புகிறார்கள். ஆட்சியில் இருக்கும் சில கருப்பாடுகளை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள். தற்போதுள்ள அரசு மற்றும் பொருளாதார கட்டமைப்பு முழுவதும் தவறானது என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது. இலங்கை தேர்தலில் ராஜபக்சவுக்கு பதிலாக மைத்திரியை, இந்திய தேர்தலில், காங்கிரசுக்கு பதிலாக பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்பும் அப்பாவிகள் அவர்கள்.

அதே மாதிரி, இலுமினாட்டி சதிகாரர்களை இனங்கண்டு நீக்கி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக வரும் ஆட்சியாளர்கள், அந்தப் பதவியில் இருந்த முந்திய ஆட்சியாளர்களைப் போன்றே நடந்து கொள்வதை வரலாறு முழுவதும் கண்டு வந்துள்ளோம். முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதின் ஊடாகத் தான், அவர்கள் எல்லோரையும் அப்புறப் படுத்தலாம்.

ஏனென்றால், முதலாளித்துவம் என்பது ஒரு பொருளாதார உற்பத்தி முறை. அது தானாகவே சமூக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகின்றது. ஒரு சில தனி நபர்கள், அல்லது குழுக்கள் இங்கே பிரச்சினை அல்ல. இந்த உற்பத்தி முறையானது, சொத்துடமையாளர்களையும் உழைப்பாளிகளையும் பிரித்து வைக்கின்றது. இந்த சமூக உறவானது, ஒவ்வொரு நாளும் நடக்கும் பொருள் உற்பத்தியில், பல ஆயிரம் தடவைகள் மறு வார்ப்புச் செய்யப் படுகின்றது. 

அநேகமாக எல்லா வர்த்தகத் துறைகளிலும், ஒன்று திரட்டப்படும் மூலதனமானது ஒரு சிறிய சமூகப் பிரிவினரின் கைகளில் செல்வமாக சேர்கின்றது. அதுவே அதிகாரமாகவும் இருக்கின்றது. கணிதத்தில் நமக்குத் தெரியாத ஒன்றை "x" என்று குறிப்பிடுவோம். அதே மாதிரி, முதலாளித்துவ உற்பத்தி முறை, மூலதன திரட்சி பற்றி அறியாதவர்கள்; செல்வமும், அதிகாரமும் படைத்த அந்த சிறு பிரிவினரை "இலுமினாட்டிகள்" என்று அழைக்கிறார்கள்.

Saturday, January 24, 2015

தாமஸ் பிக்கெட்டி, யார் இவர்?


தாமஸ் பிக்கெட்டி. யார் இவர்? பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி அறவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி? இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.

அதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.

வேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான். 

நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.

"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்: 
"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன? சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்திருப்பது தான் முக்கியமானது.

"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்..." என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், "முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.

அதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

Trickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை? உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.



இது தொடர்பான முன்னைய பதிவு: