Friday, February 26, 2010

கலையக வாசகர்களின் கேள்வி நேரம்

கலையகத்தின் வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,

எனது வலைப்பூவில் புதிதாக கேள்வி-பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். பின்னூட்டங்களில் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டுமே எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம், "கேள்வி பதில்" பகுதிக்கு இருக்காது. கலையகத்தின் பார்வைப் புலத்திற்கு உட்பட்ட துறை சார்ந்த கேள்விகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை கேள்விகளையும் கேட்கலாம். இந்தப் பதிவிற்கான பின்னூட்டம் வழியாகவோ, அல்லது மின்னஞ்சல் (kalaiy26@gmail.com) மூலமாகவோ கேள்விகளை அனுப்பி வைக்கவும். மறக்காமல் தங்கள் பெயரைக் குறிப்பிடவும்.

பொதுவாக சர்வதேச அரசியல் சம்பந்தமாக எந்த விதமான கேள்விகளையும் எழுப்பலாம். அதே நேரம் மதம், மொழி, கலாச்சாரம், சமூகம், வரலாறு, உலக நாடுகள் தொடர்பான கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. வானத்தின் கீழே இருக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் விவாதிக்கலாம். ஆனால் நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்கான பதில், ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளவும்.
கலையக வாசகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட தராதரத்தைக் கொண்டிருப்பதால், சம்பந்தப்படாத, அர்த்தமற்ற, தேவையற்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன். உங்கள் கேள்விகள் பிற வாசகர்களுக்கும் பயன்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பிற்குறிப்பு: தனிப்பட்ட காரணங்களால், அடுத்து வரும் சில நாட்களுக்கு, அல்லது வாரக்கணக்காக புதிய பதிவிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகவே இந்த "அமைதியான" காலத்தை பயன்படுத்தி தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Wednesday, February 24, 2010

கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது

மேலைத்தேய அரசியல் அகராதியில், "பால்கன் (Balkan ) நாடுகள்" என்பது ஏறக்குறைய கெட்ட வார்த்தை. தென்-கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, முன்னாள் யூகோஸ்லேவியா, அல்பேனியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு இடையில் பொதுவான குணாம்சம் உள்ளது. லஞ்சம், ஊழல், தரம் குறைந்த நிர்வாகம், கிரிமினல் குழுக்கள், மாமூல் வாங்கும் போலிஸ்... சுருக்கமாக ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கான அத்தனை அம்சங்களும் கொண்டது. கிரீஸ் மட்டும் இதிலே விதிவிலக்கு என்று, எல்லோரும் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். பனிப்போர் காலத்தில், சுற்றியிருந்த சோஷலிச நாடுகளுக்கு மத்தியில் கிரீஸ் மட்டுமே முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்டிருந்தது. இதனால் முன்னேறிய, அபிவிருத்தியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக கிரீஸ் கருதப்பட்டது. இப்போது அந்த மாயத்திரை விலகி வருகின்றது.

கிரீஸ்: ஆரம்ப கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர். முதன் முதலில் 'ஐரோ' நாணயத்தை புழக்கத்தில் விட்ட நாடுகளில் ஒன்று. பணக்கார மேற்கு ஐரோப்பிய சமூகத்தை சேர்ந்த கிரீஸ் பொருளாதாரம் இன்று பாதாளத்தை நோக்கி சரிந்து செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதி கூடிய அந்நிய நாட்டு கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றது. வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர் தான், கடனில் மூழ்கிய கதைகளை சொல்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் இரு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க மக்களை பாதிக்கத் தொடங்கி விட்டன.

கிரீசில் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வது சர்வசாதாரணம். மொத்த தேசிய உற்பத்தியில் 10 % பணம் இவ்வாறு பதுக்கப்படுகின்றது. அரச அலுவல்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது வாடிக்கை. 18 % பொது மக்கள் தாம் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால் பணம் கட்டவில்லை. நிர்வாகம் போலியான கணக்குகளை காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி, குறைந்த வட்டி விகிதம், ஐரோப்பாவின் தாராளமான நிதி ஒதுக்கீடு என்பன இந்த குறைகளை வெளியே தெரிய விடாமல் தடுத்தன. ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, பதினைந்து வருடங்களாக கணக்காளர்கள் பொய்களை புனைந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படி ஏமாற்றலாம்?


பதினைந்து வருடங்களாக புழுத்துப் போன பொருளாதாரத்தை மக்களுக்கு எப்படி மறைத்தார்கள்? எதற்காக பொதுத் தேர்தல் என்ற ஒன்று நடைபெறுகின்றது? வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி, இடதுசாரி சோஷலிசக் கட்சி, என்று இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தன. மக்கள் எப்போதும் இரண்டில் ஒன்றுக்கு தானே வாக்குப் போடுவார்கள்? ஜனநாயகக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, சோஷலிசக் கட்சி சில பொருளாதார சீர்திருத்தங்களை செய்யும். அடுத்த முறை அவர்களின் ஊழலை சுட்டிக் காட்டி ஜனநாயக் கட்சி ஆட்சியை பிடிக்கும். நிரந்தர ஏமாளிகளான மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை வீணாக்கி விட்டு முழிப்பார்கள். கவனிக்கவும், கிரீசில் ஒருவர் கட்டாயமாக வாக்குப் போட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

20 ம் நூற்றாண்டுடன் மாபெரும் மக்கள் எழுச்சிகளும் விடைபெற்று விட்டன என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஏதென்ஸ் நகரில் பற்றிய புரட்சித் தீ அதனைப் பொய்யாக்கியது. டிசம்பர் 2008 ல், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானதை காரணமாக வைத்து, இளைஞர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு சில நாட்கள் ஏதென்ஸ் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமளவிற்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ், எழுச்சி தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. தன் எழுச்சியாக தோன்றிய இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஆளும் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியை தேர்தலில் தோற்கடித்தது.

கடந்த வருட பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிசக் கட்சியின் போதாத காலம். உள்ளுக்குள்ளே உக்கிப் போன கிரீஸ் பொருளாதாரத்தை பற்றிய உண்மைகள் யாவும் இப்போது தான் அம்பலமாகின்றன. கிரீஸ் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பதால், பிற பலவீனமான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் சரியலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. கிரீசை அடுத்து போர்த்துக்கல் தலைக்கு மேல் ஏறிவிட்ட அந்நிய நாட்டு கடன்களை கண்டு அஞ்சுகின்றது. இதனால் இன்னும் அதிக நிதியை கிரீஸ் பொருளாதாரத்திற்குள் பாய்ச்சுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பணக்கார நாடான ஜெர்மனி கிரீசுக்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான வட்டி எவ்வளவு? நிபந்தனைகள் என்ன? எதுவுமே வெளி வரவில்லை.


நிபந்தனைகளை பற்றி கிரீஸ் அரசு வெளியே சொல்லா விட்டாலும் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். வயதானவர்களின் ஓய்வூதியப் பணம், ஊழியர்களின் சம்பளம், இவற்றைக் குறைத்து தானே கடனை அடைக்க வேண்டும்? இத்தகைய "பொருளாதார சீர்திருத்தங்கள்" நாடாளாவிய வேலை நிறுத்தங்களை தூண்டி விட்டன. பெப்ரவரி மாதம் சுங்க திணைக்கள ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். அவர்களது வேலை நிறுத்தம் வாரக்கணக்காக நீடிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் இழுத்து மூடி விட்டார்கள். எங்காவது பெட்ரோல் கிடைக்கிறது என்று தெரிந்தால், அங்கெல்லாம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேன்களில் நிரப்பிச் செல்கின்றனர்.

கிரீசில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்த "குற்றத்திற்காக", சின்னச்சிறு சைப்பிரசிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. "பெட்ரோல் நிலையங்களின் யூனியன்" தலைவரான Kiousis 85 % வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'காய்ந்து' போய் விட்டதாக தெரிவிக்கிறார். நிதி அமைச்சின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட நிதி அமைச்சர் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதே நேரம் கிரீஸ் மீண்டும் இடதுசாரி தீவிரவாத இளைஞர்களின் விளையாட்டுத் திடலாக மாறி விட்டது. ஏதென்ஸ் நகரில் வழக்கமான வீதித் தடைச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் இருவரின் துப்பாக்கிகளை காரில் வந்தவர்கள் பறித்துச் சென்றார்கள். ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள விரோனாஸ் நகரில் உள்ள வங்கியொன்று கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்த போலீசாருக்கும், கொள்ளையருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. வழிப்போக்கரான 18 மாத குழந்தையின் தந்தை ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரிழந்தார். இது மேலும் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை கிளறி விட்டது. அன்றிரவு தொலைக்காட்சியில் தோன்றிய ஏதென்ஸ் போலிஸ் மாஅதிபர் Leuteris Oikonomou : "வெற்றிகரமான நடவடிக்கை" என்று தெரிவித்தார். ஏதென்ஸ் பொது மக்கள் போலீசாரை "ஆயுதமேந்திய மனநோயாளிகள்" என்று திட்டுவதை காணக் கூடியதாக இருந்தது. போலிஸ் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

கிரேக்க அரசுக்கு பொருளாதார சீர்திருத்தத்தை சொல்லிக் கொடுக்கும் JP Morgan வங்கி தலைமை அலுவலகம் குண்டுவெடிப்பினால் சேதமானது. (Tuesday, February 16, 2010 ) குண்டு வைத்தவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த படியால் எவரும் காயமடையவில்லை. இதற்கிடையே லாரிசா நகரில் ஊர்வலம் சென்ற பாசிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், இடதுசாரி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அண்மையில் கிரீஸ் அரசு, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கு பிரஜாவுரிமை கொடுக்க முன்வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாசிஸ்ட் கட்சி ஊர்வலம் ஒழுங்கு செய்திருந்தது. தெருச் சண்டையில் ஈடுபட்டதற்காக நான்கு இடதுசாரி இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு கோரி, ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலிஸ் அனுமதி வழங்காததால், ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர். வங்கி கட்டிடங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்கு சொந்தமான புத்தகக் கடை உடைக்கப்பட்டது. வழியால் போவோர் வருவோருக்கு எல்லாம் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

(குறிப்பு: ஊடக நிறுவனங்களின் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் வணிக ஊடகங்களில் செய்திகள் வருவதில்லை. கிரீசில் இருந்து ஆர்வலர்கள் அனுப்பும் இணையத் தகவல்களை தொகுத்து தந்துள்ளேன்.)

மேலதிக தகவல்களுக்கு:
Second Strike Paralyzes Greece
Bomb Explodes at Athens Offices of JPMorgan Chase

Sunday, February 21, 2010

ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

["அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" தொடரின் இறுதிப் பகுதி.]
29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும், பிரிட்டிஷ் இரசாயனக் கப்பல் ஒன்றும், சோமாலியக் கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ரஷ்ய RAI Novosti செய்திச் சேவையும், பிரிட்டிஷ் பத்திரிகையான The Times சும் அறிவித்திருந்தன.
2009 ம் ஆண்டு, சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடற்பரப்பில் 174 கடற்கொள்ளை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 42 தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்களை இலக்கு வைத்து நடந்துள்ளன. 35 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டன. சர்வதேச நாடுகளின் கடற்படைகளின் ரோந்துக்கு நடுவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையை தடுப்பதற்காக, ஏடன் வளைகுடாவில் சீனா நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க விரும்பியது. சீன கடற்படைத் தளபதி யின் சூ இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். (பார்க்க:China To Establish A Naval Base Around Somalia) நிச்சயமாக, இந்த யோசனையை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், சீன, இந்திய கடற்படைக் கப்பல்கள், கடற்கொள்ளைக்காரர்களை கடலில் வைத்து விரட்டி அடித்துள்ளன. இந்த சம்பவங்கள் யாவும், அந் நாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இடம்பெற்றுள்ளன.

1995 ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர், கடற்படையினரின் கப்பல்களை வெடிமருந்து நிரப்பிய படகால் மோதி நாசப்படுத்தினர். இலங்கையின் வட-கிழக்கு கரையோரம், குறிப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் சில யுத்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு, யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற USS Cole யுத்தக் கப்பலை, அல்கைதாவின் தற்கொலைப் படகு தாக்கி சேதப்படுத்தியது. 2002 ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில், புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வனின் கூற்று ஒன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது. ("எமது தற்கொலைத் தாக்குதல் செய்முறைகளை அல்கைதா பின்பற்றியது..." ஏடன் USS Cole தாக்குதலை சுட்டிக் காட்டி தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்.) (Thamilchelvan, The “Smiling” Face of LTTE) ஈழத்தில் இடி முழங்கினால், யேமனில் மழை பெய்தது!

உலகில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேறு வேறு நாடுகளில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவங்களை சர்வதேச அரசியல் முடிச்சுப் போட்டது. ஏடனிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவிலும், சீனாவிலும் எதிரொலித்தது. இரு நாடுகளினதும் கொள்கை வகுப்பாளர்கள், "சர்வதேச கடற் போக்குவரத்து எதிர்நோக்கும் அபாயம்" குறித்து அறிக்கைகளை தயாரித்தார்கள். மிக முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விட, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவும், இந்தியாவும் நுகரும் எண்ணெயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. வளைகுடா நாடுகளில் இருந்து தென் சீனக் கடல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தவிர்க்கவியலாது இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும். இலங்கை, அம்பாந்தோட்டையில் சீனா கட்டி வரும் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சீனக் கடற்படை அங்கே தளமமைக்கவும் சாத்தியமுண்டு. (China's Sri Lanka port raises concern)

சீனா, "முத்து மாலை" திட்டத்தின் கீழ், பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு தளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து விட்டது. ஆனால் இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அரபி நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை. ஈரான், சூடான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நட்பு நாடுகள். இருப்பினும் அரபிக்கடல் நாடுகள் யாவும் அமெரிக்க சார்பானவையாக இருப்பது சிக்கலை உருவாக்கி விட்டுள்ளது. வளைகுடா நாடுகள் விற்கும் எண்ணெய் குறுகலான ஹொர்முஸ் (Hormuz) ஜலசந்தியைக் கடந்து வர வேண்டும். ஒமானுக்கு சொந்தமான ஹொர்முஸ் முனை அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது. மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் இருந்து வாங்கும் எண்ணெயும், சீனாவின் அரபுத் தோழன் சூடான் வழங்கும் எண்ணெயும், செங்கடல் வழியாக கொண்டு வரப்பட முடியும். ஆனால் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் யாவும் பாப் எல் மன்டப் (Bab el Mandab) என்ற குறுகலான ஜலசந்தியை தாண்டி வர வேண்டும். யேமனுக்கும், ஜிபூத்திக்கும் நடுவில் உள்ள, 18 மைல் நீளமான கடல் பாதை 'பாப் எல் மன்டப்'. இதன் அருகில் தான் சோமாலியா அமைந்துள்ளது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையரால் தாக்கப்படும் ஆபத்து அதிகம். குட்டி நாடான ஜிபூத்தியின் குடிமக்களும் சோமாலியர் தான். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான ஜிபூத்தியில், நிரந்தரமான பிரெஞ்சு இராணுவ தளம் உண்டு. அங்குள்ள பிரெஞ்சுப் படையினரின் வேலை, பாப் அல் மன்டப் பாதையால் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணிப்பது.

யேமனில் அல்கைதாவின் பிரசன்னத்தை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அந்த நாட்டில் நிரந்தர இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. நிதி நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அமெரிக்க இராணுவம் இன்றும் உலகில் பலம் வாய்ந்ததாகவே விளங்குகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மன்டப் ஜலசந்தியை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் பல பொருளாதார நன்மைகள் உள்ளன. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்டவும் இது உதவும். யேமனில் அமெரிக்க தலையீட்டினால், எதிர்காலத்தில் உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

"முத்து மாலை" திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தளங்களை அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கம் தடைப்படும். உலகில் அதிக எரிபொருள் நுகரும் நாடான சீனா, அமெரிக்க தயவில் தங்கியிருக்க வேண்டும். சூடானும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவை புறக்கணித்து விட்டு சீனாவுக்கு எண்ணெய் விற்க முடியாது. பாப் எல் மன்டப் ஜலசந்தியை மூடி விட்டால், எந்தவொரு கப்பலும் அரபிக்கடலை அடைய முடியாது. மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

உலகின் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் குவைத், அபுதாபி, ஈராக் எல்லாம் பாரசீக வளைகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள், ஹொர்முஸ் முனையை கடந்து, பாப் எல் மன்டப் ஊடாக சுயஸ் கால்வாயை அடைய வேண்டும். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தை சுயஸ் கால்வாய் ஊடாக தொடர வேண்டும். ஒரு வேளை, "யேமன் அல்கைதா பிரச்சினை" காரணமாக பாப் எல் மன்டப் பாதை மூடப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின், அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் 6000 மைல் பயணம் செய்து, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே செல்ல வேண்டும்.

யேமனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணமல்ல. முன்னொரு காலத்தில் கம்யூனிச நாடாக இருந்த தென் யேமனின் ஏடன் நகரில் சோவியத் படைத் தளம் ஒன்று இருந்தது. இன்றைய ரஷ்யாவின் "புட்டின்/மெட்வெடேவ் நிர்வாகம்" பழைய வெளிநாட்டு தளங்களை புதுப்பிக்க விரும்புகின்றது. சிரியாவில் மீண்டும் ரஷ்ய இராணுவ தளம் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏடனில் தளம் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா யேமன் அரசை கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கிடையே அமெரிக்கா முந்திக் கொள்ள நினைத்திருக்கலாம்.

மேலும் யேமனில் தற்போது பாவனையில் உள்ளதை விட, இன்னும் அதிகளவு எண்ணைப் படுகைகள் அகழப்படாமல் உள்ளன. Total போன்ற பன்னாட்டு எண்ணெய்க் கம்பனிகள் மசினா, ஷப்வா ஆகிய இடங்களில் எண்ணை காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. எண்ணைக் கம்பனிகளுக்கு பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் யேமனில் நிலை கொள்ளலாம். வருங்காலத்தில் யேமன் மண்ணின் மைந்தர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடலாம். ஆனால் அதையெல்லாம் "அல்கைதா பயங்கரவாதம்" என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட, சர்வதேச ஊடகங்கள் காத்திருக்கின்றன.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

மேலதிக தகவல்களுக்கு:

Yemen and The Militarization of Strategic Waterways

Friday, February 19, 2010

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!

["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]
யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து கவலைப்படுவது தவறாகத் தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகள் தெற்கில் இருந்தன. எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வருமானம் நேரே வடக்கே சானாவில் இருக்கும் அரச கஜானாவிற்கு சென்றது. தலைநகர் சானாவின் நிர்வாகம், சாலே என்ற சர்வாதிகாரியின் கைக்குள் இருக்கிறது. ஊழல் குறித்து பிறிதாக பாடம் எடுக்கத் தேவையில்லை.

பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன தென்னக மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கெதிரான தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் பெருகின. சில ஊர்வலங்கள், பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் கலைக்கப்பட்டன. அரச அடக்குமுறைக்கு சிலர் பலியானதாகவும் தகவல். இருப்பினும் இந்த தகவல் எதுவும் சர்வதேச ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. செய்தி அவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் எப்படி அதை வெளியிடுவது? "ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?"

தென் யேமெனின் முக்கிய நகரான எடெனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் அல் பத்லி (Al Fadhli) போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டமை, அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிரபல ஜிகாத் போராளியான அல் பத்லி முன்னர் அரச ஆதரவு கூலிப்படை ஒன்றை தலைமை தாங்கியவர். ஜனாதிபதி சாலேக்கு மிக நெருக்கமானவர். முன்னர் தென் பிராந்திய கிளர்ச்சியை அடக்குவதில் முன் நின்றவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது அரசை விட்டு விலகி, எதிரணியான தென்னக இயக்கத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
தனக்கு நாடளாவிய ஜிகாத் போராளிகளுடன் தொடர்பு இருந்த போதிலும், அல்கைதாவுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அல் பத்லி: "தென்னகப் பகுதிகள் வடக்கத்தயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கு யேமேனின் சுதந்திரமே உயிர்மூச்சு." என்றெல்லாம் பிரதேசவாதிகளின் மொழியில் பேசியுள்ளார். என்ன அதிசயம். இந்த உரைக்கு அடுத்த சில தினங்களில், அல் கைதா தென்னக மக்களின் உரிமைப் போருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

1990 ம் ஆண்டு வரை, உலகத்தில் இரண்டு 'யேமன்' கள் இருந்தன. வடக்கே இஸ்லாமிய - முதலாளித்துவ "யேமன் அரபுக் குடியரசு". தெற்கே மதச்சார்பற்ற - கம்யூனிச "யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு". இரண்டுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். அரபு தேசியவாதம், இஸ்லாமிய பழமைவாதம், அரை-நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பன, யேமன் அரபுக் குடியரசின் கொள்கைகளாக இருந்தன. அங்கே சனத்தொகை பெருக்கம் அதிகம். அதே போல கல்வியறிவற்றவர்களின் தொகையும் அதிகம்.

இதற்கு மாறாக தென் யேமன் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பால் பெரிதானாலும், சனத்தொகை மிகக் குறைவு. காலனித்துவ கல்வி, உலகளாவிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருந்தது. அதுவே பின்னர் மார்க்சிய சித்தாந்தம் பரவ காரணமாயிற்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் யேமெனில் தான் வீறு கொண்டு எழுந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியனின் உதவியுடன் மார்க்சிச-லெனினிச அரசை நிறுவியது. கம்யூனிஸ்ட்கள் என்பதால் மக்கள் மசூதிக்கு செல்வதை தடை செய்யவில்லை. ஆனால் மசூதிகளை கட்டுவதை விட, பாடசாலைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகரித்தது. 1990 ம் ஆண்டு, சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், அந்நிய நாட்டு கடன்கள் வருவது நின்றது. சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டது. தவிர்க்கவியலாது, ஒன்றிணைந்த யேமன் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

1990 ல் ஒன்றிணைந்த யேமன் குடியரசு ஜனாதிபதியாக, வட யேமன் அரபுக் குடியரசின் சர்வாதிகாரி சாலே தெரிவானார். தென் யேமன் கம்யூனிசக் கட்சி, சோஷலிசக் கட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ''சானா"வை தலைநகரமாகக் கொண்ட பாராளுமன்றத்தில் அமர்ந்தது. ஒன்றிணைந்த யேமன் குறித்த எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு சில மாதங்களிலேயே தவிடுபொடியாயின. 1978 ம் ஆண்டில் இருந்து வட- யேமனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் சாலே என்ற சர்வாதிகாரியின் அதிகாரம், தற்போது தெற்கு வரை வியாபித்தது. சாலேயின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள், சலுகைகள், மேலும் அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. தென்னகத்தை சேர்ந்த முன்னாள் அதிகார வர்க்கம் (கம்யூனிசக் கட்சியை சேர்ந்தவர்கள்), வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்பட்டது.

யேமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தெற்கே ஏடன் நகரில் அமைந்திருந்தது. அதை விட, எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் ஏடன் வளைகுடாப் பகுதிகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு துறைகளும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். யேமன் பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆனால் ஒன்றிணைப்பின் பின்னர், அனைத்து வருமானமும் வடக்கே உள்ள தலைநகர் சானாவை நோக்கி திசை திருப்பப்பட்டன. ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, தென்னக பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடப்படவில்லை. வடக்கு - தெற்கு பிரச்சினை முற்றி, வன்முறையில் முடிந்தது. தெற்கு யேமன் மீண்டும் சுதந்திரப் பிரகடனம் செய்தது. வடக்கத்திய இராணுவம் தெற்கிற்கு படையெடுத்து சென்றது. கடுமையான யுத்தத்தின் பின்னர், தென்னக கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வட யேமன் இராணுவத்திற்கு சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. முன்னாள் ஆப்கான் ஜிகாத் வீரர்களும் கூலிப்படையாக செயற்பட்டனர்.

அரசியலில் எதுவும் நிலையானதல்ல. நேற்றைய பகைவர்கள் இன்று நண்பர்கள். நேற்றைய நண்பர்கள் இன்று எதிரிகள். அன்று ஜிகாத் வீரர்கள், யேமன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தென்னக பிரிவினைவாதிகளை எதிர்த்து போரிட்டார்கள். (பிராந்தியத்தின் பொருளாதார நலன் குறித்து பேசுவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தி விடுமாம்.) இன்று அல் பத்லி தலைமையிலான ஜிகாத் வீரர்கள், தென்னக பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இஸ்லாமியவாதிகள் இடதுசாரிகளாகி விட்டதால் இந்த கொள்கை மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும் சாலே, தனது பகைவர்களை தானே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். வடக்கே ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் போர். தெற்கே சுயநிர்ணைய உரிமை கோரும் சோஷலிஸ்ட்களின் நெருக்கடி. இவர்களுக்கு நடுவில் அல்கைதா என்ற பெயரைக் காட்டியே பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள். சாலேயின் அரசு, மும்முனைப் போரை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஓடோடி வந்து முண்டு கொடுத்திராவிட்டால், சாலேயும் எப்போதோ சதாமின் வழியில் சமாதியாகி இருப்பார்.

இதற்கிடையே யேமனின் அயல்நாடான சோமாலியாவும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சோமாலியப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் (Supreme Islamic Council of Somalia ), யேமன் சகோதரர்களுக்கு உதவப் போவதாக தெரிவித்தது. ஏற்கனவே சோமாலியா அகதிகளுக்கு யேமன் புகலிடம் அளித்துள்ளது. தற்போது இந்த அகதிகளில் எத்தனை பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தெரியாமல், அமெரிக்காவும், யேமனும் முழிக்கின்றன. ஜனவரி மாதம், சோமாலியாவின் ஜனாதிபதி ஷேக் ஷெரிப், யேமன் ஜனாதிபதி சாலேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது நாட்டில் அல்கைதாவின் (அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளின்) நடமாட்டம் குறித்து உளவறிந்து அறிவிப்பதாக உறுதியளித்தார். சோமாலியா ஜனாதிபதியின் அதிகாரம், "மொகாடிஷு விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இப்படியானவர்கள் தான் சாலேக்கு நண்பர்களாக வாய்த்திருக்கிறார்கள்.

யேமனுக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடற்கொள்ளையர்கள், உலகில் மிகவும் வறுமையான, அரச நிர்வாகமற்ற சோமாலியாவை சேர்ந்தவர்கள். சிறு குழுக்களாக இயங்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள், பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை கடத்திச் சென்றிருக்கிறார்கள். உலகமே இந்த செய்திகளை 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக, "நைஜீரிய அல்கைதா தீவிரவாதி" அமெரிக்க விமானத்தில் குண்டு வைக்க முயற்சித்த, அதே டிசம்பர் மாதம் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு சிறு ஆயுதமேந்திய குழுவால், பென்னம்பெரிய கப்பல்களை எப்படிக் கடத்த முடிகின்றது? கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந்தன? சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு? யேமன், சோமாலியா ஆகிய ஏழை நாடுகள் மீது, சர்வதேச சமூகத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை?

(தொடரும்)

இந்தத் தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:

_____________________________________________________________________
மேலதிக தகவல்களுக்கு:

Fault line that allows al-Qa'ida to flourish in Yemen

Free Aden,Towards The Liberation of South Arabia
When Terrorists and Pirates Merge

Wednesday, February 17, 2010

பலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்

2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பபுவா அகதிகள், ஒரு சர்வதேச நெருக்கடிக்கு காரணமாகினர். இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாக பலவந்தமாக இணைக்கப்பட்ட (மேற்கு) பபுவா மக்கள் தனி நாடு கோரிப் போராடி வருகின்றனர். இனத்தால், மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால், இந்தோனேசியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் பபுவா பழங்குடியினர். இந்தோனேசிய ஆக்கிரமிப்பு இராணுவம் நவீன ஆயுதங்கள் சகிதம் அடக்கிய போதிலும், மக்களின் விடுதலை வேட்கையை தடுக்க முடியவில்லை. சுதந்திர பபுவா நாட்டின் விடிவெள்ளிக் கொடி ஏற்றுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக காடுகளில் உறையும், "பபுவா விடுதலைப் படை". புராதன ஆயுதங்களால், பலம் வாய்ந்த இந்தோனேசிய இராணுவத்தை எதிர்க்க முடியாத இயலாமை. தனது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்துள்ளது. அவர்களது ஒரேயொரு நம்பிக்கை, "சர்வதேச சமூகத்தின் தலையீடு". பபுவா பிரதேசத்தினுள் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஒரு ஆவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் முயற்சியால், இரகசியமாக கடத்தப் பட்ட வீடியோ கமெராக்கள் மூலம் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.
Free West Papua