Sunday, December 20, 2009

ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...

(2001 ம் ஆண்டு, சந்திரிக்கா குமாரதுங்க சிறி லங்கா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நெதர்லாந்து வந்திருந்த சந்திரிக்காவை கைது செய்யுமாறு வழக்குப் போடப்பட்டது. அன்றிருந்த சர்வதேச சூழ்நிலை இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறும். "உயிர்நிழல்" (மார்ச்-ஏப்ரல் 2001 ) சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

பிரிட்டனில், விடுதலைப் புலிகள் உட்பட உலகெங்கும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 21 அமைப்புகள், "பயங்கரவாத இயக்கங்களாக" அப்போது தான் அறிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தது. இது தொடர்பாக பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகம் மட்டுமல்ல, பல்வேறு தேசங்களை சேர்ந்த முஸ்லிம் சமூகமும் அதிருப்தி தெரிவித்திருந்த போதிலும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதுவரை காலமும் மேற்கைரோப்பிய நாடுகள், தத்தமது நாடுகளில் தத்தமது அரசாங்கங்களுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் இயக்கங்களையே தடை செய்து வந்தன. உதாரணமாக, பிரிட்டனில் IRA , ஸ்பெயினில் ETA என்பனவற்றை சொல்லலாம். ஆனால் அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" மற்ற நாடுகளின் அரசியலிலும் மூக்கை நுழைப்பதன் நிமித்தம், "உலகப் பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலை தயாரித்தது போல, தனது சகோதர நட்பு நாடான பிரிட்டனையும் செய்யத் தூண்டியதன் விளைவே மேற்குறிப்பிட்ட தடைச்சட்டம்.

இத்தகைய பின்னணியிலேயே புதிய ஒழுங்கை ஏற்றுக் கொண்ட இலங்கையின் (முன்னாள்) ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐரோப்பிய விஜயமும் அமைந்திருந்தது. ஐரோப்பாவில் வாழும் முன்னாள், இந்நாள் தமிழ் அகதிகளின் திட்டுகளையும், வசைகளையும், அதிருப்தியையும் ஒரு பொருட்டாக மதிக்காது, ஐரோப்பிய ஒன்றியம் சந்திரிக்காவுடன் வர்த்தகம் செய்வது பற்றி பேசியது. நாட்டில் சமாதானம் வந்துவிட்டால் தனது முதலீடுகள் அதிகரிக்கும் என உறுதி கூறியது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனியில் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு, சந்திரிக்கா ஹொலன்ட் வந்து சேர்ந்தார். அப்போது அவரைக் கைது செய்யுமாறு கோரும் டச்சு வழக்கறிஞர் ஒருவரின் மனு, நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது. சர்வதேச சித்திரவதை தடுப்புச் சட்டத்தில் இலங்கை அரசும் ஒப்பமிட்ட போதும், அங்கே சித்திரவதை நடக்கின்றது. இதற்கு முப்படைகளின் தலைவி என்ற வகையில் சந்திரிகா பொறுபேற்க வேண்டும். எனக்கோரி பாதிக்கப்பட்ட இரு அகதிகளின் பெயரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் "ஆதாரம் போதாது", "தெளிவில்லை" எனச் சாட்டு சொல்லி நீதியமைச்சு மனுவை நிராகரித்து விட்டது. இதைப்பற்றியோ அல்லது மனித உரிமைகள் பற்றியோ எதுவும் அலட்டிக் கொள்ளாது, நெதர்லாந்து இராணியும், பிரதமரும், இருநாடுகளுக்கு இடையே உள்ள நானூறு ஆண்டு கால உறவை மெச்சியபடியே சந்திரிக்காவுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர்.

மேற்கைரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிலவும் அன்னியோன்யமான உறவு இன்று பகிரங்கமாகிவிட்ட போதும், இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள எம்மில் பலருக்கு கஷ்டமாக இருக்கலாம். மேற்கைரோப்பாவின் "ஜனநாயக, மனிதாபிமான" முகத்தைக் கண்டு மதி மயங்கி, அந்த மாயையில் இருந்து விடுபட முடியாதவர்கள், பற்பல சமாதானங்களை தமக்குள்ள கூறிக்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் எப்போதாவது ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிப் பேசினால், அது எப்போதும் தமது நலன் சார்ந்தது தான் என்பதைப் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்காது.

இலங்கையைப் போலவே யூகோஸ்லேவியாவில் (இன்று செர்பியா) அல்பேனியர்களை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலம் பிரிவினை வேண்டிப் போராடியது எல்லோருக்கும் தெரியும். அங்கிருந்த ஆயுதக்குழுவான "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA ) மேற்கைரோப்பாவினால் ஆதரிக்கப்பட்டது. ஜெர்மனி ஆயுதத் தளபாடங்களை வழங்கியது. ஐரோப்பா எங்கும் KLA ஆதரவுப் பிரச்சாரம் நடந்தது. யூகோஸ்லேவிய ராணுவத்தின் பொது மக்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், என்பன பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தால் உலக மக்கள் செர்பிய ராணுவத்தையும், ஜனாதிபதி மிலோசோவிச்சையும் வெறுத்தனர். யூகோஸ்லேவியா மீது ஆயுத விநியோகத்தடை, பொருளாதாரத் தடை என்பன ஏற்படுத்தப்பட்டன. மிலோசோவிச்சை மனிதப்படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளியாக இன்டர்போல் அறிவித்தது. பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதியை போர்க்கால குற்றங்களுக்காக விசாரிப்பதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு இன்றுள்ள அரசு மீது நிர்ப்பந்திக்கப்பட்டது.

மிலோசோவிச்சும் சந்திரிக்கா போன்றே தேர்தலில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தான். இருவரும் தத்தமது நாடுகளில் எழுந்த சிறுபான்மையினத்தின் போராட்டத்தை அடக்குவதற்கு இராணுவ வன்முறையை ஏவிவிட்டவர்கள் தான். இரண்டு நாடுகளிலும் ராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. அனால் மிலோசொவிச்சுக்கு சிறைத்தண்டனை, சந்திரிக்காவுக்கு விருந்துபசாரம்! ஏன் இந்தப் பாரபட்சம்?

இதன் பதில் மேற்குலகின் இராணுவ பொருளாதார நலன்களில் தங்கியுள்ளது. கொசோவோ பிரச்சினை தொடங்க முன்பு, "யூகோஸ்லேவியாவில் நேட்டோ படைகளுக்கு தளமமைக்க விட வேண்டும்," என முன்னால் அதிபர் மிலோசோவிச்சை கேட்ட பொழுது அவர் அதற்கு மறுத்து விட்டார். மேலும் அந்த நாட்டின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அரசின், அல்லது அரசுக்கு சார்பான உள்ளூர் முதலாளிகளின் வசம் இருந்தன. இந்த நிலை மாறவேண்டுமானால் மிலோசோவிச்சை அகற்ற வேண்டும். இதன் விளைவே கொசோவோ யுத்தமும், மிலோசோவிச் கைதும். ஆனால் இலங்கை நிலைமை அப்படியல்ல. சந்திரிகா மேற்குலகின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதால், அவர் கேட்கும் போதெல்லாம் தமிழ் பேசும் இனத்திற்கு எதிரான போருக்கு தேவைப்படும் ஆயுத தளபாடங்களோ நிதி உதவியோ அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்குலக அரசுகளுக்கும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் சர்வாதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலங்காலமாக இருந்து வரும் உறவு தான். சிலி நாட்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி பினோச்சே, கொன்றழித்த சொந்த நாட்டு மக்களின் தொகை 20000 என சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. சதிப்புரட்சியில் அமெரிக்க சி.ஐ.ஏ.யின் பங்கும், பின்னர் தொடர்ந்த சர்வாதிகார ஆட்சிக்கு ஆட்சிக்கு அமெரிக்க, மேற்கைரோப்பிய ஆதரவும் இரகசியமல்ல. பதவி விலகிய பினோச்சே 20 வருடங்களுக்கு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்த போது கைது செய்யுமாறு வேண்டுகோள்கள் வந்தன. மனித உரிமை நிறுவனங்களின் கூச்சல்களுக்கு செவி கொடுக்காத பிரித்தானிய அரசு, பினோச்சேயை பத்திரமாக நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

சிலி போலவே ஆர்ஜன்தீனாவிலும் இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்பு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் தொகை 30000 க்கும் மேல். சித்திரவதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் விமானத்தில் கொண்டு போய் கடலில் கொட்டியது. இதைத் தவிர அரச எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தோரின் பிள்ளைகள் பலவந்தமாக பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வேறு இடங்களில் வளர்க்கப்பட்டனர். இந்த அக்கிரமங்களுக்கு காரணமாக இருந்த அமைச்சர் ஒருவரின் மகள், இன்று நெதர்லாந்தின் வருங்கால மன்னன் வில்லெம் அலெக்சாண்டரின் மனைவி!

ஒரு பக்கத்தில் சர்வாதிகாரிகளுடனும், அடக்குமுறையாளருடனும் கொஞ்சிக் குலாவும் மேற்குலக நாடுகள், மறுபக்கத்தில் தமக்கு விரோதமான நாடுகளின் தலைவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை விடவும் தயங்குவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கைதுக்கு காரணமாக மனித உரிமை மீறல்களை குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் தமது நட்பு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல பாசாங்கு செய்கின்றனர். இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்கொட்லாந்து "லோக்கர்பீ" விமானக் குண்டுவெடிப்புக்கு காரணமான கடாபியை கைது செய்யுமாறு பிரிட்டன் அரசு கோரியது. ( அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக ரஷ்ய உளவுத் துறையால், அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்பட்டும், அது அசட்டை செய்யப்பட்டது.) அதே போல கியூப வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த இரு விமானங்களை சுட்டு வீழ்த்திய குற்றச் சாட்டில் காஸ்ட்ரோவை கைது செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

பனிப்போர் முடிவில் கலைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மன் அரசின் கடைசி ஜனாதிபதி கிரென்ஸ் இப்போது வசிப்பது ஜெர்மன் சிறைச்சாலையில். அன்றைய கிழக்கு ஜெர்மனியில் இருந்து வெளியேற விரும்பிய நான்கு அகதிகளை எல்லையில் சுட்டுக் கொன்ற குற்றச் சாட்டில் (நேரடியாக சம்பந்தப்படாத போதிலும்) கிரென்ஸ் சிறை வைக்கப்பட்டார். வட இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடிய அப்பாவி தமிழ் அகதிகளை இலங்கை கடற்படை கடலில் வைத்து சுட்டுக் கொன்றது. ஜெர்மன் நீதித்துறையின் நியாயப்படி பார்த்தாலும், முப்படைகளின் தலைவியான சந்திரிகா கைது செய்யப்பட வாய்ப்புண்டு. ஆனால் அது நடக்கப் போவதில்லை. கிரென்ஸ் மேற்கு ஜெர்மனியுடன் சித்தாந்த அடிப்படையில் முரண்பட்ட சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் அதிபராக இருந்தவர். ஆகையால் அவர் ஜெர்மனியின் எதிரி. ஆனால் ஜெர்மன் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அப்படி எந்த சித்தாந்த முரண்பாடும் இல்லையே.

அரசியலில் எப்போதும் "நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு." அது மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை அவர்களது சொந்த பொருளாதார நலன்களே எப்போதும் முன்னிறுத்தப் படுகின்றன. எந்தவொரு நாட்டின் அரசோ, ஆயுதக் குழுவோ, அவர்களின் பாதையில் தடைக்கல்லாக இருப்பின் அது அகற்றப்பட வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணியாத பயங்கரவாதிகளுக்கு, முரண்படும் முரட்டு நாடுகளுக்கு எதிராக மூர்க்கமான போர் கட்டவிழ்த்து விடப்படும். எங்காவது இயல்பாக எழும் மக்கள் எழுச்சிகள் ஈவிரக்கமின்றி நசுக்கப்படும். இதுவே இன்றைய புதிய ஒழுங்கின் நியதி. இதற்கு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்பதே, அடக்கப்படும் அனைத்து மக்களின் முன்னாள் உள்ள கேள்வி. இங்கே இப்போது கேள்விகள் மட்டுமே கேட்கப் பட்டுள்ளன. விடைகளை நீங்களாகவே தேடி அறிந்து கொள்வீர்கள்.
(உயிர்நிழல் மார்ச்-ஏப்ரல் 2001 )

Saturday, December 19, 2009

ஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் - திரைப்படம்

வர்க்கம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வு, ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு உள்ளே பிளவை ஏற்படுத்துகின்றது. சமூக விடுதலைப் போராளியான மகனின் மரணத்தை அலட்சியப்படுத்தும் முதலாளித்துவவாதிகளான அப்பா, மற்றும் சகோதரர்கள். பொய்மை உலகில் இருந்து அன்னியப்பட்டு, புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகனை பறிகொடுத்த அம்மா. 1084 இலக்கம் கொண்ட மகனின் பிணத்தை அடையாளம் காட்ட வரும் அப்பாவி தாய், அதிலிருந்து மெல்ல மெல்ல வர்க்க அரசியலை புரிந்து கொள்கிறார். எழுபதுகளில் நக்சல்பாரி எழுச்சியால் உந்தப்பட்டு புரட்சிக்கு புறப்பட்ட கல்கத்தா இளைஞர்களின் உண்மைக்கதை. HAZAAR CHAURASI KI MAA (MOTHER OF 1084) சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச பரிசுகளைப் பெற்றது.
1084 இன் அம்மா, உண்மையைத் தேடி ஒரு பயணம்!


Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Part 7


Part 8


Part 9


Part 10


Part 11


Part 12


Part 13


Part 14


Friday, December 18, 2009

இந்திய அரச அதிகாரம் நக்சலைட்கள் வசம் வருமா?

இந்தியாவில் காணப்படும் ஏற்றத்தாழ்வான பொருளாதாரம். மேற்கத்திய வாழ்க்கைத்தரத்தை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வர்க்கம். வறுமையில் இருந்து மீள முடியாத உழைக்கும் வர்க்கம். அதிகரிக்கும் வர்க்க முரண்பாடுகள், நக்சலைட் இயக்க எழுச்சியின் ஆதாரம். ஒரு சில வருடங்கள் பழமையான ஆவணப்படம் என்றாலும், காலத்திற்கேற்ற மீள்பதிவு.


Thursday, December 17, 2009

எழுதாதே எதிர்ப்பேன்

இலங்கையில் தொன்னூறுகளில் ஊடகங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை எதிர்த்து போரிடும் முகமாக "சுதந்திர ஊடகவியலாளர் சங்கம்" தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள் ஒழுங்கு செய்த முதலாவது கருத்தரங்கிற்கு அரசாங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. "ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க இல்லையெனில், இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்." என அந்த அழைப்பிதழில் எழுதப் பட்டிருந்தது. அரச தரப்பில் இருந்து இதற்கான எந்தப் பதிலும் வரவில்லை.

ஆளும் கட்சியினாலும், அதிகார வர்க்கத்தினாலும் பொது மக்களின் ஒரேயொரு பலம் வாய்ந்த சுதந்திர அமைப்பான பத்திரிகை சுதந்திரத்தை அடக்க நினைப்பதோ, அல்லது அதை தம்பக்க ஆளுமைக்கு கீழ் கொண்டு வருவதோ புதியன அல்ல. இந்த வகையில் நமது தமிழ் பத்திரிகைகள் சந்தித்த தடைகள் என்ன? என்பதை சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்.

இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்த ஆரம்ப காலங்களில், தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற வழியில் தமிழீழம் காணும் உத்வேகம் முனைப்பு பெற்றிருந்தது. அவ்வேளையில் "சுதந்திரன்" பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பு பெற்றிருந்தது. சிறி லங்கா அரசுக்கு எதிரான துணிகர செய்திகளும், தமிழ் தேசியவாத பிரச்சாரங்களும், தமிழக கட்சி அரசியல் பாணியிலான ஆவேச எழுத்துகளும் இதன் சிறப்பம்சம். சுதந்திரனின் எழுத்துகள் வாசகர் மனதில் "தமிழீழமே தீர்வு" என்ற இலக்கை பசுமரத்தாணி போல பதியவைத்தது. இதன் காரணமாகவே இப்பத்திரிகை பொலிசாரினால் பலவித இடையூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. பக்கம் பக்கமாக செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கை எவ்வளவு கடுமையாக அமுல்படுத்தப் படுகின்றதோ, அவ்வளவிற்கு அப்பத்திரிகை பிரபலமாவதை தடுக்க முடியவில்லை. சுதந்திரனுக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த "ஈழநாடு" ம் கடும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போது இவ்விரு ஏடுகள் மட்டுமே கொழும்புக்கு வெளியே, யாழ்ப்பாணத்தில் அலுவலகங்களை கொண்டிருந்தன.

1984 திம்பு பேச்சுவார்த்தைகளையிட்டு யுத்தநிறுத்தம் ஏற்பட்ட காலகட்டத்தில் யாழ்குடாநாடு போராளி இயக்கங்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இக் காலகடத்தில் இனி பத்திரிகைகள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக இயங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நூறு வீதம் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள முடியும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். தமிழ் மக்கள் ஏற்கனவே இலங்கை அரசின் ஊடகங்கள் பரப்பிய பொய்யுரைகளை கேட்டு வெறுப்பு கொண்டிருந்தனர். நாட்கள் இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த பொழுது, ஆயுதபாணி இயக்கங்களில் ஒன்றான "டெலோ" உள்முரண்பாடுகளால் பிளவுற்றது. அவ்வியக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தாஸ் குழுவினர் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை பற்றிய செய்தி மறுநாள் வெளிவந்த அனைத்து பிராந்திய பத்திரிகைகளிலும் தடை செய்யப்பட்டது. அதுவரை அரச இயந்திரத்தின் தணிக்கை என்ற அடக்குமுறையை சந்தித்து வந்த பத்திரிகையுலகம், புதிய எஜமானர்களை கண்டுகொண்டது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் துப்பாக்கி நிழலின் கீழ் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

1987 ல் இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. யுத்தம் ஆரம்பித்த சில நாட்களிலேயே, ஈழத்தில் அமைதி காக்க வந்த இந்திய இராணுவம் ஊடகங்கள் மீது பாய்ந்தது. அமைதிப் படையின் "அமைதி காக்கும் நடவடிக்கையாக" யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழமுரசு, ஈழநாடு பத்திரிகைகளின் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. அவ்வாறே புலிகளின் தொலைக்காட்சி நிலையமான நிதர்சனமும் வெடிகுண்டால் நிர்மூலமாக்கப்பட்டது. ஊடகங்களின் வாயை அடைத்து "காந்தீய இராணுவம்" சாதனை நிகழ்த்தியது. சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவை போல, ஒருவாறு தனது அச்சகத்தை மீளக் கட்டமைத்து, மீண்டும் ஈழநாடு வெளிவரத் தொடங்கியது. ஆனால் ஆயுதமேந்திய சக்திகளுடன் மோத முடியாது என்பதை உணர்ந்து, யாரையும் நோகாமல் செய்தி வெளியிட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில், ஈழநாட்டின் பக்கங்களை பெரும்பாலும் இந்திய செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும். யாழ் பிராந்திய மையவாத பத்திரிகையான ஈழநாடு, வெளிப்படையாக எந்தவொரு அரசியல் சக்தியையும் ஆதரிக்காமல், நடுநிலை காப்பதாக காட்டிவந்தது. இதனால் யாழ் தமிழ் மக்களின் அபிமானத்தை பெற்றிருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புக் கால யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஒரேயொரு நாளேடான ஈழநாடு, தனது இருப்புக்காக இந்தியா பக்கம் சாய்ந்து வருவதாக தோன்றியது. ஈழநாட்டின் நிலைப்பாடு, "இந்தியா எமது தாய்நாடு." என்ற யாழ் மையவாத பாரம்பரியத்தினால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். இருந்தபோதிலும், அன்று இந்திய இராணுவத்தை தமது முதன்மை எதிரியாக பார்த்த விடுதலைப் புலிகள் இதனை சகித்துக் கொள்ளவில்லை. இந்தியப் படையினருடன் கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்த புலிகள், ஈழநாடு பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து நிர்மூலமாக்கினர். இச்செயலுக்கு உரிமை கோரும் சுவரொட்டிகள் புலிகளால் யாழ் நகரில் ஒட்டப்பட்டிருந்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்காது நடுநிலை காப்பதாக கூறிய ஈழநாடு, இந்தியா பக்கம் சாய்ந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் ஈழநாடு புகலிடத்தில் (பிரான்ஸ்) வெளிவந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக வெளிவரும் பத்திரிகைகளை விடுத்து, "வீரகேசரி" நீண்டகாலமாக சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இருப்பினும் வீரகேசரி காற்றடிக்கும் பக்கத்திற்கு சாயும், அல்லது நழுவுநிலைக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. கொழும்பில் "சரிநிகர்" என்ற பத்திரிகை சிறிது காலம் ஊடக தர்மத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தது. அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் காலூன்றத் தொடங்கிய காலத்தில், அது தனது சுதந்திரத்தை பேணிக் கொண்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்கி உண்மை செய்திகளை தெரிவிக்கும் என மக்கள் நம்பினார்கள். வதந்திகளை செய்தியாக்குவதாலும், சுயதணிக்கை செய்து கொள்வதாலும், பத்திரிகை சுதந்திரம் புலம் பெயர் நாடுகளிலும் அடவு வைக்கப்பட்டது. புலம்பெர்ந்த சூழ்நிலையில், தமிழரை பிற சமூகத்தினருடன் ஒட்டி உறவாடாமல் தனிமைப் படுத்தியதிலும் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. இவ்வாறான தேசிய நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்ட "தமிழ் ஏடு" என்ற பத்திரிகையும், சிற்றிதழ்களும் வந்த வேகத்தில் மறைந்து போயின.

(1993 ம் ஆண்டு புலம்பெயர் சிறு பத்திரிகை ஒன்றிற்காக எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன் இணையத்தில் பதிவிடுகின்றேன்.)

Wednesday, December 16, 2009

இருண்ட ஐரோப்பாவை நோக்கி...

(16 ,17 ஜூன் 1997 ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற Eurotop மாநாடு ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைத்தது. மாநாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியை மையமாக கொண்டு எழுதப்பட்ட எனது கட்டுரை. "சரிநிகர்" பத்திரிகையில் பிரசுரமானது.)

சிறந்த ஜனநாயக மரபுகளை பேணிப் பாதுகாப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் மார் தட்டிக் கொள்வதில் நெதர்லாந்தும் சளைத்ததல்ல. உலகத்தில் சிறந்த பல ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உலக மக்களாலும், தனது சொந்த நாட்டு மக்களாலும், மதிக்கப்பட்ட நெதர்லாந்தின் ஜனநாயக முகமூடி அண்மையில் கிழிபட்டது. தனக்கு எதிராக கிளம்பும் எந்தவொரு தீவிரவாத எதிர்க்கட்சியையும் நெதர்லாந்து அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை அது தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் குறிப்பால் உணர்த்தியது.

ஜூன் 16 ம், 17 ம், திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களது உச்சிமகாநாடு கூட்டப்பட்டது. Eurotop என அழைக்கப்பட்ட இம் மகாநாட்டில் ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கான பொது நாணயமான EMU (European Monetary Union ) ஐ 20 ம் நூற்றாண்டின் இறுதியில் புழக்கத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக இறுதி முடிவுகள் இம் மகாநாட்டில் எடுக்கப்பட்டன.

மேலும் Fort Europe ஒன்றை உருவாக்கி புதிய அகதிகள் வருகையை தடை செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இம்மகாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, தத்தமது நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற எந்த அக்கறையுமின்றி; அதாவது மக்களின் விருப்பை அறியாமலே, ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பில் அந்நாட்டு தலைவர்கள் முழுமூச்சாய் இறங்கினர். யூரோ (EMU ) நாணயத்தின் வருகை, அதனால் வருங்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள், என்பன பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களுக்கு பாதகமாகவும் அமையப் போகின்றது. இதனை முன்கூட்டியே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 331 பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், அவர்களது வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 20 மில்லியன் வேலையற்றோரினதும், 50 மில்லியன் வறிய மக்களினதும் நலன் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அக்கறைப் படவில்லை. சுருங்கக் கூறின் "முதலாளிகளின் ஐரோப்பா" உருவாகப் போகின்றது.

விவாதத்திற்குரிய Eurotop உச்சிமகாநாடு ஐரோப்பாவில் இதுவரை நலிந்து போயிருந்த இடதுசாரிக் கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது. ஜூன் 14 அன்று, ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நெதர்லாந்தின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியாக கருதப்பட்ட இப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து சேர்ந்த, வறிய, வேலை வாய்ப்பற்ற மக்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல்வேறுபட்ட பொதுவுடமைக் கட்சிகள் புதிய உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், புரட்சிக்கான அறைகூவல் விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவற்றை விட தீவிர இடதுசாரி இளைஞர் குழுக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம், நெதர்லாந்து பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதோடல்லாமல், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 200 பேர் அடுத்த நாள் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பொது கைதுசெய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகளின் போது பொலிசாரினால் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாக நேரில் கண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார். கைது செய்ததற்கு காரணங்களாக சில கட்டுக்கதைகளை பொலிசார் சோடித்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், பொலிசார் தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், எந்தவொரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டனர், என நேரில் கண்ட சாட்சிகள் கூறினர். மேலும் எந்த ஊர்வலத்திற்கும் தடையில்லை என நகரபிதா ஏற்கனவே அறிவித்திருந்த போதும், இதை சட்டவிரோத ஒன்றுகூடலாக பொலிஸ் கருதியது வேடிக்கையானது. மேலும் இது கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தடைசெய்யும் ஒரு நடவடிக்கையுமாகும். இந்த ஆர்ப்பாட்டக்காரரின் வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசாரின் இந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்கு மாறானது எனவும், அரசு சட்டத்தை தவறாக கையாண்டிருப்பதாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

எது எப்படியிருப்பினும், நெதர்லாந்து பொலிசாரின் இந்த மனித உரிமைமீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மேலும், கைது செய்யப்பட்ட யுவதிகளின் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும் போலிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்மை துன்புறுத்தியதாக விடுதலையான கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள், இனிவரும் ஐரோப்பிய முதலாளித்துவ சர்வாதிகாரம், தனக்கெதிரான தீவிர இடதுசாரி சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறது என்பதை உணர்த்துகின்றன.
(சரிநிகர், 2-16 ஜூலை 1997)