Friday, November 13, 2009

இத்தாலி தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்

ஜெர்மன் தொலைக்காட்சி "Arte " யில், ஒளிபரப்பான "Sklaverei auf Italienisch " என்ற ஆவணப்படம், "இத்தாலியின் நவீன அடிமைகள்" பற்றிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

"செல்வந்த நாடாக வளர்ந்த", "அதி உன்னத நாகரீகமடைந்த", "ஜனநாயக, மனித விழுமியங்களை மதிக்கும்" மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் தக்காளி தோட்டங்கள் அடிமைகளின் உழைப்பால் செழிக்கின்றன. தெற்கு இத்தாலியில் உள்ள Cerignola, Candela , San Sever என்ற கிராமங்களை சூழவுள்ள பகுதிகள், "அடிமைகளின் முக்கோணம்" என அழைக்கப்படுகின்றன. இக்கிராமங்களில் உள்ள தக்காளி தோட்டங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு, முதலில் மணித்தியாலம் ஐந்து யூரோ வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆனால் இவர்களை பணிக்கமர்த்தும் முதலாளிகள், சம்பளத்தில் பெரும்பகுதியை போக்குவரத்து செலவுக்கென கழித்துக் கொள்கின்றனர். மேலும் பரிதாபகரமான நிலையில் உள்ள கூடார முகாம்களுக்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்படும், இந்த அடிமைத் தொழிலாளர்கள் வெளியேறா வண்ணம், காவல்காரர்கள் வேட்டை நாய்களுடன் ரோந்து சுற்றுகின்றனர்.

முகவர்களால் ஏமாற்றி அழைத்து வரப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும், அகதிகளாக வரும் ஆப்பிரிக்கர்களும் இவ்வாறு அடிமைகளாக சுரண்டப்படுகின்றனர். இத்தாலியின் தக்காளித் தோட்டங்கள், உலகமயமாக்கப்பட்ட ஐரோப்பியரின் சுரண்டலுக்கு ஒரு சிறந்த உதாரணம். குறிப்பாக கானா நாட்டில் இருந்து வரும் அகதிகளின் அடிமை உழைப்பில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள், கானாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கானா சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனையாகும் இத்தாலி தக்காளிகள், கானாவின் உள்நாட்டு தக்காளி உற்பத்தியை பாதிக்கின்றன. வாழ்வாதாரத்தை இழந்த கானா விவசாயிகள், உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக இத்தாலிக்குள் நுழைகின்றனர். (இந்தியா, இலங்கையிலும் இதே கதை தான் நடக்கிறது.)

தென் இத்தாலியில் சுரண்டப்படும் நவீன அடிமைகளின் அவல வாழ்வை சித்தரிக்கும் இரண்டு வீடியோக்களை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த வீடியோ எங்கோ ஒரு ஆப்பிரிக்க, அல்லது ஆசிய நாட்டில் படமாக்கப்படவில்லை. இத்தாலி என்ற வளர்ந்த நாட்டின் இருட்டான மறுபக்கங்கள் இவை.



Thursday, November 12, 2009

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா


"தவறு செய்யாதீர்கள், ஒபாமா! வெனிசுவேலா மீதான படையெடுப்பு நூறாண்டு கால போருக்கு அடிகோலும். முழு லத்தீன் அமெரிக்க நாடுகளையும் இழுத்து விடும்." அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாக, வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் அறிவித்தார். அன் நாட்டு அரச தொலைக்காட்சியில் வாராந்த "அலோ பிரேசிடேண்டே" நிகழ்ச்சியிலேயே மேற்குறிப்பிட்ட வீராவேசப் பேச்சு வெளிப்பட்டது. சாவேசின் போர்ப் பிரகடனத்திற்கு காரணம் இல்லாமலில்லை. அயல் நாடான கொலம்பியா கடந்த மாதம் 30 ம் திகதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், ஏழு கொலம்பிய இராணுவ தளங்கள் அமெரிக்காவுக்கு என ஒதுக்கப்படும். கொலம்பிய தளங்களில் நிலை கொள்ளும் அமெரிக்க படைகள் போதைவஸ்து கடத்தலுக்கு எதிராகவும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் எதிராக போரிடுவர். அவ்வாறு கொலம்பிய அரசு கூறுகின்றது. ஆனால் சாவேஸ் இந்த ஒப்பந்தம், வெனிசுவேலா மீதான படையெடுப்புக்கான முகாந்திரமாக கருதுகின்றார். (வலதுசாரி அரசால் நிர்வகிக்கப்படும்) கொலம்பியா அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றார்.

கொலம்பியாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படைகள், சாவேஸ் அரசை தூக்கியெறியும் சதிகார எண்ணத்துடன் வந்திருப்பதாக வெனிசுவேலா அரசு நம்புகின்றது. இதனால் கொலம்பிய எல்லையோரமாக வெனிசுவேலா துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. வெனிசுவேலா எல்லையோர கிராமமான "பாரினாஸ்"ல் காணப்பட்ட நூற்றுக்காக்கான கொலம்பிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அடையாள பத்திரம் எதுவும் இன்றி தங்கி இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சாவேசின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கொலம்பிய அரசு, வெனிசுவேலா FARC இடதுசாரி தீவிரவாதிகளுக்கு உதவுவதாக தன் பங்கிற்கு குற்றம் சுமத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதால், போர் மூளுவது சாத்தியமாகலாம். எனினும் இரு வருடங்களுக்கு முன்னரும் இது போன்றதொரு கொந்தளிப்பான சூழ்நிலையில், பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்தன. இதற்கிடையே வெனிசுவேலா, ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருவதுடன், ரஷ்ய ஆயுதங்களையும் இறக்குமதி செய்கின்றது.


U.S. Military Documents Show Colombia Base Agreement Poses Threat to Region

புதுக்குடியிருப்பு - இதுவரை வெளிவராத போர்க்களக் காட்சிகள்

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங்கள், மேற்படி நவீன ஆயுதங்களை கடத்தி வந்து உதவியிருக்கலாம்." இவ்வாறு கூறுகின்றது இலங்கை அரசு. எது எப்படியிருப்பினும், இறுதிப்போரில் புலிகள் அந்த ஆயுதங்களைப் பாவிக்காததேன்? என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரும் இல்லை. மே மாதம் போர் ஓய்ந்த பின்னர், அனுமதிக்கப்பட்ட "News X" என்ற இந்திய ஊடக நிறுவனம் இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. News X தொலைக்காட்சி கமெரா, இலங்கை அரச படைகளின் அகோரமான ஷெல் வீச்சுக்கு இலக்காகி சேதமுற்ற புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையையும் பதிவு செய்ய தவறவில்லை.


Part 1

Part 2

Part 3

இஸ்ரேலின் "பெர்லின் சுவர்" வீழ்வது எப்போது?

பெர்லின் சுவர் வீழ்ந்த இருபதாண்டு நிறைவை ஜெர்மனி கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே நேரம், பெர்லின் சுவரை விட உயரமான, நீண்ட சுவர் இஸ்ரேலில் இருப்பதை உலகம் மறந்து விட்டது. இஸ்ரேலில் பாலஸ்தீன பிரதேசங்களை பிரிக்கும் மதில் சுவர் கட்டப்பட்டு முடியும்தருவாயில் 750 கிலோ மீட்டர் நீளமானதாக இருக்கும். இது இடிக்கப்பட்டபெர்லின் சுவரின் நீளத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இஸ்ரேலியர்களின் சுவர் எட்டு மீட்டர் உயரமானது. அதாவது பெர்லின் சுவரை விட இரு மடங்கு அதிகம். பாலஸ்தீனரின் வயல் நிலங்களையும் ஊடறுக்கும் இந்த சுவர், இஸ்ரேலியரின் அப்பட்டமான நில ஆக்கிரமிப்பாகும்.

பெர்லின் சுவர் வீழ்ச்சியடைந்த இருபதாண்டு நிறைவு தினத்தன்று, பாலஸ்தீனர்களும், வெளி நாட்டு ஆதரவாளர்களும் சேர்ந்து இஸ்ரேலிய சுவரை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்பார்த்ததைப் போல, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை.
Palestinians break Israel's wall


இஸ்ரேலிய சுவரைக் காட்டும் வரைபடம்


Wednesday, November 11, 2009

இலங்கையின் இறுதிப்போர் - மேற்கத்திய குறிப்புகள்

இந்த ஆவணப்படத்தை தயாரித்த ஊடகவியலாளர், 2001 ம் ஆண்டின் பின்னரான அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் நீட்சியாகவே, இலங்கையின் இனப் போரையும் கருதுகின்றார். இலங்கையில் நடந்து முடிந்த போர் பற்றிய மேற்கத்திய கண்ணோட்டம் எவ்வாறு அமைந்திருந்தது, என்பதை அறிந்து கொள்ள உதவும்.