கிளப் ஹவுசில், ஐரோப்பிய நேரம் கிளப்பில், "JVP பேசும் அரசியல்" என்ற தலைப்பில் கூட்டம் போட்டார்கள். ஐரோப்பிய நேரம் கிளப்பை நடத்துவோர், அதில் பேசுவோர் எல்லாம் வலதுசாரி (தமிழ்த்) தேசியவாதிகள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். வழமை போல ஜேவிபி பேசும் அரசியல் இனவாத அரசியல் என்று நிறுவுவது தான் அவர்களது நோக்கமாகவும் இருந்தது.
எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்த பொழுது எனது கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்து விட்டு வந்து விட்டேன். அங்கிருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக எனது கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கி விட்டன. குறிப்பாக இலங்கையில் ஜேவிபி அழித்தொழிப்பு நடவடிக்கையில் 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் இனப்படுகொலை நடந்தது என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. இதில் ஒரு சில இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோரும் அடக்கம்.
1971, 1989 இனப்படுகொலைக்கு நான் முன்வைத்திருந்த வாதங்கள்:
- அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்பு படை ஏராளமான அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்தது.
- ஈவிரக்கமின்றி மக்களை கொல்லும் அளவிற்கு வர்க்கத் துவேஷம் இருந்திருக்கிறது.
- சிறிலங்கா அரசு சிங்களப் பேரினவாத கொள்கையை பின்பற்றும் முதலாளிகள், பணக்காரர்களின் அரசு. அதனது மேட்டுக்குடி வர்க்க நிலைப்பாடு காரணமாக, அடித்தட்டு ஏழை மக்களும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் கொன்று குவிக்கப் பட்டனர்.
- பிரிட்டிஷ் கூலிப்படையான கீனிமீனி 1971 ம் ஆண்டிலிருந்து படுகொலைகளில் ஈடுபட்டமை ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
- அப்போதும் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா, ஆகிய "முப்பது உலக நாடுகள்" சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக நின்றன.
- உலகம் முழுவதும் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக நடக்கும் இனப்படுகொலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. சிலி, இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலைகள் சிறந்த உதாரணம்.
- மேற்கத்திய நாடுகள், தமக்கும் எதிராக திரும்பும் என்பதால் புறக்கணித்து வருகின்றன. அதற்காகவே இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணத்தில் இடதுசாரி கொள்கையாளர்களுக்கு எதிரான, வர்க்க ரீதியான காரணியை வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிர்த்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நேரம் குழுவில் மொடறேட்டராக இருந்தவர்கள் என்னைப் பேச விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். நடராஜா முரளிதரன் நடுவில் நின்று கொண்டு நாட்டாண்மை செய்து கொண்டிருந்தார். என்னை தூக்கி கீழே போடுவதும், mute பண்ணுவதாகவும் இருந்தார்.
என்னைப் பேச விடாமல் தடுத்து அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். தான் பேசி முடிந்ததும், தனது கருத்துடன் ஒத்துப் போகக் கூடிய சஜீவன், திரு யோ ஆகியோரை கூப்பிட்டு விட்டார். அவர்களும் தம் பங்கிற்கு "தமிழர்களுக்கு நடந்தது மட்டுமே இனப்படுகொலை, மற்றது அரசியல் படுகொலை" என்று வியாக்கியானம் செய்து கொண்டிருந்தார்கள்.
இவர்களது பேச்சுக்களில் இருந்து நான் அறிந்து கொண்ட உண்மை என்னவெனில், மேற்படி நபர்கள் தம்மை அறிவுஜீவிகளாக காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் இனவாதிகளாக தான் இருக்கிறார்கள். அதிலும் திரு யோ "தமிழர்களுக்கு நடந்தால் மட்டுமே இனப்படுகொலை, சிங்களவர்களுக்கு நடந்தால் அரசியல் படுகொலை" என்று சொன்னது அபத்தத்தின் உச்சம். அப்பட்டமான இனவாதம்.
நடராஜா முரளிதரன் "சிலியில் இடதுசாரிகளை தான் கொன்றார்கள்" என்று அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவது மாதிரி பேசினார். இதை நான் சுட்டிக் காட்டியதும், தான் படுகொலைகளை கண்டிப்பதாகவும், ஆனால் அது இனப்படுகொலை ஆகாது என்றும் வாதாடினார். எனது கேள்வி என்னவெனில், அப்பாவி மக்களையும் "இடதுசாரிகள்"(?) என்பதால் கொன்றார்கள் என்று கூறுவது, கொலைக்கு லைசன்ஸ் கொடுப்பது ஆகாதா?
இருந்து பாருங்கள். எதிர்காலத்தில் இலங்கையில் இடதுசாரிகளுக்கு எதிராக இன்னொரு இனப்படுகொலை நடந்தால், இந்த "அறிவுஜீவிகள்" கண்ணை மூடிக் கொண்டு அரசை ஆதரிப்பார்கள். அந்த இனப்படுகொலையில் சிங்களவர்கள் மட்டுமல்லாது, தமிழர்கள் கொல்லப் பட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் "இடதுசாரிகளை கொல்லலாம்!", "அது இனப்படுகொலை ஆகாது!!"
இப்படிப்பட்ட தீவிர வலதுசாரி பாசிஸ்டுகளை முற்போக்கு தமிழ்த்தேசியத்தின் கீழ் கொண்டு வரலாம் என நம்புவது வெகுளித்தனமானது. "தீவிர வலதுசாரிகளை திருத்தி விடலாம்" என பகற்கனவு காணும், தமிழ் பேசும் இடதுசாரிகளும் இந்த உண்மையை. உணர வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, வலதுசாரி தமிழ்த்தேசிய அறிவுஜீவிகள் மனதிலும் வர்க்கத் துவேஷம் ஊறி உள்ளது. நாளைக்கு இந்த சிறிலங்கா அரச படைகள், வர்க்கரீதியாக ஒடுக்கபட்ட ஏழை எளிய மக்களை மட்டும் குறிவைத்து கொன்று குவித்தால் பாராமுகமாக இருப்பார்கள். அந்த இனப்படுகொலையை நியாயப் படுத்தவும் தயங்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment