பிகினி நீச்சல் உடையின் கவர்ச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம்!
பேஷன் உலகில் பிகினி நீச்சல் உடை அறிமுகமானதற்குப் பின்னால் நூற்றுக் கணக்கான மக்களின் கண்ணீர்க் கதை மறைந்திருக்கிறது. முதலில் அதற்கு ஏன் பிகினி என்ற பெயர் வந்தது என்ற விபரம் பலருக்குத் தெரியாது.
பசுபிக் சமுத்திரத்தில் உள்ள மார்ஷல் தீவுகள், இன்று அமெரிக்காவின் கீழான "சுதந்திரமான நாடு". அது ஆயிரம் மைல் தூரத்திற்குள் உள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான் பிகினித் தீவு.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானியர் வசமிருந்த மார்ஷல் தீவுகளை அமெரிக்க இராணுவம் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது. அது பின்னர் அமெரிக்காவுக்கு சொந்தமான கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்றானது.
1946 ம் ஆண்டு, உலகின் முதலாவது ஹைட்ரஜன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் பரிசோதிக்கப் பட்டது. அணு குண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதிப்பதற்கு முன்னர், பிகினித் தீவில் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர். அமெரிக்க இராணுவம் அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கி இன்னொரு தீவில் தங்க வைத்தது.
சில வாரங்களில் ஊர் திரும்பலாம் என்று எண்ணியிருந்த பிகினித் தீவுவாசிகள், வருடக் கணக்காக அகதிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
1970 ம் ஆண்டளவில், கதிர்வீச்சு அபாயம் இல்லையென்றும், திரும்பிச் செல்வது பாதுகாப்பானது என்றும் சொல்லப் பட்டது. அதை நம்பி திரும்பிச் சென்றவர்களில் பலருக்கு புற்றுநோய் வந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என்றில்லாமல் பலர் குறுகிய காலத்திற்குள் மரணமுற்றனர்.
இதற்கிடையே பிகினித் தீவு மக்களை அமெரிக்க இராணுவம் நிரந்தர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதாவது, ஹைட்ரஜன் குண்டு வெடிப்பால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை ஆராய்வதற்காக, அவர்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியது. சிலர் அமெரிக்கா கொண்டு செல்லப் பட்டு பரிசோதிக்கப் பட்டனர். அப்போதெல்லாம் அமெரிக்க அரசு அவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை.
கதிர்வீச்சின் தாக்கம் இரண்டாம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை. அதனால் தம்மை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிகினித் தீவுவாசிகள் அமெரிக்க அரசை கேட்டுக் கொண்டனர். ஆனால் அந்த வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. இறுதியில் கிறீன்பீஸ் அமைப்பின் கப்பல் வந்து தான் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது.
ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொண்டால், மார்ஷல் தீவுகளுக்கு "சுதந்திரம்" கொடுப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் நஷ்டஈட்டுப் பணம் பாதிக்கப் பட்ட மக்களின் மருத்துவச் செலவுக்கே போதாது.
இரண்டாம் உலகப் போர் வரையில் பிகினித் தீவில் வறுமை என்ற சொல்லே இருக்கவில்லை. இன்று இன்னொரு தீவில் அகதிகளாக குடியேற்றப் பட்ட மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி வறுமைக்குள் வாழ்கின்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவெறி பிகினித் தீவுடன் நின்று விடவில்லை. மார்ஷல் தீவுகளில் ஒன்றில் நவீன ஏவுகணை தளம் அமைக்கப் பட்டுள்ளது. அங்குள்ள ஏவுகணைகள் சீனாவை நோக்கி குறி வைக்கப் பட்டுள்ளன.
ஏவுகணை தளம் உள்ள தீவில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்டு அயலில் உள்ள தீவில் தங்க வைக்கப் பட்டனர். அவர்கள் தினசரி படகில் சென்று ஏவுகணைத் தள பராமரிப்பு வேலைகளை செய்கின்றனர்.
முன்பு அந்த மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம், அவர்களை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆக்கியுள்ளது. அந்த மக்களின் குடியிருப்புகள் இருந்த இடத்தில் கோல்ப் விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கிருக்கும் புல்தரைக்கு தண்ணீர் ஊற்றும் வேலையிலும் அந்த மக்களே ஈடுபடுத்தப் படுகின்றனர்.
பிகினித் தீவில் ஹைட்ரஜன் குண்டு வெடித்த சம்பவம் நடந்து, சரியாக நான்காவது நாள் பிகினி என்ற நீச்சல் உடை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பிரெஞ்சு ஆடை அலங்கார நிபுணர் தயாரித்த பிகினி உடை, அப்போது உலகம் முழுவதும் பிரபலமாகப் பேச வைக்கப் பட்டது.
இதனால் அமெரிக்க இராணுவத்தின் அணுகுண்டு பரிசோதனை பற்றிய தகவல் மூடி மறைக்கப் பட்டது. இன்று எல்லோருக்கும் பிகினி என்றால் நீச்சல் உடை தான் நினைவுக்கு வரும். யாருக்கும் அமெரிக்க அணு குண்டு பரிசோதனை பற்றித் தெரிய வராது.
பிகினி உடைக்கும், அணுகுண்டு பரிசோதனைக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று சொன்னால் இன்று யார் நம்பப் போகிறார்கள்?
2 comments:
வெட்கக்கேடான விஷயம்...
அருமையான பதிவுக்கு நன்றிகள்..
தொடருங்கள் கலையரசன்
இதுவரை ஒரு சிறிதும் கேள்விப்படாத தகவல். திகைப்பாகத்தான் இருக்கிறது! வல்லரசு நாடுகளின் வெறிக்கு முன் மக்கள் எல்லாரும் வெறும் சோளப்பொறிகளே!
ஆனால், வெறும் கட்டுரை மட்டுமன்றி, இது தொடர்பான சான்றுகளையும் அளித்திருந்தீர்களானால் சிறப்பாக இருந்திருக்கும்.
Post a Comment