Monday, November 09, 2015

கோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்கப் படும் கருத்துச் சுதந்திரம்


மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அபிமான புரட்சிகர பாடகர் கோவன் கைது செய்யப் பட்டதும், தமிழ்நாட்டில் மீண்டும் கருத்துச் சுதந்திர அடக்குமுறை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. அரசு நடத்தும் டாஸ்மார்க் மதுக்கடை ஒழிப்புப் பாடலைப் பாடியதாலேயே கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதனால், அந்தப் பாடல் இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. 

யாருக்குமே தெரியாமல் இருந்த கோவன் என்ற பாடகரை, நாடறிய வைத்த பெருமை, ஆளும் ஜெயலிதாவின் ஆதிமுக அரசைச் சேரும். முதல்வர் ஜெயலிதாவை நையாண்டி செய்து பாட்டுப் பாடியதால் கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், கோவனின் கைதுக்கு வெளியில் சொல்லப் படாத சில காரணங்களும் இருக்கலாம்.

கோவனின் கைது தொடர்பாக தந்தி டிவியில் ஒரு விவாத அரங்கு இடம்பெற்றது. அந்த விவாதம், மீன் சந்தை ஆரவாரம் போன்று காட்சியளித்தது. ஆதிமுக சார்பில் கலந்து கொண்ட சரஸ்வதி, தனது கருத்துக்களை மட்டுமே எல்லோரும் கேட்க வேண்டுமென்பது போல, உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்களை பேச விடாமல் இடையூறு செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க வேண்டிய ரங்கராஜ் பாண்டே, இடையூறுகளை கட்டுப்படுத்தாமல், தானும் அதே தவறைச் செய்து கொண்டிருந்தார்.


விவாதத்தில் கலந்து கொண்டவர்களுடன், இந்திய அரசியல் சாசன விதிகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரங்கராஜ் பாண்டே, CPML (Peoples Liberation) சார்பில் கலந்து கொண்ட சதீஷிடம் மட்டும் சம்பந்தாசம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ரஷ்யாவில் அப்படி, சீனாவில் இப்படி என்று தனது "மேதாவிலாசத்தை" காட்டினார். ஓர் இந்தியரான சதீஷுக்கும், ரஷ்யா அல்லது சீனாவுக்கும் என்ன சம்பந்தம்?

இந்திய அரசியல் சட்டங்களை கூட கரைத்துக் குடித்திருக்கும் அறிவுஜீவிகள், கம்யூனிசம் என்று வந்து விட்டால் மட்டும் படிக்காத பாமரர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். கம்யூன் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து தான், கம்யூனிசம் வந்தது என்பதும், உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் நடந்தது என்பதும், இந்தப் படித்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ரஷ்யா, சீனாவில் மட்டும் தான் கம்யூனிசம் தோன்றியது என்று, இவர்கள் எங்கே படித்தார்கள் என்று தெரியவில்லை. கிரேக்க, ஜேர்மனிய தத்துவங்களின் தொடர்ச்சியாகத் தான் மார்க்சியம் தோன்றியது என்பதையாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கூட, தமது கம்யூனிச சித்தாந்தத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக, ஆதி கால தமிழ் சமுதாயத்தை பற்றி சில குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், ஜனநாயகம் பற்றிய இவர்களது புரட்டும். எதிர்க் கட்சி என்பது, எதிர்த்துப் பேசும் கட்சி அல்ல. அரசுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி என்பதை மறந்து விட்டு, ரங்கராஜ் பாண்டே இந்திய ஜனநாயகம் பற்றி பாடம் நடத்துகிறார். உண்மையான எதிர்க் கட்சிகளுக்கு (அவை தேர்தலில் போட்டியிடாதவையாக இருந்தாலும்) கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுகின்றது என்பதைத் தான், கோவனின் கைது எடுத்துக் காட்டுகிறது.

டாஸ்மார்க் எதிர்ப்புப் பாடல் மட்டும் கைதுக்கு காரணம் அல்ல. வினவு தளம் நடத்தும் கண்ணையன் ராமதாஸ் மீதும், தேசத் துரோக குற்றப்பத்திரிகை எழுதப் பட்டுள்ளது என்ற உண்மையை, அந்த நிகழ்ச்சியிலேயே ரங்கராஜ் பாண்டே அடிக்கடி சுட்டிக் காட்டினார். ஆட்சியாளர்களை கேலி செய்வது தவறு என்றால், அது என்ன வகை ஜனநாயகம்? அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்லவா?

இந்த உண்மையை புரிந்து கொள்ளாத ரங்கராஜ் பாண்டே, சதீஷ் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டுகிறார். அதற்கு "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்பதத்தை எடுத்துக் காட்டுவது நகைப்புக்குரியது. தற்போது உலக நாடுகள் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளிய வர்க்க சர்வாதிகாரம் முறியடிக்கப் பட்டு, அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர வேண்டும் என்பது ஒரு தத்துவார்த்த வாதம். அதை ஒரு தத்துவமாகப் பார்க்காமல், "சர்வாதிகாரம்" என்ற ஒரு சொல்லை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

இந்த இலட்சணத்தில் தான், இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை. தொலைக்காட்சிக் கமேராக்களை அங்கே திருப்புங்கள்.

"தோழர் கோவனின் கைதுக்கு உண்மையான காரணம், அவர் பாடிய டாஸ்மார்க் பற்றிய பாடல் அல்ல. அதை மக்களிடையே கொண்டு சென்று பரப்பிய வினவு இணையத் தளம். இந்தத் தேசத் துரோக வழக்கின் முதல் குற்றவாளி, வினவு இணையத்தள நிர்வாகி கண்ணையன் ராமதாஸ்."

இந்த உண்மையை தந்தி டிவி இல் ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, அழுத்தம் திருத்தமாக கூறினார். விவாதத்தில் கலந்து கொண்டு, கோவனின் கைதுக்கு ஆதரவாக பேசிய, ஆதிமுக பிரமுகர் சரஸ்வதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோரும், சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் பரவியது என்று குற்றஞ்சாட்டினார்கள்.

"நானும் பேஸ்புக் பார்க்கிறேன். இண்டைக்கு எத்தனை பேரிடம் மொபைல் போன், வாட்ஸ் ஆப் இருக்கு. இந்தப் பாடல் எத்தனை பேரிடம் பரவி இருக்கும்?" என்று சரஸ்வதி பொரிந்து தள்ளினார். அதை ஆமோதிப்பது போல முருகனும் "பேஸ்புக்கில் அரசை விமர்சித்து எழுதுவது தேசத்துரோகம்... இப்படியே விட்டால் கழைக் கூத்தாடியும் பேஸ்புக்கில் அரசியல் செய்யத் தொடங்கி விடுவான்." என்று தனது அச்சத்தை வெளியிட்டார்.

இவர்களின் கூற்றில் இருந்து ஓர் உண்மை புலனாகும். அண்மைக் கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரம் அதையிட்டு அஞ்சி நடுங்குகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிய மாய்மாலம் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே உரியது. குரலற்ற அடித்தட்டு மக்களும் கருத்துச் சுதந்திர உரிமையை பாவிப்பது அரசு அதிகாரத்திற்கு ஆபத்தானது.

எனக்கும் கூட, கோவன் யார் என்பது கைதுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அவர் பாடிய பாடல்களை கடந்த பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். மகஇக இயக்கத்தின் அரசியல் பிரச்சாரப் பாடல்களை பாடும், கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், அனைவரையும் கவரும் வல்லமை பெற்றிருந்தார். ஆந்திராவில் புரட்சிகர தெலுங்குப் பாடல்களை பாடும் கத்தாரின் பாணியை, தமிழுக்கு கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், கோவன் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாக (ஆடியோ கேசட்) விற்பனை செய்யப் பட்டன. சென்னை கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனையான கேசட்டுக்களை, வெளிநாடுகளில் இருந்து கொண்டு தருவித்து, கேட்டு மகிழ்ந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன்.

இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம், கோவன் பாடத் தொடங்கி, அவை கேசட்டுக்களாக விற்பனை செய்யப் பட்ட காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது! அப்போதும் ஜெயலலிதா ஆட்சியை கிண்டலடித்து பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியுமளவிற்கு நடந்த, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தை நையாண்டி செய்யும் பாடலை, அன்றைய அதிமுக கட்சிக்காரர்கள் யாரும் கேட்கவில்லையா? "அசைந்து வருகிறது நகைக்கடை... தங்கம் வேணுமா... சொல்கிற இடத்தில வெட்டனும்..." என்றெல்லாம் பாடினார்கள். அதுவும், ஜெயலிதா ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில்!

புரட்சிகர பாடகர், தோழர் கோவனை அப்போது கைது செய்யாமல், இப்போது கைது செய்யக் காரணம் என்ன? அதைத் தான் தந்தி டிவி விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் பரவி விட்ட, இணையப் பாவனை, சமூக வலைத் தளங்கள், ஸ்மார்ட் போன்கள் தான் காரணம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, இப்படி ஒரு சமூக மாற்றம் வரும் என்று ஆட்சியாளர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வசதி படைத்த மத்தியதர வர்க்கம் மட்டுமே இணையம் பாவித்த காலம் மலையேறி விட்டது. இன்று காய்கறிக் கடைக்காரன், கிரமாப்புற விவசாயி எல்லாம், இணையப் பாவனை கொண்ட ஸ்மார்ட் போன் பாவிக்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.

சமூகவலைத்தளங்களிலும், ஒரு சில மத்தியதர வர்க்க இளைஞர்கள் மட்டும் கூடியிருந்து, அமெரிக்க சுகபோக வாழ்க்கை பற்றி அரட்டை அடித்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், கடந்த ஏழாண்டு காலத்தில், வினவு போன்ற கம்யூனிசக் கொள்கைகளை பரப்புவோரும், சமூக வலைத்தளங்களை பாவிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வலைப்பூவாக தொடங்கிய வினவு, குறுகிய காலத்திலேயே பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த இணையத் தளமாக மாறியது.

"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்..." என்று, அதிகார வர்க்கத்தின் குரலாக ஒலிக்கும் சரஸ்வதியும், முருகனும் கூறுகின்றனர். பணபலம் படைத்த பெரிய கட்சிகள் மட்டுமே, மேடை போட்டுப் பேசி ஆயிரக் கணக்கான மக்களை கவர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) தமிழகத்தில் இயங்கி வருகிறது. அறுபதுகளில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சி என்பதும், ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தி போராடும் இயக்கம் என்பதும் அரசுக்கு நன்றாகத் தெரியும். சென்னை கீழைக்காற்று புத்தகக் கடைக்கு வரும், கியூ பிராஞ்ச் புலனாய்வு அதிகாரிகள், "ஒன்றும் தெரியாத மாதிரி" நூல்களை வாங்கிச் செல்வார்கள்.

சென்னை மாநகர மின்சார ரயிலில், பஸ் வண்டிகளில், மகஇக தோழர்கள் ஏறி, தமது வெளியீடுகளான புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சஞ்சிகைகளை, ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும்.

அப்போதெல்லாம், மகஇக பிரச்சாரம் செய்யும் கருத்துக்கள், மிக மிகக் குறைந்தளவு மக்களிடம் மட்டுமே போய்ச் சேர்ந்தது. இப்போதும் அப்படியா? உலகமயமாக்கலின் விளைவுகளில் ஒன்றாக, இணையப் பாவனையும், ஸ்மார்ட் போன்களும் எல்லோரும் வாங்கிப் பாவிக்குமளவிற்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்க மக்கள் கூட, மிக விரைவாக நவீன தொலைத்தொடர்பு வசதிகளை தமதாக்கிக் கொண்டனர். உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இருந்து உருவான படித்த வாலிபர்கள், மிக இலகுவாக வினவு பிரச்சாரம் செய்யும் புரட்சிகர கம்யூனிசக் கருத்துக்களால் ஆகர்சிக்கப் படுகின்றனர். அதுவே வினவு இணையத் தளத்தின் வெற்றி எனலாம்.

"இதை இப்படியே விட்டு விடலாமா?" தந்தி டிவி விவாதத்தில், அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக பேசிய, சரஸ்வதி, முருகன் மட்டுமல்ல, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரங்கராஜ் பாண்டே கூட, அந்தக் கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

அது தானே? அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் அரசியல் கருத்துகளுக்கும் சுதந்திரம் கொடுத்தால் என்னாகும்? நாளைக்கு அரசு அதிகாரத்திலும், மேட்டுக்குடியினரிடம் பங்கு கேட்டு வர மாட்டார்களா? அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். அந்த உண்மையை, விவாதத்தில் பேசிய (முன்னாள்) அரசு அதிகாரி முருகன் நேரடியாகவே கூறினார்: "உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரையில் தான்!" 

நான் எழுதிய இந்தப் பதிவையும், தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளும், புலனாய்வுத் துறையினரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரம் தங்கள் கணனியில் சேமித்தும் வைக்கலாம். ஏற்கனவே அப்படி எல்லாம் நடக்கிறது என்பதைத் தான், தந்தி டிவி விவாத அரங்கமும் எமக்குத் தெளிவு படுத்தி உள்ளது.

ஆகவே, தோழர் கோவன் கைது செய்யப் பட்ட பின்னர், வினவு ஆற்றிய எதிர்வினையை சொல்லி முடிக்கலாம் என நினைக்கிறேன். "கோவன் பாடிய அதே பாட்டை பாடு அஞ்சாமல் பாடு!" என்ற கோஷத்தை வினவு எழுப்பியது. அதே மாதிரி, "பேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், வாட்ஸ் அப்பில், எழுது அஞ்சாமல் எழுது!"


தோழர் கோவன் பாடிய டாஸ்மார்க் ஒழிப்புப் பாடல்:


தந்தி டிவி இல் ஒளிபரப்பான விவாத அரங்கம்:

3 comments:

பாபு பகத். க said...

இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை "

மனது உரைத்ததை கட்டுரையில் எழுதியுள்ளீர்கள் ... மனித இனத்தை பிறப்பால் பிரித்துப் பார்க்கும் மூட மனிதர்களால் நன்மைகள் ஒரு போதும் நடக்காது.
டாம் பெய்ன் எழுதிய 'அரசியல்வாதிகளின் முதலானவன், முரடனில் முதலான முரடனாக இருப்பான்' என்ற வரிகள் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.
தன்னைக் கொல்வதற்காக வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்மணியைக் கூட தன் மீது மதிப்பு வருமாறு நடந்து கொண்ட லெனின் போன்ற தலைவர்களை நினைக்கும்போது தற்போது உள்ள உலக அரசியல் நிலை.... இந்த பூமி எதிர்காலத்தை இழந்து கொண்டு இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
எதிரிகளின் பேச்சை நகைச் சுவை உணர்வுடன் எடுத்துக் கொண்ட லிங்கன் போன்ற தலைவர் வாழ்க்கைகள் வரலாறாக மட்டும் நின்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

சீனிவாசன் said...

விவாதம் என்ற பெயரில் இவர்கள் அளிக்கும் தலைவேதனையை, ஏற்படுத்தும் இரத்த கொதிப்பை தாங்க முடியாமல் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதையே விட்டுவிட்டேன். பாசிஸ்டுகளுக்கும், இந்துத்துவ காலிகளுக்கும் இடமளித்து பூஜ்ஜியமாய் இருக்கும் அவர்களை சமூகத்தில் முக்கிய இடத்தில் அமர வைக்கும் ஊடக பயங்கரவாதிகள் இந்த தொலைக்காட்சிகள்.

//"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்..."//- தமிழ்நாட்டில் கருத்துரிமை என்பதே கிடையாது. சாதாரண ஆர்பாட்டத்திற்க்கு கூட மக்கள் கூடும் இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, ஒலிபெருக்கி வைக்க அனுமதி மறுக்கப்பட்டு, புரட்சிகர பாடல்கள் பாடவும் அனுமதி மறுக்கப்பட்டு, யாருமே வராத இடங்களில் ஆர்பாட்ட அனுமதி கிடைக்கிறது. இந்த அனுமதியும் பல நேரங்களில் கிடைப்பதில்லை. இதையும் தாண்டி நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கும் தோழர்களை, பொதுமக்களை வீடியோ கேமராவில் படம்பிடித்து காவல்துறை அச்சுறுத்துகிறது. இவை அனைத்தும் போதாதென்று தோழர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்துவதும், அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று இவர்கள் தீவிரவாதி என கள்ள பரப்புரை செய்வதும் என நீள்கிறது. அரங்கு கூட்டங்களுக்கு அனுமதி தேவையில்லையென்பது என்பது மரபு, இதிலும் காவல்துறை தலையிட்டு அரங்கு உரிமையாளரை மிரட்டி, முற்போக்கு அமைப்புகளுக்கு அரங்கு கிடைக்க விடாமல் செய்கிறது. மே நாளில் கூட பேரணி நடத்த முடிவதில்லை. இதுதான் இவர்கள் அளிக்கும் ஜனநாயகம், கருத்து சுகந்திரம். இதற்கு பெயர் சர்வாதிகாரம் இல்லையா? இந்த சர்வாதிகாரத்தை கேட்க துப்பற்றவர்கள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பற்றி பேசுகிறார்கள்.

ஒரு வகையில் கோவன் கைதை தோழர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு வகையில் வரவேற்க்கவே செய்கின்றனர். பட்டி தொட்டி எங்கும் அமைப்பை இந்த கைது கொண்டு சென்றதுள்ளது.அவரது குடும்பம் பற்றிய சுட்டி https://www.youtube.com/watch?v=PwTrJmVQu9g

சிறப்பான கட்டுரை தோழர், வாழ்த்துக்கள்!இதே போன்று ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் அடக்குமுறைகளை பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள் தோழர்.

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி தோழர் சீனிவாசன்