Thursday, September 11, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு


ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா? அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, "தமிழீழ ஆதரவாளர்கள்" என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், "What about Tamileelam?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன? "ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே?

குறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.

முதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா? இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். 

இது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.

SNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன. 

மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.

Glasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், "ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வரும் வருமானம் அதற்கு செலவிடப் படும்" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது. 

SNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள். 

மேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம். 

சுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.

No comments: