காளை மாடு, சிவப்பு நிறத் துண்டைக் கண்டால் மிரளுவதைப் போல, படிப்பால் உயர்ந்து, பதவியைப் பிடித்த, நடுத்தர வர்க்க ஈழத் தமிழ் இளைஞர்களும், சிவப்பு வர்ணத்தை எங்கே கண்டாலும் மிரளுகிறார்கள். "ஈழத்தில் எந்தவொரு வறுமைப் பட்ட இளைஞனும், இன்று சிவப்புத் தத்துவம் பேசிக் கொண்டிருக்கவில்லை. தங்களைப் போன்று நடுத்தர வர்க்கப் பிரதிநிதியாகி, கைநிறைய சம்பாதிக்க எண்ணுகிறார்கள்..." என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், "எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்" என்று சொல்வார்கள். இதுவரையில் எந்தவொரு உலக நாட்டிலும், அனைத்து பிரஜைகளும் முதலாளிகளாக வர முடியவில்லை. ஒரு காலத்தில், ஈழத்து வறுமைப்பட்ட இளைஞர்கள், கஷ்டப் பட்டு படித்து முன்னேற முடிந்தது. இலங்கையில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப் பட்ட காலத்தில் அதெல்லாம் சாத்தியமானது. இலங்கையில் வசதி வாய்ப்புக் கொண்ட நடுத்தர வர்க்கம் பல்கிப் பெருகுவதற்கு இலவசக் கல்வி வழி வகுத்தது. இலவசக் கல்வி மட்டுமல்ல, இலவச மருத்துவ வசதியும் வறுமைப் பட்ட இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவியது.
இன்று சிவப்பு நிறத்தைக் கண்டு மிரளும் இளைஞர்களுக்கு, தாங்கள் அனுபவித்த இலவச கல்வி/மருத்துவம் என்பன "சிவப்புத் தத்துவம்" என்பது தெரியாது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இடதுசாரிக் கட்சிகள் பலமாக இருந்ததால், ஒரு முதலாளித்துவ அரசு தவிர்க்கவியலாது சோஷலிச சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தி இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறை அந்த சலுகைகளை இழந்து கொண்டிருக்கிறது. கல்வி தனியார் மயமாகின்றது. மருத்துவமும் அதைத் தொடரலாம்.
உயர்கல்வி கற்று வாழ்க்கை வசதியை உயர்த்திக் கொள்ளலாம் என்று கனவு கண்ட, வறுமைப் பட்ட இளைஞர்கள் தலையில் இடி இறங்கி உள்ளது. முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு, இலங்கைப் பொருளாதாரத்தில் தாராள மயம் புகுத்தப் படுகின்றது. வெள்ளைப் போர்வை (White- collar workers) போர்த்திக் கொண்ட, நடுத்தர வர்க்க ஈழத் தமிழ் இளைஞர்கள், பொழுதுபோக்காக தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, இலங்கை அரசின் தாராள பொருளாதாரக் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள்.
வடக்கு, கிழக்கில் உள்ள வறுமைப் பட்ட இளைஞர்களை மட்டுமல்ல, தெற்கில் உள்ள வறுமைப் பட்ட இளைஞர்களையும், இவர்கள் பூச்சாண்டி காட்டும் "சிவப்புத் தத்துவப்" பக்கம் செல்ல விடாமல் தடுப்பது தான், ஸ்ரீலங்கா அரசின் நோக்கமும். அந்த நோக்கத்திற்காக தேசியவாதம், இனவாதம் போன்ற தத்துவங்களை போதிக்கிறார்கள். ஸ்ரீலங்கா முதலாளித்துவ அரசு, தேசியவாதம் அல்லது இனவாதத்தை, சிங்கள-தமிழ் இளைஞர்களுக்கு ஒரு போதைவஸ்து போன்று ஊட்டிக் கொண்டிருக்கிறது. தெற்கில் அரசு என்ன செய்கிறதோ, அதைத் தான் வடக்கு, கிழக்கில் தமிழ் மேட்டுக்குடியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். "சிவப்பு தத்துவம்" ஸ்ரீலங்கா அரசினதும், தமிழ் மேட்டுக்குடியினதும் பொது எதிரியாக உள்ளது. அதற்காக அவர்கள் எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேர்வார்கள்.
முப்பதாண்டுகளுக்கு முன்னர் வறுமைப் பட்ட இளைஞர்கள், தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் "சிவப்பு தத்துவத்தினால்" ஆகர்ஷிக்கப் பட்டிருந்தார்கள். "சிவப்பு தத்துவம்" வடக்கு, கிழக்கில் எந்தளவு பிரபலமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். 1977 ம் ஆண்டு, வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி "சோஷலிசத் தமிழீழம், சோஷலிச பொருளாதாரம்" வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது.
இடதுசாரி ஈழ விடுதலை இயக்கங்கள், மார்க்சிய லெனினிச தத்துவத்தை பின்பற்றுவதாகக் கூறித் தான், புதிய உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் சேர்த்துக் கொண்டன. மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டால், குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஈழத் தமிழ் இளைஞர்கள் "சிவப்புத் தத்துவத்தால்" ஈர்க்கப் பட்டிருந்தனர். அந்தக் காலங்களில், புலிகள் கூட சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகத் தான் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனால், முப்பதாண்டு கால ஈழப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. மேலைத்தேய ஏகாதிபத்திய நாடுகளின் ஆசியுடன் ஸ்ரீலங்கா அரசும், இந்திய அரசும் கூட்டுச் சேர்ந்து, "சிவப்பு தத்துவத்தை" மக்கள் மனதில் இருந்து அகற்றுவதற்கு பல வழிகளிலும் முயற்சித்தன. அதற்காக பல சூழ்ச்சிகள் பின்னப் பட்டன. அதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இன்று வென்றவர்கள் வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள். முப்பதாண்டு கால ஈழப் போரில் நடந்தது, தமிழின அழிப்பு மட்டுமல்ல, இடதுசாரி தத்துவ அழிப்பும் தான். அதற்கு பல உதாரணங்களை காட்டலாம்.
ஒரு காலத்தில், தெற்கில் ஜேவிபியும், வடக்கில் புலிகளும் ஒன்று சேர்ந்து, இலங்கை அரசை கவிழ்த்து விடுவார்கள் என்று, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன பயந்து கொண்டிருந்தார். "நல்ல வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று சிங்கள மேட்டுக்குடியும், தமிழ் மேட்டுக்குடியும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இலங்கையில் யுத்தம் நடக்க வேண்டும். ஆனால், இலங்கை அரசு கவிழக் கூடாது என்பது, சிங்கள-தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஜேவிபி, புலிகள் ஆகிய இரண்டு இயக்கங்களையும் "மார்க்சிஸ்டுகள்" என்று குற்றஞ்சாட்டி வந்தார். (உண்மையில், அவை இரண்டும் குட்டி முதலாளிய தேசியவாத இயக்கங்கள் ஆகும்.) ஆனால், "இலங்கையில் கம்யூனிச அபாயம்" பற்றி பயமுறுத்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உதவியை பெற்றுக் கொண்டார். ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு, வடக்கு-தெற்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் பயிற்சி அளிப்பதற்காக, பிரிட்டிஷ் SAS கூலிப்படை தருவிக்கப் பட்டது. அவர்கள் உருவாக்கிய STF எனும் கொலைப்படை, போரில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தது. ஏற்கனவே, 1971 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு, பிரிட்டிஷ் அரசு உதவியிருந்தது.
இலங்கையில், முதலாவது ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்த்தன, ஒரு சிங்கள-பௌத்த பேரினவாதி மட்டுமல்ல. தெற்காசியாவிலேயே முதன் முதலாக நவ-தாராளாவாத பொருளாதாரக் கொள்கையை (Neo- Liberalism) அறிமுகப் படுத்தியவர் அவர் தான். அது என்ன நவ-தாராளவாதம் என்று சிலர் அப்பாவித் தனமாக கேட்கலாம். அது தான் இன்றைக்கு உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றது.
இன்று, "சிவப்புத் தத்துவம் வேண்டாம்" என்று கொக்கரிக்கும் மத்தியதர வர்க்க தமிழ் இளைஞர்கள், நவ தாராளவாத பொருளாதாரத்தின் தாசர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர். அதனால் தான் இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, கை நிறையப் பணம் சம்பாதிக்க முடிகிறது. பீட்சா, பேர்கர், என்று அமெரிக்கக் கலாச்சாரத்தை ஒரு கை பார்க்க முடிகிறது. ஒரு பெரிய வீட்டில், சொகுசான வாழ்க்கை வசதிகளை அனுபவித்துக் கொண்டே, கார், அல்லது மோட்டார் சைக்கிளில் பவனி வர முடிகின்றது. சந்தர்ப்பம் வாய்த்தால், வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிகிறது.
இன்று, "சிவப்புத் தத்துவம் வேண்டாம்" என்று கொக்கரிக்கும் மத்தியதர வர்க்க தமிழ் இளைஞர்கள், நவ தாராளவாத பொருளாதாரத்தின் தாசர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர். அதனால் தான் இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, கை நிறையப் பணம் சம்பாதிக்க முடிகிறது. பீட்சா, பேர்கர், என்று அமெரிக்கக் கலாச்சாரத்தை ஒரு கை பார்க்க முடிகிறது. ஒரு பெரிய வீட்டில், சொகுசான வாழ்க்கை வசதிகளை அனுபவித்துக் கொண்டே, கார், அல்லது மோட்டார் சைக்கிளில் பவனி வர முடிகின்றது. சந்தர்ப்பம் வாய்த்தால், வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிகிறது.
இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிற்று? 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கையில் தாராளவாத பொருளாதாரத்தை புகுத்தியிரா விட்டால், இதெல்லாம் சாத்தியப் பட்டிருக்குமா? இந்தியாவில், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், அங்கு தாராளவாத பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. சோவியத் ஒன்றியம், மற்றும் பல சோஷலிச நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்த பின்னர், உலகில் நவ- தாராளவாத பொருளாதாரத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
இலங்கை மட்டுமல்ல, இந்தியா கூட, இன்று நவ தாராளவாத பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றன. ஆனால், அப்படியான நிலைமை, நமது தமிழ் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு உவப்பான விடயம் தான். அவர்கள் பெரிதும் இதனை விரும்பி வரவேற்பார்கள். இன்றைக்குள்ள புதிய தலைமுறை ஈழத் தமிழ் இளைஞர்கள், பெரும்பாலும் எழுபதுகளுக்கு பின்னர், அதாவது ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தின் பின்னர் பிறந்தவர்கள். இலங்கையில், நவ தாராளவாதத்தை ஆதரிக்கும் இளைஞர்களை "ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் குழந்தைகள்" என்று அழைப்பதில் என்ன தவறு?
இலங்கை மட்டுமல்ல, இந்தியா கூட, இன்று நவ தாராளவாத பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றன. ஆனால், அப்படியான நிலைமை, நமது தமிழ் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு உவப்பான விடயம் தான். அவர்கள் பெரிதும் இதனை விரும்பி வரவேற்பார்கள். இன்றைக்குள்ள புதிய தலைமுறை ஈழத் தமிழ் இளைஞர்கள், பெரும்பாலும் எழுபதுகளுக்கு பின்னர், அதாவது ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தின் பின்னர் பிறந்தவர்கள். இலங்கையில், நவ தாராளவாதத்தை ஆதரிக்கும் இளைஞர்களை "ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் குழந்தைகள்" என்று அழைப்பதில் என்ன தவறு?
No comments:
Post a Comment