Tuesday, May 07, 2013

பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்


பெர்லின் சுவர் பற்றி அனைவருக்கும் தெரிந்த கதை ஒன்றுண்டு. "கிழக்கு ஜெர்மனியில், கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து, சுதந்திர மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடிக் கொண்டிருந்த அகதிகளை தடுப்பதற்காக, பெர்லின் மதில் கட்டப் பட்டது. அதனால் அவமானத்தின் மதில் சுவர் என்று அழைக்கப் பட்டது...."

நாம் அன்றாடம் தகவல்களைப் பெற நம்பி இருக்கும் ஊடகங்கள் மட்டுமல்ல, பாட நூல்கள், வரலாற்று நூல்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நம்பிக்கையாளர்களால் எழுதப் படுகின்றன. அதனால், எமக்கு எப்போதும் ஒரு பக்க தகவல்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் பாதி உண்மைகள் மட்டுமே. மீதி உண்மைகள் எங்கேயோ உறங்கிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான், கம்யூனிச நாடுகளில் தஞ்சம் கோரிய மேலைநாட்டு அகதிகள். அப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு, அரசியல் பிரச்சார சாதனங்களால் நாங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளோம்.

Wo ist Lieutenant Adkins? (லெப்டினன்ட் அட்கின்ஸ்  எங்கே?) என்ற நூல் ஜெர்மனியில் வெளியாகி உள்ளது. The Atlantic Times என்ற ஜெர்மன் பத்திரிகை ஆசிரியர் Peter H. Koef  அந்த நூலை எழுதி இருக்கிறார். (நூல் ஜெர்மன் மொழியில் மட்டுமே கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக தெரியவில்லை. இந்த தளத்தில் ஆங்கில மொழியில் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது:Deserting the wrong way: Why soldiers went East)  இரண்டு வருடங்களாக, முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் உள்துறை அமைச்சின் ஆவணங்களை ஆராய்ந்து, அந்த நூலை எழுதியுள்ளார். சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத் துறையான Stasi, தனது நாட்டில் வசித்த மேலைத்தேய நாட்டவர்களின் விபரங்களை சேகரித்து வைத்திருந்தது. அது பற்றிய மேலதிக விபரங்களை தேடிய பொழுது, சுமார் 200 அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைவீரர்களும், தஞ்சம் கோரியிருந்த விடயம் தெரிய வந்துள்ளது.

1961 ம் ஆண்டு தான், பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதற்கு முன்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விசா எடுத்து, கிழக்கு - மேற்கு பெர்லின் பகுதிகளுக்கு இடையில் சுலபமாக சென்று வர முடிந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்து, பெருமளவு மக்கள் மேற்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது உண்மை தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், மேற்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது குறித்து யாரும் பேசுவதில்லை. அந்த தகவல், சரித்திர நூல்கள், ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

அது மட்டுமல்ல, நேட்டோ படைகள் பல உளவாளிகளை, கிழக்கு ஜெர்மனிக்குள் அனுப்பி வைத்தன. அது குறித்தும் எல்லோரும் மௌனம் சாதிக்கின்றனர். அந்தக் காரணத்தை சொல்லித் தான், அதாவது "மேற்கத்திய ஊடுருவலாளர்களை, உளவாளிகளை வர விடாமல் தடுப்பதற்காக" பெர்லின் மதில் கட்டப் போவதாக, கிழக்கு ஜெர்மனி அன்று  அறிவித்தது. அவர்களின் பக்கத்தில், அதற்கு "பாசிச தடுப்புச் சுவர்" என்று பெயரிடப் பட்டது. மேற்கத்திய நேட்டோ படைகளில் இருந்து, கிழக்கு ஜெர்மனிக்குள் சென்றவர்கள் அனைவரும் உளவாளிகள் அல்லர். பல உண்மையான அரசியல் அகதிகளும் சென்றிருந்தனர். பெர்லின் மதில் கட்டப் படுவதற்கு முன்னர், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய, 200 மேற்கத்திய அரசியல் அகதிகள் பற்றித் தான், இந்த நூல் பேசுகின்றது.

12-1-1954 அன்று, William D. Adkins என்ற 23 வயதான அமெரிக்க இராணுவ வீரர், ஆஸ்திரியாவில் Amstetten நகரில் இருந்த சோவியத் படைமுகாமில் அகதித் தஞ்சம் கோரினார். தான் கம்யூனிசக் கொள்கைகளை நம்புவதாகவும், தனது ஜெர்மன் காதலியின் ஆலோசனையின் படி, சோவியத் யூனியன் சென்று வாழ விரும்புவதாக சொல்லி இருக்கிறார். சில நாட்கள் சோவியத் இராணுவ முகாமில் விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருந்தார். அப்போது அவர் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "நான் ஒரு தேசத் துரோகி அல்ல. எனது தாய்நாடான அமெரிக்கா, தவறான தலைவர்களால் ஆளப் படுகின்றது. சோவியத் பகுதிகளில் வாழும் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். நான் சோவியத் படைகளில் சேரும் காலம் ஒன்று உருவாகும். அன்று அமெரிக்காவை விடுதலை செய்யும் போரில் பங்குபற்றுவேன்."

அட்கின்ஸ் தன்னை சோவியத் யூனியனுக்கு அனுப்புமாறு விரும்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது விருப்பத்திற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை Dresden நகருக்கு கூட்டிச் சென்று, அங்கே Jack Forster என்ற பெயரில் போலி அடையாள அட்டை ஒன்றை செய்து கொடுத்தார்கள். Stasi க்காக வேலை செய்ய ஒத்துக் கொண்டதால் மாதாமாதம் 500 மார்க் சம்பளம் கொடுக்கப் பட்டது. அது அன்றைய கிழக்கு ஜெர்மனியில் சராசரி சம்பளத்தை விட சற்று அதிகமாகும். Jack Forster, மேற்கு ஜெர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைவீரர்களை, இராணுவத்தை விட்டு தப்பியோடுமாறு ரேடியோ பிரச்சாரம் செய்வதற்கு உதவினார். Stasi யின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொண்டதால், சம்பளம் உயர்த்தப் பட்டது. கார்ல்மார்க்ஸ் ஸ்டாட் (தற்போது: Chemnitz) நகர பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பெயர், John  Reed  என்று மாறி இருந்தது.

1963 ம் ஆண்டு, அட்கின்ஸ் மாயமாக மறைந்து போனார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல் எதுவும், Stasi ஆவணங்களில் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டார். கடைசியாக, மேற்கு பெர்லின் நகர் பகுதியில், Jörg Brandi என்ற நண்பருடன் சேர்ந்திருக்க காணப் பட்டார். அதற்குப் பிறகு எந்த சுவடும் இல்லாமல் மறைந்து விட்டார்.  Jörg Brandi என்பவர், மேற்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்தவர். (அவர் மேற்குலக உளவாளியாக இருக்கலாம்.) கிழக்கு பெர்லின் சென்றிருந்த சமயம் அட்கின்சை சந்தித்து இருக்கிறார். இருவருமாக திட்டம் தீட்டி, மேற்கு ஜெர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒருவருடன் நட்புடன் பழகி இருக்கிறார்கள். ஒரு நாள், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, அவரது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு மேற்கு பெர்லினுக்கு பயணம் செய்திருக்கிறார். யாரும் அவரை சந்தேகப் படவில்லை.

ஒரு முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியரான Peter H. Koef , தனது நூலுக்கு  "லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்று தலைப்பிட்டதும் ஒரு காரணத்தோடு தான். ஏனெனில், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த அமெரிக்க அகதிகளுக்குள், அட்கின்ஸ் போன்ற கருங்காலிகளும் இருந்துள்ளனர். அந்த நூலில், பல அகதிகளின் கதைகள் சொல்லப் பட்டிருந்தாலும், அட்கின்ஸ் பற்றிய கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால், அவர் ஒரு அமெரிக்க உளவாளியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனை நூலாசிரியரே உறுதிப் படுத்துகின்றார். அட்கின்ஸ் யாருடைய காதலுக்காக சோவியத் யூனியன் செல்ல விரும்பினாரோ, அந்த ஜெர்மன் பெண்ணை பின்னர் கைவிட்டுள்ளார். அவருக்கு பிறந்த மகளையும் விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்கு ஓடியுள்ளார். இன்று ஜெர்மனி ஒன்றிணைந்த பின்னரும், பிரிந்த  தந்தையை  தேடும் மகளுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. "அட்கின்ஸ் ஒரு CIC  உளவாளி," என்று அவரை விவாகரத்து செய்த முன்னாள் மனைவி கூறுகின்றார்.

Counter Intelligence Corps (CIC) என்பது, ஐரோப்பாவில் புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதற்காக, அமெரிக்க படைகளினால் பயன்படுத்தப் பட்ட இரகசிய அமைப்பாகும். அவர்களில் பலர், கிழக்கு ஜெர்மனிக்குள்ளேயும் செயற்பட்டு வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரியிருந்த அமெரிக்கர்களை, தேடிக் கண்டுபிடித்து கண்காணிப்பது, முடிந்தால் கடத்திச் செல்வது, அல்லாவிட்டால் கொன்று விடுவது கூட, அவர்களுக்கு இடப்பட்ட பணியாகும். "தேசத் துரோகிகளை" கடத்துவதோ, கொலை செய்வதோ, மிக மிக அரிதாகவே நடந்தது. அதற்கு காரணம், இன்னொரு பக்கத்தால், Stasi உளவாளிகளும் மேற்கத்திய அகதிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.  அட்கின்ஸ் ஒரு அமெரிக்க CIC  உளவாளி என்பதற்கான வேறு ஆதாரங்கள் உள்ளனவா? 

அட்கின்ஸ் சோவியத் இராணுவ முகாமில் தங்கியிருந்த காலத்தில், உறவினருக்கு எழுதிய கடிதம் போலியாக இருக்கலாம். தன்னை விசாரித்த அதிகாரிகள், அந்தக் கடிதத்தை உடைத்து வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே, "கம்யூனிசத்தை புகழ்ந்தும், சோவியத் படையில் சேர விரும்புவதாகவும்..." எழுதி இருக்கலாம். அனேகமாக, அந்த உத்தி பெரிதும் பயன்பட்டிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, மேற்கு பெர்லினுக்கு தப்பிச் சென்ற பின்னர், அமெரிக்க அரசு வேறு ஒரு பெயரில் அடையாள அட்டை, கடவுச் சீட்டு செய்து கொடுத்திருக்கலாம். அதனால் தான், இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு "மாயமாக மறைந்து போனார்". மேலும், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடிய அகதிகள் மீது, "தேசத் துரோக வழக்கு" போடப் பட்டுள்ளது. அவர்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தால், நிச்சயமாக சிறையில் அடைக்கப் படுவார்கள். அட்கின்ஸ் மீது அப்படி எந்த தேசத் துரோக வழக்கும் வழக்கும் போடப்படவில்லை. அது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியதாகவோ, எதிரி நாட்டில் தஞ்சம் கோரியதாகவோ, எந்தத் தகவலும் அமெரிக்க ஆவணங்களில் காணக் கிடைக்கவில்லை.

மேற்கு ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய,  நூற்றுக் கணக்கான கறுப்பின படைவீரர்கள், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடி அரசியல் தஞ்சம் கோரி இருக்கிறார்கள். அந்தப் பிரிவினர், என்றென்றும் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அப்போது நடந்த கொரிய யுத்தத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில், யுத்தத்தை வெறுக்கும் படையினரும், அமெரிக்க  இராணுவத்தை விட்டு ஓடினார்கள். அறுபதுகளுக்குப் பிறகு, பல வருடங்கள் வீட்டைப் பிரிந்திருந்ததால், அல்லது "தேசத் துரோக வழக்கு" வாபஸ் பெறப் பட்டதால், பல அமெரிக்க அகதிகள் தாயகம் திரும்பிச் சென்றிருக்கின்றனர். ஆனால், இன்று வரையில், ஒரு கறுப்பின அமெரிக்கர் கூட அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்று வாழ விரும்பவில்லை. அவர்கள் நிரந்தரமாகவே கிழக்கு ஜெர்மனியில் தங்கி விட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஐம்பதுகளில், அறுபதுகளில் இருந்த அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை, இனப் பாகுபாடு மிகவும் மோசமாக இருந்தது. கறுப்பின மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் பிரஜைகளாக இருந்தாலும், அமெரிக்கப் படையில் சேவை செய்தாலும், எந்த உரிமையுமற்று வாழ்ந்தனர். இந்த ஒடுக்குமுறை காரணமாக, கறுப்பின மக்களுக்கு இயல்பாகவே கம்யூனிசத்தின் பால் ஈர்ப்பு இருந்தது. சோவியத் யூனியன் பற்றி நல்லவிதமான அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் கம்யூனிசத்தை பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் இனப்பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது. அவர்களது நிலையில் இருந்து பார்த்தால், அதுவே போதுமானது.

பல கறுப்பின அகதிகள் மத்தியில், (கம்யூனிச) கொள்கை குறித்து அதிக அக்கறையில்லா விட்டாலும், வெள்ளையின மங்கையர் பால் கொண்ட ஈர்ப்பும் அவர்களை கிழக்கு ஜெர்மனிக்கு செல்லத் தூண்டியது. அதாவது, அன்றைய அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபன், வெள்ளையின காதலி வைத்திருப்பதே ஒரு பெரும் போராட்டம். இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு போன்று, அந்த விடயம் அமெரிக்க சமூகத்தில் கொந்தளிப்பை உருவாக்கும். ஆனால், கிழக்கு ஜெர்மனியில் நிலைமை வேறு. அங்கே, ஜெர்மன் மகளிர், கறுப்பின அமெரிக்கர்களை பெரிதும் விரும்பினார்கள். சமூகத்திலும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள். அப்படியான ஒரு வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பனிப்போர் காலத்தில், முதலாளித்துவ நாடுகளும், சோஷலிச நாடுகளும் தமக்கு விருப்பமான அகதிகளை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான அகதிகள் ஒரு வகை. ஜெர்மனியில் நடந்தது போல, வேறு பல நாடுகளிலும் அகதிகள் புலம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரிய கிழக்கு ஐரோப்பிய அகதிகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரிய மேற்கத்திய நாட்டு அகதிகள் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. கிரேக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் முறியடிக்கப் பட்டதும், பல்லாயிரம் கம்யூனிஸ்ட் போராளிகள், தமது குடும்பங்களுடன், அருகில் இருந்த சோஷலிச நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அது ஒரு பெரிய யுத்தம் என்ற படியால், சரித்திர நூல்களில் பதியப் பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில், இது போன்று நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.

"லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்ற  என்ற நூல், விசேடமாக முன்னாள் அமெரிக்கப் படையினரை பற்றி மட்டுமே ஆராய்கின்றது. நேட்டோ படைகளை விட்டோடி, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய அகதிகள், சிலநேரம் சந்தேகத்துடன் பார்க்கப் பட்டாலும், பொதுவாக அவர்களின் சேவை கிழக்கு ஜெர்மனிக்கு பெரிதும் தேவைப் பட்டது. அரசு ஒழுங்கு படுத்தும் பொதுக் கூட்டங்களில், ஊர்வலங்களில், மேற்குலக அகதிகள் முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களை, மேற்கு நோக்கிய பிரச்சார ஊடகங்களில், முழுநேரச் செய்தியாளர்களாக ஈடுபடுத்த முடிந்தது. சராசரி ஜெர்மன் குடிமகனுக்கு கொடுப்பதை விட, அதிக ஊதியம் கொடுத்து சிறப்பாக கவனிக்கப் பட்டார்கள். அதனால், பல மேற்குலக அகதிகளுக்கு சோஷலிச ஜெர்மனி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. தாயகத்தை, உறவினர்களை பிரிந்திருக்கும் சோகம் மட்டுமே அவர்களை வாட்டியது.


மேலதிக தகவல்களுக்கு:

1. நூல் அறிமுகம் (ஆங்கில மொழிக் கட்டுரை) Deserting the wrong way: Why soldiers went East

2. ஜெர்மன் மொழி நூலை வாங்குவதற்குWo ist Lieutenant Adkins? Das Schicksal desertierter Nato-Soldaten in der DDR; http://www.amazon.de/Lieutenant-Adkins-Schicksal-desertierter-Nato-Soldaten/dp/3861537095

3. ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளில் இருந்து தப்பியோடி, கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய Victor Grossman, 1994 ம் ஆண்டு, அவர் மேலான வழக்கு வாபஸ் பெறப் பட்ட பின்னர் அமெரிக்காவுக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். 
Crossing the River: A Memoir of the American Left, the Cold War, and Life in East Germany; அந்த நூலை வாங்குவதற்கு: 
http://www.amazon.com/Crossing-River-Memoir-American-Germany/dp/1558493719/ref=la_B001K8SVQG_1_1?ie=UTF8&qid=1367875620&sr=1-1


***********************


சோஷலிச நாடுகளில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள் பற்றிய வேறு பதிவுகள்:

1. சோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி!
2. வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்

No comments: