Tuesday, March 26, 2013

வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்



ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று நடந்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியை சேர்ந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள், சைப்ரஸ் நாட்டு வங்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.  அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மக்களின் சேமிப்புப் பணத்தில் இருந்து ஒரு தொகை, வெளிநாட்டு கடனை அடைக்க பயன்படுத்தப் படப் போகின்றது. ஒரு சேமிப்பாளர் ஒரு இலட்சம் யூரோக்களுக்கு அதிகமாக பணம் வைப்பிலிட்டு இருந்தால், அந்த தொகையில் பத்து சத வீதம் கழிக்கப் பட வேண்டும். 

சைப்ரஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான Laiki Bank, முதலாளித்துவ பயங்கரவாதிகளால் முற்றாகத் தகர்க்கப் பட்டுள்ளது. இந்த "பயங்கரவாத தாக்குதல்" காரணமாக, ஆயிரக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவி என்ற பெயரில், ஐரோப்பிய ஒன்றிய வழங்கிய கடனை அடைப்பதற்காக, இன்னும் பல்லாயிரம் வேலைகள் பறிக்கப் படவுள்ளன. இதனால், சைப்ரஸ் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப் படுவதுடன், வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரிக்கும். 

மேற்கு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர், தமது சேமிப்புப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் வைப்பிலிட விரும்புவதில்லை. ஆனால், இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ விடுமுறையை கழிப்பதற்கு செல்லும் நேரம், அங்குள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட்டு விட்டு வருவார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "ஐரோப்பிய வங்கிகளில் சேமிப்பு பணத்திற்கு கொடுக்கும் வட்டி வீதம் குறைவு. நமது நாட்டு வங்கிகளில், பல மடங்கு அதிகமான வட்டி கொடுக்கிறார்கள்."  குறைந்த வட்டி கொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் வங்கிகளுக்கும், அதிகளவு வட்டி கொடுக்கும் கீழைத்தேய நாடுகளின் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

மேற்கத்திய நாடுகளில் உள்ள வங்கிகளில், ஏற்கனவே வட்டி வீதம் குறைவாக இருப்பது மட்டுமல்ல, அது பண வீக்கத்திற்கு ஏற்ப அதிகரிப்பதில்லை என்பது ஒரு தீமை தான். அதே நேரத்தில், குறைந்தளவு வட்டி கொடுத்தாலும், வங்கித் துறையும், அரசுகளும் நிலையானவை. பெரும் மூலதனத்தின் நேரடிப் பயன்களை அனுபவிப்பவை. அதனால் எமது பணத்திற்கு ஒரு பாதுகாப்புக் கிடைக்கின்றது. அதற்கு மாறாக, கீழைத்தேய வங்கிகளிடம் என்ன குறைகள் உள்ளன? அண்மையில் சைப்ரசில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்தக் குறைபாட்டை புரிந்து கொள்வோம். 

ஒரு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் தீவு, எழுபதுகளில் நடந்த போர் காரணமாக இரண்டாகப் பிரிந்தது. மூன்றில் ஒரு பங்கு வடக்கு சைப்ரசை, துருக்கிப் படைகள் ஆக்கிரமித்தன. துருக்கி மொழி பேசும் சைப்ரஸ் மக்களுக்கான பாதுகாப்பு பிரதேசமாக, "வடக்கு சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் தனிநாடு போன்று இயங்கி வருகின்றது. ஆனால், அதனை எந்தவொரு உலக நாடும் அங்கீகரிக்கவில்லை. கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும் தெற்கு பகுதி மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சைப்ரஸ் குடியரசு ஆகும். நாங்கள் சைப்ரஸ் என்று சொன்னால், அந்தப் பகுதியைத் தான் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த சைப்ரஸ், மூன்றாமுலக நாடுகள் போன்று வறிய நாடாக இருந்தது. பலர் பிரிட்டனுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து, ஊருக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், துருக்கியுடனான போர் முடிந்த பின்னர், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. சூரிய வெப்பத்தை தேடி வரும், குளிர் வலைய மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த, உல்லாசப் பிரயாணிகளின் வருகை.  
2. வங்கித் துறையின் அபார வளர்ச்சி. கறுப்புப் பண முதலைகள், தமது பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சைப்ரஸ் உதவியது. சாதாரணமாக, சைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டாலே போதும். அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது மட்டுமல்ல, ஒரு நாடு கடந்த கம்பனி அமைப்பதற்கான சட்டங்களும் இலகுவானவை. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, பெரும் வணிக நிறுவனம் ஒன்று அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மிகக் குறைவு. (மேற்கு ஐரோப்பாவில் 30% - 40% கார்ப்பரேட் வரி கட்ட வேண்டும். சைப்ரசில் வெறும் 10% மட்டுமே!) 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், வர்த்தகம் செய்வது என்ற போர்வையின் கீழ், ஊர் மக்களின் பணத்தை சுரண்டி கொழுத்த பணக்கார மாபியா கும்பல், சைப்ரஸ் நாட்டை புகலிடமாக கருதியதில் வியப்பில்லை. அங்கே பெயருக்கு ஒரு கம்பனியை பதிவு செய்து விட்டு, ரஷ்யாவில் கிடைத்த இலாபம் என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை, சைப்ரஸ் கணக்கிலத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்படி மாற்றுவதன் மூலம், வரி ஏய்ப்புச் செய்து இன்னும் நிறைய சம்பாதித்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய பணக்காரர்கள், ரஷ்ய உழைக்கும் மக்களிடம் சுரண்டிய பணத்தை, தனது காலடியில் கொண்டு வந்து கொட்டுவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும். 

ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரஸ் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மீட்பு நிதி அளித்து விட்டு, அந்தக் கடனை அறவிடுவதற்காக, சைப்ரஸ் மக்களின்  பணத்தில் ஒரு பகுதியை, மறைமுகமாக கொள்ளையடித்து விட்டது. ஏற்கனவே இது போன்ற நெருக்கடி வரப் போகின்றது என்று, சைப்ரஸ் ஜனாதிபதி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு எச்சரித்திருக்கிறார். அவர்கள் தமது பணத்துடன், வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். இவ்வாறு கோடிக் கணக்கான பணம், திருட்டுத் தனமாக  சைப்ரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இறுதியில் பாதிக்கப் பட்டது, மத்தியதர வர்க்க சைப்ரஸ் மக்கள் தான். (குவைத் போன்ற வளைகுடா நாடுகளைப் போன்று, சைப்பிரஸ் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒப்பந்த அடிப்படையில் வந்து வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தான் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குகிறார்கள்.)

இப்போது எமது அடிப்படைக் கேள்விக்கு வருவோம். சைப்ரஸ் நாட்டின் பொருளாதார பிரச்சினை எங்கே, எப்படி ஆரம்பமாகியது ? நான்கு வருடங்களுக்கு முன்னர், கிரேக்க நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அனைவருக்கும் நினைவிருக்கலாம். கிரேக்க பெரும்பான்மையினரைக் கொண்ட சைப்ரஸ் நாட்டவர்கள், தீவிரமான கிரேக்க தேசியவாதிகள். நீண்ட காலமாக "தாய் நாடான" கிரேக்கத்துடன் சேர்ந்திருக்க விரும்பி வந்தனர். இன்றைக்கும், சைப்ரஸ் தேசியக் கொடியுடன், கிரேக்க கொடியும் பறப்பதை, அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் அவதானித்திருக்கலாம். சைப்ரஸ் நாட்டு வங்கிகளும், கோடீஸ்வரர்களும், தமது "தாய் நாடான" கிரேக்கத்தில் முதலிட்டு வந்தனர். 

கிரேக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்த பின்னர், "தொப்புள்கொடி உறவுகளை" காப்பாற்றும் நோக்கில், பல கோடி பெறுமதியான அரச கடன் பத்திரங்களை சைப்ரஸ் வங்கிகள் வாங்கின. ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு வங்குரோத்தான நிலையை அடைந்தது. "ஐயா, உங்கள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் கடனில் ஒரு பகுதியை இரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் ..." என்று தொப்புள் கொடி உறவுகளிடம் கையை விரித்தது. அதனால் வந்தது கேடு. பெருமளவு சைப்ரஸ் நிதி, கிரேக்கத்தில் முடங்கி விட்டதால், சைப்ரஸ் வங்கித் துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆனால், அந்த உண்மையை  தமது வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியுமா? 

வங்கியில் நாம்  போட்டிருக்கும் சேமிப்புப் பணத்திற்கு, "வட்டி எங்கிருந்து வருகின்றது?" என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?  ஆகாயத்தில் இருந்து கடவுள் அள்ளிக் கொட்டுகிறாரா ? "பக்தர்களே, உங்கள் வீடுகளில் லட்சுமி படத்தை வைத்து, தினந் தோறும் பூஜித்து வந்தால், லட்சுமி கையில் இருந்து பணம் கொட்டுவது போல, வீட்டிலும் பணம் கொட்டும்..." என்று ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றுவது போல, வங்கிகள் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், எமது முதலீட்டுக்கு கிடைக்கும் இலாபப் பங்கும், கடனாக கொடுத்த தொகைக்கு கிடைக்கும் வட்டியும், யாரோ ஒருவரது உழைப்பில் இருந்து சுரண்டப் பட்ட பணம் தான். அந்த பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து விட்டால், வாத்தும் செத்து விடும், பொன் முட்டையும்  கிடைக்காது. 

வங்கிகள் நமது சேமிப்புப் பணத்தை, அப்படியே பத்திரமாக பூட்டி வைப்பதில்லை. நமது பணத்தை எடுத்து, இன்னொருவருக்கு கடனாக கொடுக்கின்றன. அந்தக் கடனாளி, வங்கி நிர்ணயிக்கும் வட்டியை கட்டி வருகிறார். கடனாளியிடம் வங்கி அறவிடும் வட்டியானது, நமது சேமிப்பு பணத்திற்கு வங்கி கொடுக்கும் வட்டியை விட அதிகமாகும். நமது சேமிப்புக்கு கொடுக்கும் வட்டியை விட, பல மடங்கு வருமானம் வங்கிக்கு கிடைக்கிறது. தற்போது கடனாளியான கிரேக்கம் கையை விரித்து விட்டதால், சைப்ரஸ் வங்கிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், மறுபக்கத்தில் சேமிப்பாளர்களுக்கு மாதாமாதம் வட்டி கட்டியாக வேண்டிய நிலைமை. அதாவது வங்கியின் கணக்குப் புத்தகத்தில், ஒரு பக்கம் "மைனஸ்", இன்னொரு பக்கமும் "மைனஸ்" என்று இழப்பு ஏற்படுகின்றது. அதுவே சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. 

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி பற்றிய அறிவிப்பு வெளியானவுடனே,  சைப்ரஸ் நாட்டு வங்கிகள், குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. அதன் அர்த்தம், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, வங்கி அட்டையை பயன்படுத்தி கடையில் எதையும் வாங்க முடியாது. நாணயத் தாள்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இன்டர்நெட் மூலமான பணப்பரிமாற்றமும் தடுக்கப் பட்டது. "வளர்ச்சி அடைந்த" மேற்கத்திய நாடுகளில், பெரும்பாலான மக்கள் எந்நேரமும் பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதில்லை. எல்லா இடங்களிலும், ATM மெஷின்களும், வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியும் இருப்பதால், பணம் வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

"பணத்தையே கண்ணால் காணாத அளவுக்கு நாகரிக வளர்ச்சி கண்ட சமூகத்தில்", ஒரு வாரத்திற்கு வங்கிகள் எதுவும் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்து விட்டால், அன்றாட உணவிற்கே பணமின்றி கஷ்டப் பட வேண்டியிருக்கும். அந்த திகில் காட்சிகளை சைப்ரஸ் மக்கள் நேரடியாக அனுபவித்தார்கள். நல்ல வேளையாக, தினசரி குறிப்பிட்டளவு பணம் மட்டும் எடுக்கலாம் என்று மட்டுப் படுத்தப் பட்டது. அதுவும் இல்லையென்றால்? "நான் இத்தனை காலமும் முதலாளித்துவத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தை குறை சொல்பவர்களை எதிர்த்து திட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நானும் அவர்களைப் போல குறை கூறத் தொடங்கி விட்டேன்..." என்று பல சைப்ரஸ் பிரஜைகள் தமது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்க்கின்றனர்.  

வங்கிகள் திறக்கப் பட்டால், பொதுமக்கள் வங்கியில் போட்டிருக்கும் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நிலவியது. அது உண்மை தான். வங்கிகள் மீது நம்பிக்கையிழந்த பொதுமக்கள், தமது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் வழித்து துடைத்து எடுத்துக் கொண்டு, தப்பினோம், பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடிப்போகத் தான் நினைப்பார்கள். பொது மக்கள் தமது பணத்தை மீளப்பெற்றுக் கொண்டால், தவிர்க்கவியலாது வங்கிகள் திவாலாகும். பொது மக்களின் சேமிப்புத் தொகையில் பத்து வீதத்தை கழித்து, வெளிநாட்டு கடன்களை அடைக்கும் திட்டத்திற்கு, சைப்ரஸ் மக்கள் எதிர்த்து வந்தார்கள். இவ்வளவு காலமும் சொகுசாக வாழ்ந்த மக்கள், தாமாகவே வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  மக்களின் எதிர்ப்பலையை கண்டு அஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. IMF, ஐரோப்பிய வங்கிகளின் திட்டத்தினை, ஒரு ஐரோப்பிய நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக எதிர்த்துள்ளமை இதுவே முதல் தடவை. 

துபாய் போன்று, சைப்ரசும் வீட்டுமனைகள் கட்டி விற்று வந்தது. அதுவும் சைப்ரசின் தேசியப் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. சைப்பிரசில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கியது. அதன் மூலம், சில வருடங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில், குறைந்தது முப்பதாயிரம் பணக்கார ரஷ்யர்கள் சைப்பிரசில் வீடுகளை வாங்கியுள்ளனர். சைப்ரசில் ஏராளமான ரஷ்ய பணக்காரர்கள் வசிப்பதால், ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் நிதியுதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், ரஷ்யாவோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு தட்டிக் கழித்து விட்டது.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், சைப்ரஸ் என்று அடுத்தடுத்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப் பட்டுள்ளன. அது போன்று, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற "பணக்கார" ஐரோப்பிய நாடுகளும், எதிர்காலத்தில் பாதிக்கப் படுமா?  இன்றைய நிலையில், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏன் அப்படி? ஏனென்றால், இவற்றை  "Triple - A நாடுகள்" என்று பொருளாதார நிபுணர்கள் வகைப் படுத்தி உள்ளனர். அதன் அர்த்தம், இந்த நாடுகள் எந்த நிபந்தனையுமின்றி கடனுதவி பெறலாம். அதாவது, முதலீட்டாளர்கள் இந்த நாட்டு பொருளாதாரம் பாதுகாப்பானது என்று இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நெருக்கடியினால் பாதிக்கப் பட்ட நாடுகள் மீது அந்த நம்பிக்கை கிடையாது. அதனால், அவை கடன் கேட்டாலும் பல கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகு தான் பெற்றுக் கொள்கின்றன. 

"மன்னிக்கவும், எல்லாமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகள் அல்லவா? இப்படி எல்லாம் பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா?" ஆம், முதலாளித்துவ பொருளாதார விதிகளின் படி அது நியாயமானது. இதனை புரிந்து கொள்ள கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலை படிக்க வேண்டும். உலகில் சில நாடுகளில் மட்டுமே, மூலதனம் குவிந்துள்ளது. சர்வதேச மூலதனம் எந்த நாடுகளில் உள்ளதோ, அந்த நாடுகள் மட்டுமே உலகில் பலமானவை. "அதிக பலசாலியே வெல்வான்" என்பது அனைத்து முதலாளித்துவ ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்ட தத்துவம் ஆகும். இதையே ஜோர்ஜ் ஆர்வெல், விலங்குப் பண்ணை என்ற நாவலில் அழகாக எழுதி இருந்தார். "அடிப்படையில் எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால், சில விலங்குகள்  பிற விலங்குகளை விட அதிகம் சமமானவை." ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் அனைத்து நாடுகளும் சமமானவை என்று கடதாசியில் எழுதி உள்ளது. ஆனால், நடைமுறையில் ஜெர்மனி போன்ற பெருமளவு மூலதனத்தை திரட்டியுள்ள நாடுகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன."

No comments: