[இலங்கை என்ற இழந்த சொர்க்கம்] (பகுதி - 3)
கொழும்பு நகரிற்கு வடக்கே, விமானநிலையம் போகும் வழியில் அமைந்துள்ளது வத்தளை. அது கொழும்பு மாநகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. கொழும்பில் வீடு வாங்குவதோ, அன்றில் வாடகைக்கு எடுப்பதோ அதிக செலவு பிடிக்கும் விடயம். அதற்குப் பதிலாக வத்தளையில் பெரிய வீடு கட்டுவதற்கு போதுமான இடம் மலிவாகக் கிடைக்கும்.
போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் வத்தளையில் வந்து குடியேறி விட்டார்கள். அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் வசதியான வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். இதனால் வத்தளை பிரதேசத்தின் சனத்தொகை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. கடந்த இருபாண்டுகளில் புதிதாக வந்து குடியேறிய தமிழர்களை விட, குறைந்தது நூறு வருடங்களாக வாழும் தமிழ்க் குடும்பங்களும் உண்டு. "வத்தளையின் பூர்வகுடிகளான" இவர்களில் ஒரு பகுதியினரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்று கூறத் தயங்குவார்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தம்மை "கிறிஸ்தவ இனத்தவர்கள்" என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
லண்டனிலும், கொழும்பிலும் "கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்த தமிழர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான உரையாடல், "வழக்கமான" தமிழர்களுடன் உரையாடுவதைப் போன்று அமைந்திருக்கவில்லை. லண்டனில் வதியும் கிறிஸ்தவ இனத்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ஏதாவதொரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக, அவர்களது இருப்பு பாதிக்கப்பட்டது. குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து விட்டார்கள். "இலங்கை சிங்களவர்களுக்கான நாடாகி விட்டது. அதிலும் பௌத்த சிங்களவர்கள் மட்டுமே அங்கே வாழலாம்...." இவ்வாறு சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். பௌத்த-சிங்கள பேரினவாதத்தை கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் யாரும் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பது வியப்பை அளித்தது. சிங்கள அரசை எதிரியாக பார்த்தார்கள், அதே நேரம் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்களில் யாரும் பிரிவினையை ஆதரிக்கவில்லை.
பௌத்த சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும், புலிகளையும் ஏற்காத, இந்த வகை தமிழர்களின் அரசியல் பின்னணி என்ன? கொழும்பில் வத்தளையில் இன்னமும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ தமிழர்களிடம் அதற்கு விளக்கம் கிடைத்தது. "முதன்முதலாக 83 கலவரத்தின் போது எமது வீடும் எரிக்கப்பட்டது... வத்தளையில் கிறிஸ்தவ குடியிருப்புகளை காடையர்கள் தாக்க மாட்டார்கள் என்று நம்பியிருந்தோம்.... ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் என்று ஒரு போதும் காட்டிக் கொண்டதில்லை..." அவர்களுடன் உரையாடிய பொழுது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
ஆங்கிலேய காலனிய காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொழும்பில் குடியேறியவர்கள். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து பரம்பரை கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் தம்மை கிறிஸ்தவ இனம் என்று அழைப்பதையே விரும்புகின்றனர். அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக கருதலாம் என்றால், இதுவும் சாத்தியமே. இலங்கையில் கிறிஸ்தவ இன உருவாக்கத்திற்கு பல காரணிகள் உண்டு. காலனிய காலகட்டத்தில், சமூகப் படிநிலையில் வெள்ளையர்கள் மேலே இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், கலப்பின பறங்கியரும், உள்ளூர் கிறிஸ்தவர்களும் இருந்தனர். அரச பதவிகளும், சலுகைகளும் அவர்களுக்கு கிடைத்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்துக்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் முன்னுக்கு வருவது சிரமமமான விடயமாக இருந்தது. அந்த சமூகங்களில் நிலப்பிரபுக்களும், வியாபாரத்தில் ஈடுபட்டோரும் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கிறிஸ்தவ தமிழர்களின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தற்போதும் ஆங்கிலேயரின் பொற்காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே. முதலாளித்துவ, மேற்குலக சார்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் காலங்களில் தமது நலன்கள் பாதுகாக்கப் படும் என்று நம்புகின்றனர். ஆனால், கொழும்பை அதிகம் பாதித்த, 77 அல்லது 83 கலவரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையில் நடத்தப்பட்டவை. நான் இது பற்றிய பேச்சை எடுத்த பொழுது, அதனை அவர்கள் கேட்க விரும்பவில்லை. கதையை வேறு திசைக்கு திருப்பினார்கள்.
நீர்கொழும்பில் இருந்து மொரட்டுவ வரையிலான, கொழும்பை உள்ளடக்கிய மேல்மாகாணம் "கிறிஸ்தவ பெல்ட்" என்று அழைக்கப் படுகின்றது. தேர்தல் வரும் காலங்களில், இந்தப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும். இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாகவுள்ள மாகாணமும் அது தான். ஆகவே, தமிழ் கிறிஸ்தவர்களை விட, சிங்கள கிறிஸ்தவர்களே அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். இலங்கைக் கிறிஸ்தவர்கள், சிங்களவர், தமிழர், என்று மொழி அடிப்படையில் பிரிந்தனர். அதாவது சிங்கள-கிறிஸ்தவ மேட்டுக்குடியினர், பௌத்த சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, சிங்கள பேரினவாத கருத்தியலை உருவாக்கினார்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் மேலைத்தேய விசுவாசம் காரணமாக தேசிய அரசியலை புறக்கணித்தார்கள். தமிழ்த் தேசியம், மிகத் தாமதாகத் தான், இலங்கை அரசியல் அரங்கில் நுழைந்தது.
வத்தளையில் "தமிழ் பேசும் கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்தவர்களின் வீட்டில் விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தேன். விருந்து முடிந்த பின்னர் சாவகாசமாக உரையாடும் பொழுது, இனப்பிரச்சினை குறித்து அவர்கள் கருத்தை அறிய விரும்பினேன்.
"வேலை வேண்டுமானால் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதுவே பிரச்சினையின் மூலகாரணம்." என்றார்கள்.
"சிங்களத்திற்கு பதிலாக, அல்லது ஈழப் பிரதேசத்திலாவது தமிழை ஆட்சி மொழியாக்கினால் பிரச்சினை தீர்ந்திருக்குமா?" என்று கேட்டேன்.
"இல்லை, இல்லை... முன்பிருந்ததைப் போல ஆங்கிலமே அரச கரும மொழியாக தொடர்ந்திருக்க வேண்டும்." என்று பதிலளித்தார்கள்.
ஈழம் கோரப்படும் பிரதேசங்களில், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழே அலுவலக அல்லது கல்வி மொழியாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். தமிழில் படிப்பதையும், வேலை செய்வதையும் தரக்குறைவாக பார்ப்பது, அவர்களது பேச்சில் தெரிந்தது. இவர்கள் தமிழீழம் கேட்டால், ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக்கி இருப்பார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். "ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம்" என்று குறிப்பிடுமளவிற்கு இலக்கண சுத்தமானது. "சிறு வயதில் தப்பித் தவறி தமிழில் பேசினால் அம்மா அடிப்பார் ...." என்று கூறினார், தனியார் நிறுவனம் ஒன்றில் காரியதரிசியாக பணியாற்றும் பெண். ஐரோப்பாவில் எனது வேலை குறித்தும் விசாரித்தார்கள். "நெதர்லாந்திலும் அலுவலகங்களில் ஆங்கில மொழி தானே பாவிப்பார்கள்?" என்று அப்பாவித் தனமாக என்னைக் கேட்டார். அவர்களது அரசியல் பாதை தமிழ்த் தேசியமல்ல, மாறாக ஆங்கில சர்வதேசியம், என்பதை தெளிவு படுத்தினார்கள். அவர்களின் குடும்பத்தில் பலர் கலப்புத் திருமணம் செய்திருந்தனர். சிங்கள முதலியார்கள், இஸ்லாமிய மூர்கள் ஆகிய சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களுடன் தான் உறவு கொண்டாடினார்கள். அவர்களுக்கு சாதியோ, அன்றில் இனமோ முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் பூர்ஷுவாத் தன்மை கொண்ட வர்க்க மனப்பான்மை காணப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, வர்க்கம் என்ற சொல்லையே கேள்விப் படாதது போல காட்டிக் கொண்டார்கள்.
கொழும்பின் மத்திய பகுதியை அண்மித்து தான் பணக்கார வட்டாரமான கறுவாத் தோட்டம் இருக்கிறது. இலங்கையின் பெரும்புள்ளிகளும், அரசியல் தலைவர்களும் தமது ஆடம்பர வாசஸ்தலங்களை அங்கே அமைத்துள்ளனர். மேட்டுக்குடியினர் வாழும் பிரதேசம் என்பதால், அதியுயர் பாதுகாப்பு வலையமாக, எப்போதும் போலிஸ் காவல் இருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு, சில மாத காலம் அந்த பகுதிக்கு அருகில் வசித்திருக்கிறேன். "(காலஞ் சென்ற) ஜனாதிபதி ஜே.ஆரின் வாசஸ்தலம் அருகில் இருப்பதால், நாம் பாதுகாப்பாக வாழலாம்," என்று புதிதாக வருபவர்களிடம் கூறி தம்பட்டம் அடிப்போம். கறுவாத் தோட்டம் பகுதி முடியும் இடத்தில் பொரளை ஆரம்பமாகின்றது. பொரளை சந்தியை தொட்டுச் செல்லும் சாலையின் இரண்டு வர்க்கங்களை பிரிப்பதை நேரடியாகக் காணலாம். சாலையின் ஒரு பக்கம் மேட்டுக்குடியினரின் ஆடம்பர வீடுகள், மறுபக்கம் அடித்தட்டு மக்களின் சேரிகள். இரண்டுக்கும் இடையிலான தூரம் அதிகமில்லை. கொழும்பின் வேறு பிரதேசங்களை விட, பொரளையில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு ஆதரவு அதிகம். அந்த வட்டாரத்தில் பெரும்பான்மையானோர் உழைக்கும் மக்கள். பொரளையில் தான் பிரசித்தி பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ளது. கொழும்பின் பெரிய சுடுகாடான "கனத்த மயானம்" இருப்பதும் அந்தப் பிரதேசத்தில் தான்.
உதாரணத்திற்கு, இலங்கை ஒரு லத்தீன் அமெரிக்க நாடாகவிருந்தால், ஏழைகளும், பணக்காரர்களும் இவ்வாறு அருகருகே வசிப்பது, வர்க்கப் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கும். இலங்கையில் அவ்வாறு எதுவும் நடக்காததற்கு காரணம், சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மனதில் ஊறியுள்ள இனவெறி. இலங்கை அரசியல்வாதிகள், தீர்க்கதரிசனத்துடன் இனவாதத் தீயை மூட்டி விட்டிருந்தார்கள். பொரளையில் வாழும் உழைக்கும் மக்களின் வழக்கமான மேட்டுக்குடியினர் மீதான கோபத்தை, தமிழர்கள் மீது திருப்பி விட்டார்கள். இனக்கலவரம் வெடிக்கும் காலங்களில், பொரளை சேரியை சேர்ந்த காடையர்கள் சில கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தமிழ்க் குடியிருப்புகளை தாக்குவார்கள். கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணம் கிடைப்பது தான் கஷ்டம். அதனை வழிநடத்துவது இலகு.
கொழும்பு நகரில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற விபரத்தை, தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரே எடுத்து தருவார். அந்தப் பட்டியல் கட்சிக்கு விசுவாசமான தாதாக்களுக்கு கைமாற்றப்படும். தாதாக்கள் தமது அடியாட்படையுடன் சென்று தமிழர்களைத் தாக்குவார்கள். கண்ணில் கண்ட தமிழர்களை வெட்டிக் கொன்று, பெண்களை மானபங்கப் படுத்தி, வீடுகளை சூறையாடும் படலம் ஒரு சில நாட்கள் நீடிக்கும். அந்தக் கொடுமைகளை போலிசும் கண்டு கொள்ளாது. இந்தியாவில், குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும் இதே பாணியில் தான் நடைபெற்றது. கொழும்பு கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.
83 ம் ஆண்டு ஜூலை மாதம், கனத்த மயானத்தில் 13 இராணுவவீரர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவவீரர்கள் அவர்கள். அது ஒரு அரசுக்கெதிரான ஆயுதக்குழுவின் செயலாக இருந்த போதிலும், அனைத்து தமிழர்கள் மீதும் பழி விழுந்தது. சிங்களவர்களின் அனுதாபத்தை தமிழர்கள் மேலான துவேஷமாக மாற்றியதில், ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு கணிசமான பங்குண்டு. கனத்த மயானத்தில் இருந்து கிளம்பிய காடையர் கூட்டம், அருகில் இருந்த நாரஹென்பிட்டிய தொகுதியை முதலில் தாக்கியது. நாரஹென்பிட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், அருகிலும் நிறையத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, அரசினால் ஒதுக்கப் பட்டிருந்தன.
அவ்வாறான இடத்தில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர் என்றால், மற்ற இடங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. பொரளையில் கடும்பாதுகாப்புக்கு பெயர் போன வெலிக்கடை சிறைச்சாலையில், தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது. தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் சம்பந்தப்பட்ட, பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நபர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒரு வகையில், அரசே அந்தக் கொலைகளை திட்டமிட்டிருக்க வாய்ப்புண்டு. மரணதண்டனை நிறைவேற்ற முடியாத "ஜனநாயக அரசு", சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்த்துக் கட்டியிருக்கலாம். அர்ஜுனின் சினிமாப் படங்களில், தீவிரவாத வில்லன்களை நீதிக்கு புறம்பாக சுட்டுக் கொல்லும் தத்துவம், வெலிக்கடையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கலாம்.
யாழ்ப்பாணத்தில், எனது பெற்றோரின் ஊரைச் சேர்ந்த பணக்கார குடும்பம் ஒன்றும் அந்தத் தொகுதியில் வசித்து வந்தது. கலவரத்தின் போது, அந்தக் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைச் செய்தது வேறு யாருமல்ல. அந்த வீட்டில் வேலை செய்த சிங்கள பணியாளும், அவனது நண்பர்களும். பல சிங்கள அடித்தட்டு வர்க்க மக்கள், தமிழர்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து செல்வம் சேர்த்துள்ளனர். சிங்கள ஏழைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழும் அபாயத்தை, சிங்கள மேட்டுக்குடி வர்க்கம் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது. "தமிழர்கள் எல்லோரும் செல்வந்தர்கள். அதனால் தான் சிங்களவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர். தமிழர்கள் எல்லோரும் பதவிகளில் இருக்கின்றனர். அதனால் தான் சிங்களவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை." இத்தகைய தவறான பிரச்சாரங்கள், கல்வியறிவற்ற சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இலகுவாக ஈடுபட்டது. தமிழ்ப் பிரதேசங்களிலும் அது போன்ற மனப்பான்மை நிலவுவதை பிற்காலத்தில் தேர்ந்து கொண்டேன். "அரசு சிங்களவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது... அவர்களில் ஏழைகளே கிடையாது...." என்பன போன்ற தவறான கருத்துகளை தமிழ்த் தேசியவாதிகள் பரப்பி விட்டிருந்தனர்.
கொழும்பு நகரில் தமிழ்த் தேசிய கருத்தியல் கருக் கொண்ட, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப்படும், கொழும்பு நகரின் வெள்ளவத்தை தொகுதிக்குள் அடுத்து நுழைவோம். வெள்ளவத்தையில் அழகிய கடற்கரையோரம், சொகுசு பங்களாவில் வாழும் பாக்கியம் கிட்டியவர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது அதிகம் சம்பாதிப்போருக்கு மட்டுமே இயலுமான ஒன்று. ஆரம்ப காலங்களில் "பரம்பரைப் பணக்காரர்கள்" மட்டுமே வாழ்ந்து வந்தனர். போருக்குப் பின்னரான இடப்பெயர்வு காரணமாக, வெளிநாட்டுக் காசில் திடீர்ப் பணக்காரர் ஆனவர்களும் அங்கே குடியேறினார்கள். தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தோரும் வெள்ளவத்தையை "இரண்டாவது தாயகமாக்கிக்" கொண்டுள்ளனர். அதனால் தான் அதற்கு குட்டி யாழ்ப்பாணம் என்று பெயரிட்டனர்.
யாழ்ப்பாணத் தமிழர்களுடன், அவர்களது தனித்துவமான கலாச்சாரமும் புலம்பெயர்ந்து விட்டது. யாழ் நகரில் தெரு மூலைக்கு ஒன்றாக காணப்படும் "டியூட்டரிகளும்" வெள்ளவத்தையில் பெருகி விட்டன. பனங்கள்ளில் இருந்து புழுக்கொடியல் வரை இறக்குமதியாகின. எனது வாழ்நாளில் கண்ட மாற்றங்கள் காரணமாக, ஒரு கேள்வி என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. இனக்கலவரங்கள் யாவும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நோக்கம் கொண்டவை. முப்பதாண்டுகளாக நடந்த ஈழப்போர், தமிழர்கள் பிரிந்து செல்வதை வலியுறுத்திக் கொண்டிருந்தது. முரண்நகையாக, ஈழப்போரின் பின்னர் பெருந்தொகையான தமிழர்கள் கொழும்பு நகரில் வந்து குடியேறிக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கிருந்த படியே "தமிழீழமே தீர்வு!" என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அப்போதே நாடு கடந்த தமிழீழம் என்ற கருத்தியல் தோன்றி விட்டது!
(முற்றும்)
தொடரின் முன்னைய பதிவுகள்:
1 இலங்கை என்ற இழந்த சொர்க்கம்
2 இனம் மாறும் தமிழர்கள் !

5 comments:
இதே மனநிலையில் தான் தமிழக இந்திய கிருஸ்தவர்களும் உள்ளனர். ஜெப வழிபாடு முறை, வழி நடத்தும் தலைமை கிருஸ்தவ வாழ்கையை பாதிக்கின்றது.
இல்லை நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு தமிழர் என்ற உணர்வு தான் முதலும் அதீத மாகவும் இருக்கிறது.
நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு கிறிஸ்தவ உணர்வு இருக்கிறது தான் ஆனால் அதில் வெறியில்லை . ஒரளவு பற்று தான் .ஆனால் அதை விட எங்களுக்கு தமிழர் என்ற பற்றுத்தான் அதீதமாகவும் கூடுதலாகவும் உள்ளது.

mari bruno,
கிறிஸ்தவர்கள் என்றாலும், தமிழர்கள் என்றாலும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனிதர்கள் வித்தியாசமானவர்கள். ஒரே கலாச்சாரத்திற்குள் பல உப கலாச்சாரங்கள் இருக்கலாம். அது இயற்கை நியதி.
Post a Comment