Thursday, September 23, 2010

தாஜிகிஸ்தான் தாக்குதல்கள் : ஒரு செய்தி அறிக்கை

தாஜிகிஸ்தான் படையினர் சென்ற வாகனத் தொடரணி மீது நடந்த அதிரடித் தாக்குதலில் நாற்பது சிப்பாய்கள் பலி. 19 செப்டம்பர் 2010 , இந்த சம்பவம் நடந்துள்ளது. (பார்க்க: Soldiers die in Tajikistan ambush)ராஷ்ட் பள்ளத்தாக்கில் போர் நடவடிக்கைக்காக துருப்புகளை காவிச் சென்ற வாகனம் ஒன்று, மறைந்திருந்த போராளிகளால் தாக்கப்பட்டது. கிரனேட், சிறு இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் குன்றுகள் மேலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் நிலை குலைந்த இராணுவம் சிதறி ஓடியது. வாகனத் தொடரணியில் 75 படையினர் இருந்துள்ளனர். தாஜிகிஸ்தான் மேற்கில் உள்ள தலைநகரமான டுஷான்பெயில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ராஷ்ட் பள்ளத்தாக்கு பகுதி, பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் புகலிடமாக உள்ளது. அயல்நாடான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய இயக்கம் ( Islamic Movement of Uzbekistan ) தாக்குதல் நடத்தியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் துஷான்பே சிறைச்சாலை உடைக்கப்பட்டது. அங்கே தடுத்து வைத்திருந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 25 சந்தேகநபர்கள் சிறை உடைப்பின் போது தப்பி ஓடி விட்டனர். அவர்கள் அனைவரும் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ராஷ்ட் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று விட்டனர். தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்காகத் தான் அங்கு இராணுவம் அனுப்பப்பட்டது.

சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற தாஜிகிஸ்தானில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. சோவியத் உடைவின் பின்னரும், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரமுகர்களே ஆட்சிக் கட்டிலில் அமர்திருந்தனர். எதிர்க்கட்சிகளும், இஸ்லாமியக் குழுக்களும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தன. பல வருடங்களாக நீடித்த போரின் முடிவில் யாரும் வெல்லவில்லை. இறுதியில் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தால் போரில் ஈடுபட்டவர்கள் சமரசத்திற்கு வந்தார்கள். 1997 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. போராளிக் குழுக்கள் ஆயுதங்கை களைந்து விட்டு அரசியல் அமைப்புகளாக மாறி விட்டன. Islamic Revival Party of Tajikistan (IRPT), United Tajik Opposition (UTO), என்பன அவ்வாறு ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பிய அமைப்புகள் ஆகும். (பார்க்க:Civil war in Tajikistan)

மலைவாழ் மக்களான தாஜிக்கியர்கள் பேசும் மொழி (ஈரான்) பார்சி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. தாஜிகியர்கள் தோற்றத்தில் அயலில் வாழும் துருக்கிய இனங்களில் இருந்து மாறுபட்ட உருவத் தோற்றம் கொண்டவர்கள். தாஜிகிஸ்தான் சோவியத் காலத்தில் கம்யூனிச நாடாக இருந்தது. சோவியத் குடியரசில், இஸ்லாமிய மத நிறுவனங்கள் அடக்கப்பட்டன. தாஜிக் முஸ்லிம்கள் சூபிசம் எனப்படும் ஆன்மீகத்தை தேடும் இஸ்லாமிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சூபிசத்தை பின்பற்றுபவர்கள் மதக் கட்டுப்பாடுகளை கொண்டிராதவர்கள். இருப்பினும் தொன்னூறுகளில் மத நிறுவனங்கள் புதிதாக பெற்ற சுதந்திரத்தால் மீள் உயிர்த்த மொழுது, சூபி இஸ்லாம் பெரிதாக பரவவில்லை. சூபிசம் முழுக்க முழுக்க உள்நாட்டு மத நம்பிக்கையாளர்களின் நிதியில் இயங்கி வந்தது. முன்னாள் மத்திய ஆசிய சோவியத் குடியரசுகளில் மிகவும் ஏழைகளான தாஜிக்கியர்களிடம் மதம் வளர்க்க பணம் இல்லை. ஆனாலும் தாஜிகிஸ்தானில் புதிய மசூதிகள் கட்டப்பட்டன. இஸ்லாமிய பிரச்சாரகர்கள் அதிகரித்தார்கள். அவர்களிடம் தாரளமாக பணம் புழங்கியது. சவூதி அரேபியா பணக்கார இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் இருந்து அந்தப் பணம் வந்தது.

சவூதிகள் தமது இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்டப்படுகிறார்களே என்று, பரிதாபப்பட்டு பணம் கொடுக்கவில்லை. கடும்போக்கு வஹாபிச இஸ்லாமிய பிரிவுக்கு ஆதரவாளர்களை திரட்டுவதே அவர்கள் நோக்கம். சவூதிகள் எதிர்பார்த்த படியே, தாஜிகிஸ்தானில் ஏராளமான முஸ்லிம்கள் வாஹபிச பிரிவை தழுவிக் கொண்டனர். இன்று இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் யாவும் வஹாபிச இஸ்லாமை பின்பற்றுகின்றன. இவற்றின் உறுப்பினர்கள் இராணுவ பயிற்சிக்காக ஆப்கானிஸ்தான் சென்று வருகின்றனர். தாலிபான், அல்கைதா போன்றவர்களுடன் நட்புறவு பூண்ட Islamic Movement of Uzbekistan (IMU), மத்திய ஆசியாவில் இஸ்லாமிய குடியரசு அமைக்க போராடி வருகின்றது. இந்த இயக்கத்தின் பூர்வீகம் உஸ்பெகிஸ்தான் என்ற போதிலும், அயலில் உள்ள குடியரசுகளிலும் கிளை பரப்பி வருகின்றது.

தாஜிகிஸ்தானில் நடந்த தாக்குதல் குறித்து உங்களில் பலர் இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகின்றீர்கள். உலக ஊடகங்களில் இந்த செய்தி வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதே மாதிரியான தாக்குதல், ஆப்கானிஸ்தானிலோ, அல்லது பாகிஸ்தானிலோ நடந்தால் முந்திக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள், தாஜிகிஸ்தானை கண்டுகொள்ளவில்லை. தாஜிகிஸ்தான் இரு பெறும் வல்லரசுகளான ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையில் சிக்கியுள்ள பிரதேசம் ஆகும். ஒரே மொழி பேசும் சகோதர்கள் என்று கூறிக் கொண்டு, ஈரானும் அடிக்கடி மூக்கை நுளைக்கின்றது. போதாக்குறைக்கு தெற்கே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன. தாஜிகிஸ்தான் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. மேலும், எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களை கொண்ட மத்திய ஆசியாவின் ஒரு பகுதியாகும். இவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசுப் போட்டி, சில நேரம் பனிப்போராகவும், சில நேரம் பதிலிப்போராகவும் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவும், இஸ்லாமிய தீவிரவாதமும், அமெரிக்காவையும், மேற்குலகையும் இலக்கு வைத்திருப்பதாக, ஊடகங்கள் எம்மை மூளைச் சலவை செய்கின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை வேறெங்கோ இருக்கின்றது. இன்று ஊடகங்களால் அறிவிக்கப்படாத இரகசிய யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது.

6 comments:

Anonymous said...

//அல்கைதாவும், இஸ்லாமிய தீவிரவாதமும், அமெரிக்காவையும், மேற்குலகையும் இலக்கு வைத்திருப்பதாக, ஊடகங்கள் எம்மை மூளைச் சலவை செய்கின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை வேறெங்கோ இருக்கின்றது.//

சற்று விளக்குவீர்களா?

Kalaiyarasan said...

இது குறித்து பின்னர் விரிவாக எழுத வேண்டும் என்பதற்காக சுருக்கமாக குறிப்பிட்டேன். சீனா வின் கிழக்குப் பகுதி முதல் மத்திய ஆசியா ஊடாக ரஷ்யாவின் தென் பகுதி வரை இஸ்லாமிய தீவிரவாத அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட பகுதிகள். மேற்கில் இடம்பெறும் சிறு சிறு பயங்கரவாத சம்பவங்களோடு ஒப்பிடும் போது, அங்கே நடைபெறும் யுத்தமானது மிகக் கொடியது. ஆனால் இது குறித்து சர்வதேச ஊடகங்கள் அக்கறை கொள்வதில்லை. மேற்குலக நாடுகளில் குண்டு வெடித்து ஒருவர் காயம் என்றாலும் அது ஒரு பெரிய செய்தியாகி விடும். ஆனால் ஆசியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் யுத்தத்தால் மடிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

Kalaiyarasan said...

மேலும் இந்தப் பிரதேசங்களில் நடைபெறும் ஜிகாத் போராட்டத்திற்கு மேற்குலக நாடுகள் தார்மீக ஆதரவு வழங்கி வருகின்றன. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு மேற்குலகில் அரசியல் தஞ்சம் வழங்கப் படுகின்றது. ஊடகங்கள் ஜிகாதிகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைக்கின்றன. உண்மையில் மேற்குலகின் மீதான அல்கைதா அச்சுறுத்தல், உலக மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக புனையப்பட்ட கதை.

Anonymous said...

//இந்தப் பிரதேசங்களில் நடைபெறும் ஜிகாத் போராட்டத்திற்கு மேற்குலக நாடுகள் தார்மீக ஆதரவு வழங்கி வருகின்றன. //

இதற்கான பின்னனி என்ன? இதனால் மேற்குலகுக்கு இலாபம் இல்லையே.

//உண்மையில் மேற்குலகின் மீதான அல்கைதா அச்சுறுத்தல், உலக மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக புனையப்பட்ட கதை.//

உண்மையில் மேற்குலகு இதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறது?

Anonymous said...

//ஆசியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் யுத்தத்தால் மடிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்//

உண்மைதான் கலையரசன். அங்கு மிருகங்கள் பறவைகள் துன்புறுத்தப்பட்டால் கேட்க ஆட்கள் இருக்கிறார்கள். இங்கு ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டாலும் எவருக்கும் கவலையில்லை.

இதற்கு மேற்கத்தவரைக் மட்டும் குற்றம் சுமத்த முன் எம்மவரிடம் இருக்கும் ஒற்றுமையின்மை, அறியாமை போன்ற காரணங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

Kalaiyarasan said...

//இதற்கான பின்னனி என்ன? இதனால் மேற்குலகுக்கு இலாபம் இல்லையே.//

இலாபம் இருக்கின்றது. மேற்குலகம் ரஷ்யாவுடனும், சீனாவுடனும் வல்லரசுப் போட்டியில் இறங்கியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைகள் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ஸ்திரத் தன்மையை பாதிக்கின்றது என்றால், அதற்காக சந்தோஷப் படாமல் இருக்க முடியுமா? எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன். அதை விட இஸ்லாமியத் தீவிரவாதம் தலைதூக்கியுள்ள பிரதேசங்கள், அபரிதமான நிலத்தடி பெட்ரோலிய, எரிவாயு சேமிப்புகளைக் கொண்டுள்ளமை தற்செயல் நிகழ்ச்சிகள் அல்ல. இந்த வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டி வெளியே தெரிவதில்லை.

//உண்மையில் மேற்குலகு இதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறது?//

முதலாவதாக, தாம் அல்கைதா பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக அனுதாபத்தை திரட்டிக் கொள்வது. இரண்டாவதாக, மத்திய ஆசியா மீதான ஆக்கிரமிப்புகளுக்கு திரை போட்டுக் கொள்வது. மூன்றாவதாக, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீதான இராணுவத் தலையீட்டுக்கு ஆதரவை பெற்றுக் கொள்வது. நான்காவதாக, ஆசிய மக்களிடம் இருந்து இயல்பாக எழக்கூடிய விடுதலை உணர்வை மழுங்கடிப்பது.

//இதற்கு மேற்கத்தவரைக் மட்டும் குற்றம் சுமத்த முன் எம்மவரிடம் இருக்கும் ஒற்றுமையின்மை, அறியாமை போன்ற காரணங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.//

நான் இங்கே குறிப்பிட்டது ஊடகங்களின் அசுர பலத்தை. நாம் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவை தான் தீர்மானிக்கின்றன. CNN, BBC, AP, AFP என்று மாபெரும் ஊடக நிறுவனங்கள் மேற்குலகை தளமாக கொண்டவை.