Monday, February 08, 2010

வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்


["இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி" தொடரின் 3 ம் பகுதி]
சராசரி மனிதனின் வாழ்வில், முப்பது வயதிற்கு பின்னர் பக்குவம் ஏற்படுகின்றது. இயேசுவும், முகமதுவும் தமது முப்பதாவது வயதில் இருந்தே மதப் பிரசங்கங்களை ஆரம்பிக்கின்றனர். கி.பி. 600 ம் ஆண்டளவில் முதன் முறையாக பிரசங்கித்த முகமதுவுக்கு, "கப்ரியேல்" என்ற தேவதை மூலமாக "குர் ஆன்" என்ற திருமறை இறக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் போலன்றி, பொதுவாக இஸ்லாமிய மதத்தில் அற்புதங்களை காண்பதரிது. முகமதுவின் வாழ்க்கையில் நடந்ததாக கூறப்படும், இது போன்ற ஒரு சில அற்புதங்களைத் தவிர, மற்ற எல்லாமே சரித்திரக் குறிப்புகளாகவே காணப்படுகின்றன. புனித குர் ஆனின் வாசகங்கள் யாவும், முகமது நபிக்கு இறைவனால் வழங்கப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது.

அன்றைய காலத்தில் சிரியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் முகமதுவின் போதனைகளை ஏற்கவில்லை. இத்தனைக்கும் வியாபார நிமித்தம் சிரியா சென்று வந்த முகமது, அங்கிருந்த (கிறிஸ்தவ/யூத) ஞானிகளுடன் தத்துவ விசாரங்களை நடத்தியுள்ளார். பைபிளில் உள்ள கதைகள் அப்படியே புனித குர் ஆனில் உள்ளன. இதனாலும் கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் முகமதுவின் போதனைகளில் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்தக் காலத்தில், முகமது பைபிளை பிரதியெடுத்து, அல்லது திரித்து போதிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. (யூதர்களின்) தோராவுக்கும், பைபிளுக்கும், குர் ஆனுக்கும் பொதுவான மூல நூல் ஒன்று இருந்தது. அது இன்று வழக்கொழிந்து விட்டது என்று முஸ்லிம்கள் வாதிடுகின்றனர். ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல பைபிள் நூல்கள் இருந்த காலத்தில், ஒரே பைபிளுக்கு யாரும் உரிமை கோர முடியாது.

பாட்டாளி வர்க்கப் பிரதிநிதியான (ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன்) இயேசு கிறிஸ்து, அடிமைகளின் விடுதலை குறித்தெல்லாம் போதனை செய்த போதிலும் அதிகார வர்க்கத்தை அசைக்க முடியவில்லை. இயேசுவின் சீடர்களில் பலர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவரை பின்பற்றியவர்கள் ஏழை எளியவர்கள். இருப்பினும் இயேசு ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை விரும்பவில்லை. அன்பினால் அடக்குமுறையாளனின் மனதை மாற்றலாம் என போதித்தார். இயேசுவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ், ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் குறித்து வாதிட்டார். எனினும் இயேசு வன்முறைப் பாதையை நிராகரித்திருந்தார். முடிவு எப்படியிருந்தது என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை.

முகமது, இயேசுவின் அஹிம்சா வழியை பின்பற்றவில்லை. தான் உறுதியாக பற்றிக் கொண்ட கொள்கைக்காக வாளேந்தி போராடுவதில் தவறில்லை என்பது அவரது வாதம். நமது காலத்திய சோமாலிய புத்திஜீவியான ஹிர்சி அலி, "முகமது ஒரு தீவிரவாதி!" எனக் கூறி சர்ச்சையை உருவாக்கினார். முகமதுவின் மதத்திற்கான போராட்டத்தை அந்தக் கால பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மேட்டுக்குடியில் பிறந்த முகமது நபி, அடிமையையும் சகோதரனாக சமத்துவமளித்த புதிய சமுதாயத்தை உருவாக்கியது சாதாரண விடயமல்ல. அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இன்னொரு பக்கத்தில், அரேபியாவில் இஸ்லாமின் எழுச்சியை வணிக சமூகத்தின் விரிவாக்கத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட முதலாளித்துவக் கூறுகள் சில, அன்றைய இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டன.

அன்றைய பாலஸ்தீனம், சிரியா, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், ஆட்சியிலிருந்தவர்கள் கிரேக்கர்கள். ஆட்சியாளர்கள் தம்மை ரோமர்கள் என்று அர்த்தப்படும் "Romaioi " (உச்சரிப்பு: ரொமேயீ ) கிரேக்க மொழியில் அழைத்துக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலோ-இந்தியர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்தப் பட்டதைப் போல, கிரேக்க மொழி பேசும் அரபுக்களையும், ரோமர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் நியமித்தனர். பைபிள் இவர்களையும் ரோமர்கள் என்று தான் குறிப்பிடுகின்றது. இயேசு முன்னெடுத்தது ஒரு சீர்திருத்த இயக்கம். அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் பேசிய அரேமிய மொழி இயேசுவுக்கும் தாய்மொழி. இயேசுவின் இயக்கம் அரசியல் தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், அரேமிய மக்களின் தாயகம் உருவாகியிருக்கும். இருப்பினும் யூத-ரோம கூட்டு முயற்சியால் அந்த இயக்கம் நசுக்கப்பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம், கிரேக்க-ரோம சாம்ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மதமாகியது ஒரு வரலாற்று முரண்நகை.

ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் விழவில்லை, அது கிறிஸ்தவ மதத்தால் பொறுப்பேற்கப்பட்டது. சுருங்கச் சொல்லின், அன்றைய மத்திய ஆசியாவில் கிறிஸ்தவ மதம் என்ற பெயரில், ஒரு மேற்கத்திய அரசு அதிகாரம் கோலோச்சியது. அரேபியாவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியப் படைகள், அதற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதின. இந்தப் பின்னடைவு நவீன கால அரசியலிலும் எதிரொலிக்கின்றது. மத்திய ஆசியாவில் அரபு-இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சகோதர மொழியான அரேமிய மொழி பேசும் மக்களை வென்றெடுக்க முடிந்தமை. இரண்டு, உள்நாட்டுப் பிரச்சினைகளால் பலவீனமடைந்த கிரேக்க-ரோம சாம்ராஜ்யம்.

ஆரம்பத்தில் முகமதுவை பின்பற்றிய முதல் முஸ்லிகள் அனைவரும் மெக்கா நகரின் ஆதிக்க வர்க்கமான குறைஷி குலத்தை சேர்ந்தவர்கள். நிச்சயமாக முகமது தனது சொந்த ஊரான மெக்காவில் தான் முதலில் போதித்திருப்பார். அவரால் சிலரை இஸ்லாம் என்ற புதிய மார்க்கத்திற்கு மாற்ற முடிந்தாலும், பல எதிரிகளையும் சம்பாதித்தார். அந்த எதிரிகளும் குறைஷிகள் தாம். குறைஷிகள் ஏற்கனவே நல்ல வருமானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த மெக்கா கோயிலை பராமரித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் விட்டு விட்டு, சில "உதவாக்கரை இளைஞர்களின்" பேச்சைக் கேட்க அவர்களுக்கென்ன பைத்தியமா? "தம்மைத் தாமே முஸ்லிம் என அழைத்துக் கொள்ளும் இளைஞர்கள் சமூகநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்கள். சாதியில் உயர்ந்த குறைஷிகளான நாம் அடிமைகளையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டுமாம்...." குறைஷி மேலாதிக்கவாதிகள் இஸ்லாம் என்ற மதத்தை முளையிலேயே கிள்ளியெறிய முனைந்தனர். மெக்கா நகரில் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர்.

622 ம் ஆண்டு, முகமதுவும், முஸ்லிம்களும் மெக்காவில் இருப்பது தமக்கு ஆபத்து என உணர்ந்தனர். மெக்காவில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் இருக்கும் மெதினா நகரில் இருந்து எதிர்பாராத உதவி கிட்டியது. பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்.

இறைதூதர் முகமதுவும், அவரை பின்பற்றியவர்களும், மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெர்ந்த சம்பவம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இல்லாவிட்டால் மெக்காவில் முஸ்லிம்களை அன்றே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெயர்ந்த நாளில் (ஹிஜ்ரா) இருந்து இஸ்லாமியக் கலண்டர் தொடங்குகின்றது. முகமதுவுடன் மெக்காவில் இருந்து சென்றவர்கள் "முஜாஹிரூன்' என்றழைக்கப் பட்டனர். மெதினா நகரில் புதிதாக இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் "அன்சார்" (உதவியாளர்கள்) என அழைக்கப்பட்டனர். மெதீனா சென்ற முகமது தற்பாதுகாப்புக்காக ஒரு படையை உருவாக்கினார். முகமது ஒரு மதப்பிரசாரகராக மட்டுமலல்லாது, தலைசிறந்த இராணுவத் தளபதியாகவும் திகழ்ந்தார்.

முகமது தலைமையிலான முஸ்லிம் படைகள், மெக்கா படைகளை போரில் வென்றன. 630 ம் ஆண்டில், மெக்கா நகரம் முகமதுவின் தலைமையை ஏற்றது. இதனால் மெதீனாவுடன், மெக்காவும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. எனினும் புதிய முஸ்லிம் தேசத்தின் நிர்வாகத் தலைநகராக மெதீனா விளங்கியது. சிரியா, ஈராக் மீதான படையெடுப்புகள் யாவும் மெதீனாவில் இருந்தே திட்டமிடப்பட்டன. ஆரம்ப காலங்களில் இஸ்லாமியப் படைகளை வழிநடத்திய கட்டளைத் தளபதிகள் அனைவரும் குரைஷிகளாக இருந்தனர். இதனால் அன்சாரிகள் எனப்படும் மெதீனாவாசிகள் அதிருப்தியுற்றனர். இந்த முரண்பாட்டை தீர்க்க வேண்டிய அவசியத்தை, தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் உணர்ந்தனர். இருப்பினும் முகமதுவின் இறப்புக்குப் பின்னர், இஸ்லாமிய சமூகத்தினுள் வேறு சில பிளவுகள் தோன்றின.

முகமதுவின் காலத்திலேயே, அரேபிய தீபகற்பத்தில் முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் நிறுவப்பட்டு விட்டது. பெரும்பாலும் சமாதான வழிகளிலேயே அந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப் பட்டது. அரேபிய தீபகற்பத்தில் இருந்த குட்டி தேசங்கள் மெதீனாவிற்கு வரி கட்ட சம்மதித்தன. இறைதூதர் முகமது நபியின் மரணத்தின் பின்னர், சில பிரதேசத் தலைவர்கள் வரி கொடுக்க மறுத்தனர். அதாவது முஸ்லிம்களாக தொடர்ந்து இருந்த போதிலும், மெதீனாவின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இன்று யேமன் இருக்கும் இடத்தில், பானு ஹனீபா என்ற அரபு குலத்தை சேர்ந்தவர்கள், தமக்கென ஒரு இறைதூதரை தெரிவு செய்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தென் கிழக்கு அரேபியாவின் பிற குலங்கள், ஒரு பெண் தீர்க்கதரிசியின் பின்னால் அணி திரண்டனர். மெதீனாவில் இருந்து சென்ற படையணிகள் அத்தகைய கிளர்ச்சியை அடக்கின. இஸ்லாமிய சமூகத்தினுள் தோன்றிய முதலாவது சகோதர யுத்தம், "ரிட்டா போர்கள்" என அழைக்கப்பட்டன.

இஸ்லாமுக்கு முந்திய அரபு சமுதாயத்தில் பெண்கள் தலைமைப் பாத்திரம் வகிக்குமளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். இஸ்லாம், பிற மத நிறுவனங்களைப் போலவே, சட்டத்தின் பெயரில் பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிவான நிலைக்கு தள்ளியது. இன்றும் கூட, இஸ்லாத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் பெண்கள் மதப்பிரசங்கம் நினைத்தே பார்க்க முடியாது. மெதீனாவுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய ஸாஜா என்ற பெண், தன்னை இன்னொரு இறைதூதராக நியமித்துக் கொண்டார். இஸ்லாமிய சரித்திரத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. சாஜாவும், அவர் சார்ந்த தக்லீப் குலமும் கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்டிருந்தமையும் (சிறிது காலமே நீடித்த) கிளர்ச்சிக்கான புறக்காரணிகள். மெதீனாவுக்கு எதிராக கலகம் செய்த அரபுக் குழுக்களை ஒடுக்கிய படையணிக்கு தலைமை தாங்கியவர் காலித் இபுன் வாலித். இவர் பின்னர் சிரியா மீதான படையெடுப்புகளுக்கு சிறப்புத் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார்.
(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்
1.இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

14 comments:

Anonymous said...

மேட்டுக்குடியில் பிறந்த முகமது நபி, அடிமையையும் சகோதரனாக சமத்துவமளித்த புதிய சமுதாயத்தை உருவாக்கியது சாதாரண விடயமல்ல.

manithan said...

மேட்டுக்குடியில் பிறந்த முகமது நபி, அடிமையையும் சகோதரனாக சமத்துவமளித்த புதிய சமுதாயத்தை உருவாக்கியது சாதாரண விடயமல்ல.

Robin said...

//இன்றும் கூட, இஸ்லாத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் பெண்கள் மதப்பிரசங்கம் நினைத்தே பார்க்க முடியாது. // தவறு. கிறிஸ்தவத்தில் பெண்கள் மதப் பிரசங்கம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. தற்போது பெண்கள் போதகர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

Anonymous said...

--கிறிஸ்தவத்திலும் பெண்கள் மதப்பிரசங்கம் நினைத்தே பார்க்க முடியாது. --

தமிழ், இந்தியச் சூழலில் வேண்டுமானால் இருக்கலாம்! ஐரோப்பிய, அமெரிக்க சூழலில் இது மாறி நாளாகிவிட்டது. புரட்டஸ்தாந்து மதத்தில் பெண்கள் பூசை வைப்பது சகஜமானது. ஆயர்களாகக் கூட உள்ளார்கள். கிறிஸ்தவம் என்கையில் புரட்டஸ்தாந்தும் உள்ளடங்கிறது. நீங்கள் ஒரு வேளை கத்தோலிக்கத்தை குறிப்பிட்டிருந்தால், அதில் நற்கருணைப் பங்கீடு என்ற நிகழ்வு, முழுப் பூசையை நடத்தும் நிகழ்வு போன்றவற்றில் பெண்களை இன்னும் இணைக்கவில்லை. மற்றபடி பூசையில் பிரசங்கிக்கும் வேளை பிரசங்கிகளாக பல மணமுடித்த பெண்கள் தொழில்முறையில் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்ப அளிப்பு, ரசப் பங்கீடு எல்லாம் நடக்கிறது. கன்னியாஸ்திரிகள் பூசை செய்வது பற்றிய விவாதங்கள் மெள்ள மெள்ள கிளம்பிவிட்டன. இன்னும் ஓரிரு தாசாப்தங்களில் அதுவும் வந்து விடும். கத்தோலிக்கர்கள் நடத்தும் மடப் பாடசாலைகள் விடுதிகளிலிருந்து கிளம்பும் சிறார் பாலியல் புகார்கள் என்றாவது ஒரு நாள் பாதிரிகளும் மணமுடிப்பது பற்றிய முடிவிலும் கத்தோலிக்கத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும். ஐரோப்பியர்கள் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப இவர்கள் தங்கள் நிறுவனப் பட்ட மதங்களின் சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்கிறார்கள்.ஆனால், மிக மெதுவாக..

சில மாற்றங்களை செய்ய முனைந்த வேறு பேராயர் கான்டிடட்ஸ் இருந்தும் அதி பிற்போக்காளரான பெனடிக்ட் பாப்பரசராகத் தெரிவானது கத்தோலிக்கத்தின் துரதிர்ஷ்டம்.

Abu Umar said...

மக்காவிலிருந்து மதினாவிற்கு சுமார் 444 கி.மீ. இருக்க வேண்டும். கூகிலிட்டு பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். நான் ஜித்தாவில் இருக்கிறேன். இங்கிருந்து மதினாவிற்கு சுமார் 400 கி.மீ.

ஜித்தாவிலிருந்து மதினா செல்லும் நெடுஞ்சாலையில், சுமார் 100 வது கி.மீ. மீட்டரில் மக்காவிலிருந்து மதினா செல்லும் சாலை வந்து இணையும்.

நான் சொன்ன தகவலோடு வரைபடைத்தைப் பார்த்தால் தூரம் 300 கி.மீ. சாத்தியமே இல்லை என்பது விளங்கும்.

கட்டுரைக்கான கரு கி.மீட்டரில் இல்லையென்றாலும் தகவலுக்காக இவ்விஷயம்.

பா.ரா அவர்களின் நிலமெல்லாம் ரத்தம் தொடரின் ஆரம்பத்தில் முஹம்மது நபி தொடர்பான சில விஷயங்கள் வரையப்பட்டுள்ளன. கட்டுரையாளருக்கு சில குறிப்புகள் கிடைக்கலாம் என்பதற்காக அதன் url http://nilamellam.blogspot.com/

அன்புடன்
அபூ உமர்

Kalaiyarasan said...

கிறிஸ்தவ சமயத்தில் அங்க்ளிகன் பிரிவில் பெண்களும் பாதிரியாவது அனுமதிக்கப்படுகின்றது. இது கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம் எனினும், கட்டுரையில் இதைக் குறிப்பிடாதது தவறு தான். தவறை சுட்டிக் காட்டிய நண்பருக்கு நன்றிகள். மெக்காவில் இருந்து மெதீனா வரையிலான சரியான தூரத்தை குறிப்பிட்ட அபூ உமாருக்கும் நன்றிகள். நீங்கள் கொடுத்த சுட்டிக்கும் நன்றி. மேலதிகமாக பல தகவல்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இந்த தொடர் கட்டுரைக்கு உங்களைப் போன்ற நண்பர்களின் விமர்சனங்கள் மிக அவசியம். மேலும் பின்னூட்டமிட்ட மனிதன், ராபின், அனானி நண்பர்களுக்கும் நன்றி.

Anonymous said...

ungalukkum eangalukkum idayil oru podu wisayattin paal waarungal.

saajith said...

Mostly misunderstanded topic by non muslims. Please try these links. you will change the heading

http://www.youtube.com/watch?v=9hyDcJncreo

http://www.youtube.com/watch?v=03McaCo-UPQ&feature=related

Anonymous said...

better to use www.irf.net

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்./// ----நூற்றுக்கு நூறு முஸ்லிம்களுக்கு இந்த பாராவுக்கு அர்த்தம் தெரியாது. யாருக்கும் தெரியாத தகவல். தெரிந்த தாங்கள் மட்டும்தான் இதற்கு தெளிவுரை எழுத வேண்டுகிறேன்.

அருளாளனின் அடிமை said...

அன்புச் சகோதரர் கலையரசன் அவர்களுக்கு. உங்களின் சில ஆக்கங்கள் அருமை ஆனால் மற்ற சில ஆக்கங்களுக்கு இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை என்பதை உங்களின் பல வரிகள் விளக்குகின்றன.(எ.கா:///பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்.///) நபிகள் நாயகம் அவர்கள் ஏதோ மதினாவிற்க்கு நல்லது செய்வதற்க்காக செல்லவில்லை. மதினா மக்களும் முஹம்மதின் வருகை தங்களுக்கு பல லாபங்களை தரும் என்பதற்க்காவவோ அழைக்கவில்லை மாராக நபிகள் நாயகம் மதினா செல்வதற்க்கு முன் தன் தோழர்களில் ஒருவரான "முஸப் இப்னு உமைர்" என்பவரை மதினா அனுப்பி இஸ்லாமிய பிரச்சாரம் செய்யவைத்து பல மக்கள் இஸ்லாத்தை எற்ற பின் அவர்களோடு(மதினா வாசிகள்) நபிகள் நாயகம் அவர்கள் "அகபா-1 & அகபா-2" என்ற வரலாற்று சிறப்பு மிக்க 2 ஒப்பந்தங்களை செய்த பின்னரே மதினா சென்றார்கள் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். உங்களுடன் மின்னஞ்சல் மூலியமாகவோ அல்லது அரட்டை(சேட்டிங்) மூலியமாகவோ கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்கு விருப்பம் எனில் இந்த மின்னஞ்சல் முகவியை தொடர்புக்கொள்ளுங்கள் abdulr829@gmail.com குறிப்பு: என் வரிகள் உங்கள் மனதை புன்படுத்தியிருக்குமாயின் என்னை மன்னித்துவிடுங்கள் சகோதரா. ஆவலுடன் உங்கள் அழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்.

Kalaiyarasan said...

//மாராக நபிகள் நாயகம் மதினா செல்வதற்க்கு முன் தன் தோழர்களில் ஒருவரான "முஸப் இப்னு உமைர்" என்பவரை மதினா அனுப்பி இஸ்லாமிய பிரச்சாரம் செய்யவைத்து பல மக்கள் இஸ்லாத்தை எற்ற பின் அவர்களோடு(மதினா வாசிகள்) நபிகள் நாயகம் அவர்கள் "அகபா-1 & அகபா-2" என்ற வரலாற்று சிறப்பு மிக்க 2 ஒப்பந்தங்களை செய்த பின்னரே மதினா சென்றார்கள்.//

அன்புடன் அப்துல் ரஹ்மான்,
நீங்கள் கூறியுள்ள விளக்கம் முஸ்லிம்கள் சார்பான வாதம். ஒவ்வொருவரும் தமது கருத்தை எந்த அளவு மதிப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர் என்று காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள். இது சாதாரண மனிதனின் மனோவியல். முஸ்லிம்களும் அப்படியே தம்மைப் பற்றி உயர்வாக எழுதி வைத்திருந்திருப்பார்கள். அதனை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. உங்களுக்கு என்று பகுத்தாயும் அறிவு உள்ளது. அதன் படி அன்று, அந்தச் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்று புரிந்து கொள்வது அவசியம். எந்த சம்பவத்திற்கும் காரணம், காரியவாதம் உள்ளது. அதன் விளைவாகவே பல நிகழ்வுகள் நடக்கின்றன.

ஒருவர் பிரச்சாரத் தன்மையான வாதங்களை ஏற்றுக் கொள்ளா விட்டால், அவர் சரியாக ஆராயவில்லை என்று அர்த்தமாகாது. மாறாக அந்தப் பிரச்சாரத்தை கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்பவர் தான் சரியாக ஆராய்வதில்லை.

Aboothalib said...

அன்புள்ள கலையரசன் அவர்களுக்கு சகோதரர் அப்துல் ரகுமான் சொல்லும் கருத்துக்கு நிறைய ஆதாரம் உண்டு ஆனால் நீங்கள் சொல்லும் கருத்தின்
//பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்.// ஆதாரம் எங்கிருந்து பெற்றீர்கள் என்று ஒரு விளக்கம் கொடுக்கலாம் அல்லவா? ஏனெனில் முகம்மத்(ஸல்) அவர்களின் வரலாறு ஹதீஸ்கள் எனும் செய்திகள் மூலமாக கேள்விக்கிடமின்றி நிருபிக்கப்பட்டது.

Unknown said...

excellent