Friday, November 20, 2009

சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலும், சில பின்னணித் தகவல்கள்



தமிழகத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இகழ்ந்தவர், இன்று தானே கோமாளியாகி நிற்கிறார். இலங்கையில் புலிகளை அழிக்கும் இறுதிப்போரை தொடங்கி, கூடவே கணிசமான தமிழ் மக்களை அழித்த, சரத் பொன்சேகா என்ற முன்னாள் இராணுவத் தளபதியை தான் சொல்கிறேன். உலகம் எப்படி கணித்திருந்தாலும், சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஒரு மாபெரும் வீரனாக பார்த்தார்கள். யாரும் வெல்ல முடியாத போரில் தமிழரை அடக்கி வெற்றிவாகை சூடிய மகிந்த மகாராஜாவின், தானைப் படைத்தளபதியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவி இருந்தது. நாடெங்கும் முக்கிய நகரங்களில் தென்னை மர உயர கட்-அவுட்களில் சரத், மகிந்தவுடன் சிரித்துக் கொண்டிருந்தார். ரஜனி ரசிகர்கள் போல பாலபிஷேகம் செய்யாதது மட்டுமே பாக்கி. அநேகமான கட்-அவுட்கள், போஸ்டர்களில் இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவும் மும்மூர்த்திகளாக காணப்பட்டனர். சரத் பொன்சேகா தளபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். உடனே நாடெங்கிலும் இருந்த போஸ்டர்களில் சரத் பொன்சேகாவின் படம் கிழித்தெறியப்பட்டது. கதாநாயகன் நகைச்சுவை நடிகராக மாறிய கதை இது.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகியதைப் போல, ராஜபக்ஷ அரச இயந்திரத்தில் இருந்து சரத் பொன்சேகா ராஜினாமா செய்ததும் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலர் வெளிப்படையாகவே அவரை தேசத்துரோகியாக வசை பாட ஆரம்பித்தனர். சிங்கள தேசியத்தின் காவலர்களாக தம்மை கருதிக் கொள்ளும் பிக்குமார் சங்கம் ஒன்றும், சரத் தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் சில காலமாகவே ஜனாதிபதிக்கும், இராணுவ தளபதிக்கும் இடையில் பிரச்சினை என்று அரசல்புரசலாக கதைகள் வந்தன. அப்போது இருவரும் "வதந்திகளை நம்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டனர். "கிரீன் கார்ட்" வைத்திருந்த சரத், அமெரிக்கா பயணமான போது விரிசல் வெளித்தெரிய ஆரம்பித்தது. சரத் பொன்சேகாவின் இரண்டு மகள்மார் அமெரிக்காவில் வசிப்பதும், கிரீன் கார்ட் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்ததும் அவரது தனிப்பட்ட விஷயங்கள் தான். இருப்பினும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றி துப்புத்துலக்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, சரத் பொன்சேகாவுடன் பேச வேண்டும் என கூட்டிச் சென்றது தேநீர் விருந்துக்காக என்று கருத முடியாது.

சரத் பொன்சேகாவுடன் என்ன பேசப்பட்டது என்பதைக் கூற அமெரிக்க அரசு மறுத்து விட்டது. கவனிக்கவும், போர்க்குற்றங்களில் நேரடியாக பங்கெடுத்த சரத் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல் இல்லை. ஆனால் சரத் மீது நீதி விசாரணை வரும் என அஞ்சிய இலங்கை அரசு, இராஜ தந்திர அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. இலங்கை அரசிற்கு சரத் மீதான தனிப்பட்ட அக்கறை என்று இதனைக் கொள்ள முடியாது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில், சரத் அப்ரூவராக மாறி, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக சாட்சியம் சொல்லலாம் என ஊடகங்கள் ஊகங்களை கிளப்பின. அமெரிக்காவில் புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு இழுக்க காத்திருந்தது. சரத் விஜயம் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க இராஜாங்க அமைச்சின் இலங்கை பற்றிய அறிக்கை வெளியானது. அதில் நடந்து முடிந்த போரில் தாரளமாக மனித உரிமைகளை மீறியதாக இலங்கை அரசை (கூடவே புலிகளையும் தான்) கடுமையாக குற்றம் சுமத்தியிருந்தது.

அமெரிக்க அரசு, இலங்கை அரசை நீதி மன்றத்திற்கு இழுக்கவோ, விசாரணையில் சரத் பொன்சேகாவை ஆஜர் படுத்தவோ எண்ணியிருக்கவில்லை. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான், ஐ.நா.சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள கோத்தபாய ராஜபக்ஷ நியூ யார்க் சென்றிருந்தார். அமெரிக்க அரசு நினைத்திருந்தால் பாதுகாப்பு அமைச்சரை அப்போதே கைது செய்திருக்க முடியும். சரத் பொன்சேகாவை தூண்டிலில் மாட்டி, கோத்தபாயவை பிடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. இதற்கிடையே எந்த விசாரணையும் நடக்காமல் சரத் நாடு திரும்பினார். வந்தவுடன் முதல் வேலையாக ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இராணுவ சீருடையை களைந்து, சிவில் உடையை மாட்டிக் கொண்டார். சரத் அரசியலுக்கு வருவது ஊர்ஜிதமான அந்தக் கணத்தில் இருந்து, ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டது. வருங்கால ஜனாதிபதி சரத் பொன்சேகாவை வரவேற்கத் தொடங்கி விட்டன. ஆச்சரியப்படத் தக்கவாறு, சில தமிழ் ஊடகங்களும் இந்த கோரஸில் சேர்ந்து விட்டன. யு.என்.பி., மற்றும் பல சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் சரத் பொன்சேகா ஜனாதிபதியாவார் என விகடன் குழுமம் ஆரூடம் கூறியது. இலங்கைக்கு வெளியேயுள்ள "தமிழ் தேசிய" ஊடகங்களின் செய்தி கூறல், சரத் பொன்சேகாவின் வெற்றியை எதிர்பார்ப்பதாகவே அமைந்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தற்போது பொதுவான நிலைப்பாட்டில் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒன்று தான். எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என கேட்பது போல, இருவரையும் தமிழரை அழிக்கவும் தயங்காத பேரினவாதிகளாகவே பார்க்கின்றனர். வன்னிப் போரில் கொல்லப்பட்ட மக்களும், முகாம்களில் அகதிகளாக வாழும் எஞ்சிய மக்களும் வட-கிழக்கு மாகாணங்களில் உறவினர்களை கொண்டுள்ளனர். அன்புக்குரியவரின் இழப்பு, அதனால் ஏற்படும் அரசின் மேலான வெறுப்பு என்பன எதிர்பார்க்கக் கூடியதே. போர் ஏற்படுத்திய வடுக்களால் சிங்கள ஆட்சியாளர் மீது வன்மம் கொண்ட மக்கள் இனியும் இருப்பர். அதனால் தான் ராஜபக்ஷ, பொன்சேகாவிற்கு இடையிலான போட்டி, சிங்கள மக்களின் பிரச்சினையாக கருதப்படுகின்றது. இருப்பினும் வட-கிழக்கு நிலைமை கருப்பு-வெள்ளையாக பார்க்கக் கூடியவாறு இலகுவான ஒன்றல்ல. வடக்கில் ஈ.பி.டி.பி. ஆதரவாளர்கள், கிழக்கில் TVMP அல்லது கருணா ஆதரவாளர்கள், தேர்தலில் ராஜபக்ஷக்கு வாக்களிப்பார்கள். இதைவிட கணிசமான நடுநிலை வாக்காளர்கள் தேர்தலை பகிஷ்கரிக்கக் கூடும்.

ஆனால் சரத் பொன்சேகாவிற்கு தமிழர் வாக்குகள் விழுமா? சாத்தியமுண்டு. கொழும்பிலும், வடக்கிலும் வாழும் தமிழ் நடுத்தர வர்க்க வாக்காளர்கள், யு.என்.பி.யை "தமிழர் நண்பனாக" பார்க்கின்றனர். (யு.என்.பி.யும் அவ்வப்போது தமிழரை தாஜா பண்ண தயங்குவதில்லை.) அதே நேரம், தமிழ் தேசிய அரசியலை கொண்டவர்கள் இறுதிக்கட்டத்தில் யு.என்.பி.க்கு வாக்களிக்கலாம். சரத் பொன்சேகா அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதை சமீபத்திய மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மனோ கணேசனின் மேல் மாகாண மக்கள் (கொழும்புத் தமிழர்) முன்னணி ஏற்கனவே யு.என்.பி.க்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டது. (உண்மையில் அந்தக் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் யாவும், யு.என்.பி.யின் தமிழ் பிரிவு போன்றே அமைந்துள்ளது.) தென்னிலங்கை முஸ்லிம் வணிக சமூகத்தின் பிரதிநிதிகளான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பது உறுதியாகி விட்டது. தமிழ் தேசியக் கூட்டணியை, யு.என்.பி தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தூது போகின்றது. தமிழ் தேசியக் கூட்டணி மதில் மேல் பூனையாக காத்திருக்கிறது. கட்சிக்குள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்றும், எதிர்ப்பது என்றும் இரண்டு பிரிவுகள் தோன்றி விட்டன. இத்தனைக்கும் மத்தியில் இனவழிப்புப் போரை தலமையேற்று நடத்திய சரத் பொன்சேகாவின் பாத்திரத்தை மறக்க விரும்புகிறார்கள். தமிழ் தேசிய கொள்கையை காற்றிலே பறக்க விட்டு, வர்க்க பாசத்துடன் யு.என்.பி.யை தழுவிக் கொள்கின்றனர். தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து, இது அடிக்கடி நடக்கும் கூத்து தான். "அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ கிடையாது" என மாக்கியவல்லி மீண்டும் விளக்கம் கொடுக்கலாம்.

இலங்கை இராணுவ வரலாற்றில், இராணுவ தளபதிகள் அரசியல் கருத்துக்களை கூறுவது மிக அரிது. பொதுவாக இராணுவம் பாராளுமன்ற அரசுக்கு கட்டுப்பட்ட, கீழ்ப்படிவான பாத்திரத்தையே ஏற்றிருந்தது. போரை தொடருவதா, முடிப்பதா என்பதை கூட பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளுக்கு அமைவாகவே செயற்படுத்தி வந்தது. ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவான நாளில் இருந்து, அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களிடையே மாற்றம் காணப்பட்டது. பாகிஸ்தானில், அல்லது துருக்கியில் உள்ளதைப் போல இராணுவத்திற்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் நடந்தவைகள் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் பெற்ற இராணுவம், வாகரை தொடங்கி முள்ளிவாய்க்கால் துரித பாய்ச்சலில் முன்னேறியது. புஷ்ஷின் தத்துவமான "ஈடு செய்யப்படக் கூடிய இழப்பு" போன்ற வார்த்தை ஜாலங்களால், புலிகளோடு ஒரு பகுதி தமிழரையும் அழித்து முடித்தது. "யுத்தம் நீடிக்குமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணிப்பார்கள். அதற்காக பத்தாயிரம் பேரை பலி கொடுத்து யுத்தத்தை முடிப்பது தவறல்ல." இவ்வாறு ஒரு அமெரிக்க பத்தி எழுத்தாளர் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகையில் தத்துவ விளக்கம் அளித்தார்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், 35 வருட கால புலிகளின் ஆயுதப் போராட்டம் தீர்மானகரமான முடிவுக்கு வருகிறது என்பது அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தது. அமெரிக்க அரசு, ஈராக்கில் சதாம் ஹுசையின் ஆட்சியை அகற்றுவதற்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. இலங்கையில் இறுதி யுத்தத்தில் இரத்தக்களரி ஏற்படும் என்றோ, அங்கே இனப்படுகொலைக்கான சாத்தியம் உள்ளது என்றோ, அறியாத அப்பாவிகள் அல்ல அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்கா, தமிழின அழிப்பு போரை முன்னெடுக்கும் இலங்கை இராணுவத்திற்கு தடையேதும் போடாது வாளாவிருந்தது. இலங்கை அரசுக்கு அமெரிக்க ஆசீர்வாதம் கிடைத்திருந்தது என்பது இதன் அர்த்தம் அல்ல. ஈராக்கில் சதாம் ஹுசையின் குர்து, ஷியா இன அழிப்பு, யூகோஸ்லேவியாவில் மிலோசோவிச்சின் போஸ்னியர், கொசொவர் இன அழிப்பு எல்லாமே அமெரிக்காவுக்கு தெரியாமல் நடக்கவில்லை. அப்படி ஏதாவது நடக்க வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த நாடுகளில் சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரிகளை அகற்றவும், அதற்குப் பின்னர் முழுமையான காலனியாதிக்கத்திற்கும், "இனப்படுகொலை தொடர்பான நீதி விசாரணை" உதவியிருக்கிறது.

இந்த இடத்தில் தான் இனவழிப்பு செய்த போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை யு.என்.பி. ஆதரிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. "தமிழர்களின் நண்பன்" யு.என்.பி., சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் இறக்கவிருக்கிறது. அது தனது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒதுக்கி விட்டு, இந்த தெரிவை செய்துள்ளது. மகிந்த ராஜபக்ஷவாவது தன்னை ஒரு இலங்கை தேசியவாதி என வெளியுலகிற்கு காட்டிக் கொண்டார். அனால் சரத் பொன்சேகாவோ "இது சிங்களவர்களின் தேசம்" என்று அப்பட்டமான பேரினவாதியாக காட்டிக் கொண்டவர். இருப்பினும் யு.என்.பி.க்கு சரத் பொன்சேகாவை நன்றாக பிடித்து விட்டது.

மகிந்த பதவிக்கு வந்த உடனே, எதிர்க்கட்சியான யு.என்.பி.யை உடைத்து, கட்சி தாவியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்தது வந்தார். அதே நேரம், சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், "ரணிலின் அரசு புலிகள் விரும்பியதை கொடுத்துக் கொண்டிருந்தது" போன்ற தகவல்கள் பிரச்சாரப்படுத்தப்பட்டன. இத்தகைய இருமுனைத் தாக்குதல்களால் துவண்டு போன யு.என்.பி. ரணிலின் கையாலாகாத தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. போரில் வென்றால், மகிந்தவின் புகழ் வானுயர உயருமென்று ரணில் விசுவாசிகளுக்கும் தெரியும். இத்தகைய பின்னடைவுகளால், போர்க்கால கதாநாயகனான சரத் பொன்சேகாவை கண்டு ஆனந்தித்ததில் வியப்பில்லை. இன்று பலரையும் குடையும் கேள்வி; சரத் பொன்சேகா ரணிலை பயன்படுத்துகிறாரா? அல்லது ரணில் சரத் பொன்சேகாவை பயன்படுத்துகிறாரா? இருவரும் ஒருவரில் மற்றவர் தங்கியிருப்பதை மறுக்க முடியாது.

அரசியலில் குதிக்கும் போது, ஆதரிக்க தொண்டர்கள் இல்லாத சரத் பொன்சேகா, யு.என்.பி. ஆட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சிறுபான்மையினத்தவர் வாக்குகளை எடுத்து தரும் வேலையை யு.என்.பி. பார்த்துக் கொள்ளும். அது சரி. சரத் பொன்சேகாவால் ரணிலுக்கோ, அல்லது யு.என்.பி.க்கோ என்ன நன்மை? நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக யு.என்.பி. சூளுரைத்து வருகின்றது. ஜனாதிபதியாக தெரிவாகும் சரத் பொன்சேகா, ஆறு மாதங்கள் மட்டுமே ஜனாதிபதி பதவியில் இருப்பாராம். அதற்குப் பிறகு, நாட்டின் தலைவர் பிரதமர் என்று, யாப்பு திருத்தி எழுதப்படும். அதாவது ரணிலை பிரதமராகக் கொண்ட பாராளுமன்றத்தின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு, சரத் பொன்சேகா ஒதுங்கி விடுவாராம். நினைத்தபடி ஆட்டுவிக்க சரத் பொன்சேகா ஒரு பொம்மை என கருதி விட்டார்கள் போலும். 

இந்த களேபரங்களுக்கு நடுவில், பின்னணியில் இருந்து ஊக்குவிக்கும் சக்திகள் பலர் கண்களுக்கு தெரிவதில்லை. இந்தியாவைப் போல, இலங்கையிலும் சாதி, வர்க்க அரசியல் இன்றுவரை கோலோச்சுகின்றது. தென்-மேற்கு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தும் கரவ சாதியை சேர்ந்த சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தற்செயலானதல்ல. கரவ சமூகம், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து, மேலை நாட்டு மோகம் கொண்ட முதலாளித்துவ நலன்விரும்பிகளாவர். அத்தகைய பின்புலத்தை கொண்ட ஒருவரை, மேற்குலக சார்பு லிபரல் யு.என்.பி. அணைத்துக் கொண்டதில் வியப்பில்லை. சிங்கள சாதிய சமூகத்தில் பெரும்பான்மையாகவும், மேல்நிலையிலும் உள்ள கொவிகம (தமிழரில்: வெள்ளாளர்கள்), கரவ (தமிழரில்: கரையார்) சாதியினரை சேர்ந்தவர்களே, இலங்கை அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சரத் - யு.என்.பி. கூட்டு, இந்த ஆதிக்க அரசியலை நிலை நாட்ட எடுக்கும் முயற்சியாகும். அனேகமாக அத்தகைய சமூகப் பின்னணி, சர்வாதிகார ஆட்சியமைக்க உறுதுணையாக இருக்கும். அப்படி அமையின், சிங்கள ஆதிக்கம் தமிழர் மத்தியில் இன்னும் ஆழமாக ஊடுருவும். மலேசியாவில் இருப்பதைப் போல, "சிங்களவர்களே மண்ணின் மைந்தர்கள், அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை" என்பது சட்டமாக்கப்படலாம்.

போர் முடிவடைந்து மாதக் கணக்கு கூட ஆகாத நிலையில், இராணுவத்தின் பலத்தை இரு மடங்காக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இராணுவம் என்ற மிருகத்திற்கு, இன்னுமின்னும் தீனி போட்டு வளர்ப்பதற்கான அந்த திட்டத்தை முன்மொழிந்தவர் சரத் பொன்சேகா. அதே நேரம், வட மாகாண இராணுவ முகாம்களில் கடமையாற்றும் (சிங்கள) படையினரின் குடும்பங்களை குடியேற்றும் யோசனையும் அவருடையது தான். துருக்கியில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. குர்திய சிறுபான்மையின மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தின் முக்கிய நகரங்களின் சனத்தொகையில், துருக்கியரின் விகிதாசாரம் அதிகம். துருக்கி இராணுவவீரர்களும், அவர்களது குடும்பத்தினருமே அங்கு சனத்தொகை பரம்பலை மாற்றியமைத்தவர்கள். துருக்கியில் நடந்ததைப் போல, கணிசமான வடக்கு தமிழர்கள் தென்னிலங்கையில் குடியேற்றப்படலாம். தென்னிலங்கையில் உள்ள அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வளிக்கும் முகாமில், ஆயிரக்கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்கள மொழி, தொழிற்கல்வி என்பன கற்பிக்கப்படுகின்றன. இவர்கள் விடுதலை செய்யப்படும் நேரம், கொழும்பு அல்லது பிற தென்னிலங்கை நகரங்களில் குடும்பத்துடன் தங்கிவிடுமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். பல இளைஞர்கள் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளனர். வட இலங்கை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில், பலர் இந்த பொறிக்குள் மாட்டிக் கொள்ள இடமுண்டு. எதிர்பார்த்த படியே, மேற்குலக நாடுகள் புனர்வாழ்வுத் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளன. வருங்காலத்தில் சரத்பொன்சேகா-யு.என்.பி. சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டால், ஈழம் என்ற தாயகப் பிரதேசத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்படுவர். உலகமயமாக்கல் என்ற பெயரில், மேற்குலகின் நிபுணத்துவத்தோடு அது நடைபெறும்.

ராஜபக்ஷ சகோதரர்களுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான பனிப்போர், வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பமாகிவிட்டதாக கருதப்படுகின்றது. மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் பணியாற்றியவர்கள். 1987 ம் ஆண்டு, வடமராட்சி "ஒப்பரேஷன் லிபரேஷன்" இராணுவ நடவடிக்கையில் இருவரும் பங்குபற்றியவர்கள். இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியான சரத் பொன்சேகா கேணல் தரத்திலும், கோத்தபாய அதற்கு கீழான லெப்டினன்ட் கேணல் தரத்திலும் கடமையாற்றியுள்ளனர். மகிந்த ஜனாதிபதியான பிற்காலத்தில், கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். சரத் இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற போதிலும், பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் தாழ்வுச் சிக்கலுக்கு உள்ளான சரத், தனது மனஸ்தாபத்தை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறார். எப்படியோ நக்கல், நையாண்டி கதைகள் எல்லாம் கோத்தபாய காதுகளுக்கு எட்டின. கோத்தபாய போர் முடியும் வரை பொறுமையாக இருந்திருக்கலாம். இந்தக் காரணத்தோடு, இராணுவம் ஈட்டிய வெற்றிகளால் சரத், தனக்கு மேலே வளர்ந்து விடுவாரோ என்ற அச்சம், ஜனாதிபதி மகிந்தவிற்கு தோன்றியிருக்கலாம். போர் முடிந்த பின்னர், முக்கியமில்லாத அமைச்சர் பதவியை கொடுத்து சரத்தின் "செருக்கை" அடக்க நினைத்திருக்கலாம்.

போரின் இறுதி நாட்களில் நடந்த சம்பவம் ஒன்று எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது. முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்க தலைவர்கள் அனைவரும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட தினங்களில், மகிந்த ஜோர்டானில் நடந்த மகாநாட்டிற்கு சென்றிருந்தார். மே 16 ம் திகதி, புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக மகிந்தவுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் மகிந்த நாடு திரும்பிய பின்னர், மே 18 அல்லது 19 ம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியானது. இதனால் இந்த சம்பவத்தை ஜனாதிபதி அறிவிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இறுதியில் அந்த வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அறிவித்தவர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. அதாவது ஒரேயொரு அறிவிப்பால் மகிந்தவை ஓரங்கட்டிய சரத், (சிங்களவர் மத்தியில்) தனது புகழை உயர்த்திக் கொண்டார். வெகுஜன தளத்தில், சரத் புகழ் பாடும் பாடல்கள், எல்லாளனை வென்ற துட்டகைமுனுவோடு ஒப்பிடும் ஓவியங்கள் என்பன சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமாகின. ராஜபக்ஷ சகோதரர்கள் இவற்றை எல்லாம் வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.

சரத் பொன்சேகா இராணுவ கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்திக்க பழகியவர். கிழக்கு மாகாணத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றிய வெற்றிச் செய்தியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல்கள் போன்ற அரசியல் லாபங்களுக்காக இராணுவ செய்திகளை மட்டுப்படுத்தும் செயலை, சரத் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் "குறுகிய நலன் கருதிகள், நேர்மையற்றவர்கள், நாட்டை பாழாக்குபவர்கள்" போன்ற கருத்துகளையே சரத் கொண்டிருந்தார். யு.என்.பி. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில், இராணுவ சர்வாதிகாரம் தேவை என்று கருதுபவர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் பி.ஜே.பி. ஆதரவு தளத்தில் நிலவும் கருத்தியலோடு ஒப்பிடத்தக்கது இது. இலங்கையில் சிலருக்கு, இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநாட்டி, ஜனநாயகத்தை இரத்து செய்யும் நோக்கம் இருக்கிறது. நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க அதுவே சிறந்த மருந்து என நினைக்கின்றனர். தற்போது மகிந்த ஒரு நீண்ட இனப்பிரச்சினை போரை வென்று விட்டாலும், வறுமைக்கு எதிரான போரில் தோற்றுப் போய் விட்டார். வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, உணவுப்பற்றாக்குறை, வறுமை என்பன அரசாங்கத்தை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் மகிந்தவின் சிம்மாசனத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள குண்டுகள். இவை வெடிக்கும் நேரம் மகிந்தவும் தூக்கிவீசப்படுவார். அந்த தருணத்திற்காக எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள், இலங்கையை இன்னும் மறக்கவில்லை. போரில் வீழ்ந்த பிணங்களை சுற்றி வட்டமிடும் கழுகுகளாக வட்டமிடுகின்றன. இது வரை காலமும், வருடாந்த வெளிநாட்டுக் கடன்கள் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிடி தளராமல் தொடர்ந்திருந்தது. அண்மைக்காலமாக ஜப்பானை விட சீனா இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ளது. போரின் போது பெருமளவு சீன, ஈரான் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்துமாக்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அம்பாந்தோட்டையில் சீன துறைமுகம் கட்டப்பட்டு வருகின்றது. இதையெல்லாம் அமெரிக்கா சும்மா கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ, அமெரிக்கா - ஈரான், இந்திய - சீனா, என்று எதிரும் புதிருமான நாடுகளை எல்லாம் நண்பனாக வைத்திருக்கும் ராஜதந்திரம் நீண்ட நாட்களுக்கு எடுபடாது. இன்றைய இலங்கை அரசு, மேற்குலக நாடுகளுடன் முட்டி மோதிக் கொண்டு சீனாவுடன் நெருக்கமாகி வருவது கண்கூடு. அத்தகைய நிலையில், சரத் பொன்சேகா போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பது அமெரிக்காவுக்கு உவப்பான விஷயம் தான். அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகாவை தனியாக அழைத்துப் பேசிய அரச அதிகாரிகள், அவரை விசாரணை செய்தார்களா, அல்லது ஆலோசனை வழங்கினார்களா?

4 comments:

valai thedal said...

அருமையான கட்டுரை

Kalaiyarasan said...

நன்றி, இதுவரை எந்த ஒரு தமிழ் ஊடகத்திலும் வராத மாற்றுக் கண்ணோட்டத்தில் இருந்து எழுதியிருக்கிறேன்.

unnatham said...

தற்போதைய இலங்கை நிலவரத்தை, அதன் நுண்ணரசியலை மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் உள்ள உள்ள அச்சு ஊடகங்கள் குறித்துப் பேசுவதற்கு (கிண்டல் செய்வதற்குக் கூட) ஒரே ஆயாசமாக இருக்கிறது. இது போன்ற கட்டுரைகள்தான் இந்தக் கட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களது பணி

unnatham said...

தற்போதைய இலங்கை நிலவரத்தை, அதன் நுண்ணரசியலை மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் உள்ள உள்ள அச்சு ஊடகங்கள் குறித்துப் பேசுவதற்கு (கிண்டல் செய்வதற்குக் கூட) ஒரே ஆயாசமாக இருக்கிறது. இது போன்ற கட்டுரைகள்தான் இந்தக் கட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களது பணி