Tuesday, May 26, 2009

அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 7
மொரிஷியஸ் தீவு பற்றி தமிழர்கள் அறிந்திருக்கும் அளவிற்கு, அதைவிட பன்மடங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த "கொமொரோ" (Comoros) தீவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு ஆப்பிரிக்க கடலில், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மாபெரும் மடகஸ்கார் தீவை பிரிக்கும், மொசாம்பிக் நீரிணையின் மத்தியில் அமைந்துள்ள நான்கு சிறு தீவுகள் சேர்ந்து, கொமொரோஸ் குடியரசு உருவானது. உலக வரைபடத்தில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய குட்டி தேசம். பிரான்சின் நவ-காலனியக் கொள்கையின் கேலிச்சித்திரம். வெள்ளையின கூலிப்படைகளின் (இன்று: "தனியார் இராணுவம்") விளையாட்டு மைதானம். கற்பனைக்கெட்டாத திகில் கதைகள் பலவற்றைக் கொண்டது அந்த தேசத்தின் வரலாறு.

கொமோரோ தீவுகளை "இருண்ட ஆப்பிரிக்காவை" சேர்ந்த பகுதியாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீண்ட காலமாகவே இந்து சமுத்திர வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபிய வியாபாரிகள், கொமோரோ தீவுகளில் தங்கிச் செல்வது வழக்கம். அவர்கள் ஏற்கனவே அங்கே வசித்து வந்த, உள்ளூர் கறுப்பின, மலேய(அல்லது இந்தோனேசிய) மக்களுடன் கலந்திருக்க வாய்ப்புண்டு. அரேபியர்கள் இஸ்லாமிய மதத்தையும் தம்மோடு கொண்டு வர மறக்கவில்லை. இருப்பினும், 19 ம் நூற்றாண்டளவில் தென் ஈரான் நகரான ஷிராசில் இருந்து பெருமளவு அரேபியர்கள் நிரந்தரமாக குடியேறிய பின்னரே நவீன வரலாறு (மன்னராட்சிக் காலம்) ஆரம்பமாகியது. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக் கொண்டு இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்சின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்த நிர்ப்பந்தம், காலனிய காலகட்டத்தை கட்டியம் கூறியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று, ஐ.நா. மன்றம் கூறி வந்த போதிலும் பிரான்ஸ் அதற்கு செவி மடுக்கவில்லை. 1975 ம் ஆண்டு, அரை மனதுடன் கொமோரசிற்கு சுதந்திரம் வழங்கியது. அப்போது கூட, மயோத் (Mayotte) தீவு மக்கள் சர்வசன வாக்கெடுப்பில் பிரான்சுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள், என்று காரணம் காட்டி, அந்த தீவை தனியாகப் பிரித்து தனது "கடல் கடந்த பிரதேசம்" ஆக்கியது. (இவ்வாண்டு மீண்டும் ஒரு தேர்தல் மூலம் பிரான்சின் மாகாணமாகியது.) சுதந்திர கொமோரோ குடியரசு மயோத் தீவுக்கு உரிமை கோரிய போதிலும், கேந்திர முக்கியத்துவம் காரணமாக பிரான்ஸ் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றது. மொசாம்பிக் நீரிணை ஊடான வர்த்தக கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதும், (அல்லாவிட்டால் மடகஸ்காரை சுற்றிப் போக வேண்டும்), கட்டுப்படுத்துவதும் மயோத்தில் உள்ள பிரெஞ்சு தளங்களின் முக்கிய நோக்கம். அதைவிட, அந்தப் பிராந்தியத்தில் ஈரான் இலகுவாக (தொப்புள்கொடி உறவை காரணமாகக் காட்டி) ஊடுருவ முடியும் என்பதால், அதனை தடுக்கும் நோக்கமும் உள்ளது. கொமோரோ, சான்சிபார் (தான்சானியா) ஆகிய தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு ஈரானிய வம்சாவழியினர் இன்றும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மயோத் தீவு மக்கள், அரசியல் நிர்ணய சட்டப்படி பிரெஞ்சுப் பிரசைகள் என்பதால், அங்கே தனிநபர் வருமானம் அதிகம். இதனால் அயலில் இருக்கும் ஏழை நாடான கொமோரோவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், மயோத் சென்று குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகின்றனர். பிரெஞ்சு மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு பிரெஞ்சு பிரசாவுரிமை கிடைக்கும் என்பதற்காக, ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ளும் பல கர்ப்பிணிப் பெண்கள் அகால மரணமடைகின்றனர். இதற்கிடையே 1997 ம் ஆண்டு, உலக வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை கொமோரோ குடியரசின் பகுதியாக இருந்த, "அஞ்சுவான் தீவு" தனி நாடாக பிரகடனம் செய்தது. அத்தோடு நில்லாமல், "மீண்டும் பிரெஞ்சுக் காலனியாக" மாற விருப்பம் தெரிவித்தது! உலகமயமாக்கப் பட்ட காலத்தில், பிரான்ஸ் இந்தக் கூத்தை எல்லாம் மெச்சும் நிலையில் இருக்கவில்லை. பிரான்சால் கைவிடப்பட்ட அஞ்சுவான் மீது, 2008 ம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் படையெடுத்து, மீண்டும் கொமொரோசுடன் சேர்த்து விட்டன. இந்த நிகழ்வு, ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் பிடி தளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

கொமொரோஸ் குடியரசின் வரலாற்றில், 1975 ம் ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டு வரையிலான காலகட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில், நவ-காலனிய மேலாண்மைக்காக பிரான்சால் பல முறை பந்தாடப்பட்டது. ஆனால் பிரான்ஸ் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை, அதற்குப் பதிலாக "சதிப்புரட்சி மன்னன்" பொப் டெநர்ட்(Bob Denard) தலைமையிலான கூலிப்படையை பயன்படுத்தியது. இயற்கையிலேயே கம்யூனிச எதிர்ப்புவாதியும், பணத்திற்காக எதையும் செய்யத்தயங்காத Bob Denard இன் ஒரேயொரு தொழில் ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பது! கொங்கோ, பெனின், இவ்வாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்ற 20 க்கும் அதிகமான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில், Bob Denard இன் கூலிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் பணத்திற்காகவே சண்டையிட்ட போதிலும், பிரெஞ்சு அரசின் விசுவாசமான அடியாளாக செயற்பட்டதையும் யாரும் மறுக்க முடியாது.

DGSE (Direction Générale de la Sécurité Extérieure) என்ற பிரெஞ்சு வெளிநாட்டு புலனாய்வுத் துறை (பிரெஞ்சு சி.ஐ.ஏ.), Bob Denard உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இரண்டு முறை கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவனே இதனை தெரிவித்துள்ளான். தான் பிரெஞ்சு அரசின் உத்தரவின் பேரில் சதிப்புரட்சிகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். இந்த இரகசிய உறவை மெய்ப்பிப்பது போல, எதிர்த் தரப்பிற்கு வழக்கை வாபஸ் வாங்குமாறு மேலிடத்து நிர்ப்பந்தங்கள் வந்தன. Bob பின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. 1989 ல் கொமொரோஸ் ஜனாதிபதி அஹ்மத் அப்தல்லாவை கொலை செய்த குற்றச்சாட்டு காரணமாகவே அவன் நீதிமரத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். இது பெரும்பாலும் உண்மையாக இருக்க சாத்தியமுண்டு. பொப் டெநர்ட் பத்து வருடங்களாக கொமோரோ தீவுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். அவன் தலைமையிலான "சிறப்புப் பாதுகாப்புப் படை", தேசத்தை மட்டுமல்ல, ஜனாதிபதியையும் ஆட்டிப்படைத்தது. தனது தேசத்தை பணயம் வைத்திருந்த கூலிப்படையின் அதிகாரத்தை களைய முயன்ற போது தான், கொமொரோஸ் ஜனாதிபதி கொலை செய்யப்பட்டார்.

சில நேரம் வரலாற்றில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், புனை கதைகளையும் மிஞ்சி விடும். 1975 ம் ஆண்டு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கொமொராஸ். நாட்டின் முதலாவது ஜனாதிபதியான அப்தல்லாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, பொப் டேனர்ட்டின் கூலிப்படையினர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து படகுகளில் வந்திறங்கினர். தமக்குப் பிடித்த அலி சொய்லியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அந்த சதிப்புரட்சிக்கு பிரான்சின் மறைமுக ஆதரவு இருந்ததாக நம்பப்படுகின்றது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் அலி சொய்லி தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்க முற்பட்ட போது, மீண்டுமொரு சதிப்புரட்சி நிகழ்ந்தது. இம்முறையும் "அகில ஆப்பிரிக்க வெள்ளைக்கார தாதா" பொப் டெனார்ட், தனது அடியாட்படையுடன் வந்தான். அலி சொய்லியை கொன்று விட்டு, முன்னர் தன்னால் பதவியகற்றப்பட்ட அஹ்மத் அப்தல்லாவையே மீண்டும் ஜனாதிபதியாக்கினான். இம்முறை அப்தல்லாவின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதிபலித்தது. ஆனால் அதெல்லாம் பிரான்சிற்கு பிரச்சினையாக படவில்லை.

பிரெஞ்சு அரசால் செல்லமாக "திரு. ஆப்பிரிக்கா" என்று அழைக்கப்பட்ட பொப் டேனர்ட்டின் பொற்காலம் அப்போது ஆரம்பமாகியது. கொமொரோசில் இஸ்லாமிய மத்தைதை தழுவி, ஆறு மனைவிகளுடன், எட்டுப் பிள்ளைகளுடன், சொகுசு பங்களாவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தான். தீவின் பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கு ஏகபோக தொழிலதிபரானான். என்ன தான் இருந்தாலும், பழைய குலத் தொழிலை கைவிட முடியுமா? கொமோரசை தளமாக பயன்படுத்தி, பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கு "கூலிப்படை விநியோகம்" நடந்தது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுடன் தரகு வியாபாரம் வேறு. அப்போது தென் ஆப்பிரிக்காவை சிறுபான்மை வெள்ளையின நிறவெறிக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அதனால் ஐ.நா.மன்றத்தினால் சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரான்சும், பிற மேற்குலக நாடுகளும் நிறவெறி தென் ஆப்பிரிக்காவுடனான வர்த்தக தொடர்புகளை முறித்துக் கொள்ளவில்லை. ஐ.நா.மன்றத்தை ஏமாற்றி, "நம்ம ஆள்" பொப் டெநர்ட் ஆட்சி செய்த கொமொரோஸ் ஊடாக வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலம் அது. அதனால் தான் கொமோரோ தீவுகளில் கூலிப்படையினரின் அடாவத்தனங்களை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை. பிரான்சின் பொருளாதார நலன்களும் கவனிக்கப்படவேண்டியவை. ஆயினும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், சர்வதேச அரசியல் நிலைமை வேகமாக மாறியது. அந்தக் காலகட்டத்தில், 1989 ம் ஆண்டு எழுந்த முரண்பாடுகளால் பொப் டெநர்ட் கொமொரோஸ் ஜனாதிபதி அப்தல்லாவை கொலை செய்த தகவல் கிடைத்ததும், இன்னொரு சதிப்புரட்சிக்கான எச்சரிக்கைமணி பிரான்ஸில் எதிரொலித்தது. தீவில் திடீரென குதித்த பிரெஞ்சு பரசூட் துருப்பினர், பொப் டெநர்ட்டை கைது செய்து தாயகம் கொண்டு சென்றனர். அப்போது நடந்த வழக்கைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? எந்த நாட்டிலாவது ஆட்சியை கவிழ்க்காவிட்டால் அவனுக்கு பொழுது போகாது. 1995 ம் ஆண்டு, புதிதாக 33 கூலிப்படையினரை சேர்த்துக் கொண்டு, பொப் டெனார்ட் ஐந்தாவது தடவையாக கொமொரோஸ் மீது படையெடுத்தான். இம்முறை பிரான்சிற்கு போதும் போதும் என்றாகி விட்டது. நூற்றுக்கணக்கான பிரெஞ்சு இராணுவத்தினர் கொமொரோசில் இறக்கப்பட்டு, கூலிப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். சண்டையிடாமல் சரணடைந்த பொப் டெநர்ட், அதற்குப் பிறகு சாகும் வரை ஆப்பிரிக்கா பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

இத்தோடு ஆப்பிரிக்காவை அச்சுறுத்தி வந்த ஆட்சிக்கவிழ்ப்பு பூதம் ஒழிந்தது என்று சுபம் போட முடியவில்லை. 2004 ம் ஆண்டு வந்த செய்தி ஒன்று, இப்போதும் ஐரோப்பியர்கள் சிலர் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆப்பிரிக்க நாடுகளை கைப்பற்ற தயாராக இருப்பதைக் காட்டியது. சில ஐரோப்பிய நிறுவனங்களின் வர்த்தக நலன்களே இதற்கு காரணம். ஒரு நாள், பிரிட்டிஷ் பத்திரிகைகளில் 3 வது அல்லது 4 வது பக்கத்தில், தீப்பெட்டி அளவில் அந்த செய்தி பிரசுரமாகி இருந்தது. "இகுவடோரியல் கினியா"(Equatorial Guinea) என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டு அரசை சதிப்புரட்சி மூலம் அகற்ற திட்டம் தீட்டியதாக, சிம்பாப்வேயில் சைமன் மன் என்ற பிரிட்டிஷ் கூலிப்படை கப்டனின் கைது பற்றிய செய்தி அது. சைமனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக, (சைமனின் நீதிமன்ற வாக்குமூலப்படி) மாஜி பிரிட்டிஷ் பிரதமர் மாக்கிரட் தச்சரின் "அருந்தவப்" புதல்வன் மார்க் தச்சரும் தென் ஆப்பிரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார். உண்மையில் தென் ஆப்பிரிக்க உளவுத்துறை அவர்களை நீண்ட காலமாக கண்காணித்து வந்தது. இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பது போல, "இந்த (வெள்ளைப்) பூனையும் பால் குடிக்குமா?" என்று செய்தியை வெளியிட்டன பிரிட்டிஷ் "நடுநிலை" பத்திரிகைகள். "தனது மகன் ஜெயிலுக்கு போனால், தான் தற்கொலை செய்து கொள்வேன்" என்ற மார்க்கிரட் தச்சரின் வற்புறுத்தலின் பேரில், அவரது மகன் விடுதலை செய்யப்பாட்டார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான சமூக விடுதலைப் போராளிகளை ஜெயிலுக்கு அனுப்பி, இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்த மாக்கிரட் தச்சரின் "தாயுள்ளம்", சொந்த மகன் ஜெயிலுக்கு போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இகுவடோரியல் கினியா சமீபத்தில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டின் அரசு ஒரு காலத்தில் சோஷலிச நாடாக திகழ்ந்ததுடன், கியூபாவுடனும் நல்லுறவைப் பேணி வந்தது. எண்ணைப் பொருளாதார ஆதிக்கம் தனது கையை விட்டு போகாத படி, கம்பெனிகள் கேட்கும் அதிக பங்கு லாபத்திற்கு விட்டுக் கொடுக்க மறுத்து வந்தது. இதனால் கினியா எண்ணை மீது கண் வைத்த, மார்க் தச்சரின் பன்னாட்டு வர்த்தக நிறுவனம் குறுக்கு வழியை நாடியது. ஒரு கூலிப்படையை அனுப்பி இ.கினியா ஆட்சியை கவிழ்த்து விட்டு, தானே எண்ணைக் கிணறுகளை முழுவதுமாக அபகரிக்கும் நோக்கம் ஈடேறவில்லை. மார்க் போன்ற வர்த்தகர்கள் இது போன்ற தீய வழிகளில் தானே கோடீஸ்வரன் ஆனார்கள்? நம்மூரில் அடியாட்படை அனுப்பி சொத்துகளை அபகரிக்கும் வர்த்தகப் பெருந்தகைகளுக்கும், மார்க் தச்சரின் பன்னாட்டு நிறுவனத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வர்த்தக நிறுவனங்களுக்காக ஒரு நாட்டையே பிடித்துக் கொடுக்கும் சர்வதேச கூலிப்படைகள், "Executive Outcomes" என்ற கவர்ச்சிகரமான பெயர்களுடன் இப்போதும் தென் ஆப்பிரிக்காவில் இயங்கி வருகின்றன. அவர்களது குறிக்கோள் பணம் மட்டும் தான். பெருமைக்காக "கம்யூனிச எதிர்ப்பு போராளிகள்" என்று தமக்கு தாமே புகழாரம் சூட்டிக் கொள்கின்றனர்.

2004 ம் ஆண்டு, சைமன் மன் 64 கூலிப்படையினருடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வாடகை விமானத்தை அமர்த்திக் கொண்டு, சிம்பாப்வே போய் இறங்கிய போதே கைது செய்யப்பட்டனர். சிம்பாப்வேயில் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு இ.கினியா போவது அவர்களது நோக்கம். ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே ஊழல்மய அரசியல்வாதிகள், பணத்திற்காக எதுவும் செய்வார்கள் என்று கணக்குப் போட்ட "மன்"னின் நினைப்பில் மண் விழுந்தது. விமானநிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வாங்கவிருந்த குற்றச்சாட்டில் 7 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 2007 ம் ஆண்டு இ.கினியா கேட்டுக்கொண்டதன்படி அந்நாட்டிற்கு நாடு கடத்த உத்தேசிக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேர், சைமன் என்ற கிரிமினலை விடுதலை செய்யுமாறு சிம்பாப்வேயை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷ் சிறைகளில் வாடும் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுத்த டோனி பிளேர், கொலை பாதகச் செயலை செய்யும் கூலிப்படை கிரிமினலை விடுவிக்க கோரிய காரணம் என்ன? இனப்பாசம் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பதில் இருக்க முடியும்?

ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சியை கவிழ்க்கும் காரியத்தை, பெருந்தொகை பணத்திற்கு ஒப்பந்தம் பேசி செய்து முடிக்கும் கூலிப்படைகள், ஒ...மன்னிக்கவும், "தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்" தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்போதும் சட்டபூர்வமாக இயங்கி வருகின்றன. இவைகளை யார் வேண்டுமானாலும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு, தமக்குப் பிடித்த ஆப்பிரிக்க, ஆசிய நாட்டு அதிகாரத்தை சதிப்புரட்சி மூலம் கைப்பற்றலாம். அவர்கள் கேட்கும் விலையை கொடுத்தால் சரி. ஏதாவதொரு (ஆப்பிரிக்க) நாட்டில் கூலிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடும் போது, சில நேரம் வியாபாரத்தில் பங்கும் கிடைக்கின்றது. ஒருமுறை RUF கெரில்லாக்களை அடக்குவதற்காக, சியாரா லியோன் அரசு கூலிப்படையினரை அமர்த்தியது. அப்போது கூலிப்படையினர் தலைநகரை பாதுகாப்பதை விட வைரச் சுரங்கங்களை பாதுகாப்பதை பெரிதும் விரும்பினர். சுரங்கங்களில் உள்ளூர் மக்களை கட்டாய வேலை வாங்கியதிலும், கொள்ளையடித்த வைரங்களை கடத்தி சென்று விற்று லாபமீட்டியதிலும், கூலிப்படையினருக்கும் பங்குண்டு.

அநேகமாக எல்லா கூலிப்படைகளும் வெள்ளையினத்தவர் நிர்வாகத்தின் கீழ் தான் இயங்குகின்றன. மேலதிகாரிகள் எப்போதும் வெளையர்கள் தான். அவர்களின் கீழ் கூலிக்கு அமர்த்தப்படும் போர்வீரர்கள் அனேகமாக கறுப்பர்களாக இருப்பர். இதனால் கூலிப்படை புகுந்த நாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போதெல்லாம், அதனை "கறுப்பர்கள் மீது கறுப்பர்களின் வன்முறை" என்று சில மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஒரு காலத்தில் நிறவெறி தென் ஆப்பிரிக்கா, நமீபியாவை ஆக்கிரமித்திருந்த போது நடந்த இனப்படுகொலைகள் குறிப்பிடத்தக்க உதாரணம். நமீபிய மக்களை கொலை செய்ததிலும், அவர்களின் சொத்துகளை அழித்த போர்க் குற்றங்களில், அன்று தென் ஆப்பிரிக்க கூலிப்படையில் பணியாற்றிய கறுப்பர்களும் ஈடுபட்டதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மேற்கத்திய ஊடகங்கள் குள்ளபுத்தியுடன், "கறுப்பர்களின் அத்துமீறல்களை" மட்டும் பெரிது படுத்தி "செய்தி போல" தெரிவிக்கின்றன. இதை செய்தி என்று சொல்ல முடியாது. "தவறான தகவல் வழங்கும் ஊடகப் பிரச்சாரம்" என்றே கூற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இந்த தவறான தகவல்கள் செலுத்தும் தாக்கம், மக்களின் சிந்தனையை கறை படுத்துகின்றது. மேலைத்தேய வெள்ளையின மக்கள்: "ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த விவேகமற்ற கறுப்பர்கள், அவர்களுக்குள்ளே அடிபட்டுச் சாகிறார்கள். கறுப்பர்களுக்கிடையே ஒற்றுமையில்லை. எமக்கென்ன வந்தது?" என நினைக்கின்றனர். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலும் பகைமை கொண்ட இரு இனங்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும் போதும் ஐரோப்பிய மக்கள் அப்படித்தான் கருதுகின்றனர்.

(தொடரும்)


முன்னைய பதிவுகள்:
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

5 comments:

கலையரசன் said...

இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்..

Kalaiyarasan said...

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கலையரசன். தொடர்ந்து வாசியுங்கள்.

உண்மைத்தமிழன் said...

ஓ.. இரண்டு கலையரசன்களா..?

என்னடா இது வலையுலகத்துக்கு வந்த சோதனை..?

யார் இரண்டாவதாக களம் புகுந்தீர்களோ அவர்கள், தயவு செய்து பெயரை மாற்றிக் கொண்டால் எங்களுக்கு நலமாக இருக்கும்.. இதை வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன்..

கலை.. வழக்கம்போல உங்களது தகவல் களஞ்சியம் இன்றைக்கும் மின்னுகிறது..

உங்களது புண்ணியத்தில் எங்களது உலக அறிவு விஸ்தாரப்பட்டுக் கொண்டே போகிறது..

வாழ்க கலையரசன்..!

P.K.K.BABU said...

DEAR KALAIY. VERY GOOD POSTING. YOU HAVE THE TIME AND EFFORT TO RESEARCH ABOUT TO WRITE THIS TYPE OF DIFFERNT MATTERS, THAT WE WERE NOT AWARE OF.CONGRATS.

Kalaiyarasan said...

நன்றி உண்மைத்தமிழன்,
ஒரே பெயருடைய இரண்டு பதிவர்கள் இருந்தால், பெயர்க் குழப்பம் வரத் தான் செய்யும், இருந்தாலும் முடிந்த வரையில் தவிர்த்துக் கொள்ளப் பார்ப்போம்.