Wednesday, April 01, 2009

வட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்


நாடுகள் அணுகுண்டு தயாரித்து வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன: ஒரு அந்தஸ்த்தின் அடையாளம், வல்லரசாகிவிட்டதற்கான அறிவிப்பு, பாதுகாப்பின் உறுதிப்பாடு, எதிரிநாட்டைப் பேரழிவிற்குள்ளாக்கும் நோக்கம் என இன்னபிற காரணங்கள். ஆனால் வட கொரியா அணுகுண்டு தயாரித்ததன் நோக்கம் வேறு. தற்கால சர்வதேச அரசியலில் அந்தக் குறிப்பிட்ட காரணமே முக்கியத்தவம் பெறுகின்றது.

உலகின் எதிர்பாராத மூலையில் இருந்து வந்த இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு ராஜதந்திரச் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஈராக், ஈரான், வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் "தீயநாடுகளின் அச்சு" என அமெரிக்க ஜனாதிபதி புஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தானும் தாக்கப்படலாம் என அஞ்சுகிறது ஈரான். அதுவும் முடிந்தால் அநேகமாக வடகொரியாவின் முறைவரும். உலகில் தீய சக்திகளின் அச்சு எதுவும் கிடையாது என்று பலரும் அமெரிக்க அரசுக்கு எடுத்துக் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் செவிமடுத்தால் இந்த மூன்று நாடுகளின் கணக்கைத் தீர்க்கவிரும்பும் அமெரிக்காவின் எண்ணம் ஈடேறாது.

பனிப்போரின் முடிவில் மாபெரும் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததால் பல
சோஷலிஸ நாடுகள் தமது அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வடகொரியா அவ்வளவு இலகுவாக மாறவில்லை. பொருளாதார ரீதியாக சில தளர்வுகளுக்கு இந்நாடு ஒத்துக்கொண்டுள்ளபோதும் (சுதந்திர வர்த்தக வலையங்கள் நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளது.), முழுமையான திறந்த பொருளாதாரப் போக்கிற்கு இன்னமும் இங்கு இடமில்லை. சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்தப் பட்டதால் தேசியப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இடையில் வெள்ளப்பெருக்கு, வரட்சி போன்ற இயற்கை அழிவுகளால் விவசாயமும் பாதிக்கப்பட பஞ்சமேற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். அப்படியெல்லாமிருந்தும் திறந்த சந்தைப் பொருதாரத்தை இருகரம் நீட்டி வரவேற்கவில்லை.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் வடகொரியாவில் தங்கியிருந்த ரஷ்ய இராணுவம் வெளியேறியது. ஆனால், தென் கொரியாவில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவம் இன்றுவரை வெளியேறவில்லை. இரு வேறு முகாம்களில் இருந்த "கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள்", "வடக்கு-மேற்கு யேமன்கள்" ஒன்றிணைந்தன. ஆனால், வட-தென் கொரியாக்கள் இன்றுவரை ஒன்றுசேரவில்லை. அதற்குத் தடையாகவிருப்பதும் அமெரிக்காதான். இரண்டு நாடுகளுக்கிடையிலான எல்லையில் இன்றும் "கொரிய மதில்சுவர்" பாதுகாக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் தென் கொரியாவும், ஜப்பானும் வடகொரியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட வர்த்தகத் தொடர்புகள் அமெரிக்காவின் அரைமனதுடன்தான் ஏற்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் சோவியத் படைகள் ஆக்கிரமித்த வடகொரியாவிலும், அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த தென் கொரியாவிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. எதிர்பாராதவிதமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிச் சக்திகள் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று மக்கள் மன்றங்கள் நிறுவப்பட்டதை அமெரிக்கா விரும்பவில்லை. முன்பு ஜப்பானியருடன் ஒத்துழைத்த கொரிய இராணுவ அதிகாரிகள் அமெரிக்க உதவியுடன் திடீர்ச் சதிப்புரட்சி மூலம் தென்கொரியாவில் இராணுவச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினர். இதனை வடகொரியாவில் பலமாகவிருந்த கிம்-உல்-சுங்கின் கொரில்லாப்படைகள் பார்த்துக்கொண்டு சும்மாவிருக்கவில்லை. கொரியாவை இணைக்கும் போர் ஆரம்பித்தது. இப்போர் ஆரம்பித்துச் சில நாட்களிலேயே கிம்-உல்-சுங்கின் படைகள் தென்கொரியாவின் 90 வீதமான பகுதியைக் கைப்பற்றியிருந்தனர். அமெரிக்க இராணுவம் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் பிற நேசநாடுகளின் படைகளுடன் கொரியாமீது படையெடுத்தது. பின் வாங்கிய வடகொரியப் படைகளுக்கு உதவ சோவியத் யூனியனும் சீனாவும் முன் வந்தன. யாரும் வெல்ல முடியாத சூழ்நிலையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு வடக்கே கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசும், தெற்கே கொரியக் குடியரசும் ஆரம்பிக்கப்பட்டன.

தென்கொரியா நீண்டகாலம் இராணுவ சர்வாதிகார ஆட்சியின்கீழ் இருந்தது. இடையிடையே தேர்தல்கள் நடாத்தப்பட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. கொரியாக்களின் இணைப்பைக் கோரிய மாணவர் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. இவற்றைவிட , அமெரிக்க இராணுவம் தென்கொரியாவில் அணுவாயுதங்களை கொண்டு வந்து வைத்திருப்பது வெளியில் அதிகம் தெரியாத செய்தி. அமெரிக்க இராணுவ முகாம்கள் முன் தென்கொரியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்ங்கள் வழமையாகிவிட்டன. அமெரிக்க இராணுவச் சிப்பாய்கள் அத்துமீறி நடந்துகொள்ளும் போதெல்லாம் இந்த ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடிப்பதும் வழமைதான். இவை தவிர, தென்கொரியா மேற்கு நாடுகளுக்கு நிகரான உயர்ந்த தனிநபர் வருமானம்,வசதிகளைக் கொண்டிருந்தாலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறைவாகவேயுள்ளது. இதனால் எங்காவது ஒரு தொழிற்சாலை மூடப்பட்டாலும் தொழிற்சங்கப்போராட்டங்கள் நாட்டையே ஸ்தம்பிக்கவைக்கும். அங்கேயுள்ள தொழிற்சங்கங்கள் சிறப்பாக நிறுவனமயப்பட்டுள்ளதுடன், போர்ககுணமும் மிக்கவை.

மேற்குறிப்பிட்ட காரணங்களால், வட-தென் கொரியாக்களின் இணைவு ஒரு பலமான அமெரிக்க எதிர்ப்பு நாட்டை எதிர்காலத்தில் உருவாக்குமென அமெரிக்கா அஞ்சுகிறது. மேலும், ஒன்றிணைந்த கொரியாவில் கம்யூனிஸ்ட் அல்லது இடதுசாரிச் சக்திகள் எந்தளவிற்குச் செல்வாக்குப் பெறுவார்கள் என்பதும் கணிக்க முடியாதுள்ளது. இப்போதுள்ள நிலையில், இரண்டு கொரியாக்களும் இப்படியே இருக்கவேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பம். இதனால் இன்றைய தென்கொரிய அரசும் வடகொரிய அரசுடன் மெதுவாகவே உறவுகளை ஏற்படுத்தி வருகின்றது. வடகொரியாவை முன்னர் பகைநாடாகப் பார்த்த தென் கொரியாவின் பார்வையும் இன்று மாறியுள்ளது.

இத்தகைய பின்னணியிலேயே இன்றைய வடகொரிய அணுகுண்டுப்பிரச்சினையை அணுகவேண்டும். பழைய வர்த்தகக் கூட்டாளிகள் மறைந்து போனதாலும், அமெரிக்காவின் கோபத்திற்குப் பயந்து புதிய கூட்டாளிகள் வராததாலும் தனிமைப்பட்ட வடகொரியா வருமானத்திற்காக புதிய வழியைக் கண்டுபிடித்தது. ஏற்கெனவே முன்னேறியிருந்த தொழில்நுட்பத்தை வைத்து ஏவுகணைகளைத் தயாரித்துத் தேவைப்படும் நாடுகளுக்கு விற்றது. ஈரான் போன்ற நாடுகளுக்கு வடகொரிய ஏவுகணைகள் போய்ச்சேர்ந்தபோது அமெரிக்கா கண்டனக் கணைகளை வீசியது. இவ்வாறே பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கமான அணுவாராய்ச்சி நிலையத்துடன் அணுகுண்டு தயாரிப்பது சம்பந்தமான விபரங்கள், ஆவணங்களைப் பெறுவதற்காக தொலைதூரம் பாயும் ஏவுகணைகள் கொடுத்து பரிமாறியிருக்கலாமென கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் 11 செப்டம்பர் 2001 க்கு முன் நடைபெற்ற சம்பவங்கள். இப்பரிமாற்றங்கள் பற்றி அமெரிக்காவும் அறிந்திருந்தது. பாகிஸ்தானில் அணுவாயுதப் பரிசோதனைச் சாலையை நிறுவிய கான் என்ற விஞ்ஞானியே (இந்தியாவில் அப்துல் கலாம் போல இவர் பாகிஸ்தானில் பிரபலமானவர்) இந்தப் பரிமாற்றத்திற்கு முன்நின்றதாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் பரிசோதனை முயற்சியாக ஏவிய கௌரி ஏவுகணை வடகொரியாவின் "நொடொங்" ஏவுகணைப் பாணியில் கானின் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்டது. பாகிஸ்தானிய அரசு இன்றுவரை இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துவருகின்றது.

வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்புப் பற்றிய செய்திகள் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே வெளிவரத்தொடங்கியிருந்தன. அப்போது எழுந்த ஆரவாரம் அமெரிக்க அரசுக்கும் வடகொரிய அரசுக்குமிடையிலான ஒப்பந்தமொன்றில் முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க அரசு வடகொரியாவிற்கு உணவுப் பொருட்களையும் வேறு அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. அத்துடன் அணுஉலை மின்சார உற்பத்தி நிறுவனம் அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தது. இவையெல்லாம் அன்றைய கிளிண்டன் அரசின் வடகொரியாவுடன் சமரசம் செய்துகொள்ளும் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக ஏறபட்டவை.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகம் வடகொரியாவுடன் பகையை வளர்த்து யுத்தத்திற்குப் போகும் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இதனால் அமெரிக்காவில் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற சமயம் பார்த்து அணுகுண்டு பற்றிய செய்தியைக் கசியவிட்டிருக்கும் வடகொரியா, தன்னை "விரோதியாகப் பார்க்கும் அரசியல் கொள்கையை அமெரிக்கா கைவிட்டால்" தானும் அணுகுண்டு தயாரிப்பதை கைவிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் வடகொரியா அணுகுண்டைக்காட்டி இராஜதந்திர அரசியல் நடாத்தி சில நன்மைகளைப் பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் நடந்து கொள்கிறது. வடகொரியா மீதான போர் ஈராக்கைப்போன்று அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என அமெரிகாவில் உள்ள கொரிய அவதானிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ ஆய்வறிக்கையொன்று, மிகப்பெரும் செலவுடன் எடுக்கப்படும் நடவடிக்கை வடகொரியாவைத் தோல்வியுறச் செய்ய ஆறு மாதங்கள் எடுக்குமென்கின்றது. அப்போது கூட, தென்கொரியத் தலைநகர் சோல் வடகொரிய ஆட்டிலறி ஷெல்களால் அழிக்கப்பட்டுவிடும். அமெரிக்க உதவி கிடைப்பதற்குள் ஜப்பான்மீது ஏழு நிமிடங்களில் ஏவுகணைகள் வந்துவிழும்.

10 comments:

Anonymous said...

அணுகுண்டு விவகாரத்தால் அவ்வப்போது சூடு கிளம்பி இரு கொரியாக்களிடையேயும் பதற்றம் ஏற்படுகிறது.

- சசி

Kalaiyarasan said...

ஆமாம், சசி,
இந்தப் பிரச்சினை மீண்டும் சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது.

சதீஸ் கண்ணன் said...

மாமியார் வொட‌ச்சா ம‌ண் குட‌ம், ம‌ரும‌க‌ வொட‌ச்சா பொன் குட‌மா...

Kalaiyarasan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, சதீஷ்கண்ணன்

ஆமாம், எல்லோரும் சேர்ந்து அணு குண்டு இல்லாத உலகத்தை உருவாக்கிக் காட்டட்டுமே.

Anonymous said...

உங்கள் ஆக்கத்தை தமிழ்ச்கைநியுசில் இணைக்க உங்கள் அனுமதி தேவை

newprasha@gmail.com

Kalaiyarasan said...

நீங்கள் இந்தக் கட்டுரையை தமிழ் ஸ்கை நியூசில் இணைத்துக் கொள்ளலாம். மறக்காமல் தொடுப்பை அறியத் தாருங்கள். நன்றி.

MOHAMED AMEER said...

very good

MOHAMED AMEER said...

good

MOHAMED AMEER said...

எல்லோரும் சேர்ந்து அணு குண்டு இல்லாத உலகத்தை உருவாக்கிக் காட்டட்டுமே

சீனு said...

//மாமியார் வொட‌ச்சா ம‌ண் குட‌ம், ம‌ரும‌க‌ வொட‌ச்சா பொன் குட‌மா...//

:))))))

அமெரிக்கனை தவிற எவனுக்கும் அறிவே இல்லை போல... :D