Monday, March 30, 2009

பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி

நவீன உலகின் "முதலாவது இஸ்லாமியக் குடியரசு" பாகிஸ்தான் என்பது பலர் மறந்துவிட்ட விடயம். ஆனால் அந்த இஸ்லாமியக் குடியரசு, புதிய தேசிய அரசின் அடிப்படையாக இருந்ததே தவிர, மதம் அங்கே அரசாளவில்லை. அதாவது பிரிட்டிஸார் சொல்லிக் கொடுத்தபடிதான் பாகிஸ்தானின் அரசு நிர்வாகம் அமைந்தது. பஞ்சாபியர், சிந்திகள், பட்டாணியர் எனப் பல்வேறு மொழி பேசும் இன மக்களையும் மதம் மட்டுமே இணைக்கிறது. இதனாலும் இஸ்லாம் அங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆங்கிலேயக் கல்வி கற்ற பஞ்சாபியரும், சிந்திகளுமே பாகிஸ்தானில் அன்று முதல் இன்றுவரை அரசியல் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இதற்கு மாறாக ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் வாழும் பட்டாணியரும் (அல்லது பஷ்டூனியர்) பிற பழங்குடி மக்களும் அபிவிருத்தியடையாத பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவற்ற இன்னும் பண்டைய நிலவுடைமைச் சமுதாய முறையில் வாழும் பாமரர்கள் மிகுந்த மத நம்பிக்கையாளர்களாகவிருப்பதும் மதத் தலைவர்கள் அவர்கள் சொல்வதைக் கேட்பதும் எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆப்கானிஸ்தானின் பட்டாணியர் பிரதேசங்களிலும் இதுதான் நிலைமை. நிலப்பிரபுக்களினதும், மதத்தலைவர்களினதும் கட்சிகளான பல்வேறு மதவாதக் கட்சிகளும் சவூதி அரேபியா, அமெரிக்கா வழங்கிய பணத்தில் மதக்கல்வி நிலையங்களை நிறுவியதும், அங்கே பயின்ற தலிபான் உறுப்பினர்கள் நான்காண்டுகள் ஆப்கானிஸ்தானைக் கலக்கியதும் பலரும் அறிந்த கதைதான்.

2001 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், தலிபான் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய மத அரசு அமைக்க விரும்பிய தலிபான் குழுவிற்கு பின்தளமாக இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தானின் மேற்கு மாகாணங்கள் கொந்தளித்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றிய தினசரி "அமெரிக்க எதிர்ப்பு- தலிபான்ஆதரவு" ஆர்ப்பாட்டங்களைக் காட்டிய அமெரிக்கத் தொ(ல்)லைக்காட்சிகள் கிறிஸ்தவ அமெரிக்காவிற்கெதிராக முஸ்லீம்கள் புனிதப்போருக்குத் தயாராவதாகப் பயமுறுத்தின. பின்னர் அதே தொலைக்காட்சிகளில் அரசியல் அவதானிகள் என்று கூறிக்கொண்ட சிலர் தோன்றி "பயப்படாதீர்கள் போன தேர்தல்களில் இவை கவனிக்கப்படாத சிறிய கட்சிகளாகவிருந்தன." என ஆறுதல் கூறினர். இந்த ஆரம்பத்திற்கு மத்தியில், அமெரிக்க அரசின் செயல்கள்தான் இந்த மதவாதக் கட்சிகளை வளர்த்து விடுகின்றன என சிலர் கூறிய விமர்சனங்கள் எடுபடாமல் போயின.

2001 அமெரிக்கக் குண்டுவீச்சில் தமது மாணவர்கள் அடிவாங்கியதைக்கண்டு கொதித்துப்போன மதத் தலைவர்கள் தமது ஆதரவாளர்களுடன் வீதியல்இறங்கி அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டஙகள், கண்டன ஊர்வல்ஙகள் நடத்தியதும் அவ்வாறே புரிந்து கொள்ளக்கூடியவைதான். ஆப்கானியச் சகோதரர்களைக் காட்டி அவர்கள் தமது ஆதரவைப் பெருக்கிக் கொணடனர். ஒரு காலத்தில் தலிபானுக்கு ஆதரவாக இருந்த முஷ்ராப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு ஒரே நாளில் தலிபான்களைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவின் பக்கம் போய் நின்றாலும், பொது மக்களால் அவ்வளவு இலகுவாக மாறமுடியவில்லை. தலிபான்களுக்குத் தமது அரசு துரோகம் இழைத்துவிட்டது என்பதே பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயம். மதவாதக் கட்சிகள் இந்த உணர்வலைகளை தமக்குச் சார்பான ஆதரவாக மாற்றிக் கொண்டனர்.

ஒரு காலத்தில் அதிகம் கவனிக்கப்படாதிருந்த மதவாதக் கட்சிகள் ஆப்கானிஸ்தானின் மீதான அமெரிக்கத் தலையீட்டினால் திடீர் வளர்ச்சியைக் கண்டன. இதனால் நடந்த தேர்தலில் இந்தக் கட்சிகள் பெருமளவு வாக்குகளைப் பெற்றமை வெளிநாடுகளில் அதிர்ச்சியைத் தோற்றுவித்த அளவுக்கு பாகிஸ்தானில் நடக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையோரமாகவிருக்கும் பலூச்சிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகிய மாநில சபைகளுக்கான தேர்தலில் மதவாதக் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளன. இதனால் மாநில அளவில் அவர்கள் அதிகாரம் செலுத்தலாம்.மதவாதக் கட்சிகள், மாநிலங்களில் கொண்டுவந்திருக்கும் பல முக்கிய மாற்றங்களாவன: ஞாயிறுக்குப் பதிலாக வெள்ளியை விடுமுறை நாளாக்கல், பெண்கள் உடலைமூடும் ஆடையணியுமாறு கட்டாயப்படுத்தப்படல், ஆண்கள் ஜீன்ஸ் அணியத் தடைவிதித்தல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் புறம்பான தனித்தனிப்பாடசாலைகளை , வாகனங்களில் தனித்தனி இருக்கைகளை ஒதுக்குதல், இஸலாமிய ஷரியாச் சட்டத்தை நீதிமன்றங்களில் அமுல் படுத்துதல் என்பனவையாகும். மேலும் அமெரிக்க இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையின் கீழ் வருவதால் அது நடைமுறைச் சாத்தியமற்றது.

தேர்தல் ஜனநாயகத்தை உலகிற்கே போதனை செய்யும் மேற்குலக நாடுகள், அதன் விரும்பத்தகாத விளைவுகளைப்பற்றியும் அறிந்து வைத்துள்ளன. முன்பு இடது சாரிச் சக்திகளும், தற்போது மதவாத, தேசியவாதச் சக்திகளும் தேர்தல்மூலம் ஆட்சிக்கு வருவது தடுக்கப்படுவதை நாம் பல நாடுகளில் காணலாம். அல்ஜீரியாவில் இஸ்லாமியக் கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்பு அங்கு தேர்தல் இரத்துச் செய்யப்பட்டு, இராணுவச் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டது. பாகிஸ்தானிலும் 98 வீத இஸ்லாமிய மதத்தவரைக்கொண்டுள்ள ஒரு நாட்டில் மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவது ஒன்றும் அதிசயமல்ல. (அதேபோல பெரும்பான்மை இந்துக்களைக்கொண்ட இந்தியாவில் இந்துமதவாதக் கட்சி ஆட்சிக்கு வருவதும் எதிர்பாராததல்ல.) மதத்தைப் போதிப்பவர்கள் அரசியலுக்கு வரும்போது, பிற அரசியல்வாதிகளைப்போலத்தான் நடந்துகொள்வார்கள்.

இப்போது பலர் ஒரு முக்கிய விடயத்தை மறந்துவிட்டார்கள். ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கெதிரான போரின்போது அமெரிக்கா இதே மதவாதக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தது. ஆகவே தனது பழைய நண்பர்களைப்பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரியும். புதிய சக்தியாக வளர்ந்து வரும் மதவாதக் கட்சிகளும் சாதாரண அரசியலில் சிக்கி சீரழியப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
பிரதான தொடர்பூடகங்களின் மிகைப்படுத்திய கதைகளுக்கு அப்பால், மதவாதக்கட்சிகளின் வளர்ச்சிக்கான காரணிகளை ஆராய வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கக் குண்டுவீச்சுகளும், அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கெதிரான போர் பொதுவாக முஸ்லீம்களுக்கெதிரானது, என்ற அபிப்பிராயமும் மதவாதக் கட்சிகளுக்கான ஆதரவு வாக்குகளை அள்ளிக் கொடுத்தமை மறுக்கப்படக்கூடியதல்ல. அதேவேளை பாகிஸ்தானை மாறிமாறி ஆண்ட பெரிய கட்சிகளான முஸ்லீம் லீக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஊழல்வாதிகளாக தமது பதவிக்காலத்தில் மக்கள் சொத்தைக் கொள்ளையடித்தவர்களாக பொது மக்களால் வெறுக்கப்படுகின்றனர். இந்த ஊழல் அரசியல் கட்சிகளுக்கு மாற்றீடாக புதிய மதவாதக் கட்சிகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பு வாக்குகளைப் போட்டுள்ளனர்.

இனிவருங்காலம், அரசியற்கட்சிகள் மக்களின் நலன்பேணும் திட்டங்களை முன்வைத்தல் அவசியம். அல்லாவிடின், அதிருப்தியுறும் மக்கள் மதவாதக் கட்சிகளின் பின்னே இழுபட்டுப்போவார்கள். மதவாதக் கட்சிகளும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லையென்பது அவர்களின் பலவீனம். "மதநெறிகளுக்கேற்ற ஆட்சி நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்ற பிரச்சாரம், நடைமுறைக்கு வரும்போது நீண்டகாலம் எடுபடாது. பாகிஸ்தானின் இஸ்லாமிய மதக் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் இந்துமதக்கட்சிகளும் ஐரோப்பாவின் கிறிஸ்தவ மதக்கட்சிகளும் ஒரே அரசியல் நீரோட்டத்தில்தான் போய்க் கொண்டிருக்கின்றன.


(குறிப்பு: வன்முறையில் ஈடுபடாத இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. )


No comments: