Thursday, February 12, 2009

பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை


பெல்ஜியத்தின் தொழிற்புரட்சி வரலாற்றில் முன்னணி வகித்த துறைமுக நகரம் அன்ட்வேர்ப்பன். இரண்டாம் உலகப் போர்முடிவின் பின்னர் பெல்ஜியம் அமெரிக்க நிதியுதவியால் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றானது. இந்தப் பொருளாதார முன்னேற்றம் காரணமாக அடித்தட்டு பெல்ஜியத் தொழிலாளர் வர்க்கம் நடுத்தர நிலைக்கு உயர்ந்தனர். இதனால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மொரோக்கோவிலிருந்து கூலித் தொளிலார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். முன்பு பெல்ஜியத் தொழிலாளர்கள் வசித்த அதே குடியிருப்புகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பெல்ஜியத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பு கணிசமானது.

இன்று பல தசாப்தங்கள் கடந்த நிலையில், இரண்டாவது தலைமுறை மொரோக்கோ நாட்டினர் பிள்ளைகளும் வளர்ந்து தொழிலாளர் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், ஐரோப்பாவைத் தாக்கிய பொருளாதாரப் பிரச்சினை பெல்ஜியத்தையும் விட்டுவைக்காததால் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. வேலையில்லாப் பிரச்சினையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டோர் எங்கேயும்போல சிறுபான்மையினத்தவர்தான். பெல்ஜியத்தில் மொரோக்கோ நாட்டவர். சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளஞ்சந்ததி ஒரு பக்கம் குற்றச் செயல்களில் ஈடுபட, மறுபக்கம் அதைக்காட்டியே தீவிர வலதுசாரி நவநாஸிசக் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொண்டன. வெளிநாட்டவர், அகதிகளுக்கெதிராகப் பிரச்சாரம் செய்யும் "ஃப்ளாம்ஸ் ப்ளொக்" (தற்போது "பிளாம்ஸ் பெலாண்க்" என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற கட்சி அன்ட்வேர்ப்பன் தேர்தல் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று மாநகர சபையில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அன்ட்வேர்ப்பன் மாநகரசபை காவல் துறையில் கடமையாற்றும் பல பொலிஸ்காரர்கள் ஃப்ளாம்ஸ் ப்ளொக் ஆதரவாளர்கள் என்பது ஊரறிந்த சங்கதி. நகரில் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் அல்லது சந்தேகத்திற்குரிய மொரோகோ இளைஞர்களைக் கைது செய்யும் பொலிஸ்காரர்கள் அவ்விளைஞர்களைத் தெருவழியே தொர தொரவென இழுத்துச் செல்வதும், அவர்களுக்கெதிராக தேவையற்ற வன்முறைகளைப் பிரயோகிப்பதும் வெளிநாட்டவர் மத்தியில் காவல்துறை பற்றிய அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. "ஐரோப்பிய அரபு லீக்" (AEL) எனப்படும் அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும், இத்தகைய இனவெறிச் செயல்களை அரசாங்கமோ, "நடுநிலை"ப் பத்திரிகைகளோ கண்டுகொள்ளாமலிருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்ட புலம்பெயர்ந்தோர் அமைப்புகளைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் இருந்து வருகின்றன. ஒன்றில் அவை மதம், கலாச்சாரம் வளர்ப்பனவையாகவிருக்கும் அல்லாவிடத்தில் அவை தமது சொந்த நாட்டு அரசியல் அமைப்புகளின் தொடர்ச்சியாகச் செயற்படும். இவற்றைத் தமக்கு ஆபத்தானதாகவில்லாததாகவும், அதற்கப்பால் வெளிநாட்டவர் மைய அரசியல் நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமென்றுதான் ஐரோப்பிய அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், ஐரோப்பிய நாடொன்றைத் தனது தாயகமாக வரித்துக்கொண்ட வெளிநாட்டினமொன்று புலம்பெயர்ந்த நாட்டில் தமது நலம்பேண அரசியல் அபிலாசைகளுடன் நிறுவனமயமாகும் போது எதிர்நோக்கும் சவால்கள் பல. இத்தகைய பின்னணியில் உருவான அமைப்புத்தான் "ஐரோப்பிய அரபு லீக்".

பத்து வருடங்களுக்கு முன்பு லெபனானில் இருந்து புலம்பெயர்ந்து பெல்ஜியத்தில் அகதியாகத் தஞ்சமடைந்த அபு ஜாஜாவினால் தனது வேலையைப் பார்த்துக்கொண்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கெதிராக கூட்டப்பட்ட "மக்கள் எதிர்ப்பு முன்னணி" ல் இயங்கியதாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், அபு ஜாஜா ஹெஸ்புள்ளா இயக்க உறுப்பினராக இருந்ததால், அவரது பெல்ஜியப் பிரஜா உரிமையைப் பறிக்கவேண்டுமென ஃப்ளாம்ஸ் புளொக் சர்ச்சயைக் கிளப்பியது. இது ஒருபுறமிருக்க அபு ஜாஜாவினால் அரசியல் விழிப்புணர்வு அடைய வைக்கப்பட்ட மொரோக்கோ இளைஞர்கள் ஒன்று கூடி ஐரோப்பிய அரபு லீக்கை ஸ்தாபித்தனர். இவர்களது வேலை தெருக்களில் ரோந்து சுற்றி வெளிநாட்டவர்மீது அத்துமீறி நடக்கும் பொலிஸாரைக் கண்காணித்தல், பாதிக்கப்பட்டவருக்கு மேற்கொண்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தல் என்பனவாகும். வன்முறை பிரயோகிக்காத அதேவேளை போர்க்குணாம்சம் பொருந்திய இத்தகைய அரசியற் போக்கிற்கு, ஒரு காலத்தில் அமெரிக்காவைக் கலக்கிய கறுப்பின இளைஞர்களின் "கருஞ் சிறுத்தைகள்" அமைப்பை அவர்கள் தமது முன்னோடியாகக் கொள்கின்றனர். இதைவிட பிரபல எகிப்திய ஷோசலிஸ்ட் நாஸரின் கொள்கைகளை தமது அரசியற் சித்தாந்தமாக வரித்துக்கொண்டுள்ளனர்.

பல பெல்ஜிய வெள்ளையினத்தவர் மற்றும் அரசாங்கத்தின் மத்தியில் இந்த வீதி ரோந்து எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. சாதாரண வீதி ரோந்துகள் சட்டவிரோதமானவையல்ல என்பதும் பணக்காரரின் வீடுகள் உள்ள இடங்களில் ஏற்கெனவெ இதுபோன்ற 'தனியார் பொலிஸ்' வீதி ரோந்துகள் சகஜம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெல்ஜியப் பிரதமரைப் பொறுத்தவரை இது "பொலிஸாரின் கடமையைச் செய்யவிடாது தடுத்து கிரிமினல்களுக்குச் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கும் நோக்கம் கொண்டது.' AEL தன்னை ஒரு "கிரிமினல்களின் குழுவென்றும், பயங்கரவாத இயக்கமென்றும்" பாராளுமன்றத்தில் பிரதமர் சொன்னதை கண்டித்து வழக்குப் போட்டது. AEL க்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் ஒரு இனவாதக் கொலையுடன் உச்சக்கட்டத்தை அடைந்தன.

அன்ட்வேர்ப்பன் நகரில் ஒரு மொரோக்கோ இளைஞனை அயல்வீட்டு வெள்ளையின பெல்ஜியக்காரர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பிவிட்டது. குற்றவாளியைக் கைது செய்து சென்ற பொலிஸ் இது ஒரு மனநோயாளி செய்த செயல் என்றும் எந்தவித இனவாத நோக்கமும் பின்னணியில் இல்லையெனவும் அறிவித்தது. ஆத்திரமுற்ற மொரோக்கோ இளைஞர்கள் வீதிகளில் குழுமினர். அவர்களைச் சுற்றி வளைத்த பொலிஸ் கண்ணீர்புகைப் பிரயோகம் செய்து கலைத்தது. தொடர்ந்து ஏற்பட்ட கலகத்தில் வீதியோரம் இருந்த வாகனங்கள், கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலகத்தை AEL தூண்டிவிட்டதெனக்கூறி பொலிஸ் அதன் தலைவர் அபு ஜாஜாவை கைது செய்து சென்றது. திடீரென இந்தச் செய்தி ஐரோப்பியத் தொடர்பூடகங்களின் கவனத்தை ஈர்த்தது. சில நாட்களிலேயே அபு ஜாஜா விடுதலை செய்யப்பட்டாலும், இந்தப் பிரச்சினை தற்போது நீறு பூத்த நெருப்பாகவுள்ளது. AEL ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்த் போன்ற நாடுகளிலும் கட்சியை விரிவுபடுத்த எண்ணியுள்ளது.

பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற சிறுபான்மையினர் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. வெள்ளை-கிறிஸ்தவ ஐரோப்பிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பிற இனங்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாகப் பொருமுவதும், திடீரென நடக்கும் அசம்பாவிதத்தால் எழுச்சியடைவதும் ஆங்காங்கே நடந்துவருகின்றன. பிரிட்டனில் ஜமைக்கர், பாகிஸ்தானியரும், பிரான்ஸில் அல்ஜீரியரும் மேற்கிந்தியக் கறுப்பரும், ஜேரமனியல் துருக்கியரும் இது போன்ற சூழ்நிலைகளிலேயே உள்ளனர். இவர்களனைவரும் வேலையில்லாப் பிரச்சினையால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தமது வாழ்விடங்கள் கவனிக்கப்படாது புறக்கணிக்கப்படுவதாகவும் , மொத்தத்தில் தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதாகவும் குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

இந்தக்குறை அவர்களை எதிர்க்கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கின்றது. குறிப்பாக முதலாவது தலைமுறை அரபு முஸ்லீம் (அல்ஜீரியா, மொரோக்கொவை சேர்ந்த) தொழிலாளர்கள் சாதாரண மதநம்பிக்கையுள்ள பாமர மக்களாக இருந்தனரேயன்றி, தமது மதத்தைப்பற்றிக் கற்றுத்தெளியுமளவிற்குக் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. அதற்கு மாறாக ஐரோப்பியக் கல்வி கற்ற இரண்டாவது தலைமுறை இஸ்லாமிய மதத்தைப்பற்றி மேலும் தெளிவுற அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன் அதனைச் சிறுபான்மையினக் கலாச்சாரமாக வளர்த்து வருகின்றனர். பல இளம் முஸ்லீம்பெண்கள் தாம் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பேணவும், தீய நோக்குடன் நெருங்கும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவுமே தலையைமூடி முக்காடு போடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய சமூகம் இரண்டாகப்பிரிந்து இரு வேறு கோணங்களில் நிற்பதன் பலன்கள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன. சிறுபான்மை முஸ்லீம் இளைஞர்களில் பெரும்பான்மையினர் இன்றும் மிதவாத அரசியல் போராட்டங்களில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரபு ஐரோப்பிய லீக் கூட சாத்வீக வழியில் அரசியலுரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுபக்கத்தில் தீவிர அரசியலில் நாட்டங்கொள்ளும் சில இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தால் கவரப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் நெதர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சு தீவிர அரசியலால் கவரப்படும் முஸ்லீம் இளைஞர்களைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்தது. பல உயர் கல்வி கற்ற இளைஞர்கள் கூட தமது எதிர்காலம் குறித்து விரக்தியுற்று , மத்தியகிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் சென்று ஜிகாத் போராட்டத்தில் தம்மை இணைத்து வருவதை இந்த அறிக்கை குறிப்பிட்டமை அதிர்ச்சியளித்தது. இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய யூத இளைஞர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் போய்ச்சேருவதை மேற்குலக அரசுகள் கண்டுகொள்ளாமல் இரட்டைவேடம் போடுவது கவனிக்கப்படவேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு:
Arab European League

4 comments:

Anonymous said...

அப்படியா? நான் ஏதோ பெல்ஜியமும் அமைதியான நாடு என்று எதிர்பாத்தேன்.

Kalaiyarasan said...

Thank you for your comment.

Anonymous said...

good

Kalaiyarasan said...

Thank you, கவின்.