Saturday, December 27, 2008

ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)


சைப்ரஸ் என்ற சிறிய தீவில், இரண்டு சுதந்திர நாடுகள் ஒரு தலைநகரத்தை கொண்டுள்ளன. அதைவிட முன்னாள் காலனிய எஜமானான பிரித்தானியா ஒரு சிறு பகுதிக்கு உரிமையாளர். இனப்பிரச்சினையால் பிளவுபட்ட தேசம், முப்பது ஆண்டுகள் அமைதியின் பின்னரும் ஆறுதலடையவில்லை.


ஐரோப்பாவின் பிரிட்டிஷ் காலனி நாடான சைப்ரஸ், விடுதலைக்காக போராடியது EOKAS என்ற வலதுசாரி தேசியவாத இயக்கம். சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட காலம் ஆட்சியமைத்த அந்த இயக்க வழிவந்த தலைவர் ஒருவரின் அண்மைய மரணம், மீண்டும் இனப்பிரச்சினை சர்ச்சைகளை உருவாக்கியது. சில தினங்களுக்கு முன்னர்(12 டிசம்பர்) சுவாசப்பை புற்றுநோயால் காலமான முன்னாள் சைப்ரஸ் ஜனாதிபதி தசொஸ் பபடோபுலோஸ்(Tassos Papadopoulos), இறந்த பின்னும் நீருபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையை கிளறிவிட்டார். தெற்கு கிரேக்க சைப்ரஸ் ஊடகங்கள் யாவும் அவரை ஒரு தன்னிகரற்ற தேசியத் தலைவராக பாராட்டிக் கொண்டிருந்தன. என்னோடு பேசிய கிரேக்க சைப்ரஸ்காரர்கள், பிரிவினைவாத துருக்கி இனத்தவருக்கு ஒரு அங்குல நிலமேனும் விட்டுக்கொடுக்காத அரசியல் தலைவராக பார்த்தனர். இது சைப்ரஸ் இனப்பிரச்சினை தொடர்பாக அவர்களது புரிதல் சம்பந்தமானது. பெரும்பாலான கிரேக்க மொழிபேசுவோர் தமது நாட்டில் இனபிரச்சினை ஒருநாளும் இருந்ததில்லை என்றும், துருக்கியின் நில ஆக்கிரமிப்பு மட்டுமே ஒரு பிரச்சினை எனக் கூறினர். வயதான கிரேக்க சைப்ரஸ்காரர்கள் தமது இளமைக்காலத்தில் துருக்கி இன நண்பர்கள் இருந்ததாகவும், தமக்கிடையே எந்தவித பகை முரண்பாடுகள் இருக்கவில்லை என்றும் கூறினர்.



வடக்கு துருக்கி சைப்ரஸ் ஊடகங்கள் அதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை முன்வைத்தன. தசொஸ் பபடோபுலோசின் இறுதிச்சடங்குகளில் துருக்கியினத் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளாதது சரியானதே என்றும், துருக்கி இனப்படுகொலைகளுக்கு காரணமான கடும்போக்கு கிரேக்க இனவாதியின் மரணம் சரித்திரமாகிப் போகட்டும் என்றும் குறிப்பிட்டன. அவை மேலும் கடந்த கால கசப்பான நினைவுகளை மீண்டும் இரைமீட்டன. EOKAS ஆயுதபாணிகள் வீதித்தடை சோதனை அரண்களை
அமைத்து, துருக்கி இளைஞர்களை வேறுபடுத்தி பிடித்துச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தமை. துருக்கி கிராமங்களில் நுழைந்து வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடு பார்க்காமல் கொன்று குவித்து மனிதப்புதைகுழிகளுக்குள் புதைத்தமை, அது மட்டுமல்லாது சில கிரேக்க மக்களையே உளவாளிகள் என்று சந்தேகத்தின் பேரில் கொலை செய்தமை... துருக்கி ஊடகங்கள் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு நீண்டு செல்கின்றது. இது போன்ற சம்பவங்கள் சைப்ரசில் (1974 ம ஆண்டு துருக்கி படையெடுப்பிற்கு முன்னும் பின்னும்) நடந்துள்ளன என்பதையும், அதற்கு பொறுப்பான EOKAS ஆயுதபாணிகள் குற்றவாளிகள் என்பதையும் மிதவாத கிரேக்க மக்கள் மறுக்கவில்லை. ஆனால் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி(EOKAS தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும்) அந்த குற்றங்களை செய்யவில்லை என்கின்றனர். இது போன்ற இருதரப்பு சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்ற உண்மை, இரண்டு இனங்களும் எவ்வளவு தூரம் பிரிந்து வாழ்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.


வடக்கு சைப்ரஸ் பகுதிகளில் தமக்கென தனிநாடு கண்ட துருக்கி இனத்தவர்கள், தமது தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்காத காரணத்தால், பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். வீதிகளில் துருக்கி மொழியிலான பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் துருக்கி மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது.(ஆங்கில மொழிவழி சர்வதேச கல்லூரிகள் விதிவிலக்கு) ஆண்டு தோறும் துருக்கி வழங்கும் மில்லியன் டாலர் மானியம் மட்டும் இல்லையென்றால், இந்த தனி நாடு என்றோ திவாலாகி இருக்கும். வடக்கு சைப்ரசில் நான் சுற்றுப் பயணம் செய்த போது, துருக்கி நாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தை நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது. கடைகளில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அதிகமாக காணப்பட்டன. துருக்கி நாணயமான லீரா புழக்கத்தில் உள்ளது. வடக்கு சைப்ரசின் பாதுகாப்பு முழுவதும், அங்கே நிலை கொண்டுள்ள துருக்கி இராணுவத்தின் கையில் உள்ளது. கணிசமான துருக்கியின சைப்ரஸ்காரர்கள் மத்தியில் துருக்கிக்கு எதிரான வெறுப்பு காணப்படுகின்றது. தமது சொந்த நாட்டில் தாம் சிறுபான்மையாகி வருவதாகவும், துருக்கியில் இருந்து வந்து குடியேறுபவர்கள் அதிகரித்து வருவதாக குறைப்படுகின்றனர். பல தொழில்வாய்ப்புகளை துருக்கியில் இருந்து வந்து குடியேறியவர்கள் அபகரிப்பதாகவும், சிறு வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அவர்கள் நடத்துவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை.

கிரேக்க சைப்ரஸ் பகுதிகள் எதிரான பிம்பம் ஒன்றை வழங்குகின்றது. வீதிகளில் கிரேக்க மொழியில் பெயர்ப்பலகைகள் தொடக்கம் எங்கும் எதிலும் கிரேக்க மொழி கோலோச்சுகின்றது. இரண்டு பகுதிகளிலும் ஆங்கில மொழி பயன்படுத்தப் படுகின்றது. கிரேக்க இன - துருக்கி இன இளம்தலைமுறை காலனிய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். கிரேக்க பகுதிகளில் முன்னாள் காலனியாதிக்க நாடான பிரித்தானியாவின் ஆதிக்கம் தொடர்கின்றது. பிரிட்டிஷ் வர்த்தக நிலையங்கள் பெரும் முதலீட்டில் கடை விரித்துள்ளன. அது தவிர அதிகளவு தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பிரயாணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் அதிகமான வீடுகளை வாங்குபவர்களும் பிரிட்டிஷ்காரர்கள் தான்.


தெற்கு சைப்ரசில் லிமசோல்(Limassol) நகரத்திற்கு அருகிலும், வடக்கு சைப்ரசில் பாமகுஸ்தா(Famagusta) நகரத்திற்கு அருகிலும், இரண்டு பிரிட்டிஷ் இராணுவத்தளங்கள் இப்போதும் உள்ளன. ஒவ்வொரு இராணுவ தளமும் குறைந்தது 20 அல்லது 30 கி.மி. பரப்பளவான சைப்ரஸ் நிலத்திற்கு வாடகை கொடுக்கின்றன. இந்த தளங்களுக்கென தனியான விமானநிலையங்கள் உள்ளன. இந்த இராணுவத்தளங்கள் சுயாதீனமானவை. சுருக்கமாக சொன்னால், பிரிட்டிஷ் அரசிற்கு சொந்தமானவை. அங்கே பிரிட்டிஷ் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். பெருமளவு பிரிட்டிஷ் இராணுவவீரர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பிற பணியாளர்கள் அந்த தளங்களில் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். அங்கே பவுன் நாணயம் புழக்கத்தில் உள்ளது. (சைப்ரஸ் நாணயம் யூரோ). இதைவிட மலைப்பகுதியான துரூடோசில்(Troodos) பிரிட்டிஷ் செய்மதி தொடர்பு நிலையமொன்று, மத்திய கிழக்கு நாடுகளை கண்காணித்து வருகின்றது. ஈராக்கிற்கு அனுப்பபட்ட அமெரிக்க படைகள், இந்த தளங்களை பயன்படுத்தின.

சைப்ரஸ் என்ற குட்டித் தீவில், வடக்கே துருக்கி நாடு, தெற்கே கிரேக்க நாடு, பிரிட்டனின் கடல்கடந்த பகுதி என்ற மூன்று தேசங்கள் உள்ளன. அதனை மெய்ப்பிப்பது போல, வடக்கே துருக்கி கொடியும், தெற்கே கிரேக்க கொடியும், பிரிட்டிஷ் இராணுவதளங்களில் பிரிட்டிஷ் கொடியும் பறக்கின்றன.

- தொடரும்.....

முன்னைய பதிவு:
இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்




Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

No comments: