Saturday, August 18, 2012

ஐ.நா. அங்கீகரித்த, "நாடு கடந்த க்மெர் ரூஜ் அரசாங்கம்"

பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" -
 பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 9)

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஐ.நா. மன்றம் அங்கீகரித்து, சபையில் ஒரு ஆசனத்தையும் ஒதுக்கிக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சந்தர்ப்பத்தில், தமிழர்கள் பூமிக்கும் வானத்திற்கும் இடையில் துள்ளிக் குதித்து குதூகலிப்பார்கள். க்மெர் ரூஜ் இயக்கத்தின், "நாடுகடந்த கம்பூச்சிய அரசு", குறைந்தது பத்து வருடங்களாவது ஐ.நா. சபையில் அங்கம் வகித்தது. அதற்கு அமெரிக்காவும் பூரண ஆதரவு வழங்கியது. ஆனால், இன்று க்மெர் ரூஜின் நிலை என்ன? ஐ.நா. நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது, உலக மகா அயோக்கியர்களின் கூட்டணி என்பதை பலர் உணர்வதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பொம்மையாகவே ஐ.நா. செயற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், எப்படிப்பட்ட அரசையும் அங்கீகரிப்பார்கள். தேவை முடிந்து விட்டால், "இனப்படுகொலையாளர்கள்" முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்கள். ஈராக்கில் சதாம் ஹுசைன், யூகோஸ்லேவியாவில் மிலோசொவிச், லைபீரியாவில் சார்ல்ஸ் டெய்லர்... இந்தப் பட்டியல் மிக நீண்டது. இவர்கள் எல்லோரும், ஒரு காலத்தில் சர்வதேச சமூகத்தினால் ஆதரிக்கப் பட்டு, பின்னர் கைவிடப் பட்டவர்கள். அந்தப் பட்டியலில் தான், பொல் பொட்டும் அடங்குகின்றார். 

வியட்நாம் படைகளால் விரட்டப்பட்டு, தாய்லாந்தில் அடைக்கலம் கோரியிருந்த க்மெர் ரூஜ் இயக்கம், மெல்ல மெல்ல தன்னை மறுசீரமைத்துக் கொண்டது. உதிரிகளாக காடுகளுக்குள் அலைந்து கொண்டிருந்த போராளிகளும், ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப் பட்டனர். கம்போடியா முழுவதும் வியட்நாமிய படைகள் ஆக்கிரமித்திருந்தாலும், நகரங்கள் மட்டுமே அவர்களது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. சில கிராமங்களும், காடுகளும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றை வைத்துக் கொண்டு, மீண்டும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அமைக்க முயற்சிக்கப் பட்டது. 1975 க்கு முன்பிருந்த க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், பெரும்பாலும் கிழக்குப் பகுதியில், வியட்நாமிய எல்லையோரம் அமைந்திருந்தன.

ஆனால், 1979 க்குப் பின்னரான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், வட பகுதியில், தாய்லாந்து எல்லையோரம் அமைந்திருந்தன. க்மெர் ரூஜ் இயக்கம், தாய்லாந்து மண்ணில் தளம் அமைப்பதற்கு, தாய்லாந்து அரசு அனுமதி அளித்தது. அது ஒரு விசித்திரமான புனிதக் கூட்டணி. தாய்லாந்து, ஆசியாக் கண்டத்திலேயே அதி தீவிர கம்யூனிச எதிர்ப்பு நாடாகும். வியட்நாம் கம்யூனிசத்தை பிற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பது அதன் இலட்சியமாக இருந்தது. ஏற்கனவே, க்மெர் ரூஜ் தாய்லாந்து அரசுடன் சமரசம் செய்து கொண்டது. தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டது. இதனால், தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. 

அமெரிக்கா, தாய்லாந்து போன்ற முதலாளித்துவ நாடுகளின் உதவி கிடைப்பதால், "கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியை" கலைத்து விடுவதைக் பொல் பொட் அறிவித்தார். ஏற்கனவே அந்தக் கட்சி, க்மெர் ரூஜ் இயக்கத்தின் அரசியல் பிரிவாக மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது க்மெர் ரூஜ் வெறும் இராணுவவாத இயக்கமாக மாறி விட்டது. போராளிகளின் சீருடையும் மாறியது. வழக்கமான கறுப்பு நிற உழவர் உடைக்கு பதிலாக, பச்சை நிற சீருடை வழங்கப் பட்டது. இராணுவ நடவடிக்கைகளை தீர்மானிக்கும் தலைமைத் தளபதியாக பொல் பொட் இருந்தார். அவருக்குக் கீழே, சொன் சென், டா மொக், கியூ சாம்பன், நுவான் ஷியா போன்ற, பொல் பொட்டுக்கு விசுவாசமான தலைவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர். (ஏற்கனவே களையெடுப்பு என்ற பெயரில் பல மத்திய குழு உறுப்பினர்களும், தளபதிகளும் கொல்லப் பட்டு விட்டனர்.)

இவர்கள் ஆளுக்கொரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நிர்வகித்தார்கள். தாய்லாந்து எல்லைக்கு அருகில், காடுகளால் சூழப்பட்ட, உயரமான மலைப் பகுதியில் பொல் பொட்டின் தலைமையகம் அமைந்திருந்தது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட வீட்டை சுற்றி, சிறப்புப் படையணி ஒன்று காவல் காத்தது. விமானக் குண்டுவீச்சுகளில் இருந்து தப்புவதற்காக, ஆழமான பங்கர் வசிப்பிடம் ஒன்றும் கட்டப்பட்டது. அவர்களுக்கு வேண்டிய பணத்தை, வெளிநாட்டு புரவலர்கள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக அமெரிக்க அரசு, இலட்சக் கணக்கான டாலர்களை அள்ளிக் கொடுத்தது. சீனா வேண்டிய ஆயுதங்களை அனுப்பி வைத்தது. தாய்லாந்து மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தது.  

க்மெர் ரூஜ் அரசாங்கத்தை, ஐ.நா. மன்றம் தொடர்ந்தும் அங்கீகரித்து வந்தமை, அவர்களுக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி எனலாம். சீனாவும், அமெரிக்காவும், ஐ.நா. சபைக்கு அழுத்தம் கொடுத்து, ஆசனம் பறிபோகாமல் பார்த்துக் கொண்டன. குறைந்தது பதினான்கு வருடங்களாவது, க்மெர் ரூஜின் நாடு கடந்த அரசாங்கத்தை, கம்போடியாவின் அரசாக ஐ.நா. அங்கீகரித்து வந்தது. வியட்நாமிய படையெடுப்பு, சர்வதேச சட்டத்திற்கு முரணானது.  புதிய கம்போடிய அரசானது, வியட்நாமிய ஆக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பொம்மை அரசு என்பது எல்லோருக்கும் தெரியும்.

சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் சந்தர்ப்பவாதத்தை, ஏற்கனவே வியட்நாம் உணர்ந்திருந்தது. கம்போடிய படையெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் தான், சீனா-வியட்நாமிய எல்லைப் போர் நடந்தது. இந்திய-சீன எல்லைப்போரில் நடந்ததைப் போன்று, வியட்நாம் அவமானகரமான தோல்வியை சந்தித்திருந்தது. சீனப் படைகள், வியட்நாமுக்குள் நுழைந்து, இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறி, பிரதேசங்களை கைப்பற்றி பின்வாங்கி இருந்தனர். அந்த போரில், சோவியத் யூனியன் வியட்நாமுக்கு உதவ முன்வரவில்லை.  அதே நேரம், சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்திருந்தான. அன்று, சோவியத் யூனியனுக்கு வேறு பிரச்சினைகள் இருந்ததால், கம்போடியா விடயத்தில் தலையிடவில்லை. 

சீனா, அமெரிக்கா, ஐ.நா. மன்றம் போன்ற, உலகின் சக்தி வாய்ந்த நண்பர்கள் வாய்க்கப் பெற்றதால், வெகு விரைவில் கம்போடிய ஆட்சியதிகாரத்தை கைப்பற்றலாம் என்று க்மெர் ரூஜ் கனவு கண்டது. அது வெறும் கனவு மட்டுமே என்பது சில வருடங்களில் தெளிவானது. வியட்நாம் படைகளை வெளியேற்றி, க்மெர் ரூஜ் ஆட்சியைப் பிடித்தால் போர் முடிந்து விடும். அமெரிக்காவினதும், சீனாவினதும் நோக்கம் அதுவல்ல. கம்போடியாவில் போர் தொடர்ந்து நடக்க வேண்டும். வியட்நாமிய படையினர் தினம் தினம் செத்துக் கொண்டிருக்க வேண்டும். இறுதியில் வியட்நாமுக்கு பெருமளவு பொருள் நஷ்டம் ஏற்பட வேண்டும். அது மட்டுமே வல்லரசுகளின் நோக்கமாக இருந்தது.

வியட்நாமில் தான் பட்ட அவமானகரமான தோல்விக்கு பழிவாங்குவது, அமெரிக்காவின் நோக்கம். தீராத எல்லைத் தகராறு காரணமாக எதிரியான வியட்நாமை பழிவாங்குவது சீனாவின் நோக்கம். இதனால், வியட்நாமுக்கு எதிரான கம்போடிய விடுதலைப் போர் பத்தாண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. "உலகிலேயே மிக நீண்ட போராட்டங்களில் ஒன்று" என்று ஊடகங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. க்மெர் ரூஜ் இயக்கம் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி பெருமளவு இராணுவ வெற்றிகளைக் குவித்தது.  "க்மெர் ரூஜ் இயக்கத்தை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது", என்று சர்வதேச பார்வையாளர்கள் நம்பினார்கள். சர்வதேச ஊடகவியலாளர்கள், க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் சென்று செய்தி சேகரித்து வந்தனர். "இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விடுதலை வீரன்" பொல் பொட்டின் பேட்டிகள், அமெரிக்க பத்திரிகைகளை அலங்கரித்தன. 

பனிப்போரின் முடிவு, பல நாடுகளின் தலைவிதியை தலைகீழாக மாற்றிப் போட்டது. கம்போடியாவிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. வியட்நாமிய படைகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. க்மெர் ரூஜில் துரோகிப் பட்டம் கட்டப்பட்டு வெளியேறியவர்களை, புதிய கம்போடிய ஆட்சியாளர்களாக சர்வதேசம் ஏற்றுக் கொண்டது. கெரில்லாப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த க்மெர் ரூஜ் இயக்கம், கம்போடிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப் பட்டது. தனது நாட்டில் தளமமைக்க அனுமதித்த தாய்லாந்தும் அதனை வலியுறுத்தியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

வியட்நாமில் சோஷலிசம் மறைந்து, முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்ததது. அவர்கள் ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்திருந்தனர். அதனால் தாய்லாந்துக்கும், வியட்நாமுக்கும் இடையில் உறவு மலர்ந்தது. வியட்நாமுக்கு பின்னால் நின்று ஆதரித்துக் கொண்டிருந்த சோவியத் யூனியன் இப்போது இல்லை என்ற படியால், அமெரிக்காவும் க்மெர் ரூஜுக்கு உதவ வேண்டிய தேவையிருக்கவில்லை. அமெரிக்காவும், சோவியத் யூனியனும், கம்போடிய யுத்தத்தை தமது பதிலிப் போராக நடத்திக் கொண்டிருந்தன. ஆகவே, க்மெர் ரூஜ் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

"சர்வதேசம், புலிகளுக்கு எதிராக  வியூகம் வகுத்தது. அவர்களை மரணப் பொறிக்குள் தள்ளி விட்டது. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்து விட்டன..." என்று இன்றைக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அரசியல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.  சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், இதெல்லாம் கம்போடியாவிலும் நடந்துள்ளன. சர்வதேச சமூகத்தின் அதே வியூகம், அதே மரணப் பொறி. ஆனால், முடிவு மட்டும் வித்தியாசமாக அமைந்தது. க்மெர் ரூஜின் அழிவில் பல்லாயிரம் மக்கள் பலியாகவில்லை. ஏனெனில், க்மெர் ரூஜ் அரசின் படைப்பிரிவுகளும், அவற்றின் தளபதிகளும் தாமாகவே அரச படையுடன் கூட்டுச் சேர்ந்து விட்டனர்.

எல்லோருக்கும் துரோகி முத்திரை  குத்திக் கொண்டிருந்த, கமர் ரூஜ் அரசியலும், அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் குறைந்து, துரோகிகள் அதிகமாகி விட்டனர். "க்மெர் ரூஜின் துரோகி அரசியல் எல்லை மீறிப் போய், கடைசியில் பொல் பொட்டையும் துரோகியாக்கி ஓய்ந்தது." நோர்வே மத்தியஸ்தத்துடன் கையெழுத்தான ரணில்-பிரபா ஒப்பந்தம், புலிகளின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாக கருதப் பட்டது. அதே போன்று, 1991 ம் ஆண்டு, பிரான்சின் மத்தியஸ்தத்துடன் பாரிஸில் கைச் சாத்திடப் பட்ட ஒப்பந்தம், க்மெர் ரூஜின் முடிவுக்கு கட்டியம் கூறியது. பாரிஸ் சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் நடந்த தேர்தலை, க்மெர் ரூஜ் பகிஷ்கரித்தது. இராணுவத் தயாரிப்புகளுடன், மீண்டும் போருக்கு செல்வதே பொல் பொட்டின் நோக்கம். அதனை, பொல் பொட்டின் தவறான முடிவாக பலர் இன்று விமர்சிக்கின்றனர். 

"யுத்தம் முடிவுக்கு வர வேண்டும், தேர்தலில் பங்குபற்றினால் நிரந்தர சமாதானம் ஏற்படும்," என்பது போராளிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.  பெரும்பான்மையான போராளிகள், 25 வருட காலமாக யுத்தம் செய்து களைத்துப் போயிருந்தனர். ஆனால், க்மெர் ரூஜ் தலைமை போராளிகளின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தை, மீண்டும் போருக்கு தயார்படுத்துவதற்கான கால அவகாசமாக கருதிக் கொண்டது. கம்போடிய அரச படைகளும், அவ்வாறான எண்ணத்தில் தான் இருந்தன. ஆனால், சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து விட்டது. "ஆயுதப் போராட்டம் கடந்த காலம். ஆகவே க்மெர் ரூஜ் ஜனநாயக வழிக்கு திரும்ப வேண்டும்," என்று சர்வதேசம் கூறியது. ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக வழிக்கு திரும்பினால், தங்களை கொன்று விடுவார்கள் என்று பொல் பொட் அஞ்சினார்.

மீண்டும் போர் வெடித்தால், யாரும் உதவ மாட்டார்கள் என்பதை க்மெர் ரூஜ் தலைமை கணிப்பிடத் தவறியிருந்தது. ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில், புலிகளும் அதே மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகினார்கள். முப்பதாண்டு கால போரினால் களைத்துப் போய், சமாதானப் பேச்சுவார்த்தையை  நிரந்தரமாக்க வேண்டும் என்ற போராளிகளின் விருப்பம் புறக்கணிக்கப் பட்டது. சமாதானத்திற்கு அதுவே கடைசி சந்தர்ப்பம் என்பதையும், மீண்டும் போர் தொடங்கினால், சர்வதேசம் சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்து விடும் என்பதையும், புலிகள் கணிப்பிடத் தவறியிருந்தனர். கம்போடியாவில் க்மெர் ரூஜின் அழிவுக்கு எது காரணமாக இருந்ததோ, அதுவே ஈழத்தில் புலிகளின் அழிவுக்கும் காரணமாக இருந்தது.

நண்பர்களாலும், எதிரிகளாலும் கடும்போக்காளர் என்று கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் தான், புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கான வியூகம் வகுக்கப் பட்டது. அதே போன்று, கம்போடியாவில் ஹூன் சென் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பின்னர் தான், க்மெர் ரூஜின் வீழ்ச்சி ஆரம்பமாகியது. அது வரைக்கும், கம்போடியாவில் ஓரளவு ஜனநாயகம் நிலவியது.  க்மெர் ரூஜ்ஜின் அரசியல் பிரிவினர், ப்னோம் பென்னில் அலுவலகம் திறக்குமளவிற்கு,  எதிர்க் கட்சிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், ஹூன் சென் அனுப்பிய காடையர்கள், அலுவலகத்தை உடைத்து உள்ளே இருந்த க்மெர் ரூஜ் அரசியல் தலைவர்களை தாக்கினார்கள். மெல்ல மெல்ல, ஹூன் சென் சர்வாதிகாரியாக மாறிக் கொண்டிருந்தார். க்மெர் ரூஜுடன் சம்பந்தமற்ற, பிற எதிர்க் கட்சிகளுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப் பட்டன. பலர் கைது செய்யப் பட்டனர், அல்லது கடத்தப் பட்டனர். கம்போடிய மக்கள் தமது சுதந்திரத்தை, ஹூன் சென்னிடம் பறிகொடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையே, யுத்தம் மீண்டும் தொடங்கி விட்டதால், க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான போர் நடந்து கொண்டிருந்தது. 

க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், இயக்கத் தளபதிகளுக்குள் முரண்பாடுகள் தோன்றின. சட்டவிரோதமாக மரம் வெட்டி, தாய்லாந்துக்கு அனுப்பும் வணிகம் தொடர்பான இழுபறி காரணம் எனக் கருதப் படுகின்றது. தாய்லாந்துக்கு மரம் வெட்டி  அனுப்பும் தொழிலினால், க்மெர் ரூஜ் இயக்கத்தினருக்கு நிறைய வருமானம் கிடைத்து வந்தது. சில பொது மக்களும் இதனால் செல்வம் சேர்த்தார்கள்.  இது, க்மெர் ரூஜின் முந்திய கொள்கைக்கு,  முற்றிலும் முரணானது.  சில தளபதிகள், இன்னமும் பழைய சமுதாய அமைப்பை வைத்திருக்க விரும்பினார்கள். தமது ஆதரவாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, கூட்டுறவுப் பண்ணைகளை, கம்யூன் அமைப்பை செயல்படுத்தினார்கள். 

ஈழத் தமிழரில், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களாவது, புலிகளின் சமூகக் கட்டமைப்பின் கீழ் வாழ விரும்புபவர்கள் இருக்க மாட்டார்களா? குறிப்பாக விவசாயக் குடிகளை கொண்ட வன்னியில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள், அவ்வாறு புலிகளின் கொள்கைகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் தான். (யாழ் குடாநாட்டு நிலவரம் வேறு)  அதே போன்று, கம்போடியாவிலும் விவசாயக் குடிமக்களில் பலர், க்மெர் ரூஜ் கொள்கைகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால், சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தனிநபர் சொத்து சேர்ப்பதும், பணக்காரராவதும் அனுமதிக்கப் பட்டன. அது பற்றி, க்மெர் ரூஜ் தலைமையிடத்திற்கு மக்கள் முறையிட்டனர். இதனால் சில பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வந்தது. அந்தப் பொறுப்பாளர்கள், தமது போராளிகளுடன் பிரிந்து சென்று, அரச படைகளுடன் சேர்ந்து விட்டனர். இதனால், க்மெர் ரூஜ் இயக்கம் பெரிதும் பலவீனப் பட்டது. 

ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த சொன் சென், பொல் பொட்டின் பால்ய கால நண்பன். பாரிஸில் உயர்கல்வி கற்க சென்ற காலத்தில் இருந்தே பழக்கம். நீண்ட காலமாக, பொல் பொட் விசுவாசியாக இருந்ததால், களையெடுப்புக்கு தப்பிப் பிழைத்தவர். இப்பொழுது, தனது நெருங்கிய சகாவை தீர்த்துக் கட்டுமாறு, பொல் பொட் உத்தரவிட்டார். காரணம்? சொன் சென் துரோகியாகி விட்டார். ஆதாரம்? அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் கிடைத்த சில ஆவணங்கள். பொல் பொட்டின் உத்தரவின் பேரில், சொன் சென், அவரது மனைவி, பிள்ளைகள், மெய்க்காப்பாளர்கள், ஆதரவாளர்கள், என்று பத்துக்கும் குறையாதோர் படுகொலை செய்யப் பட்டனர்.

1997 ம் ஆண்டு, க்மெர் ரூஜ் இயக்க மூத்த தலைவரான சொன் சென்னின் படுகொலை, இயக்கத்தினுள் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்தது. இரண்டு காரணங்களுக்காக, அந்தக் கொலைகள் விமர்சனத்திற்குள்ளாயின.  சொன் சென் துரோகி என்றால், நாளை இயக்கத்தின் பிற தலைவர்களும் துரோகிககளாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படலாம். மேலும், சொன் சென் மட்டுமே துரோகி. சாக வேண்டியவர். ஆனால், அவரோடு தொடர்புடைய மற்றவர்கள், பிள்ளைகளும் துரோகிகளா? "சொன் சென்னையும், மனைவியையும் கொல்வதற்கு மாத்திரமே உத்தரவிட்டதாகவும், பிற கொலைகள் தவறான புரிதலால் தேவையற்று நடந்தவை," என்றும் பொல் பொட் பின்னர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.  உண்மையில் இன்னொரு தலைவரான டா மொக்கின் சதி அது என்று, இன்றைக்கு சில பொல் பொட் அபிமானிகள் தெரிவிக்கின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இருந்தது. 

நாளைக்கு தானும் துரோகியாக கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், டா மொக் முந்திக் கொண்டார். அவருக்கு விசுவாசமான போராளிகளின் முன்னிலையில், "பொல் பொட் ஒரு துரோகி" என்று அறிவித்தார். பொல் பொட்டை கைது செய்து அழைத்து வருமாறு, படை அனுப்பினார். டா மொக்கிற்கு விசுவாசமான படைகள், பொல் பொட்டின் மறைவிடத்தை சுற்றி வளைத்தன. பொல் பொட்டின் பாதுகாப்புக்காக நின்றிருந்த சிறப்புப் படையணி எதிர்ப்புக் காட்டவில்லை. பொல் பொட்டும், மெய்க்காப்பாளர்களும் தாய்லாந்து எல்லைக்கு தப்பியோடினார்கள். தாய்லாந்து இராணுவம் அவர்களை எல்லை கடக்க விடவில்லை. அவர்கள் அனைவரும், டா மொக்கின் படைகளால், சிறைப்பிடிக்கப் பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பொல் பொட்டை மட்டும் உயிரோடு வைத்துக் கொண்டு, மெய்க்காப்பாளர்களை சுட்டுக் கொன்றார்கள். பொல் பொட்டை கொல்லாமல் விட்டதற்கு சில காரணங்கள் இருக்கலாம். 
1. முதுமையும், பிணியும் வாட்டிய ஒரு வயோதிபர்  அதிக காலம் உயிரோடு இருக்கப் போவதில்லை.
2. சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், பொல் பொட்டை பிடித்து விட்டதாக காட்டி பெருமையடித்துக் கொள்ளலாம்.  
3. பொல் பொட் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த போராளிகளினதும், மக்களினதும் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லை. 

பொல் பொட்டை அழைத்து வரும் பொழுது, ஒரு பௌத்த மதகுருவை வணங்குவது போல, அங்கிருந்த போராளிகளும், மக்களும் வணங்கினார்கள். சர்வதேச  ஊடகங்களின் கமெராக்களுக்கு முன்னர், கடந்த கால படுகொலைகளுக்காக பொல் பொட் விசாரிக்கப் படுவதாக நீதிமன்ற நாடகம் நடந்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களில், படுக்கையில் வைத்து பொல் பொட் தனது இறுதி மூச்சை விட்டார். அவரது உடலை தகனம் செய்த இடத்திற்கு, இன்றைக்கும் மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் கிராமப்புற மக்கள், ஒரு புனிதரின் சமாதியை தரிசிப்பது போல, தமது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகின்றனர். பொல் பொட்டின் மரணத்தின் பின்னர், டா மொக்கின் படைகள் அரசுடன் சேர்ந்து விட்டன. சில வருடங்களில் டா மொக்கும் இயற்கை மரணம் எய்தினார்.  டா மொக் இயக்கத்தை காட்டிக் கொடுத்து துரோகமிழைத்து விட்டதாகவே உள்ளூர் மக்கள் பேசிக் கொள்கின்றனர். 

க்மெர் ரூஜ் இயக்கம் இன்று அழிந்து விட்டது. முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப் பட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் மட்டுமே க்மெர் ரூஜ் கால கொடுமைகளை மக்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர்.  க்மெர் ரூஜ் ஆதரவுத் தளமாக கருதப்பட்ட, குறிப்பிட்ட சில நாட்டுப் புறங்களில், யாரும் கடந்த காலம் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், க்மெர் ரூஜ் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரே கிராமத்தில் அக்கம்பக்கம் வாழ்கின்றனர். கடந்த காலம் பற்றி பேசி, வீணான சச்சரவுக்குள் மாட்டிக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. ஈழத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான நிலைமை காணப்படுகின்றது. ஒரே கிராமத்தில் அக்கம்பக்கம் வாழும் மக்கள், புலி ஆதரவாளர்களும், புலி எதிர்ப்பாளர்களுமாக பிரிந்திருக்கின்றனர். கம்போடியாவிலும், ஈழத்திலும் இத்தகைய அரசியல் பிரிவினை, சில நேரம் சமூக அல்லது வர்க்க முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றது.  

க்மெர் ரூஜ் அழிவுக்கு வித்திட்ட ஹூன்சென்னின் சர்வாதிகார ஆட்சி இன்றைக்கும் தொடர்கின்றது. கம்போடிய வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஊழல் மலிந்து காணப்படுகின்றது. தேசத்தின் இயற்கை வளங்கள் யாவும், அதிக விலை கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விலை போகின்றன. கம்போடியா இன்றைக்கும் உலகில் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று. பதினாறும் நிறையாத கம்போடிய சிறுமிகள், வியட்நாமின் இரவு விடுதிகளில் பாலியல் அடிமைகளாக விற்கப் படுகின்றனர். அந்தப் பிரச்சினைகளை கவனிப்பதற்கு, சர்வதேச சமூகத்திற்கு நேரமில்லை. அவர்கள் க்மெர் ரூஜ்ஜினால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களது மண்டையோடுகளை தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"
6. மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!
7. ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு
8.திருமணங்கள் இயக்கத்தினால் நிச்சயிக்கப் படுகின்றன



உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle
6. First They Killed My Father, by Loung Ung
7. When Slaves Became Masters: A true-life story of a little boy before, during and after the unfathomable evil of Pol Pot's regime, Rattana Pok

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8

Thursday, August 16, 2012

திருமணங்கள் இயக்கத்தினால் நிச்சயிக்கப் படுகின்றன

பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" -
 பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 8)



க்மெர் ரூஜ் ஆட்சி இவ்வளவு சீக்கிரமாக கவிழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் அதன் பலத்தில் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். வியட்நாமிய இராணுவம் கம்போடியாவின்  பல பகுதிகளை பிடித்த பின்னரும், "தொடர்ந்து சண்டை நடப்பதாகவும், எதிரிப் படைகள் கடும் இழப்புடன் பின்வாங்கிக் கொண்டிருப்பதாகவும்..." க்மெர் ரூஜ் வானொலி அறிவித்தது. பிராந்தியத் தளபதிகளும், போராளிகளும் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காது அலட்சியமாக இருந்தனர். வியட்நாமிய படைகள் அண்மித்த பின்னர், அவசர அவசரமாக பின்வாங்கி ஓடினார்கள். துவேல் ஸ்லேங்கில் உள்ள, S -21 சிறை முகாமும் வழமை போல, கைதிகளை விசாரித்துக் கொண்டும், சித்திரவதை செய்து கொண்டும் இருந்தது.

"அனைத்துக் கைதிகளையும் சுட்டுக் கொன்று விடும் படி," திடீரென மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதனால், நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான கைதிகள் (சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது) ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப் பட்டனர். அத்துடன் முகாமை நிர்வகித்தவர்கள் தப்பியோடி விட்டார்கள். சித்திரவதைக் கருவிகளை மறைப்பதற்கோ, அழிப்பதற்கோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவை தான் இன்றைக்கு, அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. ஒரு காலத்தில், க்மெர் ரூஜினால் "இனத் துரோகி" முத்திரை குத்தப் பட்டவர்கள், தமது உறவினர்களையும், நண்பர்களையும் S -21 முகாமிற்கு அழைத்துச் சென்று காட்டுகின்றார்கள். ஏனெனில் மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களும், க்மெர் ரூஜிற்குள் துரோகச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்  சாட்டப்  பட்டவர்களும் மட்டுமே, S -21 சிறையில் வைத்து சித்திரவதை செய்து கொல்லப் பட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இன்று உலகம் யாருக்கு சாதகமாகப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை, நான் இங்கே கூறத் தேவையில்லை.

அடுத்த பத்தாண்டுகளுக்கு, மீண்டும் கெரில்லா யுத்தம் செய்யவிருக்கும் க்மெர் ரூஜ் இயக்கத்தை காடுகளுக்குள் சந்திப்பதற்கு முன்னர், அவர்களது  தோல்விக்கான காரணங்கள் குறித்து  சிறிது அலசுவோம்.  எல்லோரும் க்மெர் ரூஜ் இயக்கத்தில் போராளிகளாக  சேர்த்துக் கொள்ளப் படவில்லை. கிராமப்புற விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே தெரிந்தெடுத்து சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பெரும்பாலானவர்கள் பருவ வயது  இளைஞர்கள், சிறுவர்கள். 12 வயது சிறுவர்கள் கூட போராளிகளாக இருந்தனர். இயக்கத்தில் புதிதாக சேரும் ஒருவர், முதன் முதலாக செய்ய வேண்டிய கடமை ஒன்றுள்ளது. சுய விமர்சனம் என்ற பெயரில், அவர் தனது வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும், ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் முன்னால் சொல்ல வேண்டும். அது எந்தளவு அந்தரங்கமாக இருந்தாலும், காதல் அனுபவத்தைக் கூட மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது போன்ற சுய விமர்சனம் செய்யும் போக்கு, ஈழ விடுதலை இயக்கங்கள் மத்தியிலும் காணப்பட்டன. குறிப்பாக, புளொட்(PLOTE) இயக்கத்தில் அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

புளொட் இயக்கத்தினுள் நடந்த உட்கட்சிப் படுகொலைகள் மிகவும் பிரசித்தமானது. புலிகளின் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில், அல்லது அதிகாரத்தில் இருந்தவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட குற்றத்திற்காக, தமது உறுப்பினர்களையே சித்திரவதை செய்து கொன்ற கதைகள், "புதியதோர் உலகம்" என்ற நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளன. மத்திய குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, உட்கட்சிக் கொலைகளுக்கு தப்பவில்லை. அதே மாதிரி தான், க்மெர் ரூஜ் இயக்கத்தின் உள்ளும் நடந்தது. பொல் பொட்டின் வலதுகரம் என்று கருதப்பட்ட டா மொக் (Ta Mok), எல்லோரையும் சி.ஐ.ஏ. உளவாளி என்று சந்தேகப்பட்டார். இதனால் பல அப்பாவிகளும், இயக்கத்திற்கும், புரட்சிக்கும் விசுவாசமாக நடந்த  போராளிகளும் கொல்லப் பட்டனர். அவர்களைக் கொல்லும் பொறுப்பு, இன்னொரு உறுப்பினருக்கு கொடுக்கப்படும். தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழர்களை கொல்ல மனமின்றி தயங்கினால், அவரையும் சேர்த்து சுட்டுக் கொன்று விடுவார்கள். சொந்த இயக்க உறுப்பினர்களின் உயிர்களை தாமே பறிப்பதை பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்தப் போக்கானது, பல அடி மட்டப் போராளிகள் மனதில், தலைமையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் ஒரு கிளர்ச்சிக்கு துணியவில்லை. ஆனால், மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். (வியட்நாமிய) எதிரி படையெடுத்து வந்த நேரம், யுத்தத்திற்கு  தயாராக இருக்கவில்லை. 

இனி, மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்று பார்ப்போம். கூட்டுறவுப் பண்ணைகளை கட்டாயமாக்கிய பொழுது, பலர் அதில் விருப்பமின்றி வேலை செய்தார்கள். ரஷ்யாவில், சீனாவில் நடந்ததைப் போல, அது கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களின் சொந்த முடிவாக இருக்கவில்லை. ஒரு நிர்வாகக் கட்டமைப்பு மேலிருந்து திணிக்கப் பட்டதாகவே மக்களால் புரிந்து கொள்ளப் பட்டது. சமத்துவ சமுதாயம் என்ற பெயரில், கலப்புத் திருமணங்கள் கட்டாயமாக்கப் பட்டன. அதாவது, ஒருவரின் வாழ்க்கைத் துணையை, இயக்கமே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். கம்போடிய சமூகத்தில் சாதிகள் கிடையாது. ஆனால், வர்க்க வேறுபாடுகள் உண்டு. பௌத்தம் (பெரும்பாலும் கமர் மக்கள்), இஸ்லாம் (காம் மொழி பேசும் மக்கள்), கிறிஸ்தவம்(வியட்நாமிய மொழி பேசும் மக்கள்) போன்ற மதப் பிரிவுகளும் உண்டு. இந்தப் பிரிவினர் எல்லாம், மண உறவின் நிமித்தம் கலந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர்.  

நமது நாட்டில், ஒரு "தமிழ் க்மெர் ரூஜ்", இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், ஏற்றத்தாழ்வான சாதிகளாக பிரிந்துள்ள மக்கள், சாதி கலந்து திருமணம் செய்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். நமது சமூகத்தை சேர்ந்த உயர்சாதியினர் அதனை வரவேற்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒருக்காலும் இல்லை. பொல் பொட், க்மெர் ரூஜ் போன்ற சொற்கள், அவர்கள் காதில் அபசுரமாக ஒலிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிராமணர்களும், பறையர்களும் மணம் முடித்து சேர்ந்து வாழ வேண்டிய நிலை வந்தால்? இந்துக்களும், முஸ்லிம்களும் கலப்புத் திருமணம் செய்ய வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டால்? பலருக்கு அதை கற்பனை செய்தாலே உடம்பெல்லாம் நடுங்கும். இந்த விடயமெல்லாம் உங்களுக்கு இப்போது தான் தெரிய வரலாம். ஆனால், பொல் பொட், க்மெர் ரூஜ் செய்த கொடுமைகளை பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் பலருக்கு, இதெல்லாம் ஏற்கனவே தெரியும். அவர்களின் கவலை எல்லாம், நேற்று கம்போடியர்களுக்கு ஏற்பட்ட நிலைமை, நாளைக்கு தங்களுக்கு வந்து விடக் கூடாது என்பது தான்.

க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில், தாம் விரும்பிய உணவை வாய்க்கு ருசியாக சாப்பிடுவதற்கு கூட தடை இருந்தது. வசதி இருப்பவர்கள் மட்டுமே, விதம் விதமாக சமைத்து உண்பார்கள். ஆனால், ஏழைகள் வெறும் கஞ்சியைக் குடித்து விட்டு திருப்திப் பட வேண்டிய நிலைமை, நமது நாட்டில் சர்வ சாதாரணம். க்மெர் ரூஜ் இயக்கம், அந்த தலையெழுத்தை மாற்றி அமைத்தது.  நாட்டில் உற்பத்தி அதிகமாகி, காய்கறி, பழங்கள், இறைச்சி தாராளமாக கிடைத்தால், அவை எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்கப் பட்டது. உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், அனைத்து மக்களும் கஞ்சியைக் குடித்தாவது வாழ வேண்டும். சில நேரம், மூன்று வேளையும் கஞ்சி குடிக்க வேண்டிய அவல வாழ்வுக்கும் கம்போடிய மக்கள் முகம் கொடுத்தனர்.  ஆனால், அது எப்போதும் அப்படித் தான் என்று கூற முடியாது. சில நேரம் வருடக் கணக்காக அப்படி இருக்கலாம். ஆனால், அடுத்த வருடமே அனைவருக்கும் கொஞ்சம் காய்கறி, பழம், இறைச்சி கிடைக்கலாம். சில நேரம், இடத்துக்கிடம் வேறுபடலாம். நேர்மையான பொறுப்பாளரின் இடத்தில் தாராளமாக உணவு கிடைக்கும். நேர்மையற்ற பொறுப்பாளர்கள், மக்களுக்கு கொடுக்காமல் பதுக்கினார்கள். எது எப்படி இருப்பினும், கம்போடியா முழுவதும், உணவு பொதுவாக சமைத்துப் பரிமாறப் பட்டது. அதாவது, யாரும் வீட்டில் சமைக்கக் கூடாது. ஒரு கம்யூனிற்கு பொதுவான சமையலறை, கம்யூன் உறுப்பினர்களுக்கு தேவையான நாளாந்த உணவை சமைத்து வழங்கும். மக்கள் எல்லோரும், ஒரு பொது இடத்தில் கூடி இருந்து சாப்பிட வேண்டும். சிலர் அதனை விரும்பாவிட்டாலும், அதற்குப் பெரிய எதிர்ப்பு தோன்றி இருக்கவில்லை. 

பல இடங்களில், பொதுவான கம்யூன் சமையல் முறையானது,  பெண் விடுதலையாக கருதப் பட்டது. தமிழ் சமூகத்தைப் போன்று, க்மெர் சமூகத்திலும் பெண்களே வீடுகளில் சமைப்பது வழக்கம். பொதுச் சமையல் திட்டம் வந்தவுடன், பல பெண்களுக்கு சமையல் கட்டில் இருந்து விடுதலை கிடைத்தது. நமது நாட்டில் இத்தகைய திட்டத்தை கொண்டு வந்தால், அதனை யார் எதிர்ப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். மேன் நிலை சாதிகளை சேர்ந்த தமிழர்கள், கீழ் நிலை சாதிகளை சேர்ந்தவர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிட விரும்புவார்களா? புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், போரினால் ஏற்பட்ட நெருக்கடியினால் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களில் இது போன்ற நிலைமை இருந்துள்ளது. உயர்சாதியினர் வேண்டா வெறுப்பாக, தாழ்த்தப் பட்ட சாதியினருடன் சமமாக இருந்து உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உயர்சாதியினரின் அபிலாஷைகளை மதிக்காததாலும், அவர்களுக்கு  மனதின் ஒரு மூலையில் புலிகள் மேல் வெறுப்பிருந்தது உண்மை. 

பெரும்பாலான சாதி அபிமானிகள் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தார்கள். ஆனால், அவர்கள் மீதும் புலிகள் விதித்த கட்டுப்பாடுகள், அவர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் அத்தகைய எண்ணப்போக்கு காணப்பட்டது. கம்போடியாவிலும் அவ்வாறான நிலைமை காணப்பட்டது. குறிப்பாக, ப்னோம் பென் போன்ற நகர்ப்புறங்களை சேர்ந்த மத்தியதர வர்க்க மக்களுக்கு, க்மெர் ரூஜ் விதித்த கட்டுப்பாடுகள் எதுவும் பிடிக்கவில்லை. இத்தனைக்கும், 1975 க்கு முன்னர், அவர்கள் க்மெர் ரூஜ்ஜின் போராட்டத்தை ஆதரித்தவர்கள். எண்பதுகளில், வியட்நாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக க்மெர் ரூஜ் கெரில்லாப் போராட்டம் நடத்திய போதும் ஆதரித்தார்கள். அதாவது, வியட்நாமியர்களை எதிர்த்துப் போராடும் க்மெர் ரூஜ் படை, அவர்களது க்மெர் தேசியவாத நலன்களை பூர்த்தி செய்வது விரும்பத் தக்கது. ஆனால், அவர்களால் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டிற்குள் வாழ முடியாது. இன்று பல புலம்பெயர்ந்த தமிழர்களும், இதே மாதிரியான மன நிலையைக் கொண்டிருப்பதை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

க்மெர் ரூஜ் ஆட்சியின் கீழ், அவர்களது விருப்பங்களை ஒறுத்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட, மத்திய தர வர்க்க மக்களும், க்மெர் ரூஜ் எதிர்ப்பாளர்களும், வியட்நாமிய படையெடுப்பை "விடுதலையாக" கருதியதில் தவறில்லை. பொல் பொட்டின் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள் தான். உதாரணத்திற்கு, பொல் பொட்டின் அண்ணனின் மனைவி ஒரு ஊரறிந்த பரத நாட்டிய ஆசிரியை. (கம்போடியர்களின் கலாச்சார நடனம், நம்மூர் பரத நாட்டியத்தை பெரிதும் ஒத்துள்ளது.) க்மெர் ரூஜ் ஆட்சி கவிழ்ந்த சில மாதங்களுக்குப் பின்னர், ப்னோம் பென் நகரில் தனது மாணவிகளின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினார். க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில், அதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டிருக்கும்!  "நிலப்பிரபுத்துவ கலாச்சாரம்" என்ற பெயரில், க்மெர் கலாச்சார நடனங்கள் தடைசெய்யப் பட்டிருந்தன. 

புராதன கம்போடியாவில், (பரத) நாட்டியமானது, இந்தியாவில் இருந்ததைப் போன்று, தேவதாசிகளின் கலையாக வளர்க்கப் பட்டு வந்துள்ளது.  இது போன்ற கலாச்சாரப் புரட்சி, நமது நாடுகளிலும் நடக்கலாம். பல தமிழ் தேசிய, இடதுசாரி அமைப்புகள், பரத நாட்டியம் போன்ற நிலப்பிரபுத்துவ கால கலைகளை எதிர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. வருங்காலத்தில் அவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால்...? புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், தென்னிந்திய சினிமாப்படங்கள் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும், சினிமாப் பாடல்களுக்கு நடனமாடுவதும் தடை செய்யப் பட்டிருந்தன. இன்றைக்கு அதெல்லாம் தாராளமாக அனுமதிக்கப் படுவதை சுட்டிக் காட்டியே, "தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக", சிறிலங்கா அரசு பீற்றிக் கொள்கின்றது. இன்றைய கம்போடியாவிலும் அது தான் நிலைமை. "க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில், மக்கள் தமது கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு கூட சுதந்திரம் இருக்கவில்லை. க்மெர் ரூஜ் அழிக்கப் பட்ட பின்னர் தான், மக்கள் சுதந்திரத்தை அனுபவித்தார்கள்." என்று மேலைத்தேய மனித உரிமைவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். 

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், புலிகளை ஆதரிப்பவர்கள்  யாரும் இப்போது இல்லை என்று கூற முடியாது. புலிகள் அமைப்போடு சம்பந்தப் பட்ட போராளிகள், அவர்களது குடும்பத்தினர், மற்றும் பல ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்வர். இறுதி யுத்தத்தில், அவர்கள் ஆயிரக்கணக்கில் வன்னியில் இருந்து வெளியேறி, தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். மற்றவர்கள் ஈழப் பிரதேசங்களில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த போதிலும், இழந்த சொர்க்கத்தைப் பற்றிய நினைவுகளை இரை மீட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று, வியட்நாம் படையெடுப்பின் பின்னர், க்மெர் ரூஜ் பின்வாங்கி ஓடிய பொழுது, அவர்களுடன் பெருமளவு மக்களும் சேர்ந்து ஓடினார்கள். க்மெர் ரூஜ் போராளிகளின் குடும்பங்கள், ஆதரவாளர்கள், ஆயிரக் கணக்கில் வெளியேறி தாய்லாந்திற்குள் தஞ்சம் புகுந்தனர்.  

தமிழகத்தில் ஈழத் தமிழ் அகதிகள் அனுபவிப்பதை விட பல மடங்கு துன்பங்கள், தாய்லாந்தில் கம்போடிய அகதிகளுக்கு காத்திருந்தன. அடைக்கலம் புகுந்த இடத்தில், அவர்களை கவனிக்க யாரும் இருக்கவில்லை. அகதி முகாம்களில் உணவு, சுகாதார வசதி எதுவும் கிடையாது. முகாம்கள், ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் பட்டி போன்று காணப்பட்டதாக, நேரில் சென்று வந்தவர்கள் கூறுகின்றனர். பெண்களை பாலியல் பலாத்காரப் படுத்துவது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது.  வியட்நாமிய படைகளுக்கு ஒளித்து, காடுகளுக்குள் மறைந்திருந்தவர்கள், குழுக் குழுவாக வந்து சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் காடுகளுக்குள் இலை, குழை, வேர்களை மட்டுமே உண்டு உயிர் பிழைத்தவர்கள். இந்த சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன? க்மெர் ரூஜ் இயக்கத்தை, குறிப்பிட்டளவு கம்போடிய மக்கள் ஆதரித்திருந்தனர் என்பதைத் தானே? அவர்கள் தாய்லாந்துக்கு அகதியாக சென்று இந்தளவு கஷ்டப் பட வேண்டும் என்று என்ன தலை எழுத்து? பேசாமல் தம்மை விடுதலை செய்த வியட்நாமிய படைகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு, கம்போடியாவிலேயே வாழ்ந்திருக்கலாமே? 

பெருமளவு கம்போடியர்கள் அவ்வாறு நினைத்து கம்போடியாவிலேயே தங்கி விட்டனர். "விடுதலையின் பின்னரான" அவர்களது மகிழ்ச்சி அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை. க்மெர் ரூஜ் கொடுங்கோன்மையில் இருந்து மக்களை விடுதலை செய்த வியட்நாமியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் போன்று நடந்து கொண்டனர். வீடுகள் உடைக்கப் பட்டு, பொது மக்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப் பட்டு, வண்டி வண்டியாக வியட்நாமுக்கு அனுப்பப் பட்டன. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். பல இடங்களில் படுகொலைகள் நடந்தன. ஆயிரக் கணக்கான சடலங்கள் மனிதப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டன. அந்தக் குற்றங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று வரை உலகம் மௌனம் சாதிக்கின்றது. வியட்நாமியரின் இனப்படுகொலையில் பலியான மக்களின் எண்ணிக்கை, க்மெர் ரூஜ் கணக்கில் சேர்த்து விடப் பட்டது. 

ஒரு காலத்தில் வியட்நாமிய படைகளை வரவேற்றவர்கள் கூட, பெருமளவில் கம்போடியாவை விட்டு வெளியேறினார்கள். அகதியாக தாய்லாந்தில் தஞ்சம் கோரினார்கள். நிலைமை தனக்கு சாதகமாக திரும்புவதை உணர்ந்த பொல் பொட், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவித்தார். வியட்நாமிய ஆக்கிரமிப்பில் இருந்து கம்போடியாவை விடுவிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கமாக, க்மெர் ரூஜ் தன்னை பிரகடனப் படுத்தியது. அதற்கு உதவ புதிய நண்பர்கள் காத்திருந்தார்கள். அமெரிக்காவும், மேற்கத்திய சார்பு நாடான தாய்லாந்தும், க்மெர் ரூஜுக்கு வேண்டிய அளவு நிதி, ஆயுதங்கள் கிடைக்க உதவினார்கள். நாடு கடந்த க்மெர் ரூஜ் அரசினை, கம்போடியாவின் உத்தியோகபூர்வ அரசாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கு, ஐ.நா. சபையில் கம்போடியாவிற்கான ஆசனத்தில், ஒரு க்மெர் ரூஜ் பிரதிநிதி வீற்றிருக்க அனுமதிக்கப் பட்டது.  

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"
6. மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!
7. ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு

உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8

Tuesday, August 14, 2012

ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு

பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" -
 பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 7)

விடுதலைப் புலிகள் அமைப்பில், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கருணா குழுவினரின் பிளவு, இறுதி யுத்தத்தில் அதனால் ஏற்பட்ட விளைவுகள், இவற்றை பல தமிழர்கள் விபரமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே மாதிரியான பிளவு, அதே மாதிரியான விளைவுகள், கம்போடியாவில் க்மெர் ரூஜ் இயக்கத்தினுள்ளும் நடந்துள்ளன என்பது அதிசயமல்லவா? சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வார்கள். ஒரு நாட்டில் நடந்த வரலாற்றுச் சம்பவங்கள், இன்னொரு நாட்டிலும் அதே போன்று நடக்க வாய்ப்புண்டு. இந்தக் காரணத்தால், நாங்கள் உலகின் பிற நாடுகளில் நடந்தவற்றையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "இன்னொரு நாட்டு மக்களின் பிரச்சினை எமக்குத் தேவையில்லை" என்ற மனநிலையில் பலர் இருக்கின்றனர். படித்தவர்களிடமும் காணப்படும் அத்தகைய  அறியாமை, சில நேரம் முழு சமூகத்தினதும் பின்னடைவுக்கு காரணமாகின்றது. ஆயிரம் மைல்களுக்கு அப்பால், கம்போடியா என்ற நாட்டில் நடந்த சரித்திர சம்பவங்கள், எமது நாட்டிலும் நடக்கலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஆனால், அது நடக்கிறது. 


க்மெர் ரூஜின் வீழ்ச்சிக்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கம்போடியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான பகையை புரிந்து கொள்வது அவசியம். க்மெர் மொழி பேசும் கம்போடிய மக்களுக்கு, தாய்லாந்து, வியட்நாம் இரண்டுமே பரம்பரை எதிரிகள் தான். பண்டைய கம்போடியாவின் மூன்றில் ஒரு பகுதியை, இவ்விரண்டு நாடுகளும் ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், இன்றைய க்மெர் மக்கள், தாய் (லாந்து) மக்களிடம் அதிகளவு வெறுப்பைக் காட்டுவதில்லை. ஆனால், வியட்நாமியர் மேல் அளவுகடந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர். சில நேரம், தாய் மக்களுக்கும், க்மெர் மக்களுக்கும் இடையிலான மொழி, கலாச்சார ஒற்றுமைகள் இனக் குரோதத்தை ஓரளவு தணித்திருக்கலாம். இப்பொழுதும், கம்போடியாவில் தாய்லாந்து திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் இரசிகர் பட்டாளம் இருக்கின்றது. ஆனால், வியட்நாமியர்கள் முற்றிலும் வேறுபட்ட மொழி பேசுவதும், வித்தியாசமான கலாச்சாரத்தை பேணுவதும், இனக்குரோதம் வளர்வதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஹிந்தி மொழி பேசும் வட நாட்டவருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு போன்றது என்று வைத்துக் கொள்வோம். 

பொல் பொட், மற்றும் க்மெர் ரூஜ் தலைவர்கள், வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு, தனியாக இயங்கத் தொடங்கியதை ஏற்கனவே பார்த்தோம். 1975 ல், க்மெர் ரூஜ் ஆட்சிக்கு வந்த பின்னர், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆயுதப்போராட்டம் நடந்த காலங்களில், இரு நாடுகளுக்கும் உதவிய சீனா மத்தியஸ்தம் வகித்தது. ஆனால், சர்வதேச சமூகத்தில் நடந்த மாற்றங்கள், சீனா-வியட்நாம்-கம்போடியா என்ற முக்கூட்டு உறவை பெரிதும் பாதித்தது. ஸ்டாலினுக்குப் பின்னர், சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இரண்டுமே போருக்குத் தயாரான பகை நாடுகள் போன்று காணப்பட்டன. சோவியத் யூனியன் ஒரு சமூக-ஏகாதிபத்தியம் என்று கூறி வந்த சீனா, அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. அதே நேரம், வியட்நாம் சோவியத் யூனியனுடன் நெருக்கமானது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பொதுவான எல்லையில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. இதனால், சீனா கம்போடியாவை நிபந்தனை இன்றி ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

வியட்நாமுடன் மோதல் நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர், சர்வதேச நண்பர்களை தேட வேண்டும் என்று, சீனா க்மெர் ரூஜ் அரசுக்கு அறிவுரை கூறியது. அதன் பிறகு தான், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் கம்போடியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டனர். இந்தோனேசிய, தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு கம்போடியாவில் அடைக்கலமும், இராணுவ பயிற்சியும் வழங்கப் பட்டன. இவற்றின் மூலம், க்மெர் ரூஜுக்கு ஓரளவு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.  அதை எல்லாம், க்மெர் ரூஜ் சமாதான வழியில் செல்வதற்கான சமிக்ஞையாக வியட்நாம் புரிந்து கொண்டது. ஆனால், க்மெர் ரூஜ் தலைமை, வியட்நாமுடனான பகை முரண்பாட்டை நீறு பூத்த நெருப்பாக வைத்திருந்த விடயம், காலம் தாழ்த்தித் தான் தெரிய வந்தது. விரைவில், கம்போடியாவில் ஒரு சகோதர யுத்தம் நடக்கப் போகின்றது என்பதை அன்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

1976 ம் ஆண்டு, வட பகுதியில் உள்ள சியாம் ரீப் நகரில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சிலர் கொல்லப்பட்டனர், கட்டிடங்கள் சேதமுற்றன. அந்த அசம்பாவிதம் குறித்து இரண்டு வகையான தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. அமெரிக்க விமானங்கள் குண்டுவீசியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், இயக்கத்திற்குள் தலைமையுடன் முரண்பட்ட குழுவினரின் கிளர்ச்சி நடப்பதாக, வெளிநாடுகளில் க்மெர் ரூஜ் எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். வெளியார் யாரும் நுழைய முடியாத, க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடப்பது எதுவும் வெளியே தெரிய வருவதில்லை. இதனால், வதந்திகள் பரவுவதையும் தடுக்க முடியாது. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்  பிரதேசத்திற்குள் கிளர்ச்சிகள் நடந்ததாக, வெளிநாடுகளில் வாழ்ந்த புலி எதிர்ப்பாளர்கள் வதந்திகளை பரப்பி வந்தமை இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. வன்னியில் புலிகளின் நிலைகளை, சிறிலங்கா வான்படை விமானங்கள் தாக்கிய சம்பவங்கள் காரணமாக, இயக்கத்தில் பொறுப்பாக இருந்தவர்களும் சந்தேகிக்கப் பட்டதை மறுக்க முடியாது. 

குறிப்பாக, புலிகள் இயக்க பிரதித் தலைவர் மாத்தையாவின் துயரமான முடிவு, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. கிட்டுவின் ஆயுதக்கப்பல் பிடிபட்ட சம்பவத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில், பிரதித் தலைவர் மாத்தையா கைது செய்யப் பட்டிருந்தார். நீண்ட காலமாக, பிரத்தியேகமான சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். மாத்தையா ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். அதே மாதிரியான சம்பவங்கள், அன்றைய கம்போடியாவினுள்ளும் நடந்து கொண்டிருந்தன. சியாம் ரீப் குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில், வட பிராந்திய தளபதியும், வர்த்தக அமைச்சருமான துவோன் கைது செய்யப்பட்டார். 

புலிகள், மாத்தையா விவகாரத்தை, இயக்க உறுப்பினர்களுக்கே தெரிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்ததைப் போல, துவோன் கைது விவகாரமும் வெளியிடப்படவில்லை. வட பிராந்தியத் தளபதியாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். துவோன் கைதுக்குப் பின்னர், அவரின் விசுவாசிகள் கலகம் செய்யலாம் என்று, தலைமை அஞ்சியது. வட பிராந்தியத்தில் துவோன் விசுவாசிகள் என்று கருதப்பட்டவர்களின், ஆயுதங்கள் களையப்பட்டு, விசேட சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டனர். அவர்களின் இடத்தை, புதிய போராளிகள் நிரப்பினார்கள். ஈழத்தில் மாத்தையாவுக்கும், மாத்தையா விசுவாசிகளுக்கும் என்ன நடந்ததோ, அது கம்போடியாவில் துவோனுக்கும், துவோன் விசுவாசிகளுக்கும் நடந்தது. கதை ஒன்று, நாடுகள் தான் வேறு வேறு.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், கிழக்குப் பிராந்திய ஜெனரல் ஒருவரும், அவரது விசுவாசிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் விசேட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும், க்மெர் ரூஜ் இயக்கத் தலைவர்கள், போராளிகளாக இருந்தனர். அவர்களை எல்லாம் விசாரிப்பதற்கென தனியாக உருவாக்கப்பட்ட சிறைக்கு S -21 என்று பெயரிடப் பட்டது. ப்னோம் பெண் நகருக்கு தெற்கில் உள்ள,  துவோல் ஸ்லேங் என்ற இடத்தில் பயன்பாட்டில் இல்லாத பாடசாலை ஒன்று இதற்கென ஒதுக்கப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சர் சொன் சென்னின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்த தடுப்பு முகாம் இயங்கியது. அங்கே கொண்டு செல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்திரவதைக்கு ஆளானார்கள். சித்திரவதையின் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள், வேறிடத்திற்கு கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். 1979 ம் ஆண்டு, கம்போடியா மீது படையெடுத்த வியட்நாமிய  இராணுவம், அந்த சிறை முகாமை, க்மெர் ரூஜ் கால கொடுமைகளைக் காட்டும் அருங்காட்சியகமாக மாற்றி விட்டது. இன்று கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த இடத்தை சென்று பார்க்கத் தவறுவதில்லை. இன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில், "S -21 சித்திரவதைக் கூடம்" பற்றிய ஆவணப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.  

1976 ம் ஆண்டின் இறுதியில், சித்திரவதை முகாமில் வைத்து, சுக், நே சரண், சாக்ரி, கியோ மியஸ் போன்ற முக்கிய தலைவர்களும், நூற்றுக் கணக்கான முன்னாள் போராளிகளும், சதியில் ஈடுபட்டதகாக ஒத்துக் கொண்டனர்.  வியட்நாம் புலனாய்வுத் துறையின் உத்தரவின் படி, "கம்போடிய தொழிலாளர் கட்சி" என்ற புதிய கட்சியை உருவாக்குவதற்கு முயன்றதாக, பொல் பொட்டை கொலை செய்ய முயன்றதாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, வெளியில் யாராலும் ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. 

அதே நேரம், சித்திரவதையால் பெறப்பட்ட வாக்குமூலங்களை நம்பும் அளவிற்கு பொல் பொட் முட்டாளுமல்ல.  "குற்றம் சாட்டப்பட்டவர்கள், வியட்நாமுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்று கருதிய மிதவாதிகள். அப்படியான மிதவாதப் போக்கு கூட பொல் பொட்டை பொறுத்த வரையில் துரோகம்." என்று பெரும்பாலான கம்போடிய மக்கள் நம்புகின்றனர். ஈழப் போராட்டத்திலும் அதே மாதிரியான கதைகளை கேள்விப் பட்டிருப்போம். "புதிய கட்சி (விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி) ஒன்றை நடத்திய மிதவாதப் போக்கிற்காகவும்,  இந்திய புலனாய்வுத் துறையான ரோ வின் உத்தரவின் படி, பிரபாகரனை கொல்லத் திட்டமிட்டதற்காகவும்," மாத்தையா மீது புலிகள் இயக்கத்தினுள் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக கூறப் படுகின்றது. 

தமிழர்களுக்கும், க்மெர்களுக்கும் பொதுவான பழைமைவாதக் கலாச்சாரம் ஒன்றுண்டு. ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பழிவாங்கக் காத்திருப்பார்கள். இதனால், மாறி மாறி, சம்பந்தப் பட்ட குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப் படுவார்கள்.  பழிக்குப் பழி வாங்குவதற்காக, முழுக் குடும்பத்தையும் அழிக்கும் நாயகர்களை, வில்லன்களை எத்தனை தமிழ் சினிமாப் படங்களில் பார்த்திருப்பீர்கள்?   குழந்தை வளர்ந்து பெரியவனாகி பழிவாங்கி விடும் என்று, அதனையும் கொல்வார்கள். க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்திலும், அதெல்லாம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. 

சி.ஐ.ஏ.,கே.ஜி.பி.,வியட்நாமுக்காக உளவு பார்த்த குற்றச் சாட்டில், ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதே நேரம், அவர்களது பெற்றோர், சகோதரர்கள், மாமன், மச்சான், அவர்களது பிள்ளைகள் எல்லோரும் கொல்லப் பட்டனர். ஒரு குடும்ப உறுப்பினரை உயிரோடு விட்டு வைத்தால் கூட, அவன் நாளைக்கு பழிவாங்க வருவான் என்பது க்மெர் மக்களின் நம்பிக்கை. இலங்கையில், ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் அது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கேள்விப் படுகின்றோம். படையினர், ஜேவிபி உறுப்பினரின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த கதைகளும், பழிக்குப்பழியாக படையினரின் குடும்பங்களை ஜேவிபியினர் அழித்த கதைகளும், தென்னிலங்கையில் மலிந்து கிடக்கின்றன. 

1977 ம் ஆண்டு, துரோகிகள், சதிகாரர்கள் அனைவரையும் வெற்றிகரமாக களையெடுத்து விட்டதாக பொல் பொட் அறிவித்தார்.  புலிகளின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும், க்மெர் ரூஜின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும் இடையில் சில வித்தியாசங்களும் இருந்தன. புலிகள் இயக்கத்தை தவிர்ந்த, மாற்று இயக்க சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத பொழுது மட்டும், அவர்களது குடும்ப உறுப்பினர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தனர். ஒரு சிலர் பழிவாங்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே. பல உறவினர்கள், தாமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். பலர் வெளிநாடுகளுக்கும், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் சென்றனர். 

கம்போடியாவிலும், க்மெர் ரூஜினால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வியட்நாமுக்கு தப்பி ஓடினார்கள். க்மெர் ரூஜ் காரர்கள்,  உளவாளிகளை களையெடுக்கும் விஷயம், அப்பொழுது தான் வியட்நாமுக்கு தெரிந்தது. ஆனால், வியட்நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அதை சாட்டாக வைத்து கம்போடியா மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியது. சோவியத் யூனியனுடன் இராணுவ ஒப்பந்தம் போட்டது.  ஆனால், 1978 வரையில் வியட்நாம் படையெடுப்பு பற்றி யோசித்திருக்கவில்லை. அநேகமாக, க்மெர் ரூஜ் இயக்கத்தினுள் ஒரு பெரும் உடைவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். அந்தக் காலமும் வந்தது. 

புலிகள் மாத்தையாவை கைது செய்த உடனேயே, வன்னியை சேர்ந்த மாத்தையா விசுவாசிகளையும் இலகுவாக அடக்க முடிந்தது. ஆனால், கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவை, அத்தனை இலகுவாக கையாள முடியவில்லை. கருணாவுக்கு எதிராக, கருணாவுக்கு கீழே கட்டுப்பட வேண்டிய கமாண்டர்களின் அணிகள் அனுப்பப் பட்டன. அவர்கள் கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்த போதிலும், கருணாவும், அவரது விசுவாசிகளும் சிறிலங்கா அரசிடம் தஞ்சம் புகுந்தனர். சிறிலங்கா படையினருடன் சேர்ந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான படையெடுப்புகளில் பங்கெடுத்திருந்தனர். இது இவ்வளவும், கம்போடியாவிலும் நடந்துள்ளது! 

வியட்நாம் எல்லையோரமாக உள்ள கிழக்குப் பிராந்தியத் தளபதியின் பெயர் சோ பிம். மத்திய பகுதி கமாண்டர் கே பவுக், அவருக்கு கீழ்ப்படிய வேண்டிய கமாண்டர். "சோ பிம் துரோகியாகி, வியட்நாமின் கைக்கூலியாக செயற்படுவதாக", பொல் பொட்டுக்கு தகவல் கிடைத்தது. பொல் பொட்டின் உத்தரவின் பெயரில், கே பவுக்கிற்கு விசுவாசமான படையணிகள், கிழக்குப் பிராந்தியத்தை முற்றுகையிட்டன. சோ பிம்முக்கு விசுவாசமான நூற்றுக் கணக்கான போராளிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து, அவர்களது ஆயுதங்களை பறித்தார்கள். அந்தப் போராளிகள் அனைவரும், S -21 முகாமுக்கு அனுப்பப் பட்டு, பின்னர் கொல்லப் பட்டனர்.  அப்பொழுதும் சோ பிம், பொல் பொட் மீது நம்பிக்கை வைத்திருந்தார். பொல் பொட்டிடம் பேசுவதற்கென்று சென்ற வழியில், இன்னொரு படையணியால் வழிமறிக்கப் பட்டு கொல்லப் பட்டார். 

இருந்தாலும், கே பவுக்கின் படைகள், கிழக்குப் பிராந்தியத்தை அவ்வளவு இலகுவாக கட்டுப்படுத்த முடியவில்லை. கிழக்குப் பிராந்திய போராளிகள், க்மெர் ரூஜ் தலைமைக்கு கட்டுப் பட மறுத்தனர். ப்னோம் பென்னில் இருந்து அனுப்பப் பட்ட படைகளுக்கு எதிராக, சிறிது காலம் மறைந்திருந்து தாக்கினார்கள். ஆனால், விரைவிலேயே தமது பக்க பலவீனத்தை  உணர்ந்து, வியட்நாமுக்கு தப்பியோடினார்கள். வியட்நாமிடம் தஞ்சம் கோரிய முன்னாள் க்மெர் ரூஜ் போராளிகளை வைத்து, வியட்நாம் தனது நலன்களை பாதுகாக்கும் ஒட்டுக்குழுக்களை உருவாக்கியது. 1979 ம் ஆண்டு, வியட்நாமிய இராணுவம் படையெடுத்த பொழுது, க்மெர்  துணைப்படைகளும் சேர்ந்து கொண்டன.

வியட்நாமிய படையெடுப்பை எதிர்கொள்ள முடியாத க்மெர் ரூஜ் இயக்கம், காடுகளுக்குள் பதுங்கியது. அன்றைக்கு, துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு க்மெர் ரூஜில் இருந்து வெளியேற்றி, எதிரியிடம் சரணடைந்தவர்கள், இன்று கம்போடியாவை ஆட்சி செய்கின்றனர். அந்த "இனத் துரோகிகளை", இன்று உலகம் "ஜனநாயகவாதிகள்" என்று புகழ்கின்றது. கடைசி வரை, கம்போடிய மண்ணை விட்டுக் கொடாமல் போராடிய க்மெர் ரூஜ் போராளிகளை, இன்று உலகம் "இனப் படுகொலையாளர்கள்" என்று தூற்றுகின்றது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கம்போடியா மீது படையெடுத்து, இலட்சக் கணக்கான மக்களை படுகொலை செய்த வியட்நாமிய படையினரை, இன்று உலகம் "விடுதலை வீரர்கள்" என்று போற்றுகின்றது. இருபது வருடங்களில், உலகம் தலைகீழாக மாறி விட்டது!

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"
6. மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!


உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8


Monday, August 13, 2012

மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 6)
"உலகிலேயே மிகவும் இரகசியமான, கட்டுகோப்பான இயக்கம்", என்றெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் புகழப் பட்டது போன்று, எழுபதுகளில் க்மெர் ரூஜ் இயக்கம் புகழப்பட்டது. ஒரு காலத்தில், புலிகளுக்கு கிடைத்ததை விட, பல மடங்கு அதிகமான சர்வதேச அங்கீகாரம் க்மெர் ரூஜுக்கு கிடைத்திருந்தது. சுமார் பதினான்கு வருடங்களாக, க்மெர் ரூஜ் அரசை, "கம்போடிய மக்களின் ஏக பிரதிநிதியாக", ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து வந்தது. இன்று, அதே ஐ.நா. மன்றம், நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு, க்மெர் ரூஜ் கால இனப்படுகொலையை விசாரிக்கும்  வேடிக்கையான நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

க்மெர் ரூஜ் இயக்கத்தின் உள்கட்டமைப்பை ஆராய்ந்தால், சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பெண்களின் படையணிகளும், ஆண் போராளிகளுக்கு நிகராக போரிட்டு வந்துள்ளன. ஈழம் போன்று, பழைமைவாத கலாச்சாரத்தில் ஊறிய கம்போடிய சமுதாயத்தில், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஆயுதமேந்திப் போராடுவதென்பது, ஒரு மாபெரும் சமூகப் புரட்சி ஆகும். க்மெர் ரூஜ் போராளிகள், இறுதி வெற்றி கிடைக்கும் வரையில் திருமணம் செய்யத் தடை இருந்தது. (அதே நேரம், தலைவர்கள், தளபதிகள், மணம் முடித்து, குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.) முகாமில் இயக்கப் பாடல்களை மட்டுமே கேட்க முடியும். சினிமாப் பாடல்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. கம்போடியா முழுவதும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், இயக்கப் போராளிகளுக்கு இருந்த விதிகள் எல்லாம், பொது மக்களுக்கும் செல்லுபடியானது. 

நாட்டுக்காக போராட கிளம்பிய போராளிகள், "இல்லற வாழ்வை துறந்து, துறவு நிலை வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொண்ட புனிதர்கள்" போன்று பொது மக்களால் கருதப் பட்டனர். இந்து மத வேர்களைக் கொண்ட, தேரவாத பௌத்த நாடான கம்போடியாவில், சிறுவயதிலேயே துறவறம் பூணுவது, சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.  பெற்றோர்கள் தம் பிள்ளைகளை, இளம் பிக்குகளுக்கான பாடசாலையில் சேர்த்து விடுவார்கள். அது கட்டாயமில்லா விட்டாலும், பல பெற்றோருக்கு அது ஒரு சமூக அந்தஸ்து அல்லது பெருமைக்குரிய விடயம். சாலோத் சார் (பொல் பொட்) கூட, பிரபலமான விகாரைப் பள்ளி ஒன்றில் பிக்குவாவதற்கு படித்து, பட்டம்  பெற்றவர் தான். ஆகையினால், பிற்காலத்தில் கம்போடிய மக்களின் வாழ்க்கையயை தீர்மானித்த கடுமையான க்மெர் ரூஜ் சட்டங்களும், ஒரு மதத்தின் கடும்போக்கு விதிகளைப் போன்று காண்டப்பட்டன. 

கிராமங்களில் அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பண்ணைகளில் (கம்யூன்), அனைவரும் கட்டாயமாக வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். வயல்களில், அல்லது   கட்டுமானப் பணிகளில், அதிக உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். (விதிவிலக்காக முன்னாள் ஆலைத் தொழிலாளர்கள், தலைநகரத்தில் இருந்த தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அனுப்பப் பட்டிருந்தனர்.) பகல் முழுவதும் வேலை செய்த மக்கள், இரவில் தங்குவதற்கு ஓலைக் கொட்டில்கள் கட்டப் பட்டிருந்தன. அவற்றை வீடுகள் என்பதை விட, முகாம்கள் என்று அழைப்பதே பொருத்தம். ஆண்கள் ஒரு முகாமிலும், பெண்கள் இன்னொரு முகாமிலுமாக தனியாக பிரித்து வைக்கப் பட்டனர்.

பிள்ளைகள் பெற்றோருடன் தங்க அனுமதிக்கப் படவில்லை. அவை பிற பிள்ளைகளுடன் தனியான முகாம் ஒன்றில் தங்க வேண்டும். இதனால், குடும்பங்கள் பிரிந்து வாழ்ந்தன.  (இயக்கப் பொறுப்பாளர்கள், தலைவர்களின் குடும்பங்களும் அவ்வாறு பிரிந்து வாழ்ந்தன.) கணவன், மனைவி சேர்ந்திருப்பதற்கும், பெற்றோர் பிள்ளைகளை பார்க்கவும், இயக்கம் நேரம் ஒதுக்கிக் கொடுத்தது. தனி நபரின் விருப்பங்கள், குடும்ப உறவுகள் எல்லாம் இயக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவை. இந்து மத ஆன்மீகத்தில் கூறப் படும், "நான்" என்ற அகந்தை அடக்கப் பட வேண்டும். க்மெர் ரூஜ் ஆட்சியில், யாரும் "நான்" என்று சொல்லக் கூடாது. "நாம்" என்று சொல்ல வேண்டும். கடவுளிடம் கருணை காட்டுமாறு கேட்பதைப் போன்று, இயக்கத்திடம் யாசிக்க வேண்டும். அன்னாசிப் பழத் தோல் போன்று, இயக்கத்திற்கு ஆயிரம் கண்கள் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர். 

க்மெர் ரூஜ் இயக்கத்தினர் விதித்த கட்டுப்பாடுகள், எத்தனை கடுமையாக இருந்த போதிலும், மக்கள் அதனை விமர்சிக்க அஞ்சினார்கள். யாருக்கும் அரசியலில் கருத்துக் கூறும் துணிவு இருக்கவில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதர்களாக, அன்றாட கடமைகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டு வாழ்ந்தார்கள். ஏற்கனவே கருத்துக் கூறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியுமாகையால், மக்கள் வாயை மூடிக் கொண்டு காலத்தைக் கழித்தார்கள்.  நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடனும் தமது குறைகளை பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், நம்பிக்கைக்குரியவர் என்று நீங்கள் நினைக்கும் யாரும், க்மெர் ரூஜ் உளவாளியாக இருக்கலாம். எவராவது பக்கத்தில் பதுங்கி இருந்து ஒட்டுக் கேட்கலாம். இரவில் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதை தவிர்த்தார்கள். "சாப்பிடுவதற்கும், மூச்சு விடுவதற்கும் மட்டுமே வாய் திறக்க வேண்டும்."  என்பது அடிக்கடி கேட்கும் புத்திமதி ஆகும்.  இலங்கையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்திலும், இதே போன்ற நிலைமை காணப்பட்டது. யாழ்ப்பாணத்திலோ, வன்னியிலோ, புலிகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள், தங்கள் அனுபவங்களை இப்போதும் நினைவுகூருகின்றனர். 

தடை செய்யப்பட்ட மாற்று  இயக்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், தமக்கெதிராக சதி செய்யலாம் என்று புலிகள் அஞ்சியதைப் போல, க்மெர் ரூஜ் தலைமையும் நடந்து கொண்டது. முன்பிருந்த கம்போடிய அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, மன்னராட்சி அனுதாபிகள், ஜனநாயக வழியில் இயங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். அவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும், மக்களிடம் இருந்து பிரித்தெடுக்கப் பட்டு, சிறை வைக்கப் பட்டனர். பெரும்பாலானோர் விசாரணையின் பின்னர் கொல்லப் பட்டனர். எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டும் சந்தேகிக்கப் படவில்லை. உதாரணத்திற்கு, (பொல் பொட் தலைவராக நியமிக்கப் பட்ட) 1960 ம் ஆண்டு, கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கமாக அறிவிக்கப் பட்டது.  இதனை பல மூத்த உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். ஏனெனில், ஒன்பது வருடங்களுக்கு முன்னர், 1951 ம் ஆண்டு, (வியட்நாமியர்களின் உதவியுடன்) கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட தகவல், ஏற்கனவே வரலாற்றில் பதியப் பட்டிருந்தது. அந்த வரலாற்றுத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வாதாடிய, தலைவர்கள், உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். "வியட்நாமிய கைக்கூலிகள்" என்று குற்றம் சாட்டப் பட்டு கொலை செய்யப் பட்டனர்.

க்மெர் ரூஜ் ஆண்ட கம்போடியாவில், மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டும் சந்தேகிக்கப் படவில்லை. ப்னோம் பென் போன்ற நகரங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களும், அவர்களது சமூகப் பின்னணி காரணமாக சந்தேகப் பட்டியலில் இருந்தனர். நகரங்களில் நவீன ஆடை, அணி கலங்களை, "பேஷன்" பார்த்து அணிந்து பழக்கப்பட்ட மக்கள், தற்பொழுது கறுப்பு நிற சீருடை மட்டுமே அணிய வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர். கம்போடியாவின் விவசாயக் குடிமக்கள், காலங்காலமாக கறுப்பு நிற உடை அணிவது வழக்கம். தோளில் எப்போதும், சிவப்பும் வெள்ளையும் கலந்த சால்வை ஒன்று தொங்கும். உச்சி வெயிலில் வேலை செய்யும் நேரம், அதனை தலைப்பாகை போன்று கட்டிக் கொள்வார்கள். முகம் கழுவி விட்டு, அந்த துண்டால் துடைத்துக் கொள்வார்கள். 

"உழவர்களின் உடை", கம்போடிய மக்களின் பொதுவான ஆடையாக்கப் பட்டது. நமது நாட்டில் எல்லோரும், கிராமப்புற விவசாயிகள் போன்று, வேட்டியை  மடித்துக் கட்டி, தோளில் சால்வை அணிந்து சென்றால் எப்படி இருக்கும், என்பதை கற்பனை செய்து பாருங்கள். மேலும், நகரத்தில் வாழ்ந்த காலத்தில், மடிப்புக் குலையாத சட்டை போட்டுக் கொண்டு, குளிரூட்டிகள் பொருத்திய அலுவலகத்தில் வேலை செய்தவர்கள்; கொதிக்கும் வெயிலில், வயலில் சேற்றுக்குள் நின்று கொண்டு நெல் பயிரிடும் காட்சியையும் நினைத்துப் பாருங்கள். க்மெர் ரூஜின் ஆட்சிக் காலத்தில், அத்தகைய "கொடுமைகளை" அனுபவித்த மத்தியதர வர்க்கம், எந்தளவு வன்மத்தை மனதில் வைத்திருந்திருக்கும்?

நாளையே தமிழ் நாட்டில் ஒரு "தமிழ் க்மெர் ரூஜ் இயக்கம்" அதிகாரத்திற்கு வந்தால், சொகுசாக வாழ்ந்த மேட்டுக்குடியினரை வயலில் வேலை செய்ய வைக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைத் தடுப்பதற்கு ஒரே வழி, இப்பொழுதே "பொல் பொட், க்மெர் ரூஜ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை" தீவிரமாக நடத்த வேண்டும். "பொல் பொட் இருபது இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்த கொலை வெறியன்" என்ற செய்தியை மட்டும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். "எதற்காக கொலை செய்தார்கள்?" என்ற காரணம் எல்லாம் எமக்குத் தேவையில்லை. "பொல் பொட் கொலை செய்வதில் இன்பம் கண்ட மன நோயாளி." அது மட்டுமே காரணம்.  

பொல் பொட்  உருவாக்கிய, "புதிய சமத்துவ சமுதாயத்தில் சேர மறுத்ததால், சாதாரண விவசாயியாக வேலை செய்வதற்கு சுய கெளரவம் இடம் கொடுக்காததால்," ஆயிரக் கணக்கான மத்திய தர வர்க்க மக்கள் கொல்லப் பட்டனர். அது தலைமை இட்ட கட்டளையாக இருக்கவில்லை. ஆனால், கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகளான, படிப்பறிவற்ற க்மெர் ரூஜ் போராளிகள் மத்தியில், தமது சொல்லுக்கு கட்டுபடாதவர்களை கொன்று விடும் முரட்டுத் தனம் மேலோங்கிக் காணப்பட்டது. அது ஒரு வர்க்க முரண்பாடு, அல்லது வென்றவர்கள் தோற்றவர்களை பழிவாங்கும் வெறிச் செயல் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜி அரசில் பணியாற்றிய, அல்லது ஆதரவளித்த சந்தேகத்தின் பெயரில் பலர் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் மட்டுமே, இலட்சக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும் பொழுது, கம்போடியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு எனலாம். 

கம்போடியாவின் அனைத்துப் பிரைஜைகளும், வயல்களில் வேலை செய்ததால், வேலை குறைவாகவும், ஆட்கள் அதிகமாகவும் இருந்தனர். வேலை கடினமாக இருக்கவில்லை. ஒரு காலத்தில் அங்கு வேலை செய்தவர்கள், பின்னர் புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். தஞ்சம் கோரிய நாட்டில் கிடைத்த தொழில் அதை விடக் கடினமாக இருந்தது. கம்போடியாவில் பரம்பரையாக விவசாயம் செய்து வந்த மக்களுக்கு, அது ஏற்கனவே பழகிப் போன தொழில். ஆனால், அதற்குப் பழக்கப்படாத வேறு வேலை செய்து கொண்டிருந்த மக்களுக்கு, அது கடினமாகத் தோன்றியதில் வியப்பில்லை. இருப்பினும், க்மெர் ரூஜ் ஆதரவுத் தளமான, கிராமப்புற விவசாயிகளையும் வெறுக்க வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பொறுப்பான தளபதியின் முடிவில் தான் எல்லாம் தங்கி இருந்தது. சிலர் மக்களுடன் தாராளமாக நடந்து கொண்டனர். சிலர் மக்களை அடிமைகள் போன்று நடத்தி, அவர்களது உழைப்பை சுரண்டும் வண்ணம், அதிக வேலை வாங்கினார்கள்.  மக்கள்  ஆயுதமேந்திய க்மெர் ரூஜ் போராளிகளுக்கு பயந்து வாழ்ந்தனர். அவர்கள் சொன்ன படி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எதிர்த்துப் பேசினால் என்ன நடக்கும் என்பது தெரிந்த விடயம் தான். அடுத்த நாள் ஒரு வேலையாள் குறைந்திருப்பார். ஒரு காலத்தில் எதிர்ப்பவர்களை எல்லாம் கொலை செய்வது மலிந்து விட்டதால், சில இடங்களில் வேலை செய்வதற்கே ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களை எப்படி நடத்துவது என்பதில், பிரதேசப் பொறுப்பாளர்களுக்கு இடையில் வித்தியாசம் இருந்த போதிலும், ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலம், தொடர்ந்து பத்து நாட்கள் வேலை, ஒரு நாள் ஓய்வு என்பது எல்லா இடங்களிலும் நடைமுறைப் படுத்தப் பட்டது. 

பத்து நாட்கள் வேலை, ஒரு நாள் ஓய்வு என்பது பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்திலும் நடைமுறையில் இருந்தது. பொல் பொட்டும், பிற தலைவர்களும் பிரான்ஸில் கல்வி கற்றதால், பல பிரெஞ்சு தத்துவங்களை நடைமுறைப் படுத்தினார்கள். பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்திலும், மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பலர் கொல்லப் பட்டனர். மதம் தடைசெய்யப்பட்டது. தேவாலயங்கள் மூடப்பட்டன. பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் கொல்லப்பட்டனர், அல்லது சாதாரண மக்களைப் போல வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். புரட்சிக்கு எதிரானவர்கள் என்று கருதப் பட்டவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். ஒரு காலத்தில் புரட்சியில் முன் நின்று பாடுபட்ட விசுவாசமான புரட்சியாளர்கள், தலைவர்கள் கூட, எதிர்ப்புரட்சியாளர் முத்திரை குத்தப் பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு பல ஒற்றுமைகளை கூறிக் கொண்டே போகலாம்.  

க்மெர் ரூஜ் நடைமுறைப்படுத்திய கம்யூன் முறை, எந்தவொரு கம்யூனிச நாட்டிலும் நடைமுறையில் இருக்கவில்லை. சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகளிலும், சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர், கூட்டுறவுப் பண்ணைகள் (கம்யூன்) கொண்டுவரப் பட்டன. ஆனால், அங்கெல்லாம் குடும்ப உறுப்பினர்களை பிரித்து வைக்கவில்லை. மத்திய கால பிரான்ஸில், கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடிய, "கத்தார்கள்" (Heretics) என்ற மதப் பிரிவினர் அவ்வாறான கம்யூன் முறையை பின்பற்றினார்கள். அதுவும் ஒரு சமத்துவ சமுதாயம் தான். க்மெர் ரூஜ் போல தூய்மைவாதப் போக்கை கடைப்பிடித்து ஒழுகினார்கள். தென் பிரான்ஸில் பலமாக இருந்த கத்தார்கள் ஆட்சிப் பிரதேசத்தில், ஆண்களும், பெண்களும் பிரிந்து வாழ்ந்தார்கள். இல்லற வாழ்வை ஒறுத்து துறவறம் பூணுவது, சாதாரண குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. 

நகரங்களில் வாழ்ந்த மக்களை பலவந்தமாக வெளியேற்றி, கிராமங்களில் வயல்களில் கட்டாய  வேலை  செய்ய வைத்த, க்மெர் ரூஜ் கால "கொடுமை"யை நினைத்து தலையிலடித்துக் கொள்கிறோம். "மாபாவி பொல் பொட் நாசமாப் போக..." என்று மண்ணள்ளித் தூற்றுகின்றோம். ஆனால், அந்தக் காலத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான வளர்ச்சிப் பணிக்கான திட்டங்களை தீட்டிய மேலைத்தேய பொருளியல் மேதைகளுக்கு அது விசித்திரமாக தோன்றவில்லை. "சனத்தொகை பெருக்கத்தால் அவதியுறும் நகரங்களில் வாழும் மக்களை, நாட்டுப்புறங்களை நோக்கி நகர்த்த வேண்டும். பயிரிடப்படாத தரிசு நிலங்களையும், பாவனையில் இல்லாத நிலவுடமையாளர்களின் நிலங்களையும் கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். விவசாயத்தில் இரசாயன கிருமி நாசினி தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்." இப்படிப் பல திட்டங்களை அவர்களே முன்வைத்தார்கள். ஆனால் அவையெல்லாம் ஏட்டில் மட்டுமே எழுதப் பட்டிருந்தன. யார் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?  

பொல் பொட் அரசு அவற்றை எல்லாம் கச்சிதமாக நடைமுறைப் படுத்தியது. ஆனால், மக்கள் என்ன விலை கொடுத்தார்கள்? பொல்பொட் அரசின் நோக்கங்கள் நன்றாகவிருந்த போதிலும், ஆயுத அதிகாரம் மேல் மோகம் கொண்ட பிரதேச பொறுப்பாளர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள். அது எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. பல்வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள், வயல்களிலேயே புதைக்கப் பட்டன. (அதனால் தான் "கொலைக்களம்"(Killing Fields) என்ற பெயர் வந்தது.) ஏனென்றால், மனிதப் பிணங்களும் பயிருக்கு   உரமாகலாம். "போரில் மடிந்தவர்கள் உரமாகி விடுதலைப் பயிர் வளர்த்தனர்", என்று கேள்விப் பட்டிருப்போம். அது அங்கே நடந்து கொண்டிருந்தது. இறந்தவர்களின் எலும்புக் கூடுகளையும் இடித்து தூளாக்கி, இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம் என்று சிலருக்குத் தோன்றியது. அந்த நோக்கத்துடன் சேகரித்து வைக்கப்பட்ட மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், இன்றைக்கு "க்மெர் ரூஜ் இனப்படுகொலையின் சாட்சியங்களாக" காட்சிப் பொருளாக்கப் பட்டுள்ளன. 

க்மெர் ரூஜ் அரசாங்கத்தில், பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர்கள் இருந்த போதிலும், பொருளாதாரத் திட்டங்களில் குளறுபடி இருந்ததாகத் தெரிகின்றது. 1975 ஏப்ரல் மாதம், க்மெர் ரூஜ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னரும், புதிய பணநோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே இலட்சக்கணக்கான நோட்டுகள், சீனாவில் அச்சிடப் பட்டு தயாராக இருந்தன. ஆனால், கட்சித் தலைமை வேறு முடிவுகளை எடுத்தது. பணம் இருந்தால், ஊழலும் இருக்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்வதையும், இரகசியமாக செல்வம் சேர்ப்பதையும் தவிர்க்க முடியாது. ஆகவே, பணம் பயன்பாட்டில் இல்லாமல் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, பண்டமாற்று முறை அமுல் படுத்தப்பட வேண்டும். ஒரு பிரதேசத்தில் அளவுக்கதிகமாக கிடைக்கும் உற்பத்தி  பொருளை, தட்டுப்பாடு நிலவும் பிரதேசத்திற்கு அனுப்பலாம். ஏற்கனவே, கம்போடியாவின் மலைஜாதி மக்கள் பண்டமாற்று முறைக்கு பழக்கப் பட்டவர்கள். பண்டமாற்றுப் பொருளாதாரத்தினால், கம்போடிய மக்கள் ஒன்றும் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை. பணம் புழக்கத்தில் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு பொருளுக்கும் விலை தீர்மானிக்கப் பட்டது. 

அதிகாரத்தில் உள்ளவர்கள், இரகசியமாக செல்வம் சேர்க்க முடியா விட்டாலும், ஊழல் வேறு வடிவத்தில் தொடர்ந்தது. பல இடங்களில் பண்டமாற்றுப் பொருளாதாரம் இரத்துச் செய்யப்பட்டது. மக்களின் அடிமை வாழ்வும், துயரமும் அப்பொழுது தான் ஆரம்பமாகியது. ஒரு கம்யூன் தலைவர், அல்லது பிரதேசப் பொறுப்பாளர், தனக்கு அதிகளவு உணவை பதுக்கிக் கொண்டார். அதே நேரம், மக்கள் கஞ்சியை மட்டும் குடித்து விட்டு வேலைக்கு சென்று வர வேண்டிய நிலையில் இருந்தனர். அரிசி, காய்கறி, இறைச்சி எல்லாம் ரேஷன் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது. அது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. சில பிரதேசப் பொறுப்பாளர்கள், ரேஷனை குறைத்து மக்களைப் பட்டினி போட்டார்கள்.  சில இடங்களில் அளவுக்கதிகமாக விளைந்த அரிசியை, மக்களின் உணவுத் தேவைக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு அனுப்பும் வணிகர்களுக்கு விற்று காசாக்கினார்கள். அதே நேரம், உணவோ, மருந்தோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. சில இடங்களில் பஞ்சம் ஏற்பட, அதுவும் காரணமாக இருக்கலாம். மேலும், நோய் வாய்ப்பட்டவர்கள் உற்பத்தியில் ஈடுபட முடியாதென்பதால், அவர்களுக்கென ஒதுக்கும் உணவின் அளவு குறைக்கப் பட்டது. வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு  நிலவியது. எங்கேயும் மேலைத்தேய மருந்து கிடைக்கவில்லை. இதனால், பல நோயாளிகள் சாவை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. 

ஒரு சில இடங்களில் வேண்டுமென்றே உணவுப்பற்றாக்குறை தக்க வைக்கப் பட்டது.  அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, சில பொறுப்பாளர்கள் தம்மை எதிர்ப்பவர்களை தண்டித்தார்கள். ஆதரித்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். வைப்பாட்டிகளும் வைத்துக் கொண்டார்கள்.  இதனால் க்மெர் ரூஜ் ஆட்சி, உள்ளுக்குள்ளேயே புழுத்து அழுகத் தொடங்கியது. ஒரு காலத்தில், இரட்சகர்களாக கருதப்பட்ட போராளிகள், மக்களிடம் இருந்து அன்னியப் பட்டார்கள். க்மெர் ரூஜ் இராணுவம், மக்களுக்கு மேலேயுள்ள அதிகார வர்க்கமாக பார்க்கப் பட்டது. இதனால், நகரம் சார்ந்த மத்திய தர வர்க்கத்திடமிருந்து மட்டுமல்ல, கிராமம் சார்ந்த விவசாயக் குடிமக்களிடம் இருந்தும், க்மெர் ரூஜ் இயக்கம் அன்னியப் பட்டது. க்மெர் ரூஜின் வீழ்ச்சிக்கு அதுவே தொடக்கப் புள்ளி எனலாம். ஒரு வேளை, பொல் பொட் தலைமை பொறுப்பற்று நடந்து கொண்ட பொறுப்பாளர்களை தண்டித்திருந்தால், நற்பெயரை தக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர்களோ, "வியட்நாமிய ஏகாதிபத்திய ஊடுருவல், அந்நிய கைக்கூலிகளை களையெடுத்தல்." இவற்றிலே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.     

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"

 உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8

Saturday, August 11, 2012

"இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு

(பகுதி - 5)

கம்போடியா விடுதலைப் போராட்டத்திற்கும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை, வலதுசாரிகள் யூதர்களின் வரலாற்றுடன் ஒப்பிட்டார்கள். இடதுசாரிகள் வியட்நாம், பாலஸ்தீனம், வங்க தேசம் ஆகிய நாடுகளின் போராட்டங்களுடன் ஒப்பிட்டார்கள். ஆனால், இன்று வரையில், யாருமே கம்போடியா போராட்டத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில்லை. அதற்கு காரணம், பனிப்போர் காலத்தில் இரண்டு வல்லரசுகள், உலக மக்களின் அரசியல் போக்கை நிர்ணயித்திருந்தன. அமெரிக்கா, சோவியத் யூனியன் இரண்டுமே கம்போடியாவில் க்மெர் ரூஜ் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதனால், அந்த வல்லரசுகளுக்கு பின்னால் நின்ற பிற நாடுகளும் ஆதரிக்கவில்லை. அன்று கம்போடியாவை ஆண்ட, லொன் நொல் அரசுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. லொன் நொல் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய பொல் பொட்டின் கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி, அல்லது அதன் இராணுவப் பிரிவான க்மெர் ரூஜ், வியட்நாமுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டது. அதனால், வியட்நாம் ஆதரிக்காத கம்போடிய விடுதலைப் போராட்டத்தை, சோவியத் முகாமில் இருந்த நாடுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவும் ஆதரிக்கவில்லை.  

சீனாவுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்த மன்னர் சிஹானுக் வெளியேற்றப் பட்டு, அவரது ஆதரவாளர்களும் காடுகளுக்குள் பதுங்கி இருந்து ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, க்மெர் ரூஜும் சீனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது. உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில், சோவியத் யூனியனுடன் ஒப்பிடும் பொழுது, சீனா சற்று தாராளமாகவே நடந்து கொண்டது. விடுதலை இயக்கங்களுக்கு தேவையான ஆயுதங்களை இலவசமாக கொடுத்துதவியது. க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உற்பத்தியான அரிசி, மூட்டை மூட்டையாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. சிலர் இதனை சுட்டிக் காட்டி, க்மெர் ரூஜ் சீனாவுக்கு அரிசி விற்று ஆயுதம் வாங்கியதாக குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. சீனாவின் ஆயுதங்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. வியட்நாமிய, சீன வியாபாரிகள், வழமை போல கம்போடிய அரிசியை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். க்மெர் ரூஜ் கம்போடியாவை ஆண்ட மூன்றரை வருட காலத்திலும், அரிசி மட்டுமே முக்கியமான, அல்லது ஒரேயொரு ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. 

ஈழப் போராட்டத்தில், சிறிலங்கா அரசின் கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சுகளும், அப்பாவிப் பொதுமக்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையும், புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்களின் பின்னால், மக்களை அணிதிரள வைத்தன. அரச அடக்குமுறை தீவிரமடையும் போதெல்லாம், விடுதலை இயக்கத்திற்கான மக்கள் ஆதரவும் அதிகரிக்கும். சிறிலங்கா அரச படையினரின் நடவடிக்கைகள், விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு உதவியது போன்று, கம்போடியாவில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகள் க்மெர் ரூஜ்ஜின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. அமெரிக்க அரசு அரசு விமானக் குண்டுவீச்சுகளை மட்டும் நடத்தவில்லை. அன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த, தெற்கு வியட்நாமில் இருந்து கம்போடியா மீது தரை வழியாக படையெடுத்தது. அந்தப் படையெடுப்பிலும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 

ஈழப் பிரதேசங்களில் நடந்ததைப் போன்று, அமெரிக்க விமானக் குண்டுவீச்சுகளில் இருந்து தப்புவதற்காக, கம்போடிய மக்கள் தமது வீடுகளுக்கு அருகில் பதுங்குகுழிகளை வெட்டி இருந்தனர். அமெரிக்க விமானப் படைக்கு தகவல் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், பல "உளவாளிகள்" க்மெர் ரூஜ் போராளிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அமெரிக்க குண்டுவீச்சுகள், நாட்டுப்புறங்களை மட்டுமே குறி வைத்து நடத்தப் பட்டதால், ஏராளமான மக்கள் தலைநகர் ப்னோம் பென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். ஒரு வருடத்திற்குள், ப்னோம் பென்னின் சனத்தொகை இரண்டு மில்லியனாக அதிகரித்தது. தலைநகரத்தில் குவிந்த அகதிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு எந்த வசதியும் இருக்காததால், அங்கொரு மனிதப் பேரவலம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இதற்கிடையே, ஒழுக்கம் கெட்டலைந்த அரச படைகளால், கட்டுப்பாட்டுடன் இயங்கிய க்மெர் ரூஜை எதிர்த்து போராட முடியவில்லை. ஏப்ரல் 17 ம் தேதி, தலைநகர் ப்னோம் பென்னும் க்மெர் ரூஜிடம் வீழ்ச்சி அடைந்தது. தசாப்த கால யுத்தம் முடிவடைந்து விட்ட சந்தோஷத்தில், தலைநகரில் நுழைந்த க்மெர் ரூஜ் போராளிகளை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். 

ப்னோம் பென் நகரவாசிகள் பலர், அப்பொழுது தான் முதன்முறையாக க்மெர் ரூஜ் கெரில்லாக்களை கண்ணால் கண்டார்கள். கறுப்பு நிற மேல் சட்டையும், அதே நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்தனர். கழுத்தில், சிவப்பு, வெள்ளை கலந்த சால்வை. கையில் ஏ.கே. 47 இரக துப்பாக்கி, மார்பில் மேலதிக ரவைக் கூடுகளைக் கட்டிய பைகள். ஆயுதமேந்திய இளைஞர்களின் வயது 18 க்கும் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. சிலர் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களாக தோன்றினார்கள். க்மெர் ரூஜ் படையில் ஆண் போராளிகள் மட்டுமல்ல, பெண் போராளிகளும் இருந்தனர். அவர்களது சமூகப் பின்னணியும் ஒரே மாதிரியாக இருந்தது. எல்லோரும் நாகரீகம் எட்டிப் பார்க்காத நாட்டுப்புறங்களை சேர்ந்த கிராமத்து இளைஞர்கள். அபூர்வமாக ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானோர் எழுதப், படிக்கத் தெரியாத தற்குறிகள். 

ஐநூறு வருடங்களாக எந்த அபிவிருத்தியையும் காணாத கம்போடியாவின் கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு, வெளியுலகில் நடந்த மாற்றங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு, மேலைத்தேய பாணி மலசல கூடத்தை பார்த்த இளைஞர்கள், அதனை "வீட்டுக்குள்ளே கட்டிய சிறிய கிணறு" என்று நினைத்தார்கள். நிலத்தில் பாய் போட்டு படுத்து பழகியவர்களுக்கு, கட்டில் மெத்தையைக் கண்டதும் குத்திக் கிழிக்க வேண்டுமென்ற ஆவேசம் ஏற்பட்டது. தமது வாழ்நாளில் கண்டிராத வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருந்த நகரவாசிகள் மீது, அவர்கள் மனதில் வன்மம் குடிகொண்டது. அவர்களைக் கட்டுப்படுத்த, அங்கு யாரும் இருக்கவில்லை. கண்ணில் கண்ட எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினார்கள். "காட்டுக்குள் இருந்து வந்த வானரப் படை ஒன்று, வீடுகளுக்குள் புகுந்து துவம்சம் செய்வதாக" நகரத்து மாந்தர் நினைத்துக் கொண்டார்கள். 

பட்டிக்காட்டு இளைஞர்களின் அடாவடித் தனங்களை, நகரவாசிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. க்மெர் ரூஜ் தலைவர்கள், பொது நூலகம் போன்ற சில முக்கியமான கலாச்சார மையங்களை மட்டுமே பாதுகாப்பதில் முனைப்புக் காட்டினார்கள். மற்ற இடங்களில் எல்லாம், பட்டிக்காட்டு கிராமவாசிகளை, பட்டணத்து சுகவாசிகளுக்கு எதிராக திருப்பி விடுவதில் திருப்திப் பட்டனர். க்மெர் ரூஜ் போராளிகள், கிராமங்களில் முகாமிட்டிருந்த காலங்களில், "நகரவாசிகளின் கீழ்த்தரமான சீரழிந்த கலாச்சாரம்" பற்றி அவர்களுக்கு போதிக்கப் பட்டிருந்தது. தற்போது அதனை, தமது கண்ணால் நேரில் கண்டார்கள். பட்டணத்து ஆடம்பரம் மீதான, கிராமப்புற இளைஞர்களின் வெறுப்பு மேலும் அதிகரித்தது. பொல் பொட்டும், க்மெர் ரூஜ் தலைவர்களும் நாட்டுப்புற ஏழை மக்களின் தார்மீகக் கோபத்தை, கம்போடியப் புரட்சியின் அடித்தளமாக பயன்படுத்தினார்கள். நகரங்கள், கிராமங்களை ஆள்வதைத் தான், உலக வரலாறு முழுவதும் நாங்கள் கண்டிருக்கிறோம். பொல் பொட் அந்த விதியை தலைகீழாக மாற்றினார். கிராமங்கள், நகரங்களை ஆளும் காலம் வந்தது. ஒரு நாள், அடிமைகள் எஜமானர்களானால் என்ன நடக்கும்?  எஜமானர்கள் அடிமைகளாவார்கள். இந்தப் புரட்சி, இனி வருங்காலத்தில் எந்தவொரு நாட்டிலும் நடக்கக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் உறுதியாக இருக்கின்றது. 

பொல் பொட் ஒரு கொலைவெறி கொண்டலைந்த மனநோயாளி போன்று சித்தரிப்பதும், கம்போடியாவில் நான்கு மில்லியன் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பிரச்சாரம் செய்வதும் இந்த நோக்கத்திற்காகத் தான். இன்றைக்கும் மத்தியதர வர்க்க தமிழர்கள் பலர், அந்தப் பிரச்சாரத்தை முனைப்புடன் செய்து கொண்டிருக்கின்றனர். பொல் பொட்டின் கொலைவெறிக்கு படுகொலையான அப்பாவி கம்போடிய மக்கள் மீது கொண்ட கரிசனையால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தை எண்ணி அச்சப் படுகின்றனர். கம்போடியாவில் நடந்ததைப் போல, இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் நாட்டுப்புற ஏழை மக்கள் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும்? கம்போடியப் புரட்சியில் இருந்து நாங்கள் தான் எந்தவிதப் படிப்பினையையும் பெறவில்லை. இன்றைக்கும் மேற்கத்திய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களை மனனம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால், சிறிலங்கா அரசு போன்ற பல நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், அதனை நன்றாக ஆய்வு செய்து படித்து வைத்திருக்கின்றன. இலங்கையில்,  1989 - 1991  வரையில் நடந்த ஜேவிபி அழிப்பு போரில், ஏறத்தாள எழுபதாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள நாட்டுப்புற ஏழை மக்கள் தான், ஜேவிபி யின் ஆதரவுத் தளமாக இருந்தது. அதனால், அந்த மக்களை அழித்தொழிப்பதில் சிறிலங்கா அரசுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. அதே போன்று, 2009 ம் ஆண்டு, வன்னியில் நாற்பதாயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்த போதும், உலகம் வேடிக்கை பார்த்தது. அன்று படுகொலையான தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், ஒன்றில் வன்னிப் பெருநில விவசாயிகள், அல்லது கிழக்கு மாகாண ஏழைகள், அல்லது மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளாக இருந்தனர். ஒரு வேளை, முள்ளிவாய்க்கால் பேரவலம், மத்தியதர வர்க்க மக்களை அதிகமாக கொண்ட யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தால், வரலாறு வேறு விதமாக திரும்பி இருக்கலாம். போரில் நாட்டுப்புற ஏழை மக்கள் பெருமளவு பலியாகிறார்கள் என்ற வர்க்க உணர்வு, பல மட்டங்களிலும் பரவிக் காணப்பட்டது. 

க்மெர் ரூஜ் வெற்றி பெற்ற சில மணி நேரங்களுக்குள்,  ப்னோம் பென் நகர வாசிகளின் மகிழ்ச்சி, சூரியனைக் கண்ட பனி போல கரைந்து போனது. "அனைவரும் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி, கிராமப் புறங்களுக்கு செல்ல வேண்டும்." என்று க்மெர் ரூஜ் போராளிகள் ஒலி பெருக்கிகளில் அறிவித்தார்கள். நகர வாசிகள் தமது உடமைகளை எடுக்கக் கூட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. (மக்களின் உடமைகளை யாரும் திருட விடாது பார்த்துக் கொள்ளப் பட்டது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிய போது, எல்லாம் அப்படியே இருந்தன. ஆனால், வியட்நாமிய படையெடுப்பின் பின்னர் நிறைய கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன.) சில மணி நேரத்திற்குள், அனைவரும் ப்னோம் பென் நகரத்தை விட்டு வெளியே சென்று விட வேண்டும். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், முதியோர்கள், எல்லோரும் கிளம்பி விட வேண்டும். சில நாட்களில் திரும்பி வந்து விடலாம் என்று சொன்னார்கள். ஆனால், திரும்பி வர நான்கு வருடங்களாகும் என்று, அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நகர மக்களின் பூர்வீகமும் கிராமம் என்பதால், பலர் தத்தமது சொந்தக் கிராமங்களுக்கு செல்ல நினைத்தார்கள். ஆனால், அது அவர்களை வெளியேற்றிய படைப்பிரிவின் தளபதியின் முடிவில் தங்கி இருந்தது. சில கமாண்டர்கள் மக்களை அவரவரது கிராமங்களுக்கு செல்ல அனுமதித்தார்கள்.  சிலர் கடுமையாக நடந்து கொண்டார்கள். தாம் சொல்லும் இடத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். தலைநகரை விட்டு வெளியேறிய மக்கள், பல நாட்கள் கால்நடையாக நடந்து சென்று தான் கிராமங்களை அடைய வேண்டியிருந்தது. நடக்கும் வலுவற்ற நோயாளிகளையும், வயோதிபர்களையும் அந்த இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றார்கள். பலர் உணவு கிடைக்காமல் போகும் வழியிலேயே பலவீனப்பட்டு நின்று விட்டனர். அப்படியானவர்கள் சாவை எதிர்நோக்கி காத்திருப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

அன்றைய மனிதப் பேரவலத்தில் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் இலட்சக் கணக்கான நகரவாசிகள், கம்போடிய கிராமங்களில் எல்லாம் பரவலாக தங்க வைக்கப் பட்டனர். அவர்களுக்கான தற்காலிக முகாம்கள் (ஓலைக் கொட்டில்கள்) அமைக்கப் பட்டன. காலங்காலமாக கிராமங்களில் விவசாயம் செய்து வந்த மக்களுடன் சேர்ந்து, நகர வாசிகளும் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஒருவர் நகரத்தில், எத்தகைய மதிப்புக்குரிய தொழில் செய்திருந்தாலும், கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயியாக வாழ வேண்டி இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரியான இடத்தில் வசிக்க வேண்டும். ஒரே மாதிரியான வேலை செய்ய வேண்டும். ஒரே உணவை சாப்பிட  வேண்டும். பொல் பொட் கனவு கண்ட சமத்துவ சமுதாயம், நடைமுறைக்கு வந்தது. ஆனால், அது அனைத்துப் பிரைஜைகளினதும் ஏகோபித்த விருப்பமாக இருக்கவில்லை. நிச்சயமாக, படித்த, வசதியாக வாழ்ந்த மத்திய தர வர்க்க மக்கள், அதனை நரக வாழ்க்கையாக அனுபவித்திருப்பார்கள். அன்றிலிருந்து தம்மை இந்த நிலைக்கு தள்ளிய க்மெர் ரூஜை வெறுக்க ஆரம்பித்திருப்பார்கள்.  க்மெர் ரூஜ் போராளிகளும், அவர்களது கிராமப்புற ஆதரவாளர்களும், நகர வாசிகளை தனியாக பிரித்து வைத்தார்கள். அவர்களை சந்தேகத்துக்குரியவர்களாக பாகுபாடு காட்டினார்கள். இந்த வேறுபாடு, க்மெர் ரூஜ் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் சில படுகொலைகளுக்கு வழிவகுத்தது. வேலை செய்ய மறுத்தவர்கள், பொறுப்பாளர்களின் உத்தரவை மீறியவர்கள், எதிர்த்துப் பேசியவர்கள் எல்லோரும் "போட்டுத் தள்ளப் பட்டார்கள்".  சின்ன தவறேயாயினும், சுட்டுக் கொள்வது பெரிய விடயமாகப் படவில்லை. மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போனது.

க்மெர் ரூஜ், கம்போடியாவின் ஆட்சி அதிகாரத்தை முழுவதுமாகக் கைப்பற்றியவுடன், அரச படையினர் தமது ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்தார்கள். ஆனால், சரணடைந்த படையினர் எல்லோரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.  யுத்தம் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், க்மெர் ரூஜ் இயக்கத்தினர் வெற்றிகரமாக படை முகாம்களை தாக்கி அழித்த போதும் அப்படித் தான் நடந்தது. அரச படையினரும், பிடிபட்ட அல்லது சரணடைந்த க்மெர் ரூஜ் போராளிகளை சுட்டுக் கொன்று விடுவார்கள். சண்டையில் தோற்ற எதிராளியை உயிரோடு விட்டு வைக்கும் பழக்கம், க்மெர் மக்களின் வரலாற்றிலேயே கிடையாது. (சண்டையில் பிடிக்கப் பட்ட எதிரிப் படையினரை மன்னித்து விடுதலை செய்து விட வேண்டும் என்ற மாவோவின் கோட்பாட்டுக்கு மாறாகத் தான், அன்று க்மெர் ரூஜ் நடந்து கொண்டது. எண்பதுகளில் மீண்டும் கெரில்லா யுத்தம் நடத்திய காலத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.) ஒரு சண்டையில் வெற்றி என்றால், எதிரிப் படையில்  எத்தனை பேரை கொன்றோம் என்று கணக்குச் சொல்லிப் பெருமைப் பட வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு வெற்றியாக கருதப் பட மாட்டாது. இது கம்போடியாவுக்கு மட்டும் உரிய சிறப்பம்சமல்ல. ஈழப் போரிலும் அது போல நடந்துள்ளது. இறுதி யுத்தத்தில் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளை, சிறிலங்கா அரச படையினர் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். புலிகள் இயக்கம், முல்லைத்தீவு, ஆனையிறவு முகாம்களை தாக்கியழித்த யுத்தங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவவீரர்கள் கொல்லப் பட்டனர். இவர்களில் பலர் முகாம் வீழ்ச்சியடைந்த பின்னர் சரணடைந்திருந்தனர்.  

ப்னோம் பென் நகரம், ஆவிகள் நடமாடும் இடம் போன்று, ஆளரவம் அற்று வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. ஓரிரு மாதங்களின் பின்னர், கம்போடியாவின் புதிய ஆட்சியாளர்கள் அங்கே சென்று தங்கினார்கள். அப்பொழுது எந்த நாட்டுடனும் இராஜதந்திர உறவு ஏற்பட்டிருக்கவில்லை. எந்த நாட்டின் தூதுவராலயமும் அங்கிருக்கவில்லை. மக்கள் வெளியேற்றப்பட்ட அன்றே, வெளிநாட்டு தூதுவர்களும் வெளியேற்றப் பட்டார்கள். ப்னோம் பென் நகர மக்கள் வெளியேற்றப் பட்டதற்கான காரணங்கள் பல கூறப்படுகின்றன. மேலைத்தேய நாடுகளில், க்மெர் ரூஜ் இயக்கத்தின் கொடுங்கோன்மைக்கு சாட்சியமாக கூறிக் கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருப்பினும், மிக முக்கியமான மூன்று காரணங்கள், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தன.

1. கம்போடியா மீதான அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சு உத்தியோகபூர்வமாக நிறுத்தப் பட்டிருக்கவில்லை.  இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட ப்னோம் பென் நகரம் குண்டு வீசித் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது. அதனை ஆதாரமற்றது என கூற முடியாது. ப்னோம் பென் நகரம், அமெரிக்க சார்பு அரசாங்கம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அதன் மீது குண்டு போட எந்த காரணமும் இல்லை. தற்பொழுது, அமெரிக்க விரோதியான "கம்யூனிச" க்மெர் ரூஜ் இயக்கம் அதனைக் கைப்பற்றியுள்ளது.  ப்னோம் பென் குண்டு வீச்சுக்கு இலக்கானால், ஒரு மாதத்திற்குள் புரட்சி முறியடிக்கப் பட்டிருக்கும். 
2. ப்னோம் பென் நகரத்தினுள், சி.ஐ.ஏ. உளவாளிகளின் வலைப்பின்னல் ஒன்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கே.ஜி.பி., வியட்நாம் உளவாளிகளுக்கும் குறைவில்லை. ப்னோம் பென் நகர மக்களை, நாடு முழுவதும் இருந்த கிராமங்களுக்கு பிரித்து அனுப்பி இருந்ததால், உளவாளிகளும் தொடர்பின்றி சிதறிப் போனார்கள். க்மெர் ரூஜின் எதிர்பாராத நடவடிக்கையால், உளவாளிகள் இயங்க முடியாமல் முடக்கப் பட்டனர். தென் கிழக்காசியப் பிராந்தியத்திற்கான சி.ஐ.ஏ. தலைமையகமும், புலனாய்வுத் தகவல்கள் வருவது நின்று போனதை உறுதி செய்திருந்தது.
3. இலட்சக் கணக்கான ப்னோம் நகரவாசிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் வசதி இருக்கவில்லை. ஏற்கனவே போரினால் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப் பட்டிருந்தது. அதற்கு மாறாக, நகரவாசிகளை கிராமங்களுக்கு அனுப்புவதன் மூலம், அவர்களையும் உணவு உற்பத்தியில் ஈடுபடுத்த முடியும். 

1977 ம் ஆண்டு வரையில், கம்போடியாவின் புதிய ஆட்சியாளர்கள் யார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. க்மெர் ரூஜ் போராளிகள், தங்களை "இயக்கம்" என்ற பெயரில் அழைத்துக் கொண்டனர். கம்போடியாவின் அரசாங்கம் எங்கே? இயக்கம். பிரதமர் யார்? இயக்கம். மக்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனம் எது? இயக்கம். இப்படியே மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் எல்லாமே இயக்கம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தது. மதம் தடை செய்யப் பட்டது. பௌத்த விகாரைகள் பூட்டப்பட்டன, அல்லது மாட்டுத் தொழுவங்களாக மாற்றப் பட்டன. பௌத்த பிக்குகள், "மக்களின் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணிகள்" என்று குற்றம் சாட்டப்பட்டனர். அதுவரை காலமும் மக்களிடம் இரந்துண்டு வாழ்ந்த புத்தபிக்குகள், சாதாரண மக்கள் போன்று உழைத்துண்டு வாழ வேண்டும். மக்களின் ஆன்மீக வாழ்வையும் இயக்கமே கட்டுப் படுத்தியது. யாரும் இயக்கத்திற்கு எதையும் ஒளிக்க முடியாது. இயக்கத்திற்கு எல்லாமே தெரியும். இயக்கத்தினால் ஆக்கவும், அழிக்கவும் முடியும்.

இயக்கம், இயக்கம் என்று சொல்கிறார்களே, அந்த இயக்கத்தின் தலைவர் யார்?  பொல் பொட் என்ற பெயர், இயக்கத் தலைவர்கள், பொறுப்பாளர்களைத் தவிர மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பொல் பொட் என்பது இயக்கத்திற்காக சூட்டிக் கொண்ட புனைபெயர். 1977 ம் ஆண்டு, கம்போடியாவின் புதிய அரசு அறிவிக்கப் பட்டது. அப்பொழுது, புதிய அரசாங்கத்தின் பிரதமரின் பெயர் "சாலோத் சார்" (பொல் பொட்) என்று அறிவிக்கப் பட்டது. அதைக் கேள்விப்பட்டதும், ஒரு கிராமத்தில் கூட்டுறவுப் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த, ப்னோம் பென் நகரத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று அதிர்ச்சியில் உறைந்து போனது. பொல் பொட்டின் சொந்த அண்ணனின் குடும்பம் தான் அது. தனது தம்பி தான் கம்போடியாவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவன் என்பதை அந்த அண்ணனால் நம்ப முடியவில்லை. க்மெர் ரூஜ் போராளிகளால் ப்னோம் பென்னில் இருந்து வெளியேற்றப் பட்ட குடும்பங்களில் அவரின் குடும்பமும் ஒன்று. சக நகரவாசிகளைப் போன்று, வழி நெடுகிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து, தற்பொழுது ஒரு கிராமத்தில் விவசாயிகளோடு வயலில் கட்டாய வேலை செய்து கொண்டிருந்தார்கள். தனது உறவினர்கள் என்பதற்காக, பொல் பொட் அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டவில்லை. அதே போன்று, எவராவது ஒரு உறவினர் கடந்த கால அரசாங்கத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கும் கருணை காட்டப் படவில்லை. சொந்தக்காரனாக இருந்தாலும், நெருங்கிய நண்பனாக இருந்தாலும், துரோகி துரோகி தான். துரோகிகள் எவராக இருந்தாலும், தீர்த்துக் கட்டப் பட வேண்டும் என்பது பொல் பொட்டின் கொள்கை. வருங்காலத்தில் அதைக் காரணமாக வைத்து, தன்னை ஒரு "இனப்படுகொலைக் குற்றவாளி" என்று உலகம் குற்றம் சாட்டப் போகின்றது என்பதை, அன்று அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?

 உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab