Wednesday, November 12, 2008

பாலஸ்தீனியனுக்கு வீடியோவும் ஆயுதம்


பாலஸ்தீன பிரச்சினை பற்றி அண்மைக்காலமாக ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லை. செய்தியே இல்லையென்றால், எப்போதும் அது நல்ல செய்தி தானென்று அர்த்தமாகி விடாது. இஸ்ரேலில் தற்கொலைக் குண்டு வெடித்து சில மனித உயிர்கள் (அல்லது பெறுமதி மிக்க இஸ்ரேலிய உயிர்கள்) பலியானால் மட்டுமே, எமது ஊடகங்கள் இரத்தம் கண்டு சிலிர்த்தெழுந்து "அங்கே பார் பயங்கரவாதம்!" என்று அலறுவது வழமை. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களை கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்களின் கண்ணையும், கையையும் கட்டிவிட்டு, ரப்பர் தோட்டாவால் சுட்டு காயப்படுத்தல், பாலஸ்தீன குடியிருப்புகள் மீது கல்லெறியும் அல்லது தொழிலாளிகளை ஒலிவ் தோட்டங்களுக்கு போகவிட்டது தடுக்கும் யூத இன வெறியர்கள்... இவ்வாறு பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவ, யூத இனவெறியர்களின் தாக்குதல்கள் நாள்தோறும் நிகழும் தொடர்கதைகள். இவையெல்லாம் செய்திகளாக வெளியுலகை எட்டாதது மட்டுமல்ல, அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் கூட வெற்றிபெறுவதில்லை. பாலஸ்தீனியரை அத்துமீறி கைது செய்து மனித உரிமை மீறும் இஸ்ரேலிய படையினரை நீதிமன்றத்திற்கு அழைத்தால், "ஆதாரம் வைத்திருக்கிறாயா, கண்ணா?" என்று கேட்டு, தமிழ் சினிமா வில்லன் போல தண்டனையில் இருந்து தப்பிவிடுவார்கள்.

தமக்குத் தெரிந்த வன்முறைப்போராட்டம் எல்லாம் நடத்தி களைத்துப்போன பாலஸ்தீன இளைஞர்கள் கைகளில் தற்போது புதுவகை ஆயுதம் ஒன்று முளைத்துள்ளது. அது தான் வீடியோ கமெரா! குண்டுகளுக்கு அஞ்சாத இஸ்ரேலிய படைகள் இந்த புதிய ஆயுதத்திற்கு அஞ்சுகின்றன. இஸ்ரேலியரின் மனித உரிமை மீறல்களை ஒளிப்பதிவு செய்து கொள்வதற்காக பாலஸ்தீன இளைஞர்கள் கமெராவும் கையுமாக அலைகிறார்கள். இஸ்ரேலில் சமாதானத்திற்காக பாடுபடும், நெதர்லாந்தை சேர்ந்த இடதுசாரி யூதர்களின் மனித உரிமை அமைப்பான "பெத் சலேம்" (B'T Selem) இந்த புதிய போராட்டத்தை நெறிப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்திற்கு நெதர்லாந்து அரசாங்கமும் தாராளமான நிதியுதவி வழங்கி வருகின்றது. இதற்கென ஆயிரக்கணக்கான வீடியோ கமெராக்கள் பாலஸ்தீன பகுதியெங்கும் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த படப்பிடிப்பு போராட்டம் காரணமாக, மனித உரிமை வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. ஒளிப்படத்தில் கையும்மெய்யுமாக பிடிபட்ட குற்றவாளிகள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைவிட சில சலனப்படங்கள் ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் கவனத்தையும் பெற்றுள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை பாலஸ்தீனிய இளைஞர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

கடந்த ஜுலை மாதம் 7 ம் திகதி, நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை கைது செய்த இஸ்ரேலிய படையினர், அவருடைய கைகளையும், கண்ணையும் கட்டி விட்டு, அருகாமையில் வைத்து ரப்பர் தோட்டாவால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்றை, ஒரு சிறுமி தனது வீட்டில் இருந்த படியே வீடியோ கமெராவினால் பதிவு செய்தாள். நெதர்லாந்து தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்ட அந்த சலனப்படத்தை இங்கே பார்வையிடலாம்.

Soldiers fires “rubber” bullet at handcuffed, blindfolded Palestinian, July 2008

நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு: PALESTIJNEN SCHIETEN TERUG MET VIDEOCAMERA'S

ஹெப்ரோன் நகரில், பாலஸ்தீனிய தொழிலாளரை தாக்கி, அவர்களது ஒலிவ் தோட்டங்களை அழித்து நாசப்படுத்தும் யூத இனவெறியர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இஸ்ரேலிய இராணுவம். இந்த ஒளிப்பதிவு இஸ்ரேலிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

_______________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Monday, November 10, 2008

உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!


கணணி அல்லது மொபைல் போன் பாவிக்கும் அனைவரும் எதோ ஒரு வகையில் கொங்கோவில் நடக்கும் இனப்படுகொலை யுத்தத்துடன் தொடர்புபட்டவர்கள் தான். யாராவது ஒரு திருடன், சொத்துக்கு உரிமையாளரை கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்த பொருட்களை குறைந்த விலை கொடுத்து வாங்கினால், நாமும் அந்த கொலைக்கும், கொள்ளைக்கும் உடந்தையாக இருந்ததாக குற்ற உணர்ச்சி எழுவதில்லையா? ஆனால் அந்த பாவத்தை நாம் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டு தான் இருக்கிறோம். இன்று உலகில் கணணி, மற்றும் மொபைல் தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களின் விலை குறைந்து பாவனை அதிகரித்து இருக்கின்றதென்றால், அதற்கு முக்கிய காரணம், அவற்றிற்கான மூலப்பொருட்கள் கொங்கோவில் இருந்து பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவது தான். இது வெறும் கொள்ளை சம்பந்தமான பிரச்சினை மட்டுமல்ல, கனிம வள சுரங்கங்களை கைப்பற்றி சுரண்டுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டனர், அல்லது படுகொலை செய்யப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலத்திரனியல் நிறுவனங்களின் மாபெரும் கொள்ளைக்காக நான்கு மில்லியன் அப்பாவி மக்கள் பலிகொடுக்கப்பட்டனர்.

பெரிய ஆப்பிரிக்க நாடான கொங்கோ, உலகில் பணக்கார நாடுகளில் ஒன்று. தங்கம், வைரம் மட்டுமல்ல, யுரேனியம் போன்ற விலைமதிக்கமுடியாத கனிமவளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருகாலத்தில்(19 ம், 20 ம் நூற்றாண்டில்) பெல்ஜிய அரசரின் தனிச் சொத்தாக இருந்த கொங்கோ சுரங்கங்களிலும், பெருந்தோட்டங்களிலும் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். உற்பத்தி குறையும் போதெல்லாம், குழந்தை தொழிலாளராக இருந்தாலும், தண்டனையாக கைகள் வெட்டப்பட்டன. அந்த நிலைமை இன்றைய “நாகரீக உலகிலும்” மாறவில்லை. அன்று பெல்ஜிய அரசரும், முதலாளிகளும் கொங்கோவை சுரண்டிக் கொழுத்தனர்; இன்று பன்னாட்டு நிறுவனங்கள் (உங்கள் மனங்கவர்ந்த “நோக்கியா” உட்பட) பகல் கொள்ளையில் போட்டிபோடுகின்றன.

உலகில் இனப்பிரச்சினை என்று அறியப்பட்ட யுத்தங்கள் பல பணப்பிரச்சினை காரணமாக நடப்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே சியாரா லியோனில் வைர சுரங்கங்களுக்காக நடந்த சண்டையை, இனப்பிரச்சினை என்று சர்வதேச ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தை முறியடித்து “Blood Diamond” திரைப்படம் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இருந்தாலும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சர்வதேச ஊடகங்கள் கொங்கோவில் நடக்கும் போரையும் “இனப்பிரச்சினை” என்றே பிரச்சாரம் செய்கின்றன. அவர்களைப்பொறுத்த வரை கொங்கோலிய அரசபடைகள் பொதுமக்களை துன்புறுத்துகின்றன, சொத்துகளை கொள்ளையடிக்கின்றன, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றன, அதற்கெதிராக “லோறன்ட் குண்டா” தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் போராடுகின்றனர். அங்கே நடப்பது இனப்பிரச்சினை. (துட்சி) சிறுபான்மை இனத்தை, (நிங்காலா மொழிபேசும்)பெரும்பான்மை இனம் அடக்கி இனப்படுகொலை செய்கின்றது.

அங்கே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லை என்று நான் இங்கே கூறவரவில்லை. ஆனால் அதற்கு பின்னணியில் இருக்கும் அயல்நாடுகளான உகண்டா, ருவாண்டா படைகளின் ஆக்கிரமிப்பு, மூலப்பொருட்களுக்கு உரிய விலையை கொடுக்காது கொள்ளையடிக்கும் மேற்குலக வர்த்தக கழகங்கள் போன்றவற்றின் லாப நோக்கங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ருவாண்டாவின் அரசபடையினர் சீருடையை மாற்றிப் போட்டுக் கொண்டு “கிளர்ச்சியாளர்கள்” என்று சர்வதேச தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னாள் காட்சிதருகின்றனர். “நடுநிலை தவறாத” ஊடகங்கள் எதற்காக “கிளர்ச்சியாளர்களை” மட்டும் பேட்டி எடுக்கின்றன? அங்கே நடப்பது இனப்பிரச்சினை என்று நாம் நம்ப வேண்டுமாம்.
கடந்த பத்தாண்டுகளாக கொங்கோ போரில் நான்கு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை எடுத்து அறிவிக்கவில்லை. தற்போதும் அதுதான் நடக்கின்றது. சில மனித உரிமை ஸ்தாபனங்களின் விடாமுயற்சியால் ஐ.நா.சபை தலையிட்ட போது மட்டும் சிறிதளவு கவனிப்பு இருந்தது. அதுகூட கிழக்கு கொங்கோவில் அரசபடைகளின் கட்டுப்பாட்டை குறைத்து, கிளர்ச்சிப் படைகளுக்கு(என்று சொல்லப்படுவன) சுரங்கங்களை பராமரிக்கும் உரிமை வாங்கிக் கொடுக்கும் வகையிலேயே அந்த “சர்வதேச தலையீடு” இடம்பெற்றது. சமாதானப்படைகள் என்ற பெயரில் வந்த பன்னாட்டு இராணுவத்தினர்(இந்தியா கூட படை அனுப்பியது) சமாதானத்தை நிலைநாட்டினார்களோ இல்லையோ, கன்னிப் பெண்கள் மீது பாலியல் இச்சையை தீர்த்து தமது ஆண்மையை மட்டும் நிலைநாட்டினார்கள். மறந்தும் கூட கனிமவளங்கள் கொள்ளையடியடிக்கப்படும் சுரங்கங்கள் பக்கமே போகவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த சுரங்கங்களை நிர்வகிக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு ஆயுதம் விற்று மேலதிக வருமானம் தேடிக்கொண்டனர். இப்படி வேலியே பயிரை மேய்ந்த கதைகள் வெளிவந்த போது ஐ.நா.சபை நாணத்தால் கூனியது.

கிழக்கு கொங்கோவில் எந்த ஒரு அரசியல் சக்தியினதும் முழுமையான கட்டுப்பட்டு கிடையாது. கொங்கோ அரசாங்கத்தின் கனிமவள அமைச்சு நிர்வகிக்கும் சுரங்கங்கள் கூட அரசபடையில் இருக்கும் கொமாண்டர்களின் லாபநோக்கின் கீழ் சுரண்டப்படுகின்றன. தலைநகர் கின்சாசாவில் இருக்கும் மைய அரசோ, அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் போர் என்று தான் கூறிவருகின்றது. இதில் ஓரளவு உண்மை இருப்பதால் சாதாரண பொதுமக்கள் போருக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் நட்பு நாடுகளான அங்கோலா, சிம்பாப்வேயும் தமது படைகளை அனுப்பி வைத்ததால், “ஆப்பிரிக்காவின் உலகப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. அப்போது கொங்கோ அரசு தோழமை நாடுகளின் இராணுவ உதவிக்கு மாறாக தெற்கில் சில சுரங்கங்களை வாடகைக்கு கொடுத்திருந்தது.

இந்தப் பிரச்சினையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், கொங்கோ அரசபடையாக இருந்தாலும், அங்கோலாவின் தோழமை இராணுவமாக இருந்தாலும், அல்லது “கிளர்ச்சியாளர்” சீருடையணிந்த ருவாண்டா படையாக இருந்தாலும், அனைவரது நோக்கமும் எந்தச் சுரங்கத்தை யார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்பது தான். அதே நேரம் அந்த சுரங்கங்களில் இருந்து அகழப்படும் தங்கம், வைரம், மற்றும் கொல்த்தான் போன்ற விலைமதிப்பற்ற திரவியங்கள் யாவற்றையும் இடைத்தரகர்கள் வாங்கிக்கொண்டாலும், அவை போய்ச் சேரும் இடங்கள் (உலக மக்களின் நன்மதிப்பை பெற்ற) பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

கொங்கோ போர் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம் கொல்த்தான் என்ற மூலப்பொருள். இதிலிருந்து தான் இலத்திரனியல் கருவிகளில் பயன்படுத்தப்படும் “சிப்” தயாரிக்கப்படுகின்றது. உலக சந்தையில் நடமாடும் தொலைபேசி(மொபைல்), மடிக் கணணி(லப் டாப்) போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்து, விற்பனை அதிகரித்ததற்கும், கொங்கோ மக்கள் கொல்லப் படுவதற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மூலப்பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கப்பட்டு, நியாயமான வியாபாரம் நடக்குமாயிருந்தால் இலத்திரனியல் பொருட்களின் விலை இப்போதும் (நாம் வாங்க முடியாத அளவு) அதிகமாக இருந்திருக்கும். ஆனால் கொங்கோ மக்களை படுகொலை செய்து அல்லது அடித்துவிரட்டி விட்டு, எஞ்சியோரை வைத்து அடிமைகளாக்கி உற்பத்தி செய்யப்படும் கொல்த்தான் என்ற மூலப்பொருளின் விலை சர்வதேச சந்தையில் மிகக்குறைவாக இருக்கும் என்பதை கூறத்தேவையில்லை. இதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? எமது மத்தியதர வர்க்கம் வாங்கிப் பயன்படுத்தக் கூடியவாறு பாவனைப்பொருட்கள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும். இலத்திரனியல் கம்பனிகளின் நிகரலாபம் அதிகரிக்க வேண்டும். அதனால் உலக பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். இவை தானே நமது நல்வாழ்வுக்கு முக்கியம்? அதற்காக காந்தியின் குரங்குப் பொம்மை போல, “உண்மையை பார்க்காமல், கேட்காமல், பேசாமல்”; கணணிப்புரட்சியின் மகிமையை பற்றி மட்டுமே பேசிப் பொழுது போக்குவோம்.

மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு :
Documentary Video: Grand Theft Congo - DRC
Mining for minerals fuels Congo conflict
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Sunday, November 09, 2008

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்


"அமெரிக்கா ஒரு கனவு". அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தனது உழைப்பை/சேவையை விற்க தயாராகும் பல்லாயிரக்கணக்கான படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில்நுட்ப அறிவற்ற சாதாரண உழைப்பாளிக்கும் உள்ள கனவு. போதுமென்ற மனதை கொண்டிருக்க சொல்லும் பழமொழியை தற்போது யாரும் நம்புவதில்லை. பேராசை, பேரவா, சுயநலம், இவ்வாறு எவையெல்லாம் தப்பென்று நீதி நூல்கள் சொல்கின்றனவோ, அவையெல்லாம் அமெரிக்க கனவின் அடிப்படை தகுதிகள்.

"அமெரிக்க சுதந்திரம்"சாமானியர்களும் தினசரி உச்சரிக்கும் மந்திரம். ஆனால் அவர்களது சுதந்திரம் கடனுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் அண்மையில் தான் அறிந்து கொண்டார்கள். சுதந்திரம் இருந்தது! முதலாளிகளும், பெரிய நிறுவனங்களும், நிர்வாகிகளும், எல்லையற்ற சுதந்திரம் அனுபவித்தனர். அதிகம் சம்பாதித்தால், வரி குறையும். தாராளமாக செலவு பண்ண சுதந்திரம். லாபம் என்ற பெயரில் பெருகும் பணத்திற்கு எல்லை வகுக்கப்படவில்லை. அந்தப்பணத்தையும் எப்படியும் சேர்க்கலாம். சட்டப்படி திருடுவதற்கு கணக்காளர் வழிசொல்வார். பங்குச் சந்தையில் சூதாட முகவர்கள் இருக்கிறார்கள். பொய், புரட்டு, மோசடி, இவையில்லாமல் வியாபாரம் நடக்காது. இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க முடியாது. அரசாங்கம் தலையிட முடியாது. ஏனெனில் அது சந்தையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். அமெரிக்கர்கள் "சுதந்திரம்" என்ற சொல்லை சரியான அர்த்தத்துடன் தான் பயன்படுத்துகின்றனர். ஆந்நியர்கள் தான் அது எதோ தனிமனித சுதந்திரம் சார்ந்த விடயம் என்று நம்பி ஏமாந்து விட்டார்கள்.

பொருளாதாரம் சாமானிய மக்களுக்கு எளிதில் புரியாத ஒன்று. இருப்பினும் அனைவரும் இன்று சந்தைப் பொருளாதார விதிகளுக்கு அமைய பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். சந்தை என்பது இயற்கைப் பொருளாதாரத்தில் ஒரு பகுதி மட்டும் தான். ஆனால் லிபரலிச, (இன்னும் தீவிரமான) நியோ லிபரலிச சித்தாந்தங்கள் தான் சந்தையை பொருளாதார சக்கரத்தின் அச்சாணி ஆக்கின. பங்குச் சந்தை தேசிய பொருளாதாரத்தை தலைமை தாங்கும் வண்ணம், அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. அன்று பூரண தனியார்மயமாக்கலை ஆதரித்தவர்கள், இன்று நெருக்கடி காலத்தில் அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்கின்றனர்.

இப்போது தான் அரசு என்ற ஸ்தாபனத்தின் சுயரூபம் வெளித்தெரிகின்றது. அதன் அடிப்படை நோக்கம், அதாவது பலமான முதலாளிகளிடமிருந்து, பலவீனமான மக்களை பாதுகாப்பது என்ற வாக்குறுதி, இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவவசதியின்றி பிணியால் வாடிக்கொண்டிருக்கையில், 30 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்காக ஒரு சதமும் செலவழிக்காத அரசு, வங்கிகள் திவாலாகாமல் பாதுகாக்க பில்லியன் டாலர்களை தயங்காமல் அள்ளிக்கொடுத்தது. ஐரோப்பிய அரசுகளும் மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுத்து சந்தைப் பொருளாதாரம் அழிய விடாமல் காப்பாற்றின. தமது உதாரணத்தை பிற நாட்டு அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்றனர்.

அனைவரது கவலையும் வெகுவாக குறைந்துள்ள பங்குகளின் பெறுமதியை உயர்த்தவேண்டும் என்பதே. ஒரு நிறுவனத்தின் ஐந்து சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை அரசாங்கம் வாங்க கூடாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் பாராளுமன்ற அனுமதி வேண்டும் என்று சில நாடுகளில் சட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் காத்திராமல், ஒரே இரவுக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது அரசாங்கம் பங்குகளை வாங்கி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தை நன்றாக இயங்க வைத்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு கொண்டுவருவோம் என்று பகிரங்கமாகவே சொல்கின்றனர். சுருக்கமாக சொன்னால், முதலாளிகள், அவர்களது மூலதனம் காப்பாற்றப்பட வேண்டும்.

நிதி நெருக்கடியை இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாக பார்த்தனர். அது தவறு. முதலாளித்துவம்(அதிலும் குறிப்பாக வங்கித்துறை, சந்தை என்பன) அடி வாங்கியுள்ளது. அரசுகள் தலையிட்டு காப்பாற்றி விட்டன. அதே நேரம், இது தற்காலிக பின்னடைவு மட்டுமே, மீண்டும் எல்லாம் பழையபடி வந்து விடும் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர். அதுவும் தவறு. முதலாளித்துவ பொருளாதாரம் குறிப்பிட்ட காலம் வளருவதும், பின்னர் அளவுகடந்த உற்பத்தி காரணமாக நெருக்கடிக்குள் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து மீள்வதும் அடிக்கடி நடப்பது தான். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி, இமாலய பலத்துடன் இருந்த வங்கிகளை பாதித்திருப்பதால், அதன் விளைவு பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

இந்த நெருக்கடியால் அமெரிக்கா வல்லரசு தகரும் என்ற எண்ணமும் தவறானது. ஜெர்மனியின் அதிகம் விற்பனையாகும் வலதுசாரி சஞ்சிகையான "டெர் ஸ்பீகல்" கூட அப்படி ஒரு கருத்தை முன்வைத்தது. உலகப் பொருளாதரத்தில் அமெரிக்காவின் ஆலோசனைகளை, மாதிரிகளை, கொள்கைகளை இனிமேல் யாரும் பின்பற்றபோவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்கா தான் தற்போதும் உலகில் மிகப்பெரிய இராணுவ வல்லரசு என்ற நிலையில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில், அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு, ரஷ்யா அல்லது சீனா அமெரிக்காவை விட இராணுவ வளர்ச்சி கண்டால் ஒரு வேளை நிலைமை மாறலாம். அமெரிக்கா தனது பாதுகாப்பு படைகளுக்கு, அதிக பட்ஜெட் ஒதுக்கி வருகின்றது. பல நிறுவனங்கள் இராணுவத்துக்கு தேவையான ஆயுத தளபாடங்களையும், பிற கருவிகளையும் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வாங்குவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. மேலும் சினிமா, இசை, போன்ற கலாச்சார ஏற்றுமதியிலும் அமெரிக்கா முன்னணி வகிக்கின்றது. சமீபத்திய நிதி நெருக்கடியானது, இத்தகைய நிறுவனங்களில் இதுவரை முதலிட்ட வங்கிகளை ஓரங்கட்டி விட்டு, அரசே எடுத்து நடத்தும் நிலையை உருவாக்கலாம். அப்படியானால் அது ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை கூட உருவாக்கலாம்.

முதலாளித்தை ஆதரிப்பவர்களுக்கு நிரந்தர கொள்கை எதுவும் இல்லை. லிபரலிசம், நியோ லிபரிலிசம், Laissez Faire முதலாளித்துவம், சமூக ஜனநாயகம், அல்லது பாசிசம் இவ்வாறு எதை அடிப்படையாக வைத்தாவது முதலாளித்துவத்தை, அல்லது அதனால் பலனடையும் தமது இருப்பை காப்பாற்றவே விரும்புவர். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்கா மீண்டு விட்டது தானே, என்று முதலாளித்துவத்திற்காக வாதாடுபவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கலாம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்கா, ஜெர்மனிக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடனை உடனே திருப்பி செலுத்துமாறு கோரியதும், அதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாசிசத்தின் எழுச்சிக்கும், ஹிட்லர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்ததும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட வல்லரசுப் போரில்(2 வது உலகயுத்தம்) அமெரிக்காவும் குதித்து ஆயுதங்கள் விற்று தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டதும் வரலாறு. சரித்திரம் மீண்டும் திரும்பாது என்பது நிச்சயமில்லை.

நிதி நெருக்கடியின் விளைவுகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் "பொருளாதார தேக்கம்" என்ற பின்னடைவை ஏற்படுத்தப் போவது மட்டும் உறுதி. அதன்படி இயற்கையான பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் செலவைக் குறைத்தல் என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகமான தொழிலாளரை வேலையை விட்டு நீக்குதல், ஒரு பக்கத்தில் உதவிப் பணத்தில் அல்லது வறுமையில் வாழும் மக்களை உருவாக்கும். மக்கள் தமது பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீட்டிலே சேமிக்க தொடங்குவர். நமது நாட்டு மக்களுக்கு (அமெரிக்க-ஐரோப்பிய) "சீரழிவு கலாச்சாரம்" பற்றிய புரிதல் மிகக் குறைவு. உண்மையில் இந்த "சீரழிவு கலாச்சாரம்" தான் இந்த நாடுகளை பணக்கார நாடுகளாக தொடர்ந்து வைத்திருந்த ஊக்கியாகும். அதாவது மக்கள் பணத்தை தாராளமாக செலவழிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளோடு நிறுத்திக் கொள்ளாது ஆடம்பர தேவைகளுக்கும் செலவழிக்க வேண்டும். அப்போது தான் புதிய புதிய (ஆடம்பர பண்டங்கள் உற்பத்தி செய்யும்) நிறுவனங்கள் உருவாவதுடன், அதனால் தேசிய பொருளாதாரமும் வளர்ச்சியடையும். சாமானியருக்கும் புரியும்படி சொன்னால், "குடி" மக்கள் அதிகளவில் மதுபான சாலைகளை நாடினால், அந்த துறை வளர்ச்சியடைவதுடன், அரசாங்கத்திற்கும் நிறைய வரி கிடைக்கும். "பணம் ஓடித்திரிய வேண்டும்" என்பது சந்தையின் பொன்மொழி. இதற்கு மாறாக இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் ஓரளவேனும் வசதிபடைத்த மக்கள், பணத்தை தங்க நகைகளாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதால், ஏற்கனவே அங்கே பொருளாதார தேக்கம் நிலவுகின்றது.

உலகமயமாக்கல் அமெரிக்க பாணி கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதற்கு இந்தியா போன்ற "பழமை, பாரம்பரியம்" மிக்க நாடு கூட தப்பவில்லை. காரணம், தனி இனம் போல காட்சியளிக்கும்,அந்நாட்டின் ஆளும் வர்க்கம். அன்று தமது பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்களாக இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்து பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டினார்கள். அண்மைக்காலத்தில் கணிப்பொறி வல்லுனர்களை அனுப்பி அந்த தேவையை நிறைவேற்றிக் கொண்டனர். இவ்வாறு ஒருபக்கம் "தங்கப்பசி" கொண்ட இந்தியர்கள் உலகிலேயே அதிகளவு தங்கத்தை நுகர்வோராக இருப்பதாலும், மறுபக்கம் NRI என்றழைக்கப்படும் வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் டாலர்கள் அரச கஜானாவை நிறைப்பதாலும், உலக பொருளாதாரம் இந்தியாவை நெருக்கமாக கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலைமை, 90 களுக்கு பின்னர் ஏற்பட்ட சந்தைப் பொருளாதார சீர்திருத்தால் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்து நேருவின் சோஷலிசம் இருந்த காலத்தில் கூட எதோ ஒருவகையில் நிதி நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும். விரிவாக சொன்னால், தங்கமும், டாலரும் உலக வர்த்தகத்திற்கு இன்றியமையாதவை. இவ்விரண்டும் கையிருப்பில் குறைந்தால், அல்லது உலக சந்தையில் பெறுமதி குறைந்தால் அந்த நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும்.

உலகின் அரைவாசி நாடுகளை தனது காலனிகளாக வைத்திருந்த இங்கிலாந்து தான் தங்கத்தை உலக வர்த்தகத்திற்கான பொது நாணயமாக கொண்டு வந்தது. (இங்கிலாந்து நாணயமான பவுன் என்ற பெயர் அதன் காரணமாக வந்தது தான்) அதன் காரணமாக எல்லா நாட்டு நாணயமும் தங்கத்துடன் ஒப்பிட்டு பெறுமதி பார்க்கப்பட்டது. 2 ம் உலகயுத்தத்தின் பிறகு அமெரிக்கா உலக ஏகபோக வல்லரசாகியதால், டாலரை சர்வதேச வர்த்தகத்திற்கான பொது நாணயமாக்கியத்துடன், டாலரின் பெறுமதியை தங்கத்துடன் ஒப்பிடுவதில் இருந்து கழற்றி விட்டது. இதனால் அனைத்து உலக நாடுகளும், (சீனா உட்பட) தமது திறைசேரியில் டாலர்களை நிரப்பி வைத்துள்ளன. அனேகமாக அமெரிக்கா தேசத்தில் பாவனையில் உள்ள டாலர் அளவேனும், வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளதால், அதேயளவு டாலர் தாள்களை அச்சடித்து உள்நாட்டில் புழக்கத்திற்கு விட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக உலக நாடுகள் தமது டாலர்களை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதனது கேள்வி குறைந்து, பெருமளவு டாலர்கள் அமெரிக்காவுக்கே திரும்புமாயின், அமெரிக்காவில் இன்னொரு நிதி நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும் உருவாகும்.ஏற்கனவே எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் மத்தியில் ஈரானும், வெனிசுவேலாவும் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக யூரோவை கொண்டு வரவிருந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கம் தான் அப்படி ஒரு முயற்சியை தடுத்த சக்தி. அமெரிக்காவின் செல்வத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 2 ம் உலகயுத்ததிற்கு பின்னர், அழிவில் இருந்து ஐரோப்பாவை மீட்டு பணக்கார நாடுகளாக மாற்றிய அமெரிக்கா, அதற்கு பிரதிபலனாக அமெரிக்காவில் முதலீடு செய்ய தூண்டியது. அதே போன்றே எண்ணை ஏற்றுமதியால் பெரும்பணம் ஈட்டிய வளைகுடா ஷேக்குகளும், தமது லாபத்தில் பெரும்பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இதனாலேயே அந்த நாடுகளும் அமெரிக்க நிதி நெருக்கடிக்குள் சிக்கி பாதிக்கப்பட்டன.

இன்றைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அண்மைக்காலமாக பொருளாதார வளர்ச்சி கண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளை வந்து முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கேட்டு வருகின்றது. இந்தியா அதனை செய்யும் சாத்தியம் உண்டு. அணுசக்தி உடன்படிக்கை மூலம் அமெரிக்கா, இந்தியாவை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனா தயக்கம் காட்டுகின்றது. அது தனது பொருளாதார பழுதுகளை திருத்திக் கொள்வதிலும், உள்நாட்டில் முதலீடு செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறது. அப்படியே அமெரிக்காவில் முதலீடு செய்ய முன்வந்தாலும், நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை வாங்க விரும்பலாம். அதனை (நாட்டை விற்பதற்கு சமம் என்பதால்) அமெரிக்கா விரும்பப் போவதில்லை. மேலும் இனிமேல் (சீனாவின் ஒரு பகுதியான) ஹோங்ஹோங் தான் இனிமேல் (நியூ யார்க் போல) சர்வதேச வர்த்தக மையமாக வரப்போவதாக வதந்திகள் அடிபடுகின்றன.

இன்று காணும் மாற்றங்கள் யாவும் சீனா உலக வல்லரசாக மேலாண்மை பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளதை கோடிட்டுக்காட்டுகின்றன. அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான எதிர்கால அச்சுறுத்தலுமாகும். இந்த ஒப்பந்தமானது, இந்தியா முற்றுமுழுதாக அமெரிக்க முகாமுக்குள் போய்விட்டதை காட்டுகின்றது. அதே நேரம், சீனா இலங்கையில் காலூன்றி வருகின்றது. இவ்வளவு காலமும், இலங்கைக்கு அதிக நிதியுதவி வழங்கி வந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டது சீனா. இலங்கையின் தென்பகுதியில், எதிர்காலத்தில் வரப்போகும்(அல்லது அப்படி ஊகிக்கப்படும்) சீன கடற்படை முகாமானது, இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கான ஏற்பாடு ஆகும். இலங்கை சீனாவின் ஆதிக்கத்திற்கும் முழுவதுமாக போக முன்னர், இந்தியா தனது முதலீடுகளை பெருக்குவதன் மூலம் தடுக்கப்பார்க்கின்றது. அமெரிக்கா இராணுவ உதவி செய்வதன் மூலம், ஈரானின் தலையீட்டை தடுக்கப்பார்க்கின்றது. இன்றைய நிதி நெருக்கடி இந்த வல்லரசுப் போட்டியை தீவிரமாக்கலாம், அல்லது விரைவு படுத்தலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய முதலீடுகள் மிகக் குறைவு. ஐரோப்பாவில் இருந்து வரும் நிதியில் பெருமளவு பகுதி, "NGO பொருளாதாரத்திற்கே" செலவிடப்படுகின்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற திட்டங்களை ஐரோப்பிய பணத்தில் நடைமுறைப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள் இனிமேல் இயங்க முடியாத நிலை வரலாம். அதற்கு காரணம், நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தமது வங்கிகளை காப்பாற்ற பெரும்பணம் செலவிடும் ஐரோப்பிய அரசுகள், அபிவிருந்தியடையும் நாடுகளுக்கு இதுவரை வழங்கி வந்த நிதியை குறைக்கவிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, சர்வதேச சந்தையில் ஏறிய உணவுப்பொருட்களின் விலை இறங்கவில்லை. உள்நாட்டில் கூட உணவுப்பொருட்களை வாங்குவதும் விற்பதும் (லாபத்தை மட்டுமே முக்கியமாக கருதும் வியாபாரிகளின்) கையில் இருப்பதால், மக்கள் பட்டினியால் செத்தாலும் விலை குறையப் போவதில்லை. இது போன்ற காரணங்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள், வறுமைக்குள்ளும், இன்னும் மோசமாக பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுவர். இவற்றைப் பற்றி உலக அக்கறை மிக மிக குறைவாக இருக்கும். இந்த நெருக்கடியான காலத்தில், பணமிருப்பவர்கள் தமது நலன்களை மட்டுமே பார்க்கப்போகின்றனர். இதைப்பற்றி கேட்கபோனால், "தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்" என்று தத்துவ முத்துகள் உதிரப்போகின்றன. உலக உணவுத்திட்டமும், ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து ஏற்கனவே எச்சரித்து விட்டன.
_________________________________________________
-இந்தக் கட்டுரை நோர்வேயில் இருந்து வெளிவரும் "பறை" இதழில்(ஒக்டோபர் 2008) பிரசுரமாகியது. http://www.frimedianorway.com
____________________________________________________________

Saturday, November 08, 2008

பிரெஞ்சு இராணுவம்: குற்றவாளிகளும் விண்ணப்பிக்கலாம்


ஏதாவதொரு குற்றச்செயல்களுக்காக சொந்த நாட்டில் தேடப்படும் நபர்களை பிரான்ஸ் வரவேற்கிறது. பிரான்ஸில் வெளிநாட்டவர்களை மட்டுமே கொண்ட கூலிப்படையில் சேர்வதற்கு உலகெங்கும் இருந்து விண்ணப்பதாரிகள் கோரப்படுகின்றனர். உங்கள் கடந்த காலம் பற்றி அக்கறையில்லை. சொந்த நாட்டில் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை போன்ற எந்தவொரு கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்ட நபராயினும் பரவாயில்லை. பிரெஞ்சு இராணுவத்தில் தொழில் வாய்ப்பு உள்ளது. French Foreign Legion என்று அழைக்கப்படும் படைப்பிரிவில் பிரெஞ்சு பிரசையாகவல்லாத வெளிநாட்டவர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். அந்த படைப்பிரிவில் சேரும் நபருக்கு புதியதொரு நாமம் சூட்டப்பட்டு, அந்தப் பெயரிலேயே (பிரெஞ்சு)அடையாள அட்டை வழங்கப்படும். அதற்குப்பிறகு உங்களை உலகில் எந்த மூலையிலும் யாரும் தேட முடியாது.

ஆம், உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கின்றீகளோ, அதற்கு மாறாக தான் இருக்கின்றது. உலகில் பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. அதெல்லாம் சாதாரண மக்களை மந்தைகளாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட வெறும் சொற்கள். தத்துவ ஞானிகள் கூறிய அருள்வாக்குகள் எம் கண்முன்னாலேயே நிரூபணமாகின்றது. கீதையில் கண்ணன் கூறிய அதே கருத்துகளை பிற்காலத்தில் இத்தாலியின் மாகியவல்லியும் கூறிச் சென்றான். பாமரர்கள் தான் அரசு என்றால் அறம் இருக்க வேண்டும் என்று ஏமாந்து போகிறார்கள். ஒரு தனிநபரைப் போலத்தான், ஒவ்வொரு நாட்டிற்கும் அதனது நலன்கள் மட்டுமே முக்கியமானவை. கிரிமினல் குற்றவாளிகளை இராணுவத்தில் சேர்ப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. காலனியாதிக்க காலத்தில் ஐரோப்பாவின் குற்றவாளிகளைப் பிடித்து புதிய காலனிகளுக்கு இராணுவவீரர்களாக அனுப்பிவைத்தார்கள். அதற்கு அவுஸ்திரேலியா மட்டும் ஒரு உதாரணமல்ல, எல்லா காலனிகளிலும் இதுதான் நடந்தது. அந்த பாரம்பரியத்தை பிரான்ஸ் இப்போதும் பின்பற்றி வருகின்றது.

உலகம் முழுவதும் இருந்து 136 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த படைப்பிரிவில் அங்கம் வகிக்கின்றனர். அமெரிக்கர்கள், ரஷ்யர்கள், சீனர்கள், ஆப்பிரிக்கர்கள் என்று பலதரப்பட்ட நாடுகளை சேர்ந்தோர் பிரான்சினால் உள்வாங்கப்படுகின்றனர். கடுமையான இராணுவ பயிற்சிக்குப் பிறகு இந்த வீரர்கள் பிரான்சின் நலன்களை பாதுகாக்கும் வெளிநாட்டு நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அது ஈராக்காக இருக்கலாம், அல்லது ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் முன்னாள் பிரெஞ்சு காலனியாகவும் இருக்கலாம். பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் கீழே இயங்கினாலும், பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் இந்த வெளிநாட்டவர் இராணுவப்பிரிவு ஈடுபடுத்தப்படுகின்றது.

உலகில் மிகக் குறைந்த மக்களே அறிந்திருக்கும் இந்த தகவல்களைப் பற்றிய முழுமையான ஆவணப்படம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள்
French Foreign Legion இணையத்தளத்தை பார்வையிடலாம்.

FRENCH FOREIGN LEGION



French Foreign Legion (Wikipedia)
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Wednesday, November 05, 2008

ஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்



காஷ்மீரின் "ஹுர்ரியட்" என அழைக்கப்படும் அனைத்துக் கட்சிகளின் மகாநாட்டு தலைவர்கள், அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் பராக் ஒபாமாவின் வெற்றியை, தமது வெற்றியாக கருதி கொண்டாடியுள்ளனர். தேர்தலுக்கு முன்பே "காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்" என்று ஒபாமா கூறியுள்ளார். காஷ்மீர் பற்றி தனது நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பழைய உறவுகளை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கென முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் விசேட தூதுவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வந்துள்ளன. பிரச்சினை இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தற்போது ஒபாமா கூறியுள்ளதாக கருதப்பட்டாலும், இனிவருங்காலங்களில் பிரச்சினை எவ்வாறு மாற்றமடையும் என்பதைக் கூறமுடியாது.

நிச்சயமாக இந்தியா இத்தனை விரும்பப்போவதில்லை. அது எப்போதும் காஷ்மீர் பிரச்சினையில் அந்நிய நாடுகள்(அமெரிக்கா ஆனாலும்) தலையிடுவதை, கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய,பாகிஸ்தானிய பிரதிநிதிகள் வாதப்பிரதிவாதங்களில் இறங்கினர். "காஷ்மீர் இந்தியாவின் பகுதி" என்ற இந்தியப் பிரதிநிதியின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்த பாகிஸ்தானிய பிரதிநிதி "இந்திய மைய அரசு காஷ்மீரில் மக்கள் போராட்டங்களை அடக்கி, மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக" குற்றம் சாட்டினார். ஒபாமாவின் கூற்றுப்படி, காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுமா? என்று இந்திய கொள்கை வகுப்பாளர்களை கேட்டபோது, "இதெல்லாம் தேர்தல் கால பிரச்சாரம்" என்று சொல்லி தட்டிக் கழித்து விட்டனர். 

இது இவ்வாறிருக்க ஒபாமா பதவிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும் ஆபத்து நிறைய உள்ளது. ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் வாங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள ஒபாமா, அதே நேரம் ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ளா அல் கைதா தளங்கள் கலைக்கப்பட வேண்டும் என்றும், தாலிபான் முற்றாக அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசின் ஒப்புதல் இல்லாமலும், அங்கே அமெரிக்கா நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்துளார்.

பாகிஸ்தானுக்குள் இப்போதும் அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்கள் அல் கைதா-தலிபான் இலக்குகள் என்று கூறுமிடங்களில் தினசரி குண்டுவீசி வருகின்றன. விமானக் குண்டு வீச்சில் இறப்பவர்கள் எல்லோருமே அல் கைதா அல்லது தலிபான் போராளிகள் என்று அமெரிக்க அரசு கூறினாலும், நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளுமாக பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானிய மக்களின் கோபாவேசம் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியிருக்கையில், அவர்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து தமது கண்டனங்களை தெரிவித்ததுடன், இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்படி பலமுறை கேட்டுக் கொண்டும் இதுவரை எந்தப்பலனும் இல்லை.

பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்க கொள்கையை வைத்து தான் காஷ்மீர் பற்றியும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒபாமா ஏதோ இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை வாங்கித்தரப் போவது போல பல காஷ்மீரிகள் கருதிக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதும் தனது நலன்களை முன்னிட்டுத்தான் பிறநாடுகளின் பிரச்சினையில் தலையிடும், என்று சில ஹுர்ரியட் தலைவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேற்குலகம் காஷ்மீர் தீவிரவாதம் குறித்து மென்மையான போக்கையே பின்பற்றிவருகின்றது. லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த காஷ்மீரிகள் விடுதலை இயக்கங்களுக்கு பெருமளவில் உதவுவதற்கு எந்த தடையும் இருந்ததில்லை. 

பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, காஷ்மீர் தேசியவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு சி.ஐ.ஏ. ஆதரவளிப்பது ஒன்றும் இரகசியமல்ல. அதற்கு காரணம், காஷ்மீர் சீனாவுக்கு அருகில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இருப்பினும் தற்போது வந்திருக்கும் ஒபாமாவின் கருத்துகளை வைத்துக் கொண்டு, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து எதுவும் சொல்ல முடியாதுள்ளது. "காஷ்மீர் பிரச்சினையை முடித்து விட்டால், பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டி போடுவதை விட்டு விட்டு, உள்நாட்டில் வளர்ந்து வரும் (அல் கைதா, தலிபான்) தீவிரவாதத்தை அடக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள்." - இது மட்டுமே ஒபாமா தெரிவித்திருக்கும் விளக்கம்.

பராக் ஒபாமா வெளிநாட்டுக் கொள்கை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது, பாகிஸ்தான் ஒரு முழுமையான யுத்தத்தினுள் இழுத்துவிடப்படும் போலத்தெரிகின்றது. தேர்தலுக்கு முன்பு நடந்த இரகசிய மந்திராலோசனை ஒன்றில் புஷ், அப்போது வேட்பாளர்களாக இருந்த மக் கெயினதும், ஒபாமாவினதும் ஆலோசகர்களை அழைத்து மோசமடையும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து கதைத்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே அடுத்த வருடமும் (ஒபாமா ஆட்சியில்) ஆப்கானிஸ்தான் போர் தொடரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
தேர்தல் ஒரு மோசடி நாடகம். திரை மறைவில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அரசின் வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். உலகெங்கும் போர் வெறியன் என்று கெட்ட பெயரெடுத்த புஷ் போன்றவர்களை வைத்து இனிமேல் அரசியல் நடத்த முடியாது, அதற்கு பதிலாக வசீகர தோற்றம் கொண்ட, அதுவும் சிறுபான்மை கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா சிறந்த தெரிவாக பட்டிருக்கலாம். "ஒபாமாவா இப்படி?" என்று பலர் எதிர்பார்க்காத ஒருவரைக் கொண்டு காரியங்களை சாதிப்பது இலகு. அதாவது "மென்மையான ஏகாதிபத்தியம்" தான் இனிமேல் அமெரிக்காவின் வெளித்தோற்றத்தை தீர்மானிக்கப் போகின்றது.

உசாத்துணை தொடுப்புகள் :Kashmiris see hope in Obama
Kashmir role on cards for Clinton
McCain and Obama Advisers Briefed on Deteriorating Afghan War
முன்னைய பதிவு :
பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy