யாழ்ப்பாணத்தில் நடந்த ரஜனி ஆதரவு போராட்டம் தொடர்பாக இந்தப் பதிவு. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்கள் மீது அறச்சீற்றம் கொள்ளும் தமிழின எழுச்சியாளர்கள், அந்த அப்பாவி பின்னால் நின்று மக்களை ஆட்டுவித்த லைக்கா முதலாளியை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். இப்போதும் நாங்கள் இதற்கெல்லாம் மூலகாரணமான லைக்காவின் பெயரை தப்பித் தவறியும் உச்சரிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழன்டா, லைக்காவின் அடிமைடா!
ஜல்லிக்கட்டு மாடுகளுக்காக போராடியவர்கள், ரஜனிகாந்த் என்ற நடிகனுக்கான போராட்டம் "நியாயமற்றது" எனக் கூறுகிறார்கள். ஈயத்தை பார்த்து பித்தளை இளித்ததாம் என்றொரு பழமொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்?
இதற்குப் பின்னால் உள்ள வர்க்க அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு ஆதரவாக போராடியவர்கள், வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் மத்தியதர வர்க்க இளைஞர்கள். ஏற்கனவே சொந்த வீடு, உயர் கல்வி, உத்தியோகம் எல்லாம் கிடைக்கப் பெற்றவர்கள். ஆயிரம் வசதிகள் இருந்தும் தமிழீழம் இல்லையே என்பது மட்டுமே அவர்களது கவலை.
ரஜனி என்ற நடிகனுக்காக போராடியவர்கள், வாழ்க்கையில் எந்த வசதியுமற்ற அடித்தட்டு உழைக்கும் மக்கள். போரினால் பாதிக்கப் பட்டு, இடம்பெயர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைகள். அவர்களுக்கு லைக்காவோ, அல்லது தொண்டு நிறுவனமோ இலவசமாக கட்டிக் கொடுக்கும் வீடுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளவர்கள்.
லைக்கா கட்டிய வீடுகளின் சாவிகளை கொடுப்பதற்கு ரஜனிகாந்தை வரச் சொன்னதும் காரணத்தோடு தான். அது தயாரிக்கும் எந்திரன் படத்திற்கான விளம்பரமும் இதற்குள் அடங்கியுள்ளது. லைக்கா தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதால் தான், 150 வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக் கொடுத்தது. இதைத் தான் கோயில்களில் அன்னதானம் கொடுக்கும் "வள்ளல்களும்" செய்கிறார்கள். எல்லாம் விளம்பரம் தேடும் மலின உத்தி தான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இங்கே பலர் முக்கியமானதொரு உண்மையை மறந்து விடுகிறார்கள். இவ்வளவு காலமும், வீடற்ற ஏழைகள் குரலற்றவர்களாக புறக்கணிக்கப் பட்டு வந்தனர். கூட்டமைப்புக்கும், சைக்கிள் கட்சிக்கும் இடையிலான குடுமிப் பிடி சண்டையில் அந்த மக்களின் பிரச்சினைகள் பேசப் படுவதில்லை.
ரஜனி ஆதரவுப் போராட்டத்தை லைக்கா பின் நின்று நடத்தி இருந்தாலும், அந்த மக்களை கூட்டி வந்து ஊடகங்களுக்கு முன்னுக்கு நிறுத்தியதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ரஜனி ஆதரவுப் போராட்டமாகத் தான் தெரியும். அது ஸ்பொன்சர் பண்ணிய லைக்காவின் உத்தரவு. ஆனால், போராட்டத்திற்கு செல்லாவிட்டால் வீடு கிடைக்காது என்ற பயமும் அந்த அப்பாவி மக்கள் மனதில் இருந்திருக்கும்.
இந்த நாடகத்தை பின்னுக்கு நின்று இயக்கிய லைக்காவை குற்றம் சாட்டாமல், முன்னால் நின்ற அப்பாவி மக்களை தூற்றுவது ஏன்? அவர்களை "முட்டாள்கள், ஒரு பியருக்கு விலை போனவர்கள்" என்றெல்லாம் இழிவு படுத்துவது ஏன்? எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?
எய்தவன் யாரென்று தெரிந்த போதிலும், அம்புகளை குறை கூறுவோர் தானும் ஓர் அம்பு என்பதை அறியாமல் இருக்கிறார். முகநூலில் ஒருவர் கருத்திட்டார்: //சுவரொட்டி ஒட்டிய அந்த அக்னிக்குஞ்சுகளை பிடித்து வாருங்கள், *** எடுத்து விடுவோம்.// சுவரொட்டி அடித்துக் கொடுத்த லைக்கா முதலாளியின் பெயர் அல்லிராஜா சுபாஸ்கரன். எங்கே உங்களால் முடிந்ததை செய்யுங்கள் பார்ப்போம்?
இது தான் மத்தியதர வர்க்கத்தின், குட்டி பூர்ஷுவா குணாம்சம். அவர்கள் லைக்காவை விமர்சிக்க மாட்டார்கள். ஏனென்றால் முதலாளிகளை பகைக்கக் கூடாது என்பார்கள். அதே நேரம், அடித்தட்டு மக்களை இழிவு படுத்துவார்கள். அதை தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை என்ற தைரியம்.
ஒரு விடயத்தை கவனித்தீர்களா? ரஜனியின் இலங்கை வருகைக்கு எதிராக கம்பு சுற்றிய ஈழத் "தமிழ் உணர்வாளர்கள்", லைக்காவுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி வருகின்றனர்.
ஏனென்றால் "லைக்கா அதிபர் நம்மவர்(ஈழத் தமிழர்)" என்று பெருமைப் பட வேண்டுமாம். "பிரிட்டிஷ் மகாராணியை விடப் பணக்காரன்." என்று புளுகுகள் வேறு.
லைக்காவின் புகழ் பாடும் பரப்புரையாளர்கள், அநேகமாக கஜேந்திரகுமாரின் த.தே.ம.மு. கட்சி ஆதரவாளர்கள் என்பது இரகசியம் அல்ல.
இதே நேரத்தில், யாழ்ப்பாணத்தில் மகிந்த விசுவாசியாக அரசியலில் அடியெடுத்து வைத்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "ரஜனியின் வருகை தடைப் பட்டதால் லைக்காவின் திட்டம் பாழாகி விட்டதாகவும், ஏழை மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்..." நீலிக் கண்ணீர் வடித்துள்ளார்.
அங்கஜன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தானே? ஏழைகளுக்கு உதவுவது அவரது அரசின் கடமை அல்லவா? எதற்காக ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியை எதிர்பார்க்க வேண்டும்?
லைக்காவுக்கும் ராஜபக்சேக்கும் இடையிலான வர்த்தக உறவு ஏற்கனவே அம்பலமான விடயம். அது ஒன்றும் இரகசியம் அல்ல. ஆனால் வெளியே மக்களுக்கு தெரியாத ஒரு இரகசியம் உள்ளது.
தெற்கில் ராஜபக்சே விசுவாசிகளுக்கும், வடக்கில் கஜேந்திரகுமார் விசுவாசிகளுக்கும் இடையிலான நட்புறவுப் பாலமாக லைக்கா செயற்படுகின்றது. முதலாளிகளின் பணத்திற்கு முன்னால் இன முரண்பாடு மாயமாக மறைந்து விடும்.
ஒருவர் அடிப்பது மாதிரி அடிப்பார். மற்றவர் அழுவது மாதிரி அழுவார். அரசியலில் இதெல்லாம் சகஜம் ஐயா.
இதற்குப் பெயர் #மேட்டுக்குடி அரசியல்.
இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:
1 comment:
got the picture boss
keep it going
nice work
Post a Comment