வட கொரியா பற்றி எத்தகைய கட்டுக்கதைகளையும் பரப்பலாம். அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர், சண் டிவி இல் "மர்ம தேசம்" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "கிம் தேசம்" என்ற இன்னொரு நிகழ்ச்சியில் வட கொரியா பற்றிய புளுகுகளை ஒளிபரப்பியுள்ளனர். (நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்:கிம் தேசம்)
"அம்மா தேசத்தில்" இருந்து ஒளிபரப்பான, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "கிம் தேசம்" காமெடி நிகழ்ச்சியில் சொல்லப் பட்ட நகைச்சுவை துணுக்குகள் இவை தாம்:
புளுகு 1:
//அதிபர் கடவுளுக்கு நிகரானவர்!!!//
வட கொரியாவின் ஸ்தாபகர் என்று கருதப்படும் கிம் இல் சுங், "ஜூச்சே தத்துவம்" என்ற பெயரில் தேசிய சித்தாந்தம் ஒன்றை எழுதியுள்ளார். இன்றைக்கும் அது அங்கே கட்டாய பாடமாக படிக்கப் படுகின்றது. இயற்கையில் மனிதன் தான் எல்லா உயிரினங்களையும் விட சிறந்தவன் என்பது அடிப்படைக் கொள்கை. அந்த வகையில் கடவுள் என்ற கோட்பாட்டுக்கே அங்கே இடமில்லை. அதனால் யாரும் அங்கே அதிபரை கடவுளுக்கு நிகராக கருதப் போவதில்லை.
இதற்கு மாறாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அம்மா தேசத்தில் (தமிழ் நாடு), முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடவுளுக்கு நிகரானவராக கருதப் பட்டார். ஒரு தடவை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டதால், பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உடனே, தமிழ் நாடு முழுவதும் "கடவுளை தண்டிக்கலாமா?" என்று சுவரொட்டிகள் முளைத்தன. ஆகையினால், அம்மா தேசம் மாதிரித் தான் கிம் தேசம் இருக்கும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நினைப்பதில் ஆச்சரியமில்லை. பழக்கதோஷத்தில் அப்படி சொல்லி விட்டார்கள்.
புளுகு 2:
//வட கொரியா தான் உலகை ஆள்வதாக அங்குள்ள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!//
இது உண்மைக்கு புறம்பான பொய்ப் பிரச்சாரம். உலகம் முழுவதும் தங்களை ஒடுக்குவதாக வட கொரிய மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். நாங்கள் எல்லோரும் கவனிக்காமல் விடுகின்ற, மிக முக்கியமான தவறு ஒன்றுள்ளது. இன்றைக்கும் வட கொரியா அமெரிக்காவுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது! இது மிகைப் படுத்தல் அல்ல. உண்மையான நிலவரம் அது தான்.
அதாவது, ஐம்பதுகளில் நடந்த கொரிய யுத்தம் இன்னும் முடியவில்லை. அன்று ஏற்பட்ட யுத்த நிறுத்தம் இன்னமும் தொடர்கின்றது. யுத்த நிறுத்தம் என்றால், சமாதானம் என்று அர்த்தம் அல்ல. அந்த நிலைமையில், மீண்டும் அமெரிக்காவுடன் போர் வெடிக்குமா என்று கொரிய மக்கள் அஞ்சுவதில் தவறேதும் இல்லை. இன்னமும் யுத்தத்தின் மத்தியில் வாழும் மக்கள் எவ்வாறு தமது நாடு உலகை ஆள்வதாக நினைக்க முடியும்? இது போன்ற ஒரு நிகழ்ச்சியை தயாரிப்பதற்கு முன்னர், அந்த நாடு சம்பந்தமான வரலாற்றை ஆராய்ந்திருக்க வேண்டும். எழுந்தமானமாக பேசுவதற்குப் பெயர்: பிரச்சாரம்.
புளுகு 3:
//படித்தவர்களுக்கும் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் யாரென்று தெரியாது!//
இதுவும் ஒரு கலப்படமற்ற பொய். சிலநேரம், தமிழ் நாட்டில் படித்தவர்களை விட, வட கொரியாவில் படித்தவர்களுக்கு அதிக விடயங்கள் தெரிந்திருக்கலாம். குறிப்பாக, அமெரிக்க அரசியல் நிலவரம் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வது அபத்தமானது. ஏனென்றால், வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், தவிர்க்க முடியாமல் ஒபாமா, டிரம்ப் பற்றியும் பேச வேண்டி இருக்கும்.
"வட கொரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல்" என்று அமெரிக்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. அதற்கு பதிலாக, "அமெரிக்காவால் தமக்கு அச்சுறுத்தல்" என்று வட கொரிய ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டாதா? இது பிரச்சாரம் என்றால் அதுவும் பிரச்சாரம் தான். இருப்பினும் இவை தலைப்புச் செய்தியாக இடம்பிடிப்பவை. இதைப் புரிந்து கொள்ள பொது அறிவு இருந்தால் போதும்.
புளுகு 4:
//அதிபர் சிரித்தால் மக்களும் சிரிக்க வேண்டும், அதிபர் அழுதால் அழ வேண்டும்!//
இது சிறு குழந்தைகளுக்கு சொல்லும் தேவதைக் கதை போலுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது பார்வையாளர்களை குழந்தைகளாக கருதிக் கொண்டு அம்புலிமாமா கதை சொல்கின்றது. இதை எல்லாம் நம்புவதற்கும் சில வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள் தானே? அதிபரின் முடியலங்காரத்தை பார்த்து, கொரிய ஆண்கள் முடி திருத்த வேண்டும் என்றும் மேற்குலகில் வதந்திகளை பரப்பினார்கள். அது ஒரு கட்டுக்கதை என்பதை, வட கொரியாவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் நேரில் கண்டறிந்தனர்.
புளுகு 5:
//அதிபர் இறந்து விட்டால் துணை நடிகர்களும் தோற்றுப் போகும் அளவிற்கு கதறிக் கதறி அழுவார்கள்.//
கிம் இல் சுங் இறந்த நேரம் மக்கள் கதறிக் கதறி அழுதது உண்மை தான். அதற்குப் பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் இறந்த நேரம் அப்படி நடக்கவில்லை. கிம் இல் சுங்கின் கதை வேறு. பல தசாப்த காலமாக ஜப்பானிய காலனிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த கொரிய தீபகற்பத்தை விடுதலை செய்ததில் கிம் இல் சுங்கின் பங்கு அளப்பெரியது.
சுருக்கமாக, இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி, தமிழர்களுக்கு பிரபாகரன் மாதிரி, கொரியர்களுக்கு கிம் இல் சுங் என்று வைத்துக் கொள்வோம். பிரபாகரன் இறந்ததை கேள்விப் பட்டு தமிழ் நாட்டில் கூட பலர் கதறிக் கதறி அழுதார்கள். அவர்கள் எல்லாம் துணை நடிகர்கள் அல்ல. அப்படிச் சொல்வது சாதாரண மனித உணர்வுகளை புண்படுத்துவதாகும்.
பிரபாகரனின் பிம்பம் மாதிரி, வட கொரியாவில் கிம் இல் சுங் பற்றிய பிம்பமும் உணர்ச்சிவசப் பட்ட மக்கள் குழுமத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. வெளியில் இருப்பவர்களுக்கு அது புரிந்து கொள்ள முடியாத விடயம் தான். சாதாரண மக்களின் மனவுணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒதுங்கிக் கொள்வோமே?
புளுகு 6:
//வட கொரியா உலகில் "ஆபத்தான நாடு", "கலகக் காரர்களின் நாடு" என்று வர்ணிக்கிறார்கள். இங்குள்ள மக்களுக்கு அதெல்லாம் "தெரியாது"!//
இதற்குப் பதில் ஏற்கனவே சொல்லி விட்டேன். எதற்காக தமது ஜென்ம எதிரியான அமெரிக்காவின் பிரச்சாரங்களை வட கொரிய மக்கள் நம்ப வேண்டும்?
புளுகு 7:
//ஒருவர் செய்தியாளராக ஆசைப் படுவதும், தோட்டக் காரராக வேலை செய்வதும் ஒன்று தான்!//
தனது பார்வையாளர்கள் எல்லோரும் பாலர் வகுப்பு மாணவர்கள் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் நினைத்துக் கொள்கின்றது. இரண்டும் முற்றிலும் மாறுபட்ட தொழில்கள். வேறு பட்ட தொழிற்துறைகளை சேர்ந்தவை. தமிழ் நாட்டில் அந்தத் தொழில்களை செய்பவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதே மாதிரித் தான் வட கொரியாவிலும் இருப்பார்கள். உலகம் முழுவதும் அப்படித் தான். நீங்க காமெடி தான் பண்றீங்க, அதுக்காக இப்படி எல்லாம் அபத்தமாக பேசுவீங்களா?
புளுகு 8:
//வட கொரியாவில் என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாதாம்! அப்படி தெரிந்து கொள்ள முயன்றவர்கள் சிறைகளில் இருக்கிறார்களாம்.//
ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான உல்லாசப் பிரயாணிகள் வட கொரியா சென்று வருகிறார்கள். பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் தான். ஏனென்றால், சுற்றுலாத் துறை வேண்டுமென்றே அதிக பணம் அறவிடுகின்றது. விசா, ஹோட்டல் தங்கும் செலவு, உள்நாட்டு சுற்றுலா எல்லாவற்றுக்கும் அதிக பணம் வாங்குகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருப்பதற்காக இந்த ஏற்பாடு.
அதைத் தவிர, அங்கு சுதந்திர வர்த்தக வலையம் தசாப்த காலமாக இயங்குகின்றது. அதாவது, அந்நிய முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளை அமைத்து வட கொரிய தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்யலாம். பெரும்பாலும் தென் கொரிய முதலாளிகள் தான் அங்கே முதலிட்டுள்ளனர். இந்த விபரங்கள் தெரியா விட்டால் தேடிப் பார்த்து அறிந்து கொள்ளவும்.
அதைத் தவிர, அங்கு சுதந்திர வர்த்தக வலையம் தசாப்த காலமாக இயங்குகின்றது. அதாவது, அந்நிய முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளை அமைத்து வட கொரிய தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்யலாம். பெரும்பாலும் தென் கொரிய முதலாளிகள் தான் அங்கே முதலிட்டுள்ளனர். இந்த விபரங்கள் தெரியா விட்டால் தேடிப் பார்த்து அறிந்து கொள்ளவும்.
புளுகு 9:
//அரசுக்கு எதிராக துரோகம் இழைத்தால், அதிபர் மாமா, அத்தை என்றெல்லாம் பார்க்க மாட்டார். ராக்கட் லாஞ்சர் மூலம் உடனே கொன்று விடுவார்கள்!//
உண்மையில், இந்த நிகழ்ச்சியை தயாரித்தவர் ஒரு நகைச்சுவை மன்னன் தான். ராக்கெட் லாஞ்சர் அடித்து கொன்று விடுவார்கள் என்று என்ன அழகாக கற்பனை செய்திருக்கிறார்! இன்றைய அதிபர் கிம் ஜோங் உண்ணிற்கு அடுத்த படியாக தலைமை மட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அவரது மாமன் கைது செய்யப் பட்டார். அவரை, சிறையில் நாய்களை ஏவி விட்டு கொன்றதாக மேற்குலகில் வதந்திகளை பரப்பினார்கள்.
சீனாவில் ஒரு இணைய ஆர்வலர் எழுதிய நம்பகத் தன்மை இல்லாத தகவலை, மேற்கத்திய ஊடகங்கள் அப்படியே நம்பி விட்டன என்பது பின்னர் தெரிய வந்தது. மேலும், துரோகியாக்கப் பட்ட மாமன் சீனாவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற விரும்பியதாகவும், அதனாலேயே கைது செய்யப் பட்டதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இப்போதும் சிறையில் இருக்கலாம், சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், மரண தண்டனையும் நிறைவேற்றப் பட்டிருக்கலாம். ஆனால், "ராக்கெட் லாஞ்சர் அடித்தார்கள்", "நாயை விட்டு கடிக்க செய்தனர்" போன்றவை ஆதாரமற்ற வதந்திகள்.
புளுகு 10:
//கிம் இல் சுங் தொடங்கிய கொரிய தொழிலாளர் கட்சியில் "மார்க்சியம், லெனினிசம், ட்ராஸ்கிசம் என்று எல்லாக் கொள்கைகளும்" கொண்டுள்ளதாம்??? //
அது வேறொன்றுமில்லை. திரும்பவும் பழக்கதோஷம். அம்மா தேசத்தில், அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கியது மாதிரி என்று, அந்த புதிய தலைமுறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் நினைத்து விட்டார். எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாயிசம், பெரியாரிசம், தமிழிசம், ரவுடியிசம் என்று எல்லாக் கொள்கையும் கொண்டுள்ளதைப் போன்றது இதுவும் என்று நினைத்து விட்டார். பாவம், அவரது அறிவுக்கு எட்டிய வரையில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறார்.
கொரிய தொழிலாளர் கட்சியை கிம் இல் சுங் தொடங்கவில்லை. அது பல தோழர்களின் தலைமையின் கீழ் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்தது. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், கிம் இல் சுங் இராணுவப் பிரிவின் தலைமையில் இருந்தார். வட கொரியா ஸ்தாபிக்கப் பட்டதும், கொரிய தொழிலாளர் கட்சி ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றது. அதில் இன்று வரையில் உட்கட்சி ஜனநாயகத் தேர்தல்கள் நடப்பதுண்டு. இருப்பினும், கிம் இல் சுங் அதிகாரப் போட்டியில் வெற்றி பெற்றதும், தனக்கு விசுவாசமானவர்களை நியமித்துக் கொண்டதும் வரலாறு.
ஆரம்ப காலங்களில் கொரிய தொழிலாளர் கட்சியின் சித்தாந்தம் மார்க்சிய லெனினிசமாக இருந்தது. ஆனால், எழுபதுகளில் கிம் இல் சுங் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றியதும், அவரது ஜூச்சே தத்துவம் முன்னுக்கு கொண்டு வரப் பட்டது. மார்க்சிய லெனினிசம் பின்னுக்கு தள்ளப் பட்டு கைவிடப் பட்டது. ஜூச்சே தத்துவம் மார்க்சியத்தை தழுவி எழுதப் பட்டிருந்தது. அதே நேரம், கொரிய தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. கிம் இல் சுங்கை பொறுத்தவரையில், கொரிய ஒன்றிணைப்பு முதன்மையானது. அதற்காக தன்னை ஒரு தேசியவாதியாகவும் காட்டிக் கொள்ளத் தயங்காதவர்.
புளுகு 11:
//கொரியர்கள் அனைவரும் விசுவாசத்திற்காக உயிரைத் துறப்பார்கள் என்பது தானாம் கட்சியின் கொள்கை.//
ஏன் ஐயா இந்த கொலைவெறி? அம்மா தேசத்தில், அல்லது அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கலாம். ஆனால், வட கொரியாவில் இருக்காதா? அவர்களது நாட்டையும் அமெரிக்காவோ, ஜப்பானோ ஆக்கிரமிக்க நினைத்தால், அதை எதிர்த்துப் போராடுவது தவறு என்கிறீர்களா? அடிமையாக அடங்கிப் போகச் சொல்கிறீர்களா? அதை எதற்கு "கட்சியின் கொள்கை", "அதிபர் மீதான விசுவாசம்" என்று திரிபு படுத்தி கொச்சைப் படுத்துகிறீர்கள்? அதனால் தான், புதிய தலைமுறை ஒளிபரப்பிய "கிம் தேசம்" ஒரு அரசியல் பிரச்சார நிகழ்ச்சி என்று குற்றஞ் சாட்ட வேண்டியுள்ளது.
புளுகு 12:
//கட்சிக் கொள்கையை ஆராய்ந்தால் "தலைவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விடலாம்" என்று பொருள் வருமாம்???//
கட்சிக் கொள்கை என்பது ஜூச்சே சித்தாந்தம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வார்த்தை கூட நிகழ்ச்சியில் உச்சரிக்கப் படவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் தனது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வளவு தான். தமிழர்களை யாரும் எப்படியும் ஏமாற்றலாம் என்று அவரே முடிவு கட்டி விட்டார் போலிருக்கிறது.
புளுகு 13:
//கட்சித் தலைவர்கள் தமது பிள்ளைகளையே நியமிக்க வேண்டுமாம். அதனால் கட்சியில் தந்தைகளும் மகன்களும் நிறைந்திருந்தார்களாம் ??? இன்று வரை கட்சியில் உறவினர்கள் மட்டுமே இருக்கிறார்களாம்!!!//
இது உங்களுக்கே ஓவராகப் படவில்லையா? பிள்ளைகள் அரசியலுக்கு வரக் கூடாது என்று எந்த நாட்டிலும் சட்டம் இல்லை. அதே நேரம், எல்லாப் பிள்ளைகளுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதுமில்லை. வட கொரியா தலைமையிலும் அப்படித் தான். ஒரு அதிபருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால், அதில் ஒன்று மட்டுமே அரசியலுக்கு வருகிறதென்றால், மற்ற மூன்று பிள்ளைகளும் வேறு வேலை பார்க்கின்றன என்று தானே அர்த்தம்? எல்லோருக்கும் அரசியலில் ஆர்வம் ஏற்படுவதில்லை. கட்சித் தலைவர்களின் பிள்ளைகள் என்றாலும் அப்படித் தான். ஆனால், உலகில் எல்லாப் பெற்றோரும் தமது பிள்ளைகளை தம்மைப் போன்று வளர்க்கப் பார்ப்பார்கள். நமது சமுதாயத்தில் படித்த பெற்றோரின் பிள்ளைகள் தான் பெருமளவில் பல்கலைக்கழகம் செல்கின்றன.
அது சரி, அம்மா தேசத்தில் தந்தைகளும், மகன்களும் அரசியலில் இருப்பதில்லையா? திமுக தலைவர் கருணாநிதி தந்தை, அவரது பிள்ளை ஸ்டாலின் தான் கட்சியின் அடுத்த தலைவர். காங்கிரஸ், அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சி பற்றி சொல்லவே தேவையில்லை. நேரு, இந்திரா, ராஜீவ், ராகுல் என்று வட கொரியாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வாரிசு அரசியல் மலிந்து போயுள்ளது.
நாங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும், நமது தமிழ் ஊடகங்கள் அவற்றை புறக்கணித்து விட்டு வழமை போல பிரச்சாரங்களை தொடர்ந்து கொண்டிருக்கும். அது மட்டும் நிச்சயம். சண் டிவியின் மர்ம தேசம், புதியதலைமுறை டிவியின் கிம் தேசம் மாதிரி, இன்னும் பல காமெடிப் படங்களை தயாரித்துக் கொண்டிருப்பார்கள். இந்தப் பொய்களை நம்பி ஏமாறுவதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அது போதும்.
வட கொரியாவுக்கு சுற்றுலா சென்று வந்த அமெரிக்கப் பயணி ஒருவர், தனது அனுபவக்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கர்கள் நினைப்பதற்கு மாறாக வட கொரியர்களும் உலகில் உள்ள பிற மக்களைப் போன்ற சாதாராணமான மனிதர்கள் தான் என்பதை உணர்த்தியுள்ளார்.
(பார்க்க: My trip to North Korea: 13 misconceptions corrected
)
"வடகொரியா மக்கள் சிரிக்கவே மாட்டார்கள்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலருண்டு. அவர்களுக்காக வட கொரியர்கள் மத்தியில் பிரபலமான இரண்டு நகைச்சுவைத் துணுக்குகள் :
- வட கொரியர்களும் விளையாட்டுப் பிரியர்கள் தான். கனடாவில் ஐஸ் ஹாக்கி பிரபலம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது தான் அந்த வயது வந்தோருக்கான ஜோக்: "கனடியர்கள் எதற்காக பின்புறமாக உடலுறவு கொள்கிறார்கள் தெரியுமா?" "தொலைக்காட்சியில் ஐஸ் ஹாக்கி பார்ப்பதை தவற விடக் கூடாது என்பதற்காக!"
- "ஒரு தடவை எல்லையில் வட கொரிய இராணுவ வீரனும், அமெரிக்க இராணுவ வீரனும் சந்தித்துக் கொண்டார்கள். நட்பின் அடையாளமாக, அமெரிக்க இராணுவ வீரன் தன்னிடமிருந்த அமெரிக்க சிகரட்டை கொடுத்து பரிமாறினான். வட கொரிய இராணுவ வீரனும் அதை தயங்காமல் வாங்கிப் புகைத்தான்.
- அப்போது அமெரிக்க வீரன் கேட்டான்: "உங்களுக்குத் தான் அமெரிக்கர்களை கண்டால் பிடிக்காதே. எதற்காக அமெரிக்க சிகரட் புகைக்கிறாய்?" அதற்கு பதிலளித்த வட கொரிய வீரன் சொன்னான்: "நான் அதைப் புகைக்கவில்லை, எரிக்கிறேன்!"
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
3 comments:
இது உங்களுடைய கட்டுரை போல் அல்ல வெட்டி ஒட்டியது போல் உள்ளது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாதது போல் ஒரு உணர்வு
பெயரில்லா நண்பரே, இது கட்டுரை அல்ல. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான விமர்சனம்.
என்னுடைய பெயர் பிரகாஷ் பதிவிட்டு சரிபார்க்காததால் வந்த தவறு
Post a Comment