Thursday, November 05, 2015

"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்


"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.)  அதில் பல வரலாற்றுத் தவறுகள், தகவல் பிழைகள் உள்ளன. பல இடங்களில், யூதர்கள் பற்றி (வேண்டுமென்றே) தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. முகில் அதனை ஒரு கற்பனை கலந்த நாவலாக எழுதி இருக்கலாம்.

சுவாரஸ்யமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, வரலாற்றை திரிபு படுத்தி இருக்கிறார். அதில் கூறப் பட்டுள்ளது யூதர்களின் "வரலாறு" அல்ல. அதை ஓர் ஆய்வு நூலாக அல்லது வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எழுத்தாளரின் கற்பனை, நூல் முழுவதும் இழையோடுகின்றது. வேண்டுமானால், வரலாற்றை அடிப்படையாக கொண்டு புனையப் பட்ட நாவலாக நினைத்து வாசிக்கலாம். 

நூலாசிரியர் விவிலிய நூலை உசாத்துணையாக எடுத்துக் கொண்டுள்ளார். முதல் ஆறு அத்தியாயங்களிலும் விவிலிய கதைகளை எழுதியுள்ளார். முதலில், பைபிளை யூதர்களின் உண்மையான வரலாறாக எடுத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

நூலாசிரியர் யூதர்களை தனி இனமாக காட்ட விரும்புவது தெரிகின்றது. யூதர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட இனக்குழுவினர் என்பது ஒரு கற்பனையான வாதம். எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்திற்கு செல்ல விரும்பவில்லை. யூதர்கள் மத்தியிலும் பலதரப் பட்ட அரசியல் கொள்கைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

நூலின் முதலாவது அத்தியாயம், இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்த கதையுடன் தொடங்குகிறது. ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு, அது அடிப்படைக் காரணமாக இருந்தது உண்மை தான். ஆயினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க முடியாது. ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு அதை விடப் பல காரணங்கள் உள்ளன. 

உண்மையில், "யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தானா?' என்பதே கேள்விக்குறி. பல நூறாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட விவிலிய நூலில், பல கதைகள் இடைச் செருகலாக புகுத்தப் பட்டன. யூதாஸ் எழுதிய சுவிசேஷம் அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப் பட்டது. அந்தப் பகுதி விவிலிய நூலில் வேண்டுமென்றே அகற்றப் பட்டது. மேற்கத்திய கிறிஸ்தவ சபைகளின் யூத எதிர்ப்பு அரசியல், பல நூறாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மத- அரசியல் கொள்கை ஆகும்.

யூதாஸ் மட்டுமல்ல, இயேசுவும் அவரது சீடர்கள் அனைவரும் யூதர்களாக இருந்தனர். இயேசு கூட, யூத மதத்தை சீர்திருத்த விரும்பினாரே அன்றி, தனியான மதம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்திருக்கவில்லை. இயேசுவை பின்பற்றிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனத்தில் வாழ்ந்த பிற யூதர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்திப் பார்த்தனர். அதற்கு ஓர் அரசியல்- சமூகக் காரணி இருந்தது. அது இந்த நூலில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிலநேரம், நூலாசிரியருக்கே அந்த விடயம் தெரியாமல் இருக்கலாம்.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் காலத்தில், ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பிரதேசம், ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டது. உண்மையில் ஆட்சியாளர்கள் தம்மை "ரோமர்கள்" என்று அழைத்துக் கொண்டாலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். அதனால், பாலஸ்தீனத்திலும் கிரேக்க மொழி ஆட்சி மொழியாக இருந்தது.

ரோமர்களின் அரச அலுவலகர்களாக வேலை செய்ய விரும்புவோர், கிரேக்க மொழியை சரளமாக எழுதப், பேசத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கிரேக்கத்தில் இருந்து வந்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும், அவர்களுக்கு கீழே வேலை செய்த உள்ளூர் மேட்டுக்குடி வர்க்கம் ஒன்றிருந்தது. யூதர்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

ரோமர்களின் கீழ் அரசுப் பதவிகளில் இருந்த யூதர்களை "ஹெலனிக் யூதர்கள்" என்று அழைக்கலாம். அதாவது, அவர்கள் தமது தாய்மொழியான ஹீபுருவை விட, அந்நிய மொழியான கிரேக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பல யூதர்கள் வீட்டிலும் கிரேக்க மொழி பேசினார்கள். நமது நாடுகளில் உள்ள ஆங்கிலம் பேசும் தமிழ் மேட்டுக்குடியினருடன் அவர்களை ஒப்பிடலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம், யூதர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கவில்லை.

ஹீபுரு யூதர்களுக்கும், ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடுகள் கொதி நிலையில் இருந்தன. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல. பொருளாதாரப் பின்னணியும் முக்கிய பங்காற்றியது. ஹெலனிக் யூதர்கள் வசதியான பிரிவினராக இருக்கையில், ஹீபுரு யூதர்கள் ஏழ்மையில் வாழ்ந்தனர். அதற்கான காரணம் மிகத் தெளிவானது. ரோம அரசுடன் ஒத்துழைத்த யூதர்கள் பதவிகளை பெற்று வளமாக வாழ்ந்திருப்பார்கள்.

அன்றைய யூதர்கள் எல்லோரும் ஹீபுரு பேசினார்கள் என்றும் சொல்ல முடியாது. ஹீபுரு, அரபி மொழிகளுக்கு நெருக்கமான அரமைக் மொழி பேசிய யூதர்களும் இருந்தனர். உதாரணத்திற்கு இயேசு அரமைக் மொழி தான் பேசினார். ரோமர்கள் காலத்தில் அரமைக் மொழி முக்கியத்துவம் இழந்து விட்ட போதிலும், அது ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் பரவலாக பேசப் பட்ட வணிக மொழியாக இருந்தது.

அன்றைய பாலஸ்தீன அரசியல் நிலவரம், பிற்காலத்தில் கிறிஸ்தவம் என்ற தனியான மதம் உருவாக காரணமாக இருந்தது. உண்மையில், முதன் முதலாக கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள் என்பது தற்செயல் அல்ல. (விவிலிய நூலின் புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது. "கிறிஸ்து" கூட ஒரு கிரேக்கச் சொல் தான்.) பின்தங்கிய பிரிவினரான ஹீபுரு யூதர்களுக்கும், முன்னேறிய பிரிவினரான ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடு, பிற்காலத்தில் யூத - கிறிஸ்தவ மத முரண்பாடாக பரிணமித்தது.

ஏற்கனவே, கிரேக்க மொழி சரளமாகப் பேசத் தெரிந்த யூதர்கள், கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், பிற யூதர்களிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அது தான் யூத வெறுப்புக்கு காரணமே தவிர, யூதாஸின் காட்டிக்கொடுப்பு அல்ல. ஹெலனிக் யூதர்கள், ஹீபுரு யூதர்களை தம்மை விடக் கீழானவர்களாக பார்த்தார்கள். நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத பழைமைவாதிகள் என்றார்கள். மறு பக்கத்தில், ஹீபுரு யூதர்கள், ஹெலனிக் யூதர்களை, எதிரிகளுடன் ஒத்துழைக்கும் இனத் துரோகிகளாக கருதினார்கள். "மத நம்பிக்கையற்றவர்கள், போலி யூதர்கள், கிரேக்க கைக்கூலிகள்" என்றெல்லாம் தூற்றினார்கள்.

ரோம அரச அதிகாரத்திற்கு எதிராக, ஆங்காங்கே ஹீபுரு யூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்.  யூதர்களின் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ரோமப் படைகள் அனுப்பப் பட்டன. இராணுவ நடவடிக்கைகளுக்கு ஹெலனிக் யூதர்களும் உதவினார்கள். சகோதர இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை காட்டிக் கொடுத்தார்கள், அல்லது போரிட்டுக் கொன்றார்கள். அதே நேரம், யூதக் கிளர்ச்சியாளர்கள், "துரோகிகள் அழிப்பு" என்ற பெயரில் ஹெலனிக் யூதர்களை கொன்றார்கள். அதாவது, "யூதர்களுக்கு எதிராக யூதர்கள்"! ஆகவே, யூதர்கள் எல்லோரும், தொன்று தொட்டு ஒரே சிந்தனை கொண்ட, ஒற்றுமை மிக்க இனமாக வாழ்ந்தனர் என்பது ஒரு கற்பனை.

நூலில் இருந்து: 
//கி.பி. 115 ல் ஈராக், லிபியா, எகிப்து, சைப்ரஸ் ஆகிய இடங்களில் திடீரென யூதர்கள் கலகங்களில் ஈடுபட்டனர். ஆனால், பாலஸ்தீன யூதர்கள் அமைதியாகத் தான் இருந்தார்கள். ரோமானியர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.... இந்தப் புரட்சிகளின் நோக்கம் ஒன்று தான். ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு. அதற்காக நிகழ்ந்த புரட்சிகளை வழிநடாத்த சரியான தலைமை கிடைக்கவில்லை.....//

குறிப்பாக எகிப்தில் அலெக்சாண்ட்ரியா நகரில் யூதர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். உண்மையில், அந்தக் கலவரத்திற்கு காரணம், "ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு" அல்ல! அது வெறும் கட்டுக்கதை. உண்மையான காரணம், நமது காலத்தில் நடப்பதைப் போன்ற, இன/மத முரண்பாடுகளால் வெடிக்கும் இன/மதக் கலவரங்கள்.

இனக் கலவரத்தை தூண்டுவதற்கு சிறு நெருப்புப்பொறி போதுமாக இருந்தது. எங்காவது ஒரு கிரேக்க- கிறிஸ்தவரை, யூதர்கள் கொலை செய்திருந்தால், அதை சாட்டாக வைத்து கலவரம் வெடித்தது. கிரேக்க காடையர்கள், யூதர்களின் வீடுகளை எரித்தனர். கண்ணில் கண்ட யூதர்களை படுகொலை செய்தனர், அல்லது பாலியல் பலாத்காரம் செய்தனர். யூதர்களும் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், எதிர்த் தாக்குதல்கள் நடத்தினார்கள். இப்படியான இனக் கலவரங்கள், ரோம சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் நடந்துள்ளன.

உண்மையில், பண்டைய கால ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு மதம் முக்கியமாகப் படவில்லை. தலைநகர் ரோமாபுரியில் ஈரானிய, எகிப்திய தெய்வங்களுக்கும் ஆலயங்கள் இருந்தன. யூதர்களின் ஆலயமும் (சினகொக்) இருந்தது. ரோமர்கள் சாம்ராஜ்ய நன்மை கருதி, அனைத்து மதங்களையும், இனங்களையும் உள்வாங்கிக் கொண்டனர். 

ஆயினும், பாலஸ்தீன யூதர்கள், சிலை வணக்கத்தை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையில் பற்றுள்ளவர்களாக இருந்த படியால், அவர்கள் தம்மை தனித்துவமானவர்களாக கருதிக் கொண்டனர். இது சிலநேரம் ரோம அதிகாரிகளுடன் மோதல் நிலையை தோற்றுவித்தது. அதனால் அரசுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி நடந்ததும், யூத ஆலயங்கள் இடிக்கப் பட்டதும் உண்மை தான். உண்மையில் அது மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினை. ரோம தெய்வங்களை வழிபட்ட யூதர்களும், மதச் சார்பற்ற யூதர்களும் இருந்துள்ளனர்.

ஆனால், மேற்படி மோதல்களால் ஏற்பட்ட முக்கியமான விளைவை நூல் பதிவு செய்யவில்லை. அதாவது, பாலஸ்தீன யூதர்களின் கிளர்ச்சி அடக்கப் பட்டதும், அங்கு வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிலநேரம், ரோமர்கள் அவர்களை பலவந்தமாக வெளியேற்றி, சாம்ராஜ்யத்தின் பிற பாகங்களில் குடியேற்றினார்கள்.

அதே நேரம், உள்நாட்டுப் போர்களால் பின்தங்கி இருந்த பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி, பொருளாதார நலன்களுக்காக இத்தாலியில் குடியேறிய யூதர்களும் உண்டு. இதனை நாங்கள் பிரிட்டிஷ் காலனியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு காலத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்த இந்தியர்களும், இலங்கையரும், பிரிட்டனிலும், பிற ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் குடியேறியுள்ளதை உதாரணமாக குறிப்பிட்டுச் சொல்லலாம். 

ரோமர்களின் காலகட்டம் முழுவதும், யூதர்களின் பிரச்சினையானது, ஒரு சிறுபான்மையினத்தவரின் அரசியல் - சமூகப் பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் தமது பலம் எது, பலவீனம் எதுவென உணர்ந்திருந்தனர். உருவ வழிபாட்டை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையை தமது பலமாகக் கருதினார்கள். அதே நேரம், அடிக்கடி பாதிக்கப்படும் சிறுபான்மை இனமாக இருப்பதை பலவீனமாகக் கருதினார்கள். அடுத்து வந்த ஆயிரம் வருடங்களுக்கும் அந்த நிலைமை தொடர்ந்திருந்தது. ஆனால், "கிறிஸ்தவ மதப் பரவலை தடுப்பதற்காக, யூதர்கள் அல்லும் பகலும் யோசித்தார்கள்" என்பது ஒரு கற்பனை.

யூதர்களை தனியான இனமாகக் கருதுவது அறியாமை. எத்தியோப்பிய கருப்பின யூதர்களுக்கும், ஐரோப்பிய வெள்ளையின யூதர்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் கிடையாது. ஒரு காலத்தில், யூத மதம் மத்திய கிழக்கில் இருந்து உலகம் முழுவதும் பரப்பப் பட்டு வந்தது.

பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாது, அரேபியாவில் (நஜ்ரான்; http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_13.html), ரஷ்யாவில் (கஸாரியா; http://kalaiy.blogspot.nl/2008/11/blog-post_28.html) கூட யூத ராஜ்ஜியங்கள் இருந்தன. அங்கிருந்தெல்லாம் மதம் பரப்பப் பட்டது. நஜ்ரான் யூதர்கள், இனத்தால் யேமன்- அரேபியர்கள். கஸாரியா யூதர்கள், இனத்தால் துருக்கியர்கள். இவ்வாறு, பிற இனத்தவர்களும் யூதர்களாக மதம் மாறியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  

ஆயினும், ரோமர்கள் காலத்தில், யூதர்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. அதனால், மதம் பரப்பும் கொள்கை எப்போதோ கைவிடப் பட்டு விட்டது. அதே காலகட்டத்தில், கிறிஸ்தவ மதம் பரவியது. கிறிஸ்தவம் யூத மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கிரேக்க வழிபாட்டு முறைகளை பின்பற்றி தனியான மதமாக உருவாகியது. கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவியதும், மன்னரை பின்பற்றி குடி மக்களும் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

யூதர்கள் இயேசுவை தமது "மெசியாவாக" ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதற்காக கிறிஸ்தவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தம்மை ஆண்ட ரோம சாம்ராஜ்யவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், யூதர்களால் என்ன செய்திருக்க முடியும்? 

பிற்காலத்தில் யூதர்கள் போன்று, ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய கிறிஸ்தவ மதத்தினர், யூதர்களை எதிரிகளாக கருதினார்கள். அதுவும், கிறிஸ்தவத்திற்கு மாறிய, கிரேக்க- ரோம சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவு தான். ஆதி கால கிறிஸ்தவ மதம், கிட்டத்தட்ட யூத மதம் போன்றே காணப் பட்டது. இன்றைக்கும், எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றுகிறார்கள்.

உண்மையில், உலகில் மதம் என்ற தோற்றப்பாடு, ஓரிறைக் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட பின்னரே ஏற்பட்டது. (இதனைப் புரிந்து கொள்ள Karen Armstrong எழுதிய நூல்களை வாசிக்கவும்.) மதம் ஒரு நிறுவனமாக உருவாகாத பலதெய்வ வழிபாட்டுக் காலத்தில், ஓரிறைக் கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வந்த யூதர்கள், ஒரு பக்கம் கிறிஸ்தவமும், மறு பக்கம் இஸ்லாமும் தமக்குப் போட்டியாக வந்து விட்டதை உணர்ந்து கொண்டனர்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், நூலாசிரியர் தனது கற்பனைக் குதிரையை தட்டி விடுகிறார்:
 //கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ யூதர்களை வெறுக்கக் காரணம் என்ன? காரணம் யூதர்களின் தலைக்கு மேலிருந்ததாக அவர்கள் நம்பிய மாய ஒளிவட்டம் தான். தாங்கள் தான் உயர்ந்தவர்கள். கடவுளால் பிரத்தியேகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற மனப்பான்மை. கடவுள் தம்மை எந்த நிலையிலும் கைவிட மாட்டார் என்ற அசாத்திய நம்பிக்கை. பொருளாதாரம், கல்வி வளர்ச்சி, புத்திசாலித்தனம் இப்படி எல்லாவற்றிலும் தேர்ந்தவர்களாக இருந்தாலும், உலகில் தங்களின் கலாச்சாரம் மட்டுமே மிக உயர்ந்தது என்ற மனப்பான்மை அவர்களுக்கு எப்போதும் உண்டு. இன்று வரையிலும் கூட. அதனால் தனியாகவே வாழ்ந்தார்கள். தங்களைத் தனியாக அடையாள படுத்திக் கொண்டார்கள்.//

கிறிஸ்தவ ராஜ்ஜியங்களில் யூதர்கள் ஒடுக்கப் பட்ட மாதிரி, இஸ்லாமிய ராஜ்ஜியங்களில் ஒடுக்கப் படவில்லை, வெறுக்கப் படவுமில்லை. இஸ்லாம் தோன்றும் பொழுதே, யூதர்களும், கிறிஸ்தவர்களும் "ஒரே புத்தகத்தின் மக்கள்" என்று வரையறுக்கப் பட்டது. அதனால், கிறிஸ்தவர்கள் மாதிரியே யூதர்களும் நடத்தப் பட்டனர். இரண்டாந்தரப் பிரஜைகளாக இருந்தாலும், வரி கட்டி விட்டு சுதந்திரமாக வாழ முடிந்தது. கிறிஸ்தவர்கள் போலல்லாது, இஸ்லாமியர்கள் யூதர்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. யூதர்களும் "தலைக்கனம் பிடித்தவர்களாக" இருக்கவில்லை. ஒரு சிறுபான்மை இனமாக, தமது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் மட்டும் குறியாக இருந்தனர்.

மத்திய கால, கிறிஸ்தவ ஐரோப்பாவில், யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தோன்றுவதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதம், கடனுக்கு வட்டி அறவிடுவதை தடை செய்திருந்தது. அதனால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்கவில்லை. அந்தத் தொழிலை யூதர்கள் கைப்பற்றிக் கொண்டனர். சாதி அமைப்பு மாதிரி, குலத் தொழில்களை மட்டுமே செய்யும் சமூகங்களை கொண்ட, மத்திய கால ஐரோப்பாவில் யூதர்களுக்கு செய்வதற்கு வேறு தொழில் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம், பல இடங்களில் யூதர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் தடை இருந்தது. 

ஆகவே, யூதர்களுக்கு இருந்த மிகக் குறைந்த தெரிவுகளில் ஒன்று தான் வட்டிக்கு கடன் கொடுப்பது. கடன் வாங்கி பாதிக்கப் பட்ட கிறிஸ்தவ மக்கள் மத்தியில், யூத வட்டிக் கடைக்காரருக்கு எதிரான வெறுப்புணர்வு இருந்தது. கத்தோலிக்க தலைமைப் பீடம், அந்த வெறுப்பை தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்தது. போப்பாண்டவர் முதலாவது சிலுவைப் போரை அறிவித்ததும், ஜெர்மன் பகுதிகளில் ஆயிரக் கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப் பட்டனர். வத்திக்கான் அதைத் தடுக்கவில்லை.

மத்திய கால ஐரோப்பாவை பொறுத்தவரையில், யூதர்கள், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழ்ந்தனர் என்று கூறலாம். ஒரு காலத்தில் ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன. (நூலாசிரியர் இந்த உண்மையை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.) ஆனால், அவற்றை கிறிஸ்தவ மன்னர்கள் கைப்பற்றியதும், அங்கு வாழ்ந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப் பட்ட யூதர்கள், மொரோக்கோவிலும், துருக்கியிலும் பெருமளவில் சென்று குடியேறினார்கள்.

நூலில் இருந்து:
//சிலுவைப்போர்கள் முடிவுக்கு வந்துவிடும் என்றிருந்த சமயத்திலேயே (கி.பி. 1210), யூத நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று பாலஸ்தீனுக்கு சென்று, அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை நிறுவ முடியுமா, அதற்கான சாத்தியங்கள் எவ்வளவு உள்ளன, தாங்கள் இழந்த நிலங்களை மீட்டெடுக்க முடியுமா என்று ஆராய்ச்சிகள் நடத்தி வந்திருந்தது.... அந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு, துருக்கி சுல்தான் பயஸித்திடம் பேசச் சென்றனர். "பாலஸ்தீனத்தில் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தங்கள் தயை வேண்டும்." //

இது பெரும்பாலும் இட்டுக்கட்டிய கற்பனைக் கதை. இதில் பல வரலாற்றுத் தகவல் பிழைகள் உள்ளன. துருக்கி ஓட்டோமான்கள் தலைமையிலான இஸ்லாமிய சாம்ராஜ்யம், 1517 ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உருவானது. முதலாவது துருக்கி சுல்தானின் பெயர் (முதலாம்) செலிம். தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த செலிம், 1517 ம் ஆண்டு தான் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார். அதற்கு முன்னர், அரேபியர்கள் தான் சிலுவைப் போரில் ஈடுபட்டு, பாலஸ்தீனத்தை மீட்டெடுத்தனர்.

1291 ம் ஆண்டு சிலுவைப்போர் முடிவுக்கு வந்தது. போரில் வெற்றி வாகை சூடிய தளபதியின் பெயர் சலாவுதீன். பிறப்பால் அவர் குர்து இனத்தவர். அதனால், மம்மலேக்குகள்" என்ற பெயரில், துருக்கி மொழிபேசும் வீரர்களைக் கொண்ட படையணி உருவாகக் காரணமாக இருந்தார். மம்மேலுக் படைவீரர்கள், பிற்காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, துருக்கியில் ஒரு சிறிய நாட்டை ஆண்டார்கள். அது நடந்தது 1250 ம் ஆண்டு! 

அப்படியானால், எப்படி கி.பி. 1210ல் துருக்கி சுல்தான் ஆண்டதாக நூலாசிரியர் கதை விடுகிறார்? யூதர்கள் ஆயிரமாண்டு காலமாக, ஜெருசலேம் திரும்பக் காத்துக் கிடந்ததாக, தேசியவாத- யூதர்கள் வரலாற்றை திரித்து எழுதியுள்ளனர். தமது இஸ்ரேலிய தாயகக் கோட்பாட்டுக்கு, வலுச் சேர்ப்பதற்காக இது போன்ற வாதங்களை கூறி வருகின்றனர்.

பாலஸ்தீனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த யூதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கேயும் புலம்பெயர்ந்து சென்று திரும்பி வரவில்லை. ஆனால், "ஜெருசலேமுக்கு திரும்பிச் செல்லுதல்" என்ற கொள்கை, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தான், ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள்.

அதற்கு முன்னர், மொரோக்கோ, துருக்கியில் வாழ்ந்த யூதர்கள், ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்தனர். அதாவது, பாலஸ்தீனம், துருக்கி, மொரோக்கோ எல்லாம் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. ஒரே நாடு என்பதால், யூதர்கள் விரும்பிய படி ஒவ்வொரு வருடமும் ஜெருசலேமுக்கு யாத்திரை சென்று வர முடிந்திருக்கும். நிலைமை அப்படி இருக்கையில், அவர்கள் ஜெருசலேமில் தான் குடியேற வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லையே?



உசாத்துணை: 
Rome and Jerusalem, The Clash of Ancient Civilizations, Martin Goodman
A History of Christianity, Diarmaid MacCulloch
The Jewish War, Flavius Josephus 
Vreemd Volk, Integratie en discriminatie in de Griekse en Romeinse wereld, Fik Meijer

4 comments:

ADMIN said...

பல தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவொன்று...

ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்

ramalingam said...

This reveals your hard work. What's you think of what purpose Israel was created by England.

kumar said...

கிழக்கு பதிப்பகம் RSS கூடாரத்தை சேர்ந்த பத்ரிக்கு சொந்தமானது.
யூதர்களை பார்ப்பனர்கள் எவ்வளவு நேசிப்பவர்கள் என்பது தெரிந்த ஒன்றே.
புத்தகத்தில் இருப்பவை பத்ரியின் அபிலாஷைகளாக இருக்க கூடும்.

blossom said...

தொடர்ந்து யூதர்களை பற்றிய வதந்திகளை கவனித்தேன் இவர்கைளை மிகக் காெடூரமான சித்தரிப்பதில் நோக்கம் என்ன என்பதை உளவியலாக ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் அதிகம் சகிப்புதன்மையோடு இருப்பதே, ஒடுக்கு பட்ட இவர்கள் தங்கள் இனத்தை பாதுகாக்க போராடுகிறார்கள், இவர்களிடம் நியாயம் இருப்பதாக உணரமுடிகிறது