பெப்ரவரி மாத தொடக்கத்தில் (7.2.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷீத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன. "அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷீத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது." இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, "மக்கள் எழுச்சி" அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது.
இதனை "பதவி விலகிய" (அல்லது இராஜினாமா செய்ய வைக்கப் பட்ட) முன்னாள் ஜனாதிபதி நஷீத் உறுதிப் படுத்தி உள்ளார். "கலகக்கார போலீசார், என்னை ஆயுத முனையில் வற்புறுத்தி இராஜினாமா பத்திரத்தில் கையெழுத்திட வைத்தார்கள். எனது மக்கள் இரத்தம் சிந்துவதை தடுப்பதற்காக கையெழுத்திட்டேன். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சதிப்புரட்சி என்பதில் சந்தேகமில்லை. சதிப்புரட்சி மூலம் பதவியைப் பிடித்த புதிய (உப) ஜனாதிபதியை அமெரிக்கா அங்கீகரித்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது." - நஷீத். இதே நேரம், "மாலைதீவில் நடக்கும் குழப்பங்கள், அந்நாட்டின் உள் நாட்டு விவகாரம்." என்று கூறி, இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மாலைதீவுகளில் நடந்தது ஒரு சதிப்புரட்சி என்றால், அந்தச் சதியில் இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் பங்கு என்ன? உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் காவலர்களான இந்தியாவும், அமெரிக்காவும், மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க வேண்டிய அவசியமென்ன?
இதனை "பதவி விலகிய" (அல்லது இராஜினாமா செய்ய வைக்கப் பட்ட) முன்னாள் ஜனாதிபதி நஷீத் உறுதிப் படுத்தி உள்ளார். "கலகக்கார போலீசார், என்னை ஆயுத முனையில் வற்புறுத்தி இராஜினாமா பத்திரத்தில் கையெழுத்திட வைத்தார்கள். எனது மக்கள் இரத்தம் சிந்துவதை தடுப்பதற்காக கையெழுத்திட்டேன். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சதிப்புரட்சி என்பதில் சந்தேகமில்லை. சதிப்புரட்சி மூலம் பதவியைப் பிடித்த புதிய (உப) ஜனாதிபதியை அமெரிக்கா அங்கீகரித்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது." - நஷீத். இதே நேரம், "மாலைதீவில் நடக்கும் குழப்பங்கள், அந்நாட்டின் உள் நாட்டு விவகாரம்." என்று கூறி, இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மாலைதீவுகளில் நடந்தது ஒரு சதிப்புரட்சி என்றால், அந்தச் சதியில் இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் பங்கு என்ன? உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் காவலர்களான இந்தியாவும், அமெரிக்காவும், மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க வேண்டிய அவசியமென்ன?
ஏற்கனவே, 3 நவம்பர் 1988, மாலைதீவுகளில் திடீர் சதிப்புரட்சி ஒன்று நடந்ததாகவும், அது உடனடியாக முறியடிக்கப் பட்டதாகவும், அறிவிக்கப் பட்டது. அதிகாலையில் கேள்விப்பட்ட அந்த அதிர்ச்சி செய்தியினால் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சதிப்புரட்சி பற்றி மக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். "இலங்கை எல்லைகளைக் கடந்து, தென்னாசிய பிராந்தியத்திலும் தமிழர் வீரம் நிலைநாட்டப் பட்டதாக..." என்று சிலர் "தமிழினப் பெருமை" பேசினர். அதற்கு காரணம், PLOTE என்ற ஈழ விடுதலை இயக்கமொன்றின் உறுப்பினர்கள், சதிப்புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தனர்.
PLOTE அமைப்பை சேர்ந்த என்பது ஆயுதமேந்திய நபர்கள், ஒரு மாலைதீவு வணிகரின் (Abdullah Luthufi) கூலிப்படையாக செயற்பட்டுள்ளனர். சதிப்புரட்சி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட வர்த்தகர் புதிய ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டிருப்பார். ஆயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றை அல்லது சிலதை, PLOTE அமைப்பினர் தளமமைக்க கொடுத்திருப்பார். அவ்வாறு திட்டமிடப் பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகர் மாலேயில், ஏற்கனவே சில ஆயுதபாணிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களுடன் கப்பலில் வந்த மேலதிக ஆயுதபாணிகள் சேர்ந்து கொண்டனர். இருட்டு அகலாத அதிகாலை வேளையில், நகரின் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு சில மணி நேரத்தில், சின்னஞ் சிறிய மாலைதீவு அரசு, அவர்கள் கைகளில் வீழ்ந்தது. கள முனை அனுபவமற்ற, அளவிற் சிறிய மாலைதீவு பாதுகாப்புப் படையினால், சதிகாரர்களின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
PLOTE அமைப்பை சேர்ந்த என்பது ஆயுதமேந்திய நபர்கள், ஒரு மாலைதீவு வணிகரின் (Abdullah Luthufi) கூலிப்படையாக செயற்பட்டுள்ளனர். சதிப்புரட்சி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட வர்த்தகர் புதிய ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டிருப்பார். ஆயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றை அல்லது சிலதை, PLOTE அமைப்பினர் தளமமைக்க கொடுத்திருப்பார். அவ்வாறு திட்டமிடப் பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகர் மாலேயில், ஏற்கனவே சில ஆயுதபாணிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களுடன் கப்பலில் வந்த மேலதிக ஆயுதபாணிகள் சேர்ந்து கொண்டனர். இருட்டு அகலாத அதிகாலை வேளையில், நகரின் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு சில மணி நேரத்தில், சின்னஞ் சிறிய மாலைதீவு அரசு, அவர்கள் கைகளில் வீழ்ந்தது. கள முனை அனுபவமற்ற, அளவிற் சிறிய மாலைதீவு பாதுகாப்புப் படையினால், சதிகாரர்களின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
மாலைதீவுகளில், சதிப்புரட்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சதியில் ஈடுபட்டவர்களால், தொலைத்தொடர்பு நிறுவனத்தை கைப்பற்ற முடியவில்லை. ஜனாதிபதி அப்துல் கயாமையும் பிடிக்க முடியவில்லை. அப்துல் கயாம், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உதவி கேட்டு தந்தி அனுப்பினார். மாலைத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட, காலஞ் சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, 12 மணி நேரத்திற்குள், இந்திய இராணுவத்தை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். இந்திய கடற்படையும் மாலைதீவுகளை நோக்கி விரைந்தது. இந்திய இராணுவம் வருவதை அறிந்து கொண்ட சதியாளர்கள், சிறு படகுகளில் தப்பித்து ஓடினார்கள். ஆனால், இந்தியக் கடற்படை சுற்றி வளைத்து, அனைவரையும் சிறைப் பிடித்தது. அடுத்து வந்த சில நாட்கள், இந்தியப் படை அடித்து உதைத்து சென்ற மாலைதீவு கைதிகளின் படங்கள், உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பால் மாலைதீவு எனும் நாட்டை பிடித்த வீரம் பற்றி பேசியவர்கள், ஜனாதிபதி காயூமை கோட்டை விட்டதாலேயே, சதிப்புரட்சி தோற்றதாக நம்பினார்கள். ஆனால், அன்று ஜனாதிபதியை சிறைப் பிடித்திருந்தாலும், இந்திய இராணுவம் வந்திறங்கியிருக்கும். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியா, அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை "சர்வதேச சமூகம்" எதிர்த்திருக்கப் போவதில்லை.
அண்மையில் மாலைதீவுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம், சிறிய நாடுகள் மீதான இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவம் இன்னும் அகலவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக அமெரிக்கா கருதி வருகின்றது. அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டுள்ள இந்தியாவும், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு ஆகிய அயல் நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றது. இந்தியாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒரேயொரு நாடு பாகிஸ்தான் மட்டுமே. அயல் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும், அடியாட்களை உருவாக்கவும், இந்திய நலன்களை பாதுகாக்கவும் Research and Analysis Wing (RAW) என்ற ஸ்தாபனம், உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றது.
RAW அதிகாரிகளை விடப் பெரிய "சதிகாரர்கள்" தெற்காசியப் பிராந்தியத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. 1988 ல் நடந்த, மாலைத்தீவு சதிப்புரட்சி கூட RAW வின் திட்டமிடலில் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவுகளில் அப்துல் காயூமின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி, எந்தவொரு எதிர்க் கட்சியையும் அனுமதிக்கவில்லை. எதிர்ப்புக்குரல் காட்டுவோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதனால், பல எதிர்ப்பாளர்கள் இலங்கையில் புகலிடம் கோரியிருந்தனர், என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், எந்தவொரு அரசியல் தொடர்புமற்ற, இலங்கையில் பண்ணை வைத்திருந்த மாலைதீவு வர்த்தகர், சதிப்புரட்சியின் சூத்திரதாரி என்பதை நம்ப முடியவில்லை. தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வசித்த PLOTE தலைவர் உமா மகேஸ்வரன், "மாலைத்தீவு சதிப்புரட்சி, இந்தியாவின் ஆலோசனைப் படி நடந்ததை பகிரங்கப் படுத்தப் போவதாக" தெரிவித்திருந்தார். சில நாட்களின் பின்னர், அவரது மெய்ப்பாதுகாவலர்களால் கொலை செய்யப் பட்டார். (Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives, http://dbsjeyaraj.com/dbsj/archives/4135)
1988 சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், இந்தியாவுக்கும், மாலைதீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தான இராணுவ, பொருளாதார உடன்படிக்கைகள், இந்தியாவுக்கே சாதகமாக அமைந்தன. மாலைதீவு அரசு தனது பாதுகாப்புக்காக, நிரந்தரமாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தனது நலன்களுக்காக படுகொலைகளை செய்யத் தயங்காத இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சிகளையும் திட்டமிடும் என்பது எதிர்பார்க்க முடியாததல்ல. அதிரடியாக நடக்கும் சம்பவங்களால், இறுதியில் யாருக்கு அதிக நன்மை என்று பார்த்தால் புரிந்து விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் எடுக்கும் நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு நன்மை என்றால், அமெரிக்காவுக்கும் நன்மை உண்டாகும் என்ற நிலைமை காணப்படுகின்றது. அதாவது தெற்காசியாவில் அமெரிக்கா செய்ய வேண்டிய வேலைகளை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. (Outsourcing Imperialism?) மாலைதீவுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும், பூகோள அரசியலுக்குமான தொடர்பு என்ன?
முப்பதாண்டுகள் மாலைதீவுகளை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த, சர்வாதிகாரி அப்துல் காயூமின் ஆட்சியில், நீண்ட காலமாக சிறை வைக்கப் பட்டிருந்தவர் தான், முஹமட் நஷீத். ஐந்து வருடங்களுக்கு முன்னர், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக விடுதலையானவர். அதற்குப் பின்னர் நடந்த, முதலாவது ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், பலராலும் "தெற்காசியாவின் மண்டேலா" என்று அழைக்கப் பட்டார். பதவியேற்ற நஷீத், அரசியல் பழிவாங்கல்களை ஒதுக்கி விட்டு, புவி வெப்பமடைதல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களை கொண்ட நாட்டில், பெருமளவு நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு மீட்டர்களே உயரமானவை. புவி வெப்பமடைதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்தால், ஒரு காலத்தில் மாலைதீவுகள் காணாமல் போய் விடும் என்ற அச்சம் நிலவியது. இதனால், புவி வெப்பமடைதலுக்கு காரணமான, காபன் வெளியேற்றத்தை குறைக்கும் திட்டம் மாலைதீவுகளுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப் பட்டது. இது தொடர்பாக கொபன்ஹெகனில் நடந்த மகாநாட்டில், நஷீத் தனது முத்திரையை பதித்திருந்தார்.
அடுத்து வரும் பத்தாண்டுகளில், மாலைதீவுகளில் காபனை (Carbon) வெளியேற்றும் எரிபொருள் பாவனை முற்றாக தடை செய்யப் படும் என அறிவித்தார். அதற்கு மாறாக, காற்றாலை, சூரிய ஒளி ஆகிய வளங்களைக் கொண்டு உற்பத்தியாகும் மின் சக்தியை பயன்படுத்தப் போவதாக அறிவித்தார். (Carbon-neutral goal for Maldives, http://news.bbc.co.uk/2/hi/7944760.stm) ஏற்கனவே அதிபர் மாளிகைக்கான மின்சாரம், சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகின்றது. ஏழை ஆசிய நாடான மாலைதீவின் முன்னுதாரணம், வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. புவி வெப்பமடைதல் பிரச்சாரத்தை, அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. கியாட்டோ, கோபன்ஹெகன், டர்பன் மகாநாடுகளில் அமெரிக்காவின் ஒத்துழையாமை இதனை உறுதி செய்கின்றது.காபன் வெளியேற்றத்தை தடுப்பதில், மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் செயலில் காட்டுவது, அமெரிக்காவுக்கு பிடிக்காத விடயம்.
Global warming is a matter of paranoia for Maldives. Maldives has criticised the decision of US president George Bush to reject the Kyoto pact on global warming. China calls the US decision "irresponsible", though it is one of the largest emitters of the global-warming carbon dioxide gas, and Zhu Rongji said in Male that China would work with Maldives on environmental issues.
"It will," said an official, "take China next to nothing to convert an honourable campaign against global warming into an anti-American campaign in Maldives.
(Dhivehi Observer, 07 May 2008)
புவி வெப்பமடைதலை விட, பூகோள அரசியல் மாலைதீவுகளின் சதிப்புரட்சியை தீர்மானித்திருக்கலாம். மாலைதீவுகள், அடிக்கடி செய்திகளில் அடிபடாத, பணக்கார உல்லாசப் பிரயாணிகளின் மனங்கவர்ந்த, அமைதியான சிறிய நாடு. ஆனால், இந்து சமுத்திரத்தில் அதனது அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், பிற ஆசிய நாடுகளுக்குமான எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து நடைபெறும் பாதையில் அமைந்துள்ளது. உலகின் பொருளாதாரத்தை, தனது இராணுவ பலத்தினால் அடக்கி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, மாலைதீவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்பு அமெரிக்காவின் விசுவாசியான இந்தியாவிடம் கொடுக்கப் பட்டுள்ளது.
The US is keen for India to hasten construction of the Far Eastern Naval Command in the Andaman Islands, and this was repeated by the chairman of the US joint chiefs, General Henry H. Shelton, who visited India recently.
Specific to the Marao base, the US sent navy chief Dennis Blair to Maldives a month after Rongji's visit to take stock of China's military diplomacy. While the US base in Diego Garcia can launch surprise offensives, the US wants to restrict Chinese presence in the Indian Ocean because of its strategic value.
According to one survey, some $260 billion worth of oil and gas will be shipped through the Indian Ocean by year 2004. The oil route stretching from the Strait of Malacca to the Strait of Hormuz will be at the mercy of any power that dominates the sealanes. A Chinese base in Marao islands puts it in a direct position to influence oil commerce. It is a prospect that daunts India, scares Southeast Asia, and alarms the US.(Dhivehi Observer, 07 May 2008)
தெற்காசிய நாடொன்றில், அது நேபாளம் ஆகட்டும், இலங்கை ஆகட்டும், இந்தியா தலையிட்டு எந்த முடிவை எடுக்கின்றதோ, அது அமெரிக்காவுக்கும் ஏற்புடையது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, அமெரிக்காவின் ஒப்புதலுடன் தான், இந்தியா ஈழப்போரை முடித்து வைத்தது. இந்த உண்மையை, "அமெரிக்க தாசர்களும், இந்திய விசுவாசிகளும்" கவனத்தில் எடுப்பதில்லை. நெடுமாறன், வைகோ போன்ற "தமிழினத் தலைவர்கள்" கூட, "சீன அபாயம்" வர இருப்பதை சுட்டிக் காட்டித் தான் இந்திய அரசை தலையிடத் தூண்டினார்கள். அவர்களது "சீனத் தடுப்பு கொள்கை" யின் விளைவு, புலிகளின் அழிவுக்கும், தமிழ் இனப்படுகொலைக்கும் இட்டுச் சென்றதை, இங்கே நினைவு கூறத் தேவையில்லை. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளருவதை தடுப்பதற்காகத் தான், தாம் இறுதிப் போரில் நேரடியாக பங்களித்தாக, இந்திய அரசுத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
"சீனாவைத் தடுப்பதற்கான இந்தியாவின் தலையீடு", இலங்கையில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டது. இன்றைய மாலைத்தீவு சதிப்புரட்சியும், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்காகவே நடத்தப் பட்டது. முன்னர், சர்வாதிகாரி அப்துல் காயூம் இந்தியாவின் கைப்பொம்மையாக ஆடிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரது காலத்திலேயே ஒரு தீவை சீனாவுக்கு குத்தகைக்கு விட சம்மதிக்கப் பட்டது. எதேச்சாதிகார ஆட்சி நடத்தும் ஒருவருக்கு, தனது நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கவில்லை. 2004 ல் ஜனநாயக பொதுத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த நஷீத், மாலைத்தீவின் இறையாண்மையை பாதுகாப்பதில் குறியாக இருந்தார். இதனால், தவிர்க்கவியலாது, இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சீனா போன்ற பிற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது அவசியம் என்று கருதினார். இன்று உலகில் அதிகளவு எண்ணையை நுகரும் நாடாக மாறி வரும் சீனா, எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அதனால், "முத்து மாலை திட்டம்" என்ற பெயரில், மாலைதீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வரும் நோக்கம் சீனாவுக்கு இருந்தது.
27 July 2001: China has engineered a manner of a coup by coaxing Maldives' Abdul Gayoom government to let it establish a base in Marao. Marao is one of the largest of the 1192 coral islands grouped into atolls that comprise Maldives and lies 40 km south of Male, the capital. (Dhivehi Observer, 07 May 2008)
மேலும் மாலைதீவு அரசு திட்டமிட்டுள்ள "காபன் குறைப்பு பொருளாதாரத்திற்கு" சீனாவின் பங்களிப்பு அவசியமானது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவை சேர்ந்தவை. இத்தகைய காரணங்களால், சீனாவுக்கும், மாலைத்தீவுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருக்கலாம். ஆனால், அதுவே அமெரிக்கா, இந்தியாவின் கண்களில் முள்ளாக உறுத்தியது. தற்போது நடந்துள்ள சதிப்புரட்சி, "உள் நாட்டுப் பிரச்சினை" என்று கூறி இந்தியா ஒதுங்குவதற்கும், சதிகாரர்களின் பொம்மை ஜனாதிபதியான வாஹிட் ஹசன் மாலிக்கை அமெரிக்கா அங்கீகரிக்கவும், வேறென்ன காரணம் இருக்க முடியும்?
மாலைத்தீவுகளில் இருந்து சீனாவை விரட்டுவதைத் தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் சதிப்புரட்சி நடந்திருக்கலாம். ஆயிரக்கணக் கணக்கான தீவுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். எல்லாத் தீவுகளையும் கண்காணிப்பது, அரசினால் முடியாத காரியம். ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் அல்லது, போதைவஸ்துக் கடத்தல் கும்பல், ஒரு தொலைதூரத் தீவை தமது மறைவிடமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே, 1988 ல் நடந்த சதிப்புரட்சி அந்த அபாயம் இருப்பதை எச்சரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில், ஈழப் பிரதேசத்தில் PLOTE இயங்குவதை புலிகள் தடை செய்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் PLOTE அமைப்பு கட்டுக் குலையாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால், இலங்கைக்கு அண்மையில் உள்ள மாலைத்தீவுகளை தமது புதிய தளமாக பாவிக்க எண்ணியிருக்கலாம். பிற்காலத்தில், இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஆயுதபாணி அமைப்புகளுக்கும் இந்த எண்ணம் தோன்றலாம். இந்திய அரசு, அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பியது. மாலைத்தீவு மக்கள் மிதவாத இஸ்லாமியர்கள். இருப்பினும், அங்கே சில தீவிரவாத, மத அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பலம் பெற்று வருகின்றன. 2007 ம் ஆண்டு, மாலே நகரில் குண்டொன்று வெடித்தது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், உள்நாட்டு தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. (Tranquillity of Maldives shattered by bomb blast, http://www.guardian.co.uk/world/2007/sep/30/terrorism.travel)
முரண்நகையாக, இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் சக்திகளை அடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், நஷீட்டிற்கு எதிரான சதிப்புரட்சியில் அவர்களின் பங்கு அதிகம். ஊழல், வறுமை, போதைவஸ்து, ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விபச்சாரம், போன்ற சமூகச் சீரழிவுகளை காரணமாகக் காட்டி, இஸ்லாமிய அரசியல் சக்திகள் ஆதரவு திரட்டி வந்துள்ளன. கடந்த வருடம், அரசு பல "இஸ்லாமிய விரோத" சுற்றுலா விடுதிகளை மூடியது. தலைநகர் மாலேயில், கடுமையான ஷரியா சட்டம் நடைமுறைப் படுத்தக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போது எழுந்துள்ள குழப்பமான நிலைமையை பயன்படுத்தி, இஸ்லாமியவாதிகள் ஒவ்வொரு தீவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். பொது மக்கள் இதற்கெதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.
“It’s potentially a tropical Afghanistan. The same forces that gave rise to the Taleban are there — the drugs, the corruption and the behavior of the political class,” a Colombo-based Western ambassador who is responsible for the Maldives told Reuters on condition of anonymity. (Arab News, 11.02.12)
அமெரிக்காவும், இந்தியாவும், தமது நலன்களுக்காக எத்தகைய பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாத முஜாஹிதின்களை ஆதரித்தார்கள். கடந்த வருடம், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த அல்கைதா புரட்சியை ஆதரித்தார்கள். "வெறித்தனமான மதவாதிகள், தேசியவாதிகள்", அவர்களது நண்பர்களாக இருந்துள்ளதை, கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றை விட, உலக பொருளாதார ஆதிக்கம், உலக இராணுவ மேலாண்மை, ஆகியன தான் அவர்களுக்கு முக்கியமானவை. மாலைத்தீவு மக்களின் நலன்களும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமே, அவர்களது சுதந்திரத்தை உறுதிப் படுத்தும்.
4 comments:
விரிவான பதிவு இதன் ஊடாக பொருளதார அர்சியலை அழகாக அவிழ்த்து காட்டியிருக்கிறீர்கள்
நன்றி
மிகவும் சிறப்பான கட்டுரை.
இப்புரட்சி பற்றி நான் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடைதரும் வகையில் இக்கட்டுரை அமைந்திருந்தது.
நன்றி.
//அமெரிக்காவும், இந்தியாவும், தமது நலன்களுக்காக எத்தகைய பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ளன.//- மிகவும் சிறப்பான வரிகள், மொத்த கட்டுரையின் அரசியலும் இந்த வார்த்தைகளிலேயே அடங்கி விடுகிறது.
தங்களது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகையை அடிப்படைவாத, மக்கள் விரோத சக்திகளுடனும் வல்லாதிக்க நாடுகள் கூட்டுசேர தயங்காது என்பதை சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.மற்றுமொரு சிறப்பான கட்டுரை! எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ஹைதர் அலி, somasundaram movithan, சீனிவாசன்....தங்களது பாராட்டுகளுக்கும், ஆதரவுக்கும் நன்றிகள்.
Post a Comment