Wednesday, January 18, 2012

அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல்

(மெக்சிகோ, பகுதி : 3 )

கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் "ஹிஸ்பானியர்கள்" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் பாடலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர், நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது. ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிக்க தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.

மெக்சிகோ சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால் அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன. இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுதல். பெற்றோரின் "இழிந்த தொழிலை" செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாகவிருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், "இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு" என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது. இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். "உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன...", என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.

பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை விழுத்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது. டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் "பாஞ்சோ வியா", வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது. படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். "நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள்! நிலங்களை பறித்தெடுங்கள்!!" என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் "சப்பாத்தா" வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்சிகோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன். பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது. ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917 ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத "ராபின் ஹூட் வகையறாக்கள்" போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது. இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, "புரட்சியை பாதுகாக்கும்" கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல. குவாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன. கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு "கிரான்மா" படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.

1994 ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன. சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல், போராளிகள் மலைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.

நீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் "ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை தாங்குகிறார்..." என்பது போன்ற சர்ச்சை அது. இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை. சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், "நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக..." எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.

ஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார். பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத் தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது. அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது. இந்திய பழங்குடி மக்கள், 21 ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.

2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். மாநிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

மெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. "ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை" என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன், சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.

ஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.) மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு. அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.


(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவு :
1 மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்
2 அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்

1 comment:

பாஹிம் said...

//கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் "ஹிஸ்பானியர்கள்" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது.//

விஜயகாந்தும் இதைத்தானே செய்கிறார். பாக்கிஸ்தானியர்கள் என்றாலே அவருக்குப் பிடிக்கவில்லை. எடுத்ததற்கெல்லாம் பாக்கிஸ்தானியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கிறார்.