Tuesday, November 15, 2011

சோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி!

சோஷலிச நாடுகளை, "இரும்புத்திரை நாடுகள்" என்றும், கொடுங்கோன்மையில் இருந்து தப்புவதற்காக வெளியேறும் மக்கள் பற்றியும் அளவுக்கதிகமாகவே கேள்விப்பட்டிருப்போம். மாறாக, மேற்கத்திய நாடுகளில் இருந்து சோஷலிச நாடுகளிற்கு சென்று குடியேறிய மக்களைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப் படுவதில்லை. அதிலும், அமெரிக்காவிலிருந்து சோவியத் யூனியன் சென்று குடியேறிய ஆயிரக்கணக்கான அமெரிக்க குடும்பங்கள் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற தகவல்கள் திட்டமிட்டே மறைக்கப் படுவதால், ஊடகங்களும் அதிக சிரத்தை எடுத்து ஆராய்வதில்லை. சோவியத் யூனியனில் குடியேற்றப்பட்ட அமெரிக்கர்களின் காலனியை பொறுப்பெடுத்தவர், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பொறியியலாளர் என்பதால் தான், எனக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிய வந்தன.

இன்றைய ரஷ்யாவில், சைபீரியப் பகுதியில் அமைந்துள்ளது கெமெரோவோ (Kemerovo) மாநிலம். இந்த மாநிலத்தில் "குஸ்பஸ் (Kuzbass) அபிவிருத்தி திட்டம்" என்ற பெயரில் ஒரு காலனி, மேற்கத்திய நாட்டவரின் உழைப்பில் உருவாகியது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்ற பின்னர், மேலைத்தேய கம்யூனிஸ்டுகளின் ரஷ்யா மீதான ஆர்வம் அதிகரித்தது. பலர் சமதர்ம புரட்சி நடந்த பூமியை ஒரு முறை தரிசித்து விட்டுச் சென்றனர். இதே நேரம், புதிய சோஷலிச சமுதாயத்தை கட்டி எழுப்ப, தம்மாலான உதவிகளை செய்யவும் விரும்பினார்கள். சோவியத் யூனியனில், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த குடியேறிகள் நிர்வகிக்கும் தொழிலகத்தை உருவாக்கும் திட்டம், ஒரு சிலரால் முன் மொழியப் பட்டது. William D. Haywood J.H.Bayer; T.Barker; Herbert S.Calvert, Sebald J. Rutgers ஆகியோரே அந்த திட்டத்தின் முன்னோடிகள். 22-10-1921 அன்று, இவர்கள் லெனினுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தகுதி வாய்ந்த தொழிலாளர்கள், முகாமையாளர்கள், பொறியியலாளர்கள், தமது நிபுணத்துவத்தை சோவியத் பொருளாதார கட்டமைப்பிற்கு வழங்குவதே குறிக்கோள் ஆகும்.

லெனினின் நம்பிக்கைக்குரிய நெதர்லாந்து கம்யூனிஸ்டான ருத்கேர்ஸ் தலைமையில் அந்த திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டது. அமெரிக்க கூட்டாளிகள், தமது நாட்டில் இருந்து ஆர்வலர்களை திரட்டிக் கொடுத்தனர். ஆர்வமுள்ள அமெரிக்கர்களை திரட்டுவதற்காக, "Kuzbass, an opportunity for workers and engineers" என்றொரு கைநூல் வெளியிடப் பட்டது. 8 ஏப்ரல் 1922 அன்று, ஆண்களும், பெண்களுமாக 68 பேர் முதன்முதலாக கெமெரோவோ வந்து சேர்ந்தனர். அவர்களில் பலர், தொழில்நுட்ப கல்வி கற்ற அனுபவசாலிகள். 13 மே, இரண்டாவது பிரிவாக 101 அமெரிக்கர்கள் நியூ யார்க் நகரில் இருந்து புறப்பட்டனர். அதே வருடம், Kuzbass Bulletinஎன்றொரு மாதாந்த சஞ்சிகை, அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் வெளியிடப் பட்டது. ஆரம்பக் கட்டத்தில், சுமார் இரண்டாயிரம் அமெரிக்கர்களும், 150 மேற்கு ஐரோப்பியர்களும் குடியேறி இருந்தனர். அதில் ஐம்பது பேர் டச்சுக்காரர்கள். 1926 ம் ஆண்டுக்குப் பின்னர், நிர்வாகம் ரஷ்யர்களின் கைகளுக்கு மாறிய பின்னர், 500 மேலைத்தேய நாட்டவர் மட்டுமே நிரந்தரமாக தங்கி விட்டிருந்தனர். எஞ்சியவர்கள் புதிய நிர்வாகத்துடன் முரண்பட்டு, சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர்.

சமதர்ம சமுதாயத்தில் நம்பிக்கை கொண்ட வெளிநாட்டவரை கவர்ந்திழுப்பது, முதலாளித்துவ நாடுகளின் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்திக் கொள்வது, இவையே லெனினின் நோக்கமாக இருந்தது. அதனால், கெமெரோவோ குடியேற்றம்,மாஸ்கோவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக இயங்க விடப் பட்டது. "சுதந்திர தொழிற்துறை குடியேற்றம்" என்பதுவே, அந்த திட்டத்தின் பெயராக இருந்தது. சைபீரியாவின் பெறுமதி மிக்க கனிம வளங்களை பயன்படுத்தி, ஒரு இரசாயன தொழிற்சாலை அமைக்கப் பட்டது. முழுக்க முழுக்க மேலைத்தேய நாட்டவரின் நிர்வாகத்தின் கீழ் உற்பத்தி நடைபெற்றது. அனுபவம் வாய்ந்த திறமைசாலிகளால் நடத்தப் பட்டதால், தொழிலகம் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில், குடியேற வந்த குடும்பங்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது, முதலீட்டுக்கு பணம் சேகரிப்பது போன்ற பிரச்சினைகள் காணப்பட்டன. இருப்பினும் காலப்போக்கில் அவையெல்லாம் நிவர்த்தி செய்யப் பட்டன. லெனின் மரணமடையும் வரையில், தொழிற்துறை எந்தவித இடையூறும் இன்றி நடந்து கொண்டிருந்தது.

1924 ல், லெனினின் மரணத்திற்குப் பிறகு, காலனியை தலைமை தாங்கிய ருத்கெர்ஸ், சுகயீனம் காரணமாக நெதர்லாந்துக்கு திரும்ப வேண்டி நேரிட்டது. அவருக்குப் பதிலாக நியமிக்கப் பட்ட ப்ரோங்கா வின் நிர்வாகம் சிறக்கவில்லை. அடுத்த வருடம் அவரும் காலமாகி விட்டார். இதே நேரம், மாஸ்கோவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் அழுத்தங்கள் அதிகரித்தன. நிர்வாகத்தில் ரஷ்யர்களின் தலையீடு காரணமாக ருத்கெர்ஸ் அதிருப்தி கொண்டிருந்ததாக தெரிகின்றது. புதிதாக வந்த ரஷ்ய பொறியியலாளர்கள் மத்தியில் அலட்சியப் போக்கும், திறமையின்மையும் காணப் பட்டதாகவும் குறைப் பட்டுள்ளார். ஐந்து வருடங்கள் மட்டுமே சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த மேற்கத்திய நாட்டவரின் காலனி, அதற்குப் பிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. தனது கடைசிக் காலத்தில் நெதர்லாந்திலேயே தங்கி விட்ட ருத்கெர்ஸ் எழுதிய சுயசரிதைக் குறிப்புகள், இன்றைக்கும் ஆம்ஸ்டர்டாம் சமூக விஞ்ஞான ஆய்வு நிலையத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

முகாமைத்துவ மாற்றத்தால் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, பெருமளவு மேற்கத்திய நாட்டவர்கள் காலனியை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால், காலனியின் வீழ்ச்சிக்கு காரணம், "ஸ்டாலினிச களையெடுப்பு" என்று, சில மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நிபுணர்களின் பங்களிப்பில் உருவான இரசாயன தொழிற்சாலையானது, கெமெரோவோ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், எல்ட்சினின் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம், தனிமைப் படுத்தப் பட்ட சைபீரிய மாநிலமான கெமெரோவோ பொருளாதாரம் வளர்ந்தது. அதற்கு காரணம், கொர்பெஷோவின் சீர்திருத்தத்தை எதிர்த்த ஆர்மன் துலயேவ் கவர்னராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தமை தான். இன்றைக்கு புட்டினின் அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டாலும், 2003 ம் ஆண்டு வரையில் ஒரு கடும்போக்கு கம்யூனிஸ்டாக கொள்கையை விட்டுக் கொடாதவர். முன்னாள் ரயில் போக்குவரத்து துறை ஊழியர் என்பதால், சிறுவர்களுக்கான ரயில் போக்குவரத்து சேவை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதாவது, சீருடை அணிந்த சிறுவர்கள், சிறிய ரக ரயில்களை தாமாகவே இயக்கிப் பழகுகின்றனர். இதற்கென நாலு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதையும், குட்டி ரயில் நிலையங்களும் அமைக்கப் பட்டுள்ளன.




3 comments:

சீனிவாசன் said...

அபூர்வமான, பாதுகாக்கப்பட வேண்டிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

naren said...

அரிதான யாவருக்கும் சொல்லப்பட வேண்டிய செய்தி.கமயூனிஸத்தை மேற்கத்தியர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்கள் என்ற உருவாக்கப்பட்ட மாயத்தை தகர்க்கும் பதிவு.

அபூர்வமான செய்திக்கு நன்றி.

வலிப்போக்கன் said...

புதிய தகவலாக இருக்கிறது.