Tuesday, August 16, 2011

லண்டன் எரியும் போது திருவிழா கொண்டாடிய தமிழர்கள்

முகநூலில் நான் இட்ட நிலைச் செய்தி ஒன்று, பல "தமிழர்களின்" மனச்சாட்சியை தொட்டுள்ளது. சில நண்பர்களும் அந்த செய்தியை தமது பக்கத்தில் மீள்பதிவிட்டனர். அந்த செய்திக்கு கிடைத்த எதிர்வினைகளையும், அதற்கு நான் அளித்த பதில்களையும் கீழே தருகிறேன்.

நிலைச்செய்தி:
லண்டன் நகரம் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், லண்டன் தமிழர்கள் கோயிலில் கோலாகலமாக திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒஸ்லோ நகரத்தில் குண்டு வெடித்து, 80 பேரின் படுகொலையை நினைவுகூர்ந்த துக்க நாளன்று, ஒஸ்லோ தமிழர்கள் தேரிழுத்து திருவிழா கொண்டாடிக் களித்தனர். உலக மக்களின் துயரத்தில் பங்கெடுக்காதவர்கள், தன் வீட்டு துக்கத்தை மட்டும் உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

.............................................................
எதிர்வினை: ‎// மேற்குலகில் ஏதாவது நடந்தால் உடனே தூக்கிப்பிடிப்பதே இப்போதைய வழக்கமாகிவிட்டது.//

பதில்: இல்லை ஐயா, மேற்குலகில் வாழும் தமிழர்களின் அலட்சிய மனப்பான்மையை எடுத்துக் காட்டினேன். ஒஸ்லோவில் நடந்த படுகொலைகளை நினைவுகூருவதற்காக பல இனங்கள் ஒன்று சேர்ந்து துக்கம் அனுஷ்டித்தன. அன்று பல நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழர்கள் மட்டும் அதே தினத்தில், அதே ஒஸ்லோவில் தேர்த் திருவிழா கொண்டாடுவது பண்பான செயலாக தெரியவில்லை. இதைக் காணும் நோர்வீஜியர்கள் தமிழர்கள் பற்றி என்ன நினைப்பார்கள்?
லண்டன் நகரம் முழுவதும் கடைகள் சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. இல்லாதவன் இருப்பவனிடம் பறித்தெடுத்துக் கொண்டிருக்கிறான். இத்தகைய கலவரச் சூழலில் கோயில் திருவிழா நடத்துவது புத்திசாலித் தனமானதா?

எதிர்வினை: பல இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து துக்கத்தை அனுட்டிக்கும்போது ஒன்று சேர்ந்து கடைப்பிடிப்பது வரவேற்கத்தக்தே. திருவிழா ஒருநாள் என்றிருந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமாக இருக்கலாம் ஆயினும் பலநாட் திருவிழாவில் இடைநடுவே நிறுத்துவத்து நல்லதல்ல. லண்டனின் கடைகள் சூறையாட்பட்டன ஆனால் இந்தப் பிரச்சினை வரமுன்னரே அங்குள்ள பிரச்சினைகள் தெளிவாக வெளியே தெரியவந்தவைதானே. எடுத்துக்காட்டாக அங்கேயுள்ள வேலையில்லாப் பிரச்சினை. பல்கலைக் கழகங்களுக்கான மானியங்கள் நிப்பாட்டப்பட்மை. பல்கலைக்கழகப் பிரச்சினை அல் ஜசீராவில் ஒளிபரப்பட்டது. தவிர இலங்கையில் அழிவுகள் இதைவிட மோசமானவை. எடுத்துக்காட்டக கிளிநொச்சி நகரம். இதில் செய்மதிப்படங்களில் அழிவுகள் மிகவும் மோசமானவை என்பதைக் காட்டுகிறது. உலகின் பலபகுதிகளில் அழிவுகள் நடைபெறுகிறது ஆனால் மேற்குலகில் நடைபெறுபவை உடனடியாக பெருப்பிக்கப்பட்டுக் காண்பிக்கபடுகின்றது.

பதில்: ஜூலை 29 ஒஸ்லோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. ஊரில் நடப்பதைப் போல வெளிநாடுகளில் தொடர்ச்சியான திருவிழா நடப்பதில்லை. ஜூலை 22 அன்று ஒஸ்லோவுக்கு அருகில் உத்தேயா தீவில் 90 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நோர்வேயின் பல பாகங்களை சேர்ந்த இளம்பராயத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். கோயில் திருவிழா நடைபெற்ற அன்று தான் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.அன்று ஒஸ்லோவில் தேவாலயங்களில் மட்டுமல்ல, பள்ளிவாசல்களிலும் மரித்தவர்களுக்காக விசேட பிரார்த்தனை/தொழுகை நடைபெற்றது. நோர்வே பிரதமர் ஒஸ்லோ மசூதியில் நடந்த நினைவுகூறலில் கலந்து கொண்டார். ஒஸ்லோவில் நடைபெற இருந்த தமிழ் இலக்கிய நிகழ்வு ஒன்றும் இரத்து செய்யப்பட்டது. தேர்த்திருவிழாவை நிறுத்துமாறு யாரும் கூற மாட்டார்கள். ஆனால் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மனச்சாட்சி இருக்க வேண்டாமா? அன்றைய தினம் கோயில் தர்மகர்த்தா ஒருவர் பக்தர்கள் முன்னிலையில் பிறந்தநாள் கொண்டாடியதாக அறிகிறேன். இதெல்லாம் யாருக்குமே உறுத்தவில்லை.

லண்டன் கலவரத்தின் மத்தியில் நடந்த திருவிழா வித்தியாசமானது. கோயில் இருந்த பிரதேசம் (லண்டனின் புறநகர்ப் பகுதி) கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது உடமைகளை பாதுகாக்க அல்லாடுகிறார்கள். கடைகள் உடைத்து சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன. சில வீடுகளில் கூட திருட்டு போனது. போலிசை அந்தப் பக்கம் காணவில்லை. லண்டன் பொலிஸ் பெரிய வர்த்தக நிறுவனங்களை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடுகின்றனர். வீதியில் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. அத்தகைய சூழலில் கோயில் திருவிழா நடத்துவதும், திருவிழாவுக்கு செல்லும் "பக்தர்கள்" நகைகள் அணிந்து செல்வதும் எவ்வளவு மடத்தனமானது?

உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எனது சுயநலத்தை கவனிக்கிறேன், என்ற தமிழரின் மனப்பான்மை தானே இதற்கெல்லாம் காரணம்? தமிழர்கள் என்றைக்கும் மற்ற இனத்தவரின் துக்கத்தை கணக்கெடுப்பதில்லை. பிறகெப்படி எங்களின் துயரத்தை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? நீங்கள் கொடுத்த உதாரணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 2009 வன்னிப் படுகொலையில் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நாளன்று, வவுனியாவில் வாழும் பௌத்தர்கள் திருவிழா கொண்டாடினால் என்ன நினைப்பீர்கள்? கொழும்பு நகரில் நடந்த கலவரத்தில் தமிழரின் உயிர்கள் பறிக்கப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில், ஒரு பௌத்த கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்? எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் நடைபெற்ற படுகொலை, கலவரத்தைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. வெளிநாடுகளில் தமிழர்கள் வாழும் அதே ஊரில் நடந்த படுகொலைகள், கலவரம் பற்றித் தான் குறிப்பிட்டேன்.

எதிர்வினை: ‎// 50 ஆண்டுகளாக அடித்து நொருக்கப்பட்டவர்கள் ஒரு சின்ன சந்தோசத்தை அனுபவித்தால் கசக்கிறது போலும்.//

பதில்: உங்களுக்கு ஒன்று தெரியுமா? யுத்தம் முடிந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அவர்களை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திட்டித் தீர்த்தார்கள். முகநூலில் கூட யாழ்ப்பாண தமிழர்களை எதிரியுடன் ஒத்துழைக்கும் துரோகிகள் என்ற லெவலுக்கு தூற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இதே புலம்பெயர்ந்த தமிழர்கள், ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம் தவறாமல் சந்தோசம் அனுபவித்தவர்கள் தான். ஒரு காலத்தில், தமிழக சினிமா நடிகைகள், பாடகர்களை கூப்பிட்டு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளில் நடிகைகளை நோக்கி தங்கச் சங்கிலி வீசிய தமிழர்களை எனக்குத் தெரியும். இன்னொரு தருணம், இத்தகைய நபர்கள் தம்மை தமிழீழ தேசிய காவலர்களாக காட்டிக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, கோயில் திருவிழாக்களும் வருடாவருடம் விமர்சையாக நடப்பது தான். அப்போதும் ஈழத்தில் மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அதையிட்டு எந்தக் கவலையுமின்றி சந்தோசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இன்றைக்கும் தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்கப் பிரிவினை என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? இதற்குள்ளே சாதியப் பாகுபாடுகளும் கலந்துள்ளதை நம்புவீர்களா? வசதியுடையவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பி விட, வசதியற்றவர்கள் போருக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இது ஈழத்தில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் யுத்தம் நடக்கும் நாடுகளில் நடக்கும் விடயம் தான். தனது இனத்தின் ஒரு பகுதி போரினால் பாதிக்கப்பட்டு உயிரை இழந்தும், முடமாகியும், சொத்துகளை இழந்தும் அல்லல் படுவதை உணர முடியாதவர்கள் இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள். உண்மையில் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை விற்று காசாக்கியும், அதைக் காட்டி வதிவிட விசா எடுத்தும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் அதிகம். இப்படிப்பட்ட மனிதர்கள், பிற இனத்தவரின் நன்மை, தீமைகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா? ஐரோப்பிய நகரங்களில் பாலஸ்தீன பிரச்சினைக்காகவோ, அல்லது ஈராக் போரை எதிர்த்தோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காலங்களில் ஒரு தமிழன் கூட கலந்து கொள்ளவில்லை. (விதிவிலக்காக என்னைப் போன்ற சிலர் கலந்து கொள்வது வேறு விடயம்). "ஏன் ஊர்வலங்களில் கலந்து கொள்ளவில்லை?" என்று கேட்டால், "முஸ்லிம்களை அழிப்பது வரவேற்கத்தக்க விடயம்." என்று பதிலளிப்பார்கள். பிற இனம் அழியும் பொழுது நாம் அலட்சியப்படுத்தினால், மற்றவர்கள் எம்மீது இரங்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
எதிர்வினை: // உணர்வோடு போராடுகிறவன் அனைத்து சமூகத்திலும் சொற்பமே...
ஈழத்தில் முள்வேலி முகாமுக்குள் தமிழர்கள் அடைப்பட்டு கிடந்து பொழுது....யாழ்ப்பாணத்திலும் திருவிழா கொண்டாடிக் கொண்டுதான் இருந்தார்கள்..
நம் மொழி பேசுகிறார்கள் என்ற காரணத்தினாலேயே நாம் அனைத்து விடயங்களிலும், அவர்களுக்கு ஆதரவான மனநிலையில் நிற்க கூடாது..//
பதில்: நான் சுட்டிக் காட்டியது அரசியல் அறிவுக் குறைபாடல்ல. அவர்களுக்கு அரசியல் தெரியாதென்று நான் கருதவில்லை. குறுகிய மனப்பான்மை கொண்ட குறுந்தேசியவாத அரசியல் தான், இத்தகைய தமிழர்களின் அடிப்படை அரசியல். அது சில இடங்களில் இனவாதமாகவும்,மதவாதமாகவும் காணப்படும். அவர்களுக்கு பிற இனத்தவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. மரபுவழி இனக்குழு அரசியலின் தொடர்ச்சியாகவே இவர்களது எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், ஒரு காலத்தில் சாதியும், மதமும் அவர்களது அடையாளத்தை தீர்மானித்தது. தற்போது இனவாதம் சார்ந்த குறுந்தேசியவாதம் அவர்களது அடையாளத்தை தீர்மானிக்கின்றது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து, முதலாளித்துவத்திற்கு மாறும் போது ஏற்பட்ட சமூக மாற்றம் இது. ஒஸ்லோவில் நடந்த படுகொலைகளுக்கு பின்னர், ஒஸ்லோ முருகன் கோயிலில் கலந்து கொண்ட "பக்தர்கள்" பலரது கருத்தைக் கேட்டேன். அவர்கள் அன்டெர்ஸ் பிறேவிக் என்ற நோர்வீஜிய கொலைகாரனை ஆதரித்து பேசினார்கள். அவனது செயலை நியாயப் படுத்தினார்கள். காரணம், "ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்." என்ற வெள்ளை நிறவெறியர்களின் கொள்கையை ஆதரிக்கின்றார்கள். நிற்க, அன்றைய தினம் ஒஸ்லோ தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இறந்தவர்களை நினைவுகூர்ந்து வழிபாடு நடைபெற்றது. தமிழ்க் கோயிலிலும் அதற்காக பூஜை நடத்தி இருந்தால் வரவேற்றிருக்கலாம். அனால் அன்றைய தினம் உள்வீதி, வெளிவீதி என்றெல்லாம் தேரிழுத்து அயலில் உள்ள நோர்வீஜிய மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது புத்திசாதுர்யமானதா? இந்த சம்பவத்தால், நோர்வீஜியர்கள் மனதில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி வளராதா?

எதிர்வினை: //லண்டன் நகரம் தீப்பற்றி எரியும் போது அருகிலேயே கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பார்கள், அது தவறில்லை அதை ரசித்து பார்த்து கொண்டிருப்பீர்கள் அது தவறில்லை, நாங்கள் மத அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் கொண்டாடும் விழா மட்டும் உங்களை உறுத்துகிறது போலும்.//

பதில்: ஆமாம், கலவரம் நடந்து கொண்டிருக்கையில், லண்டன் நகரில் கிரிக்கட் விளையாடினார்கள். அது எங்கே தெரியுமா? மேட்டுக்குடி வசிக்கும் லண்டன் நகர்ப்பகுதியில், பொலிஸ் படைகள் முழுவதும் செல்வந்தர்களது வசிப்பிடத்தை பாதுகாத்து நின்று கொண்டிருந்தது. ஆனால், லண்டன் நகரின் வறுமையான புறநகர்ப் பகுதிகள் தான் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டன. தமிழ்க் கோயிலும் அங்கே தான் உள்ளது. (தமிழ்க் கோயில் என்று அழைக்க காரணம், அந்தக் கோயிலுக்கு தமிழர்கள் மட்டுமே செல்வதுண்டு.) உங்கள் பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் வீட்டில் அமைதியாக விழா கொண்டாட முடியுமா? லண்டனில் நடந்த கோயில் திருவிழாவும் அவ்வாறான சூழ்நிலையில் தான் நடந்தது.

10 comments:

saarvaakan said...

அருமை நண்பரே,
சரியான விமர்சனம்.சுய புரிதல்,விமர்சனம் இல்லாத எந்த சமூகமும் உருப்படாது.
நன்றி.

ARV Loshan said...

இங்கே இலங்கையில் எம்மவர் அழிந்து இரத்ததா ஆறு ஓடியபோதே தலைநகரில் மட்டுமல்ல, வேறு இடங்களிலும் தேரிழுத்துத் திருவிழா கொண்டாட்டித் தேங்காய் உடைத்தவர்கள் தானே எம்மவர்கள்..

அசால்ட் ஆறுமுகம் said...

// ஆமாம், கலவரம் நடந்து கொண்டிருக்கையில், லண்டன் நகரில் கிரிக்கட் விளையாடினார்கள். அது எங்கே தெரியுமா? மேட்டுக்குடி வசிக்கும் லண்டன் நகர்ப்பகுதியில், பொலிஸ் படைகள் முழுவதும் செல்வந்தர்களது வசிப்பிடத்தை பாதுகாத்து நின்று கொண்டிருந்தது. //

நல்ல விளக்கம் நண்பரே! எனக்கு மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி தான் அது.... இப்போது விளங்குகிறது....

ராஜ நடராஜன் said...

புலம் பெயர் தமிழர்களின் கோயில் கிறுக்கு பற்றி எனக்கும் விமர்சனம் உண்டு.மே மாதம் 18ம் தேதி துயரங்களை பகிர்ந்து விட்டு சாமியாடும் நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்கள் ஜிடிவியில்.

Truth said...

குறையைக் கூறினால் புரிந்து கொள்ளாமல் எதிர்வினை வேறா? சரியான பதில்கள்..

sudar said...

ஆமாம். மே 18க்குப் பிறகு கண்ணீரும் கம்மலுமாகத் தான் லோசன் வெற்றியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார். மற்றய தமிழர்கள் எல்லோரும் கிளப்புக்கும், பீர் போத்தலையும் தூக்கிக் களியாட்டங்களில் ஈடுபடவே இல்லை...

Yoga.s.FR said...

லண்டனில் ஏன் இது நடந்தது என்பதற்கு,பிரித்தானியப் பிரதமரே பதில் சொல்லியிருக்கிறார்!உண்மையில் இது பிரித்தானிய அரசுக்கு ஒரு வெள்ளோட்டமே!எப்படியெனில்,புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் பல முன்னோடி?!நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவாம்!அதன் பலனை சீர் தூக்கிப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை பிரித்தானிய அரசு விட்டுப் பிடித்தது!இல்லையெனில் இந்தக் கலவரம் என்று நீங்கள் சொல்வதை அடக்க இருபத்து நாஙு மணி நேரம் போதுமானதாக இருந்திருக்கும்,பிரித்தானிய காவல் துறையினருக்கு!குழப்பம் நடந்த இடங்கள் தவிர நாட்டின் ஏனைய பகுதிகள் இயல்பு வாழ்க்கையயே கொண்டிருந்தன!கோவில் திருவிழா கொண்டாடினார்கள் என்று நீங்கள் பேசுவதெல்லாம்..................................................................(சொல்ல விரும்பவில்லை)

நிகழ்வுகள் said...

நம்மவர் மனசாட்சியில் அடிப்பது போல சுட்டுக்காடியுள்ளீர்கள்,

Tsri1 said...

சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
புலம் பெயர்ந்த தமிழீழ காவலர்களின் நியாயங்களே தனி வகை.

Anonymous said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றி