Saturday, April 03, 2010

உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - இரண்டாம் பகுதி)
"Londinium" என்று ரோமர்கள் வைத்த பெயர், இன்று லண்டனாக திரிபடைந்து உலகப் பெரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இங்கிலாந்து என்று அறியப்படும் பிரதேசத்தை கைப்பற்றிய ரோமர்கள், அதை பாதுகாக்க ஜெர்மன் இனக்குழுக்களை குடியேற வைத்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் உருவான பண்டைய ஆங்கிலேய (ஜெர்மன் இனக்குழு ஒன்றின் பெயர்) குடியேற்றங்களில் ஒன்று "ஸ்டேனா" (கல் என்ற அர்த்தம் வரும் பழைய ஆங்கிலச் சொல்.)

இன்று அந்த இடம் ஹீத்ரூ விமான நிலையம் அருகில், லண்டன் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த பகுதியாக உள்ளது. ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனது தற்காலிக வதிவிடமாக அமைந்தது. வெளிநாட்டவர்களால் நிரம்பி வழியும் லண்டன் புறநகர்ப் பகுதிகளைப் போலன்றி, வெள்ளயினத்தவர்களை பெரும்பான்மையாக கொண்டது. அங்கிருந்து சில மைல் தொலைவில் "வின்சர் கோட்டை" அமைந்துள்ளது. இன்று பிரபல சுற்றுலாத் தலமாக இருந்த போதிலும், வின்சர் கோட்டை பெறுமதி மிக்க அரச வம்ச சொத்துகளில் ஒன்று.

நான் குறிப்பிடும் சுற்று வட்டாரத்தில், உலகை மாற்றிய மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிற நாடுகளைப் போல லண்டனிலும் அரசன் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருந்தன. அரசனுக்கு அடுத்ததாக அரசியல் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்கள், அரச அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடினார்கள். இந்த இரண்டு அதிகார மையங்களும் இறுதியில் "மக்னா கார்ட்டா" என்ற பெயரிலான ஒப்பந்தம் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். பிற்காலத்தில் வந்த அரச அமைப்பு சட்டங்களின் முன்னோடியாக, மக்னா கார்ட்டா கருதப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் கைச் சாத்திட்ட இடத்தில் தற்போது ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வின்சர் கோட்டை செல்லும் வழியில், அந்த ஹோட்டலில் தங்கி உணவருந்தி விட்டு செல்வது வழக்கம்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், குறைந்தது இருபது தமிழர்களாவது வேலை செய்கின்றனர். அவர்களோடு ஒரு சில சிங்கள இளைஞர்களும் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஹோட்டல் அறைகளை சுத்தமாக்குவது, சமையலறையில் பாத்திரங்களை கழுவுவது போன்ற துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, போலந்து நாட்டுக்காரர்கள் சமையல் உதவியாளராகவும், உணவு உபசாரகர்களாகவும் பணியாற்றுகின்றனர். அவர்கள் எல்லோரும் சந்திக்கும் இடமாக, ஹோட்டலின் மையப் பகுதியான சமையலறை உள்ளது. எனக்கும் அவ்விடத்தில் ஒரு சில நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருபதுக்குமதிகமான தமிழர்கள் வருடக்கணக்காக வேலை செய்து கொண்டிருப்பதால், அங்கே ஆங்கிலத்துக்கு அடுத்த இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது! ஹோட்டலில் பணி புரியும் வேற்றினத்தவர்களும், தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் சிரத்தையோடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேமதுரத் தமிழோசை லண்டனிலும் ஒலிக்கின்றது. தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் 18 ல் இருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த அனைவரும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள். வேறு எங்கேயும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை என்பதால், ரெஸ்டாரன்ட் வேலை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் அண்மைக்கால போலிஸ் கெடுபிடி காரணமாக, அப்படியானவர்களை வைத்திருக்க தொழில் வழங்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை கவரும் மேற்கு ஐரோப்பிய நகரங்களில் உள்ள ஹோட்டல், ரெஸ்டாரன்ட் தொழிற்துறை யாவும் வெளிநாட்டுத் தொழிலாளரின் உழைப்பில் தங்கி இருக்கின்றன. லண்டனும் அதற்கு விதிவிலக்கல்ல. வேலை தேடித்தரும் முகவர்களும் இடைத்தரகர்களாக தொழில் சந்தையில் குதித்துள்ளனர். பிற வணிக நிறுவனங்களைப் போல உணவு விடுதிகளும் தமக்கு தேவையான தொழிலாளருக்கு முகவர்களை நாடுகின்றன. பெரும்பாலும் அந்நாட்டு வெள்ளையர்களே நடத்தும் முகவர் நிலையங்கள் தெற்காசிய சமூகங்களுக்குள் ஊடுருவ முடிவதில்லை. மொழிப்பிரச்சினை, சரியான தொடர்புகள் இன்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அந்தந்த சமூகங்களை சேர்ந்த முகவர்களை நாடுகின்றனர்.

இங்கிலாந்துக்கு புதிதாக வரும் சீனர்களை, சீன உணவுவிடுதிகளில் அடிமை வேலைகளில் ஈடுபடுத்தும் சீன மாபியாக்கள் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் அக்கறை காட்டுகின்றன. மாபியா ஆட்கடத்தல்காரர்கள், சீனாவில் இருந்து கிளம்ப பயணச் செலவுக்கு லட்சக்கணக்கில் கடனாக அள்ளிக் கொடுப்பார். பின்னர் ஏதாவதொரு லண்டன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்து, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி அறவிடுகின்றனர். கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலையில் இருந்த இந்தியத் தமிழ் இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவரின் பிரயாணத்திற்கு ஒழுங்கு செய்த ஆட்கடத்தல்கார கும்பல், ஈஸ்ட்ஹமில் (லண்டன் புறநகர்) தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்திருந்தது. ஊரில் வறுமையான பின்னணியில் இருந்து வந்த அந்த நபர், வருடக்கணக்காக வேலை செய்து கடனை அடைக்க வேண்டும். இந்த எழுதாத சட்டத்தை மீறி எங்கே தப்பி ஓடினாலும், எப்படி பிடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.

மாபியாக்களைப் போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தா விட்டாலும், அவர்களின் உழைப்பை சட்டபூர்வமாக சுரண்டும் முகவர்களும் இருக்கிறார்கள். அநேகமாக மதிப்பு மிக்க பிரிட்டிஷ் ஹோட்டல், ரெஸ்டாரன்ட் நிர்வாகங்கள் சட்டபூர்வ முகவர்களின் உதவியை நாடுகின்றன. ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு காசு என்று, மனிதர்களுக்கு விலை பேசுகின்றன. குறைந்த விலைக்கு ஆள் பிடித்து தருவதாக ஒப்பந்தம் செய்யும், தெற்காசிய சமூகத்தை சேர்ந்த முகவர் ஒருவர், தனது இனத்தை சேர்ந்த தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றார். இதனால் தொழிலாளர் நல காப்புறுதிகளை கட்டாமல் நிறுவனங்கள் மிச்சம் பிடிக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் செலவினம் சம்பளமாக கருதப்படாமல், வெளியாரின் சேவைக்கு வழங்கப்பட்ட விலையாக கருதப்படுவதால், வரிச் சலுகை கிடைக்கிறது.

தொழிலாளர்களை விநியோகம் செய்யும் முகவர் எந்த அளவு குறைந்த டெண்டருக்கு எடுத்திருந்தாலும், ஒரு தலைக்கான விலை, எப்படியும் அடிப்படை சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். வெள்ளையின ஆங்கிலேய முகவர்கள் நடத்தும் நிலையங்களைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. அவர்களுக்கு எப்படியும் சராசரி சம்பள தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே பணம் கிடைக்கிறது. வேலை நேரம், ஓவர் டைம் எல்லாவற்றையும் சரியாக கணித்துக் கொள்கின்றனர். தமது தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் அல்லது ஆசிய முகவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தொழிலாளிக்கு ஒரு கணக்கும், ஹோட்டலுக்கு இன்னொரு கணக்கும், அரசாங்கத்திற்கு வேறொரு கணக்கும் காட்டுகின்றனர்.

பிரிட்டனில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் ஒன்றை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஒருவர் என்ன வேலை செய்தாலும், மணித்தியாலம் 5.80 பவுன் கூலி கொடுக்க வேண்டும் என்பது அரசு போட்ட சட்டம். அது கூட ஒரு சராசரி வாழ்க்கை செலவுக்கு தேவையானதை விட குறைவாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதலாளி அதற்கு குறைவான சம்பளத்தை பதிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வெள்ளையின முதலாளிகளே, பெரும்பாலும் ஒப்பந்தப் படி பேசிய கூலியை கொடுக்கின்றனர். தமிழ் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தும் தமிழ் முதலாளியோ, அல்லது முகவரோ தாமாகவே ஒரு சந்தை விலையை தீர்மானிக்கின்றனர்.

ஒரு மணி நேர உழைப்புக்கு நான்கு பவுன் என்பது, தமிழரின் உழைப்புக்கு தமிழ் முதலாளிகள் நிர்ணயிக்கும் சராசரி விலை. (சில இடங்களில் மூன்று பவுன் கொடுக்கிறார்கள்.) கவனிக்கவும்: சட்டப்படி ஒப்பந்தம் செய்தாலும் அதிலே 5.80 பவுன்கள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கையில் கொடுப்பது 4 பவுன். இதனால் ஒரு அப்பாவி தொழிலாளியின் 1.80 பவுன் பெறுமதியான உழைப்பை திருடுகின்றனர். நான் சென்று பார்த்த ஹோட்டலில் எடுத்த அண்ணளவான கணிப்பின் படி, மாதம் 7500 பவுன்கள் இவ்வாறு ஒரு முகவரின் பைக்குள் செல்கின்றது. விசா இன்றி சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அதையே சம்பளமாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மாணவர்கள் போன்ற, தொழில் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமானது. பலர் இந்த திருட்டை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆயினும் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமும், போட்டியும் அவர்களின் வாயை மூட வைக்கிறது.

மணித்தியாலம் 4 பவுனுக்கு வேலை செய்வதால், மாத முடிவில் சொற்ப தொகையே சம்பளமாகக் கிடைக்கிறது. (அதைக் கூட மாத முடிவில் கொடுப்பதில்லை. இரண்டாவது மாதமே கிடைக்கிறது.) இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "ஓவர் டைம்" வேலை செய்கிறனர். பிரிட்டிஷ் சட்டப்படி, மேலதிக வேலை நேரத்திற்கு உரிமையான பிரத்தியேக கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. (ஆனால் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்து விடுகின்றது.) நான் அவதானித்த அளவில், ஒரு தொழிலாளி சராசரி ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார். ஹோட்டல்களில் "ஷிப்ட்" முறை உள்ளதால், அட்டவணைப் படி ஓய்வு நாள் கிடைக்கிறது. ஆனால் கடைகளில் சிப்பந்திகளாக பணியாற்றுபவர்கள் தினசரி வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

இலங்கை, இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பலர், காணியை, நகையை அடவு வைத்து கடன் எடுத்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. கடனை அடைக்க வேண்டுமென்றால், உழைப்புச் சுரண்டலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர்களின் கையறு நிலையை தமிழ் முதலாளிகளும், முகவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்பாவிகளின் உழைப்பை சுரண்டி, லண்டனில் வசதியான வீடு, மெர்செடெஸ் கார் என்று வாங்கித் தள்ளுகின்றனர். இறுதியில் தமிழ் தொழிலாளர்களின் உழைப்பு உற்பத்தி செய்து குவித்த பணம், பிரிட்டிஷ்காரர்களின் கஜானாவை சென்று நிரப்புகின்றது.

(தொடரும்)

இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
லண்டன் உங்களை வரவேற்கிறது!

5 comments:

செங்கதிரோன் said...

அருமையாக உள்ளது கட்டுரை ..

suresh said...

அண்ணா. நல்ல கட்டுரை இன்னும் எழுதுங்கள்..
அண்ணா ஒரு வேண்டுகோள் .. இங்கு தமிழகத்தில் நாங்கள் மலையகதமிழர் பற்றி நாங்கள் அதிகம் கேள்விப் பட்டது இல்லை..தயவுசெய்து அவர்கள் பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா?

Anonymous said...

very impressive. go head brother.
all the best for u for a new job.

aandon ganesh said...

very impressive. go head brother.
all the best for u for a new job.

Unknown said...

"நம் நாட்டின் தொழிலாளர்களின் உழைப்பை உற்பத்தி செய்து குவித்த பணம், பிரிட்டிஷ்காரர்களின் கஜானாவை சென்று நிரப்புகின்றது." - இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.