["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]
யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து கவலைப்படுவது தவறாகத் தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகள் தெற்கில் இருந்தன. எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வருமானம் நேரே வடக்கே சானாவில் இருக்கும் அரச கஜானாவிற்கு சென்றது. தலைநகர் சானாவின் நிர்வாகம், சாலே என்ற சர்வாதிகாரியின் கைக்குள் இருக்கிறது. ஊழல் குறித்து பிறிதாக பாடம் எடுக்கத் தேவையில்லை.
பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன தென்னக மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கெதிரான தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் பெருகின. சில ஊர்வலங்கள், பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் கலைக்கப்பட்டன. அரச அடக்குமுறைக்கு சிலர் பலியானதாகவும் தகவல். இருப்பினும் இந்த தகவல் எதுவும் சர்வதேச ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. செய்தி அவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் எப்படி அதை வெளியிடுவது? "ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?"
தென் யேமெனின் முக்கிய நகரான எடெனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் அல் பத்லி (Al Fadhli) போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டமை, அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிரபல ஜிகாத் போராளியான அல் பத்லி முன்னர் அரச ஆதரவு கூலிப்படை ஒன்றை தலைமை தாங்கியவர். ஜனாதிபதி சாலேக்கு மிக நெருக்கமானவர். முன்னர் தென் பிராந்திய கிளர்ச்சியை அடக்குவதில் முன் நின்றவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது அரசை விட்டு விலகி, எதிரணியான தென்னக இயக்கத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
தனக்கு நாடளாவிய ஜிகாத் போராளிகளுடன் தொடர்பு இருந்த போதிலும், அல்கைதாவுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அல் பத்லி: "தென்னகப் பகுதிகள் வடக்கத்தயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கு யேமேனின் சுதந்திரமே உயிர்மூச்சு." என்றெல்லாம் பிரதேசவாதிகளின் மொழியில் பேசியுள்ளார். என்ன அதிசயம். இந்த உரைக்கு அடுத்த சில தினங்களில், அல் கைதா தென்னக மக்களின் உரிமைப் போருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
1990 ம் ஆண்டு வரை, உலகத்தில் இரண்டு 'யேமன்' கள் இருந்தன. வடக்கே இஸ்லாமிய - முதலாளித்துவ "யேமன் அரபுக் குடியரசு". தெற்கே மதச்சார்பற்ற - கம்யூனிச "யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு". இரண்டுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். அரபு தேசியவாதம், இஸ்லாமிய பழமைவாதம், அரை-நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பன, யேமன் அரபுக் குடியரசின் கொள்கைகளாக இருந்தன. அங்கே சனத்தொகை பெருக்கம் அதிகம். அதே போல கல்வியறிவற்றவர்களின் தொகையும் அதிகம்.
இதற்கு மாறாக தென் யேமன் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பால் பெரிதானாலும், சனத்தொகை மிகக் குறைவு. காலனித்துவ கல்வி, உலகளாவிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருந்தது. அதுவே பின்னர் மார்க்சிய சித்தாந்தம் பரவ காரணமாயிற்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் யேமெனில் தான் வீறு கொண்டு எழுந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியனின் உதவியுடன் மார்க்சிச-லெனினிச அரசை நிறுவியது. கம்யூனிஸ்ட்கள் என்பதால் மக்கள் மசூதிக்கு செல்வதை தடை செய்யவில்லை. ஆனால் மசூதிகளை கட்டுவதை விட, பாடசாலைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகரித்தது. 1990 ம் ஆண்டு, சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், அந்நிய நாட்டு கடன்கள் வருவது நின்றது. சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டது. தவிர்க்கவியலாது, ஒன்றிணைந்த யேமன் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
1990 ல் ஒன்றிணைந்த யேமன் குடியரசு ஜனாதிபதியாக, வட யேமன் அரபுக் குடியரசின் சர்வாதிகாரி சாலே தெரிவானார். தென் யேமன் கம்யூனிசக் கட்சி, சோஷலிசக் கட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ''சானா"வை தலைநகரமாகக் கொண்ட பாராளுமன்றத்தில் அமர்ந்தது. ஒன்றிணைந்த யேமன் குறித்த எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு சில மாதங்களிலேயே தவிடுபொடியாயின. 1978 ம் ஆண்டில் இருந்து வட- யேமனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் சாலே என்ற சர்வாதிகாரியின் அதிகாரம், தற்போது தெற்கு வரை வியாபித்தது. சாலேயின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள், சலுகைகள், மேலும் அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. தென்னகத்தை சேர்ந்த முன்னாள் அதிகார வர்க்கம் (கம்யூனிசக் கட்சியை சேர்ந்தவர்கள்), வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்பட்டது.
யேமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தெற்கே ஏடன் நகரில் அமைந்திருந்தது. அதை விட, எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் ஏடன் வளைகுடாப் பகுதிகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு துறைகளும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். யேமன் பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆனால் ஒன்றிணைப்பின் பின்னர், அனைத்து வருமானமும் வடக்கே உள்ள தலைநகர் சானாவை நோக்கி திசை திருப்பப்பட்டன. ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, தென்னக பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடப்படவில்லை. வடக்கு - தெற்கு பிரச்சினை முற்றி, வன்முறையில் முடிந்தது. தெற்கு யேமன் மீண்டும் சுதந்திரப் பிரகடனம் செய்தது. வடக்கத்திய இராணுவம் தெற்கிற்கு படையெடுத்து சென்றது. கடுமையான யுத்தத்தின் பின்னர், தென்னக கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வட யேமன் இராணுவத்திற்கு சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. முன்னாள் ஆப்கான் ஜிகாத் வீரர்களும் கூலிப்படையாக செயற்பட்டனர்.
அரசியலில் எதுவும் நிலையானதல்ல. நேற்றைய பகைவர்கள் இன்று நண்பர்கள். நேற்றைய நண்பர்கள் இன்று எதிரிகள். அன்று ஜிகாத் வீரர்கள், யேமன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தென்னக பிரிவினைவாதிகளை எதிர்த்து போரிட்டார்கள். (பிராந்தியத்தின் பொருளாதார நலன் குறித்து பேசுவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தி விடுமாம்.) இன்று அல் பத்லி தலைமையிலான ஜிகாத் வீரர்கள், தென்னக பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இஸ்லாமியவாதிகள் இடதுசாரிகளாகி விட்டதால் இந்த கொள்கை மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும் சாலே, தனது பகைவர்களை தானே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். வடக்கே ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் போர். தெற்கே சுயநிர்ணைய உரிமை கோரும் சோஷலிஸ்ட்களின் நெருக்கடி. இவர்களுக்கு நடுவில் அல்கைதா என்ற பெயரைக் காட்டியே பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள். சாலேயின் அரசு, மும்முனைப் போரை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஓடோடி வந்து முண்டு கொடுத்திராவிட்டால், சாலேயும் எப்போதோ சதாமின் வழியில் சமாதியாகி இருப்பார்.
இதற்கிடையே யேமனின் அயல்நாடான சோமாலியாவும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சோமாலியப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் (Supreme Islamic Council of Somalia ), யேமன் சகோதரர்களுக்கு உதவப் போவதாக தெரிவித்தது. ஏற்கனவே சோமாலியா அகதிகளுக்கு யேமன் புகலிடம் அளித்துள்ளது. தற்போது இந்த அகதிகளில் எத்தனை பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தெரியாமல், அமெரிக்காவும், யேமனும் முழிக்கின்றன. ஜனவரி மாதம், சோமாலியாவின் ஜனாதிபதி ஷேக் ஷெரிப், யேமன் ஜனாதிபதி சாலேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது நாட்டில் அல்கைதாவின் (அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளின்) நடமாட்டம் குறித்து உளவறிந்து அறிவிப்பதாக உறுதியளித்தார். சோமாலியா ஜனாதிபதியின் அதிகாரம், "மொகாடிஷு விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இப்படியானவர்கள் தான் சாலேக்கு நண்பர்களாக வாய்த்திருக்கிறார்கள்.
யேமனுக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடற்கொள்ளையர்கள், உலகில் மிகவும் வறுமையான, அரச நிர்வாகமற்ற சோமாலியாவை சேர்ந்தவர்கள். சிறு குழுக்களாக இயங்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள், பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை கடத்திச் சென்றிருக்கிறார்கள். உலகமே இந்த செய்திகளை 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக, "நைஜீரிய அல்கைதா தீவிரவாதி" அமெரிக்க விமானத்தில் குண்டு வைக்க முயற்சித்த, அதே டிசம்பர் மாதம் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு சிறு ஆயுதமேந்திய குழுவால், பென்னம்பெரிய கப்பல்களை எப்படிக் கடத்த முடிகின்றது? கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந்தன? சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு? யேமன், சோமாலியா ஆகிய ஏழை நாடுகள் மீது, சர்வதேச சமூகத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை?
(தொடரும்)
இந்தத் தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
_____________________________________________________________________
மேலதிக தகவல்களுக்கு:
Fault line that allows al-Qa'ida to flourish in Yemen
Free Aden,Towards The Liberation of South Arabia
When Terrorists and Pirates Merge
2 comments:
suppar
Thank you Buruhani.
Post a Comment