Thursday, January 22, 2009

ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)


கிறிஸ்தவ மரபு சார்ந்தே சிந்திக்கப் பழகிய, அமெரிக்க அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் , பத்திரிகையாளர்களும் 'ஜிகாத்' என்ற சொல்லை "சிலுவைப்போர்" என்ற அர்த்தத்திலேயே புரிந்துகொள்கின்றனர். சுயசிந்தனையற்ற பிற நாடுகளின் பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் அதையே திருப்பிச்சொல்கின்றனர். ஆனால் இது மிகத்தவறான அர்த்தப்படுத்தல்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க ஐரோப்பாவில் பாப்பரசர் ஆணையின்பேரில் கிறிஸ்தவப் படைப்பிரிவுகள் ஜெரூசலேத்தைக் கைப்பற்ற தொடுத்த போர்தான் சிலுவைப்போர் என அழைக்கப்படுகிள்றது. இந்த (கத்தோலிக்க) கிறிஸ்துவப் படைகள் மதத்தின் பேரில் மத்திய கிழக்கில் முஸ்லீம்களை மட்டுமல்ல யூதர்களையும் (கிழக்கைரோப்பிய) ஓர்த்தோடொக்ஸ் கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தமை வரலாறு. முன்பு தாம் செய்த வினையின் விளைவுகள், அதேரூபத்தில் தம்மைத் திருப்பித் தாக்குமோ என ஐரோப்பியர்கள் அஞ்சினர். அதனால் இப்போது மேற்கத்தைய மேலாண்மைக்கு எதிரான இஸ்லாமிய அரசியல் குழுக்களின் போராட்டத்தையும் மதவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தலைப்படுகின்றனர். இவர்களை "மத அடிப்படைவாதிகள்", "மதத்தீவிரவாதிகள்" என எப்படி அழைத்தாலும், மத்திய கிழக்கில் மாற்றத்தைத் தேடும் அரசியல் சக்திகள், மதத்தின் பெயரால் மக்களைத்திரட்டி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது, ஏற்கெனவே 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த கதைதான்.

ஜிகாத் என்றால் என்ன? இந்தச் சொல் குர்ஆனில் இரண்டு அர்த்தத்தில் வருகின்றது. ஒன்று: தனிமனிதனின் மனதிலே நடைபெறும் தீய எண்ணங்களுக்கெதிரான நல்லெண்ணங்களின் போராட்டம். இரண்டு: மக்களை வருத்தி கொடுங்கோல் ஆட்சி புரியும் ஊழல்மய அரசுக்கெதிரான போராட்டம். இஸ்லாமியரின் இறைதூதர் முகமது நபியே இத்தகைய போரை அன்றைய மெக்கா அரசனுக்கு எதிராக நடத்தியதாக வரலாறு கூறுகிறது. அரேபியாவில் முஸ்லீம் அரசு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் வந்த முஸ்லீம் அரசர்கள் தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரிக்க நடந்த போர்களையும் ஜிகாத் என்று அறிவித்தது மறுப்பதற்கில்லை. ஆனால் அன்றைய காலகட்டம் வேறு இன்றைய கால கட்டம் வேறு. இன்று இஸ்லாமிய மதத்தை தமது சித்தாந்தமாக வரித்துக்கொண்ட பல்வேறு அரசியற் குழுக்கள் ஜிகாத் என்ற சொல்லை தாம் வாழும் பிரதேசத்தின் விடுதலைப் போராட்டம் என்ற அர்த்தத்திலேயே அநேகமாகப் பயன்படுத்துகின்றனர்.

இதைவிட ஒசாமா பின்லாடனின் (அல்-கைதா?) இயக்கம், ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையில் தனது போராட்டத்தை ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தானில் 1979 ல் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசும், அதற்குப் பக்கபலமாக ஆக்கிரமித்த சோவியத் ராணுவமும் தமக்கு எதிரான பழமைவாத இஸ்லாமிய மதத்தலைவர்களின் எதிர்ப்பை வன்முறையால் அடக்கியபோது வந்தது பிரச்சினை. ஆப்கானிஸ்தானை "சோவியத் யூனியனின் வியட்னாமாக" மாற்றிக்காட்ட சபதமெடுத்த அமெரிக்க அரசு பாகிஸ்தான் ஊடாக முஜ்ஜாகிதீன்கள் என்ற ஆயுதக்குழுக்களுக்கு உதவி புரிந்தது. மிக நவீன ஆயுதங்கள் தாராளமாக அனுப்பிவைக்கப்பட்டன. சவுதி அரேபியா தாராளமாக பணத்தை வாரிவழங்கியது. இது போதாதென்று ஆப்கானிய மதவாத ஆயுதக் குழுக்கழுக்குத் துணையாக வெளிநாட்டுத் தொண்டர்படை அனுப்பிவைக்கப்பட்டது. அப்படியொரு தொண்டர் படையில் போனவர்கள்தான், ஒசாமா பின்லாடனும் அவரது தோழர்களும்.

யூத மதத்தவர்கள் முன்பு பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசி வாழ்ந்தாலும், தாம் அனைவரும் ஓரினம் என்ற கருத்து காலங்காலமாகப் பரப்பப்பட்டு வந்தது. அதே போல இஸ்லாமிய மதம் ஆரம்பித்த காலத்திலிருந்தே, முஸ்லீம்கள் என்ற இனத்தை உருவாக்கும் முயற்சியாக "முதலில் ஒருவன் முஸ்லீம்" என்ற கருத்தும், அரபுமொழியில் புனித குர்ஆனை படிக்கச்சொல்லும் வழக்கமும் பின்பற்றப்படுகின்றன. இதனால், உலகில் ஒரே மொழிபேசும் மக்களின் இனஉணர்வு போன்றே, முஸ்லீம் உணர்வும் பேணப்பட்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் சென்ற தொண்டர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள இந்தப் பின்ணணி அறிவு அவசியம்.

தொண்டர்படைக்கு ஆட்சேர்க்கும் பணிகள் அமெரிக்க நட்புநாடுகளான சவூதி அரேபியாவிலும், எகிப்திலும் அதிகம் இடம்பெற்றன. ஆப்கானிஸ்தானில் கடவுள் நம்பிக்கையற்ற ரஷ்யர்களால் இஸ்லாமியச் சகோதரர்கள் கொல்லப்படுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்து இளைஞர்கள் திரட்டப்பட்டனர். இவ்வாறு திரட்டப்பட்ட மதநம்பிக்கையுள்ள இளைஞர்கள் சோவியத் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படிச் சென்றவர்களில் யாருமே பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கிடையாது. இதனால் சவூதி அரேபியா தனது தாராள மனப்பான்மையைக் காட்ட, ஒரு இளவரசரை அனுப்பிவைத்தால் நன்றாகவிருக்குமென சிலர் விரும்பியதற்கு ஏற்ப, இளவரசராக இல்லாவிட்டாலும் அரச குடும்பத்திற்கு நெருக்கமான பணக்காரக் குடும்பத்திலிருந்து ஒசமா பின்லாடன் சென்றபோது அதிக வரவேற்புக் கிடைத்ததில் ஆச்சரியமில்லை.

பத்தாண்டுகளாக அரபு முஜாகிதீன்கள், ஆப்கானிய முஜாதிதீன்களுடன் (முஜாகிதீன் என்றால் விடுதலைப் போராளிகள் என்று அர்த்தப்படும்) தோளோடு தோள் நின்று போராடியதன் இறுதியில், சோவியத் இராணுவம் வெளியேறியது. சோவியத் யூனியனில் அப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றமே படைகளைத் திரும்பப்பெறும் முடிவை எடுத்தபோதும், உலகின் பெரிய வல்லரசு இராணுவத்தை, தாம் அடித்து விரட்டி விட்டதாக முஜ்ஜாகிதீன்கள் இறுமாப்படைந்தனர். தொடர்ந்து சோவியத் யூனியன் வீழ்ந்ததற்கு ஆப்கான் யுத்தமே காரணம் என நம்பினர். அதனடிப்படையில்தான் இப்போது துணிந்து அமெரிக்காவை எதிர்த்து நிற்கின்றனர். சோவியத் வல்லரசை வீழ்த்திவிட்டோம், இனி அமெரிக்க வல்லரசும் வீழ்ந்துவிடும் என நம்புகின்றனர். அதன் அர்த்தம் அவர்கள் தமது போரை அமெரிக்காவிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்பதல்ல. சோவியத் இராணுவம் விட்டுவிட்டுப்போன இடத்தை, அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தான் தான், இப்போதும் அவர்களது விருப்பிற்குரிய போர்க்களம்.

சோவியத் இராணும் சென்ற பின்னர், தீவிரமாகச் சண்டைபுரிந்த வெளிநாட்டுத் தொண்டர்படைகளையும் கைவிட்டுவிட்டது அமெரிக்க அரசு. இவர்களோ யுத்தம் முடிந்ததும், வேலையற்ற இராணுவ வீரர்கள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர்க்கலையைத் தவிர வேறெதுவும் தெரியாத அவர்களை, என்ன செய்வதென்று அதற்குப் பிறகு யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. எப்படியும் சோவியத் படைகளை தோற்கடிக்கச்செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்ட பணம், ஆயுதங்கள் வேறு குவிந்து கிடந்தன. இத்தகைய சூழலில் தமது தனியார் இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் அல்-கைதா (தளம்). இதன் தலைவர் மர்மமான முறையில் குண்டுவெடிப்பால் கொல்லப்பட்ட பின்பு, ஒசாமா பின்லாடன் தலைமைப் பதவியை ஏற்றார். அதற்குப் பின்புதான் மாபெரும் திருப்பங்கள் உண்டாகின.

வெற்றிவீரனாக தனது தாய் நாடான சவூதி அரேபியாவிற்குத் திரும்பிய ஓசமா பின்லாடன், அரச குடும்பத்துடன் இன்னமும் நெருக்கமானார். அப்போது ஈராக், குவைத்தை ஆக்கிரமித்து மத்திய கிழக்கில் நெருக்கடி தோன்றியிருந்தது. அடுத்ததாக ஈராக்கிய இராணுவம் சவூதி அரேபியாவிற்குள்ளும் வந்துவிடும் என்று சொல்லி அமெரிக்க இராணுவம் சவூதி மண்ணில் வந்திறங்கியது. மதநம்பிக்கையாளரான ஒசாமா பின்லாடனின் மனம் ஒரு கணம் வரப்போகும் விபரீதங்களை நினைத்துப் பார்த்தது. முஸ்லீம்களின் புனித ஸ்தலமான மெக்கா இருக்குமிடத்தில் அந்நியப்படைகள் வரக்கூடாது என்று குர்ஆனில் உள்ளதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஒசாமா. சவூதி அரேபிய இராணுவமும் தனது (ஆப்கானிஸ்தானில் போரிட்ட) முஜ்ஜாகிதீன்களுமாகச் சேர்ந்தே ஈராக்கிய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவோம், அமெரிக்க இராணுவம் இங்கே வேண்டாம் என்று ஒசாமா கூறியதற்கு, சவூதி மன்னர் செவி சாய்க்கவில்லை. நீண்டநாள் கூட்டாளியான அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வதைவிட, ஒசமாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவது சிறந்தது, என சவூதி மன்னர் தீர்மானித்தார். இந்த இடத்தில்தான் ஒசாமா பின்லாடனுக்கும் சவூதி அரசகுடும்பத்திற்கும் இடையே பிளவு உண்டாகி, பகையுணர்வு நிரந்தரமாகியது.

சவூதி அரேபியாவினுள் ஏற்கெனவே பல அரச எதிர்ப்புக் கிளர்ச்சியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் இருந்து ஒசமாவின் கிளர்ச்சி வேறுபடுகின்றது. முன்னைய கிளர்ச்சியாளர்கள் ஆதரவற்ற மிகப்பலவீனமான நிலையிலிருந்ததால் இலகுவாக அடக்கப்பட்டார்கள். ஆனால், பின்லாடனின் பிரபலம் அவருக்கு அரச மட்டத்திலும் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. குறிப்பாக மன்னனுடன் முரண்படும், அல்லது அதிருப்தியுற்ற அதிகாரிகள், மறைமுகமான ஆதரவை பின்லாடனுக்கு வழங்கிவருகின்றனர். பின்லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்த காலத்தில்கூட இந்த அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள சவூதி தூதுவராலயம் ஊடாக பணம் அனுப்பியதாக தெரியவருகின்றது.

இதைவிட பின்லாடனுடன் ஊர்திரும்பிய முன்னாள் ஆப்கான் போராளிகள் சவூதி அரேபியாவில் தங்கிவிட்டதுடன், சவூதி அரசுக்கெதிரான கிளர்ச்சிக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் தமது தலைவர் பின்லாடனுக்கு விசுவாசமாக இருப்பதுடன் நாடு முழுவதும் இரகசிய முகாம்களை அமைத்துச் செயற்பட்டு வருகின்றனர். நவம்பர் மாதம் தலைநகர் றியாட்டில் உள்ள ஒரு இரகசிய முகாமில் கூடிய 50 (அல்கைதா?) போராளிகளைப் பொலிசார் சுற்றிவளைத்து பிடிக்கமுயன்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர்பிடிபட, மிகுதிப்பேர் தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதான் உண்மையான அல்-கைதா. பின்லாடன் தலைமையிலான அல்கைதாவின் பிரதான நோக்கம், தனது தாய்நாடான சவூதி அரேபியாவில் அமெரிக்காவினால் பாதுகாக்கப்படும் ஊழல் மலிந்த மன்னராட்சியைத் தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் இஸ்லாமியக்குடியரசை நிறுவுவது. அத்தகைய ஆட்சிமாற்றம் தனது நலன்களைப் பாதிக்கும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணை ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா ஆண்டாண்டு காலமாக அமெரிக்க தொழிற்துறைக்கு மலிவான எண்ணையை வழங்கி வருகின்றது.

அப்படியான சவூதி அரேபியா தனது கையை விட்டுப்போக அமெரிக்கா விரும்பப் போவதில்லை. தொண்ணூறுகளில் சவூதி அரேபியா முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. வளைகுடா யுத்தம் ஏற்படுத்திய சுமை, சந்தையில் எண்ணைவிலைச் சரிவு, மற்றும் பெருகிவரும் சனத்தொகை என்பன பல சவூதி அரேபிய மக்களை ஏழைகளாக்கியது. மறுபுறம், தமது ஆடம்பர வாழ்வைக் கைவிடாத, பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் அரசகுடும்பம், சவூதி அரேபியாவின் இன்றைய நிலையிது. இதனால் அரசகுடும்பத்திற்கெதிராக வளரும் அதிருப்தி, பின்லாடன் போன்ற கிளர்ச்சியாளருக்கு ஆதரவாகத் திரும்புவது இயற்கை.

__________________________________________________________

இது தொடர்பான முன்னைய பதிவு:
அல் கைதா என்ற ஆவி

6 comments:

Focus Lanka said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

VIKNESHWARAN ADAKKALAM said...

இக்கட்டுரை மேலும் தொடருமா?

Kalaiyarasan said...

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் விக்னேஸ்,
அல் கைதா தொடர்பான வேறு கட்டுரைகள் என்னால் ஏற்கனவே எழுதப்பட்டவை கையிருப்பில் இருக்கின்றன. அவற்றை விரைவில் பதிவேற்றுகிறேன்.

தெய்வமகன் said...

//ஜிகாத் என்றால் என்ன? இந்தச் சொல் குர்ஆனில் இரண்டு அர்த்தத்தில் வருகின்றது. ஒன்று: தனிமனிதனின் மனதிலே நடைபெறும் தீய எண்ணங்களுக்கெதிரான நல்லெண்ணங்களின் போராட்டம். இரண்டு: மக்களை வருத்தி கொடுங்கோல் ஆட்சி புரியும் ஊழல்மய அரசுக்கெதிரான போராட்டம். இஸ்லாமியரின் இறைதூதர் முகமது நபியே இத்தகைய போரை அன்றைய மெக்கா அரசனுக்கு எதிராக நடத்தியதாக வரலாறு கூறுகிறது//

நல்ல ஜிஹாத் எழுத்தாளர் போலவே எழுதுகிறீர்கள் கலையரசன் அவர்களே

Anonymous said...

நல்ல அலசல்.

Kalaiyarasan said...

தெய்வமகன் & அகமது கபீர், பின்னூட்டங்களுக்கு நன்றி.