Sunday, May 18, 2008

அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்

2007 ம் ஆண்டு, நியூசிலாந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் 18 பூர்வீக குடிமக்கள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நோக்கில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்ச்சியலைகளை தோற்றுவித்தது.

வழக்கமாகவே அந்த நாட்டில் இருந்து செய்திகள் எதுவும் வெளியுலகை எட்டுவதில்லை, என்ற அளவுக்கு பிரச்சினைகள் எதுவமற்ற நாடு என்று கருதப்படுகின்றது. அதுவும் பிற காலனிகளைப் போல் அல்லாது, ஆங்கிலேய குடியேற்றக்காரர்களும், உள்நாட்டு மவோரி மக்களும், ஒப்பந்தம் செய்து கொண்டு, சமாதானமாக வாழ்வதாக, நியூசிலாந்திலும் வெளியிலும் பெரும்பான்மையானோர் நினைத்துக்கொண்டிருக்கும் போது, சிறுபான்மை பூர்வீக மக்கள் பிரச்சினை அங்கேயும் தீரவில்லை, என்பதையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

19 ம் நூற்றாண்டில், ஹோலான்ட் நாட்டை சேர்ந்த தஸ்மன் என்ற மாலுமி, பசுபிக் சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் "கண்டுபிடித்த" தீவிற்கு , தனது தாயகத்தில் உள்ள மாகாணம் ஸேலாந்து (Zeeland) என்ற பெயரை வழங்கியதில் இருந்து அந்நாட்டின் ஐரோப்பிய காலனிய சரித்திரம் தொடங்குகின்றது. அங்கே குடியேறிய ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினராக நியூசிலாந்தின் அரசியல்,பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அதே வேளை, பூர்வீககுடிகளான மவோரி மக்கள், சிறுபான்மையினராக சில குறிப்பிட்ட பிரதேசங்களில், தமது கலாச்சாரத்தை பேணிக்கொண்டு வாழ்கின்றனர்.

இருப்பினும், அந்த மக்கள் ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில், ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகின்றது. அங்கே பயிலும் மாணவர்கள் தமது சொந்த மவோரி மொழி பேசினால் தண்டிக்கப்படுகின்றனர். முதலில் "மவோரி" என்ற பெயர் கூட, பல்வேறு மொழிகள் பேசும் உள்நாட்டு மக்களுக்கு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் வழங்கிய பொதுப்பெயர் ஆகும். 1987 ம் ஆண்டில் இருந்து தான் மவோரி மொழிக்கு, ஆங்கிலத்துக்கு நிகரான உதிதியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்களின் மொழியிலேயே நியூசிலாந்துக்கு "அவோதியறோவா" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.

காலனியாதிக்க காலகட்டத்தில் இருந்தே சில இனங்கள் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தும், சில இனங்கள் எதிர்த்துப்போராடியும் வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் விவசாயநிலங்களை அபகரித்துக்கொண்டிருந்த காலத்தில், இந்த பூர்வீக மக்கள் காடுகளுக்குள் ஒளிந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். காலனிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அன்னிய கலாச்சாரம் ஒன்றிற்கு அடிமையாதல், என்று கருதிய துஹோ இனம் தனது கடுமையான எதிர்ப்பை காலத்திற்கு காலம் காட்ட தவறவில்லை. 1975 ம் ஆண்டு நிலவுரிமை கோரி நடந்த ஊர்வலம் ஒன்றில், 40000 பேர் கலந்து கொண்டமை நியூசிலாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. கடந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான்.

சர்ச்சைக்குரிய "வைதாங்கி ஒப்பந்தம்", இன்று வரை மவோரிகளின் கிளர்ச்சிகளை தூண்டிவிடும் காரணியாக உள்ளது. தேசியதினமாக அறிவிக்கப்பட்டுள்ள "வைதாங்கி தினம்" அன்று, மவோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் முடியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூசிலாந்து தேசியக்கொடியை கிழிக்கும் போராட்டம் வருடாவருடம் நடக்கும். மவோரி மக்கள் வைதாங்கி ஒப்பந்தத்தை, நிலம் திருடுவதற்காக ஆங்கிலேயர் செய்த ஏமாற்று வேலை, என்றே கருதுகின்றனர்.

1840 ம் ஆண்டு, பெப்ருவரி 6 ம் திகதி, பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம், ஆங்கிலத்தில் ஒரு பிரதியும், மவோரி மொழியில் ஒரு பிரதியுமாக எழுதப்பட்டது. இந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பிழையான மொழிபெயர்ப்பு குறித்த சர்ச்சை இன்றைக்கும் தொடர்கின்றது.

ஆங்கில மொழியில் உள்ள பிரதியில், நியூசிலாந்து நாட்டின் "இறைமை"(sovereignty) பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமானது என்று எழுதியுள்ளது. ஆனால் மவோரி மொழியில் உள்ள பிரதியில் நியூசிலாந்து நிலங்களின் மீதான "ஆளுகை"(governorship) உள்நாட்டு இனக்குழுத் தலைவகளின் பொறுப்பில் உள்ளதாக எழுதியுள்ளது.

ஒப்பந்தத்தின் போது மவோரி தலைவர்கள் தாமே நியூசிலாந்தின் உரிமையாளர்கள் என்று ஆங்கிலேயர்கள் அங்கீகரித்து விட்டதாகவும், அவர்கள் விருந்தாளிகளாகவே அங்கே தங்கியிருப்பதாக கருதினர். அதற்குமாறாக நியூசிலாந்து ஆட்சியதிகாரத்தை மவோரிகள் தம்மிடம் ஒப்படைத்துவிட்டதாக, ஆங்கிலேயர் ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

அடுத்து வந்த வருடங்களில் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை மவோரி மக்கள் உணர்ந்து கொண்டனர். பெரும்பான்மை நியூசிலாந்து நிலங்களை ஆங்கிலேயர்கள் சொந்தமாக்கிக்கொண்டனர். நேர்மையற்ற வழியில் நிலங்களை அபகரித்த, ஆங்கிலேயரின் ஈனச்செயல், இரண்டு சொற்களின் பிழையான மொழிபெயர்ப்பால் சாத்தியமானது. "இறைமை", "ஆளுகை" போன்ற சொற்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம், அன்று மவோரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்று அரசியல் அறிவு பெற்ற மவோரி மக்கள், தமக்கென சுயாட்சிப்பிரதேசங்களை கோருகின்றனர். தமது மொழி, பண்பாடு என்பன சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலமே சாத்தியமாகும் என நம்புவதால், அதற்கென அரசியல் வேலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். உலகை மாற்றிய 2001 செப்டம்பர் 11 க்கு பிறகான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நியூசிலாந்தையும் பாதித்துள்ளது. அந்நாட்டு பயங்கரவாதிகள், சுயநிர்ணய உரிமை கோரும் பூர்வீக மவோரி மக்கள்.


1 comment:

Anonymous said...

good article and thanks for the information. Write more about Mori in NZ