Saturday, March 27, 2021

சீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா?

 


அதிசயம் ஆனால் உண்மை! 
சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள்

  • ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின. அடோல்ப் ஹிட்லரின் தாத்தா பெயர் யாருக்கும் தெரியாது. அவரது பாட்டி ஒரு யூத செல்வந்தர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். ஆகையினால் அடோல்ப் ஹிட்லரின் தந்தை ஆலோயிஸ் ஹிட்லர் உண்மையில் திருமணத்திற்கு புறம்பான உறவில் பிறந்திருக்கலாம். அவரது தந்தை ஒரு யூதராக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் ஹிட்லரின் உறவினர்களின் DNA எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வட ஆப்பிரிக்க அரேபியர்கள், அல்லது மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட அஷ்கனாசி, செபெர்டிம் யூதர்களின் DNA உடன் ஒத்துப் போவது தெரிய வந்தது. ஆகவே உண்மையில் யூதக் கலப்பில் பிறந்த ஹிட்லர் தான் தீவிரமாக ஜேர்மனிய இனத்தூய்மை பேசி வந்தார். ஒருவேளை அவர் இதன் மூலம் தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். உண்மையில் அந்தக் காலத்தில் யூத இனக்கலப்பு கொண்ட ஜெர்மனியர்கள் ஏராளம் பேர் இருந்தனர். 

  • சீமான் குடும்பத்தில் மலையாளிக் கலப்பு இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. ஏற்கனவே சிலர் இது குறித்த ஆதாரங்களை தேடி உள்ளனர். உண்மையில் DNA சோதனை செய்து பார்த்தால், சீமானும், அவரது நாம் தமிழர் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் தமிழர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் படும். ஆனால் அவர்கள் தான் இன்று மிகத் தீவிரமாக தமிழினத் தூய்மை குறித்து பேசி வருகின்றனர். 

  • ஹிட்லரின் கொள்கை ஜெர்மனிய இனத்தை மட்டும் தூய்மைப் படுத்துவதோடு நின்று விடவில்லை. ஜெர்மன் மொழியையும் தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். ஜெர்மன் மொழியில் அன்றாட பாவனையில் இருந்த யூதர்களின் ஹீபுரு மொழிச் சொற்கள் அகற்றப் பட்டன. அத்துடன் நவீன ஜெர்மன் மொழியில் ஏராளமான பிரெஞ்சு சொற்கள் கலந்திருந்தன. அவற்றிற்கு பதிலாக தூய ஜெர்மன் சொற்கள் கொண்டு வரப் பட்டன. 

  • சீமானின் கொள்கை தமிழ் இனத்தை மட்டும் தூய்மைப் படுத்துவதோடு நின்று விடவில்லை. தமிழ் மொழியை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தமிழ் மொழியில் அன்றாட பாவனையில் இருந்த சம்ஸ்கிருத, ஆங்கில சொற்களுக்கு பதிலாக தூய தமிழ்ச் சொற்கள் கொண்டு வரப் பட்டன. 

  • ஹிட்லர் இளம் வயதில் எந்த விதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக வியன்னா சென்று கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறிது காலம் ஓவியங்கள் வரைந்து விற்று வருமானம் ஈட்டினார். 

  • சீமான் இளம் வயதில் எந்தவிதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. எதிர்காலத்தில் ஒரு சினிமா டைரக்டராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக சென்னைக்கு சென்று சிறிது காலம் சினிமாத் துறையில் வேலை செய்து வந்தார். அதன் மூலம் வருமானம் ஈட்டினார். 

  • ஹிட்லர் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். ஆனால் பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை ஆதரித்தார். மரபுவழி கிறிஸ்தவ மதம் யூதர்களின் கதைகளை கூறும் பழைய ஏற்பாட்டை பைபிளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் "யூதக் கலப்பு" இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது. 

  • சீமான் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். திராவிடர் கழக கூட்டங்களிலும் உரையாற்றினார். ஆனால், பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் இந்து மதத்தை ஆதரித்து முப்பாட்டன் முருகன் என்று கொண்டாடினார். "ஆரியக் கலப்பு" இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது. 

  • ஹிட்லர் அரசியலுக்கு வந்த காலத்தில் ஜேர்மனிய தேசியவாதிகளின் ஆயுதப்போராட்ட கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவை ஆதரித்த குற்றத்திற்காக மியூனிச் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப் பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி" (NSDAP) என்ற அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார். 

  • சீமான் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழீழ தேசியவாதிகளின் ஆயுதப்போராட்ட கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவை ஆதரித்த குற்றத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப் பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட "நாம் தமிழர் கட்சி" (NTK) எனும் அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார். 

  • ஹிட்லர் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப்பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் "எனது போராட்டம்" என்ற பெயரில் நூலாக வெளியானது. நாசிக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர். 

  • சீமான் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப்பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் "திருப்பி அடிப்பேன்" என்ற பெயரில் நூலாக வெளியானது. நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர். 

  • நாஸிக் கட்சியான NSDAP ஹிட்லர் உருவாக்கியது அல்ல. ஹிட்லர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அது போன்று பல ஜெர்மன் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப் படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த NSDAP கட்சியை ஹிட்லர் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் ஹிட்லரின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், NSDAP கட்சி பவாரியா மாநிலத்தில் பிரபலமானது. 

  • நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கியது அல்ல. அது சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய இயக்கம். சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அது போன்ற பல தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப் படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த நாம் தமிழர் கட்சியை சீமான் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் சீமானின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், நாம் தமிழர் கட்சி தமிழ் நாடு மாநிலத்தில் பிரபலமானது. 

  • நாசிக் கட்சி கொடியில் உள்ள ஸ்வஸ்திகா சின்னம் கூட ஹிட்லரின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தூலே கேமைன்ஷாப் போன்ற சில அமைப்பினரால் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டது. ஹிட்லர் ஸ்வஸ்திகா சின்னத்தை மறு பக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். நாஸிக் கொடியில் உள்ள கருப்பு, வெள்ளை, சிவப்பு வர்ணங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஜெர்மன் சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது. 

  • நாம் தமிழர் கட்சிக் கொடியில் உள்ள புலிச் சின்னம் சீமானின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இயங்கிய சில தமிழ்த் தேசிய இயக்கங்களாலும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டது. சீமான் புலிச் சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். புலிக்கொடி நூறாண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது. 

  • ஹிட்லர் வாழ்ந்த காலத்தில், "சியோன் ஞானிகளின் இரகசியக் காப்புவிதிகள்" என்ற நூல் பிரபலமாக இருந்தது. அது இலுமினாட்டிக் கதை போன்று புனைவுகளால் எழுதப்பட்டது. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, யூதர்கள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப் பட்டன. அதை உண்மை என ஹிட்லர் நம்பினார். அதனால் யூதர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து ஜேர்மனிய மக்களை பாதுகாக்கப் போவதாக சொல்லிக் கொண்டார். 

  • சீமான் வாழும் காலத்தில் இலுமினாட்டிகள் பற்றிய புனை கதைகள் பிரபலமாக இருந்து வருகின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, இலுமினாட்டிகள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப் பட்டன. அதை உண்மை என சீமான் நம்பினார். அதனால் இலுமினாட்டிகள் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கப் போவதாக சொல்லிக் கொள்கிறார். அன்று ஹிட்லர் யூதர்கள் என்று நேரடியாக சொன்னதை, இன்று சீமான் இலுமினாட்டிகள் என்று மறைமுகமாக சொல்கிறார். ஆனால், இருவரும் ஒரே விடயத்தை பற்றித் தான் பேசுகின்றனர்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Friday, March 26, 2021

"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்" - நூல் அறிமுகம்

 

ஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனையாகின்றது. தமிழ் தி இந்துவினால் கவனிக்கப் பட வேண்டிய சிறந்த நூல்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. குறிப்பு: பிரதேச மொழி வழக்கில் விடாய் என்றால் தாகம் என்று அர்த்தம். 

ஈழப்போரின் இறுதிக் காலங்களில் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப் பட்ட அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர் தில்லை வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இது. இந்த நூலில் உள்ள கவிதைகளை கீழ்க்கண்ட உப பிரிவுகளாக பிரிக்கலாம்: 
  • 1. உறவுச் சிக்கல்களால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் உள்மனக் குமுறல்கள். 
  • 2. குழந்தைப் பராயத்தில் ஊர்ப் பெரியவர்களாலும் , நெருங்கிய உறவினர்களாலும் துஸ்பிரயோகம் செய்யப் பட்ட ஒரு சிறுமியின் அவலக் குரல். 
  • 3. பிறந்த மண், அதன் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான பற்று. 
  • 4. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையின் வெளிப்பாடு. 
  • 5. புலம்பெயர்ந்து சென்று, முற்றிலும் அந்நியத்தன்மை கொண்ட ஐரோப்பிய நாடொன்றில், ஒரு மாறுபட்ட புதிய வாழ்க்கையை தொடங்குதல்.

இந்தத் தொகுப்பில் சில கவிதைகள் காப்கா பாணியிலான உள்மனக் குமுறல்களின் வெளிப்படுத்தல்களாக உள்ளன. உண்மையில் ஓர் உளவியல் மருத்துவரிடம் ஆற்றுப்படுத்தல் தேடுவது மாதிரி, கதை, கவிதை போன்ற புனைவு இலக்கியங்களில் வெளிப்படுத்துவதற்கு ஒரு துணிச்சல் தேவை. அது தில்லையிடம் தாராளமாக இருக்கிறது. 

தான் பிறந்தவுடனேயே தாயையும், தந்தையும் இழந்து அநாதரவாக கைவிடப்பட்ட வலிகளை, ஒடுக்கப்பட்ட உணர்வுகளை கவிதைகளில் வடித்திருக்கிறார். ஒரு பக்கம் தாய், தந்தையின் அரவணைப்பு கிடைக்காத ஏக்கம், மறுபக்கம் தத்தெடுத்த உறவினர்கள் இழைத்த கொடுமைகளால் ஏற்பட்ட வலி. குழந்தைப் பராயத்தில் ஏற்படும் இதுபோன்ற உளவியல் தாக்கங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் மறைவதில்லை. 

பிரான்ஸ் காப்கா என்ற செக்கோஸ்லாவாக்கிய எழுத்தாளர் தனது சொந்த வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி எழுதிய உளவியல் குறிப்புகள் உலகப் புகழ் பெற்ற இலக்கியமானது மாதிரி, ஈழத்து கவிஞர் தில்லையின் கவிதைகளும் எடுத்த எடுப்பிலேயே பலரால் விரும்பி வாசிக்கப் பட்ட இலக்கியமாகி விட்டது. காப்கா தனது தாய்நாடான செக்கோஸ்லாவாக்கியாவில் ஜெர்மன் மொழி பேசும் யூத சிறுபான்மை இனத்தை சேர்ந்திருந்த படியால் மேலதிகமாக சில துயர அனுபவங்களை பெற்றிருந்தார். 

தில்லையும் இலங்கையில் அதே நிலைமையில் இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. காப்காவின் எழுத்துக்கள் கவலை, வருத்தம், அச்சம், ஆத்திரம், ஆவேசம், ஆதரவின்மை போன்ற கலவைகளாலான சர்லியச இலக்கியப் போக்கை கொண்டிருந்த மாதிரி, தில்லையின் பல கவிதைகள் உள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட வகைக்குள் அடங்காத பிற கவிதைகள், வாசகர்களுக்கு இந்த தொகுப்பை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன. 

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரிய மண்வாசனை வீசும் கவிதைகள் தனித்துவமானவை. மேலும் அந்தப் பிரதேசத்தின் கலாச்சாரத்தை மட்டுமல்லாது, அரசியல், சமூக வேறுபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் "பாரம்பரிய ஈழம்" என்று தற்காலத்தில் அரசியல்மயப் படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது. பேசும் தமிழும் மாறுபடுகின்றது. கிளை மொழிகளையும் வட்டார சொல் வழக்குகளையும் கொண்டுள்ளது. 

தில்லை இந்தக் கவிதைத் தொகுப்பில் தான் பிறந்து வளர்ந்த படுவான்கரை பிரதேச வட்டார வழக்கு மொழியில் சில கவிதைகள் எழுதி இருப்பது, ஒரு பாராட்டத்தக்க துணிச்சலான விடயம். ஒரு கவிதை முழுவதும் வட்டார மொழியில் எழுதப் பட்டுள்ளது. பிற கவிதைகளில் அந்தப் பிரதேசத்திற்கு தனித்துவமான சொற்கள் கையாளப் பட்டுள்ளன. இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்த படுவான்கரை மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமிதமும் தெரிகின்றது. 

இங்கே மேலதிகமாக ஒரு சிறு சமூக- அரசியல் குறிப்பையும் இணைக்க விரும்புகிறேன். இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் குடாநாடு அபிவிருத்தி அடைந்த அளவிற்கு, வன்னிப் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. அது எப்போதும் பொருளாதார வசதிகளில் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது. அதே மாதிரித் தான் கிழக்கு மாகாணத்து நிலைமையும். கிழக்கு கரையோரம் உள்ள எழுவான்கரை பிரதேசம் அபிவிருத்தி அடைந்து காணப்படுகையில், மேற்கில் உள்ள படுவான்கரை இன்றைக்கும் வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது. 

யாழ்ப்பாணம் - வன்னி, எழுவான்கரை - படுவான்கரை, இந்த பிரதேசங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு பல மட்டங்களில் எதிரொலிக்கும். ஈழப்போர் காலகட்டத்தில் நடந்த பல குறிப்பிடத்தக்க இராணுவ, அரசியல் மாற்றங்களில், இந்த பிரதேச ஏற்றத்தாழ்வு மறைந்திருந்தது. ஆனால், அதை அன்றும் இன்றும் பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அந்த வகையில் "படுவான்கரை இலக்கியம்" என்று அழைக்கப் படக் கூடிய தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் சமூகவியல் பார்வையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

Friday, March 12, 2021

சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்



ஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: 

ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில் ஆட்சியில் இருந்த‌ ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி(SPD) ஜெர்ம‌னிய‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். ஜெர்ம‌னியை ஆள்ப‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ SPD தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் யூத‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் பிரெஞ்சு இராணுவ‌த்தால் ஜெர்ம‌னிய‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கின‌ர். (முத‌லாம்) உல‌க‌ப் போரில் ந‌ட‌ந்த‌ ஜெர்ம‌ன் இன‌ப்ப‌டுகொலையின் சூத்திர‌தாரிக‌ள் SPD, மார்க்சிய‌வாதிக‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ள் தான். 

சீமான்: ஈழ‌ப் போரில் புலிக‌ள் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் டெல்லியில் ஆட்சியில் இருந்த‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். த‌மிழ்நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ திராவிட‌க் க‌ட்சிக‌ளின் தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தெலுங்க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் சிறில‌ங்கா அர‌ச‌ ப‌டைக‌ளால் த‌மிழ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கினார்க‌ள். ஈழ‌ப்போரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலைக்கு கார‌ண‌ம் காங்கிர‌ஸ், திராவிட‌வாதிக‌ள், ம‌ற்றும் தெலுங்க‌ர்க‌ள் தான். 

*****

- ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜை. அன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தன. ஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது. 

- சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் இந்தியப் பிரஜை. இன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றன. சீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.

 - ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்று, சக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார். அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லை. போர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டு, பிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.

 - சீமான் இந்தியாவில் இருந்து, இலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார். ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம். எந்தச் சண்டையும் நேரில் காணவில்லை. பிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.

 - ஹிட்லர், சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள். கைகளை உயர்த்தி, நரம்பு புடைக்க, சத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள். இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர். 

 - அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள். அதே மாதிரி, இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர். 

 - ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர். மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர், பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார். ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார். பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.

 - தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு, தனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.

 - அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர். அதனால் வளர முடியவில்லை. ஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்க, பணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர். ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து, சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார். அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, அன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.

 - இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள், பிராமணர்கள், உயர்சாதியினர், செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர். அதனால் வளர முடியவில்லை. சீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார். இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

 - அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியா, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர். அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.

 - இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தியா, இலங்கைக்கு வெளியே பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள். 

Tuesday, March 09, 2021

ஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளுக்கும் என்ன தொடர்பு?


இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு? 
ஆயுத விற்பனையால் கிடைக்கும் இலாபம்? இனப் பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்? 
இல்லை... 

யுத்தம் மூலம் மூன்றாமுலக நாடுகளை கடனாளிகளாக்கி, அவற்றை அடிமைப்படுத்தி வைத்திருத்தல் தான் உண்மையான நோக்கம். வங்கிகளில் நடக்கும் ஊழலை மையமாகக் கொண்டு The International என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜெர்மன், அமெரிக்க, பிரிட்டிஷ் கூட்டுத் தயாரிப்பில் உருவானது. 

படத்தின் கதையானது, எண்பதுகளில் நடந்த BCCI வங்கி ஊழலை நினைவுபடுத்தினாலும், சர்வதேச அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கற்பனையாக எழுதப்பட்டுள்ளது. லக்சம்பேர்க் நாட்டில் தலைமையகத்தை கொண்டுள்ள IBBC வங்கியில் நடக்கும் ஊழல் தான் கதை. 

வில்லன்களான வங்கி நிர்வாகிகள், தமக்கு எதிரானவர்களை ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டுகிறார்கள். ஒரு இன்டர்போல் அதிகாரி, கொலைகளுக்கான காரணங்களை ஆராயும் பொழுது தான், IBBC வங்கியின் பின்னணி தெரிய வருகின்றது. 

IBBC வங்கி ஆயுதத் தரகர்களை வைத்திருக்கிறது. லைபீரியா போன்ற மூன்றமுலக நாடுகளில், கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குகின்றது. சீனாவில் தயாரிக்கப் படும் துப்பாக்கிகளை வாங்கி யுத்தங்கள் நடக்கும் நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது. மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏவுகணைகளை விற்கின்றது. 

உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதக் குழுக்கள், கிரிமினல் கும்பல்களுடன் தொடர்புவைத்திருக்கும் IBBC வங்கிக்கு, அமெரிக்க அரசு, CIA கூட உறுதுணையாக இருக்கின்றன. ஆகையினால், அதற்கு எதிராக சட்டப் படி நடவடிக்கை எடுப்பது இயலாத காரியம். 

திரைப்படத்தின் முடிவில், இஸ்தான்புல் நகரில் வங்கியாளர்களின் கூட்டம் நடைபெறுகின்றது. அப்போது லக்சம்பேர்க் தலைமையக நிர்வாகியை கதாநாயகன் பின்தொடர்கிறான். இதற்கிடையே, வங்கி அனுப்பிய கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்ட இத்தாலி அரசியல்வாதி ஒருவரின் மகன், தலைமை நிர்வாகியை சுட்டுக் கொல்கிறான். 

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். 

Wednesday, March 03, 2021

பாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்

1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டிருந்தார். அன்று பிரஷியன் என அழைக்கப்பட்ட ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரை சுற்றி வளைத்தன.  மன்னராட்சி சரணடைந்த படியால், செப்டம்பர் 4 ம் தேதி குடியரசு பிரகடனப் படுத்தப் பட்டது. அதற்கு பாரிஸ் உழைக்கும் வர்க்க மக்களின் அழுத்தமும் ஒரு காரணம். 


ஜெர்மன் படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருந்த பாரிஸ் நகரில் பல மாத கால பட்டினிக்கு பின்னர் தொழிலாளர்கள் புதிய குடியரசை ஒரு ஜனநாயகக் கம்யூனாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆனால் அதுகுறித்து பூர்ஷுவா குடியரசு அக்கறைப் படவில்லை .  22 ஜனவரி நடந்த தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் கடுமையாக அடக்கப் பட்டது.  

28 ஜனவரி, பிரான்சின் குடியரசும் ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது. பிரெஞ்சுப் படையினரிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. ஆனால் தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த பாரிஸ் இராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தது. 

18 மார்ச், வெர்சேய் நகரில் இருந்து இயங்கிய பிரெஞ்சு பூர்ஷுவா அரசு தனது இராணுவத்தை அனுப்பி பாரிஸ் பிரிவின் ஆயுதங்களை களையுமாறு உத்தரவிட்டது.  ஆனால் அங்கு ஒரு மோதல் நிலையை எதிர்கொண்ட படையினர் பாரிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்தனர். அந்தக் கணத்தில் இருந்து ஆயுதமேந்திய தொழிலாளர்கள் பாரிஸ் நகரின் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டனர். 

வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். சர்வதேச சோஷலிச இயக்கங்களை பொறுத்த வரையில், பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள். இதைத் தான் கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்று சொன்னார். அதாவது உண்மையான பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த சிறுபான்மையினரின் ஆட்சிக்கு மாறாக, பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் வர்க்க   மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும். 

பாரிஸ் கம்யூன்  ஒரு குறுகிய காலம்  மட்டுமே  நீடித்த போதிலும் அன்று அது பல முற்போக்கான திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. உதாரணத்திற்கு இரவு வேலைகளும், சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதும் இரத்து செய்யப் பட்டன.  கல்வித்துறையில் கத்தோலிக்க திருச் சபை கொண்டிருந்த  இரும்புப் பிடி  துண்டிக்கப் பட்டது.  அத்துடன் பெண்களும் கம்யூன் உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.  

அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் கம்யூன் நிர்வாகத்தை நடத்தினார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அகற்றப் படலாம். மேலும் அவர்களது வேலைக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு சமமான ஊதியம் வழங்கப் பட்டது. போலிஸ், இராணுவம் இல்லாதொழிக்கப் பட்டு, ஆயுதபாணிகளான மக்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். 

கம்யூன் நிர்வாகம் குறித்து கார்ல் மார்க்ஸ் எழுதியதாவது: 
" மூன்று அல்லது ஆறு வருடங்களுக்கொரு தடவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தவும், அடக்குவதற்கும் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரை  அனுப்பலாம் என்பதற்குப் பதிலாக, பொதுவான வாக்குரிமை கம்யூன் ஒருங்கமைத்த மக்களுக்கு சேவையாற்றும்."

பழைய முதலாளித்துவ அரசை அகற்றி விட்டு அதனை  உழைக்கும் வர்க்கத்தின் தன்னாட்சி அதிகாரமாக மாற்றியமைப்பதில் கம்யூன் மிகப் பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும் அது இந்த விடயத்தில் நீண்ட தூரம் செல்லாத படியால், அதுவே வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகியது. உதாரணத்திற்கு முதலாளித்துவ பணப் பரிவர்த்தனையை நிறுத்தும் நோக்கில் தேசிய வங்கியை கம்யூன் பொறுப்பெடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல, கம்யூன் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் எந்த விதத் தடையும் இல்லாமல்  கம்யூனைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட முடிந்தது. அதே நேரம் கம்யூன் தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தனர். அங்கே வாழ்ந்த விவசாயிகள் அவர்களது கூட்டாளிகள் என்பது மட்டுமல்லாது ஒரே ஆளும் வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு வந்தனர். 

இதற்கிடையே, யுத்த சூழ்நிலை நிலவிய போதிலும் ஜெர்மன், பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையிலான பகைமையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தன. இல்லாவிட்டால் அவர்களுக்கு பொதுவான வர்க்க எதிரியான பாரிஸ் கம்யூன்  இலகுவாக தோற்கடிக்க முடியாது எனக் கண்டு கொண்டனர்.  வேர்செயில் இருந்த பிரெஞ்சு அரசு புதிய இராணுவத்தை உருவாக்குவதற்கு உதவியாக, அதுவரை காலமும் ஜெர்மன் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் படையினர் ஜெர்மன் சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டனர். 

மே மாதம் 21 ம் தேதி, கம்யூன் கட்டுப்பாட்டில் இருந்த பாரிஸ் நகரைக்  கைப்பற்றுவதற்காக புதிய பிரெஞ்சு இராணுவம் படையெடுத்து வந்தது. அப்போதும் பாரிஸ் நகரை சுற்றிவளைத்து நின்று கொண்டிருந்த ஜெர்மன் படையினர், அவர்களுக்கு வழிவிட்டனர். அடுத்து வந்த எட்டு நாட்களும், கம்யூன்வாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரெஞ்சுப் படையினர்  ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.  

1871ம் ஆண்டு   மே மாதம்  28 ம் தேதி,  பாரிஸ்  கம்யூன் ஒரு துயர முடிவுக்கு வந்தது. அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, பாரிஸ் கம்யூன் இருந்தமைக்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டன. இன்று எஞ்சியிருப்பது நிராயுதபாணிகளான கம்யூன்வாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய  ஒரு மதில்  சுவர் மாத்திரமே. அந்த இடம் இன்றும் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது. 


இந்தக் கட்டுரை காணொளிப் பதிவாக யூடியூப் தளத்தில் உள்ளது:



இது தொடர்பான முன்னைய பதிவு:
பாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி

Tuesday, March 02, 2021

ஜனநாயக வழியிலான சோஷலிசப் புரட்சி குறித்து எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 4)

(எங்கெல்ஸ் எழுதிய‌ க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள் தொட‌ர்ச்சி...) 


கேள்வி 16: த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு அமைதி வ‌ழியில் ந‌ட‌க்க‌ முடியாதா? 

ப‌தில்: அப்ப‌டி ந‌டந்தால் அதுவே விரும்ப‌த் த‌க்க‌து. க‌ம்யூனிஸ்டுக‌ள் இதை க‌டைசி வ‌ரையும் எதிர்க்க‌ மாட்டார்க‌ள். எல்லா சூழ்ச்சிக‌ளும் ப‌ய‌ன‌ற்ற‌வை, தீங்கு விளைவிப்ப‌வை என்ப‌தை க‌ம்யூனிஸ்டுக‌ள் அறிவார்க‌ள். புர‌ட்சிக‌ள் ஒருபோதும் முன்கூட்டிய‌ திட்ட‌மிட‌லில் த‌ன்னிச்சையாக‌ உருவாக்க‌ப் ப‌டுவ‌தில்லை என்ப‌து க‌ம்யூனிஸ்டுக‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். மாறாக‌ புர‌ட்சிக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் எல்லாக் கால‌ங்க‌ளிலும் உள்ள‌ புற‌ச்சூழ‌ல்களின் விளைவாக‌ இருந்துள்ள‌ன‌. அவை த‌னித்த‌னி க‌ட்சிக‌ள் ம‌ற்றும் அனைத்து வ‌ர்க்க‌ங்க‌ளில் இருந்தும் பூர‌ண‌ சுத‌ந்திர‌த்துட‌ன்‌ உள்ள‌ன‌. எல்லா நாக‌ரிக‌மைந்த‌ நாடுக‌ளிலும் பாட்டாளிக‌ளின் வ‌ள‌ர்ச்சி வ‌ன்முறை கொண்டு ஒடுக்க‌ப் ப‌டுவ‌தை அவ‌ர்க‌ள் காண்கிறார்க‌ள். அத‌னால் க‌ம்யூனிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் த‌ம‌து முழுப் ப‌ல‌த்தை பிர‌யோகித்து புர‌ட்சியை நோக்கி வ‌ழிந‌டாத்துவ‌தையும் காண்கிறார்க‌ள். இத‌ன் விளைவாக‌ ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ பாட்டாளி வ‌ர்க்க‌ம் இறுதியில் புர‌ட்சியை நோக்கி த‌ள்ள‌ப் ப‌ட்டால், க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் இப்போது சொல்வ‌தைப் போன்று பாட்டாளிக‌ளின் இல‌ட்சிய‌த்தை பாதுகாப்ப‌தை செய‌லில் காட்டுவோம். 

கேள்வி 17: தனியார் சொத்துடைமையை ஒரேயடியாக ஒழித்து விட முடியுமா? 

பதில்: ஏற்கனவே உள்ள உற்பத்தி சாதனங்களை ஒரேயடியாக பன்மடங்காக சமுதாயம் முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு மாற்றியமைக்க சாத்தியமில்லை.அது போன்று இதுவும் ஒரேயடியில் ஒழிப்பது சாத்தியமில்லை. பெருமளவு சாத்தியமாகி வருகின்ற பாட்டாளிவர்க்கப் புரட்சி சமுதாயத்தை படிப்படியாக மாற்றியமைக்கும். போதுமான அளவு உற்பத்திச் சாதனங்கள் உருவாக்கப்படும் பொழுது தான் தனியார் சொத்துடைமையை ஒழிக்க முடியும். 

கேள்வி 18: எந்தவொரு வளர்ச்சிப் பாதையின் ஊடாக இந்தப் புரட்சி சென்று கொண்டிருக்கும்? 

பதில்: அது முதலாவதாக ஜனநாயக அரசமைப்பாக இருக்கும். அதனால் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு வரும். பாட்டாளிவர்க்கத்தினர் சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள இங்கிலாந்தில் அது நேரடியாக நடக்கும். சனத்தொகையில் பெரும்பான்மை பாட்டாளிகளை மட்டுமல்லாது, விவசாயிகளையும், மத்தியதர வர்க்கத்தினரையும் கொண்டுள்ள பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அது மறைமுகமாக நடக்கும். அந்நாடுகளில் உள்ள விவசாயிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் பாட்டாளிகளாக மாறும் கட்டத்தில் உள்ளனர். அவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக மென்மேலும் பாட்டாளிகளில் தங்கியிருக்கும் நிலையில் உள்ள படியால் விரைவில் பாட்டாளிகளின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். இது சில நேரம் இரண்டாம் கட்ட போராட்டத்தை உருவாக்குவதுடன். கடைசியில் பாட்டளிவர்க்க வெற்றியில் சென்று முடியும். 

ஜனநாயகத்தை ஒரு அழுத்தம் கொடுக்கும் கருவியாக பயன்படுத்தா விட்டால் அது பாட்டாளிவர்க்கத்தினருக்கு பிரயோசனமாக இருக்காது. அந்த அழுத்தம் தனியார் சொத்துடைமையை தாக்குவதாகவும், பாட்டாளிவர்க்கத்தின் இருப்பை உறுதிப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இப்போதுள்ள உறவுகளில் ஏற்கனவே பின்விளைவுகளை உண்டாக்கி வருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பின்வருமாறு: 

1. தனியார் சொத்துடைமையை முற்போக்கான வரிகளின் மூலம் கட்டுப்படுத்துவது. மரபுவழிச் சொத்துக்களை பெற்றுத் கொள்ளும் வாரிசுகளுக்கு கடுமையான வரி விதிப்பு. சகோதரர்கள், மருமக்கள் என்ற வழிகளிலான வாரிசுரிமையை இரத்து செய்வது. கட்டாயக் கடன்கள் ஆகியன. 

2. பெரும் நிலவுடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில் மற்றும் கப்பல் கம்பனிகளின் உரிமையாளர்கள், ஆகியோரை படிப்படியாக சொத்துரிமை இல்லாதாக்குவது. இதனை ஒரு பக்கம் அரசு நிறுவனங்களின் போட்டி மூலமும், மறு பக்கம் பணப் பத்திரங்களாக (காசோலை போன்றது) நஷ்டஈடு கொடுப்பதன் மூலமும் செய்ய வேண்டும். 

3. பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது. 

4. உழைப்பை ஒழுங்கமைப்பது. அதாவது அரசுக்கு சொந்தமான நிலங்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள் போன்ற தேசிய நிறுவனங்களில் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்துவது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை ஒழிக்க முடியும். தனியார் தொழிலதிபர்கள் அப்போதும் இருந்தால், அரசு கொடுக்குமளவு அதிக ஊதியம் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட வேண்டும். 

5. தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும் வரையில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யும் கடமையை உருவாக்குதல். தொழிற்துறை ஊழியர் படைகள், குறிப்பாக விவசாயத்திலும் நிறுவப்பட வேண்டும். 

6. பண வணிகத்தையும், கடன் கட்டமைப்பையும் அரசின் கீழ் மையப் படுத்த வேண்டும். தேசிய வங்கி, அரசு முதலீடுகள் மூலம் தனியார் வங்கிகளையும், வங்கியாளர்களையும் ஒடுக்க வேண்டும். 

7. தேசிய தொழிற்சாலைகள், பணியிடங்கள், ரயில்பாதைகள், கப்பல்கள் என்பனவற்றை அதிகரிப்பது. அனைத்து விவசாய நிலங்களிலும் பயிர் செய்தல். மூலதனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில், ஏற்கனவே பயிரிடப்பட்ட அரசு நிலங்களை அதிகரிப்பது. 

8. தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடும் எல்லாப் பிள்ளைகளும் அரசு செலவில் அரசு நிறுவனங்களில் பராமரிக்கப் பட வேண்டும். கல்வி பொருள் உற்பத்தியுடன் இணைக்கப் பட வேண்டும். 

9. தொழிற்துறையிலும், விவசாயத்திலும் ஈடுபடும் குடியுரிமைச் சமூகங்களுக்கு பொதுவான குடியிருப்புகளாக தேசிய காணிகளில் பெரிய மாளிகைகள் கட்டப்பட வேண்டும். அவை நகர்ப்புற, நாட்டுப்புற வாழ்வியலின் நன்மைகளை கொண்டதாகவும், அவற்றின் எந்தவொரு சார்புத்தன்மையை, அல்லது பாதகத்தன்மையை கொண்டிராததாகவும் இருக்க வேண்டும். 

10. சுகாதாரமற்ற, மோசமாக கட்டப்பட்ட வீடுகளையும், நகரக் குடியிருப்புகளையும் இடித்துத் தகர்க்க வேண்டும். 

11. திருமண உறவுகளுக்கு வெளியே பிறந்த பிள்ளைகளுக்கும், முறையான மண உறவில் பிறந்த பிள்ளைகளுக்கு இருப்பதைப் போன்று ஒரே மாதிரியான வாரிசுரிமை வேண்டும். 

12. போக்குவரத்து துறை முழுவதும் அரசின் கைகளுக்கு வர வேண்டும். 

நிச்சயமாக இதையெல்லாம் ஒரே நாளில் நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. எப்படியோ ஒரு நடவடிக்கை மற்றதை பின்பற்றும். ஒரு தடவை, தனியார் சொத்துடைமை மீது தீவிரமான தாக்குதல் நடத்தினால், பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப் படும். அது மேலதிக மூலதனத்தை, விவசாயம் நிலம், தொழிற்துறை, போக்குவரத்து முழுவதையும் அரசின் கரங்களில் குவிக்க வைக்கும். எல்லா நடவடிக்கையும் அதை நோக்கியே இருக்கும். அத்துடன் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். இந்த வகையில் ஒரு மையப் படுத்தப் பட்ட விளைவுகள் வளர்ச்சி அடையும். அதனால் நாடளாவிய உற்பத்திச் சக்திகள், பாட்டாளிவர்க்கத்தினரின் உழைப்பின் மூலம் பல்கிப் பெருகும். இறுதியில் மூலதனம், உற்பத்தி முழுவதையும், பரிவர்த்தனைகளையும் அரசிடம் ஒருமுனைப் படுத்தும். அதனால், தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து விடும். பணம் தேவையற்றதாகி விடும். உற்பத்தி பன்மடங்கு பெரும். பழைய சமுதாயத்தின் கடைசி செயற்பாடும் இல்லாதொழிக்கப் படும் அளவிற்கு மனிதர்கள் மாறிவிட்டிருப்பார்கள். 



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, March 01, 2021

ஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்

த‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு.

 "சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா?" என்றெல்லாம் புத்திசாலித்த‌ன‌மாக‌ கேள்வி கேட்க‌லாம். ஆனால், ந‌டைமுறை வாழ்வில், எத்த‌னை பேர‌ழிவுக‌ள் வ‌ந்தாலும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் சாதிவாரியாக‌த் தான் பிரிந்திருப்பார்க‌ள்.

கொழும்பில், இன‌க்க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில், அக‌திக‌ளான‌ கொழும்புத் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌ முகாம்க‌ளில் சாதி வாரியாக‌ பிரிந்திருந்த‌னர். (1983 கலவரத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதி முகாமில் சாதி பார்த்த சம்பவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.) ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், யாழ் குடாநாட்டில் உள்ள‌ வ‌லிகாம‌ம் பிர‌தேச‌த்தில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து தென்ம‌ராட்சி சென்ற‌ அக‌திக‌ள் அங்கும் சாதிவாரியாக‌ பிரிந்து தான் த‌ங்கி இருந்த‌ன‌ர். இன்று போர் முடிந்த‌ பின்ன‌ரும் யாழ் குடாநாட்டில் மூட‌ப் ப‌டாத‌ முகாம் ஒன்றில் கணிச‌மான‌ அள‌வு அக‌திக‌ள் வாழ்வ‌த‌ற்கும் சாதி தான் கார‌ண‌ம்.

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன். தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366) 


இதைக் கண்டதும் சிலர் இப்படி ஒரு சாட்டுச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்: //கமால் குணரட்ன ஒரு சிங்கள ராணுவத்தினை சேர்ந்த ஒரு சிங்களன் , ஆகவே இது தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்...// 

யாழ்ப்பாண தமிழர்கள் மத்தியில் நிலவும் மோசமான சாதிப் பாகுபாடு உலகறிந்த விடயம். அதை கமால் குணரட்ன சொல்லித்தான் எமக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே யாழ்ப்பாண சமூகம் இப்படித்தான் இருந்து வருகின்றது. சாதிவெறியன் ஆறுமுகநாவலருக்கு யாழ் நகரில் சிலை வைத்திருப்பதே ஒரு சிறந்த ஆதாரம்.

மேலும், இந்த நூல் வெளிவந்த காலத்தில்(2016), "புலிகளின் தலைவர் பிரபாகரனை மெச்சும் தகவல்கள்" இருந்ததாக சொல்லி, தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் நந்திக்கடல் பாதை நூலுக்கு புகழாரம் சூட்டின. அன்று அவை பரப்பிய தகவல் இது:
//விடுதலைப் புலிகள் இயக்கம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் எதிர்பார்க்கப்படாத அதிகபட்ச நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறது....இராணுவத்தினருக்கு மூன்று தசாப்தங்களாக சவால் மிக்க எதிரியாக விளங்கியிருந்த போதிலும் பிரபாகரனின் பண்புகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நேர்மையாகவே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.// (பார்க்க: எதிரியையும் மெச்ச வைத்த புலிகளின் தலைமைத்துவம்

அ.யேசுராசா போன்ற‌ மெத்த‌ப் ப‌டித்த‌ க‌ல்வியாள‌ர்க‌ள் கூட‌ இவ்வாறு அப‌த்த‌மாக‌ப் பேசுகின்ற‌ன‌ர்: //ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்குள் சாதிப் பிரிவினை, வ‌ர்க்க‌ப் பிரிவினை உண்டாக்குவ‌து சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி!//

மூளை இருந்தால் யோசித்துப் பார்க்க‌ வேண்டும். எவ‌னாவ‌து க‌ண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு க‌ல்லெறிவானா?

சிங்க‌ள‌ ச‌மூக‌த்திற்குள் சாதிய‌/வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் இல்லையா? அந்த‌ விட‌ய‌ம் இன்னும் தெரியாது என்றால், உங்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு கூட‌ இல்லை என்று அர்த்த‌ம்.

ஒரு பேச்சுக்கு, இது சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி என்றே வைத்துக் கொள்வோம். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் செவ்வாய்க் கிர‌க‌த்தில் வாழ‌வில்லை. அவ‌ர்க‌ளும் இல‌ங்கை என்ற‌ சிறிய‌ தீவுக்குள் வாழ்கிறார்க‌ள்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் சாதிக‌ளாக‌, வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ பிரிந்து அடிப‌ட்டால், அது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் எதிரொலிக்காதா? அங்கேயும் சாதிய‌, வ‌ர்க்க‌ பிரிவினைக‌ள் உண்டாகாதா?

சாதிய‌, வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் தீவிர‌ம‌டைந்தால், இல‌ங்கை முழுவ‌தும் க‌ல‌க‌ங்க‌ள் வெடித்து அர‌சு க‌விழும் நிலைக்கு செல்லாதா? சிறில‌ங்கா அர‌சைக் க‌விழ்ப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா?

"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் த‌ம‌க்குள் முர‌ண்பாடுக‌ளை கொண்டிராத‌ இன‌ங்கள்" என்று நினைத்துக் கொள்வ‌த‌ற்குப் பெய‌ர் இன‌வாத‌ம். அது எந்த‌க் கால‌த்திலும் அர‌சுக்கு எதிரான‌து அல்ல‌. மாறாக‌, அர‌சைப் பாதுகாக்கிற‌து.