Tuesday, March 09, 2021

ஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளுக்கும் என்ன தொடர்பு?


இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு? 
ஆயுத விற்பனையால் கிடைக்கும் இலாபம்? இனப் பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்? 
இல்லை... 

யுத்தம் மூலம் மூன்றாமுலக நாடுகளை கடனாளிகளாக்கி, அவற்றை அடிமைப்படுத்தி வைத்திருத்தல் தான் உண்மையான நோக்கம். வங்கிகளில் நடக்கும் ஊழலை மையமாகக் கொண்டு The International என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜெர்மன், அமெரிக்க, பிரிட்டிஷ் கூட்டுத் தயாரிப்பில் உருவானது. 

படத்தின் கதையானது, எண்பதுகளில் நடந்த BCCI வங்கி ஊழலை நினைவுபடுத்தினாலும், சர்வதேச அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கற்பனையாக எழுதப்பட்டுள்ளது. லக்சம்பேர்க் நாட்டில் தலைமையகத்தை கொண்டுள்ள IBBC வங்கியில் நடக்கும் ஊழல் தான் கதை. 

வில்லன்களான வங்கி நிர்வாகிகள், தமக்கு எதிரானவர்களை ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டுகிறார்கள். ஒரு இன்டர்போல் அதிகாரி, கொலைகளுக்கான காரணங்களை ஆராயும் பொழுது தான், IBBC வங்கியின் பின்னணி தெரிய வருகின்றது. 

IBBC வங்கி ஆயுதத் தரகர்களை வைத்திருக்கிறது. லைபீரியா போன்ற மூன்றமுலக நாடுகளில், கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குகின்றது. சீனாவில் தயாரிக்கப் படும் துப்பாக்கிகளை வாங்கி யுத்தங்கள் நடக்கும் நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது. மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏவுகணைகளை விற்கின்றது. 

உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதக் குழுக்கள், கிரிமினல் கும்பல்களுடன் தொடர்புவைத்திருக்கும் IBBC வங்கிக்கு, அமெரிக்க அரசு, CIA கூட உறுதுணையாக இருக்கின்றன. ஆகையினால், அதற்கு எதிராக சட்டப் படி நடவடிக்கை எடுப்பது இயலாத காரியம். 

திரைப்படத்தின் முடிவில், இஸ்தான்புல் நகரில் வங்கியாளர்களின் கூட்டம் நடைபெறுகின்றது. அப்போது லக்சம்பேர்க் தலைமையக நிர்வாகியை கதாநாயகன் பின்தொடர்கிறான். இதற்கிடையே, வங்கி அனுப்பிய கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்ட இத்தாலி அரசியல்வாதி ஒருவரின் மகன், தலைமை நிர்வாகியை சுட்டுக் கொல்கிறான். 

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். 

No comments:

Post a Comment