Showing posts with label எங்கெல்ஸ். Show all posts
Showing posts with label எங்கெல்ஸ். Show all posts

Tuesday, March 02, 2021

ஜனநாயக வழியிலான சோஷலிசப் புரட்சி குறித்து எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 4)

(எங்கெல்ஸ் எழுதிய‌ க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள் தொட‌ர்ச்சி...) 


கேள்வி 16: த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு அமைதி வ‌ழியில் ந‌ட‌க்க‌ முடியாதா? 

ப‌தில்: அப்ப‌டி ந‌டந்தால் அதுவே விரும்ப‌த் த‌க்க‌து. க‌ம்யூனிஸ்டுக‌ள் இதை க‌டைசி வ‌ரையும் எதிர்க்க‌ மாட்டார்க‌ள். எல்லா சூழ்ச்சிக‌ளும் ப‌ய‌ன‌ற்ற‌வை, தீங்கு விளைவிப்ப‌வை என்ப‌தை க‌ம்யூனிஸ்டுக‌ள் அறிவார்க‌ள். புர‌ட்சிக‌ள் ஒருபோதும் முன்கூட்டிய‌ திட்ட‌மிட‌லில் த‌ன்னிச்சையாக‌ உருவாக்க‌ப் ப‌டுவ‌தில்லை என்ப‌து க‌ம்யூனிஸ்டுக‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். மாறாக‌ புர‌ட்சிக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் எல்லாக் கால‌ங்க‌ளிலும் உள்ள‌ புற‌ச்சூழ‌ல்களின் விளைவாக‌ இருந்துள்ள‌ன‌. அவை த‌னித்த‌னி க‌ட்சிக‌ள் ம‌ற்றும் அனைத்து வ‌ர்க்க‌ங்க‌ளில் இருந்தும் பூர‌ண‌ சுத‌ந்திர‌த்துட‌ன்‌ உள்ள‌ன‌. எல்லா நாக‌ரிக‌மைந்த‌ நாடுக‌ளிலும் பாட்டாளிக‌ளின் வ‌ள‌ர்ச்சி வ‌ன்முறை கொண்டு ஒடுக்க‌ப் ப‌டுவ‌தை அவ‌ர்க‌ள் காண்கிறார்க‌ள். அத‌னால் க‌ம்யூனிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் த‌ம‌து முழுப் ப‌ல‌த்தை பிர‌யோகித்து புர‌ட்சியை நோக்கி வ‌ழிந‌டாத்துவ‌தையும் காண்கிறார்க‌ள். இத‌ன் விளைவாக‌ ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ பாட்டாளி வ‌ர்க்க‌ம் இறுதியில் புர‌ட்சியை நோக்கி த‌ள்ள‌ப் ப‌ட்டால், க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் இப்போது சொல்வ‌தைப் போன்று பாட்டாளிக‌ளின் இல‌ட்சிய‌த்தை பாதுகாப்ப‌தை செய‌லில் காட்டுவோம். 

கேள்வி 17: தனியார் சொத்துடைமையை ஒரேயடியாக ஒழித்து விட முடியுமா? 

பதில்: ஏற்கனவே உள்ள உற்பத்தி சாதனங்களை ஒரேயடியாக பன்மடங்காக சமுதாயம் முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு மாற்றியமைக்க சாத்தியமில்லை.அது போன்று இதுவும் ஒரேயடியில் ஒழிப்பது சாத்தியமில்லை. பெருமளவு சாத்தியமாகி வருகின்ற பாட்டாளிவர்க்கப் புரட்சி சமுதாயத்தை படிப்படியாக மாற்றியமைக்கும். போதுமான அளவு உற்பத்திச் சாதனங்கள் உருவாக்கப்படும் பொழுது தான் தனியார் சொத்துடைமையை ஒழிக்க முடியும். 

கேள்வி 18: எந்தவொரு வளர்ச்சிப் பாதையின் ஊடாக இந்தப் புரட்சி சென்று கொண்டிருக்கும்? 

பதில்: அது முதலாவதாக ஜனநாயக அரசமைப்பாக இருக்கும். அதனால் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு வரும். பாட்டாளிவர்க்கத்தினர் சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள இங்கிலாந்தில் அது நேரடியாக நடக்கும். சனத்தொகையில் பெரும்பான்மை பாட்டாளிகளை மட்டுமல்லாது, விவசாயிகளையும், மத்தியதர வர்க்கத்தினரையும் கொண்டுள்ள பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அது மறைமுகமாக நடக்கும். அந்நாடுகளில் உள்ள விவசாயிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் பாட்டாளிகளாக மாறும் கட்டத்தில் உள்ளனர். அவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக மென்மேலும் பாட்டாளிகளில் தங்கியிருக்கும் நிலையில் உள்ள படியால் விரைவில் பாட்டாளிகளின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். இது சில நேரம் இரண்டாம் கட்ட போராட்டத்தை உருவாக்குவதுடன். கடைசியில் பாட்டளிவர்க்க வெற்றியில் சென்று முடியும். 

ஜனநாயகத்தை ஒரு அழுத்தம் கொடுக்கும் கருவியாக பயன்படுத்தா விட்டால் அது பாட்டாளிவர்க்கத்தினருக்கு பிரயோசனமாக இருக்காது. அந்த அழுத்தம் தனியார் சொத்துடைமையை தாக்குவதாகவும், பாட்டாளிவர்க்கத்தின் இருப்பை உறுதிப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இப்போதுள்ள உறவுகளில் ஏற்கனவே பின்விளைவுகளை உண்டாக்கி வருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பின்வருமாறு: 

1. தனியார் சொத்துடைமையை முற்போக்கான வரிகளின் மூலம் கட்டுப்படுத்துவது. மரபுவழிச் சொத்துக்களை பெற்றுத் கொள்ளும் வாரிசுகளுக்கு கடுமையான வரி விதிப்பு. சகோதரர்கள், மருமக்கள் என்ற வழிகளிலான வாரிசுரிமையை இரத்து செய்வது. கட்டாயக் கடன்கள் ஆகியன. 

2. பெரும் நிலவுடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில் மற்றும் கப்பல் கம்பனிகளின் உரிமையாளர்கள், ஆகியோரை படிப்படியாக சொத்துரிமை இல்லாதாக்குவது. இதனை ஒரு பக்கம் அரசு நிறுவனங்களின் போட்டி மூலமும், மறு பக்கம் பணப் பத்திரங்களாக (காசோலை போன்றது) நஷ்டஈடு கொடுப்பதன் மூலமும் செய்ய வேண்டும். 

3. பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது. 

4. உழைப்பை ஒழுங்கமைப்பது. அதாவது அரசுக்கு சொந்தமான நிலங்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள் போன்ற தேசிய நிறுவனங்களில் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்துவது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை ஒழிக்க முடியும். தனியார் தொழிலதிபர்கள் அப்போதும் இருந்தால், அரசு கொடுக்குமளவு அதிக ஊதியம் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட வேண்டும். 

5. தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும் வரையில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யும் கடமையை உருவாக்குதல். தொழிற்துறை ஊழியர் படைகள், குறிப்பாக விவசாயத்திலும் நிறுவப்பட வேண்டும். 

6. பண வணிகத்தையும், கடன் கட்டமைப்பையும் அரசின் கீழ் மையப் படுத்த வேண்டும். தேசிய வங்கி, அரசு முதலீடுகள் மூலம் தனியார் வங்கிகளையும், வங்கியாளர்களையும் ஒடுக்க வேண்டும். 

7. தேசிய தொழிற்சாலைகள், பணியிடங்கள், ரயில்பாதைகள், கப்பல்கள் என்பனவற்றை அதிகரிப்பது. அனைத்து விவசாய நிலங்களிலும் பயிர் செய்தல். மூலதனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில், ஏற்கனவே பயிரிடப்பட்ட அரசு நிலங்களை அதிகரிப்பது. 

8. தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடும் எல்லாப் பிள்ளைகளும் அரசு செலவில் அரசு நிறுவனங்களில் பராமரிக்கப் பட வேண்டும். கல்வி பொருள் உற்பத்தியுடன் இணைக்கப் பட வேண்டும். 

9. தொழிற்துறையிலும், விவசாயத்திலும் ஈடுபடும் குடியுரிமைச் சமூகங்களுக்கு பொதுவான குடியிருப்புகளாக தேசிய காணிகளில் பெரிய மாளிகைகள் கட்டப்பட வேண்டும். அவை நகர்ப்புற, நாட்டுப்புற வாழ்வியலின் நன்மைகளை கொண்டதாகவும், அவற்றின் எந்தவொரு சார்புத்தன்மையை, அல்லது பாதகத்தன்மையை கொண்டிராததாகவும் இருக்க வேண்டும். 

10. சுகாதாரமற்ற, மோசமாக கட்டப்பட்ட வீடுகளையும், நகரக் குடியிருப்புகளையும் இடித்துத் தகர்க்க வேண்டும். 

11. திருமண உறவுகளுக்கு வெளியே பிறந்த பிள்ளைகளுக்கும், முறையான மண உறவில் பிறந்த பிள்ளைகளுக்கு இருப்பதைப் போன்று ஒரே மாதிரியான வாரிசுரிமை வேண்டும். 

12. போக்குவரத்து துறை முழுவதும் அரசின் கைகளுக்கு வர வேண்டும். 

நிச்சயமாக இதையெல்லாம் ஒரே நாளில் நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. எப்படியோ ஒரு நடவடிக்கை மற்றதை பின்பற்றும். ஒரு தடவை, தனியார் சொத்துடைமை மீது தீவிரமான தாக்குதல் நடத்தினால், பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப் படும். அது மேலதிக மூலதனத்தை, விவசாயம் நிலம், தொழிற்துறை, போக்குவரத்து முழுவதையும் அரசின் கரங்களில் குவிக்க வைக்கும். எல்லா நடவடிக்கையும் அதை நோக்கியே இருக்கும். அத்துடன் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். இந்த வகையில் ஒரு மையப் படுத்தப் பட்ட விளைவுகள் வளர்ச்சி அடையும். அதனால் நாடளாவிய உற்பத்திச் சக்திகள், பாட்டாளிவர்க்கத்தினரின் உழைப்பின் மூலம் பல்கிப் பெருகும். இறுதியில் மூலதனம், உற்பத்தி முழுவதையும், பரிவர்த்தனைகளையும் அரசிடம் ஒருமுனைப் படுத்தும். அதனால், தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து விடும். பணம் தேவையற்றதாகி விடும். உற்பத்தி பன்மடங்கு பெரும். பழைய சமுதாயத்தின் கடைசி செயற்பாடும் இல்லாதொழிக்கப் படும் அளவிற்கு மனிதர்கள் மாறிவிட்டிருப்பார்கள். 



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, December 18, 2020

பொருளாதார நெருக்கடி குறித்த "க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள்", பகுதி - 3

 (எங்கெல்ஸ் எழுதிய‌ க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள், தொட‌ர்ச்சி...) 


கேள்வி  12: தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட மேலதிக விளைவுகள் என்ன?

பதில்: 
பெருந் தொழிற்துறை நீராவி இயந்திரம் மற்றும் பிற இயந்திரங்களை சாதனங்களாக்கி, குறுகிய காலத்திற்குள், சொற்ப வளங்களைக் கொண்டு,  பன்மடங்கு பெருகிய, முடிவில்லாத பொருள் உற்பத்தியை சாத்தியமாக்கியது. 

இந்த பெருந் தொழிற்துறையில் இருந்து உருவான சுதந்திரமான போட்டியானது, இலகுபடுத்தப் பட்ட பொருளுற்பத்தி காரணமாக ஒரு பயங்கரமான குணவியல்பை  பெற்றுக் கொண்டது. பெருமளவிலான முதலாளிகள் பெருந் தொழிற்துறையில் ஈடுபட்டு மிகக் குறுகிய காலத்திற்குள் பாவனைக்குள்ளாக்கியதை விட அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்தனர். அதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்க முடியவில்லை. அதனால் வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் விடயம் உருவானது. தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டன. தொழிலதிபர்கள் திவாலானார்கள். தொழிலாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடினார்கள். எல்லா இடங்களிலும் பேரவலம் தோன்றியது. 

சில காலங்களுக்குப் பின்னர் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்கப் பட்டன. தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. சம்பளம் உயர்ந்தது. அதனால் வர்த்தகம் படிப்படியாக முன்பை விட நல்ல நிலைக்கு வந்தது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பெருமளவு பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டன. புதிய நெருக்கடி உருவானது. அது மீண்டும் மிகச் சரியாக முந்திய நெருக்கடி போன்றே நடந்தது. அதனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொழிற்துறை நிலைமையானது நல்ல காலத்திற்கும் நெருக்கடி காலத்திற்கும் இடையில் ஊசலாடியது. ஐந்து அல்லது ஏழு வருடங்களுக்கொரு தடவை பெரும்பாலும் ஒழுங்காக இந்த நெருக்கடி வந்து கொண்டிருந்தது. அது மீண்டும் ஒவ்வொரு தடவையும் தொழிலாளர்களின் பேரவலத்துடன் பிணைக்கப் பட்டிருந்தது.  அது பொதுவான புரட்சிகர தூண்டுதலாகவும், நிலைத்திருக்கும் அமைப்பு முழுவதற்குமான பெரும் அபாயமாகவும் இருந்தது. 

கேள்வி 13: மீண்டும் மீண்டும் நிக‌ழும் பொருளாதார‌ நெருக்க‌டிக‌ளை டொட‌ர்ந்து என்ன‌ ந‌ட‌க்கும்?

ப‌தில்: 

முத‌லாவ‌தாக‌; 

- பெரும் தொழிற்துறை த‌ன‌து வ‌ள‌ர்ச்சிக் க‌ட்ட‌த்தின் ஆர‌ம்ப‌ கால‌ங்களில் சுத‌ந்திர‌மான‌ போட்டியை கொண்டு வ‌ந்திருந்த‌ போதிலும், த‌ற்போது அதைக் க‌ட‌ந்து வ‌ந்து விட்ட‌து. 

- சுத‌ந்திர‌மான‌ போட்டியும், ஒரு சில‌ தனி ந‌ப‌ர்களால் நிர்வ‌கிக்க‌ப் ப‌டுவ‌தும் தொழிற்துறை உற்ப‌த்தியை பொறுத்த‌வ‌ரையில் ஒரு சிறைக்கூட‌மாக‌ மாறி விட்ட‌து. இதை அவர்க‌ள் உடைக்க‌ வேண்டும் அல்ல‌து உடைப்பார்க‌ள். 

- பெரும் தொழிற்துறை இதே நிலைமையில் சென்று கொண்டிருந்தால், ஏழு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை மீண்டு வ‌ரும் பொதுக் குழ‌ப்ப‌ம் மூல‌ம் ம‌ட்டுமே த‌ன்னை நிலைநிறுத்திக் கொள்ள‌ முடியும். 

- இது மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த‌ நாக‌ரிக‌த்தையும் அச்சுறுத்துவ‌துட‌ன், பாட்டாளிக‌ளை துன்ப‌த்தில் த‌ள்ளுவ‌து ம‌ட்டும‌ல்லாது பெரும‌ள‌வு முத‌லாளிக‌ள‌யும் அழிக்கிற‌து. 

- அத‌னால் பெரும் தொழிற்துறை முற்றாக‌ கைவிட‌ப் ப‌ட‌ வேண்டும். ஆனால் இது சாத்திய‌ம‌ற்ற‌ விட‌ய‌ம். - அத‌னால் அவர்க‌ள் ஒரு புதிய‌ ச‌முதாய‌க் க‌ட்ட‌மைப்பை அவசிய‌மாக்குகிறார்க‌ள். இத‌ன் மூல‌ம் ஒன்றுட‌ன் ஒன்று போட்டியிடும் த‌னிப்ப‌ட்ட‌ தொழிற்சாலைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ச‌முதாயம் முழுவ‌தும் ஒரு நிர‌ந்த‌ர‌மான திட்ட‌த்தின் கீழ் அனைவ‌ருக்குமான‌ தேவைக‌ளை பூர்த்தி செய்யும் வ‌கையில் தொழிற்துறை உற்ப‌த்தியை வ‌ழி ந‌ட‌த்தும். 

இர‌ண்டாவ‌தாக‌; 

- பெரும் தொழிற்துறையும் அத‌னால் சாத்திய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ உற்ப‌த்தியின் முடிவுறாத‌ விரிவாக்க‌மும், வாழ்வாதார‌த்திற்கு அவசிய‌மான‌ அனைத்து பொருட்க‌ளையும் உற்ப‌த்தி செய்யும் சமுதாய‌த்தை உருவாக்கி உள்ள‌து. 

- அத‌னால் ஒவ்வொரு ச‌மூக‌ உறுப்பின‌ரும் த‌ன‌து ச‌க்தியை ஆற்ற‌லையும் பூர‌ண‌ சுத‌ந்திர‌த்துட‌ன் ப‌ய‌ன்ப‌டுத்த முடியும். 

- இன்றைய‌ ச‌மூக‌த்தில் துன்ப‌ங்க‌ள‌யும், வ‌ர்த்தக நெருக்க‌டிக‌ளையும் உருவாக்கிய‌ அதே பெரும் தொழிற்துறை, இன்னொரு ச‌முதாய‌க் க‌ட்ட‌மைப்பையும் உருவாக்கி துன்ப‌ங்க‌ளையும் நெருக்க‌டிக‌ள‌யும் அழித்தொழிக்கும். 

இத‌னால் தெளிவாக‌ நிரூபிக்க‌ப் ப‌டுவ‌தான‌து: 

1. இன்று முத‌ல் இந்த‌த் தீமைக‌ள் அனைத்தையும், இனிமேலும் சாத்தியமில்லாத‌ ஒரு ச‌மூக‌ அமைப்பின் த‌ன்மைக‌ள் என்று குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டும். 

2. இந்த‌ தீமைக‌ளை முற்றாக‌ அக‌ற்றுவ‌த‌ற்கான‌, ஒரு புதிய‌ சமுதாய‌ அமைப்பை உருவாக்குவ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளும் இங்கே உள்ள‌ன‌. 


கேள்வி 14: இந்த‌ புதிய‌ ச‌முதாய‌ம் எத்த‌கைய‌ அடிப்ப‌டையைக் கொண்டிருக்க‌ வேண்டும்?

ப‌தில்: 

- அவர்க‌ள் அனைத்து தொழிற்துறை நிர்வாக‌த்தையும், உற்ப‌த்திப் பிரிவுக‌ளையும் த‌ம‌து கைக‌ளில் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். 

- த‌னிப்ப‌ட்ட‌ முறையில், ஒருவ‌ரோடொருவ‌ர் போட்டியிடும் த‌னிந‌ப‌ர்க‌ளுக்கு ப‌திலாக‌, ஒரு பொதுச் ச‌மூக‌ம் உற்ப‌த்திப் பிரிவுக‌ளை பொறுப்பெடுக்க‌ வேண்டும். 

- அத‌ன் அர்த்த‌ம், பொதுச் ச‌மூக‌த்தின் க‌ண‌க்கில், ஒரு ச‌மூக‌த் திட்ட‌த்தின் கீழ் அனைத்து ச‌மூக‌ உறுப்பின‌ர்களும் ப‌ங்கெடுக்கும் வ‌கையில் இருக்க‌ வேண்டும். 

- அதாவது தனி நபர் போட்டியை இல்லாதொழித்து விட்டு, அத‌ற்குப் ப‌திலாக‌ அனைவரதும் கூட்டு ஒத்துழைப்பை வேண்டி நிற்கும். 

- இன்று நாம் நேரில் காண‌க் கூடிய‌வாறு, தொழிற்துறை நிர்வாக‌ம் தனி ந‌ப‌ர்களின் கைக‌ளில் இருப்ப‌தால் அத‌ன் விளைவாக‌  தனியுடைமையும் உள்ள‌து.

- போட்டி என்ப‌து,  த‌னிப்ப‌ட்ட‌ த‌னியார் உரிமையாள‌ர்கள் த‌ம‌து தொழிற்துறையை நிர்வ‌கிக்கும் முறையாகிற‌து. 

- அத‌னால் தொழிற்துறையின் த‌னி ந‌ப‌ர் நிர்வாக‌ம், போட்டிக‌ளில் இருந்து, தனியார் சொத்துடைமையை பிரிக்க‌ முடியாது. 

- த‌னியார் சொத்துடைமை இல்லாதொழிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். 

- அந்த‌ இட‌த்தில் அனைத்து உற்ப‌த்திக் க‌ருவிக‌ளையும் பொதுச் ச‌மூக‌த்தின் ப‌ய‌ன்பாட்டுக்கு விட‌ வேண்டும். 

- எல்லா உற்ப‌த்திப் பொருட்க‌ளையும் பொதுச் ச‌மூக‌ உட‌ன்பாட்டின் அடிப்ப‌டையில் பிரித்துக் கொடுக்க‌ வேண்டும்.

- இன்னொரு வித‌மாக‌ சொன்னால் "பொது உடைமைச் ச‌முதாய‌ம்"* வ‌ர‌ வேண்டும். 

(*எனது குறிப்பு: மூல‌ நூலில் "பொருட்க‌ளின் ச‌மூக‌ம்" என்று உள்ள‌து. இது பொது உடைமை என்ற அர்த்த‌தில் எழுத‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும். எங்கெல்ஸ் இந்த‌ நூலை வெளியிட‌ முன்ன‌ர் த‌யாரித்து வைத்த‌ "க‌ம்யூனிச‌ வாக்குமூல‌த் திட்ட‌ம்" என்ற‌ பிர‌தியிலும் அந்த‌ச் சொல் அடிக்க‌டி ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து. அத்துட‌ன், க‌ம்யூனிச‌ம் என்ப‌து ஒரு பிரெஞ்சு சொல் ஆகும்.)

- த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு என்ப‌து, ஒரு ச‌மூக‌ப் புர‌ட்சிக்கான‌ மிக‌வும் சுருக்க‌மான‌ குறிப்பிட‌த் த‌க்க‌ தொகுப்புரை ஆகும். 

- இது தொழிற்துறை வ‌ள‌ர்ச்சியில் இருந்து தோன்றும் அவ‌சிய‌மான‌ கோரிக்கை என்ப‌தால்,  க‌ம்யூனிஸ்டுக‌ளின் முன்நிப‌ந்த‌னையாக‌ உள்ள‌து. 

இன்று நாம் காணும், "தனியார் சொத்துடைமை" வரலாற்றில் முன் எப்போதும் இருக்கவில்லை. அது முதலாளித்துவத்தின் விளைவு.

 

கேள்வி 15: அப்ப‌டியானால் த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு கட‌ந்த‌ காலங்க‌ளில் சாத்திய‌ம‌ற்ற‌தாக‌ இருந்த‌தா?

ப‌தில்:

ஆம். ச‌மூக‌ ஒழுங்க‌மைப்பின் ஒவ்வொரு மாற்ற‌மும், சொத்துடைமை உற‌வுகளின் ஒவ்வொரு புர‌ட்சியும், புதிய‌ உற்ப‌த்திச் ச‌க்திக‌ளை கொண்டு வ‌ருவ‌தற்கு தேவைப் ப‌ட்ட‌ன‌. இவை ப‌ழைய‌ சொத்துடைமை உற‌வுக‌ளுட‌ன் பொருந்த‌ விரும்ப‌வில்லை. த‌னியார் சொத்துடைமை அவ்வாறு தான் பிற‌ந்த‌து. ஏனென்றால் த‌னியார் சொத்துடைமை எல்லாக் கால‌ங்க‌ளிலும் இருந்திருக்க‌வில்லை.

ம‌த்திய‌ கால‌த்தின் இறுதிக் கால‌த்தில் ப‌ட்ட‌றைத் தொழில் மூல‌ம் புதிய‌ உற்ப‌த்திமுறைக‌ள் உருவாக்கப் ப‌ட்ட‌ போது, அது முன்பிருந்த‌ நில‌ப்பிர‌புத்துவ, கைவினைஞ‌ர் உரிம‌த்தின் கீழ் அடிப‌ணிய‌ விரும்ப‌வில்லை. பழைய‌ சொத்துடைமை உற‌வுக‌ளில் இருந்து உற்ப‌த்தித் துறையான‌து புதிய‌ சொத்துடைமை வ‌டிவ‌த்தை கொண்டு வ‌ந்த‌து. அதுவே த‌னியார் சொத்துடைமை ஆகும். உற்ப‌த்தி துறைக்கும், பெரும் தொழிற்துறையின் ஆர‌ம்ப‌கால‌ வ‌ள‌ர்சிக் க‌ட்ட‌த்திலும், த‌னியார் சொத்துடைமை த‌விர்ந்த‌ வேறெந்த‌ சொத்துரிமை முறையும் சாத்திய‌மாக‌ இருக்க‌வில்லை. இந்த‌ ச‌மூக‌ அமைப்பை த‌விர வேறெதுவும் த‌னியார் சொத்துரிமையில் த‌ங்கி இருக்க‌வில்லை. 

(என‌து விள‌க்க‌வுரை: நில‌ப்பிர‌புத்துவ‌ கால‌த்தில் சொத்துக்க‌ள் வாரிசுரிமை அடிப்ப‌டையில் கிடைத்த‌ன‌. அவற்றை பெரும்பாலும் வாங்குவ‌தும் விற்ப‌தும் சாத்திய‌ம‌ற்ற‌து. முத‌லாளித்துவ‌ கால‌த்தில் தான் காசுள்ள‌ யாரும் வாங்கலாம் என்ற உரிமை கிடைத்த‌து. எங்கெல்ஸ் இதைத் தான் த‌னியார் சொத்துரிமை என்கிறார்.)


- போதுமான‌ அள‌வு உற்ப‌த்தி செய்ய‌ப் படாத‌ கால‌ம் வரையில்...

 - அதாவ‌து எல்லோருக்கும் போதுமான‌ அளவு இருக்க‌வில்லை என்றால்...

- அதே நேர‌ம் ச‌மூக‌ மூல‌த‌ன‌த்தை பெருக்க‌வும் உற்பத்தி ச‌க்தியை அதிக‌ரிக்க‌வும் போதுமான‌ அள‌வுக்கு 

மித‌மிஞ்சிய‌ பொருட்க‌ள் எஞ்சி இருக்குமானால்...

- இவை கால‌ம் முழுவ‌தும் ச‌மூக‌ உற்பத்திக‌ளில்  மேலாதிக்க‌ம் செலுத்தும் என்றால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ வறுமையான‌ வ‌ர்க்க‌மும் இருக்க‌வே செய்யும். 

இந்த‌ வர்க்க‌ங்கள் எவ்வாறு காட்சிய‌ளிக்கும் என்ப‌தை உற்ப‌த்தியின் வள‌ர்ச்சிக் க‌ட்ட‌ம் தான் தீர்மானிக்கும். 

விவ‌சாய‌த்தை ந‌ம்பி இருந்த‌ ம‌த்திய‌கால‌ க‌ட்ட‌ம் எம‌க்கு பிர‌புக்க‌ளையும், ப‌ண்ணைய‌டிமைக‌ளையும் கொடுத்த‌து. 

பிந்திய‌ ம‌த்திய‌ கால‌க‌ட்ட‌ம் எம‌க்கு கைவினைத் தொழில‌திப‌ர்களையும், கூலியாட்க‌ள‌யும் காட்டியது.

17ம் நூற்றாண்டு எம‌க்கு உற்ப‌த்தி தொழில் முனைவோரையும், அது சார்ந்த‌ தொழிலாள‌ர்களையும் காட்டியது. 

19ம் நூற்றாண்டு பெரும் தொழில் அதிப‌ர்க‌ளையும், பாட்டாளிக‌ள‌யும் காட்டிய‌து. 

இதில் தெளிவான‌ விட‌ய‌ம் என்ன‌வெனில்,  எல்லோருக்கும் போதுமான‌ அள‌வு உற்ப‌த்தி செய்ய‌ப் ப‌ட்டிருந்தால், உற்ப‌த்திச் ச‌க்திக‌ள் அந்த‌ள‌வு தூர‌ம் வ‌ள‌ர்ச்சி அடைந்திருக்க‌ முடியாது.

அத‌னால், த‌னியார் சொத்துரிமை இந்த‌ உற்ப‌த்தி ச‌க்திக‌ளுக்கு ஒரு கூண்டாக‌வும், த‌டையர‌ணாக‌வும்  இருந்திருக்கும். 

த‌ற்போது பெரும் தொழிற்துறை வ‌ள‌ர்ச்சி கார‌ண‌மாக‌;

1. மூல‌த‌ன‌மும், உற்ப‌த்தி ச‌க்தியும் முன்னொருபோதும் அறிந்திராத‌ அள‌வுக்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்டுள்ள‌துட‌ன், குறுகிய‌ கால‌த்தில் இவ‌ற்றை முடிவுறாத‌ அள‌வு பெருக்குவ‌த‌ற்கு தேவையான‌ வ‌ள‌ங்க‌ளும் உள்ள‌ன‌. 

2. இந்த‌ உற்ப‌த்தி ச‌க்திக‌ள் குறைந்த‌ள‌வு முத‌லாளிக‌ளின் கைக‌ளில் குவிந்துள்ள‌ன‌. அதே நேர‌ம் பெரும்பான்மை ம‌க்க‌ள் பாட்டாளிக‌ள் ஆகிறார்க‌ள். முத‌லாளிக‌ளின் செல்வ‌ம் பெரிதாகும் பொழுது, பாட்டாளிக‌ளின் நிலைமை அதே அள‌வுக்கு துன்ப‌க‌ர‌மான‌தாக‌வும், ச‌கிக்க‌ முடியாத‌தாக‌வும் மாறுகிற‌து. 

3. சிற‌ப்பாகவும், இல‌குவாக‌வும் பெருக்க முடிந்த‌ த‌னியார் உடைமைக‌ளும், முத‌லாளித்துவ‌மும் தலைக்கு மேலே வ‌ள‌ர்ந்து விட்ட‌ன‌. 

ஒவ்வொரு த‌ட‌வையும் ச‌மூக‌ ஒழுங்கில் விய‌க்க‌த் த‌க்க‌ த‌ட‌ங்க‌ல்க‌ளை உண்டாக்குகின்ற‌ன‌.

அத‌னால் இப்போது த‌னியார் உடைமையை ஒழிப்ப‌தை சாத்திய‌மாக்குவ‌து ம‌ட்டும‌ல்லாது, அதை முற்றுமுழுதான‌ தேவையாக‌வும் மாற்றியுள்ள‌து.


****

முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

புலம்பெயர்ந்த தமிழருக்கு பொருந்தும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (பகுதி - 2) 

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1  

Sunday, December 13, 2020

இதுவரை தமிழில் வெளிவராத எங்கெல்சின் எழுத்துகள்

எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூல் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை தரலாம் என நினைக்கிறேன்.

இதனை தமிழில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் அந்த மொழி பெயர்த்து இருந்தாலும் இதன் சரியான மொழி பெயர்ப்பு "கம்யூனிசத்தின் அடிப்படைகள்" (ஜெர்மன் மொழியில்: Grundsaetze des Kommunismus) என்று இருக்க வேண்டும். 

இந்த நூல் தோன்றக் காரணமாக இருந்த வரலாற்று சம்பவங்கள் குறித்த விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தகவல்கள் தமிழில் மிக மிக அரிதாகவே காணக் கிடைக்கின்றன.

1836 ஆம் ஆண்டு, போர்க்குணாம்சம் மிக்க ஜெர்மன் தொழிலாளர்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி நியாய வாதிகளின் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அது பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் சங்கம் என்று அழைக்கப்படலாயிற்று. சில வருடங்களுக்குப் பின்னர் லண்டனை தளமாகக் கொண்டு அந்த அமைப்பு இயங்கி வந்தது. 
 
அன்று அவர்கள் தமது அமைப்புக்கு ஒரு பொதுவான செயல் திட்டம் தேவை என்பதை உணர்ந்தார்கள். அது பிற்காலத்தில் கம்யூனிசத்தின் அடிப்படை நூலாக பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்பினார்கள். அந்த அடிப்படை நூலானது கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தால் அதை விவாதத்திற்கு விடுவதுடன், சுருக்கமாகவும் தெளிவாகவும் செழுமைப் படுத்த முடியும் என நம்பினார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தம்மை கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், என்று அழைத்துக் கொண்டவர்கள் பெரும்பாலும் ஒரு கற்பனாவாத சோசலிச கொள்கையைத் தான் பின்பற்றினார்கள். விஞ்ஞான ரீதியான அணுகுமுறை மிகக்குறைவாக இருந்தது. ஆகவே அன்றைய நியாயவாதிகளின் சங்கத்திலும் கற்பனாவாத சோசலிஸ்ட்களின் தாக்கம் பெருமளவு இருந்தமை தெரியவருகின்றது.

1846 ஆண்டளவில் இதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் விஞ்ஞானபூர்வமான சோசலிச கோட்பாடுகளை எழுதி வெளியிட்டு வந்தனர். அவர்கள் கம்யூனிச தொடர்பு கமிட்டி என்ற பெயரில் தமது எழுத்துப் பிரதிகளை வெளியிட்டு பாட்டாளிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முயன்றனர். இந்த கமிட்டியின் சார்பாக நியாயவாதிகளின் சங்கத்துடன் விவாதங்களில் ஈடுபட்டனர். மறுபக்கத்தில் அந்த நியாயவாதிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கற்பனாவாத சோசலிசத்தின் தாக்கத்திலிருந்து விடுபட விரும்பினார்கள்.

1847, தீர்மானகரமான முடிவுகளை எடுக்கும் ஆண்டாக அமைந்திருந்தது. லண்டன் நியாயவாதிகள் சங்க செயற் குழுவை சேர்ந்த ஜோசப் மோல், சங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக பாரிஸ், பிரசல்ஸ் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தார். அவர் அப்போது அங்கிருந்த மார்க்சையும், எங்கெல்சையும் சந்தித்து, தமது சங்கத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அடுத்து நடக்கவுள்ள மகாநாட்டில் அவர்கள் தமது கோட்பாட்டு விளக்கங்களை செயல்திட்டம் ஆக்குவதற்கான வரைபுகளை முன்வைக்கலாம் என்று கூறினார். மார்க்சும் எங்கெல்சும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிறு கிளைக் குழுக்களாக பல நாடுகளிலும் நகரங்களிலும் வாழ்ந்தனர். இதனால் இரண்டு மகாநாடுகள் நடத்தி மார்க்ஸ், எங்கெல்சின் முன்மொழிவுகள் மீது விவாதங்கள் நடத்தி, இறுதியான செயற்திட்டம் அல்லது புதிய யாப்பு எழுதப் பட வேண்டும் என தீர்மானித்தனர்.

1847 ஆம் ஆண்டு ஜூன் இரண்டு முதல் ஒன்பதாம் தேதி வரையிலான காலப்பகுதியில் லண்டனில் முதலாவது மாநாடு நடந்தது. இந்த மகாநாட்டின் போது இன்னமும் பலர் கற்பனாவாத சோஷலிச கொள்கைகளை கைவிடவில்லை என்பது தெரியவந்தது.

இந்த மகாநாட்டில் கம்யூனிஸ்ட் வாக்குமூலத்திற்கான வரைபு என்ற ஒரு நகல் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலாகவும் உருவானது. அந்த வரைபில் உள்ள பல கேள்வி பதில்கள் இந்த நூலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடலாம். தற்போது பாவனையில் உள்ள கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில், கேள்வி 22 கேள்வி 23 ஆகியவற்றுக்கு பதில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக "இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் அந்த மகாநாட்டின் முன்மொழியப்பட்ட "கம்யூனிச வாக்குமூலத்தின் வரைபு" என்ற பிரதியில் எழுதப்பட்டுள்ளது. (அதை நான் ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். பின்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூல் பற்றிய எனது விளக்கவுரையில் அந்தக் கேள்வி வரும் போது அதற்கான பதிலை சொல்லி விடுகிறேன்.)

உண்மையில் அன்று நடந்த விவாதங்கள் தான் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, கம்யூனிசத்தின் அடிப்படைகள் ஆகிய இரண்டு சிறிய நூல்கள் வெளிவரக் காரணமாக அமைந்திருந்தன.

கம்யூனிச வாக்குமூலத்தின் வரைபு என்ற கையெழுத்துப் பிரதி தொலைந்து போயிருந்தது. நீண்ட காலமாக யாராலும் கவனிக்காமல் படாமல் கைவிடப் பட்டிருந்தது. அது கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் தொகுப்பு நூல்களில் இடம் பெறவில்லை. அது பிற்காலத்தில் அந்த சங்கத்தின் ஜேர்மன், ஹம்பூர்க் கிளையை சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. உறுப்பினரின் மறைவுக்குப் பின்னர் அவரது உறவினர்கள் அந்தப் பிரதியைத் ஹம்பூர்க் நூலகத்திற்கு கொடுத்து விட்டனர்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக யார் கண்ணிலும் படாமல் இருந்த அந்த பிரதி, தற்செயலாக நூலக வேலையாட்கள் ஆவணப்படுத்தும் போது கண்டெடுக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் வெளியிடப்பட்ட அந்த பிரதி உடனடியாக பெர்லினில் புதிதாக தொகுக்கப் பட்ட கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூலிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1847 ஜூன் மாதம் நடந்த நியாயவாதிகள் சங்க மகாநாட்டில் எங்கெல்ஸ் முன்மொழிந்த விஞ்ஞானபூர்வமான சோசலிச கோட்பாடுகளை அந்த சங்கத்தின் செயலதிபர் வில்லெம் வோல்ஃப் ஆதரித்தார்.

அந்த மாநாட்டில் தான் "அனைத்துலக பாட்டாளிகளை ஒன்று சேருங்கள்" என்ற கோஷம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அந்த சங்கத்தின் பெயரும் "கம்யூனிஸ்டுகளின் சங்கம்" என மாற்றப்பட்டது.

எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ வாக்குமூலத்தின் வரைபு விவாதத்திற்கு விடப்பட்ட நேரம் கற்பனாவாத சோசலிசம் பற்றிய சில கருத்துகளும் இருந்தன. அதனால் மேற்படி வரைபிலிருந்த சில பகுதிகள் பின்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில் இல்லாதிருப்பதை அவதானிக்கலாம்.

நியாயவாதிகள் சங்கத்தின் கிளைக் குழுக்களில் நடந்த தொடர்ச்சியான விவாதங்களின் பின்னரும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முன்வைத்த திருத்தங்களின் பின்னரும், 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி லண்டனில் இரண்டாவது மாநாடு ஒன்று கூடியது. விஞ்ஞானபூர்வமான சோசலிசம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அதைச் ஏற்படுத்தப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய இரண்டு நூல்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வெறுமனே மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துக்கள் மாத்திரமல்ல, அது ஒரு கட்சிகள் நீண்ட காலமாக நடந்த விவாதங்களின் விளைவு ஆகும். விவாதங்கள் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தன. இவற்றின் விளைவாகத்தான் கம்யூனிஸ்டுகளின் சங்கம் என்ற முதலாவது புரட்சிகர பாட்டாளிகளின் அமைப்பு தோற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்தக் கட்டுரை குரல் பதிவாக You Tube பில் உள்ளது.

Saturday, December 12, 2020

புலம்பெயர்ந்த தமிழருக்கு பொருந்தும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (பகுதி - 2)

 

(எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், தொடர்ச்சி...) 

கேள்வி 6: தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த தொழிலாளர் வர்க்கங்கள் எவை? 

பதில்: ஆளும் வர்க்கம் அல்லது சொத்துடைமை வர்க்கத்தை சார்ந்து நின்ற தொழிலாளர் வர்க்கங்கள், சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், வெவ்வேறான நிலைமைகளிலும், வெவ்வேறான உறவுகளுடனும் இருந்துள்ளன. பண்டைய காலங்களில் தொழிலாளர்கள் சொத்துடைமையாளர்களின் அடிமைகளாக இருந்தனர். அவர்கள் இப்போதும் அதே நிலைமையில் சில பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்காவின் தென் பகுதியிலும் வாழ்கின்றனர்.

மத்திய காலங்களில் அவர்கள் நிலவுடைமை பிரபுக்களுக்கு பண்ணையடிமையாக இருந்தார்கள். இப்போதும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யாவில் அந்த நிலைமை உள்ளது. மத்திய காலத்திலும், தொழிற்புரட்சி நடக்கும் வரையிலும் நகரங்களில் கைவினைத் தொழில் செய்த குட்டி முதலாளிய சிறு தொழிலதிபர்கள் கீழ் வேலை செய்த பணியாளர்கள் இருந்தனர். பெரும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியினால், மிகப் பெரிய முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப் பட்ட ஆலைத் தொழிலாளர்கள் மெல்ல மெல்ல உருவானார்கள்.

கேள்வி 7: எவ்வாறு ஒரு பாட்டாளி தன்னை அடிமையிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்கிறான்?

பதில்: ஓர் அடிமை ஒரே தடவையில் நிரந்தரமாக விற்கப் பட்டு விடுகிறான். ஆனால் ஒரு பாட்டாளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தன்னைத் தானே விற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தனிப்பட்ட அடிமை ஒரேயொரு எஜமானின் சொத்து ஆவான். அந்த எஜமானின் நலைனை ஒட்டியே, அது எவ்வளவு இன்னல் மிக்கதாக இருந்த போதிலும், அவனால் உத்தரவாதம் அளிக்கப் பட்ட இருப்பைக் கொண்டிருக்கிறான். அதற்கு மாறாக, ஒரு தனிப்பட்ட பாட்டாளி, ஒட்டு மொத்த முதலாளிய வர்க்கத்தினதும் சொத்தாக இருப்பதால், யாருக்காவது தேவைப் படும் போது மட்டுமே அவனது உழைப்பு வாங்கப் படுகிறது. அதனால் ஒரு பாட்டாளிக்கு இருப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. இந்த இருப்புக்கான உத்தரவாதமானது ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தினால் மட்டுமே வழங்கப் பட முடியும்.

ஓர் அடிமை போட்டிகளுக்கு வெளியே நிற்கிறான். ஆனால் ஒரு பாட்டாளி போட்டிக்கு உள்ளே நிற்பதுடன், அதன் ஏற்ற இறக்கங்களையும் உணர்கிறான். ஓர் அடிமை பொருளாகவே கருதப் படுவானே தவிர, (ஒரு தேசத்தின்) குடியுரிமை கொண்ட சமூகத்தின் உறுப்பினராக கருதப் படுவதில்லை. அதற்கு மாறாக ஒரு பாட்டாளி குடியுரிமைச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப் படுகிறான். இதன் மூலம் ஓர் அடிமை பாட்டாளியை விட நல்ல நிலையில் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பாட்டாளி ஒரு வளர்ச்சி அடைந்த சமுதாயத்திற்கு உரியவன். அதனால் அடிமையை விட மேலான படி நிலையில் நிற்கிறான். அடிமையானவன், குறிப்பாக அடிமை முறை சார்ந்த தனியார் சொத்துடைமையை மட்டும் உடைப்பதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதன் மூலம் தானாகவே பாட்டாளியாக மாறுகிறான். தனியார் சொத்துடைமையை முற்று முழுதாக இல்லாதொழிப்பதன் மூலமே ஒரு பாட்டாளி தன்னை விடுதலை செய்து கொள்ள முடியும்.

கேள்வி 8: ஒரு பாட்டாளி பண்ணை அடிமையிடமிருந்து எவ்வாறு தன்னை வேறு படுத்திக் கொள்கிறான்? 

ப‌தில்: 

1. ஒரு ப‌ண்ணை அடிமை சிறு துண்டு நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறான். அதில் வேலை செய்வதுடன், அதனால் கிடைக்கும் விளைச்சலில் ஒரு பகுதியை கொடுத்து விடுகிறான். அதற்கு மாறாக பாட்டாளி இன்னொருவனுக்கு சொந்தமான உற்பத்தி சாதனங்களை கொண்டு வேலை செய்து, அதனால் கிடைக்கும் வருமான‌த்தில் ஒரு ப‌குதியை பெற்றுக் கொள்கிறான். 

2. ஒரு ப‌ண்ணை அடிமை கொடுக்கிறான். பாட்டாளி கொடுக்க‌ப் ப‌டுகிறான். 

3. ஒரு ப‌ண்ணை அடிமைக்கு உத்த‌ர‌வாத‌மான‌ இருப்பு உள்ள‌து. பாட்டாளிக்கு அது இல்லை. 

4. பண்ணை அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளி அதற்குள் நிற்கிறான். 

5. ஒரு பண்ணை அடிமை நகரத்திற்கு சென்று கைவினைத் தொழில் செய்வதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். ஒரு பண்ணை அடிமை நிலப்பிரபுவுக்கு தனது உழைப்பையும், பொருட்களையும் கொடுப்பதற்கு பதிலாக பணத்தை கொடுத்து சுதந்திரமான குத்தகைக் காரராக மாற முடியும். நிலப்பிரபுவை விரட்டி விட்டு நிலத்தை தானே சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம், அல்லது வேறெந்த வழியிலாவது சொத்துடைமை வர்க்கமாகி போட்டியில் பங்கெடுக்க முடியும். ஒரு பாட்டாளி தனியுடைமையையும், வர்க்க முரண்பாடுகளையும் ஒழிப்பதன் மூலம் தன்னைத் தானே விடுவித்துக் கொள்கிறான்.

(அடுத்த கேள்வி பற்றிய சிறு குறிப்பு: புலம்பெயர்ந்த நாடுகளில் பாட்டாளிவர்க்கமாக வாழும் தமிழர்கள், ஊரில் தமக்கிருந்த பரம்பரை சொத்துக்களை எண்ணி எங்குவதைக் கண்டிருக்கிறேன். 150 வருடங்களுக்கு முன்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில் எங்கெல்ஸ் அதற்கான தத்துவார்த்த விளக்கம் கொடுத்துள்ளார்:)


கேள்வி 10: ஒரு பாட்டாளி பட்டறைத் தொழிலாளியிடம் இருந்து எவ்வாறு தன்னை வேறுபடுத்திக் கொள்கிறான்?

பதில்: பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பட்டறைத் தொழிலாளி குடும்பக் கைத்தறி போன்ற உற்பத்திக் கருவிகளை சொந்தமாக வைத்திருந்தான். அத்துடன் ஓய்வு நேரத்தில் வேலை செய்வதற்கான சிறு துண்டு விவசாய நிலமும் சொந்தமாக இருந்தது. ஒரு பாட்டாளியிடம் இது எதுவுமே கிடையாது. 

- ஒரு பட்டறைத் தொழிலாளி எப்போதும் நாட்டுப் புறத்தில் வாழ்வதுடன் தனது நிலப்பிரபு அல்லது தொழில் வழங்குனருடன் ஏறத்தாழ ஒரு தந்தை வழி சமூக உறவுகளை பேணி வருகிறான். 

- அதற்கு மாறாக ஒரு பாட்டாளி பெரும்பாலும் பெரிய நகரங்களில் வாழ்வதுடன் தனது தொழில் வழங்குனருடன் ஒரு தூய பண உறவை மட்டுமே பேணி வருகிறான். 

- பட்டறைத் தொழிலாளி பெரும் தொழிற்துறையால் அவனது தந்தை வழி உறவுகளில் இருந்து துண்டிக்கப் படுகிறான். அவன் தனது சொத்துக்களை இழந்து அதனூடாக தானாகவே ஒரு பாட்டாளியாக மாறி விடுகிறான்.*

(எனது குறிப்பு: *கடைசி வரி அப்படியே இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பொருந்துவதை அவதானிக்கலாம்.)


(அடுத்த கேள்வி பற்றிய சிறு குறிப்பு: இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல், வளர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை வசதிகள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் தோற்றம் குறித்து எங்கெல்ஸ்.)


கேள்வி 11: தொழிற்புரட்சியாலும், சமுதாயத்தை முதலாளிகள், பாட்டாளிகள் என்று பிரித்தமையாலும் ஏற்பட்ட நேரடி விளைவுகள் என்ன?


பதில்: 

1. முதலாவதாக;

- எல்லா உலக நாடுகளிலும் பழைய முறை பட்டறைத் தொழில், அல்லது கைவினைஞர்களின் தொழிற்துறை யாவும் எந்திரங்களினாலும், தொடர்ச்சியாக குறைந்து வரும் தொழிற்துறைப் பொருட்களின் விலைகளினாலும் அழித்தொழிக்கப் பட்டன. 

- இந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இருந்து முடிந்த அளவுக்கு தனிமைப் பட்டிருந்த குறை விருத்தி நாடுகளும், அவற்றின் தனிமை நிலையில் இருந்து பலவந்தமாக இழுத்தெடுக்கப் பட்டன. அவை ஆங்கிலேயரின் மலிவான பொருட்களை வாங்கியதுடன், தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்கள் அழிந்து போக இடமளித்தன. 

- ஆயிரமாயிரம் வருடங்களாக எந்த முன்னேற்றமும் கண்டிராத இந்தியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டன. சீனாவும் கூட ஒரு புரட்சியை நோக்கிச் செல்கிறது. 

- அது எந்தளவு தூரம் வந்துள்ளது என்றால், இன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு புதிய இயந்திரம், ஒரு வருடத்திற்குள் சீனாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அன்றாட உணவைப் பறிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

- இந்த வகையில் பெரும் தொழிற்துறையானது இந்தப் பூமியின் அனைத்து மக்களையும் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள வைத்துள்ளது. 

- சிறிய உள்ளூர் சந்தைகளை ஓர் உலகச் சந்தையுடன் ஒன்றாகப் பிணைத்துள்ளது. எல்லா இடங்களிலும் நடக்கும் நாகரிகம், முன்னேற்றம் எந்தளவு தூரம் வந்திருக்கிறது என்றால், வளர்ந்த நாடுகளில் நடப்பன யாவும் பிற நாடுகளிலும் நடைமுறைக்கு வர வேண்டும். 

- ஆகையினால் இங்கிலாந்து, பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் தம்மைத் தாமே விடுதலை செய்து கொண்டால், அதற்கு முந்தியோ பிந்தியோ சம காலத்திலும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள்.

2. இரண்டாவதாக;

- எல்லா இடங்களிலும், பெரும் தொழிற்துறை பட்டறைத் தொழிலுக்கு பதிலாக வந்த இடத்தில், முதலாளித்துவம் தனது செல்வத்தையும், அதிகாரத்தையும் அதி உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், தன்னை அந்த நாட்டில் முதலாவது வர்க்கமாக மாற்றிக் கொண்டுள்ளது. 

 - இதன் விளைவாக, இது எங்கெல்லாம் நடந்ததோ, அங்கெல்லாம் முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. நிலப்பிரபுக்கள், கைவினைஞர்களை பிரதிநிதித்துவப் படுத்திய எல்லாம் வல்ல முடியாட்சியையும் தூக்கி எறிந்தது. நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அழித்தொழித்த முதலாளித்துவம், அன்னியமாக்க முடியாத சொத்துக்களையும், பிரபுக்களின் முன்னுரிமைகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 

- கைவினைஞர் சங்கங்களின் சிறப்புரிமைகளை இரத்து செய்ததன் மூலம் கைவினைஞர்களின் அதிகாரத்தை இல்லாதொழித்தது. - அந்த இடத்தில் சுதந்திரமான போட்டியை கொண்டு வந்தது. அதாவது ஒவ்வொருவரும் தான் விரும்பிய தொழிற் துறைப் பிரிவை தெரிவு செய்து செயற்படும் சமூக நிலைமையை உருவாக்கியது. போதுமான நிதி மூலதனத்தை தவிர வேறெதுவும் அவரைத் தடைசெய்யாது. 

- சுதந்திரமான போட்டியை அறிமுகப் படுத்தியதன் மூலம், இன்று முதல் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அவர் வைத்திருக்கும் மூலதன அளவில் மட்டுமே சமமற்ற தன்மையில் இருப்பார்கள் என்று பிரகடனப் படுத்தியது. - மூலதனம் தான் தீர்மானகரமான சக்தி. முதலாளிகளே சமுதாயத்தில் முதலாவது வர்க்கமாகி விட்டனர். 

 - சுதந்திரமான போட்டி பெரும் தொழிற்துறைக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் அத்தகைய சமுதாய சூழ்நிலையில் மட்டுமே பெரும் தொழிற்துறை உருவாக முடியும். - முதலாளித்துவமானது நிலப்பிரபுக்களின், கைவினைஞர்களின் அதிகாரத்தை அழித்த பின்னர், அது அரசியல் அதிகாரத்தையும் அழித்தது. 

- அது தன்னை சமுதாயத்தின் முதலாவது வர்க்கமாக உயர்த்திக் கொண்டதும், அரசியல் ரீதியாகவும் தான் ஒரு முதலாவது வர்க்கம் என்று அறிவித்துக் கொண்டது. - சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றும், சுதந்திரமான போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியும், ஒரு பிரதிநிதித்துவ அமைப்பின் ஊடாக முதலாளித்துவம் இதை சாதித்துக் கொண்டது. 

- அது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சியை கொண்டு வந்தது. இந்த முறையின் கீழ் குறிப்பிட்டளவு மூலதனம் வைத்திருந்த ஒரு சிலர் மட்டுமே வாக்குரிமை பெற்றுக் கொண்டனர். அதாவது முதலாளித்துவ வாக்காளர்கள் மட்டுமே பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் அவர்கள் தமக்கு வரிச் சலுகை கொடுக்கும் ஒரு முதலாளித்துவ அரசை ஏற்றுக் கொண்டனர்.

3. மூன்றாவதாக;

 - எல்லா இடங்களிலும் அது எவ்வாறு முதலாளிகளை உருவாக்கியதோ, அதே மாதிரி பாட்டாளிகளையும் உருவாக்கியது. 

- இந்த உறவின் மூலம், முதலாளிகள் எந்தளவு பணக்காரர்கள் ஆனார்களோ, அதே மாதிரி பாட்டாளிகளும் பெருகினார்கள். ஏனென்றால் மூலதனம் மட்டுமே பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்த முடியும் என்பதாலும், உழைப்பை பயன்படுத்தும் போது தான் மூலதனம் பெருகும் என்பதாலும், மூலதனம் பெருகும் போதெல்லாம் பாட்டாளிகளும் பெருகுகின்றனர். 

- அதே நேரம், இது தொழிற்துறை இலாபகரமான முறையில் வளரக் கூடிய நகரங்களை நோக்கி முதலாளிகளையும், பாட்டாளிகளையும் ஒன்றாக நகர்த்துகிறது. இவ்வாறு பெருமளவு மக்களை ஒரே இடத்தில் குவிப்பதால், பாட்டாளிகள் தமது பலத்தை உணர்ந்து கொள்கின்றனர். 

- மேலும், அது எந்தளவு அதிகமாக விருத்தி அடைகின்றதோ, அந்தளவுக்கு புதுப்புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு குடிசைக் கைத்தொழில்கள் அழிக்கப் பட்டு விடும். ஏற்கனவே கூறிய படி, அது கூலியை குறைந்த அளவிலிருந்து கீழ் நோக்கித் தள்ளுவதால் பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமை மென்மேலும் சகிக்க முடியாததாக மாறுகிறது. 

- இவ்வாறாக, அது ஒரு பக்கம் பாட்டாளிகளின் அதிருப்தியை உருவாக்கிய போதிலும், மறுபக்கம் பாட்டாளிகளின் வல்லமையை வளர்ப்பதுடன், ஒரு சமுதாயப் புரட்சிக்கும் வழிவகுக்கிறது.


Wednesday, December 02, 2020

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1

கேள்வி 1: கம்யூனிசம் என்றால் என்ன?

பதில்: கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் பற்றிய படிப்பு.(எங்கெல்ஸ்)

விளக்கவுரை: இதை ஜேர்மன் மூல மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறேன். (ஏற்கனவே தமிழில் உள்ள நூலில் "விமோசனத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை" என்றுள்ளது.) பாட்டாளி வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் (இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 3வது கேள்வியில் உள்ளது) இன்றைய முதலாளித்துவ காலகட்டத்திலும் அடிமைப் பட்டே கிடக்கிறது. அதன் விடுதலையை நோக்கிய படிமுறைகள் பற்றிய படிப்பு கம்யூனிசம் எனப்படும். சுருக்கமாக: உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாடு.

கேள்வி 2: பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பதில்: பாட்டாளி வர்க்கம் என்பது தனது உழைப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் மட்டுமே வாழ்க்கை நடாத்தும் ஒரு சமூகப் பிரிவாகும். இலாபத்தில் இருந்தோ அல்லது வேறெந்த மூலதனத்திலும் இருந்தோ அதற்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. அதன் இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், உழைப்புக்கான கேள்வியில் தங்கியுள்ளது. எனவே அது வியாபாரத்தின் நல்ல காலம், கெட்ட காலம், கடிவாளமற்ற போட்டியின் விளைவான ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் தங்கியுள்ளது. பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகளின் வர்க்கம் என்னவென்று ஒரே சொல்லில் சொன்னால், அது 19ம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கமாகும்.(எங்கெல்ஸ்)

எனது விளக்கவுரை: 

இன்று நாம் காணும் உழைப்பாளிகளின் வர்க்கமானது 19ம் நூற்றாண்டில் உருவான தோற்றப்பாடு ஆகும். (இது தொடர்பான வசனம் தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை.) சொத்துடைமை வர்க்கமான முதலாளிகள் உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருப்பதால், பாட்டாளிகள் தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலைமை உள்ளது. தொழிற் சந்தையில் அவர்களது உழைப்புக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையானது வியாபாரத்தின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு கூடிக் குறையலாம். பாட்டாளிகளின் வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும் தொழிற் சந்தையில் தங்கியுள்ளன.

கேள்வி 3: பாட்டாளிகள் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள் அல்லவா? 

 பதில்: இல்லை. ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினர் பெரும்பாலும் ஏழைகளாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது குறிப்பிடப் பட்ட நிலைமைகளின் கீழ் முன்னொருபோதும் கட்டற்ற சுதந்திரமான போட்டி இருக்கவில்லை. அதே மாதிரி தொழிலாளர்கள், ஏழைகளான பாட்டாளிகளும் இதற்கு முன்பு வாழ்ந்திருக்கவில்லை.

எனது விளக்கவுரை: பாட்டாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்கெல்ஸ் இங்கே விளக்குகிறார். தொழிலாளர்கள், உழைப்பாளிகள் வரலாறு முழுவதும் இருந்து வந்துள்ளனர். அவர்கள் எழைகளாகவும் இருந்தனர். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் முதலாளித்துவ காலகட்டத்திற்குரிய கட்டற்ற சுதந்திரமும் போட்டியும் முன்னொருபோதும் இருக்கவில்லை. ஆகவே பாட்டாளிகளும் இருந்திருக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் சமூக அந்தஸ்து, முந்திய வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து மாறுபட்டது. இந்த விசேட தன்மை காரணமாக பாட்டாளிகள் என அழைக்கப் படுகின்றனர்.

கேள்வி 4: பாட்டாளி வர்க்கம் எவ்வாறு உருவானது?

பதில்: 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்திலும், பிற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உருவானது. நீராவி இயந்திரம், விசைத்தறி போன்ற கண்டுபிடிப்புகளின் பின்னர் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதிக விலை கொண்ட இந்த இயந்திரங்களை பெரிய முதலாளிகள் மட்டுமே வாங்க முடிந்தது. இது இதற்கு முன்பிருந்த உற்பத்தி முறையை மாற்றி அமைத்தது.இயந்திரங்கள் தொழிலாளர்களை விட மலிவாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்த படியால் பெருமளவு தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். 

இந்த இயந்திரங்கள் தொழிற்துறை முழுவதையும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டன. முன்பு தொழிலாளர்கள் சொந்தமாக தொழில் நடத்த உதவிய கருவிகள், கைத்தறிகள் பயனற்றவை ஆகின. இவ்வாறாக முதலாளிகளிடம் எல்லாம் இருந்தன. தொழிலாளர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. துணி நெய்வதில் ஆலை உற்பத்தி முறை புகுத்தப் பட்டதும். அது பின்னர் அச்சகம், மட்பாண்டத் தொழில், உலோகத் தொழில் என்று அனைத்தையும் இயந்திரமயமாக்கியது. தனித்தனியான தொழிலாளர்களுக்கு இடையில் தொழிற் பிரிவினை செய்யப் பட்டது. இதனால் முன்பு ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்த தொழிலாளி இன்று அந்தப் பொருளின் ஒரு பகுதியை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உருவானது. இந்த வேலைப் பிரிவினையானது ஒரு பொருளை விரைவாக உற்பத்தி செய்யவும், மலிவாகக் கொடுக்கவும் உதவியது.

ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பையும் மிக இலகுவான, திரும்பத் திரும்ப செய்யும் இயந்திரத்தனமான பணியாக மாற்றியது. இதை ஓர் இயந்திரம் மிகச் சிறப்பாக செய்ய முடியும். இந்த முறையில் நெசவு, நூற்பாலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீராவி இயந்திரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இவ்வாறு அனைத்தும் பெரிய முதலாளிகளின் கைகளில் வந்தன. இதனால் இங்கும் தொழிலாளர்கள் தமது எஞ்சியிருந்த சுதந்திரத்தையும் இழந்தனர். பட்டறைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாவும் ஆலைத் தொழிற்துறையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் மூலம் பெரிய முதலாளிகள் பெரிய பட்டறைகள் அமைத்து, உற்பத்தி செலவைக் குறைத்து, வேலைப் பிரிவினை செய்ய முடிந்தது. இதனால் சிறிய முதலாளிகள் அழிந்து போயினர்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் அனைத்து சிறு கைத்தொழில் உற்பத்தியும் பெரிய ஆலைத் தொழிற்துறையின் கீழ் வந்தது. இதன் மூலம் இதுவரை காலமும் இருந்த நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக சொன்னால் சிறு கைத்தொழில் முதலாளிகள் மென்மேலும் அழிக்கப் பட்டனர்.

முன்பிருந்த தொழிலாளர்களின் நிலைமை முற்றாக மாற்றமடைந்து இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின. அவை ஏனைய வர்க்கங்களை உள்வாங்கின. அவையாவன:

1. பெரிய முதலாளிகளின் வர்க்கம். எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் அனைத்து வாழ்வாதாரங்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் கருவிகளையும் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இந்த வர்க்கமானது மேட்டுக்குடியினர் வர்க்கம் அல்லது பூர்ஷுவா என்றும் அழைக்கப் படுகிறது.

2. எந்த சொத்தையும் வைத்திராத, அத்தியாவசிய வாழ்வதாரங்களை பெற்றுக் கொள்வதற்காக, முதலாளிகளுக்கு தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள். இந்த வர்க்கமானது பாட்டாளிகளின் வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் என அழைக்கப் படுகின்றது.

கேள்வி 5: எந்த நிபந்தனைகளின் கீழ் முதலாளிகளுக்கான பாட்டாளிகளின் உழைப்பு விற்பனை இடம்பெறுகிறது?

பதில்: உழைப்பும் ஒரு பண்டம் தான். ஏனைய பண்டங்களின் விலை எந்த விதிகளின் படி தீர்மானிக்கப் படுகிறதோ, சரியாக அதே மாதிரித் தான் உழைப்பின் விலையும் தீர்மானிக்கப் படுகிறது. பெரிய தொழிற்துறை அல்லது சுதந்திரமான போட்டி என்பனவற்றின் மேலாதிக்கத்தின் கீழ், ஒரு பண்டத்தின் விலை சராசரியாக அதன் உற்பத்தி செலவுக்கு சமமாக இருக்கும். அதாவது உழைப்பின் உற்பத்தி செலவுக்கு சமமாகத் தான் அந்த உழைப்பின் விலையும் இருக்கும்.

உழைப்பின் உற்பத்தி செலவானது, அந்தத் தொழிலாளி உழைப்பதற்கு தேவையான உணவாதாரங்களை பெற்றுக் கொள்ளும் அளவிற்கும், தொழிலாளர் வர்க்கம் அழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவிலும் தான் இருக்கும். அதாவது இந்த நோக்கத்தை நிறைவேற்ற தேவையான அளவை விட அதிகமாக ஒரு தொழிலாளியின் உழைப்புக்கு கிடைக்க மாட்டாது. ஆகவே உழைப்பின் விலை அல்லது கூலி என்பது, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கான மிகக் குறைந்த அளவு தொகையாகவே இருக்கும்.

வியாபாரம் சில நேரம் நன்றாகவும், சில நேரம் மோசமாகவும் நடக்கலாம். அப்படியான நிலையில் தொழிலதிபர் தனது பண்டத்திற்கு சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைவாகவும் பெறுவதைப் போன்று தான், தொழிலாளிக்கும் அதிகமாகவும் குறைவாகவும் கிடைக்கும். ஆனால் ஆலை முதலாளியின் பண்டத்திற்கு கூடவும் இல்லாமல், குறையவும் இல்லாமல் சராசரியாக கிடைத்து வந்தால், தொழிலாளிக்கும் அவரது அடிப்படை கூலிக்கு கூடாமல் குறையாமல் சராசரி தான் கிடைக்கும். பெருந் தொழிற்துறை அனைத்து தொழில்களையும் ஆதிக்கம் செலுத்தும் போது, கூலி தொடர்பான பொருளாதார விதியும் கடுமையாக அமுல்படுத்தப் படும்.



(பிற்குறிப்பு: ஏற்கனவே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பை ஜேர்மன் மொழி மூல நூலுடன் ஒப்பிட்டு இந்த விளக்கவுரையை எழுதி உள்ளேன். புரிதலுக்காக சில இடங்களில் எளிமைப் படுத்தி இருக்கிறேன்.)

Tuesday, January 03, 2017

டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றிய மார்க்சிய கண்ணோட்டம்


மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம். அது வழமையாக பாடசாலைகளில் கற்பிக்கப் படும் அதே விஞ்ஞான பாடம் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. பிரிட்டனின் உயிரியல் விஞ்ஞானி சார்ல்ஸ்   டார்வின் எழுதிய மனிதனின்  பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, எவ்வாறு மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக   அமைந்தது என்பதை இந்தக் கட்டுரையில்  பார்க்கலாம்.

குறைந்தது பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள், குரங்கில் இருந்து மனிதன் தோன்றியது பற்றிய கூர்ப்புக் கொள்கையை அறிவியல் பாடத்தில் கற்றிருப்பார்கள். மார்க்சிய ஆசான்களில் ஒருவரான பிரெடெரிக் எங்கெல்ஸ், பரிணாமக் கொள்கை தொடர்பாக மேலும் ஆய்வு செய்து, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைக் காலத்தில், உழைப்பு வகித்த பாத்திரம் விடுபட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

பிரெடெரிக் எங்கெல்ஸ் அது பற்றிய நூலொன்றை எழுத விரும்பியிருந்தார். ஆயினும் அந்த முயற்சி கைகூடவில்லை. அதற்கென எழுதிய முன்னுரையை பின்னர் தனியாக வெளியிட்டார். அதுவே "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" என்ற சிறு பிரசுரம் ஆகும். மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஆரம்ப கட்ட மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது. இலகுவான மொழிநடையில் எழுதப் பட்டுள்ள மிகச் சிறிய நூல்.

1859 ம் ஆண்டு, பிரிட்டிஷ் உயிரியல் விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் "இயற்கைத் தேர்வின் மூலம் வகையினங்களின் தோற்றம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலை வாசித்த எங்கெல்ஸ், தனது நண்பன் கார்ல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் "இந்நூல் நமது கண்ணோட்டங்களுக்கு இயற்கை வரலாற்று அடிப்படையை தரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

டார்வின் எழுதிய இன்னொரு நூலான "மனிதனின் தோற்றமும் பால் தேர்வும்" என்ற நூல், 1871 ம் ஆண்டு லண்டனில் வெளியானது. அது அன்றைய பழமைவாத பிரிட்டனில் அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தது. மேட்டுக்குடியினரும், கத்தோலிக்க திருச்சபையினரும் காழ்ப்புணர்வுடன் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். "மனித இனம் இயற்கையாக தோன்றியது. அது கடவுளால் படைக்கப் படவில்லை." என்பதை டார்வினின் விஞ்ஞான நூல்கள் ஆதாரத்துடன் நிறுவி இருந்தன. அது தான் கிறிஸ்தவ திருச் சபையினரின் எதிர்ப்புக்கு காரணம். மிக சமீபத்தில், 2016 ம் ஆண்டு தான், வத்திக்கான் திருச்சபை டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது.

காலநிலையில் பெரிய மாற்றம் இல்லாத, வெப்ப வலையத்திற்குள் அடங்கிய இந்து சமுத்திர பிராந்தியம் ஒன்றில் மனிதக் குரங்குகள் மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருக்கலாம். உரோமங்களால் மூடப்பட்ட, மரங்களின் மீது கூட்டங்களாக வாழ்ந்த நமது மூதாதையர் பற்றிய டார்வினின் வர்ணனை அவ்வாறு ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் தனது அவதானிப்பை செலுத்திய எங்கெல்ஸ் "மரமேறுதல் என்பது கை,கால்களுக்கு வித்தியாசப் பட்ட தொழில்களை பகிர்ந்து விடுகிறது..." என்று குறிப்பிடுகின்றார். மேலும், அந்த மனிதக் குரங்குகள் தட்டையான நிலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் பொழுது படிப்படியாக கைகளை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட்டு நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தன.

//உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் அவசியமாகவும் ஆயிற்று. இதற்குள்ளாக, கைகளுக்கு பல்வேறு வகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது புரியும்.// - எங்கெல்ஸ், "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" நூலில்.

"கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே." என்கிறார் எங்கெல்ஸ். காட்டுமிராண்டி கால ஆதி மனிதன் கூட கற்களையும், தடிகளையும் ஆயுதமாக பயன்படுத்தத் தெரிந்திருந்தான். கை சுதந்திரமடைந்ததன் மூலம் அது மேலும் மேலும் நுண் திறனை பெற்றது. அதற்கான தசைகளும், எலும்புகளும் பரிணாம வளர்ச்சி கண்டன.

இந்த மாற்றங்கள் பல இலட்சம் வருடங்களாக நடந்திருக்கலாம். மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம் தோன்றுவதற்குள் இலட்சக் கணக்கான ஆண்டுகள் கடந்திருந்தன. முதலில் உழைப்பு, அதன் பிறகு அத்துடன் சேர்ந்த பேச்சு,முக்கியமாக இரண்டு கைகளின் செயற்பாடுகள் காரணமாக, மனிதக் குரங்கின் மூளை மனிதனின் மூளையாக மாறியது.

மிருகங்கள் தமது சுற்றாடலில் கிடைக்கும் உணவை மட்டும் தேடிக் கொள்வதுடன் நில்லாது, அவற்றை உணவை விரயம் செய்கின்றன. உதாரணத்திற்கு, பெண் மானை பிடித்து உண்ணும் ஓநாய், அதை விட்டு வைத்தால் அதன் குட்டிகள் தனக்கு உணவாகும் என்று நினைப்பதில்லை. புற்கள் முளைக்கும் போதே சாப்பிட்டு விடும் வெள்ளாடுகள், அந்தப் பிரதேசத்தை பசுமையின்றி வெறிச்சோட வைக்கின்றன. மிருகங்களின் இந்த "சூறையாடும் பொருளாதாரம்" காரணமாக பல இனங்கள் அழிந்து விட்டன.

மனிதக் குரங்கில் இருந்து மனிதனாக மாறிய எமது மூதாதையர், சூறையாடும் பொருளாதாரம் காரணமாக உணவு தேடி இடம்பெயர்ந்து சென்றதுடன், உணவுக்கான செடிகளை விட்டு வைக்கவும் அறிந்து கொண்டனர். ஆனால், இவை அத்தனையும் நடந்திருந்தும் அது உழைப்பு என்ற சொல்லுக்கான பொருளைப் பெற்று விடவில்லை. ஆதி மனிதன் தனக்குத் தேவையான உழைப்புக் கருவிகளை செய்யத் தொடங்கியதில் இருந்தே உழைப்பு ஆரம்பமாகின்றது.

மனிதன் சில கருவிகளைக் கொண்டு வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அறிந்து கொண்டான். அதாவது, வேட்டையாடுதல், மீன்பிடித்தல் என்றால், மனிதன் தாவர உணவை உட்கொள்வதில் இருந்து விலகி இறைச்சியை உண்ணத் தொடங்கி இருந்தான் என்று பொருளாகும். இறைச்சி உணவு முக்கியமான இரண்டு புதிய முன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது. அதனால் தான் மனிதன் நெருப்பை பயன்படுத்தவும், மிருகங்களை பழக்கவும் கற்றுக் கொண்டான். மேலும் ஊட்டச் சத்து மிக்க பாலும் மனிதனின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது.

ஒரு மிருகம் தனது சுற்றாடலில் உள்ள இயற்கையை பயன்படுத்த மட்டுமே செய்கின்றது. ஆனால், மனிதன் அதற்கு எஜமான் ஆகிறான். இயற்கையை தனது குறிக்கோள்களுக்காக ஊழியம் செய்ய வைக்கிறான். சாராம்சத்தில், இதர மிருகங்களுக்கும், மனிதனுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே. இந்த வித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பு என்பதை மீண்டும் ஒரு தடவை குறிப்பிட வேண்டும்.

இயற்கையை மனிதன் வெற்றி கொண்டாலும், ஒரு கட்டத்தில் இயற்கை மனிதனை பழிவாங்கி விடுகின்றது. காடுகளை அழிக்கும் மனிதன் அதனால் ஏற்படும் வரட்சி போன்ற தீய விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பின்னர் தான், உருளைக் கிழங்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமாகியது. அன்றில் இருந்து உருளைக்கிழங்கு ஐரோப்பியரின் முக்கியமான உணவுப் பொருளாகியது.

ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை பரவ வைத்தவர்கள் கண்டமாலை என்ற நோய் பரவவும் காரணமாக இருந்தனர். அயர்லாந்து மக்கள் உருளைக்கிழங்கை மட்டுமே அன்றாட உணவாக நம்பி இருந்தனர். அந்த நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு உருளைக்கிழங்கு பயிரில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக இருந்தது. அதன் விளைவாக, பத்து இலட்சம் பேரை புதைகுழிக்கு அனுப்பவும், இருபது இலட்சம் பேரை அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்லவும் வைத்தது.

"இயற்கையில் எதுவும் தனிமைப் பட்ட நிலையில் நிகழ்வதில்லை. ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப் படவும் செய்கிறது." இவ்வாறு எங்கெல்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதி இருக்கிறார். (மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம், பக்கம் 16) ஆனால், இன்றும் அதன் தாக்கம் பல இடங்களில் எதிரொலிக்கிறது. ஆப்பிரிக்காவில் வரட்சி நிலவினால், இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் வெள்ளம் வரக் காரணமாக அமைகின்றது.

இன்று உலக நாடுகள் ஒன்று கூடி சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி விவாதிக்கின்றன. புவி வெப்பமடைதல், கரியமில வாயு (CO2) குறைப்பு பற்றி உச்சி மகாநாடுகள் நடக்கின்றன. இதையெல்லாம் நேரில் கண்ட பின்னரும், சில அரைவேக்காட்டு "அறிவுஜீவிகள்" மார்க்சிய "நமது காலத்திற்கு ஒத்து வராத வறட்டுவாதம்" என்று நிராகரிப்பதானது, அவர்களது அறியாமையை காட்டுகின்றது. அவர்கள் தமது வாழ்க்கையில் எதையும் கற்றிருக்கவில்லை, இனியும் படிக்கப் போவதுமில்லை.


எங்கெல்ஸ் எழுதிய பிற நூல்கள் பற்றிய அறிமுகம்:

Tuesday, August 11, 2015

இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூல்


பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய, "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றி, இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் பதிவு செய்யப் படவில்லை. அதனால் இன்று வரைக்கும் உலகப் புகழ் பெற்ற மாபெரும் இலக்கியங்களில் ஒன்றாக போற்றப் படுகின்றது.

19 ம் நூற்றாண்டில், தொழில் துறை வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களில் சேரிகளும் பெருகின. தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், எந்த வசதியுமற்ற வீடுகளில், கழிவுகள், குப்பைகளுக்கு நடுவில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். அது தொழிற் புரட்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை, எங்கெல்ஸ் இந்த நூலில் விரிவாகக் கூறுகின்றார்.

இன்றைய காலகட்டத்தில் ஏழைகளின் வாழ்க்கையை சித்தரிக்கும், சினிமாக்கள், நாவல்கள் தாராளமாக வெளிவருகின்றன. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் அது குறித்து அக்கறை கொண்டவர்கள் மிகக் குறைவு. பிரான்சில் விக்டர் ஹியூகோ Les Misérables (ஏழை படும் பாடு) என்ற நாவலை எழுதினார். இவ்வாறு குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே, ஏழைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர்.

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூல், ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வாசிப்பதற்கு எளிமையாக, ஒரு நாவல் போன்று எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் இதிலே எதுவுமே கற்பனை அல்ல. அந்தக் காலங்களில் இருந்த இங்கிலாந்தின் நிலைமை, இன்றுள்ள வறிய நாடுகளின் நிலைமை மாதிரி, அல்லது அதை விட மோசமானதாக இருந்தது. 

நெருக்கமான குடியிருப்புகள். ஒடுக்கமான தெருக்கள். அகற்றப்படாத குப்பைகளும், மனிதக் கழிவுகளும். எங்கும் வியாபித்திருக்கும் துர் நாற்றம். எட்டுப், பத்துப் பிள்ளைகளை கொண்ட குடும்பம் முழுவதும் ஒரேயொரு அறைக்குள் அடங்கி வாழும் அவலம். இவையெல்லாம் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் இந்த நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ஐரோப்பியர்கள் பல நூறாண்டுகளாக செல்வத்தில் வாழ்ந்து வந்ததாக, நம் மத்தியில் உள்ள படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். குறிப்பாக முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் "அறிவுஜீவிகள்", 19 ம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் நிலவிய, வறுமையின் கொடுமைகளை காண மறுக்கிறார்கள். அவர்கள் அது குறித்து எங்கேயும் படிக்கவும் இல்லை, கேள்விப் படவுமில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உலகம் இருண்டு விடுவதில்லை.

மேற்கத்திய முதலாளித்துவ அறிஞர்கள் சிலர், தமது அரசியல் பக்கச் சார்பு காரணமாக, இந்த நூலில் உள்ள தரவுகள் தவறானவை, கற்பனையானவை என்று கூறுகின்றனர். வரலாறு எப்போதும் மன்னர்களைப் பற்றி எழுதப் படுகின்றது. மக்களைப் பற்றிய வரலாறு அரிதாகவே எழுதப் படுகின்றது. அதற்காக, 19 ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியதாக வரலாற்றை திரிக்க முடியாது.

மார்க்சியத்தின் மூலவர்கள் என்று கருதப்படும் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு மேட்டுக்குடியில் பிறந்தவர் தான். பிற மேட்டுக்குடி பிறப்பாளர்கள் போன்று, அவரும் மது, மாது மயக்கத்தில், நரி வேட்டையாடி காலம் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆயினும் அவரது இதயம் ஏழைகளின் மேல் பரிவு காட்டியது. 

எங்கெல்ஸ் இருபதாண்டு காலம் குடித்தனம் நடத்திய ஐரிஷ் காதலியான மேரி பேர்ன்ஸ், எழுதப் படிக்கத் தெரியாத ஏழைப் பணிப்பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைக்கும், ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த, ஒரு சாதாரண மத்தியதர இளைஞர் கூட, எழுதப் படிக்கத் தெரியாத பணிப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை எதிர்பார்க்க முடியாது. அந்தஸ்து குறைந்து விடும் என்று நினைப்பார்கள்.

எங்கெல்சின் காதலியான மேரி பேர்ன்ஸ், அவரை தனது குடும்பம் வாழும் சேரிப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதனால், பிற மேட்டுக்குடியினர் எட்டியும் பார்க்காத சேரிகளின் மூலை முடுக்குகள் எல்லாம் எங்கெல்சுக்கு பரிச்சயமாகின. அங்கு ஏழை மக்கள் படும் துயரை நேரில் கண்டு அனுபவித்துள்ளார். ஆகையினால், எங்கெல்ஸ் கற்பனையான தரவுகளை கொண்டு இந்த நூலை எழுதியதாக வாதிடுவது அபத்தமானது.

கார்ல் மார்க்ஸ் மாதிரி, பிரடெரிக் எங்கெல்ஸ் கூட ஒரு ஜெர்மனியர் தான். நெதர்லாந்துக்கு அருகில் உள்ள, பார்மென் (Barmen) எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். ரைன் நதிக்கரை சார்ந்த அந்தப் பிரதேசம், 19 ம் நூற்றாண்டிலேயே தொழிற்துறை வளர்ச்சியால் முன்னேறி இருந்தது. எங்கெல்சின் தந்தை பார்மென் நகரிலும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரிலும், பருத்தி நூல் நூற்கும் தொழிற்சாலைகளை வைத்திருந்தார். 

எங்கெல்ஸ் தனது தந்தையின் தொழிற்சாலையை நிர்வகிக்கும் முகாமையாளராக வேலை செய்துமிருக்கிறார். அதன் மூலம், பிற தொழிலதிபர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. ஆகவே, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்தளவு மோசமாக சுரண்டப் படுகிறார்கள் என்பதை அவர் நேரடியாக கண்டுணர்ந்திருப்பார்.

ஏழைப் பெற்றோரும், சிலநேரம் அவர்களின் வயதுக்கு வராத பிள்ளைகளும் கூட, ஒரே தொழிற்சாலையில் தொழிலாளர்களாக வேலை செய்வது அந்தக் காலத்தில் சர்வசாதாரணம். ஒரு பக்கம், அவர்களின் உழைப்பு முதலாளிகளால் சுரண்டப் படுகின்றது. மறுபக்கம், ஓய்வு நேரத்தில் அவர்களது வாழ்க்கை அவலம் நிறைந்ததாக உள்ளது. எங்கெல்ஸ் இந்த நூலில், இவ்விரண்டு விடயங்களையும் தனித்தனியாக பதிவு செய்துள்ளதுடன், அவற்றுக்கு இடையிலான தொடர்பையும் தெளிவாக விளக்கி உள்ளார். அந்த வகையில் தான் இது உலகப் புகழ் பெற்ற கிளாசிக்கல் நூல்களில் ஒன்று என இன்றைக்கும் போற்றப் படுகின்றது.

"இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" நூல் எழுதிய காலத்தில், எங்கெல்ஸ் இன்னும் "மார்க்சிஸ்டாக" மாறி இருக்கவில்லை. அதாவது, மார்க்ஸ், எங்கெல்ஸ் சேர்ந்து, கம்யூனிசத்தை அடைவதற்கான "மார்க்சியம்" என்ற சமூக விஞ்ஞானத்தை அதற்குப் பின்னர் தான் கட்டமைத்தார்கள்.

இளம் பராயத்திலேயே எங்கெல்ஸ் ஒரு கம்யூனிஸ்டாக மாறி இருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல! 19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியிலும், பிரான்சிலும், பொதுவுடமைக் கருத்துக்கள் பரவி இருந்தன. எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், ஜெர்மனியில் மூன்று புரட்சிகள் நடந்துள்ளன.

அப்போது தான் ஜெர்மனி என்ற தேசம் உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால், இடதுசாரிக் கொள்கைகளை பின்பற்றியவர்கள், அரச அடக்குமுறை காரணமாக பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். அப்போது பிரான்ஸிலும் பொதுவுடைமைக் கொள்கைகள் பிரபலமாக இருந்தன.

19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த தத்துவ அறிஞரான ஹெகல், மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற முற்போக்கு இளைஞர்களின் வழிகாட்டியாக இருந்தார். அவரைப் பின்பற்றிய பல இளைஞர்கள், தம்மை "இடது ஹெகலியன்" என்று அழைத்துக் கொண்டனர். எங்கெல்ஸ் இளம் வயதில் ஒரு இடது ஹெகலியனாக இருந்தார். அதனால், அவரது தந்தை குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு, மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்திருக்கலாம். ஜெர்மனியில் இருந்தால், தனது பையன் "உதவாக்கரை பயல்களுடன் சேர்ந்து கெட்டு குட்டிச் சுவராகி விடுவான்..." என்று எங்கெல்சின் தந்தை நினைத்திருப்பார்.

அதே நேரம், எங்கெல்ஸ் மான்செஸ்டரில் குடியேறுவது தனது கொள்கைக்கு சாதகமான விடயமாக நினைத்திருப்பார். அதாவது, அன்றைய ஐரோப்பாவில் இங்கிலாந்தில் தான் தொழிற்புரட்சி காரணமாக மிகப் பெரியதொரு சமூக மாற்றம் நடந்திருந்தது. தொழிற்சாலைகளும், பாட்டாளி வர்க்கமும் இங்கிலாந்தில் தான் அதிகளவில் இருந்தன. லண்டன் போன்று, மான்செஸ்டரும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரமாக இருந்தது. ஆகவே, முதலாளித்துவ பொருளுற்பத்தி உச்சத்தில் இருந்த இங்கிலாந்தில் தான், அதன் விளைவால் உருவான பாட்டாளி வர்க்கத்தை சிறப்பாக ஆய்வு செய்ய முடியும் என்று எங்கெல்ஸ் நினைத்திருப்பார்.

இன்று பல இளைஞர்கள் மத்தியில் முற்போக்கான நூல்களை தேடி வாசிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. மார்க்சியம் பற்றிய தேடலும் அதிகரித்து வருகின்றது. அவர்களில் பலர் என்னை தொடர்பு கொண்டு சில நூல்களை பரிந்துரை செய்யுமாறு கேட்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு உதவும் வகையில், இந்த நூல் விமர்சனத்தை எழுதி உள்ளேன்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்
என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...