ஹாங்காங் பிரச்சினை, அங்கு என்ன நடக்கிறது?
முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் 1997 ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப் பட்டது. அப்போது ஹாங்காங் தொடர்ந்தும் தனித்துவம் பேணுவதற்கு சீனா சம்மதித்தது. அதனால் சீனாவுக்கும் இலாபம் கிடைத்தது. அப்போது தான் சீனா முதலாளித்துவ உலகில் காலடி எடுத்து வைத்திருந்தது.
உலகில் பெருமளவு மூலதனம் புழக்கத்தில் உள்ள நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. ஆகவே சீனாவுக்கு அருகில் உள்ள ஹாங்காங் கார்ப்பரேட் நிறுவனங்கள் சீன சந்தையில் முதலிட ஓடி வருவார்கள். அதனால் சீன பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று கணக்குப் போட்டது. அப்படியே நடந்தது. அது மட்டுமல்ல, மறு பக்கமாக சீன அரசு நிறுவனங்கள் கூட ஹாங்காங் பங்குச் சந்தையில் முதலிட்டு இலாபம் சம்பாதித்துள்ளன.
தற்போது அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றி எமக்கு ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே கூறுகின்றன. இது "குற்றவாளிகளை நாடுகடத்தும் சட்டம்" தொடர்பான அரசியல் பிரச்சினை என்பது ஒரு பகுதி உண்மை மட்டுமே. அது அல்ல முக்கிய காரணம். உண்மையில் குற்றவாளிகளை நாடுகடத்துவதை எந்த நாடும் தவறென்று சொல்லப் போவதில்லை. ஹாங்காங் மக்களும் அந்தளவு முட்டாள்கள் அல்ல.
உண்மையான பிரச்சினை வேறெங்கோ உள்ளது. ஹாங்காங்கில் இன்று வரையில் பிரிட்டிஷ் காலனிய கால சட்டம் தான் அமுலில் உள்ளது. Common Law என்ற பிரிட்டிஷ் சட்டம் நிதித் துறையில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. laisser faire (பிரெஞ்சு சொல்லின் அர்த்தம் "செய்ய விடு") எனும் பொருளாதார சூத்திரத்தின் அடிப்படையில், வணிக நிறுவனங்கள் அரசு தலையீடு இன்றி வர்த்தகம் செய்து அதிக இலாபம் சம்பாதிக்கலாம். சுருக்கமாக, குறுக்கு வழியில் பணக்காரராக வர விரும்புவோருக்கு ஹாங்காங் ஒரு சிறந்த நாடு.
ஹாங்காங் அதி தாராளவாத பொருளாதாரத்தை கொண்டுள்ளதால் சாதகம் மட்டுமல்ல பாதகமும் உண்டு. அதன் அர்த்தம் அங்கு நடக்கும் மூலதனப் பாய்ச்சலையும் கட்டுப்படுத்த முடியாது. யார் எத்தனை கோடி டாலர் பணம் சட்டவிரோதமாக சம்பாதித்தார்கள்? அதை எங்கே பதுக்கி வைக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாது.
இதனால் சீன அரசால் புதிய கட்டுப்பாடுகள் போடப் பட்டன. நிதி மூலதனம் ஹாங்காங்கை விட்டு வேறு நாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டு வரப் பட்டது. அதன் ஒரு பகுதி தான் குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டம். அதாவது கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கம்பனி நிர்வாகியும் குற்றவாளி தான். புதிய சட்டத்தினால் அப்படியான ஊழல்பேர்வழிகள் நிறைய அகப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்தது. அதன் விளைவு தான் அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள்.
அநேகமாக எல்லா பெரிய வங்கி நிறுவனங்களும் ஹாங்காங்கில் தளம் அமைத்துள்ளன. அதே போன்று பெரிய அக்கவுன்டன்ட் நிறுவனங்களும் உள்ளன. அவை அங்கு முதலிட வரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றன. ஆனால், அவை அதை மட்டும் செய்யவில்லை. அரசியலிலும் தலையிடுகின்றன என்பதற்கு அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களே சாட்சியம்.
கார்ப்பரேட் கம்பனிகள் நினைத்தால் பல்லாயிரக் கணக்கான மக்களை தெருவுக்கு கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்க முடியும். அதற்கு ஆதாரமாக KPMG, EY, Deloitte, PwC ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட ஆர்ப்பாட்டக் காரரை ஆதரிக்கும் விளம்பரங்களை குறிப்பிடலாம். இது அங்கு எந்தளவு தூரம் கார்ப்பரேட் கம்பனிகள் அரசியலில் ஈடுபடுகின்றன என்பதை நிரூபிக்கின்றது. இது குறித்து சீன அரசு கண்டனம் தெரிவித்த பின்னர் தமது ஆதரவை வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை.
சீன அரசுக்கும், ஹாங்காங் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினையில், அரசின் அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் "மக்கள் எழுச்சி" ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, ஹாங்காங் விமான சேவைகள் நிறுவனமான கதே பசிபிக் தலைவர் பதவி விலகினார். அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நேரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு குற்றம் சாட்டி இருந்ததே பதவி விலகலுக்கு காரணம். அதைத் தொடர்ந்து எங்கிருந்தோ வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானப் போக்குவரத்தை சீர்குலைத்தனர்.
முன்னைய சம்பவத்தை இருட்டடிப்பு செய்து விட்டு பின்னையதை பற்றி மட்டுமே சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. அதே மாதிரி ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவான மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும் ஊடகங்களில் காட்டப் படுவதில்லை. அது பற்றிய தகவல்கள் கூட தடைசெய்யப் படும் என்று ட்விட்டர் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
வியக்கவைக்கும் தகவல்கள்
ReplyDeleteBest information from a neutral point of view sir.
ReplyDelete