செனோத்டெல் (Zhenotdel): சோவியத் யூனியனில் இயங்கிய ஒரு கம்யூனிஸ்ட் - பெண்ணியக் கட்சி. அது பற்றிய சில குறிப்புகள்.
1917 அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நோக்கங்களில் ஒன்றாக பெண்களின் விடுதலையும் அடங்கி இருந்தது. சார் மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலன பெண்கள் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். மேல் தட்டு வர்க்கப் பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர். ஆகவே பெண்களை வீட்டு வேலைகளில் இருந்து விடுதலையாக்கி, கல்வி கற்க வைத்து, வேலைக்கும் அனுப்புவதே புரட்சியை நடத்தியவர்களின் நோக்கமாக இருந்தது.
இதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்த (லெனினின் மனைவி) நடாஷா குருப்ஸ்கயா, இனேசா ஆர்மன்ட், மற்றும் அலெக்ஸான்ட்ரா கொலந்தை ஆகியோர் இணைந்து பெண்களுக்கான கட்சியை உருவாக்கினார்கள். செனோத்டெல் என்ற அந்த இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு வடிவம் கொண்டிருந்தது. ஆனால், கட்சிக்கு வெளியே சுதந்திரமாக இயங்கியது. சுருக்கமாக, அது முழுக்க முழுக்க பெண்களுக்காக பெண்களால் நடத்தப் பட்ட கட்சி.
சோவியத் யூனியன் முழுவவதும் கல்வி கற்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு செனோத்டெல் இயக்கத்தின் பரப்புரைகளும், செயற்திட்டங்களும் முக்கிய காரணிகளாக இருந்தன. அது மட்டுமல்லாது அரச செலவில் பிள்ளை பராமரிப்பு, கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்களுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை போன்ற பல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது.
அன்றைய மேற்கைரோப்பாவில் வாழ்ந்த பெண்கள் இதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைமை இருந்தது. அந்த வகையில் பெண்ணிய வரலாற்றில் செனோத்டெல் இயக்கம் வகித்த பங்களிப்பு (கம்யூனிச) எதிரிகளாலும் இன்று வரை போற்றப் படுகின்றது.
பதினொரு வருடங்களாக இயங்கிய செனோத்டெல் அமைப்பு, 1930 ம் ஆண்டு ஸ்டாலினால் கலைக்கப் பட்டது. அதன் நோக்கங்கள் பூர்த்தியடைந்து விட்டன என அப்போது அறிவிக்கப் பட்டது. ஆனால் ஏற்கனவே அமைப்பின் உள்ளே விரிசல்கள் ஆரம்பித்து விட்டன.
அலெக்ஸான்ட்ரா கொலந்தை முன்மொழிந்த குடும்பங்களை மறுசீரமைக்கும் கொள்கைக்கு பெருமளவு ஆதரவு கிடைக்கவில்லை. பெரும்பாலான பெண்கள் கல்வி கற்பதையும், வேலைக்கு போவதையும் தமது உரிமைகளாக கருதினாலும் பாரம்பரிய குடும்பக் கடமைகளை மாற்றிக் கொள்ள மறுத்தனர்.
அதாவது புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுதந்திரம் கிடைத்தாலும் பெண்களால் சில பழக்கவழக்கங்களை ஒரே நாளில் மாற்ற முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதற்கு கட்சி உறுப்பினர்களும் விதிவிலக்கல்ல. மேலும் மதப் பழமைவாதத்தில் ஊறிய மத்திய ஆசியப் பகுதிகளில் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டன. குறிப்பாக, பொது இடங்களில் பூர்காவை கழற்றி வீசிய முஸ்லிம் பெண்களுக்கு பழமைவாதிகளால் உயிரச்சுறுத்தல் விடுக்கப் பட்டது. சில ஆர்வலர்கள் கொல்லப் பட்டனர்.
செனோத்டெல் பெண்ணியத்தை மட்டுமல்லாது, கம்யூனிசத்தையும் உயர்த்திப் பிடித்தது. பெண்களே மாற்றத்திற்கான உந்து சக்தி என்றது. பெண்களின் விடுதலை மூலமே உண்மையான சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என நம்பியது. சோவியத் யூனியன் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அது அனைத்துலக பெண்களின் விடுதலைக்கு முன்னோடியாக இருந்தது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
No comments:
Post a Comment