பெல்ஜிய நாட்டில் உள்ள தீவிர வலதுசாரி இனவாதக் கட்சியான "பிலாம்ஸ் பெலாங்" (Vlaams Belang) இளைஞர் அணியினர் ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் படம் ஒன்றை டிவிட்டரில் காணக் கிடைத்தது. அவர்கள் 2019 ம் ஆண்டு கோடை விடுமுறைக் காலத்தில், போலந்தில் கிராகவ் நகருக்கு அருகில் "அரசியல் வகுப்புகள்" என்ற பெயரில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட நேரம் இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.
இதனால் தமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற எந்த பயமும் இல்லாமல், இராணுவப் பயிற்சி பெரும் படத்தையும், யூடியூப் வீடியோவையும் அவர்களே வெளியிட்டுள்ளனர். ஐரோப்பாவில் வலதுசாரி பயங்கரவாதம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் அரசு இது குறித்து கவனம் எடுக்கவில்லை. அத்துடன், இந்த தகவல் எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராது என்பதை நிச்சயமாகக் கூறலாம்.
பெல்ஜியத்தில் பிலாம்ஸ் பெலாங் கட்சி தன்னை ஒரு மிதவாத பொப்புலிஸ்ட் கட்சியாக காட்டிக் கொள்கிறது. அது வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான இனவாதம், இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் கட்சி. அது டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிலாம்ஸ் என்று அழைப்பார்கள்) பேசும் மாநிலத்தில் மட்டும் இயங்கும் பிரதேசக் கட்சி. அந்தக் கட்சி சார்பில் பல உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர்.
தீவிர வலதுசாரி பயங்கரவாதம் இன்றைய உலகில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக பல புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. (NOS, 18-08-2019) இதுவரை மேற்கத்திய நாடுகளில் நடந்துள்ள வலதுசாரி பயங்கரவாத தாக்குதல்கள் யாவும் அங்கு வாழும் வெளிநாட்டு குடியேறிகளை இலக்கு வைத்து நடந்துள்ளன.
பிரைவிக் (Brevik), டாரன்ட் (Tarrant) ஆகியோர் வலதுசாரி பயங்கரவாதிகளின் நாயகர்களாக, வழிகாட்டிகளாக போற்றப் படுகின்றனர். நோர்வேயை சேர்ந்த பிரைவிக் ஒஸ்லோ நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 90 பேர் பலியாகக் காரணமாக இருந்தவன். அதே மாதிரி நியூசிலாந்து கிரைஸ்ட் சேர்ச்சில் 50 பேர் பலியாக காரணமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியவன் டாரன்ட்.
அண்மையில் நடந்த வலதுசாரி பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய வெள்ளையின இளைஞர்கள் மேற்படி நபர்களை தமது நாயகர்களாக பிரகடனப் படுத்தி இருந்தனர். மேற்கத்திய நாடுகளை நோக்கிய பெருமளவிலான அகதிகளின் வருகை வலதுசாரி பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் காரணியாக இருந்துள்ளது. குறிப்பாக ஜேர்மனியில் சிறிதும் பெரிதுமாக பல அகதி முகாம் எரிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.
பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி ஆகிய மேற்கைரோப்பிய நாடுகளை சேர்ந்த அரச உளவு நிறுவனங்கள் வலதுசாரிப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் வதந்திகளும் வலதுசாரி பயங்கரவாதிகளினால் உண்மை என நம்பப் படுகின்றன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவில் படையெடுக்கும் அகதிகள், குடியேறிகள் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் பூர்வீக வெள்ளையினத்தவரின் சனத்தொகை குறைந்து வருவதாக வதந்திகள் பரப்பப் படுகின்றன.
நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சேர்ச் நகரில், ஒரு வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதி மசூதியில் தொழுது கொண்டிருந்த ஐம்பது பேரை சுட்டுக் கொண்ட சம்பவம் உலகை உலுக்கி இருந்தது. 15 மார்ச் 2019 நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் ஒரு வெள்ளையின, நாஸி பயங்கரவாதி என்பதால் விபச்சார ஊடகங்கள் அவனை "துப்பாக்கிதாரி" என்றும், சம்பவத்தை "துப்பாக்கிச் சூடு" என்று மட்டுமே குறிப்பிட்டன. தமிழ் அடிமை ஊடகங்களும் "மர்ம நபர்" என்று அறிவித்தன. விரைவில் அவனை ஒரு மன நோயாளி என்று சொன்னாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.
அதே நேரம், எங்காவது ஒரு முஸ்லிம் கத்தியால் குத்தினால் கூட, அதை ஒரு மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலாக சித்தரித்து ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கும். அமெரிக்காவில் நடந்த பெருமளவு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் நவ- நாஸிச, தீவிர வலதுசாரிகள் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த விபச்சார ஊடகங்கள் வலதுசாரி பயங்கரவாதத்தை கண்டுகொள்வதில்லை.
நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில் உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.
அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.
அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த "துப்பாக்கிதாரி"(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: "அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்..." குற்றம் சாட்டி இருந்தான். சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.
அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற "முஸ்லிம்" நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ- நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய/ ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது. அதே மாதிரி, மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை "முஸ்லிம்கள்" என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.
அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு "முஸ்லிம்" தான்! இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான். "இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்" என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.
நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது. அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.
எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது. இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.
அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ- நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா? இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.
வலதுசாரி நிறவெறிப் பயங்கரவாதம் குறித்து ஊடகங்கள் அக்கறை காட்டாது விடினும், ஐரோப்பிய அரசுகளும், அவற்றின் புலனாய்வுத்துறையினரும் இது குறித்து கவனம் எடுத்து கண்காணித்து வருகின்றனர். உள்நாட்டு பூர்வீக ஐரோப்பிய சமூகத்தினர் மத்தியில் உருவாகும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தமது இலக்கை அடைவதற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
வளர்ந்து வரும் வலதுசாரிப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மேற்கைரோப்பிய அரசுகள் மென் போக்கை பின்பற்றி வருகின்றன அதற்குக் காரணம் இந்நாடுகளில் இனப்பிரச்சினையை உண்டாக்கி இனங்களை மோத விடுவதற்கு வலதுசாரி பயங்கரவாதம் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது.
அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஜேர்மனியில் இயங்கிய வலதுசாரி பயங்கரவாத இயக்கமான "National Socialist Underground" (NSU) பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.
அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஜேர்மனியில் இயங்கிய வலதுசாரி பயங்கரவாத இயக்கமான "National Socialist Underground" (NSU) பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.
- முன்னாள் சோஷலிச கிழக்கு ஜேர்மனியில், நவ நாஸிகள் அல்லது தீவிர வலதுசாரிகளே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஜேர்மனி ஒன்று சேர்ந்தது. இதனை முன்னாள் நவ நாஸி தனது வாக்குமூலத்தில் குறிப்பிடுகின்றான்.
- முன்னர் கிழக்கு ஜேர்மன் இரகசியப் பொலிஸ் தம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததாகவும், ஒன்றிணைந்த ஜேர்மனியிலும் தாம் வரவேற்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டான்.
- இடதுசாரிகளுக்கு எதிரான வெறுப்புணர்வு கொண்ட இளைஞர்கள் நவ நாஸி அமைப்புகளில் சேருகின்றனர். தெருக்களில் காணும் இடதுசாரிகளுக்கு அடிப்பதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.
- ஜேர்மன் நாஸிகள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். - நவ நாஸிகள் இரகசியமாக இராணுவப் பயிற்சி எடுக்கிறார்கள். ஆயுதங்களை சேகரிக்கிறார்கள்.
- எதிர்காலத்தில் இனப் பிரச்சினை தீவிரமடைந்து இனங்களுக்கு இடையில் உள்நாட்டுப் போர் நடக்கும் என்று நம்புகிறார்கள்.
- இன்றைய ஜேர்மன் அரசு, நாஸிகளை கண்காணிப்பதற்காக தனது ஆட்களை ஊடுருவ வைத்துள்ளது.
- தலைமறைவாக இயங்கும் நவ நாஸிகளில் ஏராளமான அரச உளவாளிகள் உள்ளனர். இருப்பினும், அரசுக்கு வேலை செய்த அதே நவ நாஸிகள் தான், தலைமறைவாக இயங்கிய NSU உறுப்பினர்கள் என்ற விடயம் தசாப்த காலமாக அரசுக்கு தெரியவில்லையாம்! (நம்ப முடியுமா?)
- NSU உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டுமே என்று சொல்லப் படுகின்றது. இருவர் வங்கிக் கொள்ளை முயற்சியில் பொலிசால் வேட்டையாடப் பட்ட நேரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மூன்றாவது நபரான பெண் உறுப்பினர் சரணடைந்தார். - அந்த மூவரைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? யாருக்கும் தெரியாது. அது தொடர்பான விசாரணை முடிவுகள் இன்னமும் மூடுமந்திரமாக உள்ளன.
- NSU பல தடவைகள் வங்கிகளை கொள்ளையடித்தும் பிடிபடவில்லை. அது மட்டுமல்ல, நாடு முழுவதும் பத்துப் பேரளவில் கொலை செய்துள்ளது. கொல்லப் பட்டவர்களில் ஒரு பொலிஸ் பெண்மணியை தவிர ஏனையோர் வெளிநாட்டு குடியேறிகள். துருக்கியர்கள், ஒரு கிரேக்கர். கொலை சம்பந்தமாக துப்புத் துலக்கிய பொலிஸ் "கிரிமினல்களின் கணக்குத் தீர்க்கும் கொலைகள்" என்று அலட்சியப் படுத்தியது.
- ஒரு தடவை கொலை நடந்த இடத்தில், "தற்செயலாக" இருந்த அரச உளவாளியான நவ நாஸியிடம் சாட்சியம் எடுக்கவில்லை. விசேட விசாரணைக் குழு இந்த விடயத்தை வெளிக் கொண்டு வந்தது. இருப்பினும், அந்த நேரடி சாட்சி விசாரிக்கப் படாதது மட்டுமல்ல, வேறு பதவி கொடுத்து இடம் மாற்றப் பட்டார்.
No comments:
Post a Comment