முன்பொரு தடவை, நெதர்லாந்து கிராமம் ஒன்றில் நாங்கள் இருந்த அகதி முகாமில் பெந்தகொஸ்தே கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அதை நடத்தியவர்கள் டச்சுக் காரர்கள். கலந்து கொண்டவர்களில் பலர் தமிழ் அகதிகள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மதம் பரப்புவோர் பெரும்பாலும் அகதி முகாம்களில் தான் பிரசங்கம் செய்து கொண்டிருப்பார்கள். இது எமக்கு பழகிப் போன விடயம்.
அந்த வீட்டில் எம்முடன் ஒரு பொஸ்னிய இளைஞனும் தங்கி இருந்தான். தற்செயலாக நாம் பைபிள் படித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த அந்த இளைஞன், கிறிஸ்தவ போதனைகளை கேட்டு குழம்பி விட்டான். வழமையாக அமைதியாக இருக்கும் அந்த இளைஞன் அழுது குளறி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். நானும், முகாம் பொறுப்பாளரும் சேர்ந்து அவனை தனியே அழைத்து சென்று ஆறுதல் படுத்தினோம்.
பொஸ்னிய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அந்த இளைஞன், முன்பு பொஸ்னிய- சேர்பிய அகதிகளுடன் தங்கி இருந்தான். அப்போது பொஸ்னிய போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அது புலம்பெயர்ந்த நாடுகளிலும் எதிரொலித்தது. முகாமில் இருந்த அகதிகளும் கிறிஸ்தவ- முஸ்லிம் வெறுப்பு அரசியல் பேசி தமக்குள் சண்டை பிடித்த படியால், இவனை வேறு வீட்டில் தங்க வைத்திருந்தனர்.
பொஸ்னியாவில், கிறிஸ்தவ- சேர்பிய படையினரின் வன்முறைக்கு உறவினர்களை பலி கொடுத்த அகதிகள், அந்த இழப்புகள் காரணமாக கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததை புரிந்து கொள்ள முடியும். ஆனால், பொஸ்னிய கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலகில் உள்ள அத்தனை கிறிஸ்தவர்களையும் வெறுக்கும் வெகுளித்தனமான மனநிலையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை.
அன்று முகாமில் பைபிள் படிக்க வந்த டச்சு கிறிஸ்தவர்களை கண்டதும் பயந்து அலறிய காரணம் என்னவெனக் கேட்டேன். "எனது நாட்டிலும் பைபிள் படிப்பவர்கள் தான் எங்கள் இனப் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்தார்கள்..." என்று அந்த பொஸ்னிய இளைஞன் பதற்றத்துடன் சொன்னான்.
பொஸ்னியாவில் யுத்தம் நடந்த காலத்தில் கொலை வெறியுடன் நடந்து கொண்ட சேர்பிய கிறிஸ்தவர்களுக்கும், புலம்பெயர்ந்த நாட்டில் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத டச்சுக் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை நான் அவனுக்கு புரிய வைப்பதற்கு முயன்றேன். அன்று எனது ஆறுதல் வார்த்தைகளால் அடங்கிப் போனாலும், அவனது மனதில் இருந்த "பைபிள் படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு" எதிரான வெறுப்புணர்வு எளிதில் மறைந்து விடும் என நான் நினைக்கவில்லை. அது இப்போதும் அடி மனதில் தணலாக புகைந்து கொண்டிருக்கலாம்.
அந்தச் சம்பவத்தை இங்கே நினைவுகூரக் காரணம், அந்த பொஸ்னிய இளைஞனின் மனநிலையில் தான் இன்று பல (ஈழத்) தமிழர்கள் இருக்கின்றனர். முன்பு ஈழப்போர் காலத்தில் நடந்த இன வன்முறைகளை மனதில் இருத்தி, உலக முஸ்லிம்கள் அனைவரையும் கொடூரமானவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
முப்பதாண்டு கால ஈழப்போரானது, கிழக்கிலங்கையில் வாழும் மூவின மக்களையும் தீர்க்க முடியாத பகை முரண்பாடு கொண்டவர்களாக மாற்றி உள்ளது. நீங்கள் அந்தப் பிரதேசத்திற்கு சென்று எந்த இன மக்களோடு பேசினாலும், அவர்கள் தமது இனத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் பேசுவார்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம், எனும் இன அடையாளம் மட்டுமே முக்கியமாகக் கருதப் படும் ஒரு நாட்டில், தன்னினம் சார்ந்த சுயநலமே மேலோங்கி இருக்கும்.
குறிப்பாக தமிழர்கள் ஒரு பக்கம் சிங்களவராலும், மறு பக்கம் முஸ்லிம்களாலும் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். முஸ்லிம் கிராமங்களை புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது என்ற காரணம் கூறி, அரச இராணுவத்தின் துணைப்படையாக உருவாக்கப் பட்ட முஸ்லிம் ஊர்காவல் படைகள், தமிழ்க் கிராமங்களை சூறையாடி அப்பாவிப் பொது மக்களை படுகொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்க் கிராமங்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படைகளின் நேரடித் தாக்குதல்களின் போது மட்டுமல்லாது, இரகசியமான ஆட்கடத்தல்களிலும் பெருமளவு தமிழர்கள் கொல்லப் பட்டனர்.
இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களினதும், அந்தக் கதைகளை கேள்விப் பட்டவர்களினதும் மனதில் எழும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு புரிந்து கொள்ளத் தக்கது.
கிழக்கிலங்கையில் கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் காரணமாக, அங்குள்ள தமிழர்கள் தமது பிரதேச முஸ்லிம்கள் மீது ஆத்திரப் படுவதில் நியாயம் இருக்கலாம். அதற்காக தமிழருடன் எந்த சம்பந்தமும் இல்லாத முஸ்லிம் பொது மக்கள் பாதிக்கப் படும் போது மகிழ்ச்சி அடைவதில் எந்த நியாயமும் இல்லை.
கிழக்கிலங்கையில் நடக்கும் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான தாயக உரிமைப் பிரச்சினை, நில அபகரிப்புகள், அதனால் நடந்த கொலைகள் எல்லாம் இனப் பிரச்சினைக்கு உட்பட்ட விடயம். தென்னிலங்கை முஸ்லிம்களையும், வட இலங்கை முஸ்லிம்களையும் அதற்குள் இழுத்து முடிச்சுப் போடுவது புத்திசாலித்தனமானது அல்ல. அதை விட, அவர்களை உலக முஸ்லிம்களுடன் சேர்த்து ஒன்றாகப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.
இலங்கை இந்துவுக்கும், நேபாள இந்துவுக்கும் இடையில் மதத்தை தவிர வேறென்ன ஒற்றுமை இருக்கிறது? இலங்கைப் பௌத்தரும் சீனப் பௌத்தரும் ஒரே இனத்தவர்களா? இலங்கை கிறிஸ்தவர்களை அமெரிக்க கிறிஸ்தவர்கள் தம்மின மக்களாகக் கருதுகிறார்களா?
ஒரே மதத்தை பின்பற்றும் காரணத்தால், கலாச்சாரமும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிறத்தால், இனத்தால், பண்பாட்டால் மாறுபட்ட மக்கள் ஒரே மதத்தை பின்பற்றுவதால் மட்டும் ஒன்றாகி விடுவதில்லை.
அரச அதிகாரத்தில் இருந்து ஒடுக்கும் முஸ்லிம்களும், குடிமக்களாக ஒடுக்கப் படும் முஸ்லிம்களுக்கு இடையிலான வித்தியாசத்திற்கு காரணம் வர்க்க முரண்பாடு. அதன் விளைவாக பல நாடுகளில் மக்கள் எழுச்சிகளும், யுத்தங்களும் நடக்கின்றன.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், இஸ்லாமிய மக்கள் தமது சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை கண்டுகொள்ள விடாமல் மதத் திரை போட்டுத் தடுக்கின்றனர். முரண்நகையாக, இஸ்லாமோபோபியா- இனவாதிகளும் இந்த விடயத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன் கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறார்கள். அவர்களும் மத முத்திரை குத்தி அனைத்து முஸ்லிம்களையும் தனிமைப் படுத்துகிறார்கள். இவ்விரண்டு தரப்பினரும் பாஸிசம் என்ற ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்.
நீங்கள் எப்போதும் பைனாகுலர் வழியாகவே இலங்கையை பார்க்கிறீர்கள். மூவின மக்களுக்கு இடையே வாழும் எங்களுக்கு அநேகமான பதிவுகளில் இதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
ReplyDeleteஇலங்கை இந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் முஸ்லிம்களை ஒப்பிட முடியாது. இவர்களின் சிந்தனை போக்கு ஏனையோரிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தன் மதம் மற்றும் குரான் எழுதிய அரபி மொழி மட்டுமே உயர்ந்தது என்ற கற்பிதம் இவர்களுக்கு பால்குடி மாறாத வயதிலிருந்தே திணிக்கப்படுகிறது தான் எங்கே வாழ்கிறோம் என்ற சுயசிந்தனை மழுங்கி ஒரு வித மத மேலாதிக்க போக்குடனேயே காணப்படுகிறார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அப்பாவி முஸ்லிம்கள் இங்கே 5% கூட கிடையாது.
நெதர்லாந்து இன்னும் முஸ்லிம்களின் வெப்பத்தை உணரவில்லை. உணர்ந்த அன்று டச்சு கிறிஸ்தவர்களும் செர்பிய கிறிஸ்தவர்கள் போல் மாறி போவதை நீங்கள் காண்பீர்கள்.