Thursday, June 20, 2019

நாஸிகளுடன் ஒத்துழைத்த "யூத ஒட்டுக் குழு" பற்றிய திரைப்படம்


கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, "சவுலின் மகன்" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை விபரமாக சித்தரிக்கின்றது. போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் தடுப்பு முகாமில், யூதர்கள் வகை தொகையின்றி, நச்சு வாயு கொடுத்து படுகொலை செய்த சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். இந்தத் திரைப் படம் அதனை மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது என்பது, அதன் சிறப்பம்சம்.

ஜெர்மன் நாஸிகள், யூதர்களை படுகொலை செய்வதற்கு, யூதர்களையே பணியில் ஈடுபடுத்தினார்கள்! கொஞ்சம் பலசாலிகளான யூதர்களை தேர்ந்தெடுத்து, "சொன்டர் கமாண்டோ" (Sonder Kommando) என்று பெயரிட்டார்கள். தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப் படும் யூதர்களின், ஆடைகளைக் களைவது, அவர்களது உடைமைகளை வகைப் படுத்தி, தனித் தனியாக அடுக்கி வைப்பதில் இருந்து அவர்களது பணிகள் ஆரம்பமாகின்றன.

நிர்வாணமாக்கப் பட்ட யூதர்களை, நச்சு வாயு ஊட்டி கொலை செய்வது மட்டுமல்ல, சடலங்களை இழுத்துச் சென்று நிலக்கரி போட்டு எரிப்பதும், சாம்பலை ஆற்றில் கரைப்பதும், சொன்டர் கமாண்டோவின் பணிகள். இறந்த யூதர்களின் உடல்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் குவித்து வைக்க வேண்டும். நச்சு வாயுக் குளியல் நடந்த இடத்தில், நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்களை, வேறெந்த திரைப்படமாகிலும் இந்தளவு விபரமாக எடுத்துக் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. அவுஷ்வித்ஸ் முகாமில், சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும், ஹங்கேரி நாட்டை சேர்ந்த சவுலின் மகனும் நச்சு வாயு ஊட்டி படுகொலை செய்யப் படுகிறான். தனது மகனின் உடலை, யூத மத அனுஷ்டானங்களின் படி, அடக்கம் செய்ய வேண்டும் என்பது சவுலின் விருப்பம். அதனால், சடலங்களை பரிசோதிக்கும் மருத்துவர் (மருத்துவர்களும் யூதக் கைதிகள் தான்) ஒருவரின் உதவியுடன், மகனின் சடலத்தை தனது வதிவிடத்தில் மறைத்து வைக்கிறான்.

சொன்டர் கமாண்டோக்களில் யூத ராபி (மத குரு) இருக்கிறாரா என்று, சவுல் பல இடங்களிலும் தேடுகிறான். ஆனால், ராபிக்கள் யாரும் தம்மை அடையாளப் படுத்த அஞ்சுகின்றனர். இறந்த யூதர்களின் சாம்பலை ஆற்றில் கரைக்கும் இடத்தில், ஒரு கிரேக்க யூத ராபியை கண்ட சவுல், அவரை தன்னோடு வருமாறு கெஞ்சுகிறான். ஆனால், அவர் எதுவும் பேசாமல், தான் அடையாளம் காணப் பட்டதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அசம்பாவிதம் நடக்கும் இடத்திற்கு வரும் நாஸி இராணுவ அதிகாரி, அந்த ராபியை சுட்டுக் கொல்கிறான்.

இறுதியில், எரிப்பதற்காக கொண்டு செல்லப் பட்ட பிரெஞ்சு யூதர்களில் ஒரு ராபியை கண்டுபிடித்த சவுல், அவரை தன்னோடு வருமாறு கூட்டிச் செல்கிறார். நாஸிகளின் கெடுபிடிகளை மீறி, சொன்டர் கமாண்டோக்கள் தாங்கும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும், அங்கே வரும் பிற யூத பணியாளர்கள், சவுலின் மகனின் பிரேதம் கிடப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது "எங்களை எல்லாம் கொல்லப் பார்க்கிறாய்..." என்று சொல்லும் பொழுது, "நாங்கள் எப்போது இறந்து விட்டோம்..." என்று சவுல் பதில் கூறுகின்றான்.

அதே நேரம், நாஸிகளுக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்கு, பிற சொன்டர் கமாண்டோக்கள் தயாராகிறார்கள். அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வந்து சேருகின்றன. ஒரு தருணத்தில், தங்களில் ஒருவனை நாஸிகள் எரித்து விட்டார்கள் என்று அறிந்த சொன்டர் கமாண்டோக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.

முகாமில் ஆயுத மோதல் நடக்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு, சவுல் தனது மகனின் சடலத்தை தூக்கிக் கொண்டு, ராபியுடன் தப்பி ஓடுகின்றான். காட்டுப் பகுதி ஒன்றில், மத அனுஷ்டானங்களுடன் சிறுவனின் சடலத்தை புதைக்கும் முயற்சி தோல்வியடைகின்றது.

ஏனெனில், முகாமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாஸி படையினரிடம் இருந்து தப்பியோடும், சொன்டர் கமாண்டோக்கள் அந்த வழியாக வருகின்றனர். ஓர் ஆற்றைக் கடக்கும் நேரம், சவுல் தனது மகனின் சடலத்தை பறிகொடுக்கிறான்.

காட்டுக்குள் இன்னும் சில மைல் தூரம் ஓடினால் போதும். அப்போது, ஏற்கனவே போலந்தின் சில பகுதிகளை விடுதலை செய்து விட்ட, சோவியத் செம்படையினரிடம் தஞ்சம் கோரலாம். இல்லாவிட்டால், காடுகளுக்குள் மறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

ஓடி வந்த களைப்பில், சவுலும், யூத கிளர்ச்சியாளர்களும் ஒரு குடிசைக்குள் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களுடன் வரும் நாஸி படையினர், அந்த இடத்தை அண்மித்து விடுகின்றனர். இறுதியில் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் படுவதுடன் படம் முடிவடைகின்றது.

யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்கு, நாஸிகளால் ஈடுபடுத்தப் பட்ட சொன்டர் கமாண்டோக்களின் வரலாறு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். உண்மையில், அவர்களது ஆயுட்காலமும், வேலை செய்யும் சிறிது காலம் தான் நீடித்தது. தேவை முடிந்தவுடன், நாஸிகள் அவர்களையும் கொன்றனர்.

நாஸிகளின் காட்டாட்சியில் நடந்த கொடூரங்களை விரிவாக எடுத்துரைக்கும் இந்தத் திரைப்படம், வெளியில் அதிகம் அறியப் படாத பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும் யூதர்கள், தமது சொந்த இனத்தவர்களை எரிக்கும் பொழுது, எந்தளவு வேதனையுடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருப்பார்கள்? படத்தில் ஓரிடத்தில் கதாநாயகன் சொல்வதைப் போன்று, "எப்போதோ இறந்து விட்ட", நடைப்பிணமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

இரண்டாம் போரின் முடிவில் இனப்படுகொலையில் அகப்படாமல் உயிர் தப்பிய யூதர்களில் பலர், நாஸிகளுடன் ஒத்துழைத்த "சொன்டர் கமாண்டோக்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின்  படையினர் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை.  அந்த யூதர்களை நாஸிகளின் ஒட்டுக் குழுவாகவே கருதினார்கள். அதனால் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.


No comments:

Post a Comment