ஈழத்தில் தமிழ் தேசியம் பேசும் இன்றைய இளைஞர்களின், அரசியல் அறிவிலித்தனத்திற்கு இது ஓர் உதாரணம்.
"செந்தூர் தமிழ்" என்பவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) முகநூல் செயற்பாட்டாளர். யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அவர், அநேகமாக கட்சியின் முழுநேரப் பணியாளராக இருக்கலாம். TNA தகவல்களை உடனுக்குடன் முகநூலில் பதிவு செய்து வருகின்றார்.
முகநூலில் நானிட்ட பின்வரும் பதிவுக்கு எதிர்வினையாற்றியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்துத்தனம் தெரிய வந்தது.
விவாதத்தை தொடக்கி வைத்த முகநூல் பதிவு:
//தமிழ் நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் ஆரம்ப கால சாதி ஒழிப்புப் போராளிகள் கம்யூனிஸ்டுகளே!//
அதற்கு செந்தூரின் எதிர்வினை:
//உழுத்து போன தத்துவங்களெல்லாம் இனி இங்க சரிவராது.//
ஆனால், அதே நபர் அதே நேரத்தில் பின்வரும் தகவலை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்:
//இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.//
சிலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்பதே தெரிவதில்லை. அந்தளவுக்கு அறியாமை மேலோங்கிக் காணப் படுகின்றது.
இலங்கை அன்றும் இன்றும் வறிய நாடாகத் தான் கணிக்கப் படுகின்றது. வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், காலங்காலமாக வறுமையில் அல்லலுறுகின்றனர்.
ஈழப்போர் நடந்த காலத்தில் வறுமை பல மடங்கு அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. இதை ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தான் வந்து சொல்ல வேண்டுமா?
தமிழ் மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்வதற்கு வழி சொன்ன கம்யூனிசத் தத்துவம் "உழுத்துப் போனது" என்றால், வேறெந்த தத்துவம் அவர்களுக்கு உதவியுள்ளது?
இதுவரை காலமும் உழுத்துப் போகாமல் இருக்கும், தமிழ் தேசியம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்பன, எந்தளவுக்கு தமிழ் மக்களின் வறுமையை போக்கியுள்ளன?
இந்த விடயத்தில் நடைமுறையில் இருக்கும் எல்லாத் தத்துவங்களும் தோற்றுப் போய் விட்டன. அதைத் தான் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரின் வாக்குமூலம் நிரூபிக்கின்றது.
அதெல்லாம் போகட்டும். வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் திட்டங்கள் எவை? நானறிந்த வரையில் தமிழர்களின் வறுமை பற்றி மட்டுமல்ல, குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தவொரு தமிழ் தேசியவாதியும் பேசுவதில்லை. அந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பார்கள். நாமாக கேட்டாலும் பதில் வராது.
ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்னமும் அகலாத வறுமை பற்றிய கேள்வி எழுந்தது, அதற்கு செந்தூர் கூறிய பதில் இது:
//தமிழன் பட்டினியால் இறக்க வேண்டிய அவசியம் இல்லை நயினாதீவுக்கும் சன்னதிக்கும் போனா ஒவ்வொருநாளும் சாப்பாடு கிடைக்கும்//
இதை அவர் நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கலாம். உண்மையில், வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
வறுமை என்றால் என்னவென்பதற்கு அவரது வரைவிலக்கணம் இது:
//எமது மிகக்குறைந்த அளவுகோல் உணவு பட்டினி அற்று இருத்தல் தான். தமிழ்த்தேசியவாதம் முழுமையாக வலிமைபெற்றிருந்த வன்னி மண்ணில் புலிகளின் காலத்தில் யாராவது பட்டினியால் இறந்தார்களா இவ்வளவு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இதுவே நேரடிச் சான்று சாட்சி.//
புலிகளின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், போர் நடந்து கொண்டிருந்தது. இறுதிப்போர் வரையில், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் WFP, மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு NGO க்கள், நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தன. குறிப்பிட்ட சிலருக்கு, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களின் பணம் கிடைத்து வந்தது. அதனால் தான் அங்கு யாரும் பட்டினியால் சாகவில்லை. அப்படி இருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாடியதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தன.
வறுமை என்பது பட்டினி அற்ற நிலைமை அல்ல. இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15% வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். யுத்தம் நடந்த காலத்தில், வட மாகாணத்தில் புள்ளிவிபரம் எடுக்கப் படவில்லை. இருப்பினும் அங்கேயும் சனத்தொகையில் 15% ஏழைகளாக இருக்கலாம். இலங்கையில் பல தசாப்த காலமாகவே சமுர்த்தி என்ற பெயரில் அரச கொடுப்பனவு வழங்கப் பட்டு வருகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அனைவரும் அந்த நிவாரணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் நடத்தும் லங்காஸ்ரீ (தமிழ்வின்) இணையத் தளத்தில் வந்த தகவல் இது:
//வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். வறுமைக்கு உட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.//
(http://www.tamilwin.com/show-RUmuyBQVSWhw1F.html)
இதற்கு மேலே நான் மேலும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. இன்றைக்கும் நடைமுறையில் உள்ள தமிழ் தேசியம் "உழுத்துப் போகாத" சித்தாந்தம் ஏதாவது, இன்று வரையில் தமிழ் மக்களின் வறுமையை ஒழித்து விட்டனவா? அதற்கு பதில் தெரியாமல் முழித்த TNA ஆர்வலர் செந்தூர், எங்கேயோ தேடிப் பிடித்து வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றை கொண்டு வந்து காட்டினார்.
சித்தாந்தம் பற்றிய வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பித்தலாட்டம் இது.
விக்கினேஸ்வரனின் கூற்றில் இருந்து:
//சித்தாந்தம் என்ற சொல் ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். அரசியலில் வேறு அர்த்தம். மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்துரைகளை தான், சித்தாந்தம் என்கின்றார்கள்.//
சித்தாந்தம் என்றால் முடிந்த முடிவான பூரணமான கொள்கை. (பார்க்க: சித்தாந்தம் - விக்சனரி) அது ஆன்மீகத்திலும், அரசியலிலும் வேறு வேறு அர்த்தம் தரும் என்பது உண்மையல்ல. இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். (சித்தாந்தம் பற்றி ஆங்கில அகராதி தரும் விளக்கம்: doctrine - A principle or body of principles presented for acceptance or belief, as by a religious, political, scientific, or philosophic group; dogma.)
ஆன்மீகம் என்பது கடவுளின் பெயரால் நடக்கும் அரசியல். அதே மாதிரி, அரசியல் என்பதும் கடவுள் இல்லாத ஆன்மீகம் தான். உலக வரலாற்றில் ஆயிரக் கணக்கான வருடங்களாக, ஆன்மீகமும், அரசியலும் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரிக்க முடியாமல் இருந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான், ஆன்மீகத்தில் இருந்து அரசியல் தனியாகப் பிரிந்தது. இன்றைக்கு பல நாடுகளில் உள்ள "மதச்சார்பற்ற கொள்கை" யின் மூலம் அது தான்.
//ஒரு காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்திற்கு பலத்த ஆதரவு இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவு இருந்தது.// (விக்கினேஸ்வரன்)
"ஒரு காலத்தில்" அல்ல, இப்போதும் எப்போதும் ஆதரவு இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2008 ம் ஆண்டில் இடம்பெற்ற நிதிநெருக்கடிக்கு பின்னர், மார்க்சியத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு கூடி வருகின்றது. ஏனென்றால், உலகம் முழுவதும் இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இந்த உண்மை முதலமைச்சருக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.
மேலும், முதலாளித்துவம் என்பது ஒரு சித்தாந்தம் அல்ல, அது பொருளாதாரம்! அது அவர் நினைப்பது மாதிரி "மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்து" அல்ல. வரலாற்றுப் போக்கில் இயல்பாக தோன்றிய பொருளாதார அமைப்பு வடிவம்.
முதலாளித்துவத்தை பாமரத்தனமாக "சித்தாந்தம்" என்று நினைத்துக் கொண்டிருப்பது முதலமைச்சரின் அறியாமை. ஒரு முன்னாள் நீதியரசரின் அறிவே இவ்வளவு தானென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் அறிவைப் பற்றி பேசத் தேவையில்லை.
முதலாளித்துவத்தை பாமரத்தனமாக "சித்தாந்தம்" என்று நினைத்துக் கொண்டிருப்பது முதலமைச்சரின் அறியாமை. ஒரு முன்னாள் நீதியரசரின் அறிவே இவ்வளவு தானென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் அறிவைப் பற்றி பேசத் தேவையில்லை.
முதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது லிபரலிசம் என்பது சித்தாந்தம். அந்த வார்த்தை அவர் வாயில் இருந்து வர மறுக்கிறது.
//இப்போது சித்தாந்தங்களின் அடிப்படையில் செல்வதை தவிர்த்து யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவே பல தலைவர்கள் முன்வந்துள்ளனர். கஸ்ரோ போய் சில வருடங்களில் கியூபாவும் சீனாவைப் போல் மார்க்சியத்தில் இருந்து விடுபட்டுச் செல்லவே தலைப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.// (விக்கினேஸ்வரன்)
அது என்ன "யதார்த்தம்"? வெளிப்படையாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? என்ன தயக்கம்? அமெரிக்கா தலைமையிலான நியோ - லிபரலிச சித்தாந்தவாதிகள் சொல்லிக் கொடுத்த பாடம் அது. உலக மக்களை அரசியல் நீக்கம் செய்யப் பட்டவர்களாக வைத்திருப்பது அதன் நோக்கம். நடைமுறையில் உள்ள அரசியல் பொருளாதாரம் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கக் கூடாது. அப்போது தான் தீவிரமான முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்ள முடியும். முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இந்த மறைமுகமான சுரண்டலுக்கு, தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்.
பிடல் காஸ்ட்ரோ போய் பல வருடங்களாகியும் கியூபா மார்க்சியத்தில் இருந்து விடுபடவில்லை. இப்போதும் அங்கே சோஷலிச கட்டுமானம் உள்ளது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இன்றைக்கும் மார்க்சிய - லெனினிசம் படித்திருக்க வேண்டும். சீனாவிலும் மார்க்சியத்தை யாரும் மறந்து விடவில்லை. பல்கலைக் கழகங்களில் மார்க்சிய- லெனினிசம் கற்பிக்கப் பட வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது.
நான் முன்னர் கூறிய படி, அரசியல் மட்டுமல்ல, மதம், விஞ்ஞானம் போன்றன கூட சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றன. உலகில் எந்த நாட்டு அரசும் சித்தாந்தம் இல்லாமல் இயங்கவில்லை. சீனா சந்தை - சோஷலிசம் என்ற புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்கி அதை பின்பற்றி வருகின்றது. அது பெரும்பாலும் முதலாளித்துவம் போன்றிருக்கும். ஆனால், "சந்தை - சோஷலிசம்" என்ற பெயரில் அவர்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே, விக்கினேஸ்வரன் சொல்வது மாதிரி, கியூபாவும் சீனா மாதிரி மாறுமாக இருந்தால், அதுவும் "சந்தை - சோஷலிசம்" சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தப் படும்.
//ஆகவே எனது அரசியல் சித்தாந்தம் யதார்த்தமே. நடைமுறையில் இருக்கும் உண்மை நிலையே அது.// (விக்கினேஸ்வரன்)
எதற்காக ஐயா, "யதார்த்தம்" என்று குழப்புகின்றீர்கள்? நேரடியாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? அது தான் "யதார்த்தம்", "நடைமுறையில் இருக்கும் உண்மை நிலை" என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே?
இன்றைய காலத்தில், இலங்கை உட்பட பெரும்பாலான உலக நாடுகள் நவ தாராளவாத(லிபரலிசம்) சித்தாந்தத்தை பின்பற்றுகின்றன. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி கூட, நவ தாராளவாத கொள்கைகளை பின்பற்றுமாறு வற்புறுத்தி வருகின்றன. இதை அறிந்து கொள்ள அதிகம் சிரமப் பட வேண்டாம். அன்றாட தினசரித் தாளை புரட்டிப் பாருங்கள்.
இலங்கையில், 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன அறிமுகப் படுத்திய நியோ லிபரலிச சித்தாந்தத்தை தான் விக்கினேஸ்வரன் "யதார்த்தம்" என்று குறிப்பிடுகின்றார்.
முதலைமைச்சர் விக்கினேஸ்வரன், சிறுபிள்ளைத்தனமாக சுற்றி வளைத்து பேசாமல், நேரடியாக முதலாளித்துவத்தை அல்லது லிபரலிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லலாமே? அதெப்படி முடியும்? இலங்கை அரசும், தமிழ்த் தேசியவாதிகளும் ஒரே சித்தாந்தத்தை தான் பின்பற்றுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்து விடாதா? மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க படாத பாடுபடுகிறார்கள். கட்சியின் பெயரை "தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் மிகவும் பொருத்தமான பெயர்.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
No comments:
Post a Comment